இப்போது மரித்தவர்களாயிருக்கும் கோடிக்கணக்கானோர் திரும்பவும் உயிருடன் வாழ்வார்கள்
இப்போது மரித்தவர்களாயிருக்கும் கோடிக்கணக்கானோர் மறுபடியும் உயிருடன் வாழ்வார்கள்—என்னே இருதயத்துக்கு கிளர்ச்சியூட்டும் நம்பிக்கை! ஆனால் அது சாத்தியமா? உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட என்ன தேவையாக இருக்கும்? ஒரு வாக்குறுதியில் நம்பிக்கை வைப்பதற்கு, வாக்களிப்பவர் அதை நிறைவேற்ற மனமுள்ளவரும் திறமையுள்ளவருமாக இருக்கிறாரா என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருப்பது அவசியமாகும். அப்படியென்றால், இப்போது மரித்தவர்களாயிருக்கும் கோடிக்கணக்கானோர் திரும்பவும் உயிர்வாழ்வார்கள் என்பதாக வாக்களிப்பவர் யார்?
பொ.ச. 31-ன் வசந்த காலத்தில், இயேசு கிறிஸ்து மரித்தோரை உயிர்த்தெழுப்ப தாம் யெகோவா தேவனால் அதிகாரமளிக்கப்பட்டிருப்பதாக தைரியமாகச் சொன்னார். இயேசு வாக்களித்தார்: “பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறது போல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [இயேசுவுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது . . . புறப்பட்டு வெளியே வருவார்கள்.” (யோவான் 5:21, 28, 29, NW) ஆம், இப்போது மரித்தவர்களாய் இருக்கும் கோடிக்கணக்கானோர் மறுபடியும் இந்தப் பூமியின் மீது உயிர் வாழ்ந்து, என்றுமாக அதில் நிலைத்திருக்கக்கூடிய எதிர்பார்ப்பையுடையவர்களாய் இருப்பார்கள் என்றும் இயேசு கிறிஸ்து வாக்களித்தார். (யோவான் 3:16; 17:3; சங்கீதம் 37:29 மற்றும் மத்தேயு 5:5 ஒப்பிடவும்.) இயேசு வாக்களித்தமையால், அதை நிறைவேற்ற அவர் மனமுள்ளவராக இருக்கிறார் என்று ஊகிப்பது சரியே. அவர் அவ்விதமாகச் செய்ய திறமையுள்ளவரா?
பைபிள் பதிவின் பிரகாரம், இயேசு அந்த வாக்குறுதியை கொடுத்த சமயம் வரையாக, எவரையும் அவர் ஒருபோதும் உயிர்த்தெழுப்பியிருக்கவில்லை. ஆனால் இரண்டாண்டுகளுக்குள்ளாகவே, அவர் உயிர்த்தெழுதலைச் செய்ய மனமுள்ளவராகவும் திறமையுள்ளவராகவும் இருப்பதை வல்லமையான முறையில் நடப்பித்துக் காட்டினார்.
“லாசருவே, வெளியே வா!”
அது உள்ளத்தை உருக்கும் ஒரு காட்சியாக இருந்தது. லாசரு மிகவும் வியாதிப்பட்டிருந்தான். அவனுடைய இரண்டு சகோதரிகளாகிய மரியாளும் மார்த்தாளும் யோர்தான் நதிக்கு அப்புறமிருந்த இயேசுவுக்குச் சொல்லி அனுப்பியிருந்தார்கள்: “ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்.” (யோவான் 11:3) ஆம், இயேசு இந்தக் குடும்பத்தை வெகுவாக நேசித்தார். பெத்தானியில், அவர்களுடைய வீட்டுக்கு ஒருவேளை அடிக்கடி அவர் விருந்தினராக செல்வதுண்டு. (லூக்கா 10:38–42; லூக்கா 9:58 ஒப்பிடவும்.) ஆனால் இப்போது இயேசுவின் அருமையான சிநேகிதன் மிகவும் வியாதிப்பட்டிருந்தான்.
ஆனால் மரியாளும் மார்த்தாவும் இயேசு என்ன செய்யும்படி எதிர்பார்த்தனர்? பெத்தானியாவுக்கு அவரை வரும்படி அவரிடம் கேட்கவில்லை. ஆனால் இயேசு லாசருவை நேசித்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு வியாதியாதிருந்த தம்முடைய சிநேகிதனைப் பார்க்க விரும்பமாட்டாரா? இயேசு அற்புதமாக அவனை சுகப்படுத்திவிடுவார் என்பதாக அவர்கள் நம்பினார்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்படியும், அவருடைய ஊழியத்தின் இந்தச் சமயத்துக்குள் இயேசு அநேக அற்புதமான சுகப்படுத்தல்களைச் செய்திருந்தார், தொலைதூரம்கூட அவருக்கு இடையூறாக இருக்கவில்லை. (மத்தேயு 8:5–13 ஒப்பிடவும்.) இப்பேர்ப்பட்ட அருமையான சிநேகிதனுக்கு அவர் அதைவிட குறைவாகச் செய்வாரா? பெத்தானியாவுக்கு உடனடியாகச் செல்வதற்கு பதிலாக இயேசு தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டு நாள் தங்கினார்.—யோவான் 11:5, 6.
லாசரு, செய்தி அனுப்பப்பட்டு, ஒருவேளை செய்தி இயேசுவை சென்றெட்டுவதற்குள்ளாக சிறிது நேரத்துக்குப் பின் மரித்திருக்க வேண்டும். (யோவான் 11:3, 6, 17 ஒப்பிடவும்.) ஆனால் கூடுதலாக எந்தச் செய்தியும் அவசியமாயிருக்கவில்லை. லாசரு மரித்த போது இயேசு அதை அறிந்திருந்தார், அதைக் குறித்து அவர் எதையோ செய்ய நோக்கமுள்ளவராக இருந்தார். லாசருவின் மரணத்தைக் குறித்து பேசுகையில் அவர் தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன்.” (யோவான் 11:11) இயேசு இதற்கு முன்பே இரண்டு பேரை மரித்தோரிலிருந்து எழுப்பியிருக்கிறார், ஒவ்வொரு சமயமும் அந்த நபர் மரித்தப் பின் உடனடியாகவே அவ்விதமாகச் செய்திருக்கிறார்.a ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருக்கும். கடைசியாக இயேசு பெத்தானியாவில் வந்து சேருவதற்குள் அவருடைய அருமையான சிநேகிதன் மரித்து நான்கு நாட்களாகிவிட்டிருந்தது. (யோவான் 11:17, 39) மரித்து அவ்வளவு நேரமாகிவிட்டிருந்தும், சரீரம் ஏற்கெனவே அழுக ஆரம்பித்துவிட்டிருந்த நிலையிலுமிருந்த ஒருவரை இயேசு திரும்பவும் உயிர்த்தெழுப்ப முடியுமா?
இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டபோது, படுசுறுசுறுப்பான பெண்ணாகிய மார்த்தாள் அவரை சந்திக்க வெளியே ஓடினாள். (லூக்கா 10:38–42 ஒப்பிடவும்.) அவள் இயேசுவை பார்த்த மாத்திரத்தில், “ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” [NW] என்று சொல்ல அவளுடைய இருதயம் அவளைத் தூண்டியது. இருந்தபோதிலும், அவள் தன்னுடைய விசுவாசத்தை வெளியிட்டாள்: “இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்.” அவளுடைய துயரத்தால் உள்ளம் உருகியவராய் இயேசு அவளுக்கு உறுதியளிக்கிறார்: “உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான்.” எதிர்கால உயிர்த்தெழுதலில் தனக்கிருந்த விசுவாசத்தை அவள் தெரிவித்த போது இயேசு நேரடியாக அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,” என்றார்.—யோவான் 11:20–25.
கல்லறையினிடத்தில் வந்த போது, இயேசு அதனுடைய வாயிலை மூடிக்கொண்டிருந்த கல்லை எடுத்துப்போடும்படியாக உத்தரவிட்டார். மார்த்தாள் முதலில் இதை ஆட்சேபித்து, “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே,” என்று சொன்னாள். ஆனால் இயேசு அவளுக்கு இவ்விதமாக உறுதியளித்தார்: “நீ விசுவாசித்தால், தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” பின்னர் அவர் சப்தமாக ஜெபித்து, “லாசருவே, வெளியே வா” என்று உத்தரவிட்டார். இயேசுவின் உத்தரவின் பேரில் லாசரு, அவன் மரித்து நாலு நாளான போதிலும் வெளியே வந்தான்!—யோவான் 11:38–44.
அது உண்மையில் சம்பவித்ததா?
லாசருவை எழுப்பினது பற்றிய பதிவு, யோவான் சுவிசேஷத்தில் ஒரு சரித்திர உண்மையாக கொடுக்கப்பட்டுள்ளது. அது வெறுமென ஓர் உருவகக் கதையாக இருப்பதற்கு, விவரங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. அதன் வரலாற்று வாய்மையைக் குறித்து சந்தேகிப்பது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உட்பட பைபிளிலுள்ள எல்லா அற்புதங்களையும் சந்தேகிப்பதாக இருக்கும்.b இயேசுவின் உயிர்த்தெழுதலை மறுதலிப்பது, கிறிஸ்தவ விசுவாசத்தையே முழுமையாக மறுதலிப்பதாக இருக்கும்.—1 கொரிந்தியர் 15:13–15.
உண்மையில் நீங்கள் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்வீர்களானால், உயிர்த்தெழுதலில் விசுவாசம் வைப்பதில் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. இதை விளக்க, ஒரு நபர் தன்னுடைய கடைசி உயிலையும் இறுதி விருப்ப ஆவணத்தையும் வீடியோ நாடாவில் பதிவு செய்து வைக்கமுடியும். அவன் மரித்தப் பின்பு, அவனுடைய சொத்துக்கள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதை அவன் விளக்குகையில் அவனுடைய உறவினர்களும் நண்பர்களும் அவனைப் பார்க்கவும் அவன் பேசுவதைக் கேட்கவும் முடியும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இப்படிப்பட்ட ஒரு காரியம் எண்ணியும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. உலகில் ஒதுக்கமாயுள்ள இடங்களில் இப்பொழுது வாழ்ந்து வரும் சிலருக்கு, வீடியோ பதிவின் “அற்புதம்” அறிவுக்கெட்டாததாக இருக்கிறது. சிருஷ்டிகரால் நிர்ணயிக்கப்பட்ட அறிவியல் நியமங்களை மனிதர்கள் பயன்படுத்தி, இப்படிப்பட்ட காணத்தக்க மற்றும் கேட்கத்தக்க ஒரு காட்சியை மீண்டும் உருவாக்க முடியுமென்றால், சிருஷ்டிகர் அதைவிட மிக அதிகத்தைச் செய்யக்கூடியவராக இருப்பாரல்லவா? அப்படியென்றால், உயிரை சிருஷ்டித்தவர், புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சரீரத்தில் அவனுடைய ஆளுமையை அவனுக்குத் திரும்ப வழங்குவதன் மூலம் ஒரு நபரை உயிர்த்தெழுப்பக்கூடியவராக இருப்பார் என்பது நியாயமாகவே இருக்கிறதல்லவா?
லாசரு திரும்ப உயிர் பெற்ற அந்த அற்புதம், இயேசுவிலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசத்தைப் பெருக்க உதவி செய்தது. (யோவான் 11:41, 42; 12:9–11, 17–19) உயிர்த்தெழுதலை நடப்பிக்க, யெகோவாவும் அவருடைய குமாரனும் மனமுள்ளவர்களாகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பதையும்கூட இது உள்ளத்தைத் தொடும் வகையில் வெளிப்படுத்துகிறது.
‘கடவுள் விருப்பமுடையவராக இருப்பார்’
லாசருவின் மரணத்துக்கு இயேசுவின் பிரதிபலிப்பு, கடவுளுடைய குமாரனைப் பற்றிய மிக மென்மையான ஒரு பக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்தச் சம்பவத்தின் போது அவருடைய ஆழமான உணர்ச்சிகள், மரித்தோரை உயிர்த்தெழுப்ப அவருக்கிருக்கும் தீவிரமான ஆசையை தெளிவாக காண்பிக்கிறது. நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் [இருந்திருந்தால், NW] என் சகோதரன் மரிக்க [மரித்திருக்க, NW] மாட்டான் என்றாள். அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர் விட்டார். அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!”—யோவான் 11:32–36.
இயேசுவின் இருதயப்பூர்வமான இரக்கம், இங்கே, மூன்று சொற்றொடர்களால் காண்பிக்கப்படுகிறது. “கலங்கி,” “துயரமடைந்து” மற்றும் “கண்ணீர்விட்டார்.” உள்ளத்தை உருக்கும் இந்தக் காட்சியைப் பதிவு செய்வதில் பயன்படுத்தப்பட்ட மூல–மொழி வார்த்தைகள் இயேசு எந்தளவுக்கு உணர்ச்சிகளோடு செயல்பட தூண்டப்பட்டார் என்பதைக் காண்பிக்கின்றன.
“கலங்கி” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை (em·bri·maʹo·mai) துயர்மிகுதியினால் அல்லது உள்ளத்தின் ஆழத்திலிருந்து செயல்படும்படி தூண்டுவதை குறிக்கும் வினைச்சொல்லிலிருந்து வருகிறது. பைபிள் கருத்துரையாளர் வில்லியம் பார்க்ளே குறிப்பிடுகிறார்: “சாதாரணமான கிரேக்க இலக்கியத்தில் (em·bri·maʹo·mai) குதிரை மூக்கு வழியாகச் சீறுவதை குறிப்பதற்காகவே பொதுவாக பயன்படுத்தப்பட்டது. இங்கே இப்பேர்ப்பட்ட ஆழமான உணர்ச்சிகள் இயேசுவைப் பற்றிக்கொண்டதால் இயல்பான ஒரு கலக்கம் அவருடைய இருதயத்தை பிழிந்தெடுத்தது என்பதையே அர்த்தப்படுத்தக்கூடும்.”
“துயரமடைந்து” என்பதாக மொழிபெயர்க்கப்படும் சொற்றொடர் கிளர்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து [tarasʹso] வருகிறது. நியு தேயரின் புதிய ஏற்பாட்டின் கிரேக்க–ஆங்கில அகராதி (The New Thayer’s Greek-English Lexicon of the New Testament) பிரகாரம், “மனதுள் ஒரு குமுறலை உண்டுபண்ணுவதை, . . . பெரும் துன்பம் அல்லது துயரத்தினால் பாதிக்கப்படுவதை” அர்த்தப்படுத்துகிறது. “கண்ணீர் விட்டார்” என்ற சொற்றொடர் (da·kryʹo) என்ற கிரேக்க வினைச்சொல்லிலிருந்து வருகிறது, இதன் பொருள் கண்ணீர் சிந்துவது, மெளனமாக அழுவது ஆகும். இது யோவான் 11:33-ல் மரியாளுடைய மற்றும் அவளோடே இருந்த யூதர்களுடைய “அழுகை”யிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. அங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையின் (klaiʹo) பொருள் கேட்கத்தக்க விதத்தில் அல்லது சப்தமாக அழுவதை அர்த்தப்படுத்துகிறது.c
அப்படியென்றால், இயேசு தம்முடைய அன்பார்ந்த நண்பன் லாசருவின் மரணத்தினாலும் லாசருவின் சகோதரி அழும் காட்சியையும் பார்த்து வெகுவாக கலங்கிப்போனார். இயேசுவின் இருதயம் உணர்ச்சிகளால் நிறைந்ததினால், அவருடைய கண்களில் கண்ணீர் ததும்பியது. இயேசு இதற்கு முன் இரண்டு பேரை உயிர்த்தெழுப்பியிருந்தார் என்பதே அத்தனை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இந்தச் சமயத்தில், லாசருவுக்கும் அதையேச் செய்ய அவர் முழுவதுமாக எண்ணியிருந்தார். (யோவான் 11:11, 23, 25) இருந்தபோதிலும் அவர் “கண்ணீர் விட்டார்.” அப்படியென்றால் உயிருக்கு மனிதர்களைத் திரும்பவும் கொண்டு வருவதானது, இயேசுவுக்கு வெறுமென ஒரு தொழில் நடவடிக்கையாக இருக்கவில்லை. இந்தச் சமயத்தில் காண்பிக்கப்பட்டது போன்ற மென்மையான மற்றும் ஆழமான உணர்ச்சிகள், மரணத்தின் விளைவுகளைத் துடைத்தழிக்க அவருக்கிருக்கும் தீவிரமான ஆசையைக் காண்பிக்கிறது.
இயேசு ‘யெகோவா தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருப்பதன்’ காரணமாக நம்முடைய பரலோகத் தகப்பனிடமிருந்து நாம் அதைவிட குறைவானதை நியாயமாகவே எதிர்பார்ப்பதில்லை. (எபிரெயர் 1:3) உயிர்த்தெழுதலை நடப்பிக்க யெகோவாதாமே மனமுள்ளவராக இருப்பதைக் குறித்து உண்மையுள்ள மனிதனாகிய யோபு இவ்வாறு சொன்னான்: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? . . . என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன். உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:14, 15) “விருப்பம் வைப்பீராக” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதற்குரிய மூல–மொழி வார்த்தை, ஊக்கமான வாஞ்சையையும் ஆசையையும் குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 31:30; சங்கீதம் 84:2) யெகோவா மிகவும் ஆர்வத்தோடு உயிர்த்தெழுதலை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது.
நாம் உயிர்த்தெழுதலின் வாக்குறுதியை உண்மையில் நம்பமுடியுமா? யெகோவாவும் அவருடைய குமாரனும் அதை நிறைவேற்ற மனமுள்ளவர்களாயும் திறமையுள்ளவர்களாயும் இருப்பது குறித்து எந்தச் சந்தேகமுமில்லை. இது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? சமாதானமான நிலைமைகளின் கீழ், இங்கே பூமியில் தானே மரித்துப் போன அன்பானவர்களோடு மீண்டும் ஒன்றுசேரும் எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்கிறது!
இதுவே ராபர்டாவின் (முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது போல) நம்பிக்கையாக இருக்கிறது. அவள் தாய் மரித்து பல ஆண்டுகளானபின், யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கவனமாக படிப்பதற்கு அவளுக்கு உதவி செய்தனர். அவள் நினைவுபடுத்தி சொல்கிறாள்: “உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் குறித்து கற்றறிந்த பின் நான் அழுதேன். என் அம்மாவை நான் மீண்டும் பார்ப்பேன் என்பதை அறிவது மகத்தானதாக இருந்தது.” அதேவிதமாகவே எவராவது ஓர் அன்பானவரை மீண்டும் காண உங்கள் இருதயம் வாஞ்சிக்குமேயானால், இந்த மகத்தான எதிர்பார்ப்பைக் குறித்து, அதிகத்தை நீங்கள் கற்றறிய விரும்புவீர்கள். (w90 5/1)
[அடிக்குறிப்புகள்]
a யோவான் 5:28, 29 வசனங்களில் பதிவாகியுள்ள வாக்குறுதியைச் செய்தப் பின்பும் லாசருவின் மரணத்துக்கும் இடையே கடந்துவிட்ட காலப்பகுதியின் போது, நாயீன் ஊரில் இருந்த விதவையினுடைய மகனையும் யவீருவின் மகளையும் இயேசு எழுப்பினார்.—லூக்கா 7:11–17; 8:40–56.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் வெளியிடப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? புத்தகத்தில், “அற்புதங்கள்—அவை உண்மையில் நடந்தனவா?” என்ற தலைப்பிலுள்ள 6-ம் அதிகாரத்தைப் பார்க்கவும்.
c எருசலேமுக்கு வரவிருந்த அழிவைக் குறித்து முன்னுரைக்கையில் சப்தமாக அழுவதற்கு இயேசு (klaiʹo) என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தியது அக்கறைக்குரியதாய் இருக்கிறது. லூக்காவுடைய பதிவு சொல்கிறது: “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் [எருசலேமைப்] பார்த்து, அதற்காக கண்ணீர்விட்டழுதார்.”—லூக்கா 19:41.
[பக்கம் 5-ன் படம்]
இயேசு யவீருவின் குமாரத்தியை உயிர்த்தெழுப்பியது, மரித்தோர் எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுவர் என்பதில் விசுவாசம் வைப்பதற்கு ஆதாரத்தைக் கொடுக்கிறது
[பக்கம் 6-ன் படம்]
இயேசு லாசருவின் மரணத்தில் வெகுவாக கலங்கினார்
[பக்கம் 7-ன் படம்]
உயிர்த்தெழுதலைக் காண்பவர்களுடைய மகிழ்ச்சியானது, நாயீன் ஊரில் உள்ள விதவையின் மரித்த மகனை இயேசு உயிர்த்தெழுப்பிய போது அவளுக்கிருந்த மகிழ்ச்சிக்கு ஒப்பாயிருக்கும்