யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
எஸ்றா புத்தகத்தின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் நடந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. ‘எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதற்குரிய’ காலம் இப்போது நெருங்கி வந்திருக்கிறது; இது மேசியாவின் வருகையைக் கணக்கிடுவதற்கான 70 வார வருடங்களின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. (தானியேல் 9:24-27) எருசலேமின் மதிற்சுவர் கட்டப்படுவதோடு சம்பந்தப்பட்ட கடவுளுடைய மக்களின் சரித்திரம் நெகேமியா புத்தகத்தில் உள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த, 12 வருடங்களுக்கும் அதிகமான காலப் பகுதியை—பொ.ச.மு. 456 முதல் பொ.ச.மு. 443-க்கும் சற்று அதிகமான காலப் பகுதியை—உள்ளடக்குகிறது.
ஆளுநரான நெகேமியாவே இப்புத்தகத்தின் எழுத்தாளர். ஜனங்கள் யெகோவா தேவனை முற்றிலும் சார்ந்திருந்து, உறுதியுடன் செயல்பட்டபோது மெய் வணக்கம் எப்படித் தழைத்தோங்கியது என்பதைப் பற்றிய ஆர்வமூட்டும் தகவல் இதில் உள்ளது. தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா எப்படியெல்லாம் காரியங்களை வழிநடத்துகிறார் என்பதை இது தெளிவாக விளக்குகிறது. உறுதியும் துணிவுமிக்க ஒரு தலைவரைப் பற்றிய தகவலும் இதில் உள்ளது. நெகேமியா புத்தகத்தில் காணப்படும் செய்தி இன்றைய மெய் வணக்கத்தாருக்குப் பயனுள்ள பாடங்களைப் புகட்டுகிறது; ஏனெனில், ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
‘மதிற்சுவர் கட்டி முடிக்கப்பட்டது’
நெகேமியா இப்போது சூசான் அரண்மனையில் இருக்கிறார், அங்கே அர்தசஷ்டா லாங்கிமானஸ் ராஜாவிடம் நம்பிக்கைக்குரிய ஸ்தானத்தில் பணியாற்றுகிறார். தன்னுடைய ஜனங்கள் “மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் [அதாவது, மதிற்சுவர்] இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” என்ற செய்தியைக் கேட்டதும் நெகேமியாவுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது. உதவிக்காகக் கடவுளிடம் ஊக்கமாய் ஜெபிக்கிறார். (நெகேமியா 1:3, 4) ஒருநாள், நெகேமியாவின் முகம் வாடியிருப்பதை ராஜா பார்க்கிறார்; காரணத்தைத் தெரிந்துகொண்டதும் எருசலேமுக்குச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கிறார்.
எருசலேமுக்குச் சென்ற நெகேமியா, இரவு கும்மிருட்டில் மதிற்சுவரைப் பார்வையிடுகிறார், அதைத் திரும்பக் கட்ட தான் திட்டமிட்டிருப்பதாக யூதர்களிடம் தெரிவிக்கிறார். வேலை ஆரம்பமாகிறது. கூடவே எதிர்ப்பும் தலைதூக்குகிறது. என்றாலும், அவர் தைரியத்துடன் முன்நின்று செயல்பட்டதால், ‘மதிற்சுவர் கட்டி முடிக்கப்படுகிறது.’—நெகேமியா 6:15.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:1; 2:1—இந்த இரண்டு வசனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள “இருபதாம் வருஷம்” ஒரே காலப்பகுதியிலிருந்து கணக்கிடப்பட்டதா? இந்த 20-ம் வருஷம் அர்தசஷ்டா ராஜாவின் ஆட்சி காலத்தையே குறிக்கிறது. என்றாலும், இவ்விரு வசனங்களிலும் அந்த வருஷத்தைக் கணக்கிட்டுள்ள விதம் வித்தியாசமானது. பொ.ச.மு. 475-ல் அர்தசஷ்டா அரியணை ஏறினார் எனச் சரித்திர அத்தாட்சி காட்டுகிறது. ஆனால், பாபிலோனிய வேதபாரகர்கள் பெர்சிய ராஜாக்களின் ஆட்சி காலத்தை, பொதுவாக நிசான் (மார்ச்/ஏப்ரல்) மாதத்திலிருந்து நிசான் மாதம்வரை கணக்கிட்டதால், அர்தசஷ்டாவுடைய ஆட்சியின் முதல் வருஷம் பொ.ச.மு. 474 நிசான் மாதம் ஆரம்பமானது. ஆக, நெகேமியா 2:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள 20-ம் வருஷம் பொ.ச.மு. 455 நிசான் மாதத்தில் ஆரம்பமானது. அப்படியானால், நெகேமியா 1:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள கிஸ்லேயு மாதம் (நவம்பர்/டிசம்பர்), முந்தின வருஷமான பொ.ச.மு 456 கிஸ்லேயு மாதத்தையே அர்த்தப்படுத்த வேண்டும். அந்த மாதமும் அர்தசஷ்டாவின் 20-ம் வருஷ ஆட்சி காலத்திலேயே வருவதாக நெகேமியா குறிப்பிடுகிறார். இங்கே ஒருவேளை அந்த ராஜா அரியணை ஏறிய தேதியின் அடிப்படையில் வருஷங்களை அவர் கணக்கிட்டிருக்கலாம். அல்லது, இன்றைய யூதர்கள் பொது வருடம் என அழைக்கிற வருடத்தின் அடிப்படையில் கணக்கிட்டிருக்கலாம்; இது, செப்டம்பர்/அக்டோபர் மாதங்களுக்கு இணையான திஷ்ரி மாதத்தில் ஆரம்பமாகிறது. எப்படியானாலும், பொ.ச.மு. 455-ல்தான் எருசலேமைத் திரும்பப் புதுப்பிப்பதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
4:17, 18—ஒரேவொரு கையை மட்டும் பயன்படுத்தி கட்டுமான வேலையை எப்படிச் செய்ய முடியும்? சுமை சுமப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருந்திருக்காது. தங்கள் தலையிலோ தோளிலோ சுமை வைக்கப்பட்ட பிறகு, தாராளமாக ஒரே கையினால் அவர்கள் சமாளித்தார்கள், “மறு கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.” இரு கைகளையும் பயன்படுத்தி கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்களோ, “அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்.” விரோதிகள் ஒருவேளை தாக்கினால் எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராய் இருந்தார்கள்.
5:7—நெகேமியா ஏன் ‘பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டார்’? ஏனெனில், நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு விரோதமாக இவர்கள் தங்களுடைய சக யூதர்களிடமிருந்து வட்டி வாங்கி வந்தார்கள். (லேவியராகமம் 25:36; உபாகமம் 23:19) அதுமட்டுமல்ல, அதிக வட்டியும் வாங்கி வந்தார்கள். மாதாமாதம் “நூற்றுக்கொன்று” என்ற வீதத்தில் வட்டி வாங்கினார்கள் என்றால் ஒரு வருடத்தில் 12 சதவீதம் வட்டி ஆகிவிடும். (நெகேமியா 5:11) வரி சுமையாலும் உணவுப் பற்றாக்குறையாலும் ஏற்கெனவே நொடிந்துபோயிருந்த மக்கள்மீது இப்படி வட்டியையும் சுமத்தியது ஒரு கொடிய செயலாக இருந்தது. இதனால் கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்தைப் பயன்படுத்தி, அந்தச் செல்வந்தர்களைக் கண்டித்து, கடிந்துகொண்டார்.
6:5—இரகசிய கடிதங்கள் பொதுவாக முத்திரை போடப்பட்ட உறைக்குள் வைத்து அனுப்பப்பட்டன; அப்படியிருக்க சன்பல்லாத்து ஏன் “முத்திரை போடாத” கடிதத்தை நெகேமியாவுக்கு அனுப்பினான்? முத்திரை போடாத அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த பொய்க் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் சன்பல்லாத்து அப்படிச் செய்திருக்கலாம். ஒருவேளை நெகேமியா அக்கடிதத்தைப் பார்த்து ரொம்பவும் கொதிப்படைந்து, கட்டட வேலையை நிறுத்திவிட்டு தன்னைக் குறித்து நியாயப்படுத்திப் பேச வருவார் என அவன் நினைத்திருக்கலாம். அல்லது அக்கடிதத்திலுள்ள செய்தியைக் கேட்டு யூதர்கள் எல்லாருமே பயத்தில் வேலையை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிடுவார்கள் என நினைத்திருக்கலாம். நெகேமியாவோ அவனுடைய மிரட்டலுக்கு அஞ்சாமல் கடவுள் நியமித்த வேலையைத் தொடர்ந்து அமைதியாகச் செய்தார்.
நமக்குப் பாடம்:
1:4; 2:4; 4:4, 5. கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்ப்படுகையிலோ, முக்கியமான தீர்மானங்களை எடுக்கையிலோ நாம் ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்க’ வேண்டும்; அதோடு கடவுளுடைய வார்த்தையிலுள்ள வழிநடத்துதலுக்கு இசைய செயல்பட வேண்டும்.—ரோமர் 12:12.
1:11–2:8; 4:4, 5, 15, 16; 6:16. யெகோவா தம் ஊழியர்களின் உள்ளப்பூர்வமான ஜெபங்களுக்குப் பதில் அளிக்கிறார்.—சங்கீதம் 86:6, 7.
1:4; 4:19, 20; 6:3, 15. நெகேமியா இளகிய மனதுடையவராய் இருந்தபோதிலும், ஒரு செயல்வீரராக நமக்குச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்; நீதிக்காக உறுதியுடன் செயல்பட்டார்.
1:11–2:3. நெகேமியாவின் சந்தோஷத்திற்கு முக்கிய காரணமாய் இருந்தது, பானபாத்திரக்காரன் என்ற கௌரவமான ஸ்தானம் அல்ல. மாறாக, மெய் வணக்கத்தை முன்னேற்றுவித்ததே. அப்படியானால், யெகோவாவின் வணக்கமும், அதை முன்னேற்றுவிப்பதற்காகச் செய்யப்படுகிற எல்லாக் காரியங்களுமே நமக்கு மிக முக்கியமானதாயும், நம் சந்தோஷத்திற்குத் தலையாய காரணமாயும் இருக்க வேண்டும், அல்லவா?
2:4-8. எருசலேமுக்குச் செல்வதற்கும் அதன் மதிற்சுவரைக் கட்டுவதற்கும் நெகேமியாவுக்கு அனுமதி வழங்க அர்தசஷ்டாவின் மனதை யெகோவா தூண்டினார். “ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்” என நீதிமொழிகள் 21:1 சொல்கிறது.
3:5, 27. தெக்கோவா ஊர் ‘பிரபுக்களைப்’ போல, மெய் வணக்கத்திற்காக உடலை வருத்தி வேலை செய்வதை நாம் மதிப்புக் குறைவாகக் கருதக் கூடாது. மாறாக, தெக்கோவா ஊர் மக்களைப் போல மனப்பூர்வமாக வேலை செய்ய வேண்டும்.
3:10, 23, 28-30. ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குச் சிலர் செல்கிறார்கள்; அதே சமயத்தில், மற்ற அநேகர் தங்களுடைய வீடுகள் இருக்கும் பகுதியிலேயே மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்கள். ராஜ்ய மன்ற கட்டுமான வேலையிலும் நிவாரணப் பணியிலும் ஈடுபடுவதன் மூலம், மிக முக்கியமாக ராஜ்ய பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் மூலம் நாமும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கலாம்.
4:14. எதிர்ப்பைச் சந்திக்கையில், “மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை” நினைத்துக்கொள்வதன் மூலம் நாமும்கூட பயத்தைப் போக்கிக்கொள்ளலாம்.
5:14-19. ஆளுநரான நெகேமியா மனத்தாழ்மைக்கும், தன்னலமற்ற குணத்திற்கும், விவேகத்திற்கும், கிறிஸ்தவக் கண்காணிகளுக்கு ஓர் அருமையான முன்மாதிரி வைக்கிறார். கடவுளுடைய சட்டத்தை வைராக்கியமாய்ச் செயல்படுத்தியபோதிலும், தன்னல ஆதாயத்திற்காக மற்றவர்கள்மீது அவர் அதிகாரம் செலுத்தவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்டோரிடமும் ஏழை எளியோரிடமும் அக்கறை காட்டினார். தாராளமாய்க் கொடுப்பதில், கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் அவர் தலைச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
‘என் தேவனே நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்’
மதிற்சுவர் கட்டி முடிக்கப்பட்டதுமே, கதவுகளையும், நகரின் பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளையும் நெகேமியா செய்கிறார். அதன் பிறகு, ஜனங்களின் வம்சாவளி பட்டியலைத் தயார் செய்கிறார். “தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே” ஜனங்கள் எல்லாரும் கூடிவந்திருக்க, ஆசாரியனான எஸ்றா மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை வாசிக்கிறார்; நெகேமியாவும் லேவியர்களும் அதை ஜனங்களுக்கு விளக்குகிறார்கள். (நெகேமியா 8:1) கூடாரப் பண்டிகையைப் பற்றி அறிந்ததும், அவர்கள் அதை மிகுந்த சந்தோஷத்தோடு கொண்டாடுகிறார்கள்.
ஜனங்கள் மீண்டும் கூடிவருகிறார்கள்; அப்போது “இஸ்ரவேல் சந்ததியார்” ஒரு தேசமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறார்கள்; லேவியர்களோ இஸ்ரவேலரை கடவுள் வழிநடத்தி வந்த விதங்களையெல்லாம் நினைவுபடுத்துகிறார்கள்; அதன்பின், “தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம்” என்று ஜனங்கள் உறுதிமொழி அளிக்கிறார்கள். (நெகேமியா 9:1, 2; 10:29) எருசலேமில் ஜனங்கள் இன்னும் குறைவாகவே இருப்பதால், நகரத்திற்கு வெளியே குடியிருக்கிற பத்துப்பேரில் ஒருவர் நகரத்திற்குக் குடிமாறிச் செல்வதற்காகச் சீட்டு போடப்படுகிறது. அடுத்து, மதிற்சுவரின் பிரதிஷ்டை நடைபெறுகிறது, ‘எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்படும்’ அளவுக்கு அது கோலாகலமாக நடைபெறுகிறது. (நெகேமியா 12:43) நெகேமியா எருசலேமுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன; இப்போது அவர் இங்கிருந்து கிளம்பி அர்தசஷ்டாவிடம் செல்கிறார், மீண்டும் தன் பணியைத் தொடங்குகிறார். யூதர்களின் மத்தியில் அசுத்தமான காரியங்கள் மறுபடியும் தலைதூக்குகின்றன. நெகேமியா எருசலேமுக்குத் திரும்பி வந்து, நிலைமையைச் சரிசெய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கிறார். “என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்” என தன்னைக் குறித்து தாழ்மையோடு வேண்டுகிறார்.—நெகேமியா 13:31.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
7:6-67—செருபாபேலுடன் எருசலேமுக்குத் திரும்பி வந்த மீதிப் பேரைப் பற்றிய நெகேமியாவின் பட்டியல், ஒவ்வொரு குடும்பத்தாரின் எண்ணிக்கையைத் தனித்தனியாகக் குறிப்பிடும் விஷயத்தில் எஸ்றாவின் பட்டியலிலிருந்து ஏன் வித்தியாசப்படுகிறது? (எஸ்றா 2:1-65) இந்த வித்தியாசத்திற்குக் காரணம், எஸ்றாவும் நெகேமியாவும் வித்தியாசப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே. உதாரணத்திற்கு, திரும்பி வருவதற்கு வெறுமனே பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கை உண்மையில் திரும்பி வந்தவர்களின் எண்ணிக்கையிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கலாம். மற்றொரு காரணம், தங்களுடைய வம்சாவளிக்கான ஆதாரத்தை முதலில் கொடுக்க முடியாமற்போன சில யூதர்கள் பிற்பாடு அதை கொடுத்திருக்கலாம். என்றாலும், இந்த இரு பதிவுகளும் ஒரு குறிப்பை ஆதரிக்கின்றன, அதாவது அடிமைகளும் பாடகர்களும் தவிர, முதன்முதலில் திரும்பி வந்த யூதர்கள் 42,360 பேர் என்ற குறிப்பை ஆதரிக்கின்றன.
10:34—ஜனங்கள் ஏன் விறகு காணிக்கையை அளிக்க வேண்டியிருந்தது? நியாயப்பிரமாணச் சட்டத்தில் விறகு காணிக்கை அளிக்கும்படி கட்டளையிடப்படவில்லை. கட்டாயத் தேவையின் காரணமாகவே இந்தக் காணிக்கை அமலுக்கு வந்தது. பலிபீடத்தில் பலிகளைத் தகனிப்பதற்குப் பெருமளவு விறகு தேவைப்பட்டது. ஆலய அடிமைகளாகச் சேவை செய்த இஸ்ரவேலரல்லாத நிதனீமியர்கள் அப்போது குறைவாக இருந்திருக்கலாம். ஆகவே, தொடர்ந்தாற்போல் விறகு அளிக்கப்படுவதற்குச் சீட்டு போடப்பட்டது.
13:6—நெகேமியா எவ்வளவு காலத்திற்கு எருசலேமில் இல்லை? எருசலேமுக்குத் திரும்பிச் செல்வதற்காக “சில நாளுக்குப் பின்பு” அல்லது சொல்லர்த்தமாக ‘அந்த நாட்களின் முடிவிலே’ ராஜாவிடம் நெகேமியா விடுப்பு கேட்டார் என்று மட்டுமே பைபிள் சொல்கிறது. ஆகவே, அவர் எவ்வளவு காலம் விடுப்பில் இருந்தார் என்பதைத் தீர்மானிப்பது கடினம். ஆனால், எருசலேமுக்குத் திரும்பி வந்ததுமே ஆசாரியர்களுக்கு ஜனங்கள் ஆதரவு கொடுக்காததையும், ஓய்வுநாளை அவர்கள் கைக்கொள்ளாததையும் பற்றி அறிந்துகொள்கிறார். அநேகர் புறமதப் பெண்களை மணம் செய்திருந்தார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு யூதர்களுடைய மொழிகூட பேசத் தெரியாதிருந்தது. நிலைமை இந்தளவுக்கு மோசமாகி இருந்ததால் நெகேமியா நீண்ட கால விடுப்பில் சென்றிருக்க வேண்டும்.
13:25, 28—தவறான வழிக்குச் சென்ற யூதர்களைக் ‘கடிந்துகொண்டது’ தவிர, அவர்களைத் திருத்துவதற்கு நெகேமியா வேறு என்னவெல்லாம் செய்தார்? நெகேமியா ‘அவர்கள்மேல் சாபத்தைக் கூறியபோது’ உண்மையில் கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்திலிருந்த நியாயத்தீர்ப்புகளையே அவர்களிடம் எடுத்துரைத்தார். ‘அவர்களில் சிலரை அவர் அடித்தார்.’ ஒருவேளை அவர்கள்மீது அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி அவர் கட்டளையிட்டிருக்கலாம். அவருடைய நியாயமான கோபத்திற்கு அடையாளமாக, சிலருடைய ‘மயிரைப் பிய்த்தார்.’ ஓரோனியனான சன்பல்லாத்துவின் மகளை மணம் செய்திருந்த பிரதான ஆசாரியன் எலியாசிபின் பேரனையும் விரட்டியடித்தார்.
நமக்குப் பாடம்:
8:8. கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் நாம், வசனங்களை அழுத்தந்திருத்தமாக வாசித்து ‘அர்த்தத்தை’ விளக்கிச் சொல்கிறோம், அவற்றின் பொருத்தத்தையும் தெளிவுபடுத்துகிறோம்.
8:10. ஒருவருடைய ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து, அதைத் திருப்தி செய்யும்போதும், கடவுள் கொடுக்கிற வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளும்போதும் ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சி’ அடைகிறோம். பைபிளை ஊக்கமாய்ப் படிப்பதும், கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதும், பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுவதும் எவ்வளவு முக்கியமானவை!
11:2. ஒருவர் பரம்பரை சொத்துசுகங்களை எல்லாம் விட்டுவிட்டு எருசலேமுக்குக் குடிமாறி வரும்போது அவருக்குப் பணச் செலவும் சில நஷ்டங்களும் ஏற்படும். இதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டவர்கள் சுயதியாக மனப்பான்மையைக் காட்டினார்கள். மாநாடுகளிலும் பிற சந்தர்ப்பங்களிலும் மற்றவர்களுக்கு மனமுவந்து சேவை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது நாமும்கூட இப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டலாம்.
12:31, 38, 40-42. பாடல்கள் பாடுவது யெகோவாவைப் புகழ்வதற்கும் நம்முடைய நன்றியைத் தெரிவிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும். கிறிஸ்தவக் கூட்டங்களில் நாம் இருதயப்பூர்வமாகப் பாட வேண்டும்.
13:4-31. பொருளாசை, ஊழல், விசுவாசதுரோகம் ஆகியவை நம் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிபுகுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
13:22. (NW) கடவுளுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டியிருந்ததை நெகேமியா நன்கு அறிந்திருந்தார். நாமும்கூட கடவுளுக்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்கள் என்பதை அறிந்திருப்பது அவசியம்.
யெகோவாவின் ஆசீர்வாதம் அத்தியாவசியம்!
“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 127:1) இந்த வார்த்தைகள் உண்மை என்பதை நெகேமியா புத்தகம் எவ்வளவு அழகாக விளக்குகிறது!
அது நமக்குப் புகட்டும் பாடம் தெளிவாக இருக்கிறது. நாம் செய்யும் எந்தக் காரியமும் வெற்றியடைய வேண்டுமானால், யெகோவாவின் ஆசீர்வாதம் தேவை. நம் வாழ்க்கையில் மெய் வணக்கத்திற்கு முதலிடம் கொடுக்கவில்லை என்றால், யெகோவாவின் ஆசீர்வாதத்தை நாம் உண்மையில் எதிர்பார்க்க முடியுமா? அப்படியானால், நெகேமியாவைப் போல யெகோவாவின் வணக்கத்திற்கும் அதை முன்னேற்றுவிக்கும் காரியங்களுக்கும் நம் வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுப்போமாக.
[பக்கம் 8-ன் படம்]
“ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது”
[பக்கம் 9-ன் படம்]
செயல்வீரரும் இளகிய மனம் படைத்தவருமான நெகேமியா எருசலேமுக்கு வருகிறார்
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
கடவுளுடைய வார்த்தைக்கு ‘அர்த்தஞ்சொல்வது’ எப்படியென உங்களுக்குத் தெரியுமா?