யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இரண்டு நாளாகம புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களின் தொடர்ச்சிதான் எஸ்றா புத்தகம். ஆசாரியனான எஸ்றாவே இதன் எழுத்தாளர். பெர்சிய அரசரான கோரேசு, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களில் மீதியானோரை அவர்களுடைய தாயகத்திற்குத் திரும்பிச் செல்ல கட்டளை பிறப்பித்த விஷயத்தோடு எஸ்றா தன் பதிவை ஆரம்பிக்கிறார். புறஜாதியாரால் தங்களை அசுத்தப்படுத்திக்கொண்ட யூதர்களை சுத்திகரிக்க நடவடிக்கை எடுப்பது பற்றிக் கூறுவதோடு எஸ்றா தன் பதிவை முடிக்கிறார். மொத்தத்தில், இப்புத்தகம் 70 வருட காலப்பகுதியை, அதாவது பொ.ச.மு. 537-467 வரையான காலப்பகுதியை, உள்ளடக்குகிறது.
எஸ்றா தெளிவான ஒரு நோக்கத்தோடுதான் இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார்; பாபிலோனில் சிறைப்பட்டிருந்த தம் ஜனங்களை விடுவித்து, எருசலேமில் மெய் வணக்கத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்ற தம் வாக்குறுதியை யெகோவா எப்படி நிறைவேற்றினார் என்பதைக் காட்டுவதே அந்த நோக்கம். அதனால், அந்த நோக்கத்தோடு தொடர்புடைய சம்பவங்களை மட்டுமே அவர் சிறப்பித்துக் காட்டுகிறார். ஆலயம் எவ்வாறு திரும்பக் கட்டப்பட்டது, எதிர்ப்பின் மத்தியிலும் இஸ்ரவேலருடைய அபூரணத்தின் மத்தியிலும் யெகோவாவின் வணக்கம் எவ்வாறு திரும்பவும் ஸ்தாபிக்கப்பட்டது ஆகிய பதிவுகள் எஸ்றா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இப்பதிவுகள் நமக்கு மிகவும் ஆர்வத்திற்குரியவை; ஏனெனில் யெகோவாவின் வணக்கம் திரும்பவும் ஸ்தாபிக்கப்பட்டுவரும் ஒரு காலப்பகுதியில்தான் நாமும்கூட வாழ்கிறோம். ‘யெகோவாவின் பர்வதத்திற்கு’ அநேகர் திரண்டு வருகிறார்கள்; கூடிய விரைவில் இப்பூமி ‘யெகோவாவுடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறையப்போகிறது.’—ஏசாயா 2:2, 3; ஆபகூக் 2:14.
ஆலயம் திரும்பக் கட்டப்படுகிறது
தாயகத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு கோரேசு விடுத்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து ஆளுநரான செருபாபேலுடைய, அதாவது சேஸ்பாத்சாருடைய, தலைமையில் சுமார் 50,000 யூதர்கள் எருசலேமுக்குத் திரும்புகிறார்கள். அங்கு சென்றதும் பலிபீடத்தை அதற்குரிய இடத்தில் கட்டி யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த ஆரம்பிக்கிறார்கள்.
அடுத்த வருடம், இஸ்ரவேலர் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திவாரம் அமைக்கிறார்கள். கட்டுமான வேலையில் எதிரிகள் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் வேலையை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு அரச கட்டளை பிறப்பிக்கும்படி செய்துவிடுகிறார்கள். ஆனால், தடையின் மத்தியிலும் ஆலயக் கட்டுமான வேலையை மீண்டும் துவக்குவதற்கு தீர்க்கதரிசிகளான ஆகாயும் சகரியாவும் ஜனங்களை ஊக்குவிக்கிறார்கள். பெர்சிய ராஜாவான கோரேசு முதன்முதலில் பிறப்பித்த மாற்றமுடியாத கட்டளைக்கு எதிராய்ச் செயல்பட முடியாதென்ற பயத்தில் எதிரிகள் நெருங்க முடியாதிருக்கிறார்கள். அரசு தரப்பில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின்போது “எருசலேமிலிருந்த தேவாலயத்தைக் குறித்து” கோரேசு பிறப்பித்த ஆணை வெளிச்சத்திற்கு வருகிறது. (எஸ்றா 6:3) வேலை மும்முரமாக நடைபெற்று முடிவுறுகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:3-6—தங்கள் தாயகத்திற்குத் திரும்பி வராதிருந்த இஸ்ரவேலர் விசுவாசத்தில் குறைவுபட்டவர்களாக இருந்தார்களா? சிலர் எருசலேமுக்குத் திரும்பி வராததற்குக் காரணம், ஒருவேளை அவர்கள் பொருளாசை பிடித்தவர்களாகவோ மெய் வணக்கத்திற்கு மதிப்பு கொடுக்காதவர்களாகவோ இருந்திருக்கலாம் என்பதே; ஆனால் எல்லாருடைய விஷயத்திலும் அப்படி இருக்கவில்லை. முதலாவதாக, எருசலேமுக்கு 1,600 கிலோமீட்டர் தூரம் பயணித்துவர நான்கு அல்லது ஐந்து மாதங்கள் எடுத்தன. அதுமட்டுமல்ல, 70 வருடங்கள் பாழாய்க்கிடந்த தேசத்தில் குடிபுகுவதற்கும், புதுப்பித்துக் கட்டும் வேலையைச் செய்வதற்கும் அதிக பலம் தேவைப்பட்டது. ஆக, வியாதி, வயோதிகம், குடும்பப் பொறுப்புகள் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாகவே சிலர் திரும்பி வராதிருந்தார்கள்.
2:43—நிதனீமியர் யார்? இஸ்ரவேலரல்லாத இவர்கள், ஆலயத்தில் அடிமைகளாக அல்லது ஊழியர்களாகச் சேவை செய்தவர்கள். இவர்களுள், யோசுவாவின் காலத்திலிருந்த கிபியோனியரின் சந்ததியாரும் மற்றவர்களும் இருந்தார்கள். “தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக” இவர்களை நியமித்தார்கள்.—எஸ்றா 8:20.
2:55—சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் யார்? இஸ்ரவேலரல்லாத இவர்களுக்கு யெகோவாவின் சேவையில் விசேஷித்த சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டன. ஒருவேளை ஆலயத்தில் இவர்கள் வேதபாரகர்களாக அல்லது நகல் எடுப்பவர்களாக சேவை செய்திருக்கலாம் அல்லது சில நிர்வாகப் பொறுப்புகளில் இருந்திருக்கலாம்.
2:61-63—யெகோவாவுடைய பதிலைத் தெரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஊரீம், தும்மீம் என்பவை சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களிடம் இருந்தனவா? தாங்கள் ஆசாரிய வம்சத்தில் பிறந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு வம்ச அட்டவணையைக் காட்டத் தவறியவர்கள் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி அதை நிரூபித்திருக்கலாம். அது சாத்தியமாக இருந்திருக்கலாம் என்றே எஸ்றா குறிப்பிடுகிறார். ஆனால், சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபோதும் அதற்குப் பிறகும் ஊரீம், தும்மீம் என்பவை பயன்படுத்தப்பட்டதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. யூத பாரம்பரியம் சொல்கிறபடி, பொ.ச.மு. 607-ல் ஆலயம் அழிக்கப்பட்ட சமயத்தில் அவையும் காணாமற்போய்விட்டன.
3:12—யெகோவாவின் ‘முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதானவர்கள்’ ஏன் அழுதார்கள்? சாலொமோன் கட்டிய ஆலயம் எவ்வளவு மேன்மையானதாய் இருந்தது என்பதை இவர்கள் எண்ணிப் பார்த்திருக்கலாம். அதனோடு ஒப்பிடுகையில் இந்தப் புதிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் அமைக்கும் வேலை ‘அவர்களுடைய பார்வையில் ஒன்றுமில்லாததுபோல்’ இருந்தது. (ஆகாய் 2:2, 3) அவர்களுடைய முயற்சியால் ஆலயத்தை அதன் முந்தின மகிமைக்குத் திரும்பக் கொண்டுவர முடியுமா? முடியாது என நினைத்து அவர்கள் மனமுடைந்திருக்க வேண்டும், அதனால்தான் அழுதார்கள்.
3:8-10; 4:23, 24; 6:15, 16—ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்கு எத்தனை வருடங்கள் பிடித்தன? பொ.ச.மு. 536-ல், அதாவது அவர்கள் திரும்பிவந்த ‘இரண்டாம் வருஷத்தில்’ ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. பொ.ச.மு. 522-ல் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் காலத்தில் கட்டுமான வேலை நிறுத்தப்பட்டது. தரியு ராஜாவின் இரண்டாம் வருடம்வரை, அதாவது பொ.ச.மு. 520 வரை அந்தத் தடை நீடித்தது. அவருடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில், அதாவது பொ.ச.மு. 515-ல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. (“பொ.ச.மு. 537 முதல் 467 வரை ஆட்சிசெய்த பெர்சிய ராஜாக்கள்” என்ற தலைப்பிலான பெட்டியைக் காண்க.) ஆகவே, ஆலயத்தைக் கட்டுவதற்குச் சுமார் 20 வருடங்கள் பிடித்தன.
4:8–6:18—இந்த வசனங்கள் ஏன் அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன? ராஜாக்களுக்கு அரசியல் அதிகாரிகள் எழுதிய கடிதங்கள் மற்றும் அவர்களுக்கு ராஜாக்கள் எழுதி அனுப்பிய பதில்களின் நகல்களே பெரும்பாலும் இந்த வசனங்களில் உள்ளன. அன்றைய வியாபார உலகிலும் அரசியல் வட்டங்களிலும் பயன்படுத்தப்பட்ட அரமேயிக் மொழியில் எழுதப்பட்டிருந்த பொது ஆவணங்களிலிருந்து எஸ்றா அவற்றை நகல் எடுத்திருந்தார். இந்தப் பூர்வ செமிட்டிக் மொழியில் எழுதப்பட்ட பைபிளின் மற்ற பகுதிகளாவன: எஸ்றா 7:12-26, எரேமியா 10:11, தானியேல் 2:4–7:28.
நமக்குப் பாடம்:
1:2. சுமார் 200 வருடங்களுக்கு முன் ஏசாயா உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (ஏசாயா 44:28) யெகோவாவின் வார்த்தையிலுள்ள தீர்க்கதரிசனங்கள் ஒருபோதும் நிறைவேறாமல் போவதில்லை.
1:3-6. பாபிலோனிலேயே தங்கிவிட்ட சில இஸ்ரவேலரைப் போல, அநேக யெகோவாவின் சாட்சிகளால் முழுநேர ஊழியத்திலோ தேவை அதிகமுள்ள இடங்களிலோ சேவை செய்ய முடிவதில்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய முடிகிறவர்களை அவர்கள் ஆதரித்து ஊக்குவிக்கிறார்கள்; ராஜ்ய பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் முன்னேற்றுவிக்க மனமுவந்து நன்கொடைகளையும் கொடுக்கிறார்கள்.
3:1-6. திரும்பி வந்த உண்மையுள்ள ஜனங்கள் பொ.ச.மு. 537, ஏழாம் மாதத்தில் (செப்டம்பர்/அக்டோபர் மாதங்களுக்கு இணையான திஷ்ரி மாதத்தில்), தங்களுடைய முதல் பலியைச் செலுத்தினார்கள். ராஜா நேபுகாத்நேச்சார் பொ.ச.மு. 607, ஐந்தாம் மாதத்தில் (ஜூலை/ஆகஸ்ட் மாதங்களுக்கு இணையான ஆப் மாதத்தில்) எருசலேமுக்குள் நுழைந்திருந்தார்; இரண்டு மாதங்களுக்குப் பின் அந்நகரத்தின் அழிவு முழுமை பெற்றது. (2 இராஜாக்கள் 25:8-17; 22-26) முன்னுரைத்தபடியே, சரியான சமயத்தில் எருசலேமின் 70 வருட பாழ்க்கடிப்பு முடிவடைந்தது. (எரேமியா 25:11; 29:10) யெகோவாவின் வார்த்தை முன்னுரைக்கிற அனைத்தும் எப்போதுமே நிறைவேறும்.
4:1-3. பொய் வணக்கத்தார் தங்களுக்கு உதவிசெய்ய முன்வந்ததை உண்மையுள்ள மீதியானோர் ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படி ஏற்றுக்கொள்வது அவர்களோடு மத ஒப்பந்தம் செய்வதுபோல் இருக்கும் என்பதால் அதை மறுத்தார்கள். (யாத்திராகமம் 20:5; 34:12) அவ்வாறே இன்றும் யெகோவாவின் வணக்கத்தார் எந்தவொரு கலப்புவிசுவாச இயக்கத்திலும் சேருவதில்லை.
5:1-7; 6:1-12. தம் ஜனங்களுடைய வெற்றிக்கு யெகோவாவால் வழிசெய்ய முடியும்.
6:14, 22. யெகோவாவின் வேலையில் வைராக்கியத்தோடு ஈடுபடுகையில் அவருடைய அங்கீகாரமும் ஆசீர்வாதமும் இருக்கும்.
6:21. யூதர்களின் தாயகத்தில் வாழ்ந்த சமாரியர்களும், புறமதப் பழக்கவழக்கங்களில் ஈடுபட்டிருந்த யூதர்களும் யெகோவாவின் வேலை மும்முரமாக நடப்பதைப் பார்த்ததால், தேவையான மாற்றங்களைச் செய்ய உந்துவிக்கப்பட்டார்கள். அப்படியானால், ராஜ்ய பிரசங்க வேலை உட்பட, கடவுள் கொடுத்த வேலைகளில் நாம் ஊக்கமாகப் பங்குகொள்ள வேண்டும், அல்லவா?
எஸ்றா எருசலேமுக்கு வருகிறார்
திரும்பக் கட்டப்பட்ட யெகோவாவுடைய ஆலயத்தின் திறப்புவிழா முடிந்து ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது வருடம் பொ.ச.மு. 468. கடவுளுடைய ஜனத்தாரில் மீதியானோருடனும் நன்கொடையாக அளிக்கப்பட்ட பணத்துடனும் எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகிறார். அங்கே அவர் காண்பது என்ன?
பிரபுக்கள் எஸ்றாவிடம் இவ்வாறு சொல்கிறார்கள்: “இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், . . . இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. . . . [அதுமட்டுமா,] பிரபுக்களின் கையும் அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது” என்கிறார்கள். (எஸ்றா 9:1, 2) எஸ்றா அதிர்ச்சி அடைகிறார். ‘திடன்கொண்டு செயல்படும்படி’ அவர் ஊக்குவிக்கப்படுகிறார். (எஸ்றா 10:4, NW) ஜனங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறார், அதற்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்.
வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்:
7:1, 7, 11—இந்த வசனங்கள் கட்டுமான வேலைக்குத் தடைவிதித்த அர்தசஷ்டாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றனவா? இல்லை. அர்தசஷ்டா என்பது பெர்சிய ராஜாக்கள் இருவருக்கு வழங்கப்பட்ட பெயரை அல்லது பட்டப்பெயரைக் குறித்தது. அவர்களில் ஒருவரான பார்டியா அல்லது கௌமதா என்பவர்தான் பொ.ச.மு. 522-ல் ஆலய வேலையை நிறுத்துவதற்கு ஆணையிட்டவர். ஆனால், எருசலேமுக்கு எஸ்றா வந்த சமயத்தில் இருந்தவர் அர்தசஷ்டா லாங்கிமானஸ் ஆவார்.
7:28–8:20—பாபிலோனில் இருந்த யூதர்கள் பலரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குச் செல்ல ஏன் தயங்கினார்கள்? முதன்முதலில் யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பி, 60-க்கும் மேலான வருடங்கள் கடந்துவிட்டிருந்தபோதிலும், எருசலேமில் சொற்ப ஜனங்களே குடியிருந்தார்கள். எருசலேமுக்குத் திரும்புகிறவர்கள், கடினமான, ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களுடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். பாபிலோனில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த யூதர்களுக்கு அன்றைய எருசலேமின் சூழ்நிலை செழுமையான வாழ்க்கையை அளிப்பதாக இருக்கவில்லை. எருசலேமுக்குப் பயணிப்பதும்கூட ஆபத்தானதாக இருந்தது. திரும்பிச் செல்பவர்களுக்கு யெகோவாமீது பலமான விசுவாசமும், மெய் வணக்கத்திடம் ஆர்வமும், குடிமாறுவதற்கான தைரியமும் தேவைப்பட்டது. யெகோவாவின் கரம் தன்மேல் இருந்ததால், எஸ்றாவும்கூட தன்னைத் திடப்படுத்திக்கொண்டார். எஸ்றாவின் ஊக்கமூட்டுதலால் 1,500 குடும்பத்தினர்—ஒருவேளை 6,000 பேர்—அவருடன் புறப்பட்டார்கள். அவர் கூடுதலான சில நடவடிக்கைகளை எடுத்த பிறகு, 38 லேவியர்களும் 220 நிதனீமியர்களும் அவருடன் புறப்பட்டார்கள்.
9:1, 2—தேசத்து ஜனங்களுடன் கலப்புத் திருமணம் செய்தது எந்தளவுக்கு ஓர் அச்சுறுத்தலாய் இருந்தது? திரும்ப நிலைநாட்டப்பட்ட அத்தேசம், மேசியா வரும்வரை யெகோவாவின் வணக்கத்தைப் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. அங்கிருந்த மற்ற ஜனங்களோடு கலப்புத் திருமணம் செய்தது மெய் வணக்கத்திற்கு உண்மையிலேயே ஓர் அச்சுறுத்தலாய் இருந்தது. அதுமட்டுமல்ல, விக்கிரக வணக்கத்தாரைச் சிலர் திருமணம் செய்துகொண்டதால், காலப்போக்கில் முழு தேசமுமே புறமத தேசங்களுடன் இரண்டற கலந்துவிட நேரிட்டிருக்கும். பூமியில் தூய வணக்கமும் அறவே இல்லாமல் போயிருக்கும். அப்படியானால், யாரிடம் மேசியா வருவார்? இதையெல்லாம் பார்த்து எஸ்றா அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சரியமே இல்லை!
10:3, 44—மனைவிமார்களுடன் பிள்ளைகளும் ஏன் அனுப்பப்பட்டார்கள்? பிள்ளைகளை அனுப்பாமல் வைத்தால், நிராகரிக்கப்பட்ட அந்த மனைவிமார் தங்களுடைய பிள்ளைகளைக் காரணம் காட்டி மறுபடியும் வந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, பொதுவாக சிறு பிள்ளைகளுக்கு அம்மாவின் கவனிப்பு தேவை.
நமக்குப் பாடம்:
7:10. கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிப்பவராயும், திறம்பட்ட போதகராயும் இருந்த எஸ்றா, நமக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார். யெகோவாவுடைய வேதத்தை ஆராய்வதற்காக, ஜெப சிந்தையுடன் அவர் தன் இருதயத்தைத் தயார்படுத்தினார். அப்படி அதை ஆராய்ந்தபோது யெகோவா சொல்லும் விஷயங்களுக்குக் கருத்தூன்றி கவனம் செலுத்தினார். கற்றுக்கொண்டதற்கு இசைய நடந்தார், மற்றவர்களுக்கும் போதிக்க பிரயாசப்பட்டார்.
7:13. மனப்பூர்வமாகச் சேவை செய்கிற ஊழியர்களே யெகோவாவுக்குத் தேவை.
7:27, 28; 8:21-23. எஸ்றா, யெகோவாவுக்கே புகழ் சேர்த்தார்; எருசலேமுக்குச் செல்லும் நீண்ட தூர, ஆபத்தான பயணத்தைத் துவங்குவதற்கு முன் கடவுளிடம் உள்ளப்பூர்வமாக மன்றாடினார். அதோடு, கடவுளுடைய மகிமைக்காக தன் உயிரையே பணயம் வைக்க மனமுள்ளவராய் இருந்தார். இவ்வாறு நமக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
9:2. ‘கர்த்தருக்குட்பட்டவரை மட்டுமே’ விவாகம்பண்ண வேண்டுமென்ற அறிவுரையை நாம் மிக முக்கியமானதாய் எடுத்துக்கொள்வது அவசியம்.—1 கொரிந்தியர் 7:39.
9:14, 15. கெட்ட சகவாசங்கள் யெகோவாவின் கண்டனத்திற்கு வழிநடத்தலாம்.
10:2-12, 44. புறமதப் பெண்களைத் திருமணம் செய்தவர்கள் தாழ்மையோடு மனந்திரும்பி, தங்களுடைய தவறான வழிகளை மாற்றிக்கொண்டார்கள். அவர்களுடைய மனப்பான்மையும் செயலும் ஒப்பற்றவை.
யெகோவா—வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவர்
எஸ்றாவின் புத்தகம் நமக்கு எவ்வளவு மதிப்புமிக்கது! தமது ஜனங்களை பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுவிப்பதையும், எருசலேமில் மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதையும் பற்றிய தம் வாக்குறுதியைச் சரியான சமயத்தில் யெகோவா நிறைவேற்றினார். இது யெகோவா மீதும் அவரது வாக்குறுதிகள் மீதும் உள்ள நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, அல்லவா?
எஸ்றா புத்தகம் அளிக்கிற உதாரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள். எஸ்றாவும், எருசலேமில் தூய வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காகத் திரும்பிய மீதியானோரும் கடவுளுக்கு ஒப்பற்ற பக்தியைக் காட்டினார்கள். கடவுள் பயமுள்ள புறதேசத்தார் காண்பித்த விசுவாசத்தையும் தவறுசெய்து மனந்திரும்பியோரின் தாழ்மையான மனப்பான்மையையும் இப்புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என்பதற்கு ஏவப்பட்டு எழுதப்பட்ட எஸ்றாவின் வார்த்தைகள் தெள்ளத்தெளிவான அத்தாட்சி அளிக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை.—எபிரெயர் 4:12.
[பக்கம் 18-ன் அட்டவணை/படம்]
பொ.ச.மு. 537 முதல் 467 வரை ஆட்சிசெய்த பெர்சிய ராஜாக்கள்
மகா கோரேசு (எஸ்றா 1:1) பொ.ச.மு. 530-ல் இறந்தார்
காம்பைஸஸ், அதாவது அகாஸ்வேரு (எஸ்றா 4:6) பொ.ச.மு. 530-22
அர்தசஷ்டா—பார்டியா அல்லது கௌமதா (எஸ்றா 4:7) பொ.ச.மு. 522 (ஏழு மாதங்கள் மட்டுமே ஆட்சிசெய்த பின் கொலை செய்யப்பட்டார்)
முதலாம் தரியு (எஸ்றா 4:24) பொ.ச.மு. 522-486
சஷ்டா, அதாவது அகாஸ்வேருa பொ.ச.மு. 486-75 (பொ.ச.மு. 496-86 வரை முதலாம் தரியுவுடன் துணை ராஜாவாக ஆட்சிசெய்தார்)
அர்தசஷ்டா லாங்கிமானஸ் (எஸ்றா 7:1) பொ.ச.மு. 475-24
[அடிக்குறிப்பு]
a எஸ்றா புத்தகத்தில் சஷ்டாவைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எஸ்தர் புத்தகத்தில் அகாஸ்வேரு என்ற பெயரில் அவர் குறிப்பிடப்படுகிறார்.
[படம்]
அகாஸ்வேரு
[பக்கம் 17-ன் படம்]
கோரேசு
[பக்கம் 17-ன் படம்]
சிறைப்படுத்தப்பட்டவர்கள் அவர்களது தாய்நாடுகளுக்குத் திரும்ப அனுப்பப்பட வேண்டுமென்ற கொள்கையை கோரேசுவின் உருளை தெரிவிக்கிறது
[படத்திற்கான நன்றி]
உருளை: Photograph taken by courtesy of the British Museum
[பக்கம் 20-ன் படம்]
எஸ்றாவைத் திறம்பட்ட போதகராக ஆக்கியது எதுவென உங்களுக்குத் தெரியுமா?