“சமாதானத்தின் தேவன்” துயரப்படுவோரை விசாரிக்கிறவர்
பூர்வ காலத்தில் வாழ்ந்த தாவீது துயரத்தோடு பழக்கப்பட்டவராக இருந்தார். அநேக ஆண்டுகளாக அவரைக் கொன்றுவிடுவதற்கு தீர்மானமாயிருந்த பொல்லாதவனும் பிடிவாதமுள்ளவனுமாகிய அரசன் இரக்கமற்ற விதமாக அவரைத் துரத்திக்கொண்டிருக்க, அவர் ஒரு அகதியைப் போல வாழ்ந்து வந்தார். இந்தத் துயரமான காலப்பகுதியின்போது, தாவீது தனிமையான இடங்களில் ஒளிந்துகொண்டிருந்தார். ஆனால் அதைவிட அதிகத்தையும் செய்தார். அவர் தமக்கு ஏற்பட்ட இடுக்கணைக் குறித்து யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபித்தார். தன்னுடைய கடும் சோதனையைக் குறித்து பின்னால் “கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்” என்று எழுதினார்.—சங்கீதம் 142:1, 2.
இன்று, சிலர் கடவுள்மீது தாவீது சார்ந்திருந்ததை பரிகசிக்கக்கூடும். ஜெபம் ஒருவரை அமைதியான மனப்பக்குவத்தில் வைத்துக்கொள்ள உதவும் மனம் சார்ந்த ஒரு உத்தியே. நடைமுறையில் அது நேரத்தை வீணாக்குவதே என்பதாக அவர்கள் சொல்வார்கள். என்றபோதிலும், கடவுளிடம் தாவீது கொண்டிருந்த நம்பிக்கை வீண்போகவில்லை, ஏனென்றால் கடைசியில் அவருடைய சத்துருக்கள் தோல்வியடைந்தனர். தன்னுடைய அனுபவத்தைப் நினைவுபடுத்திப் பார்ப்பவராய், தாவீது இவ்வாறு எழுதினார்: “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.” (சங்கீதம் 34:6) தாவீது தஞ்சம்புகுந்த அந்த மெய் கடவுள், வேறொரு இடத்தில் “சமாதானத்தின் தேவன்” என்பதாக அழைக்கப்படுகிறார். (பிலிப்பியர் 4:9; எபிரெயர் 13:20) நமக்கு சமாதானம் கிடைக்கும் வகையில் துயரத்திலிருந்து விடுதலையை அவர் கொண்டுவருவாரா?
யெகோவா உங்களை விசாரிக்கிறார்
யெகோவா தம்முடைய மக்களின் இடுக்கண்களைக் குறித்து விலகியிருப்பவர் இல்லை. (சங்கீதம் 34:15) அவர் தம்முடைய ஊழியர்களைக் குறித்து ஒரு தொகுதியாக மட்டுமல்ல ஆனால் அவருக்குப் பயப்படுகிற ஒவ்வொரு தனி நபரின் தேவைகளைக் குறித்தும் அக்கறையுள்ளவராக இருக்கிறார். பூர்வ எருசலேமில் ஆலயத்தை பிரதிஷ்டை செய்யும்போது, சாலொமோன், ‘எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,’ கேட்டருள வேண்டும் என்று யெகோவாவிடம் மன்றாடினார். (2 நாளாகமம் 6:29) சாலொமோன் ஒப்புக்கொண்டவிதமாகவே, ஒவ்வொருவருக்கும் சகித்துக்கொள்வதற்கு அவரவருக்கே உரிய வாதையும் வியாகுலமும் இருக்கின்றன. ஒருவருக்கு அது சரீர சுகவீனமாக இருக்கலாம். மற்றொருவருக்கு, உணர்ச்சிப்பூர்வமான துன்பமாக இருக்கலாம். சிலர் அன்பான ஒருவரின் மரணத்தினால் துயரப்பட்டுக் கொண்டிருக்கலாம். வேலையில்லாமையும் பொருளாதார கஷ்டங்களும் குடும்பப் பிரச்சினைகளும்கூட இந்தக் கடினமான காலங்களில் சாதாரணமாக காணப்படும் துயரங்களாகும்.
‘உங்களுடைய சொந்த வாதையையும் வியாகுலத்தையும்’ பற்றி ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். சில சமயங்களில் பின்வருமாறு எழுதிய சங்கீதக்காரன் தாவீது உணர்ந்தவிதமாக நீங்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம்: “எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.” என்றபோதிலும், கடவுள் உங்கள் நிலைமையைக் குறித்து விசாரிக்கிறவராக இருக்கிறார் என்பதைப்பற்றி நீங்கள் நிச்சயமாய் இருக்கலாம், ஏனென்றால் பின்னால் அதே சங்கீதத்தில் தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் [“யெகோவா” NW] எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.”—சங்கீதம் 69:20, 33.
தாவீதின் வார்த்தைகளை விரிவான கருத்தில் பொருத்துகையில், மனிதவர்க்கத்தின் படைப்பாளர், சொல்லப்போனால் தங்கள் துயரங்களால் கட்டுண்டவர்களின் ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறார் என்பதைக்குறித்து நாம் உறுதியாக இருக்கலாம். அதற்கும் மேலாக, அவர்களுடைய பரிதாபமான நிலைமையைக் கண்டு அவர் செயல்படுகிறார். துயரத்திலிருப்பவர்களுக்கு யெகோவாவின் கருணையை வெளிப்படுத்தும் பின்வரும் கூற்றுகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
“விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்.”—யாத்திராகமம் 22:22-24.
“தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?”—லூக்கா 18:7.
“கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:12-14.
“உங்களைத் [பூமியின்மீதுள்ள கடவுளுடைய ஜனங்களை] தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.”—சகரியா 2:8.
இந்த சில உதாரணங்கள் தம்முடைய மக்களின் நலனில் நம்முடைய படைப்பாளருக்கிருக்கும் ஆழ்ந்த அக்கறையை விளக்குவதாக உள்ளன. ஆகவே அப்போஸ்தனாகிய பேதுருவின் புத்திமதியைப் பின்பற்றுவதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) ஆனால் துயரமான காலங்களின்போது கடவுள் நமக்கு எவ்வாறு உதவிசெய்வார்?
கடவுள் துயரப்படுகிறவர்களுக்கு எவ்வாறு உதவிசெய்கிறார்
நாம் பார்த்தவிதமாகவே, தாவீது துயரப்பட்ட சமயத்தில், அவர் வழிநடத்துதலுக்காக கடவுளிடம் ஊக்கமாக ஜெபித்தார். அதே சமயத்தில், தன்னைத் துரத்திக்கொண்டு வந்தவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்க முன்முயற்சி எடுத்தார். இவ்வாறாக, யெகோவாவின்மீது சார்ந்திருந்ததும், தனிப்பட்ட முயற்சியும் சேர்ந்து, தாவீதுக்கு தன்னுடைய துயரத்தைக் சகித்துக்கொள்ள உதவிசெய்தது. இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நமக்குத் துயரம் ஏற்படும்போது, பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நியாயமான முன்முயற்சியை நாம் எடுப்பது நிச்சயமாகவே தவறு இல்லை. உதாரணமாக, ஒரு கிறிஸ்தவருக்கு வேலையில்லாமல் போகையில், வேலையை தேடுவதற்கு அவர் முயற்சிசெய்யமாட்டாரா? அல்லது அவர் சரீர சுகவீனத்தினால் கஷ்டப்படும்போது, அவர் மருத்துவ கவனிப்பை நாடமாட்டாரா? ஆம், சகல விதமான நோய்களையும் குணமாக்குவதற்கு வல்லமை வாய்ந்தவராக இருந்த இயேசுவும்கூட ‘பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதே’ என்பதாக ஒப்புக்கொண்டார். (மத்தேயு 9:12; 1 தீமோத்தேயு 5:23-ஐ ஒப்பிடுக.) நிச்சயமாகவே சில துன்பங்கள் நீக்கப்படமுடியாதவை; அவற்றை வெறுமனே சகித்துக்கொள்ள வேண்டியதே. என்றபோதிலும், ஒரு உண்மைக் கிறிஸ்தவர் சிலரைப் போல துன்பத்தைத்தானே ஒரு நற்பண்பாக கருதுவது கிடையாது. (1 இராஜாக்கள் 18:28-ஐ ஒப்பிடுக.) மாறாக, அவர் தன்னுடைய துயரத்தைச் சமாளிக்க தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்கிறார்.
ஆனால் அதே சமயத்தில், அந்த விஷயத்தைக்குறித்து யெகோவாவிடம் ஜெபத்தில் வைப்பது நியாயமாக இருக்கிறது. ஏன்? முதலாவதாக, நம்முடைய படைப்பாளர்மீது சார்ந்திருப்பதன் மூலம், நாம் ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ள’ உதவப்படுகிறோம். (பிலிப்பியர் 1:10, NW) உதாரணமாக, வேலைக்காக தேடுகையில், ஜெபசிந்தையோடு கடவுள்மீது சார்ந்திருத்தல், பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கும் வேலையை ஏற்றுக்கொள்ளாதிருக்கும்படியாக நமக்கு உதவிசெய்யும். பண ஆசையினால் “விசுவாசத்தைவிட்டு வழுவி”ப்போவதையும்கூட நாம் தவிர்க்கிறவர்களாக இருப்போம். (1 தீமோத்தேயு 6:10) உண்மையில்,—வேலையைக் குறித்து அல்லது வாழ்க்கையின் வேறு எந்த ஒரு அம்சத்தைக் குறித்து—மிக முக்கியமான தீர்மானங்களைச் செய்கையில் நாம் தாவீதின் அறிவுரையைப் பின்பற்றுவது அவசியமாகும்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”—சங்கீதம் 55:22.
துயரத்தில் நாம் மூழ்கிவிடாதபடிக்கு, நம்முடைய மனதின் சமநிலையைக் காத்துக்கொள்வதற்கும்கூட ஜெபம் நமக்கு உதவிசெய்கிறது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” பலன் என்னவாக இருக்கும்? “அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஆம், சமாதானம், தேவசமாதானம். வருத்தமான உணர்ச்சிகளால் நாம் அழுத்தப்படும்போது நம்மை நிலைநிறுத்தவல்ல “எல்லாப் புத்திக்கும் மேலான”தாக அந்தச் சமாதானம் இருக்கிறது. அது ‘நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.’ இதன் காரணமாக மடத்தனமாகவும் ஞானமற்ற விதமாகவும் நடந்துகொள்வதை தவிர்க்க உதவுகிறது; ஏனெனில் இவை நம்முடைய துயரத்தை அதிகரிக்கச் செய்யும்.—பிரசங்கி 7:7.
ஜெபம் இன்னும் மேம்பட்ட விதத்தில் உதவமுடியும். ஒரு நிலைமை எவ்வாறு உருவாகிறது என்பதில் அது வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும். ஒரு பைபிள் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் ரோமில் சிறைப்படுத்தப்பட்டபோது, அவர் உடன் கிறிஸ்தவர்களை தனக்காக ஜெபிக்கும்படியாக உற்சாகப்படுத்தினார். ஏன்? “நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்” என்பதாக அவர்களுக்கு எழுதினார். (எபிரெயர் 13:19) தன்னுடைய உடன் விசுவாசிகளின் இடைவிடாத ஜெபங்கள் அவர் எப்போது விடுதலைசெய்யப்படுவார் என்ற விஷயத்தின்பேரில் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும் என்பதை பவுல் அறிந்திருந்தார்.—பிலேமோன் 22.
ஜெபம் உங்கள் துயரத்தின் முடிவை மாற்றமுடியுமா? அது ஒருவேளை மாற்றலாம். ஆனால் யெகோவா எப்போதுமே நாம் எதிர்பார்க்கக்கூடிய விதமாக நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். உதாரணமாக பவுல் தனக்கிருந்த “மாம்சத்திலே ஒரு முள்” பற்றி—ஒருவேளை அவருடைய கண்பார்வையோடு சம்பந்தப்பட்ட சரீரப் பிரச்சினையைப்பற்றி—அடிக்கடி ஜெபித்தார். துயரத்தைப் போக்குவதற்குப் பதிலாக கடவுள் பவுலிடம் இவ்வாறு சொன்னார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.”—2 கொரிந்தியர் 12:7-9.
ஆகவே சில சமயங்களில் நம்முடைய துயரங்கள் நீங்காமல் இருக்கும். அதற்குப் பதிலாக, நம்முடைய படைப்பாளர்மீது நம்முடைய நம்பிக்கையை நிரூபிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். (அப்போஸ்தலர் 14:22) மேலுமாக, யெகோவா துயரத்தை நீக்காவிட்டாலும்கூட, ‘அதை [நாம்] சகித்துக் கொள்ளும்படியான போக்கை உண்டாக்குவார்’ என்பதில் உறுதியாக இருக்கலாம். (1 கொரிந்தியர் 10:13) ஆம், நியாயமான காரணத்தோடுதானே யெகோவா ‘சகல உபத்திரவங்களிலேயும் ஆறுதல் செய்கிற தேவன்’ என்பதாக அழைக்கப்படுகிறார். (2 கொரிந்தியர் 1:3, 4) ஓரளவு சமாதானத்தோடே சகித்திருப்பதற்கு நமக்குத் தேவையானதை அவர் கொடுக்கிறார்.
விரைவில்—துயரமில்லா ஓர் உலகம்!
படைப்பாளர் தம்முடைய ராஜ்யத்தின் மூலமாக மனிதவர்க்கத்தின் துயரங்களை விரைவில் நீக்கிவிடப்போவதாக வாக்களிக்கிறார். இதை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார்? “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” என்பதாக பைபிள் அடையாளங்காட்டும், முக்கியமாக துயரத்தைத் தூண்டுகிறவனும் சமாதானத்தின் பிரதான சத்துருவுமாகிய பிசாசாகிய சாத்தானை நீக்குவதன் மூலமாகவே. (2 கொரிந்தியர் 4:4) ஆனால் விரைவில் மனிதவர்க்கத்தின்மீது அவன் கொண்டிருக்கும் கட்டுப்பாடு முடிவுக்கு வரும். சாத்தான் ஒழிக்கப்படுவது கடவுளுக்குப் பயந்திருப்பவர்களுக்கு எண்ணிலடங்கா ஆசீர்வாதங்கள் வருவதற்கான வழியைத் திறந்துவைக்கும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் [யெகோவா] துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின,” என்பதாக பைபிள் வாக்களிக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:1-4.
துயரம் இல்லாத ஒரு உலகம் நம்பமுடியாத ஒன்றாக தோன்றுகிறதா? கஷ்டங்களுடன் வாழ்ந்து நாம் அவ்வளவு பழக்கப்பட்டுவிட்டதால், அவை இல்லாமல் இருப்பதை கற்பனைசெய்து பார்ப்பது நமக்கு முடியாமல் இருக்கிறது. ஆனால் படைப்பின் சமயத்தில், மனிதவர்க்கத்திற்காக கடவுள் கொண்டிருந்த நோக்கம் பயம், கவலை மற்றும் ஆபத்திலிருந்து விடுபட்ட ஒன்றாகவே இருந்தது, அவருடைய நோக்கம் நிறைவேறும்.—ஏசாயா 55:10, 11.
ஆரம்ப கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோனியாவும் ஃபேபியானாவும் ஆனாவும் இதே நம்பிக்கையையே கண்டுபிடித்தார்கள். எய்ட்ஸ் காரணமாக இரண்டு மகன்களை இழந்த சோனியா பைபிள் அளிக்கும் நம்பிக்கையிலிருந்து—நீதிமான்களும் அநீதிமான்களும் ஒரு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையிலிருந்து—பேரளவான சமாதானத்தைப் பெற்றாள். (அப்போஸ்தலர் 24:15) “ஒரு காரியம் நிச்சயம், நம்முடைய நம்பிக்கை எப்படிப்பட்ட வேதனையையும் மேற்கொள்ளுவதாய் உள்ளது” என்பதாக அவள் சொல்கிறாள்.
இன்னும் அநாதை இல்லத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் போது, ஆனாவை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் சந்தித்தார். “அவர் யெகோவாவின் பெயரை பைபிளிலிருந்து காண்பித்தார், ஆனந்தத்தில் கண்ணீர்விட்டேன். எனக்கு மிக அதிகமாக உதவி தேவைப்பட்டது, நம்மை விசாரிக்கிற ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நான் அறிந்துகொண்டேன்” என்பதாக ஆனா சொல்கிறாள். அநாதை இல்லத்தைவிட்டு வெளியேறிய பின்பு, ஆனா ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டாள். பின்னர் அவள் யெகோவாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலமாக அடையாளப்படுத்தினாள். “அப்போது முதற்கொண்டு நான் தொடர்ந்து ஜெபத்தின் மூலமாக யெகோவாவின்மீது சார்ந்திருக்கிறேன், அவர் எனக்கு உதவிசெய்வார் என்ற உறுதியினால் நான் ஆறுதலடைகிறேன்.”
எதிர்காலத்துக்கான கடவுளுடைய வாக்குறுதிகளைப்பற்றி ஃபேபியானா கற்றுக்கொள்வதன் மூலம் தன்னுடைய துயரத்தின் மத்தியிலும் அதிகமான ஆறுதலையும் மன சமாதானத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறாள். “பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்வது என்பது மிகவும் மப்பும் மந்தாரமுமான ஒரு இடத்தைவிட்டு தெளிவும் பிரகாசமும் இன்பமுமான இருக்கும் ஒரு அறையினுள் பிரவேசிப்பதைப்போல உள்ளது.”—சங்கீதம் 118:5-ஐ ஒப்பிடுக.
ஆனால் உலகம் முழுவதிலும் சொல்லர்த்தமான சமாதானம் எவ்விதமாக, எப்போது வரும்? பின்வரும் கட்டுரைகளில் நாம் பார்க்கலாம்.
[பக்கம் 7-ன் படங்கள்]
ஜெபம் துயரமில்லாத ஒரு உலகத்தைப்பற்றிய கடவுளுடைய வாக்குறுதியின் பேரில் கவனத்தை ஊன்றவைக்க நமக்கு உதவக்கூடும்