‘மேகங்களிலே ஞானம் வைத்தவர் யார்?’
“மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.” பண்டைய பாலஸ்தீனாவில் வானிலை முன்னறிவிப்புகள் செய்யப்பட்டன என்பதற்கு இயேசுவின் இந்த வார்த்தைகளே எடுத்துக்காட்டுகள். இவற்றை எழுத்தில் வடித்தவர் சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா. (லூக்கா 12:54, 55, பொ.மொ.) குறிப்பிட்ட சில சூழலில், பூர்வீக மக்களால் அடையாளங்களை கணிக்கவும் குறுகியகால இடைவெளியில் துல்லியமாய் முன்னறிவிக்கவும் முடிந்தது.
இன்றோ, வானிலை ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன கருவிகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில: பூமியை வலம்வரும் சாட்டிலைட்ஸ், டாப்ளர் ரேடார், சக்திமிகு கம்ப்யூட்டர்கள். நீண்ட நாட்களுக்கு முன்பே வானிலையை கணிப்பதற்கு இவை உதவுகின்றன. ஆனால் அவற்றின் முன்னறிவிப்புகள் பெரும்பாலும் தவறாக இருக்கின்றன. ஏன்?
வானிலையை துல்லியமாய் கணிப்பது கடினம். இதற்கு பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, தட்பவெப்பம், ஈரப்பதம், காற்றின் அழுத்தம், வேகம், திசை ஆகியவற்றில் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்கள் காரியங்களை சிக்கலாக்குகின்றன. போதாக்குறைக்கு சூரியன், மேகங்கள், கடல் ஆகியவற்றின் சிக்கலான செயல் விளைவுகளும் இதோடு சேர்ந்துகொள்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இதனால் வானிலையை முன்னறிவிப்பது இன்னும் குளறுபடியான விஞ்ஞானமாகவே இருக்கிறது.
வானிலையை கணிப்பதில் மனிதனுடைய மட்டுப்பட்ட அறிவு யோபு கேட்ட கேள்விகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: “பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? யார் வயிற்றிலிருந்து பனிக்கட்டி வந்தது? . . . உன் குரல் மேகபரியந்தம் உயர்த்தி மிகுமழை உன்மேல் பொழியச்செய்வாயோ? . . . மேகங்களிலே ஞானம் நுழைத்தவர் யார்? விண்வீழ்கொள்ளிக்கு விவேகம் அளித்தவர் யார்? மேகங்களை எண்ணுதற்கு ஞானமுடையவன் யார்? விண்துருத்திகளை வார்த்து நீர்பொழியச் செய்பவன் யார்?”—யோபு 38:28-37, தி.மொ.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்: ‘மனிதனல்ல, யெகோவா தேவனே.’ ஆம், மனிதர்கள் எவ்வளவுதான் ஞானிகளாக தோன்றினாலும்சரி, நம் படைப்பாளருடைய ஞானம் மிக, மிக உயர்ந்தது. நம்முடைய வாழ்க்கைப் பாதையை சுடர்வீச செய்வதற்காக அவருடைய ஞானத்தை நமக்காக பைபிளில் பதிவுசெய்து வைத்தது உண்மையிலேயே அவருடைய அன்பின் செயல்.—நீதிமொழிகள் 5:1, 2.