யோபுவின் வெகுமதி—நம்பிக்கையின் ஆதாரம்
“[யெகோவா, NW] யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.”—யோபு 42:12.
1. சோதனைகள் தம்முடைய மக்களை மிகவும் பலவீனராக்கிவிட்டாலும்கூட, யெகோவா அவர்களுக்கு என்ன செய்கிறார்?
யெகோவா ‘தம்மை ஊக்கமாக தேடுகிறவர்களுக்கு பலனளிக்கிறவராக இருக்கிறார்.’ (எபிரெயர் 11:6) சோதனைகள் அவர்களை மடிந்தவர்கள் போன்று அத்தனை பலவீனராக்கிவிட்டாலும்கூட தம்முடைய பக்தியுள்ள மக்கள் தைரியமாக சாட்சிகொடுப்பதற்கு அவர்களை உந்துவிக்கவும் செய்கிறார். (யோபு 26:5; வெளிப்படுத்துதல் 11:3, 7, 11) துன்பமனுபவித்துக்கொண்டிருந்த யோபுவின் விஷயத்தில் அது உண்மையாக இருந்தது. மூன்று பொய் தேற்றரவாளர்கள் அவதூறாகப் பேசியபோதிலும், மனுஷருக்குப் பயப்படும் பயத்தால் அவர் மெளனமாகிவிடவில்லை. மாறாக, அவர் தைரியமான ஒரு சாட்சியைக் கொடுத்தார்.
2. யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தலையும் கஷ்டத்தையும் அனுபவித்த போதிலும், அவர்கள் எவ்விதமாக தங்களுடைய சோதனைகளிலிருந்து வெளிவந்திருக்கிறார்கள்?
2 யெகோவாவின் இந்நாளைய சாட்சிகளில் அநேகர் அத்தனை பெரும் துன்புறுத்தலையும் கஷ்டத்தையும் அனுபவித்தக் காரணத்தால் அவர்கள் மரணத்துக்குச் சமீபமாயிருந்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:23) என்றபோதிலும், யோபுவைப் போலவே அவர்கள் கடவுளுக்கு அன்பைக் காண்பித்து நீதியை நடப்பித்திருக்கிறார்கள். (எசேக்கியேல் 14:14, 20) யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற திடதீர்மானத்தோடும், தைரியமாக சாட்சிகொடுக்க பலப்படுத்தப்பட்டும், உண்மையான நம்பிக்கையால் நிரப்பப்பட்டவர்களாயும்கூட அவர்கள் தங்கள் சோதனைகளிலிருந்து வெளி வந்திருக்கிறார்கள்.
யோபு தைரியமான ஒரு சாட்சியைக் கொடுக்கிறார்
3. யோபு தன்னுடைய கடைசி பேச்சில் என்ன வகையான சாட்சியைக் கொடுத்தார்?
3 தன்னுடைய கடைசி பேச்சில் யோபு முன்னர் கொடுத்ததையும்விட அதிகமான சாட்சியைக் கொடுத்தார். தன்னுடைய பொய் தேற்றரவாளர்களை அவர் முழுவதுமாக வாயடைக்கச் செய்துவிட்டார். குத்தலோடு கேலியாக அவர் பின்வருமாறு சொன்னார்: “திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்?” (யோபு 26:2) தம்முடைய வல்லமையினால் நம்முடைய பூமி கோளத்தை ஆகாயத்திலே அந்தரத்தில் தொங்கவைத்து, பூமிக்கு மேல் தண்ணீரைச் சுமந்துவரும் மேகங்களைக் கட்டிவைத்திருக்கும் யெகோவாவை யோபு உயர்வாக புகழ்ந்துபேசினார். (யோபு 26:7-9) இருந்தபோதிலும், இப்படிப்பட்ட அதிசயங்கள் ‘யெகோவாவின் வழிகளில் கடைகோடியானவைகளே’ என்பதாக யோபு சொன்னார்.—யோபு 26:14.
4. உத்தமத்தைக் குறித்து யோபு என்ன சொன்னார், ஏன் அவர் அவ்விதமாக தன்னைப்பற்றி சொல்லமுடிந்தது?
4 யோபு தான் களங்கமற்றவர் என்பதைக் குறித்து உறுதியுள்ளவராக, “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்,” என்பதாக அறிவித்தார். (யோபு 27:5) அவருக்கு எதிராக எறியப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்மாறாக, அவருக்கு நேரிட்டதற்கு தகுதியாக அவர் எதையும் செய்திருக்கவில்லை. யெகோவா விசுவாசத்துரோகிகளின் ஜெபங்களைக் கேட்பதில்லை, ஆனால் உத்தமத்தைக் காப்பவர்களுக்கு பலனளிப்பார் என்பதை யோபு அறிந்திருந்தார். வெகு சீக்கிரத்தில் அர்மகெதோன் புயல்காற்று பொல்லாதவர்களை அவர்களுடைய அதிகார ஸ்தானங்களிலிருந்து அகற்றிவிடும், கடவுளுடைய கண்டிப்பான கரங்களிலிருந்து அவர்கள் தப்பமுடியாது என்பதை இது நமக்கு நினைப்பூட்டக்கூடும். அது வரையாக யெகோவாவின் மக்கள் தங்கள் உத்தமத்திலே நடந்துகொண்டிருப்பார்கள்.—யோபு 27:11-23.
5. மெய்யான ஞானத்தை யோபு எவ்வாறு வரையறுக்கிறார்?
5 மனிதன் பொன்னையும் வெள்ளியையும் பூமியிலும் கடலிலுமுள்ள மற்ற பொக்கிஷங்களையும் கண்டுபிடிக்க தன் திறமைகளைப் பயன்படுத்தியிருப்பதை யோபு காண்பிக்கையில் உலகப்பிரகாரமான அறிவுடையவர்களாயிருந்த அந்த மூவரும் கவனித்துக்கேட்பதை சற்று கற்பனைச் செய்துபாருங்கள். ஆனால் “முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது,” என்பதாக அவர் சொன்னார். (யோபு 28:18) யோபுவின் பொய் தேற்றரவாளர்கள் மெய்யான ஞானத்தை விலைகொடுத்து வாங்கமுடியாது. அதன் ஊற்றுமூலர் காற்று, மழை, மின்னல் மற்றும் இடியோசையின் படைப்பாளர். ஆம், பயபக்தியோடு “ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.”—யோபு 28:28.
6. யோபு ஏன் தன்னுடைய முற்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினார்?
6 தன்னுடைய துன்பங்களின் மத்தியிலும், யோபு யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்திவிடவில்லை. மகா உன்னதமானவரிடமிருந்து விலகிவிடுவதற்குப் பதிலாக, உத்தமமான இந்த மனிதன் முன்னர் தான் ‘கடவுளோடு கொண்டிருந்த நெருக்கத்துக்காகவே’ ஏங்கினார். (யோபு 29:4) யோபு தான் எவ்வாறு ‘ஏழையை விடுவித்து, தன்னை நீதியினால் உடுத்துவித்து, தரித்திரனுக்கு உண்மையான ஒரு தகப்பனாக’ இருந்தார் என்பதை விவரித்தபோது அவர் தற்பெருமை அடித்துக்கொண்டில்லை. (யோபு 29:12-16) மாறாக, கடவுளுடைய உண்மையுள்ள ஓர் ஊழியனாக, தன்னுடைய வாழ்க்கையின் உண்மைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒரு நேர்த்தியான பதிவை நீங்கள் உண்டுபண்ணியிருக்கிறீர்களா? நிச்சயமாகவே, யோபு மூன்று நன்னோக்க வஞ்சகர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாக இருப்பதையும்கூட வெளிப்படுத்தினார்.
7. யோபு என்ன வகையான ஆளாக இருந்திருக்கிறார்?
7 யோபு ‘தன் மந்தையைக் காக்கும் நாய்களோடுகூட வைத்திருக்கக்கூடாத பிதாக்களின்’ இளம் பிள்ளைகள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். அவரை அருவருத்து அவர்மீது துப்பினார்கள். அவர் மிக மோசமாக நோயுற்றிருந்தபோதிலும் அவருக்கு எந்தக் கரிசனையும் காட்டவில்லை. (யோபு 30:1, 10, 30) என்றபோதிலும், அவர் யெகோவாவுக்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தபடியால், அவருக்குச் சுத்தமான மனச்சாட்சி இருந்தது, அவரால் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.” (யோபு 31:6) யோபு விபசாரக்காரராக அல்லது ஒரு சூழ்ச்சியாளராக இருக்கவில்லை, ஏழ்மையிலிருந்தவர்களுக்கு உதவிசெய்ய அவர் தவறிவிடவில்லை. அவர் செல்வந்தராக இருந்தபோதிலும், ஒருபோதும் பொருள் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. மேலுமாக, யோபு சந்திரன் போன்ற உயிரற்ற பொருட்களுக்குப் பக்தியைக் கொடுப்பதன் மூலம் விக்கிரகாராதனையில் ஈடுபடவுமில்லை. (யோபு 31:26-28) கடவுளில் நம்பிக்கை வைத்தவராக, உத்தமத்தைக் காப்பதில் நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார். அவருடைய எல்லா துன்பங்களின் மத்தியிலும் பொய் தேற்றரவாளர்கள் முன்னிலையிலும், யோபு திறமையாக குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னிலை விளக்கமளித்து மிகச்சிறந்த ஒரு சாட்சியைக் கொடுத்தார். அவர் பேசி முடித்தப் பின்பு, கடவுளை தன்னுடைய நியாயாதிபதியாகவும் பலனளிப்பவராகவும் நோக்கியிருந்தார்.—யோபு 31:35-40.
எலிகூ பேசுகிறார்
8. எலிகூ யார், அவர் எவ்விதமாக மரியாதையையும் தைரியத்தையும் காட்டினார்?
8 நாகோரின் குமாரனாகிய பூஸின் வம்சத்தில் வந்தவரும், இவ்விதமாக யெகோவாவின் சிநேகிதனாகிய ஆபிரகாமின் தூர உறவினராகவும் இருந்த இளம் மனிதன் எலிகூ அருகே இருந்தார். (ஏசாயா 41:8) எலிகூ விவாதத்தின் இரண்டு பக்கத்துக்கும் செவிசாய்ப்பதன் மூலம் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதைக் காட்டினார். இருந்தபோதிலும், அவர்கள் தவறாகச் சொன்ன காரியங்களைக் குறித்து அவர் தைரியமாக பேசினார். உதாரணமாக, யோபு “தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானக்கி”னபோது அவருக்குக் கோபம் மூண்டது. விசேஷமாக எலிகூவின் சீற்றம் பொய் தேற்றரவாளர்களுக்கு எதிராக இருந்தது. அவர்களுடைய கூற்றுகள் கடவுளை மேன்மைப்படுத்துவது போல தோன்றின, ஆனால் விவாதத்தில் சாத்தானுடைய பக்கத்தை ஆதரிப்பதன் மூலம் உண்மையில் அவரை நிந்திப்பதாக இருந்தன. ‘வார்த்தைகள் நிறைந்தவனாகவும்’ பரிசுத்த ஆவியினால் உந்துவிக்கப்பட்டும், எலிகூ யெகோவாவின் பாரபட்சமற்ற ஒரு சாட்சியாக இருந்தார்.—யோபு 32:2, 18, 21.
9. யோபு மீண்டும் உடல் நலம் பெறவிருப்பதை எலிகூ எவ்விதமாக சுட்டிக்காட்டினார்?
9 யோபு கடவுளுடைய நேர்மையைக் காட்டிலும் தன்னுடைய நேர்மையை மெய்ப்பித்துக்காட்டுவதைக் குறித்தே அதிக அக்கறையுள்ளவராக ஆகியிருந்தார். உண்மையில் அவர் கடவுளோடு வாதாடிக் கொண்டிருந்தார். என்றபோதிலும், யோபுவின் மரணம் நெருங்கி வந்த சமயத்தில், அவர் மீண்டும் உடல்நலம் பெறவிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. எவ்விதமாக? ஆம், யெகோவா பின்வரும் இந்தச் செய்தியோடு யோபுவின்மீது தயவு காண்பிப்பதாக சொல்வதற்கு எலிகூ தூண்டப்பட்டார்: ‘அவன் படுகுழியில் இறங்காதிருப்பானாக! மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன்! அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையட்டும்; தன் வாலவயது நாட்களுக்கு அவன் திரும்புவானாக.’—யோபு 33:24, 25.
10. யோபு எந்த அளவுக்குச் சோதிக்கப்படவிருந்தார், ஆனால் 1 கொரிந்தியர் 10:13-ஐ முன்னிட்டுப் பார்க்கையில், நாம் எதைக்குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
10 உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் கடவுள் மேல் பிரியம் வைப்பதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என்பதாக யோபு சொன்னதற்காக எலிகூ அவரைத் திருத்துகிறார். எலிகூ சொன்னார்: ‘அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. மனுஷனுடைய நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.’ யோபு தன்னுடைய சொந்த நீதியை வலியுறுத்துவதில் துணிந்திறங்கினார், ஆனால் போதிய அறிவும் உட்பார்வையும் இல்லாமல் அதைச் செய்தார். எலிகூ மேலுமாகச் சொன்னதாவது: “அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்பட”ட்டும். (யோபு 34:10, 11, 35, 36) அதேவிதமாகவே, ஏதாவது ஒரு வகையில் நாம் ‘முற்றும்முடிய’ சோதிக்கப்பட்டால் மாத்திரமே நம்முடைய விசுவாசத்தையும் உத்தமத்தையும்கூட முழுமையாக நிரூபிக்கமுடியும். என்றாலும் நம்முடைய அன்புள்ள பரலோக தந்தை நாம் தாங்கிக்கொள்வதற்கும் மேலாக சோதிக்கப்பட அனுமதிக்கமாட்டார்.—1 கொரிந்தியர் 10:13.
11. கடுமையாகச் சோதிக்கப்படுகையில், நாம் எதை நினைவில் கொள்ளவேண்டும்?
11 எலிகூ தொடர்ந்து பேசியபோது, யோபு தன்னுடைய சொந்த நீதியை அளவுக்கு அதிகமாக வலியுறுத்துவதை அவருக்கு மீண்டும் காண்பித்தார். கவனம் நம்முடைய மகத்தான படைப்பாளர்மீது ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். (யோபு 35:2, 6, 10) கடவுள் “துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்,” என்று எலிகூ சொன்னார். (யோபு 36:6) கடவுளுடைய வழியின் நியாயத்தை எவரும் விசாரித்து, அவர் அநீதியாக இருந்தார் என்று சொல்லமுடியாது. நாம் அறியமுடிகிறதைவிட அவர் அதிக உயர்ந்தவராய் இருக்கிறார், அவருடைய வருஷங்களின் இலக்கத்தை ஆராய்ந்து முடியாது. (யோபு 36:22-26) நாம் கடுமையாக சோதிக்கப்படுகையில், என்றும் ஜீவித்திருக்கிற நம்முடைய கடவுள் நீதியுள்ளவர் என்பதையும் அவருக்கு துதியைக் கொண்டுவரும் நம்முடைய உண்மையுள்ள நடவடிக்கைகளுக்காக அவர் நமக்குப் பலனளிப்பார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
12. பொல்லாதவர்கள் மீது கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதைக் குறித்து, எலிகூவின் முடிவான சொற்கள் என்ன காண்பிக்கின்றன?
12 எலிகூ பேசுகையில் ஒரு புயல்காற்று உருவாகிக்கொண்டிருந்தது. அது நெருங்கிவந்தபோது எலிகூவின் இருதயம் தத்தளித்து நடுங்க ஆரம்பித்தது. யெகோவா செய்திருக்கும் பெரிய காரியங்களைப் பற்றி பேசி அவர் சொன்னார்: “யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.” யோபை போல, நாமும் கடவுளுடைய ஆச்சரியமான கிரியைகளையும் பயத்தைத் தோற்றுவிக்கும் பெருந்தன்மையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். “சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது,” என்று எலிகூ சொன்னார். “அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்.” (யோபு 37:1, 14, 23, 24) கடவுள் சீக்கிரத்தில் பொல்லாதவர்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில், அவர் நியாயத்தையும் நீதியையும் ஒடுக்காமல் தமக்குப் பயப்படுகிற தம்முடைய பயபக்தியுள்ள வணக்கத்தாரைப் பாதுகாப்பார் என்பதை எலிகூவின் முடிவான சொற்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. யெகோவாவை சர்வலோக பேரரசராக ஏற்றுக்கொள்ளும் இப்படிப்பட்ட உத்தமத்தைக் காப்பவர்கள் மத்தியில் இருப்பது என்னே ஒரு சிலாக்கியம்! யோபுவைப் போல சகித்திருங்கள், இந்த மகிழ்ச்சியான கூட்டத்தின் மத்தியில் உங்களுடைய ஆசீர்வாதமான இடத்திலிருந்து உங்களை பிரித்துவிட பிசாசுக்கு இடங்கொடாதிருங்கள்.
யெகோவா யோபுவுக்கு பதிலளிக்கிறார்
13, 14. (அ) யெகோவா யோபுவிடம் எதைக்குறித்து கேள்விகேட்க ஆரம்பித்தார்? (ஆ) யோபுவிடம் கடவுள் கேட்ட மற்ற கேள்விகளிலிருந்து என்ன குறிப்புகளைக் கற்றுக்கொள்ள முடியும்?
13 பெருங்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம் பேசியபோது யோபு எவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்கவேண்டும்! வீடு இடிந்துவிழுந்து யோபுவின் பிள்ளைகளைக் கொலைசெய்வதற்கு சாத்தான் பயன்படுத்திய பெருங்காற்றைப் போல் இல்லாமல் அந்தப் புயல்காற்று கடவுளுடைய செயலாக இருந்தது. கடவுள் இவ்வாறு சொன்னபோது யோபு மெளனமாகிவிட்டார்: ‘நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தபோது அதன் ஆதாரங்களைப் போட்டது யார்?’ (யோபு 38:4, 6, 7) யெகோவா ஒன்றன்பின் ஒன்றாக சமுத்திரம், அதன் மேக வஸ்திரம், விடியற்காலம், மரணவாசல்கள், வெளிச்சமும் இருளும், நட்சத்திரக்கூட்டங்கள் பற்றியெல்லாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். “வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?” என்று கேட்கப்பட்டபோது யோபுவால் எதையும் சொல்லமுடியவில்லை.—யோபு 38:33.
14 மனுஷனைப் படைத்து மீன்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் போன்றவற்றை ஆண்டுகொள்ளும்படி சொல்வதற்கு முன்னால் கடவுள் இவற்றை—மனிதனுடைய உதவி அல்லது ஆலோசனை இல்லாமலே—பராமரித்து வந்தார் என்பதை மற்ற கேள்விகள் சுட்டிக்காண்பித்தன. யெகோவாவின் கூடுதலான கேள்விகள் காட்டு எருமை, நெருப்புக் கோழி மற்றும் குதிரை போன்ற உயிரினங்களைப் பற்றியதாய் இருந்தன. யோபு இவ்விதமாக கேட்கப்பட்டார்: “உன் கட்டளையால்தான் கழுகு மேலே பறந்துசென்று உயரமான இடத்தில் தன் கூட்டைக் கட்டுகிறதோ?” (யோபு 39:27, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) நிச்சயமாக இல்லை! கடவுள் யோபுவிடம் பின்வருமாறு கேட்டபோது அவருடைய பிரதிபலிப்பைக் கற்பனைச் செய்துபாருங்கள்: “சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்?” யோபு இவ்விதமாக பதிலளித்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.” (யோபு 40:2, 4) யெகோவா எப்பொழுதும் சரியாகவே இருப்பதால், நாம் எப்போதாவது அவருக்கு எதிராக குறைகூற தூண்டப்படுவோமானால், நாம் ‘நம்முடைய கையினால் நம்முடைய வாயைப் பொத்திக்கொள்ள வேண்டும்.’ படைப்பில் காணப்படுகிறபடி அவருடைய மேம்பட்ட நிலையையும் பெருந்தன்மையையும், பெலத்தையும்கூட கடவுளுடைய கேள்விகள் உயர்த்திக்காண்பித்தன.
பிகெமோத்தும் லிவியாதானும்
15. பிகெமோத் பொதுவாக என்ன விலங்காகக் கருதப்படுகிறது, அதன் சிறப்பியல்புகளில் சில யாவை?
15 அடுத்து யெகோவா பொதுவாக நீர்யானை என்பதாக கருதப்படும் பிகெமோத்தைப் பற்றி குறிப்பிட்டார். (யோபு 40:15-24) அதனுடைய பிரமாண்டமான பருமன், மிகுதியான எடை, மற்றும் முரட்டுத் தோலுக்காக குறிப்பிடத்தக்கதாய் இருக்கும் இந்தச் சாக பட்சினி ‘புல்லைத் தின்கிறது.’ அதனுடைய பெலனும் ஆற்றலும் அதனுடைய இடுப்பிலும் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. அதனுடைய கால்களின் எலும்புகள் “வெண்கலத்தைப்” போல பலமுள்ளதாக இருக்கின்றன. பிகெமோத் அதிவேகமாக ஓடும் நீரோட்டத்தைப் பார்த்துப் பயப்படுவது கிடையாது, ஆனால் நீரோட்டத்தில் எதிர் திசையில் எளிதாக நீந்திச்சென்றுவிடுகிறது.
16. (அ) லிவியாதானைப் பற்றிய வருணனை எந்த உயிரினத்துக்குப் பொருந்துகிறது, அதைப் பற்றிய சில உண்மைகள் யாவை? (ஆ) பிகெமோத் மற்றும் லிவியாதானின் வலிமை, யெகோவாவின் சேவையில் நமக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதைக் குறித்து மறைமுகமாக எதைத் தெரிவிக்கிறது?
16 யோபுவை கடவுள் இவ்வாறும்கூட கேட்டார்: “லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?” லிவியாதானைப் பற்றிய வருணனை முதலைக்குப் பொருத்தமாக இருக்கிறது. (யோபு 41:1-34) அது எவருடனும் சமாதான உடன்படிக்கை பண்ணாது, ஊரும் இந்தப் பிராணியை எழுப்புவதற்கு எந்த மனித ஞானிக்கும் அத்தனை துணிச்சல் கிடையாது. அம்புகள் அதைத் துரத்திவிடாது, அது “ஈட்டியின் அசைவை இகழும்.” சீற்றங்கொண்ட லிவியாதான் ஆழங்களைத் தைலமுள்ள உலைப்பானையைப் போல பொங்கப்பண்ணும். லிவியாதானும் பிகெமோத்தும் யோபுவைவிட மிக அதிக வலிமையானவை என்ற உண்மை அவரைத் தாழ்த்துவதற்கு அவருக்கு உதவிசெய்தது. நாமும்கூட, நம்மில் நாமே வல்லமையுள்ளவர்களாக இல்லை என்பதை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்ளவேண்டும். சர்ப்பமாகிய சாத்தானின் பிடியிலிருந்து தப்பி யெகோவாவின் சேவையில் நமக்கு நியமிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கு நமக்கு கடவுள் கொடுக்கும் ஞானமும் பலமும் தேவையாக இருக்கிறது.—பிலிப்பியர் 4:13; வெளிப்படுத்துதல் 12:9.
17. (அ) யோபு எவ்விதமாக ‘கடவுளைப் பார்த்தார்?’ (ஆ) யோபுவால் பதிலளிக்க முடியாத கேள்விகளால் என்ன நிரூபிக்கப்பட்டது, இது நமக்கு எவ்வாறு உதவக்கூடும்?
17 முழுமையாக தாழ்த்தப்பட்டவராக, யோபு தன்னுடைய தவறான நோக்குநிலையை ஏற்றுக்கொண்டு அறிவில்லாமல் தான் பேசியதை ஒப்புக்கொள்கிறார். என்றபோதிலும், தான் “அவரைப் பார்ப்பேன்” என்பதாக விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். (யோபு 19:25-27) எந்த மனிதனும் யெகோவாவைப் பார்த்து தொடர்ந்து உயிர் வாழ முடியாதென்பதால் அது எவ்வாறு நடக்கும்? (யாத்திராகமம் 33:20) உண்மையில், யோபு தெய்வீக வல்லமையின் வெளிக்காட்டலை பார்த்தார், கடவுளுடைய வார்த்தையைக் கேட்டார், யெகோவாவைப் பற்றிய உண்மையைக் காண தன்னுடைய புரிந்துகொள்ளுதலின் கண்களைத் திறந்து வைத்திருந்தார். ஆகவே யோபு ‘தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாப்பட்டார்.’ (யோபு 42:1-6) அவரால் பதிலளிக்க முடியாத அநேக கேள்விகள், கடவுளுடைய ஈடற்ற நிலையை நிரூபித்து மனிதன், யோபுவைப் போல கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மனிதனும்கூட, எத்தனை அற்பமானவன் என்பதைக் காட்டியது. இது, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்கும், அவருடைய அரசாட்சி சரியென நிரூபிக்கப்படுவதற்கும் மேலாக நம்முடைய சொந்த அக்கறைகள் அதிக முக்கியமானவையாக கருதப்படக்கூடாது என்பதைக் காண உதவிசெய்கிறது. (மத்தேயு 6:9, 10) நம்முடைய முக்கிய அக்கறை, யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வதும் அவருடைய பெயரைக் கனப்படுத்துவதுமாக இருக்கவேண்டும்.
18. யோபுவின் பொய் தேற்றரவாளர்கள் என்ன செய்வது அவசியமாயிருந்தது?
18 ஆனால் சுய நீதியுள்ள பொய் தேற்றரவாளர்களைப் பற்றி என்ன? எலிப்பாஸ், பில்தாது மற்றும் சோப்பார் யோபு செய்தது போல தம்மைக் குறித்த உண்மைகளைப் பேசாதிருந்ததற்காக சரியாகவே யெகோவா அவர்களைக் கொன்றிருக்கலாம். “நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போ”ங்கள் என்று கடவுள் சொன்னார். “உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்.” அந்த மூவரும் இதற்கு சம்மதிக்க தங்களைத்தாங்களே தாழ்த்த வேண்டும். உத்தமத்தைக் கடைப்பிடித்த யோபு அவர்களுக்காக வேண்டுதல் செய்யவேண்டும், யெகோவா அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். (யோபு 42:7-9) ஆனால் கடவுளைத் தூஷித்து ஜீவனை விடும்படியாக யோபுவைத் துரிதப்படுத்திய அவருடைய மனைவியைப் பற்றி என்ன? கடவுளுடைய இரக்கத்தால் அவள் யோபுவோடு ஒப்புரவானதாக தோன்றுகிறது.
வாக்களிக்கப்பட்ட வெகுமதி நமக்கு நம்பிக்கையளிக்கிறது
19. யோபுவின் சம்பந்தமாக யெகோவா எவ்விதமாக பிசாசைவிட தாம் உயர்ந்தவராய் இருப்பதைக் காண்பித்தார்?
19 யோபு தன்னுடைய வேதனைகளைக் குறித்து கவலைப்படுவதை நிறுத்தி கடவுளுடைய சேவையில் மறுபடியுமாக புத்துயிர் பெற்றபோது, யெகோவா காரியங்களை அவருக்கு மாற்றிவிட்டார். யோபு அந்த மூவருக்காக வேண்டுதல் செய்தபின்பு, கடவுள் ‘அவர் சிறையிருப்பை மாற்றினார், அவருக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய் தந்தருளினார்.’ சாத்தானுடைய நோய் உண்டுபண்ணும் பலத்தைக் கட்டுப்படுத்தி, அற்புதமாக யோபுவை சுகப்படுத்துவதன் மூலம் பிசாசைவிட தாம் உயர்ந்தவராய் இருப்பதைக் காண்பித்தார். யோபுவைச் சுற்றி தேவதூதர்களைப் பாளயமிறங்கச் செய்து மறுபடியுமாக வேலியடைப்பதன் மூலம் கடவுள் பேய்களின் சேனையைத் துரத்தி அடக்கிவிட்டார்.—யோபு 42:10; சங்கீதம் 34:7.
20. என்ன விதங்களில் யெகோவா யோபுவுக்கு வெகுமதியளித்து ஆசீர்வதித்தார்?
20 யோபுவின் சகோதரரும் சகோதரிகளும் முன் அவருக்கு அறிமுகமான அனைவரும் அவரிடத்தில் வந்து, அவர் வீட்டிலே அவரோடு போஜனம்பண்ணி, யெகோவா அவர் மீது வருவதற்கு அனுமதித்திருந்த தீங்கினிமித்தம் அவருக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கவும் ஆறுதல் சொல்லவும் வந்தார்கள். ஒவ்வொருவரும் அவருக்குப் பணத்தையும் ஒரு பொன் மோதிரத்தையும் கொடுத்தார்கள். யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவர் பின்னிலைமையை ஆசீர்வதித்தார், ஆகவே அவர் 14,000 ஆடுகளையும், 6,000 ஒட்டகங்களையும், 1,000 ஏர்களையும், 1,000 கழுதைகளையும் உடையவரானார். யோபு முன்னிருந்த அதே எண்ணிக்கையான ஏழு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும்கூட உடையவரானார். அவருடைய குமாரத்திகள்—எமீமாள், கெத்சீயாள், கேரேனாப்புக்—தேசத்திலேயே மிகவும் அழகான பெண்களாக இருந்தார்கள், யோபு அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தார். (யோபு 42:11-15) மேலுமாக, யோபு இதற்குப்பின்பு 140 வருடங்கள் உயிரோடிருந்து தன்னுடைய நாலு தலைமுறை பிள்ளைகளைப் பார்த்தார். பதிவு இவ்வாறு முடிகிறது: “யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.” (யோபு 42:16, 17) அவருடைய வாழ்நாள் நீடிக்கப்பட்டது யெகோவா தேவனின் அற்புதமான செயலாக இருந்தது.
21. யோபுவைப் பற்றிய வேதப்பூர்வமானப் பதிவினால் நாம் எவ்வாறு உதவப்படுகிறோம், நாம் என்ன செய்ய தீர்மானித்தவர்களாக இருக்கவேண்டும்?
21 யோபுவைப் பற்றிய வேதப்பூர்வமான பதிவு, சாத்தானுடைய உபாயங்களைப் பற்றி நம்மை அதிக உணர்வுள்ளவர்களாகச் செய்து, சர்வலோக அரசாட்சி எவ்விதமாக மனிதரின் உத்தமத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைக் காண நமக்கு உதவிசெய்கிறது. யோபுவைப் போலவே, கடவுளை நேசிக்கும் அனைவரும் சோதிக்கப்படுவர். ஆனால் யோபு செய்ததைப் போல நாம் சகித்திருக்க முடியும். அவர் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் தன்னுடைய சோதனைகளிலிருந்து வெளிவந்தார், அவருடைய வெகுமதிகள் பலவாக இருந்தன. கடவுளுடைய ஊழியர்களாக இன்று, நமக்கு உண்மையான விசுவாசமும் நம்பிக்கையும் இருக்கிறது. தலைசிறந்த வெகுமதியளிப்பவர் என்னே மகத்தான நம்பிக்கையை நம் ஒவ்வொருவருக்கு முன்னும் வைத்திருக்கிறார்! அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோக வெகுமதியை மனதில் வைப்பது பூமியில் மீதமுள்ள தங்களுடைய வாழ்நாளில் கடவுளை உண்மையோடு சேவிப்பதற்கு உதவிசெய்யும். பூமிக்குரிய எதிர்பார்ப்புகளை உடைய அநேகர் ஒருபோதும் மரிக்கமாட்டார்கள், ஆனால் மரிப்பவர்கள் யோபுவோடுகூட பூமியின் மீது பரதீஸில் ஓர் உயிர்த்தெழுதலின் மூலமாக வெகுமதியளிக்கப்படுவர். இப்படிப்பட்ட உண்மையான நம்பிக்கையை இருதயத்திலும் மனதிலும் கொண்டவர்களாக, உத்தமத்தைக் காப்பவர்களாகவும் அவருடைய சர்வேலாக அரசாட்சியின் தீவிர ஆதரவாளர்களாகவும் யெகோவாவின் பக்கத்தில் உறுதியாக நிலைநிற்கை எடுப்பதன் மூலம் கடவுளை நேசிக்கும் அனைவரும் சாத்தானைப் பொய்யனாக நிரூபிப்பார்களாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யோபு அவருடைய கடைசி பதிலில் தன்னுடைய பொய் தேற்றரவாளர்களுக்கு சொன்ன சில குறிப்புகள் யாவை?
◻ எலிகூ எவ்விதமாக யெகோவாவுக்குப் பாரபட்சமற்ற ஒரு சாட்சியாக நிரூபித்தார்?
◻ யோபுவிடம் கடவுள் கேட்ட சில கேள்விகள் யாவை, அவை என்ன பாதிப்புடையவையாக இருந்தன?
◻ யோபுவைப் பற்றிய வேதப்பூர்வமான பதிவிலிருந்து நீங்கள் எவ்விதமாக பயனடைந்திருக்கிறீர்கள்?
[பக்கம் 18-ன் படங்கள்]
பிகெமோத் மற்றும் லிவியாதானைப் பற்றிய யெகோவாவின் கூற்றுகள் யோபு தன்னைத் தாழ்த்திக்கொள்ள உதவின