வியத்தகு செயல்களை செய்பவரை கவனியுங்கள்!
“இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.” —யோபு 37:14, பொது மொழிபெயர்ப்பு.
1, 2. 1922-ல் செய்யப்பட்ட ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்பு என்ன, அதைப் பார்த்ததும் ஏற்பட்ட பிரதிபலிப்பு என்ன?
ஹெளயர்ட் கார்ட்டர் என்ற தொல்பொருள் ஆய்வாளரும் கார்னர்வன் என்ற ஆங்கிலேய பிரபுவும் பல ஆண்டுகளாக ஒரு புதையல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இறுதியாக நவம்பர் 26, 1922-ல், எகிப்திய பார்வோன்கள் அடக்கம் செய்யப்பட்ட ராஜாக்கள் பள்ளத்தாக்கு என்ற பிரபல கல்லறை தோட்டத்தில் தாங்கள் தேடி அலைந்த புதையலிருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர்; அதுவே பார்வோன் டுடன்கமெனின் கல்லறை. அடைபட்டிருந்த கதவை கண்டதும் அவர்கள் அதில் துளையிட்டனர். கார்ட்டர் அதனுள் ஒரு மெழுகுவர்த்தியை நுழைத்து உள்ளே நோட்டம் விட்டார்.
2 கார்ட்டர் பின்னர் சொன்னதாவது: “உள்ளே என்னதான் இருக்கிறது என்பதை அறிய கார்னர்வான் பிரபு துடியாய் துடித்தார். ‘ஏதாவது கண்ணில் தட்டுப்படுகிறதா?’ என ஆசை ஆசையாய் கேட்டார். ‘ஆமாம், அற்புதமான பொருட்கள் இருக்கிறது’ என்ற வார்த்தைகள் ரொம்ப கஷ்டப்பட்டு என் வாயிலிருந்து வந்தன.” அந்தக் கல்லறைக்குள் இருந்த ஆயிரமாயிரம் பொக்கிஷங்களில் ஒன்று முழுக்க முழுக்க சொக்கத் தங்கத்தாலான சவப்பெட்டி. இந்த வியத்தகு பொருட்களில் சிலவற்றை நீங்கள் போட்டோக்களிலோ அருங்காட்சியகத்திலோ பார்த்திருக்கலாம். ஆனால், அருங்காட்சியகத்திலுள்ள பொருட்கள் எவ்வளவுதான் வியக்கத்தக்கவையாக இருந்தாலும் பெரும்பாலும் உங்கள் வாழ்க்கைக்கும் அவற்றிற்கும் துளிகூட சம்பந்தமில்லை. எனவே, உங்கள் வாழ்க்கையுடன் உண்மையில் சம்பந்தப்பட்டதும், உங்களுக்கு மதிப்புமிக்கதுமான வியத்தகு செயல்களிடம் இப்போது நம் கவனத்தைத் திருப்புவோம்.
3. நமக்கு பயனுள்ள வியத்தகு செயல்கள் பற்றிய தகவலை எங்கே காண்கிறோம்?
3 உதாரணமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரைப் பற்றி சிந்திப்போம். எந்தவொரு சினிமா நட்சத்திரத்தையோ விளையாட்டு வீரரையோ அல்லது அரச குடும்பத்தினரையோ காட்டிலும் அவர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர். கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவர் என அழைக்கப்பட்டார். பெயரைக் கேட்டதும் அவர் யாரென்று புரிந்துகொள்வீர்கள். அவர்தான் யோபு. அவரைப் பற்றி பைபிளில் ஒரு புத்தகமே எழுதப்பட்டுள்ளது. அவரது காலத்தில் வாழ்ந்தவர்களுள் எலிகூ என்பவரும் ஒருவர். வயதிலோ இளையவர்தான்; ஆனாலும் இவர் யோபுவைத் திருத்த வேண்டிய சந்தர்ப்பம் வந்தது. மொத்தத்தில், யோபு தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றி இருந்தவர்களைப் பற்றியுமே பெரிதாக நினைத்தது தவறு என்று எலிகூ அறிவுரை கூறினார். நம் ஒவ்வொருவருக்கும் உண்மையிலேயே பயனுள்ளவையாய் இருக்கும் இன்னும் சில திட்டவட்டமான, ஞானமான, நல்ல நல்ல ஆலோசனைகளை யோபு 37-ம் அதிகாரத்தில் காண்கிறோம்.—யோபு 1:1-3; 32:1–33:12.
4. யோபு 37:14-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள புத்திமதியை எலிகூ கொடுப்பதற்குக் காரணம் என்ன?
4 சிந்தையிலோ செயலிலோ யோபு ஏதாவது தவறு செய்திருப்பார் என தாங்கள் கருதிய அம்சங்களைக் குறித்து யோபுவின் நண்பர்கள் என சொல்லிக் கொண்ட மூவர் நீண்ட சொற்பொழிவாற்றினர். (யோபு 15:1-6, 16; 22:5-10) அவர்கள் பேசி முடிக்கும் வரை எலிகூ பொறுமையுடன் காத்திருந்தார். பிறகு உட்பார்வையும் ஞானமும் நிறைந்த வார்த்தைகள் அவர் வாயில் பிறந்தன. அவர் மதிப்புமிக்க அநேக குறிப்புகளை சொன்னார்; ஆனால் இந்த முக்கிய குறிப்பை சற்று கவனியுங்கள்: “யோபே! செவிகொடும்; இறைவனின் வியத்தகு செயல்களை நின்று நிதானித்துக் கவனியும்.”—யோபு 37:14, பொ.மொ.
அந்த செயல்களை செய்தவர்
5. எலிகூ குறிப்பிட்ட ‘இறைவனின் வியத்தகு செயல்களில்’ எது அடங்கியுள்ளது?
5 யோபு தன்னைத்தானே கவனிக்கும்படி எலிகூ கூறவில்லை; தனக்கோ பிறருக்கோ கவனம் செலுத்தும்படியும் அவர் கூறவில்லை என்பதை கவனியுங்கள். யெகோவா தேவனின் வியத்தகு செயல்களை கவனிக்கும்படி யோபுவுக்கும், அவ்வாறே நமக்கும் எலிகூ ஞானமாய் அறிவுரை கூறினார். ‘இறைவனின் வியத்தகு செயல்கள்’ என்ற சொற்றொடரில் என்னென்ன அடங்கியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? மேலும், உடல்நலம், பணம், எதிர்காலம், குடும்பம், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் என ஏகப்பட்ட கவலை உங்களுக்கு இருக்கையில் கடவுளின் வியத்தகு செயல்களை வேறு ஏன் கவனிக்க வேண்டும்? ஏனெனில், யெகோவா தேவனின் வியத்தகு செயல்களில் அவருடைய ஞானமும் நம்மை சுற்றியுள்ள படைப்புகளின் மீதான அவருடைய அதிகாரமும் அடங்கியிருப்பதாலேயே. (நெகேமியா 9:6; சங்கீதம் 24:1; 104:24; 136:5, 6) இதை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள யோசுவா புத்தகத்திலுள்ள ஒரு குறிப்பை கவனியுங்கள்.
6, 7. (அ) மோசே, யோசுவா ஆகியோருடைய நாட்களில் யெகோவா செய்த வியத்தகு செயல்கள் யாவை? (ஆ) மோசே காலத்திலோ யோசுவாவின் காலத்திலோ நிகழ்ந்த இந்தச் செயல்களில் ஒன்றை நீங்கள் கண்ணார கண்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்?
6 பூர்வ இஸ்ரவேலரை மோசே விடுதலைக்கு வழிநடத்தி செல்வதற்கு உதவியாக யெகோவா பூர்வ எகிப்தின்மீது வாதைகளை வருவித்து, பின்னர் செங்கடலைப் பிளந்தார். (யாத்திராகமம் 7:1–14:31; சங்கீதம் 106:7, 21, 22) இதே போன்ற மற்றொரு சம்பவம் யோசுவா மூன்றாம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. மோசேக்குப் பின் கடவுளுடைய ஜனங்களை யோசுவா, அதேபோல தண்ணீரை கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்தி செல்ல வேண்டியிருந்தது. ‘உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்கு யெகோவா உங்கள் நடுவிலே வியத்தகு செயல்களை செய்வார்’ என்று யோசுவா கூறினார். (யோசுவா 3:5, NW) என்ன வியத்தகு செயல்கள்?
7 யெகோவா யோர்தான் நதியில் வழியை உண்டாக்கியதால் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் உலர்ந்த தரையில் நடந்து அதைக் கடந்து சென்றதாக பதிவு காட்டுகிறது. (யோசுவா 3:7-17) நதியில் வழி உண்டானதையும், மக்கள் அனைவரும் பத்திரமாக கடந்து சென்றதையும் நாம் கண்ணார கண்டதாக வைத்துக்கொள்வோம். அந்த வியத்தகு சாதனை நம் மனதில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கும்! படைப்பின்மீது கடவுளுக்கிருந்த சக்தியையே அது எடுத்துக்காட்டியது. இருந்தாலும், நாம் வாழ்ந்துவரும் இக்காலத்திலும், அதை போன்ற வியத்தகு செயல்கள் நடக்கின்றன! அவற்றில் சில யாவை, ஏன் அவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு யோபு 37:5-7-லுள்ள பதிவை ஆராயலாம்.
8, 9. யோபு 37:5-7 குறிப்பிடும் வியத்தகு செயல்கள் யாவை, ஆனால் இவற்றை நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?
8 “கடவுள் வியத்தகு முறையில் தம் குரலால் முழங்குகின்றார்; நம் அறிவுக்கெட்டாத பெரியனவற்றைச் செய்கிறார்” (NW) என எலிகூ அறிவித்தார். கடவுள் “வியத்தகு முறையில்” செயல்படுவதாக எதை மனதில் வைத்து எலிகூ சொன்னார்? பனிமழை, கல்மழை ஆகியவற்றை அவர் குறிப்பிடுகிறார். அவை வயலில் வேலை பார்க்கும் விவசாயி, தன் வேலையை நிறுத்தும்படி செய்து, கடவுளுடைய செயல்களை கவனிப்பதற்காக நேரத்தையும் காரணத்தையும் அளிக்கின்றன. ஒருவேளை நாம் விவசாயிகளாய் இல்லாதிருக்கலாம். ஆனாலும், மழையோ பனியோ நம்மை பாதிக்கலாம். நாம் எங்கு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்து பனியோ மழையோ நம்முடைய வேலைகளை ஸ்தம்பித்துப் போக செய்யலாம். இப்படிப்பட்ட வியத்தகு செயல்களுக்கு காரணகர்த்தா யார், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்பதை தியானிக்கிறோமா? எப்போதாவது அப்படி நீங்கள் தியானித்திருக்கிறீர்களா?
9 முக்கியமாய் யோபு 38-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் விதமாக அர்த்தமுள்ள கேள்விகளை யோபுவிடம் கேட்கையில் யெகோவா தேவனும் அதே கருத்தில் பேசினார். நம்முடைய படைப்பாளர் அக்கேள்விகளை யோபுவிடம் கேட்டாலும் நம் மனநிலையோடும், நம் வாழ்க்கையோடும், நம் எதிர்காலத்தோடும் அவற்றிற்கு சம்பந்தமிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே, கடவுள் என்ன கேட்டார் என பார்ப்போம், அவற்றின் அர்த்தமென்ன என யோசிப்போம், யோபு 37:14 செய்ய சொல்வதை செய்வோம்.
10. யோபு 38-ம் அதிகாரம் நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும், அது என்ன கேள்விகளை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறது?
10 யோபு 38-ம் அதிகாரம் இவ்வாறு ஆரம்பிக்கிறது. “கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.” (யோபு 38:1-3) இது யோபுவின் மனதை தயார்படுத்தியது. இது, அவருடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள உதவியது; அகிலாண்டத்தையும் படைத்தவருக்கு முன் நிற்கிறார், அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற நிஜத்தை புரிய வைத்தது. நாமும் மற்றவர்களும்கூட அவரைப் போல் செயல்படுவது நல்லது. பின்னர், எலிகூ குறிப்பிட்டதைப் போன்ற விஷயங்களை யோபுவின் கவனத்திற்கு கடவுள் கொண்டு வந்தார். “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?”—யோபு 38:4-6.
11. யோபு 38:4-6 என்ன உண்மைகளை நமக்கு புரிய வைக்கிறது?
11 யோபுவோ நாமோ பூமி உருவானபோது இருந்தோமா? மனிதர்களாகிய நாம் பூமியை வடிவமைத்த கட்டட கலைஞர்களாக இருந்தோமா? அதற்கிசைய நூல் பிடித்து, மட்டக் கோலை உபயோகித்து அதை உருவாக்கினோமா? இல்லையே! அப்பொழுதெல்லாம் மனிதரே இல்லை. கடவுள் இந்தப் பூமியை ஒரு கட்டடத்திற்கு ஒப்பிட்டு, “அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?” என்று கேட்டார். நாம் உயிருடன் வாழ்ந்து வளம்பெறுவதற்கு ஏற்றவாறு, இந்தப் பூமி சூரியனிலிருந்து சரியான தூரத்தில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். அதன் அளவும் சரியாகவே உள்ளது. அப்படியில்லாமல், பூமி மிகப் பெரியதாக இருந்திருந்தால் நம் வளிமண்டலத்திலிருந்து ஹைட்ரஜன் வாயு வெளியேறாது; பூமி உயிர் வாழ்வுக்கு ஏற்றதாக இருக்காது. எவரோ ஒருவர் “அதின் கோடிக்கல்லை” சரியான இடத்தில் வைத்தார் என்பது தெளிவாக தெரிகிறது. இவற்றிற்கான பாராட்டு யாருக்குப்போய் சேர வேண்டும்? யோபுவுக்கா நமக்கா அல்லது யெகோவா தேவனுக்கா?—நீதிமொழிகள் 3:19; எரேமியா 10:12.
எந்த மனிதனிடமாவது பதில் இருக்கிறதா?
12. யோபு 38:6-லுள்ள கேள்வி நம்மை எதைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறது?
12 “அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது?” என்றும் கடவுள் கேட்டார். சிந்தனையைத் தூண்டும் கேள்வி அல்லவா அது? யோபுவுக்குத் தெரியாத ஒரு விஷயம் ஒருவேளை நமக்குத் தெரிந்திருக்கலாம். அதுதான் ஈர்ப்பு சக்தி. பிரமாண்டமான சூரியனின் ஈர்ப்பு சக்தியின் காரணமாகவே நம் பூமி அதற்குரிய இடத்திலிருந்து விலகாமல் இருக்கிறது என்று நாம் அறிவோம்; அதன் ஆதாரங்கள் நன்றாக போடப்பட்டதாக சொல்லலாம். ஆனால் ஈர்ப்பு சக்தி பற்றி யார் முழுமையாக அறிந்திருப்பது?
13, 14. (அ) ஈர்ப்பு சக்தியைக் குறித்ததில் எதை ஒப்புக்கொள்ள வேண்டும்? (ஆ) யோபு 38:6-லுள்ள குறிப்பு நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
13 சமீபத்தில் வெளியிடப்பட்ட அண்டத்தின் விளக்கம் என்ற ஆங்கில புத்தகம், ‘இயற்கை சக்திகளிலேயே ஈர்ப்பு சக்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அதைப் பற்றி கொஞ்சம்தான் புரிந்திருக்கிறோம்’ என ஒத்துக்கொள்கிறது. அதே புத்தகம் மேலும் சொல்கிறது: “வெற்றிடமான விண்வெளியை கண்ணிமைக்கும் நேரத்தில் ஈர்ப்பு சக்தி கடப்பதாக தோன்றுகிறது. அவ்வாறு கடப்பதற்கு தெளிவாக எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை. என்றாலும், கிராவிட்டான்கள் எனப்படும் துகள்களாலான அலைகளின் வடிவில் ஈர்ப்பு சக்தி பயணிக்கலாம் என சமீப காலங்களில் இயற்பியல் வல்லுநர்கள் ஊகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் . . . ஆனால் உண்மையாகவே இருக்கின்றன என எவராலும் அடித்துச் சொல்ல முடியவில்லை.” அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை கவனியுங்கள்.
14 யெகோவா தேவன் யோபுவிடம் அந்தக் கேள்விக் கணைகளைத் தொடுத்தபின் 3,000 வருடங்களாக அறிவியலில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்றாலும், நாமோ இயற்பியல் நிபுணர்களோ ஈர்ப்பு சக்தியை நூறு சதவீதம் விவரிக்க முடிவில்லை. பூமி அதன் பாதையிலிருந்து விலகாமல் சுற்றுவது அந்த சக்தியால்தான்; நாம் பூமியில் நலமாய் வாழ்வதும் அந்த சக்தியால்தான். (யோபு 26:7; ஏசாயா 45:18) அதற்காக, ஈர்ப்பு சக்தி பற்றிய மர்மங்களை நாம் துருவி ஆராய வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, கடவுளின் வியத்தகு செயல்களில் இந்த ஒரேவொரு அம்சத்திற்கு கவனம் செலுத்துவதே, அவரை நாம் நோக்கும் விதத்தை பாதிக்க வேண்டும். அவரது ஞானத்தையும் அறிவையும் கண்டு நீங்கள் பிரமித்து நிற்கிறீர்களா? அவரது சித்தத்தைப் பற்றி ஏன் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
15-17. (அ) யோபு 38:8-11 எதன்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது, எந்தக் கேள்விகளுக்கு அது வழிநடத்துகிறது? (ஆ) கடல்களையும் பூமியில் அவை பரவியிருப்பதையும் பற்றிய அறிவு சம்பந்தமாக எதை ஒப்புக்கொள்ள வேண்டும்?
15 படைப்பாளர் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்: “கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், நான் அதற்கு எல்லையைக்குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்?”—யோபு 38:8-11.
16 சமுத்திரம் கரைபுரளாதபடி அடைப்பதில் கண்டங்கள், கடல்கள், கடல் ஓதங்கள் ஆகியவை உட்படுகின்றன. இவற்றை எத்தனை காலத்திற்கு மனிதன் கவனித்தும் ஆராய்ந்தும் வந்திருக்கிறான்? ஆயிரக்கணக்கான ஆண்டுகள், அதிலும் முக்கியமாய் கடந்த நூற்றாண்டில் வெகு மும்முரமாக ஆராய்ந்து வந்திருக்கிறான். இவற்றைப் பற்றி இதுவரை அறிந்திருப்பது எல்லாமே இப்போது நிரூபிக்கப்பட்டவை என நீங்கள் நினைக்கலாம். எனினும் இந்த 2001-ம் ஆண்டில் அந்தத் தலைப்பில் மிகப் பெரிய நூலகங்களிலுள்ள ஆராய்ச்சி புத்தகங்களையெல்லாம் புரட்டினாலும் அல்லது அதைப் பற்றிய சமீபத்திய தகவலை அறிய இன்டர்நெட்டில் தீவிரமாக ஆராய்ந்தாலும் நீங்கள் என்ன தெரிந்துகொள்வீர்கள்?
17 பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம் இவ்வாறு ஒத்துக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள்: “கண்டத்திட்டுகளும் ஆழ்கடல் பள்ளங்களும் நிலப்பகுதியின் முக்கிய அம்சங்களும் பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் விதம் அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகுந்த சவாலான பிரச்சினைகளில் ஒன்றாகவே பல காலமாக இருந்து வந்திருக்கிறது; அதைப் பற்றி கொள்கை வகுப்பதையும் கடினமாக்கி இருக்கிறது.” இதைச் சொன்னபிறகு, சாத்தியமான நான்கு விதமான விளக்கங்களை அந்த என்ஸைக்ளோப்பீடியா கொடுத்தது. ஆனாலும் இவை “பல விதமான விளக்க கோட்பாடுகளில் ஒருசில” என்றும் அது கூறுகிறது. விளக்க கோட்பாடுகள் என்பது, “போதிய ஆதாரம் இல்லாததால் அளிக்கப்படும் தற்காலிக விளக்கத்தையே குறிக்கிறது” என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
18. யோபு 38:8-11 நம்மை என்ன முடிவுக்கு வழிநடத்துகிறது?
18 யோபு 38:8-11-ல் நாம் வாசித்த கேள்விகள் காலத்துக்கேற்றவை என்பதை அது வலியுறுத்துகிறது அல்லவா? நம் கோளத்திலுள்ள இந்த எல்லா அம்சங்களையும் நாம் திட்டமிட்டு அமைக்கவில்லை என்பது உண்மை. சாதாரணமாக கடற்கரைகளையோ நாம் வாழும் இடங்களையோ மூழ்கடிக்காத கடல் ஏற்றவற்றங்கள் சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் உருவாகும்படி சந்திரனை அந்த இடத்தில் வைத்தது நாமல்ல. அதை வைத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். வியத்தகு செயல்களைச் செய்பவரே அதை ஏற்படுத்தினார்.—சங்கீதம் 33:7; 89:9; நீதிமொழிகள் 8:29; அப்போஸ்தலர் 4:24; வெளிப்படுத்துதல் 14:7.
யெகோவாவுக்குரிய புகழ் மாலையை சூட்டுங்கள்
19. யோபு 38:12-14-லுள்ள கவிதை நடை கூற்றுகள், படைப்பின் எந்த உண்மைகளிடம் நம் கவனத்தைத் திருப்புகின்றன?
19 பூமியின் சுழற்சியைப் பற்றி குறிப்பாக யோபு 38:12-14-ல் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான புகழ் மனிதனுக்கு உரியதல்ல. இந்த சுழற்சியால்தான் விடியலில் கண்ணைக் கவரும் வண்ணக் காட்சியைக் காண முடிகிறது. சூரியன் உதிக்கையில் நம் பூமியின் அற்புதங்களை களிமண்ணில் பதிக்கப்பட்ட முத்திரையைப் போல தெளிவாக காண முடிகிறது. பூமியின் சுழற்சிக்கு சற்று கவனம் செலுத்தினால், அது அதிக வேகமாக சுழல்வதில்லை என்பதே வியத்தகு விஷயம்தான். அப்படிச் சுழன்றால் எப்பேர்ப்பட்ட அழிவை ஏற்படுத்தும் என்பது நாம் நன்கு அறிந்ததே. அதே சமயத்தில் அது மெதுவாகவும் சுழல்வதில்லை. அப்படிச் சுழன்றால், நீண்ட பகலும் இரவும் ஏற்படும்; அப்போது அதிக உஷ்ணமாகவோ, அதிக குளிராகவோ இருக்கும்; அப்படி இருந்தால், மனிதர் வாழவே முடியாது. பூமி சுழலும் வேகத்தை மனிதர் நிர்ணயிக்காமல், கடவுளே நிர்ணயித்ததற்காக உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும்.—சங்கீதம் 148:1-5.
20. யோபு 38:16, 18-ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
20 இப்போது, இன்னும் அநேக கேள்விக் கணைகளை கடவுள் உங்களிடம் தொடுப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்: “நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?” கடல் ஆய்வாளர்கூட இந்தக் கேள்விக்கு சரியாக பதில்சொல்ல முடியாது! “நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.” (யோபு 38:16, 18) பூமியின் எல்லா பாகத்திற்கும் அல்லது அதில் பெரும்பாலான இடங்களையாவது சென்று பார்த்திருக்கிறீர்களா, ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? பூமியின் அழகிய இடங்களையும் அற்புதமான தலங்களையும் ஆராய்ந்து பார்க்க எத்தனை காலம் எடுக்கும்? அத்தனை காலமும் இனிமையாகவே இருக்கும்!
21. (அ) யோபு 38:19-லுள்ள கேள்விகள் என்ன அறிவியல்பூர்வ கருத்துக்களை கவனத்துக்குக் கொண்டு வரலாம்? (ஆ) ஒளியைப் பற்றிய உண்மைகள் என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்?
21 யோபு 38:19-லுள்ள சிந்திக்க வைக்கும் கேள்விகளையும் கவனியுங்கள்: “வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?” அலை போல, அதாவது ஒரு குளத்தில் நாம் பார்க்கிற சிற்றலைகளைப் போல ஒளி அலைகள் பயணிக்கிறது என வெகுகாலமாக நம்பப்பட்டு வந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். பிறகு 1905-ல், ஆற்றல் நிறைந்துள்ள சிறு தொகுதிகளைப் போல அல்லது துகள்களைப் போல ஒளி செயல்படுவதாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கினார். அது சரியான விளக்கமா? “ஒளி ஓர் அலையா அல்லது துகளா?” என சமீபத்திய என்ஸைக்ளோப்பீடியா கேட்கிறது. அது இவ்வாறு பதிலளிக்கிறது: “சொல்லப்போனால் [ஒளி] இரண்டுமே அல்ல. ஏனென்றால் இந்த இரண்டு விளக்கங்களுமே [அதாவது, அலைகளும் துகள்களும்] முற்றிலும் வித்தியாசமானவை. ஒளியானது நிச்சயமாகவே இரண்டுமே அல்ல என்பதே சரியான பதில்.” இந்த விஷயத்தில், கடவுளின் வியத்தகு செயல்களைப் பற்றி இன்னும் முழு விளக்கமளிக்க மனிதனால் முடியவில்லை. எனினும், சூரிய ஒளியின் வெப்பம் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) நமக்கு கதகதப்பளிக்கிறது. அந்த ஒளியின் உதவியால் தாவரங்கள் ஆக்ஸிஜனையும் ருசியான உணவையும் நமக்குத் தருகின்றன. சூரிய ஒளியின் உதவியால்தான் நம்மால் வாசிக்க முடிகிறது; நமக்குப் பிரியமானவர்களின் முகத்தைப் பார்க்கவும் முடிகிறது; மாலையில் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கவும் முடிகிறது; இன்னும் இதுபோல் எத்தனை எத்தனையோ பயன்கள். இவற்றை அனுபவிக்கையில், கடவுளின் வியத்தகு செயல்களை நாம் ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?—சங்கீதம் 104:1, 2; சங்கீதம் 145:5; ஏசாயா 45:7; எரேமியா 31:35.
22. கடவுளின் வியத்தகு செயல்களுக்கு பூர்வத்தில் வாழ்ந்த தாவீது எப்படி பிரதிபலித்தார்?
22 யெகோவாவின் வியத்தகு செயல்களை நாம் தியானிப்பது பயபக்தியை ஏற்படுத்துவதற்கு மட்டும்தானா அல்லது அவை அனைத்தையும் கண்டு மலைத்துப் போவதற்கு மட்டும்தானா? நிச்சயமாகவே இல்லை. கடவுளின் செயல்கள் அனைத்தையும் தெளிவாக புரிந்துகொள்வதும் விளக்குவதும் எந்தளவுக்கு முடியாத காரியம் என்பதை பூர்வகால சங்கீதக்காரன் ஒப்புக்கொண்டார். ‘என் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்காக நீர் செய்திருக்கிற வியத்தகு செயல்கள் . . . எண்ணிறைந்தவை; . . . அவற்றை நான் எடுத்துரைக்க ஆரம்பித்தால் அவை எண்ணிக்கைக்கு அடங்கா’ என தாவீது எழுதினார். (சங்கீதம் 40:5, NW) இந்த அற்புத செயல்களைக் குறித்து பேசாதிருக்கப் போவதாக அவர் நிச்சயம் சொல்லவில்லை. சங்கீதம் 9:1-ல் (NW) “யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மை துதிப்பேன்; உம்முடைய வியத்தகு செயல்களையெல்லாம் அறிவிப்பேன்” என்று தாவீது தன் தீர்மானத்தை சொல்வதன் மூலம் இதை நிரூபித்தார்.
23. கடவுளுடைய வியத்தகு செயல்கள் உங்களை என்ன செய்ய தூண்டும், மற்றவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
23 அவரைப் போலவே நாமும் தூண்டப்பட வேண்டாமா? கடவுளின் வியத்தகு செயல்களைக் கண்டு ஆச்சரியப்படுகையில், அவரையும் அவர் செய்தவற்றையும் செய்யப் போவதையும் பற்றி பேசும்படி நாம் தூண்டப்பட வேண்டாமா? ‘தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள் அவருடைய வியத்தகு செயல்களையும் அறிவிக்க’ வேண்டும் என்பதே பதில். (சங்கீதம் 96:3-5, NW) அவரைப் பற்றி நாம் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் கடவுளின் வியத்தகு செயல்களுக்கு நம்முடைய தாழ்மையான போற்றுதலை காண்பிக்கலாம். படைப்பாளரை நம்பாத சமுதாயத்தில் அவர்கள் வளர்க்கப்பட்டிருந்தாலும் நம்முடைய நம்பிக்கையான, ஆதாரப்பூர்வமான கருத்துக்கள் கடவுள் இருப்பதை உணரும்படி அவர்களைத் தட்டியெழுப்பலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘சகலத்தையும் சிருஷ்டித்தவரை,’ வியத்தகு செயல்களைச் செய்யும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் அவரை சேவிக்கவும் அவர்களைத் தூண்டலாம்.—வெளிப்படுத்துதல் 4:11.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• யோபு 37:14-லுள்ள புத்திமதி கடவுளுடைய எந்த செயல்களை நினைப்பூட்டுகிறது?
• அறிவியலால் முழுமையாக விளக்க முடியாத என்ன சில விஷயங்கள் யோபு 37, 38-ம் அதிகாரங்களில் உள்ளன?
• கடவுளின் வியத்தகு செயல்களைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள், அது உங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?
[பக்கம் 7-ன் படம்]
சமுத்திரம் கரைபுரளாதபடி அடைத்தவர் யார்?
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் படைத்த நம் பூமியின் அழகிய இடங்கள் அனைத்திற்கும் சென்று வந்தவர் யார்?