படிப்புக் கட்டுரை 40
உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன?
‘பாவிகளை மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்.’—லூக். 5:32.
பாட்டு 36 நம் இதயத்தைப் பாதுகாப்போம்
இந்தக் கட்டுரையில்...a
1-2. இரண்டு ராஜாக்களுக்கும் இடையே என்ன வித்தியாசங்கள் இருந்தன, என்ன விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்?
ரொம்பக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த இரண்டு ராஜாக்களைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். ஒருவர், பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தை ஆட்சி செய்தவர். இன்னொருவர், இரண்டு கோத்திர யூதா ராஜ்யத்தை ஆட்சி செய்தவர். இவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்திருந்தாலும் இவர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் இருந்தன. இரண்டு பேருமே யெகோவாவுக்குப் பிடிக்காத படுமோசமான விஷயங்களைச் செய்தார்கள். அவருக்கு எதிராக மக்கள் பாவம் செய்வதற்குக் காரணமாக இருந்தார்கள். பொய்த் தெய்வங்களை கும்பிட்டார்கள், நிறைய பேரை கொலையும் செய்தார்கள். ஆனாலும், இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒருவர், சாகும்வரை திருந்தாமல் மோசமான விஷயங்களைச் செய்துகொண்டே இருந்தார். இன்னொருவர், மனம் திருந்தினார். அதனால், யெகோவா அவரை மன்னித்தார். யார் இந்த இரண்டு ராஜாக்கள்?
2 ஒருவர் பெயர் ஆகாப். இவர் இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜா. இன்னொருவர் பெயர் மனாசே. இவர் யூதாவை ஆட்சி செய்த ராஜா. இந்த இரண்டு ராஜாக்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். (அப். 17:30; ரோ. 3:23) நாம் மனம் திருந்திவிட்டோம் என எப்படிக் காட்டலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம். நம்முடைய பாவங்களை யெகோவா மன்னிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால், இந்த விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். அதோடு, மனம் திருந்துவதைப் பற்றி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார் என்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஆகாப் ராஜாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
3. ஆகாப் ராஜா எப்படிப்பட்டவராக இருந்தார்?
3 ஆகாப், பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யத்தின் ஏழாவது ராஜாவாக இருந்தவர். வடக்கில் இருந்த சீதோன் நாட்டு ராஜாவின் மகளான யேசபேலை இவர் கல்யாணம் செய்தார். சீதோன் ஒரு பணக்கார தேசமாக இருந்தது. யேசபேலைக் கல்யாணம் செய்ததால் இஸ்ரவேலும் பணக்கார தேசமாக ஆவதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், யெகோவாவுக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இருக்கிற பந்தம் என்ன ஆனது? அதில் பெரிய விரிசல் விழுந்தது! ஏனென்றால், யேசபேல் பாகாலை வணங்கினாள். அவளுடைய மதம் அருவருப்பான மதமாக இருந்தது. அந்த மதத்தில் இருந்தவர்கள் கோவிலில் விபச்சாரம் பண்ணினார்கள். குழந்தைகளைப் பலி கொடுத்தார்கள். இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த மதம் பரவுவதற்கு வழி செய்யும்படி ஆகாபை யேசபேல் தூண்டினாள். அவள் ராணியாக இருந்த சமயத்தில் யெகோவாவின் தீர்க்கதரிசிகள் பயந்து பயந்து வாழ்ந்தார்கள். அவர்களில் நிறைய பேரை அவள் கொலை செய்திருந்தாள். (1 ரா. 18:13) ஆகாப் ராஜாவும், “யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் எல்லாரையும்விட படுமோசமானவராக இருந்தார்.” (1 ரா. 16:30) ஆகாபும் யேசபேலும் செய்த அட்டூழியங்களை யெகோவா பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனாலும், இரக்கத்தோடு அவர்களையும் தன்னுடைய மக்களையும் எச்சரிப்பதற்காக எலியா தீர்க்கதரிசியை அனுப்பினார். ஆனால், அவர் சொன்னதையெல்லாம் ஆகாபும் யேசபேலும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
4. ஆகாபுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போவதாக யெகோவா சொன்னார், அதைக் கேட்டபோது அவர் எப்படி நடந்துகொண்டார்?
4 ஒரு கட்டத்தில், ஆகாபுக்கும் யேசபேலுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று யெகோவா நினைத்தார். அதனால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்போவதாக எலியா தீர்க்கதரிசி மூலம் சொன்னார். அவர்களுடைய வம்சத்தில் வருகிற எல்லாரையும் அடியோடு அழிக்கப்போவதாகச் சொன்னார். அதைக் கேட்டதும் ஆகாப் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது! அதனால், அகங்காரம் பிடித்த அந்த ராஜா யெகோவாவுக்கு முன்னால் ‘தாழ்மையாக நடந்துகொண்டார்.’—1 ரா. 21:19-29.
5-6. ஆகாப் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?
5 அந்தச் சமயத்தில், ஆகாப் ராஜா தாழ்மையாக நடந்துகொண்டாலும் அவர் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை. எப்படிச் சொல்கிறோம்? இஸ்ரவேல் தேசத்திலிருந்து பாகால் வணக்கத்தை ஒழித்துக்கட்ட அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. யெகோவாவை வணங்கும்படி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இல்லை. அவர் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை என்பதை அவர் செய்த மற்ற விஷயங்களிலிருந்தும் தெரிந்துகொள்கிறோம்.
6 கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, சீரியர்களை எதிர்த்துப் போர் செய்ய உதவும்படி யூதா ராஜாவான யோசபாத்தை ஆகாப் ராஜா கூப்பிட்டார், அவரும் வந்தார். ஆனால், போருக்குப் போவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டுமென யெகோவாவின் தீர்க்கதரிசியிடம் கேட்கலாம் என்று யோசபாத் சொன்னார். ஆனால், ஆகாபுக்கு அந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதனால், “இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் மூலமாகவும் யெகோவாவிடம் விசாரிக்கலாம். ஆனால், அவனை எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனென்றால், இதுவரை அவன் என்னைப் பற்றி நல்ல விஷயத்தைத் தீர்க்கதரிசனமாகச் சொன்னதே கிடையாது, கெட்ட விஷயத்தைத்தான் சொல்வான்” என்று ஆகாப் சொன்னார். இருந்தாலும், ஆகாபும் யோசபாத்தும் மிகாயா தீர்க்கதரிசியிடம் விசாரித்தார்கள். ஆகாப் சொன்னதுபோல் மிகாயாவும் கெட்ட செய்தியைத்தான் சொன்னார். இப்போது, ஆகாப் என்ன செய்திருக்க வேண்டும்? யெகோவாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்வதற்குப் பதிலாக, அந்தத் தீர்க்கதரிசியை ஆகாப் சிறையில் தள்ளினார். (1 ரா. 22:7-9, 23, 27) அவரைச் சிறையில் போட்டதால் அவர் சொன்னது நடக்காமல் போய்விட்டதா? இல்லை. அவர் சொன்னது அப்படியே நடந்தது. அந்தப் போரில் ஆகாப் செத்துப்போனார்.—1 ரா. 22:34-38.
7. ஆகாப் இறந்த பின்பு அவரைப் பற்றி யெகோவா என்ன சொன்னார்?
7 ஆகாப் இறந்த பின்பு, அவரைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார் என்பதை யோசபாத்திடம் சொன்னார். யோசபாத் ராஜா போர் முடிந்து பத்திரமாக வீட்டுக்கு வந்த பின்பு, யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசி யெகூவை அனுப்பி, ஆகாபோடு கூட்டுச் சேர்ந்ததற்காக அவரைக் கண்டித்தார். “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா? யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?” என்று யெகூ அவரிடம் கேட்டார். (2 நா. 19:1, 2) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஆகாப் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்தால் யெகோவாவின் தீர்க்கதரிசி இப்படிச் சொல்லியிருப்பாரா? ஒரு சமயத்தில் தான் செய்ததை நினைத்து ஆகாப் வருத்தப்பட்டிருந்தாலும் உண்மையிலேயே அவர் மனம் திருந்தவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.
8. ஆகாபின் விஷயத்திலிருந்து மனம் திருந்துவதைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
8 ஆகாபின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? அவர் குடும்பத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எலியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னபோது, ஆகாப் மனத்தாழ்மையாக நடந்துகொண்டது உண்மைதான். அது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், அதற்குப் பின்பு அவர் நடந்துகொண்டதை வைத்துப் பார்க்கும்போது அவர் உண்மையிலேயே மனம் திருந்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியென்றால், உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன? செய்த தவறை நினைத்து அப்போதைக்கு வருத்தப்படுவதை மட்டும் இது அர்த்தப்படுத்துவது கிடையாது. இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும். இதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இன்னொருவரைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மனாசே ராஜாவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள்
9. மனாசே எப்படிப்பட்ட ராஜாவாக இருந்தார்?
9 கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப் பின்பு யூதாவை ஒரு ராஜா ஆட்சி செய்தார். அவர்தான் மனாசே. அவர் ஆகாபைவிட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கலாம்! “யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 33:1-9) மனாசே, பொய்த் தெய்வங்களுக்குப் பலிபீடங்களைக் கட்டினார். அதுமட்டுமல்ல, கருவள தெய்வத்தின் அடையாளமாக இருந்த பூஜைக் கம்பங்களை யெகோவாவின் ஆலயத்துக்கு உள்ளேயே கொண்டுவந்து வைத்தார்! அதோடு, மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார், குறிசொன்னார், பில்லிசூனியம் செய்தார். “ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.” பொய்த் தெய்வங்களுக்காக “சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.”—2 ரா. 21:6, 7, 10, 11, 16.
10. மனாசேயை யெகோவா எப்படிக் கண்டித்தார், மனாசே எப்படி நடந்துகொண்டார்?
10 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் மூலமாகக் கொடுத்த எச்சரிப்புகளையெல்லாம் ஆகாபைப் போலவே மனாசேயும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. கடைசியில், யூதாவுக்கு “எதிராக அசீரிய ராஜாவின் படைத் தலைவர்களை யெகோவா அனுப்பினார். அவர்கள் மனாசேயைப் பிடித்து கொக்கிகள் மாட்டி, இரண்டு செம்பு விலங்குகள் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.” பாபிலோனில் கைதியாக இருந்த சமயத்தில், தான் செய்த தவறைப் பற்றியெல்லாம் மனாசே யோசித்துப் பார்த்ததாகத் தெரிகிறது. அதனால், “தன்னுடைய முன்னோர்களின் கடவுள் முன்னால் மிகவும் தாழ்மையோடு நடந்துகொண்டார்.” அதுமட்டுமல்ல, “கருணை காட்டச் சொல்லி யெகோவா தேவனிடம் கெஞ்சினார்.” “கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார்.” அந்த மோசமான ராஜா, கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்த ஆரம்பித்தார். யெகோவாவை ‘தன்னுடைய கடவுளாக’ பார்க்க ஆரம்பித்தார், விடாமல் அவரிடம் ஜெபம் செய்தார்.—2 நா. 33:10-13.
11. மனாசே உண்மையிலேயே மனம் திருந்தினார் என்று 2 நாளாகமம் 33:15, 16 எப்படிக் காட்டுகிறது?
11 கொஞ்சக் காலத்தில் மனாசேயின் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். மனம் திருந்த வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதை யெகோவா பார்த்தார். மனாசே உருக்கமாக செய்த ஜெபங்களை யெகோவா கேட்டு, அவரை மறுபடியும் சிம்மாசனத்தில் உட்கார வைத்தார். மனாசே எந்தளவுக்கு மனம் திருந்தியிருந்தார் என்பதை அவருடைய செயல்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அவர் ஆகாபைப் போல் இல்லாமல், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்தார். பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்ட தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தார். யெகோவாவை வணங்குவதற்கு மக்களை ஊக்கப்படுத்தினார். (2 நாளாகமம் 33:15, 16-ஐ வாசியுங்கள்.) ஆனால், இவற்றையெல்லாம் செய்ய அவருக்குத் தைரியமும் விசுவாசமும் தேவைப்பட்டன. ஏனென்றால், இத்தனை வருஷங்களாக அவருடைய குடும்பத்தாரும் முக்கிய பிரமுகர்களும் அவருடைய மக்களும் அவரைப் போலவே மோசமான விஷயங்களைச் செய்வதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆனால், முன்பு செய்திருந்த மோசமான விஷயங்களையெல்லாம் மாற்ற அவருடைய வயதான காலத்தில் முயற்சியெடுத்தார். அந்தச் சமயத்தில் சின்னப் பையனாக இருந்த அவருடைய பேரன் யோசியா எதிர்காலத்தில் ஒரு நல்ல ராஜாவாக ஆவதற்கு இவர் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.—2 ரா. 22:1, 2.
12. மனம் திருந்துவதைப் பற்றி மனாசேயின் வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 மனாசேயின் வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? அவர் தன்னையே தாழ்த்தினார். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சினார். தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிக்கொண்டார். அதுவரை செய்திருந்த எல்லா தவறுகளையும் சரிசெய்வதற்காகக் கடினமாக முயற்சியெடுத்தார். யெகோவாவை உண்மையாக வணங்கினார். மற்றவர்களும் யெகோவாவை வணங்குவதற்குப் பக்கபலமாக இருந்தார். இன்றைக்கு படுமோசமான பாவத்தைச் செய்தவர்களுக்கும் மனாசேயின் உதாரணம் நம்பிக்கையைக் கொடுக்கிறது. ‘யெகோவா நல்லவர், மன்னிக்கத் தயாராக இருப்பவர்’ என்பதை மனாசேயின் வாழ்க்கை காட்டுகிறது. (சங். 86:5) உண்மையாகவே மனம் திருந்துகிறவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு கிடைக்கும்.
13. உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.
13 தான் செய்த பாவங்களை நினைத்து மனாசே வெறுமனே வருத்தப்பட்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. இன்னும் நிறைய விஷயங்களைச் செய்தார். உண்மையாகவே மனம் திருந்துவது என்றால் என்ன என்று அவருடைய வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இப்படி யோசித்துப்பாருங்கள்: கேக் வாங்க நீங்கள் கடைக்குப் போகிறீர்கள். கடைக்காரர் கேக்குக்குப் பதிலாக உங்கள் கையில் ஒரு முட்டையைக் கொடுத்துவிட்டு, ‘கேக் செய்றதுக்கு இதுதான் முக்கியமான பொருள்’ என்று சொல்கிறார். நீங்கள் அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு வந்துவிடுவீர்களா? இல்லை! அதேபோல், பாவம் செய்தவர்களை மனம் திருந்தும்படி யெகோவா சொல்கிறார். ஆனால், பாவம் செய்தவர், தான் செய்த பாவத்தை நினைத்து வெறுமனே வருத்தப்படுகிறார், அவ்வளவுதான். இது, கேக்குக்குப் பதிலாக வெறும் முட்டையைக் கொடுப்பதுபோல் இருக்கிறது. அப்படியென்றால், உண்மையிலேயே மனம் திருந்துவதற்கு வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? அதைப் பற்றி இயேசு சொன்ன ஊதாரி மகனுடைய உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்திவிட்டார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
14. ஊதாரி மகன் மனம் திருந்த ஆரம்பித்தான் என்று எப்படிச் சொல்லலாம்?
14 ஊதாரி மகனைப் பற்றி இயேசு ஒரு கதை சொன்னார். அது லூக்கா 15:11-32-ல் இருக்கிறது. ஒரு அப்பாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் அப்பாவுக்கு அடங்காமல் வீட்டைவிட்டு “தூர தேசத்துக்கு” போய் மனம்போன போக்கில் வாழ்ந்தான். ஒரு கட்டத்தில், அவனுக்குப் பயங்கர கஷ்டங்கள் வர ஆரம்பித்தன. தான் செய்தது எவ்வளவு மோசமான தவறு என்று அப்போதுதான் யோசித்தான். அப்பாவின் வீட்டிலேயே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. இயேசு சொன்னதுபோல், ‘அவனுக்கு புத்தி வந்தது.’ திரும்பவும் வீட்டுக்குப் போய் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தான். தான் செய்தது எவ்வளவு மோசமான தவறு என்று அவன் ஒரு கட்டத்தில் யோசித்தது நல்லதுதான். ஆனால், அது மட்டுமே போதுமா? இல்லை. அவன் அதை செயலில் காட்ட வேண்டியிருந்தது.
15. உண்மையிலேயே மனம் திருந்தியதை ஊதாரி மகன் எப்படிச் செயலில் காட்டினான்?
15 அந்த ஊதாரி மகன், ரொம்பத் தூரம் பயணம் செய்து தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குப் போனான். அங்கே போய், “அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்கு அருகதையில்லை” என்று சொன்னான். (லூக். 15:21) தான் செய்த தவறை மனதார ஒத்துக்கொண்டான். இப்படி, அப்பாவிடமும் யெகோவாவிடமும் இருக்கிற பந்தத்தைச் சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தான். தான் முன்பு செய்ததெல்லாம் தன்னுடைய அப்பாவின் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டான். அப்பாவின் பிரியத்தை மறுபடியும் சம்பாதிப்பதற்காக அவருடைய வேலைக்காரர்களில் ஒருவராக இருப்பதற்குக்கூட அவன் தயாராக இருந்தான். (லூக். 15:19) இயேசு சொன்ன இந்தக் கதையிலிருந்து மூப்பர்கள் முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாம். அதாவது, பாவம் செய்த ஒரு சகோதரனோ சகோதரியோ உண்மையிலேயே மனம் திருந்திவிட்டாரா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
16. ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்பதைக் கண்டுபிடிப்பது மூப்பர்களுக்கு ஏன் அவ்வளவு சுலபம் இல்லை?
16 படுமோசமான பாவத்தைச் செய்த ஒரு சகோதரனோ சகோதரியோ உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்று தெரிந்துகொள்வது மூப்பர்களுக்கு அவ்வளவு சுலபம் கிடையாது. ஏனென்றால், மற்றவர்களுடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்று மூப்பர்களால் பார்க்க முடியாது. அதனால், செய்த பாவத்தைப் பற்றி அந்த நபர் உண்மையிலேயே என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வதற்கு அவரிடம் ஏதாவது அத்தாட்சி தெரிகிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டியிருக்கும். சில சமயத்தில், ஒரு சகோதரனோ சகோதரியோ துணிச்சலாக சில மோசமான பாவங்களைச் செய்துவிடலாம். அவர் செய்த பாவம் அவ்வளவு மோசமாக இருப்பதால், அவருடன் பேசுகிற மூப்பர்களுக்கு அவர் உண்மையிலேயே மனம் திருந்திவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.
17. (அ) ஒருவர் வருத்தப்படுவதை மட்டும் வைத்து அவர் மனம் திருந்திவிட்டார் என்று சொல்ல முடியுமா? உதாரணத்தோடு விளக்குங்கள். (ஆ) உண்மையிலேயே மனம் திருந்திய ஒருவர் என்னென்ன செய்வார் என்று 2 கொரிந்தியர் 7:11 சொல்கிறது?
17 இந்தச் சூழ்நிலையை யோசித்துப்பாருங்கள்: ஒரு சகோதரர் பல வருஷங்களாகத் தன்னுடைய மனைவிக்குத் துரோகம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் பாவத்தை ஒத்துக்கொண்டு மனம் திருந்துவதற்குப் பதிலாக, மனைவியிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் அதை மறைத்துவிடுகிறார். ஒருநாள் அவர் செய்த தவறு வெட்டவெளிச்சமாகிறது. அவர் செய்த தவறுக்கு அத்தாட்சிகள் இருப்பதாக மூப்பர்கள் அவரிடம் சொல்கிறார்கள். அப்போது, தான் செய்தது பெரிய தப்புதான் என்றும் அதற்காக ரொம்ப வருத்தப்படுவதாகவும் அவர் சொல்கிறார். இதை வைத்து அவர் உண்மையிலேயே மனம் திருந்திவிட்டார் என்று சொல்ல முடியுமா? இந்தச் சூழ்நிலையில், அவர் வருத்தப்படுகிறார் என்பதற்காக அவர் மனம் திருந்திவிட்டார் என்ற முடிவுக்கு மூப்பர்களால் வர முடியாது. ஏனென்றால், ஏதோ ஒரு தடவை பலவீனத்தால் அவர் இந்தப் பாவத்தைச் செய்யவில்லை. பல வருஷங்களாக இந்தப் பாவத்தைச் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவராகவே வந்து இந்தப் பாவத்தை ஒத்துக்கொள்ளவில்லை, மூப்பர்கள் கேட்டதால்தான் ஒத்துக்கொண்டார். அதனால், பாவம் செய்தவர் தன்னுடைய யோசனைகளிலும் உணர்வுகளிலும் நடத்தையிலும் உண்மையிலேயே மாற்றத்தைக் காட்ட வேண்டும். (2 கொரிந்தியர் 7:11-ஐ வாசியுங்கள்.) இவற்றையெல்லாம் செய்வதற்கு அவருக்கு கொஞ்சக் காலம் எடுக்கும். அதுவரை அவரை சபைநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்.—1 கொ. 5:11-13; 6:9, 10.
18. சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருப்பதை எப்படிக் காட்டலாம், அதனால் என்ன நன்மை?
18 சபைநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருந்தால், தவறாமல் கூட்டங்களுக்கு வருவார். மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையின்படி எப்போதும் ஜெபம் செய்வார், தவறாமல் பைபிளைப் படிப்பார். பாவம் செய்வதற்கு என்னென்ன சூழ்நிலைகள் காரணமாக இருந்தனவோ அவற்றையெல்லாம் தவிர்ப்பார். யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்வதற்கு தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால் யெகோவா தன்னை மன்னிப்பார் என்றும், சபையில் மறுபடியும் ஒருவராக ஆவதற்கு மூப்பர்கள் உதவி செய்வார்கள் என்றும் அவர் நம்பலாம். சபைநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொருவருடைய விஷயமும் வித்தியாசமானது. அதனால், ஒருவரை சபையில் திரும்பவும் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, மூப்பர்கள் நன்றாக யோசித்துப்பார்த்து கவனமாக முடிவெடுப்பார்கள். அதே சமயத்தில், அவரிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்து அவரை சபையில் சேர்க்காமலும் இருக்க மாட்டார்கள்.
19. உண்மையிலேயே மனம் திருந்திய ஒருவர் என்னவெல்லாம் செய்வார்? (எசேக்கியேல் 33:14-16)
19 உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால், செய்த பாவத்தை நினைத்து வெறுமனே வருத்தப்படுவது மட்டுமல்ல என்று இதுவரை பார்த்தோம். பாவம் செய்தவர், தான் யோசிக்கிற விதத்திலும் உணர்கிற விதத்திலும் உண்மையிலேயே மாற்றங்கள் செய்ய வேண்டும். மனம் திருந்தியிருப்பதைச் செயலில் காட்ட வேண்டும். அதற்கு, தவறான வழியில் போவதை விட்டுவிட்டு யெகோவாவின் வழியில் நடக்க வேண்டும். (எசேக்கியேல் 33:14-16-ஐ வாசியுங்கள்.) எல்லாவற்றையும்விட, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசையாக இருக்க வேண்டும்.
பாவம் செய்தவர்கள் மனம் திருந்த உதவுங்கள்
20-21. படுமோசமான பாவத்தைச் செய்த ஒருவருக்கு நாம் எப்படி உதவலாம்?
20 ‘பாவிகளை மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (லூக். 5:32) இயேசு செய்த ஊழியத்தில் ஒரு முக்கியமான அம்சமாக அது இருந்தது. இயேசுவுக்கு இருந்த அதே ஆசை நமக்கும் இருக்க வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டது உங்களுக்குத் தெரிய வருகிறது. இப்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
21 உங்கள் நண்பர் செய்த பாவத்தை மூடிமறைக்க நினைத்தால், நீங்கள் அவருக்கு நல்லது செய்யவில்லை, கெட்டதுதான் செய்கிறீர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவர் செய்த பாவத்தை உங்களால் மறைக்க முடியாது. ஏனென்றால், யெகோவா அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். (நீதி. 5:21, 22; 28:13) மூப்பர்களிடம் உதவி கேட்கும்படி உங்கள் நண்பரிடம் நீங்கள் சொல்லலாம். ஒருவேளை, அவர்களிடம் போய் அவர் சொல்லாவிட்டால், நீங்களே போய் சொல்லுங்கள். அப்படிச் செய்தால்தான் உங்கள் நண்பருக்கு நீங்கள் உண்மையிலேயே உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்களும் சொல்லாவிட்டால், மூப்பர்களுடைய உதவியை ஏற்றுக்கொண்டு மனம் திருந்துவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். யெகோவாவோடு இருக்கிற நட்பையும் அவர் இழந்துவிடுவார்.
22. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?
22 ஒருவர் படுமோசமான பாவத்தை ரொம்பக் காலத்துக்கு செய்துகொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மூப்பர்கள் அவரை சபைநீக்கம் செய்கிறார்கள். அப்படியென்றால், மூப்பர்கள் இரக்கமில்லாமல் நடந்துகொண்டார்கள் என்று அர்த்தமா? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, பாவம் செய்தவர்களை யெகோவா எப்படிக் கருணையோடு கண்டித்து திருத்துகிறார் என்பதைப் பற்றியும், நாம் எப்படி அவரைப் போல் நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தந்த பரிசு
a உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் வெறுமனே, ‘நான் தப்பு செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிடுங்க’ என்று சொல்வது கிடையாது. ஆகாப் ராஜா, மனாசே ராஜா, இயேசுவின் உவமையில் வரும் ஊதாரி மகன் ஆகியவர்களுடைய உதாரணங்களிலிருந்து உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். மோசமான பாவத்தைச் செய்த ஒரு சகோதரனோ சகோதரியோ உண்மையிலேயே மனம் திருந்திவிட்டாரா என்பதைப் புரிந்துகொள்ள மூப்பர்கள் எவற்றையெல்லாம் யோசித்துப்பார்க்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
b படவிளக்கம்: மிகாயா தீர்க்கதரிசியைச் சிறையில் தள்ளும்படி ஆகாப் ராஜா தன்னுடைய காவலர்களிடம் பயங்கர கோபமாகச் சொல்கிறார்.
c படவிளக்கம்: ஆலயத்தில் தான் வைத்திருந்த சிலைகளையெல்லாம் அழிக்கச் சொல்லி, மனாசே ராஜா கட்டளை கொடுக்கிறார்.
d படவிளக்கம்: ரொம்பத் தூரம் பயணம் செய்து களைத்துப்போய் வந்திருக்கிற ஊதாரி மகனுக்கு, தூரத்தில் தன்னுடைய வீட்டைப் பார்த்ததும் நிம்மதியாக இருக்கிறது.