யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
யோபு புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
கோத்திரப் பிதாவான யோபு ஊத்ஸ் தேசத்தில்—இப்போது அரேபியாவில் உள்ள தேசத்தில்—வாழ்கிறார். அந்தச் சமயத்தில் அதிகமதிகமான இஸ்ரவேலர் எகிப்தில் வாழ்ந்து வருகிறார்கள். யோபு ஓர் இஸ்ரவேலர் அல்ல, ஆனால் யெகோவா தேவனை வழிபடுபவர். அவரைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) யெகோவாவின் தலைசிறந்த இரு ஊழியர்களான யோசேப்பும் (யாக்கோபுவின் மகன்), தீர்க்கதரிசியான மோசேயும் வாழ்ந்த காலத்திற்கு இடைப்பட்ட காலமாக அது இருக்க வேண்டும்.
யோபு புத்தகத்தை எழுதியதாகக் கருதப்படுகிற மோசே, ஊத்ஸ் தேசத்திற்கு அருகிலிருந்த மீதியான் தேசத்தில் 40 வருடங்களைக் கழித்த சமயத்தில் யோபுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார். இஸ்ரவேலர் தங்களுடைய 40 வருட வனாந்தர வாசத்தின் முடிவில் ஊத்ஸ் தேசத்தின் அருகே இருக்கையில் யோபுவின் இறுதி காலக்கட்டத்தைப் பற்றி அறிந்திருப்பார்.a யோபுவின் அனுபவம் மிக அழகாக எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளதால், இது ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப்படுகிறது. அதைவிட முக்கியமாக, பின்வரும் சில கேள்விகளுக்கு இது பதில் தருகிறது: நல்ல ஜனங்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? யெகோவா ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்? அபூரண மனிதர்களால் கடவுளுக்கு உத்தமமாய் இருக்க முடியுமா? ஆக, கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையின் பாகமான இப்புத்தகம் இன்றும்கூட ஜீவனும் வல்லமையும் உள்ளதாய் இருக்கிறது.—எபிரெயர் 4:12.
‘நான் பிறந்த நாள் அழிவதாக’
ஒருநாள், யோபுவின் உத்தமத்தைக் குறித்து கடவுளிடம் சாத்தான் சவால்விடுகிறான். அந்தச் சவாலை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்; ஒன்றன்பின் ஒன்றாக யோபுவுக்கு பல கஷ்டங்களைக் கொடுக்க சாத்தானை அனுமதிக்கிறார். ஆனாலும் யோபு ‘தேவனைத் தூஷிப்பதில்லை.’—யோபு 2:9.
யோபுவுக்காக ‘பரிதபிக்க’ அவருடைய மூன்று தோழர்கள் வருகிறார்கள். (யோபு 2:11) அவர்கள் ஒன்றும் பேசாமல் அவருடன் உட்கார்ந்திருக்கிறார்கள். கடைசியில், யோபு வாய்திறந்து, ‘நான் பிறந்த நாள் அழிவதாக’ என்று சொல்கிறார். (யோபு 3:3) “வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போல,” அதாவது பிறவாக் குழந்தைகள்போல இருக்க அவர் விரும்புகிறார்.—யோபு 3:11, 16.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:4—யோபுவின் பிள்ளைகள் பிறந்த நாளைக் கொண்டாடினார்களா? இல்லை. மூல மொழியில், ‘நாள்’ என்பதற்கும் ‘ஜென்ம நாள்,’ அதாவது பிறந்த நாள், என்பதற்குமுரிய வார்த்தைகள் வித்தியாசப்பட்டவை, இரண்டும் வெவ்வேறு அர்த்தமுடையவை. (ஆதியாகமம் 40:20) யோபு 1:4-ல் கொடுக்கப்பட்டுள்ள ‘நாள்’ சூரிய உதயம்முதல் சூரிய அஸ்தமனம்வரையான காலத்தைக் குறிக்கிறது. யோபுவின் ஏழு மகன்களும் வருடத்தில் ஒருமுறை குடும்பமாக ஒன்றுகூடி ஏழு நாட்களுக்கு விருந்து வைத்ததாகத் தெரிகிறது. ஏழு மகன்களும் “அவரவருடைய நாள்முறை” வருகையில் அவரவர் வீட்டில் விருந்து அளித்தார்கள்.
1:6; 2:1—யெகோவாவுடைய சந்நிதியில் நிற்பதற்கு யாரெல்லாம் அனுமதிக்கப்பட்டனர்? வார்த்தை என அழைக்கப்பட்ட கடவுளுடைய ஒரேபேறான குமாரனும், உண்மையுள்ள தூதர்களும், பிசாசாகிய சாத்தான் உட்பட கீழ்ப்படியாமற்போன ‘தேவ புத்திரர்களும்’ யெகோவாவின் சந்நிதியில் நின்றார்கள். (யோவான் 1:1, 18) 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்தில்தான் இருந்தார்கள்; அதற்கு சற்று பின்னரே அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 12:1-12) தமது சந்நிதியில் வர அவர்களை யெகோவா அனுமதிப்பதன் மூலம் சாத்தானுடைய சவாலையும், அதனால் எழும்பிய விவாதங்களையும் ஆவி சிருஷ்டிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும்படி செய்தார்.
1:7;2:2—சாத்தானிடம்யெகோவா நேரடியாகப் பேசினாரா? ஆவி சிருஷ்டிகளிடம் யெகோவா எவ்வாறு பேசுகிறார் என்பது பற்றி பைபிள் அதிகம் சொல்வதில்லை. என்றாலும், ஒரு தூதன் யெகோவாவிடம் நேரடியாகப் பேசுவதை மிகாயா தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் கண்டார். (1 இராஜாக்கள் 22:14, 19-23) அப்படியானால், எந்தவொரு மத்தியஸ்தருமின்றி நேரடியாகவே சாத்தானிடம் யெகோவா பேசினார் எனத் தெரிகிறது.
1:21—எவ்விதத்தில் தன் ‘தாயின் கர்ப்பத்திற்கு’ யோபு திரும்பிச் செல்ல முடியும்? யெகோவா தேவன் மனிதனை “பூமியின் மண்ணினாலே” உருவாக்கினபடியால், இங்கு ‘தாய்’ என அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தை பூமியையே குறிக்கிறது.—ஆதியாகமம் 2:7.
2:9—தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்று யோபுவிடம் அவருடைய மனைவி சொன்னபோது அவளுடைய மனநிலை எப்படி இருந்திருக்கலாம்? யோபு இழந்திருந்த அனைத்தையும் அவளும் இழந்திருந்தாள். திடகாத்திரமாக இருந்த தன் கணவர் கொடிய வியாதியால் அவதிப்படுவதைக் காண்பது அவளுக்கு வேதனை அளித்திருக்கலாம். தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும் அவள் இழந்துவிட்டாள். இவை எல்லாமே அவளுடைய மனதைச் சுக்குநூறாக்கியிருக்கலாம்; அதனால், மிக முக்கியமானதை, அதாவது கடவுளோடு உள்ள உறவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டாள்.
நமக்குப் பாடம்:
1:8-11; 2:3-5. யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டுமானால், நம்முடைய சொல்லும் செயலும் தகுந்ததாய் இருப்பது அவசியம்; சரியான உள்நோக்கத்துடன் அவருக்குச் சேவை செய்வதும் அவசியம்; இதை யோபுவின் அனுபவம் காட்டுகிறது.
1:21, 22. சாதகமான சூழ்நிலையிலும் சாதகமற்ற சூழ்நிலையிலும் யெகோவாவைவிட்டு விலகாமல் இருப்பதன் மூலம் சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்கலாம்.—நீதிமொழிகள் 27:11.
2:9, 10. யோபுவைப் போல விசுவாசத்தில் நாம் உறுதியாய் இருக்க வேண்டும்; நம் குடும்பத்தார் நம்முடைய ஆன்மீகக் காரியங்களுக்கு மதிப்புகொடுக்காவிட்டாலோ விசுவாசத்தை விட்டுக்கொடுக்குமாறு அல்லது கைவிடுமாறு வற்புறுத்தினாலோகூட நாம் உறுதியாய் இருக்க வேண்டும்.
2:13. யோபுவின் தோழர்கள் அவருக்கு ஆறுதலாக கடவுளையும் அவரது வாக்குறுதிகளையும் பற்றி எந்த விஷயத்தையுமே சொல்லவில்லை. ஏனெனில், அவர்களுக்கு ஆன்மீகக் கண்ணோட்டம் இருக்கவில்லை.
“என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்”
கடவுளிடமிருந்து இப்படிப்பட்ட பயங்கரமான தண்டனை கிடைத்திருக்கிறதென்றால், யோபு மகா தவறு செய்திருக்க வேண்டுமென்பதே அவருடைய மூன்று தோழர்களுடைய பேச்சின் சாராம்சம். முதலாவது எலிப்பாஸ் பேசுகிறார். அடுத்து பில்தாத் இன்னும் ஏளனமாய்ப் பேசுகிறார். சோப்பார் அதைவிட இன்னும் புண்படுத்தும் விதத்தில் பேசுகிறார்.
இவர்களின் பொய்யான நியாயங்களை யோபு ஒத்துக்கொள்வதில்லை. கடவுள் ஏன் தனக்கு கஷ்டத்தை அனுமதித்திருக்கிறார் என்பது பிடிபடாமல், தன்னை நியாயப்படுத்திப் பேசுவதிலேயே மூழ்கிவிடுகிறார். இருந்தாலும், கடவுளை அவர் நேசிக்கிறார்; “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று உணர்ச்சிபொங்கக் கூறுகிறார்.—யோபு 27:5.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
7:1, NW; 14:14, NW—‘கட்டாய உழைப்பு’ அல்லது ‘கட்டாய சேவை’ என்பதன் அர்த்தம் என்ன? யோபுவுக்கு மிகக் கொடிய துன்பங்கள் வந்ததால், தன் வாழ்க்கை கடுமையாகப் பாடுபட வேண்டிய கட்டாய உழைப்பைப்போல் இருப்பதாக நினைத்தார். (யோபு 10:17, NW அடிக்குறிப்பு) ஷியோலில் ஒருவர் செலவிடும் காலம்—இறப்புமுதல் உயிர்த்தெழுதல்வரை ஒருவர் செலவிடும் காலம்—அவர்மீது பலவந்தமாய் சுமத்தப்பட்ட ஒரு காலப்பகுதியாக இருப்பதால், அதை அவர் கட்டாய சேவைக்கு ஒப்பிட்டார்.
7:9, 10; 10:21; 16:22—உயிர்த்தெழுதலில் யோபுவுக்கு நம்பிக்கை இல்லையென இந்த வசனங்கள் காட்டுகின்றனவா? தனக்கு வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கப்போவதைப் பற்றியே யோபு இந்த வசனங்களில் சொல்கிறார். அப்படியானால், அவர் எதை அர்த்தப்படுத்தினார்? ஒன்று, தான் மரிக்க வேண்டியிருந்தால் தன் காலத்தைச் சேர்ந்தவர் யாராலுமே தன்னைப் பார்க்க முடியாதென அர்த்தப்படுத்தியிருக்கலாம். அவர்களுடைய கண்ணோட்டத்தில், கடவுளுடைய குறிக்கப்பட்ட காலம் வரும்வரை அவர் இனி வீட்டிற்குத் திரும்பி வரப்போவதுமில்லை, அவரைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதுமில்லை. இரண்டாவது, யாருமே ஷியோலிலிருந்து தானாகத் திரும்பி வரமுடியாது என அர்த்தப்படுத்தியிருக்கலாம். எப்படியானாலும், உயிர்த்தெழுதலில் யோபுவுக்கு நம்பிக்கை இருந்ததை யோபு 14:13-15 தெளிவாகக் காட்டுகிறது.
10:10—யெகோவா யோபுவை ‘பால்போல் வார்த்து தயிர்போல் உறையப்பண்ணினது’ எப்படி? தன் தாயின் கருப்பையில் யோபு எப்படி உருவானார் என்பதைப் பற்றிய கவிதை நடையிலான விவரிப்பே இது.
19:20 (NW)—“என் பற்களின் தோலோடு தப்பினேன்” என யோபு சொன்னதன் அர்த்தம் என்ன? தோலே இல்லாத ஒன்றைக்கொண்டு தான் தப்பினதாக சொன்னதன் மூலம், கிட்டத்தட்ட எதுவுமே இல்லாமல் தப்பினார் என அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம்.
நமக்குப் பாடம்:
4:7, 8; 8:5, 6; 11:13-15. துன்பப்படும் ஒருவரை நாம் பார்க்கும்போது, அவர் விதைத்த தீவினையின் பலாபலனையே அறுக்கிறார் என்றும், அவருக்குக் கடவுளுடைய தயவு இல்லை என்றும் சட்டென முடிவுகட்டிவிடக் கூடாது.
4:18, 19; 22:2, 3. நாம் கொடுக்கும் ஆலோசனை சொந்தக் கருத்தாக இருக்கக்கூடாது, கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
10:1. தாங்க முடியாத மனவேதனையில் மூழ்கிவிட்டதால், தன்னுடைய துயரத்திற்கான மற்ற காரணங்களைப் பற்றி யோபு யோசித்துப் பார்க்கவில்லை. நாமும்கூட துன்பப்படுகையில் மனக்கசப்படையக் கூடாது, அதுவும் அதற்குரிய முக்கிய காரணங்களை தெளிவாக அறிந்திருப்பதால் மனக்கசப்படையக் கூடாது.
14:7, 13-15; 19:25; 33:24. சாத்தான் நமக்கு எந்தவொரு சோதனையைக் கொடுத்தாலும், உயிர்த்தெழுதல் நம்பிக்கை நம்மைப் பலப்படுத்தும்.
16:5; 19:2. நாம் சொல்லும் வார்த்தைகள் மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் வேண்டும், எரிச்சல்படுத்தக் கூடாது.—நீதிமொழிகள் 18:21.
22:5-7. சரியான ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆலோசனை கொடுப்பது பயனற்றது, தீங்கானதும்கூட.
27:4; 30:20, 21. தொடர்ந்து உத்தமத்தைக் காட்டுவதற்கு பரிபூரணராய் இருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுளைப் பற்றி யோபு தவறாகக் குறைகூறினார்.
27:5. உத்தமமாய் இருப்பதா வேண்டாமா என்பதை யோபுவால்தான் தீர்மானிக்க முடியும். ஏனெனில் ஒருவருக்கு கடவுள்மீது அன்பு இருந்தால்தான் உத்தமமாய் இருக்க முடியும். அதனால் யெகோவா மீதுள்ள அன்பை நாம் பலப்படுத்த வேண்டும்.
28:1-28. பூமியின் பொக்கிஷங்கள் எங்கிருக்கின்றன என்று மனிதன் அறிந்திருக்கிறான். தன் அறிவையும் திறமைகளையும் பயன்படுத்தி பூமியின் ஆழத்திற்குச் சென்று அவற்றைத் தேடுகிறான்; ஆம், தொலைநோக்குத் திறனுடைய எந்தப் பறவையாலும் பார்க்க முடியாத ஆழத்திற்குச் செல்கிறான். என்றாலும், தெய்வீக ஞானம் கடவுளுக்கு பயப்படுவதன் மூலமே கிடைக்கிறது.
29:12-15. ஏழ்மையில் இருப்போருக்கு சந்தோஷத்தோடு நாம் தயவுகாட்ட வேண்டும்.
31:1, 9-28. சரசமாடுதல், விபச்சாரம், அநீதியான செயல்கள், இரக்கமற்ற செயல்கள், பொருளாசை, விக்கிரகாராதனை ஆகியவற்றைத் தவிர்த்த யோபு நமக்கு ஒரு முன்மாதிரியாய்த் திகழ்கிறார்.
‘நான் தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்’
இளைஞரான எலிகூ நடந்துகொண்டிருந்த விவாதத்தை பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இப்போது அவர் பேசத் தொடங்குகிறார். யோபுவையும் அவரை நோகடித்தவர்கள் மூவரையும் அவர் திருத்துகிறார்.
எலிகூ பேசி முடித்ததும் பெருங்காற்றின் மத்தியிலிருந்து யெகோவா பதிலளிக்கிறார். யோபு படும் கஷ்டங்களுக்கான காரணத்தை அவர் விளக்குவதில்லை. என்றாலும், தொடர்ந்தாற்போல் பல கேள்விகள் கேட்பதன் மூலம் தம்முடைய மகா வல்லமையையும் மிகுந்த ஞானத்தையும் யோபுவுக்கு உணர்த்துகிறார். தான் தெரியாத்தனமாகப் பேசிவிட்டதை ஒத்துக்கொண்டு யோபு இவ்வாறு சொல்கிறார்: “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.” (யோபு 42:6) யோபுவின் சோதனைக் காலம் முடிவடைகிறது, அவருடைய உத்தமத்தன்மைக்கு யெகோவா பலனளிக்கிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
32:1-3—எலிகூ எப்போது வந்தார்? நடந்த சம்பாஷணைகளை எல்லாம் எலிகூ கேட்டிருக்கிறார். அப்படியானால், யோபுவுடைய மூன்று தோழர்களின் ஏழு நாள் மௌனம் முடிந்து, யோபு பேசத்தொடங்கியதற்கு சற்று முன்பே அவர் அங்கு வந்திருந்து, கேட்கும் தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.—யோபு 3:1, 2.
34:7—‘பரியாசத்தை தண்ணீரைப்போல் குடிக்கும்’ மனிதனுக்கு ஒப்பாக யோபு எப்படி ஆனார்? மூன்று தோழர்களும் தன்னைப் பார்த்தே பரியாசம் பண்ணியதாக இக்கட்டான சூழ்நிலையிலிருந்த யோபு நினைத்துக்கொண்டார்; உண்மையில் அது கடவுளுக்கு விரோதமான பேச்சாகவே இருந்தது. (யோபு 42:7) ஆக, தண்ணீரை ருசித்துக் குடிக்கிற ஒருவனைப் போல அவர் பரியாசத்தைக் ‘குடித்தார்.’
நமக்குப் பாடம்:
32:8, 9. வயதில் முதிர்ந்த ஒருவரை ஞானமுள்ளவர் என்று சொல்லிவிட முடியாது. ஞானத்தைப் பெற கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும் அவருடைய ஆவியின் வழிநடத்துதலும் தேவை.
34:36. ஏதாவதொரு விதத்தில் ‘முற்றுமுடிய சோதிக்கப்படுவதன்’ மூலமே நம்முடைய உத்தமத்தன்மை நிரூபிக்கப்படுகிறது.
35:2. எலிகூ தான் பேசத் தொடங்குவதற்கு முன், யோபு பேசுவதைக் கவனமாய்க் கேட்டார், பிறகு சம்பந்தப்பட்ட விஷயத்தைச் சுட்டிக்காட்டினார். (யோபு 10:7; 16:7; 34:5) கிறிஸ்தவ மூப்பர்கள் ஆலோசனை கொடுப்பதற்கு முன் கவனித்துக் கேட்க வேண்டும், உண்மைகளை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும், சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.—நீதிமொழிகள் 18:13.
37:14; 38:1–39:30. யெகோவாவின் அற்புத செயல்களைப் பற்றி—அவரது வல்லமை மற்றும் ஞானத்தின் செயல்களைப் பற்றி—தியானிப்பது நம்மைத் தாழ்மையுள்ளவராக்குகிறது. அதோடு, நம்முடைய சொந்த விருப்பங்களைவிட அவரது பேரரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதே அதிமுக்கியம் என்பதை உணர வைக்கிறது.—மத்தேயு 6:9, 10.
40:1-4. சர்வவல்லவருக்கு எதிராகக் குறைகூற நாம் நினைக்கும்போது, ‘நம் கையினாலே நம் வாயைப் பொத்திக்கொள்ள’ வேண்டும்.
40:15–41:34. பிகெமோத்துக்கும் (நீர்யானை) லிவியாதானுக்கும்தான் (முதலை) எத்தனை பலம்! இப்படிப்பட்ட பலம்வாய்ந்த மிருகங்களைப் படைத்த யெகோவாவிடமிருந்து வரும் பலம்தான் அவருடைய சேவையைத் தொடர்ந்து செய்ய நமக்குத் தேவை; அவர் அதை நமக்கு அருளுகிறார்.—பிலிப்பியர் 4:13.
42:1-6. யெகோவாவின் வார்த்தையைக் கேட்டதும், அவரது வல்லமையின் வெளிக்காட்டுதல்களைப் பற்றி நினைப்பூட்டப்பட்டதும் ‘தேவனைப் பார்க்க,’ அதாவது அவரைப் பற்றிய உண்மையை உணர்ந்துகொள்ள யோபுவுக்கு உதவியது. (யோபு 19:26) இது அவருடைய சிந்தையை சரிசெய்தது. பைபிளின் அடிப்படையில் நாம் திருத்தப்படும்போது, நம்முடைய தவறுகளை ஒத்துக்கொண்டு மாற்றங்கள் செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.
‘யோபுவின் பொறுமையை’ வளர்த்துக்கொள்ளுங்கள்
மனிதர் படும் துன்பத்திற்குக் கடவுள் பொறுப்பல்ல என்பதை யோபு புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது. சாத்தானே அதற்குப் பொறுப்பாளி. துன்மார்க்கத்தை இந்தப் பூமியில் யெகோவா அனுமதித்திருப்பது, அவரது பேரரசாட்சியையும் நம்முடைய உத்தமத்தன்மையையும் பற்றிய விவாதங்களில் நாம் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கிறது.
யெகோவாவை நேசிப்போர் எல்லாருமே யோபுவைப் போல் சோதிக்கப்படுவர். அப்படிப்பட்ட சோதனைகளை நம்மால் சகிக்க முடியும் என்பதற்கு யோபுவின் சரித்திரம் உறுதியளிக்கிறது. நம்முடைய பிரச்சினைகள் சதா காலத்திற்கும் நீடிக்காது என்பதை இது நினைப்பூட்டுகிறது. ‘யோபுவின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; யெகோவாவுடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்’ என யாக்கோபு 5:11 சொல்கிறது. யோபு உத்தமராய் இருந்ததால் யெகோவா அவருக்குப் பலனளித்தார். (யோபு 42:10-17) நமக்கும் பலனளிப்பார், ஆம், எப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான எதிர்காலம் இருக்கிறது—பரதீஸ் பூமியில் நித்திய வாழ்க்கை! அப்படியானால், யோபுவைப் போல நாமும் தொடர்ந்து உத்தமராய் இருக்கத் தீர்மானமாயிருப்போமாக.—எபிரெயர் 11:6.
[அடிக்குறிப்பு]
a யோபு புத்தகம் பொ.ச.மு. 1657-க்கும் பொ.ச.மு. 1473-க்கும் இடைப்பட்ட 140 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியை உள்ளடக்குகிறது.
[பக்கம் 16-ன் படங்கள்]
‘யோபுவின் பொறுமையிலிருந்து’ நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?