இருதயத்தில் அகந்தை வந்துவிடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள்
‘தேவன் அகந்தையுள்ளவர்களை எதிர்க்கிறார்.’—யாக்கோபு 4:6, Nw.
1. நியாயமான பெருமைக்கு ஓர் உதாரணம் தருக.
ஏதோவொரு சம்பவம் உங்களைப் பெருமைப்பட வைத்திருக்கிறதா? அந்த இனிய உணர்வை அநேகமாக நாம் எல்லாரும் அனுபவித்திருப்போம். சிலசமயம் இப்படி ஓரளவு பெருமைப்படுவது தவறல்ல. உதாரணத்திற்கு, தங்கள் மகளின் நல்நடத்தையையும் கடின உழைப்பையும் பற்றிய ஸ்கூல் ரிப்போர்ட் ஒன்றை வாசித்துப் பார்க்கும் ஒரு கிறிஸ்தவத் தம்பதியரின் முகம் பெருமையில் பிரகாசிக்கலாம். அப்போஸ்தலன் பவுலும் அவருடைய தோழர்களும்கூட தாங்கள் உருவாக்கிய ஒரு புதிய சபையைக் குறித்து பெருமைப்பட்டார்கள், ஏனெனில் அந்தச் சபையிலிருந்த சகோதரர்கள் உபத்திரவத்திலும் உண்மையுடன் சகித்திருந்தார்கள்.—1 தெசலோனிக்கேயர் 1:1, 6; 2:19, 20; 2 தெசலோனிக்கேயர் 1:1, 4.
2. பெருமைப்படுவது ஏன் விரும்பப்படாத ஒரு குணமாகவே கருதப்படுகிறது?
2 ஏதோவொன்றைச் செய்வதால் அல்லது பெற்றிருப்பதால் வரும் சந்தோஷம் ஒருவரைப் பெருமைப்பட வைக்கலாம் என்பதை மேற்கூறப்பட்ட உதாரணங்கள் காண்பிக்கின்றன. ஆனால், பெருமை என்பது திறமை, அழகு, சொத்து, பதவி போன்றவற்றால் அளவுக்கதிகமான சுயகௌரவத்தை அல்லது உயர்வு மனப்பான்மையைப் பெற்றிருப்பதைப் பெரும்பாலும் குறிக்கிறது. பெருமை உள்ளவர்கள் அநேகமாகத் தலைக்கனத்தோடு நடந்துகொள்கிறார்கள். அப்படிப்பட்ட பெருமை வந்துவிடாதபடியே கிறிஸ்தவர்களான நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். ஏன்? ஏனெனில், நம்முடைய முற்பிதாவான ஆதாமிடமிருந்து நாம் பெற்றுள்ள சுயநல மனப்பான்மை நம் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. (ஆதியாகமம் 8:21) இதனால், நம் இருதயம் வெகு எளிதில் நம்மை மோசம்போக்கி, அந்தத் தவறான காரியங்களுக்காகப் பெருமைப்பட செய்துவிடலாம். உதாரணமாக இனம், சொத்து, கல்வி, திறமை, அல்லது மற்றவர்களோடு ஒப்பிடுகையில் வேலையில் சாமர்த்தியம் போன்ற காரணங்களுக்காகப் பெருமைப்படுவதை கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய காரணங்களுக்காகப் பெருமைப்படுவது தவறு, அது யெகோவாவைக் கோபமூட்டும்.—எரேமியா 9:23; அப்போஸ்தலர் 10:34, 35; 1 கொரிந்தியர் 4:7; கலாத்தியர் 5:26; 6:3, 4.
3. அகந்தை என்றால் என்ன, இயேசு அதைப் பற்றி என்ன சொன்னார்?
3 தவறான காரியங்களுக்காகப் பெருமைப்படுவதைத் தவிர்ப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமை நம் இருதயத்தில் வளர அனுமதித்தோமானால், அது அகந்தை என்ற படுமோசமான ரூபமெடுத்துவிடலாம். அகந்தை என்றால் என்ன? அகந்தையுள்ள ஒரு நபர், உயர்வு மனப்பான்மையுடன் நடந்துகொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களை, தன்னைவிட குறைந்த ஸ்தானத்தில் இருப்பதாக அவர் நினைக்கும் நபர்களை, கேவலமாகக் கருதுகிறார். (லூக்கா 18:9; யோவான் 7:47-49) ‘இருதயத்திலிருந்து வருகிறதும்’ ‘மனுஷனைத் தீட்டுப்படுத்துகிறதுமான’ பொல்லாத குணங்களை இயேசு பட்டியலிட்டபோது, அதில் ‘அகந்தையையும்’ அவர் குறிப்பிட்டார். (மாற்கு 7:20-23, NW) ஆகவே, இருதயத்தில் அகந்தை வந்துவிடாதபடி பார்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைக் கிறிஸ்தவர்கள் அறிய வருகிறார்கள்.
4. அகந்தையுள்ளவர்களைப் பற்றிய பைபிள் உதாரணங்களைச் சிந்திப்பது நமக்கு எவ்வாறு உதவலாம்?
4 அகந்தையுள்ளவர்கள் பற்றிய பைபிள் பதிவுகள் சிலவற்றைச் சிந்திப்பது அக்குணத்தைத் தவிர்க்க உங்களுக்கு உதவும். இவ்வாறு, உங்களுக்குள் இருக்கிற அல்லது காலப்போக்கில் வர வாய்ப்பிருக்கிற தகாத குணமான பெருமையை நீங்கள் எளிதில் கண்டுகொள்ள முடியும். அவ்வாறு செய்வது, இருதயத்தை அகந்தையுள்ளதாக்குகிற எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒதுக்கித்தள்ள உங்களுக்கு உதவும். அதன் பலனாக, கடவுள் தமது எச்சரிப்பிற்கு இசைய நடவடிக்கை எடுக்கும்போது நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்; அவர் இவ்வாறு எச்சரித்திருக்கிறார்: “நான் உன் பெருமையைக் குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ள மாட்டாய்.”—செப்பனியா 3:11.
அகந்தையுள்ளவர்களைக் கடவுள் தண்டிக்கிறார்
5, 6. பார்வோன் எவ்வாறு அகந்தையோடு நடந்துகொண்டான், அதன் விளைவு என்ன?
5 பார்வோன் போன்ற வல்லமைமிக்க ராஜாக்களிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்தும்கூட, அகந்தையை அவர் எப்படிக் கருதுகிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பார்வோனுடைய இருதயத்தில் அகந்தை இருந்ததில் சந்தேகமே இல்லை. தன்னை ஒரு கடவுளாகக் கருதிய அவன், தன்னுடைய அடிமைகளான இஸ்ரவேலரை படுமோசமாக நடத்தினான். யெகோவாவுக்கு ‘பண்டிகை கொண்டாடுவதற்காக’ வனாந்தரத்திற்குப் போக அனுமதிகேட்டு தன்னிடம் வந்த அவர்களிடம் அவன் என்ன சொன்னான் என்பதைக் கவனியுங்கள். ‘யார் அந்த யெகோவா, அவருடைய பேச்சைக் கேட்டு நான் எதற்காக இஸ்ரவேலைப் போகவிட வேண்டும்?’ என்று அகந்தையுடன் பதிலளித்தான்.—யாத்திராகமம் 5:1, 2, NW.
6 எகிப்தை அரசாண்ட பார்வோன் ஆறு வாதைகளை அனுபவித்த பிறகு, அவனிடம் இவ்வாறு கேட்கும்படி மோசேயிடம் யெகோவா சொன்னார்: “நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா? [“அகந்தையோடு நடந்துகொள்கிறாயா,” NW].” (யாத்திராகமம் 9:17) இப்படிக் கேட்டுவிட்டு ஏழாவது வாதையான கல்மழையைப் பற்றி மோசே அறிவித்தார்; அது தேசத்தையே நாசமாக்கியது. பத்தாவது வாதைக்குப் பிறகு, இஸ்ரவேலரை பார்வோன் விடுவித்தான்; ஆனால் மீண்டும் தன் மனதை மாற்றிக்கொண்டு அவர்களைத் துரத்திச் சென்றான். கடைசியில், பார்வோனும் அவனது படைவீரர்களும் செங்கடலில் சிக்கிக்கொண்டார்கள். இருபுறமிருந்து கடல்நீர் அவர்களை நோக்கி புரண்டு வந்தபோது அவர்கள் என்னவெல்லாம் யோசித்திருப்பார்கள்! பார்வோனுடைய அகந்தையின் விளைவு? ‘இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்’ என்று அவனுடைய தலைசிறந்த வீரர்கள் கூக்குரலிட்டார்கள்.—யாத்திராகமம் 14:25.
7. பாபிலோனின் ராஜாக்கள் எப்படி அகந்தையோடு நடந்துகொண்டார்கள்?
7 அகந்தையுள்ள வேறுசில ராஜாக்களும் யெகோவாவினால் தாழ்த்தப்பட்டார்கள். அவர்களில் ஒருவனே அசீரிய ராஜாவான சனகெரிப். (ஏசாயா 36:1-4, 20; 37:36-38) அசீரிய ராஜ்யம், காலப்போக்கில் பாபிலோனியரால் கைப்பற்றப்பட்டது, ஆனால் அதன்பிறகு, பாபிலோனின் இரு ராஜாக்களும் தாழ்த்தப்பட்டார்கள். பெல்ஷாத்சார் ராஜாவும் அவனுடைய ராஜ விருந்தாளிகளும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்ட பாத்திரங்களில் திராட்ச ரசம் அருந்தி, பாபிலோனிய தெய்வங்களைப் புகழ்ந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அப்போது திடீரென ஒரு மனிதக் கை தோன்றி, சுவர்மீது ஒரு விஷயத்தை எழுதியது. அந்த மர்ம எழுத்துகளுக்கு விளக்கம் அளிக்கும்படி தானியேல் கேட்டுக்கொள்ளப்பட்டார்; அப்போது பெல்ஷாத்சாருக்கு அவர் இவ்வாறு நினைப்பூட்டினார்: ‘உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தை . . . கொடுத்தார். அவருடைய இருதயம் மேட்டிமையானபோதோ . . . அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரை விட்டு அகன்றுபோயிற்று. அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல் இருக்கிறீர்.’ (தானியேல் 5:3, 18, 20, 22) அதே இரவன்று, மேதிய-பெர்சிய படை பாபிலோனைக் கைப்பற்றி, பெல்ஷாத்சாரைக் கொன்றுபோட்டது.—தானியேல் 5:30, 31.
8. அகந்தையுள்ளவர்களை யெகோவா என்ன செய்தார்?
8 யெகோவாவின் மக்களை இழிவுபடுத்திய அகந்தையுள்ள மற்றவர்களையும் நினைத்துப் பாருங்கள்: பெலிஸ்த இராட்சதனான கோலியாத், பெர்சிய மந்திரியான ஆமான், யூதேயா மாகாணத்தின் ராஜாவான ஏரோது அகிரிப்பா. இந்த மூன்று ஆட்களும் தங்களுடைய அகந்தையின் காரணமாகவே யெகோவாவின் கரத்தில் இழிவான சாவைச் சந்தித்தார்கள். (1 சாமுவேல் 17:42-51; எஸ்தர் 3:5, 6; 7:10; அப்போஸ்தலர் 12:1-3, 21-23) அகந்தையுள்ள இந்த மூன்று ஆட்களையும் யெகோவா தண்டித்தது பின்வரும் உண்மையை வலியுறுத்திக் காட்டுகிறது: “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” (நீதிமொழிகள் 16:18) ஆம், ‘தேவன் அகந்தையுள்ளவர்களை எதிர்க்கிறார்’ என்பதில் துளியும் சந்தேகமில்லை.—யாக்கோபு 4:6, NW.
9. தீருவின் ராஜாக்கள் எப்படித் துரோகிகளாக ஆனார்கள்?
9 எகிப்து, அசீரியா, பாபிலோன் ஆகியவற்றின் அகந்தையுள்ள ராஜாக்களுக்கு நேர்மாறாக, தீரு பட்டணத்தின் ராஜா ஒருசமயம் கடவுளுடைய மக்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். தாவீது, சாலொமோன் ஆகிய ராஜாக்களுடைய ஆட்சியின்போது, அரண்மனைகளையும் கடவுளுடைய ஆலயத்தையும் கட்டுவதற்குத் திறம்பட்ட கைவினைஞர்களை அவன் அனுப்பி வைத்தான், அதோடு கட்டுமானப் பொருள்களையும் அளித்தான். (2 சாமுவேல் 5:11; 2 நாளாகமம் 2:11-16) ஆனால் வருத்தகரமாக, பிற்பாடு தீருவின் ராஜாக்கள் யெகோவாவின் மக்களுக்கு விரோதமாக எழும்பினார்கள். ஏன், எதற்கு?—சங்கீதம் 83:3-7; யோவேல் 3:4-6; ஆமோஸ் 1:9, 10.
“உன் இருதயம் மேட்டிமையாயிற்று”
10, 11. (அ) தீருவின் ராஜாக்களுக்கு யாரை ஒப்பிடலாம்? (ஆ) இஸ்ரவேலரைக் குறித்து தீரு பட்டணத்தாருக்கு இருந்த மனப்பான்மையை எது மாற்றியது?
10 தீருவின் ராஜவம்சத்தின் கெட்ட செயல்களை வெளிப்படுத்தி, கண்டனம் செய்வதற்கு யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியான எசேக்கியேலை ஏவினார். ‘தீரு ராஜாவுக்கு’ சொல்லப்பட்ட அந்தச் செய்தியில் உள்ள சொற்றொடர்கள், தீருவின் ராஜவம்சத்துக்கும் பொருந்துகின்றன, ‘சத்தியத்திலே நிலைநிற்காத’ முதல் துரோகியான சாத்தானுக்கும் பொருந்துகின்றன. (எசேக்கியேல் 28:12; யோவான் 8:44) ஒருசமயத்தில் யெகோவாவின் பரலோகக் குமாரர்களின் அமைப்பில் சாத்தானும் உண்மையுள்ள ஆவி சிருஷ்டியாக இருந்தான். அவனும் தீருவின் ராஜாக்களும் வழிவிலகி போனதற்கான அடிப்படைக் காரணத்தை எசேக்கியேலின் மூலம் யெகோவா தேவன் இவ்வாறு சுட்டிக்காட்டினார்:
11 “நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; . . . சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; . . . நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; . . . நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் . . . காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை . . . அழித்துப்போடுவேன். உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்.” (எசேக்கியேல் 28:13-17) ஆம், தீரு ராஜாக்களின் மனமேட்டிமையே, அதாவது அகந்தையே, யெகோவாவின் மக்களுக்கு விரோதமாகச் சண்டையிட காரணமானது. தீரு, வர்த்தக மையமாக மிகுந்த செல்வச்செழிப்புடன் திகழ்ந்தது, அதன் அழகிய பொருள்களால் பெயர்பெற்றும் விளங்கியது. (ஏசாயா 23:8, 9) இதனால் தீருவின் ராஜாக்கள் ஆணவமுள்ளவர்களாக ஆனார்கள், கடவுளுடைய மக்களை ஒடுக்கவும் ஆரம்பித்தார்கள்.
12. சாத்தானை நம்பிக்கைத் துரோகியாக்கியது எது, அவன் தொடர்ந்து என்ன செய்து வருகிறான்?
12 அவ்வாறே, கடவுள் கொடுக்கிற எந்த வேலையையும் செய்து முடிப்பதற்கான ஞானம், சாத்தானாக மாறிய ஆவி சிருஷ்டிக்கு ஒருகாலத்தில் இருந்தது. அதற்காக நன்றியோடு இருப்பதற்குப் பதிலாக, அவன் “இறுமாப்படைந்து” கடவுள் ஆட்சிசெய்கிற விதத்தையே அவமதித்தான். (1 தீமோத்தேயு 3:6) தற்பெருமையில் அவன் அந்தளவு மிதந்ததால், ஆதாம் ஏவாளின் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ளத் துடித்தான். இந்தப் பொல்லாத ஆசை கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பித்தது. (யாக்கோபு 1:14, 15) எந்த மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லியிருந்தாரோ, அந்த மரத்தின் கனியைச் சாப்பிடும்படி ஏவாளை சாத்தான் வஞ்சித்தான். அதன்பின் அவளைப் பயன்படுத்தி, ஆதாமையும் அந்த விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட வைத்தான். (ஆதியாகமம் 3:1-6) இவ்வாறு, அந்த முதல் மனிதத் தம்பதியர் தங்கள்மீது ஆட்சிசெய்ய கடவுளுக்கிருக்கும் உரிமையை நிராகரித்தார்கள்; ஒருவிதத்தில் அவர்கள் சாத்தானுடைய வணக்கத்தாராகவே ஆனார்கள். அவனுடைய அகந்தைக்கு ஓர் அளவே கிடையாது. இயேசு கிறிஸ்து உட்பட பரலோகத்திலும் பூமியிலும் உள்ள புத்திகூர்மையுள்ள எல்லாச் சிருஷ்டிகளும் யெகோவாவின் பேரரசுரிமையை ஒதுக்கிவிட்டு, தன்னை வணங்கும்படி செய்ய அவன் முயன்றிருக்கிறான்.—மத்தேயு 4:8-10; வெளிப்படுத்துதல் 12:3, 4, 9.
13. அகந்தை என்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது?
13 ஆகையால், சாத்தானிடமிருந்தே அகந்தை ஆரம்பமாயிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்; இன்றைய உலகில் பாவமும், துன்பமும், சீரழிவும் நிலவுவதற்கு அப்படிப்பட்ட அகந்தையே காரணம். “இப்பிரபஞ்சத்தின் தேவனான” சாத்தான், கெட்ட குணங்களான பெருமையையும் அகந்தையையும் தொடர்ந்து முன்னேற்றுவிக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) தனக்குக் கொஞ்ச காலம் மாத்திரமே இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், மெய்க் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவன் யுத்தம்பண்ணுகிறான். அவர்கள் கடவுளை விட்டுவிலகி தற்பிரியராகவும், வீம்புக்காரராகவும், அகந்தையுள்ளவர்களாகவும் ஆக வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள். அத்தகைய சுயநல நடத்தை இந்தக் “கடைசி நாட்களில்” சகஜமாகக் காணப்படும் என பைபிள் முன்கூட்டியே அறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1, 2; வெளிப்படுத்துதல் 12:12, 17.
14. எந்த நியமத்தின்படி யெகோவா தமது புத்திகூர்மையுள்ள சிருஷ்டிகளை நடத்துகிறார்?
14 சாத்தானுடைய அகந்தை ஏற்படுத்திய தீய விளைவுகளை இயேசு கிறிஸ்து தம்முடைய பங்கில் தைரியமாக வெளிப்படுத்தினார். யெகோவா மனிதகுலத்தை எந்த நியமத்தின் அடிப்படையில் நடத்துகிறார் என்பதைக் குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில், அதுவும் சுயநீதிமான்களான தம்முடைய எதிரிகளின் முன்னிலையில் பின்வருமாறு அவர் தெளிவுபடுத்தினார்: “தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—லூக்கா 14:11; 18:14; மத்தேயு 23:12.
அகந்தை வராதபடி உங்கள் இருதயத்தைக் காத்திடுங்கள்
15, 16. ஆகாருக்கு ஏன் அகந்தை வந்தது?
15 அகந்தைக்கு, பிரபலமான ஆட்களுடைய உதாரணமே கொடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். அப்படியானால், சாதாரண ஜனங்கள் அகந்தையுள்ளவர்களாக ஆக மாட்டார்கள் என்று அர்த்தமா? நிச்சயமாகவே இல்லை. ஆபிரகாமின் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு ஒரு வாரிசு இருக்கவில்லை, அவருடைய மனைவி சாராள் பிள்ளை பிறப்பிக்கும் வயதைத் தாண்டிவிட்டிருந்தாள். ஆபிரகாமின் சூழ்நிலையிலிருந்த ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதும், பிள்ளைகளைப் பிறப்பிப்பதும் அப்போது வழக்கமாக இருந்தது. அதைக் கடவுள் அப்போது அனுமதித்ததற்குக் காரணம், திருமண சம்பந்தமாக ஆரம்பத்தில் அவர் வைத்திருந்த தராதரத்தை மெய் வணக்கத்தார் மத்தியில் மீண்டும் நிலைநாட்டுவதற்குரிய நேரம் அப்போது வந்திருக்கவில்லை.—மத்தேயு 19:3-9.
16 ஆபிரகாம், தன் மனைவி சாராளின் வற்புறுத்தலால், எகிப்திய அடிமைப் பெண்ணான ஆகார் மூலம் ஒரு வாரிசைப் பெற சம்மதித்தார். ஆபிரகாமின் இரண்டாம் தாரமான ஆகார் கர்ப்பமானாள். மதிப்புமிக்க ஸ்தானத்தைப் பெற்றதற்காக அவள் மிகுந்த நன்றியுள்ளவளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியிராமல் அவள் தன்னுடைய இருதயத்தில் அகந்தைக்கு இடம் அளித்தாள். “அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்” என்று பைபிள் சொல்கிறது. அவளுடைய மனப்பான்மையால் ஆபிரகாமின் வீட்டில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது; ஆகவே அவளை சாராள் வீட்டை விட்டே துரத்தினாள். ஆனால் அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருந்தது. கடவுளுடைய தேவதூதன் ஆகாருக்கு இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு.” (ஆதியாகமம் 16:4, 9) இந்த அறிவுரையைப் பின்பற்றி, சாராள்மீது தனக்கிருந்த மனப்பான்மையை ஆகார் மாற்றிக்கொண்டதாகவே தெரிகிறது, அதனால்தான் திரளான ஜனங்களுக்கு அவள் மூதாதையாக ஆனாள்.
17, 18. அகந்தைக்கு எதிராக நாம் எல்லாருமே ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
17 ஒரு நபருடைய அந்தஸ்து உயரும்போது அவருக்கு ஒருவேளை அகந்தை வந்துவிடலாம் என்பதை ஆகாரின் உதாரணம் காண்பிக்கிறது. அப்படியானால், கடவுளை தூய இருதயத்தோடு சேவித்துவருகிற ஒரு கிறிஸ்தவரும்கூட, செல்வத்தையோ அதிகாரத்தையோ பெற்றுக்கொள்ளும்போது அகந்தையுள்ளவராக மாறிவிடக்கூடும். ஒருவேளை அவருடைய வெற்றிக்காகவோ, ஞானத்திற்காகவோ, திறமைக்காகவோ பாராட்டைப் பெறும்போதுகூட அத்தகைய மனப்பான்மை அவருக்கு வந்துவிடலாம். ஆம், ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய இருதயத்தில் அகந்தை புகுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அவர் ஏதோவொன்றில் வெற்றிபெறும்போது அல்லது கூடுதலான பொறுப்புகளைப் பெறும்போது அவ்வாறு கவனமாக இருக்க வேண்டும்.
18 அகந்தையைத் தவிர்ப்பதற்கான மிக முக்கிய காரணம், அந்தக் குணத்தைப் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டமே. அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.” (நீதிமொழிகள் 21:4) ‘இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்களாக’ இருக்கும் கிறிஸ்தவர்களை ‘இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாய்,’ அதாவது அகந்தையாய் இருக்கக் கூடாதென பைபிள் குறிப்பாக எச்சரிப்பது ஆர்வத்திற்குரிய விஷயம். (1 தீமோத்தேயு 6:17; உபாகமம் 8:11-17) செல்வந்தரல்லாத கிறிஸ்தவர்களோ ‘வன்கண்ணை,’ அதாவது பொறாமையுள்ள கண்ணை, தவிர்க்க வேண்டும்; அதோடு, ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, யாருக்கு வேண்டுமானாலும் அகந்தை வந்துவிடலாம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.—மாற்கு 7:21-23; யாக்கோபு 4:5.
19. உசியா எவ்விதமாகத் தன்னுடைய நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டான்?
19 மற்ற பொல்லாத குணங்களுடன் அகந்தையும் சேர்ந்துகொள்ளும்போது, யெகோவாவுடன் நமக்குள்ள நல்ல உறவு முறிந்துவிடலாம். உதாரணத்திற்கு, உசியா ராஜாவுடைய ஆட்சியின் ஆரம்ப நாட்களை எடுத்துக்கொள்ளுங்கள்: ‘அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான் . . . தேவனைத் [“தொடர்ந்து,” NW] தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.’ (2 நாளாகமம் 26:4, 5) ஆனால், வருத்தகரமாக, உசியா தன்னுடைய நல்ல பெயரைக் கெடுத்துக்கொண்டான்; காரணம், ‘தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையானது.’ தான் என்ற அகங்காரம் அவனுக்கு அந்தளவு ஏற்பட்டதால் தூபங்காட்டுவதற்காக ஆலயத்திற்குள் பிரவேசித்தான். துணிச்சலான அந்தக் காரியத்தை செய்ய வேண்டாமென ஆசாரியர்கள் அவனை எச்சரித்தபோது, “உசியா கோபங்கொண்டான்.” அதன் விளைவாக, யெகோவா அவனைக் குஷ்டரோகத்தால் தண்டித்தார், அவருடைய அங்கீகாரத்தை இழந்த நிலையில் அவன் மரணமடைந்தான்.—2 நாளாகமம் 26:16-21.
20. (அ) எசேக்கியா ராஜாவின் நற்பெயர் எப்படிக் கெட்டுப்போக இருந்தது? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திக்கப் போகிறோம்?
20 இதை எசேக்கியா ராஜாவுடைய உதாரணத்துடன் நீங்கள் வேறுபடுத்திப் பாருங்கள். ஒருசமயம், அந்த ராஜாவின் அருமையான பெயர் கெட்டுப்போக இருந்தது, காரணம் அவர் ‘மனமேட்டிமையானார்.’ ஆனால் சந்தோஷகரமாக, ‘எசேக்கியா மனமேட்டிமையினிமித்தம் தன்னைத் தாழ்த்தினபடியினால்’ மீண்டும் கடவுளுடைய தயவைப் பெற்றார். (2 நாளாகமம் 32:25, 26) எசேக்கியாவின் அகந்தை நீங்குவதற்கு மனத்தாழ்மை தேவைப்பட்டது என்பதைக் கவனியுங்கள். ஆம், அகந்தைக்கு நேரெதிரானது மனத்தாழ்மை. ஆகையால், மனத்தாழ்மையை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்றும், அதை எவ்வாறு தொடர்ந்து காண்பிக்கலாம் என்றும் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம்.
21. மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்கள் எதற்காக ஆவலோடு காத்திருக்கலாம்?
21 என்றாலும், அகந்தையினால் ஏற்பட்டிருக்கும் எல்லாக் கெட்ட விளைவுகளையும் நாம் நினைவில் வைத்திருப்போமாக. ‘தேவன் அகந்தையுள்ளவர்களை எதிர்க்கிறார்’ என்பதால், தவறான காரியங்களுக்காகப் பெருமைப்படுவதைத் தவிர்க்க திடத்தீர்மானமாய் இருப்போமாக. மனத்தாழ்மையுள்ள கிறிஸ்தவர்களாக இருக்க பிரயாசப்படும் நாம், கடவுளுடைய மகா நாளில் தப்பிப்பிழைப்பதற்கு ஆவலோடு காத்திருக்கலாம்; அச்சமயத்தில் அகந்தையுள்ளவர்கள் இந்தப் பூமியிலிருந்து நீக்கப்படுவார்கள், அவர்களால் ஏற்பட்ட கெட்ட விளைவுகளும் நீக்கப்படும். அப்போது ‘மனுஷரின் மேட்டிமை தாழ்ந்து, அவர்களுடைய வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.’—ஏசாயா 2:17.
தியானிக்க சில குறிப்புகள்
• அகந்தையுள்ள ஒருவரை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
• அகந்தை எப்படி ஆரம்பமானது?
• எதெல்லாம் ஒரு நபரை அகந்தையுள்ளவராக ஆக்கிவிடலாம்?
• அகந்தை வந்துவிடாதபடி நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
[பக்கம் 23-ன் படம்]
பார்வோனின் அகந்தை அவனைத் தாழ்த்தியது
[பக்கம் 24-ன் படம்]
ஆகாரின் ஸ்தானம் உயர்ந்தபோது அவளுக்கு அகந்தை வந்தது
[பக்கம் 25-ன் படம்]
எசேக்கியா தன்னைத் தானே தாழ்த்தியதால் மீண்டும் கடவுளுடைய தயவைப் பெற்றார்