சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்த்திடுங்கள்
‘உங்கள் கடவுளை நம்பி மோசம் போகாதீர்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ய மாட்டார். சரணடைந்துவிடுங்கள், இல்லாவிட்டால் விபரீதமான விளைவுகளைச் சந்திப்பீர்கள்!’ அசீரிய ராஜாவான சனகெரிப்பின் தூதுவர் ரப்சாக்கே எருசலேம் மக்களிடம் சொன்ன செய்தியின் சாராம்சம் இதுவே. அந்த ராஜாவின் படைகள் யூதா தேசத்தை நோக்கிப் படையெடுத்து வந்திருந்தன. அந்தச் சமயத்தில், எருசலேம் மக்களின் மனவுறுதியைக் குலைத்துப் போடுவதற்காகவும் அவர்களைப் பயமுறுத்தி சரணடைய வைப்பதற்காகவும் ரப்சாக்கே அப்படிச் சொன்னான்.—2 இரா. 18:28-35.
அசீரியர்கள் மிருகத்தனத்திற்கும் கொடூர குணத்திற்கும் பேர்போனவர்கள். தங்களுடைய கைதிகளைக் குரூரமாக நடத்தினார்கள்; அதைப் பற்றிய திகிலூட்டும் விவரங்களைப் பரப்புவதன் மூலம் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தார்கள். “பொய்ப் பிரச்சாரம் செய்வதும் மக்களைப் பயமுறுத்துவதும் அவர்களுடைய கொள்கையாக இருந்தது; சிறைப்படுத்தியவர்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே அப்படிச் செய்தார்கள்; ஆட்களை எப்படியெல்லாம் கொடூரமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை விவரிப்பதன் மூலம் தாங்கள் கைப்பற்றவிருந்த மக்களுடைய மனதில் கிலியை ஏற்படுத்தி அவர்களை நடுநடுங்க வைத்தார்கள்” என்று சரித்திராசிரியர் பிலிப் டேலர் குறிப்பிடுகிறார். பொய்ப் பிரச்சாரம் ஒரு வலிமையான ஆயுதம். அது “மனதையே உலுக்கிவிடும்” என்றும் டேலர் குறிப்பிடுகிறார்.
உண்மைக் கிறிஸ்தவர்கள், “மனிதர்களோடு அல்ல, நிர்வாகங்களோடும், . . . பொல்லாத தூதர் கூட்டத்தோடும் மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது.” (எபே. 6:12) இந்தத் தூதர்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். இவர்களின் தலைவனே பிசாசாகிய சாத்தான். அவனும்கூட பயமுறுத்தலையும் பொய்ப் பிரச்சாரத்தையும் கடவுளுடைய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறான்.
நம் ஒவ்வொருவருடைய உத்தமத்தையும் முறித்துப்போட தன்னால் முடியும் என அவன் சவால்விட்டிருக்கிறான். மனுஷன், ‘தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுத்துவிடுவான்’ என்று யோபுவின் காலத்தில் யெகோவாவிடம் சொன்னான். வேறு வார்த்தைகளில், கஷ்டங்களுக்குமேல் கஷ்டம் கொடுத்தால் நாளடைவில் மனிதன் தன் உத்தமத்தை விட்டுவிடுவான் என்று சொன்னான். (யோபு 2:4) சாத்தான் சொன்னது சரியா? ஓர் அளவுக்கு மேல் கஷ்டம் வந்தால் நாம் உத்தமத்தை விட்டுவிடுவோமா? விட்டுவிடுவோமென நாம் நினைக்க வேண்டுமென்றே சாத்தான் விரும்புகிறான். அதனால், அந்த எண்ணத்தை நம் மனதில் விதைப்பதற்காக அவன் நயவஞ்சகமான பிரச்சாரத்தைப் பயன்படுத்துகிறான். அவன் உபயோகிக்கிற சில வழிகளையும், அவனை நாம் எப்படி எதிர்க்கலாம் என்பதையும் சிந்திக்கலாம்.
‘புழுதியில் அஸ்திவாரம் போடப்பட்டவர்கள்’
மனிதர்கள் சாத்தானின் தாக்குதலை எதிர்த்து நிற்க முடியாதளவுக்குப் பலவீனமானவர்கள் என வாதிட எலிப்பாஸை சாத்தான் பயன்படுத்தினான்; யோபுவைச் சந்திக்கச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவன்தான் எலிப்பாஸ். மனிதர்கள், ‘களிமண் குடிசைகளில் குடியிருக்கிறவர்கள்’ என்றும், ‘புழுதியில் அஸ்திவாரம் போடப்பட்டவர்கள், அந்துப்பூச்சியைவிட விரைவாக நசுக்கப்படுவார்கள், காலையில் இருக்கும் அவர்கள் மாலையில் இல்லாமல் போய்விடுவார்கள்; பொருட்படுத்துவார் இல்லாமல் என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்’ என்றும் அவன் யோபுவிடம் சொன்னான்.—யோபு 4:19, 20, NW.
பலவீனமான ‘மண்பாத்திரங்கள்’ என்று பைபிள் வேறொரு இடத்தில் மனிதர்களாகிய நம்மைப் பற்றிக் குறிப்பிடுகிறது. (2 கொ. 4:7) வழிவழியாகப் பெற்றிருக்கிற பாவத்தினாலும் அபூரணத்தினாலும் நாம் பலவீனமானவர்களாக இருக்கிறோம். (ரோ. 5:12) அதனால், நம்மையே நாம் சார்ந்திருந்தால், சாத்தானின் தாக்குதலுக்கு எளிதில் பலியாகிவிடுவோம். என்றாலும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு யெகோவாவின் உதவி இருக்கிறது. நமக்குப் பலவீனங்கள் இருந்தாலும், அவருடைய கண்களில் நாம் அருமையானவர்களாக இருக்கிறோம். (ஏசா. 43:4) அவருடைய சக்தியைத் தரும்படி கேட்டால் அவர் அதைத் தருவார். (லூக். 11:13) அதனால், நாம் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ பெறுவோம், சாத்தானின் எந்தவொரு தாக்குதலையும் சமாளிப்போம். (2 கொ. 4:7; பிலி. 4:13) “விசுவாசத்தில் உறுதியாயிருந்து” அவனை எதிர்த்து நிற்கும்போது, கடவுள் நம்மை உறுதிப்படுத்துவார், பலப்படுத்துவார். (1 பே. 5:8-10) எனவே, பிசாசாகிய சாத்தானுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
‘அநியாயத்தைக் குடிக்கிற’ மனுஷன்
“மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் புத்திமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?” என்று எலிப்பாஸ் கேட்டான். பின்பு, “இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் [கடவுள்] நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. அநியாயத்தைத் தண்ணீரைப் போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?” என்று அவனே பதில் சொன்னான். (யோபு 15:14-16) எந்தவொரு மனிதனையும் யெகோவா நீதியுள்ளவராகக் கருதுவதில்லை என்ற அர்த்தத்திலேயே எலிப்பாஸ் அவ்வாறு சொன்னான். இப்படிப்பட்ட தவறான சிந்தனைகளைச் சாத்தானும் பயன்படுத்துகிறான். நம்முடைய கடந்தகால தவறுகளை நினைத்து நாம் நொந்துகொள்ள வேண்டுமென்றும், நம்மை மட்டம்தட்டிக்கொண்டு, நமக்கு மீட்பே கிடைக்காதென நாம் யோசிக்க வேண்டுமென்றும் அவன் விரும்புகிறான். யெகோவா நம்மிடம் அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறார் என்றும், அவருடைய கரிசனை, ஆதரவு, மன்னிக்கும் குணம் ஆகியவற்றை நாம் அற்பமாக நினைக்க வேண்டுமென்றும் சாத்தான் விரும்புகிறான்.
ஆம், ‘எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைப் பிரதிபலிக்கத் தவறியிருக்கிறோம்.’ ஆகவே, அபூரண மனிதர்கள் யாராலும் யெகோவாவின் பரிபூரண நெறிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது. (ரோ. 3:23; 7:21-23) என்றாலும், யெகோவாவின் பார்வையில் நாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என இது அர்த்தப்படுத்துவதில்லை. “பழைய பாம்பாகிய ராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன்” நம்முடைய பாவ இயல்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை அவர் அறிந்திருக்கிறார். (வெளி. 12:9, 10) ‘நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதை’ அவர் மனதில் வைத்திருப்பதால் நம்மிடம் “சதா குற்றம் கண்டுபிடிப்பதில்லை.”—சங். 103:8, 9, 14, NW.
நாம் தீய வழியை விட்டுவிலகி, மனம்வருந்தி யெகோவாவிடம் நெருங்கிவரும்போது அவர் நம்மை ‘தாராளமாக மன்னிப்பார்.’ (ஏசா. 55:7; சங். 51:17) நம்முடைய பாவங்கள் “சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 1:18) எனவே, கடவுளுடைய சித்தத்தை விடாமல் செய்ய நாம் தீர்மானமாயிருப்போமாக.
நாம் பாவிகளாக இருப்பதால், கடவுளுடைய பார்வையில் நாமாகவே நீதிமான்களாய் ஆக முடியாது. பரிபூரணத்தையும், என்றென்றும் வாழ்வதற்கான எதிர்பார்ப்பையும் ஆதாம் ஏவாள் இழந்துவிட்டார்கள்; நமக்கும் அது கிடைக்காதபடி செய்துவிட்டார்கள். (ரோ. 6:23) கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பவர்கள் பாவ மன்னிப்பைப் பெறுவதற்கு யெகோவா வழி செய்திருக்கிறார்; மனிதர்கள் மீதுள்ள அளவுகடந்த அன்பினால் அப்படிச் செய்திருக்கிறார். (மத். 20:28; யோவா. 3:16) தமது ‘அளவற்ற கருணையை’ எவ்வளவு அருமையாக அவர் வெளிக்காட்டியிருக்கிறார்! (தீத். 2:11) ஆம், நாம் மீட்புப் பெற முடியும்! அப்படியானால், நாம் மீட்புப் பெற அருகதையற்றவர்கள் என நம்மை யோசிக்க வைக்க ஏன் சாத்தானுக்கு இடங்கொடுக்க வேண்டும்?
“அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடும்”
உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் யோபு தன் விசுவாசத்தை விட்டுவிடுவாரெனச் சாத்தான் அடித்துச் சொன்னான். “நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்” என்று யெகோவாவிடம் சவால்விட்டான். (யோபு 2:5) சுகவீனங்களின் காரணமாக நாம் எதற்கும் லாயக்கற்றவர்கள் என அவன் நம்மை நினைக்க வைக்கும்போது நிச்சயம் சந்தோஷப்படுவான்.
ஆனால், யெகோவாவின் சேவையில் முன்புபோல் நம்மால் ஈடுபட முடியாவிட்டாலும் அவர் நம்மை நிராகரித்துவிட மாட்டார். நம்முடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தாக்குதலுக்கு ஆளாகி காயமடைந்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். முன்பு அவர் நமக்கு உதவி செய்ததுபோல இப்போது செய்ய முடியாததால் அவரை நாம் அலட்சியம் செய்வோமா? நிச்சயமாகவே மாட்டோம்! அதுவும் நமக்காக ஏதாவது செய்யப்போய் காயமடைந்திருந்தால் நாம் இன்னும் அவரை நேசிப்போம் அல்லவா, அவர்மீது அக்கறை காட்டுவோம் அல்லவா? யெகோவாவும் அப்படிச் செய்வார் என்று எதிர்பார்ப்பதுதானே நியாயம்? “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் அல்ல” என்று பைபிள் சொல்கிறது.—எபி. 6:10.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ‘ஓர் ஏழை விதவையை’ பற்றி பைபிள் சொல்கிறது; அவள் பல வருடங்களாக ஆலயத்தில் காணிக்கை செலுத்தி வந்திருக்கலாம். “மிகக் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை” காணிக்கைப் பெட்டியில் அவள் போடுவதைக் கவனித்த இயேசு அவளையும் அவள் காணிக்கையையும் அற்பமாகக் கருதினாரா? இல்லை, அவளுடைய சூழ்நிலையின் மத்தியிலும் உண்மை வணக்கத்திற்காக தன்னால் முடிந்ததையெல்லாம் அவள் செய்ததைப் பார்த்து அவளைப் பற்றி உயர்வாகவே பேசினார்.—லூக். 21:1-4.
அபூரணத்தின் காரணமாக வருகிற வியாதியாலோ வயோதிகத்தாலோ நாம் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும் உத்தமத்தை விட்டுவிடாதிருந்தால் யெகோவா நம்மோடு வைத்துள்ள பந்தத்தை முறித்துவிடவே மாட்டார். கஷ்டங்களின் பொருட்டு அவருடைய சேவையில் முன்புபோல் ஈடுபட முடியவில்லை என்பதற்காக அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.—சங். 71:9, 17, 18.
‘மீட்பெனும் தலைக்கவசத்தை’ அணிந்துகொள்ளுங்கள்
சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களிலிருந்து நம்மை நாமே எப்படிக் காத்துக்கொள்ளலாம்? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நம் எஜமானரிடமிருந்து கிடைக்கும் மகா பலத்தினால் வலிமையடைந்துகொண்டே இருங்கள். பிசாசின் சூழ்ச்சிகளை நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்க வல்லவர்களாகும்படி, கடவுள் தருகிற முழு கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.” அந்தக் கவசத்தில் ஒன்று, ‘மீட்பெனும் தலைக்கவசம்’ ஆகும். (எபே. 6:10, 11, 17) சாத்தானின் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்ப்பதற்கு அந்தத் தலைக்கவசத்தை எப்போதும் அணிந்துகொள்ள வேண்டும். தலைக்கவசம், ஒரு போர்வீரனின் தலையைப் பாதுகாக்கிறது. நம்முடைய “மீட்புக்கான நம்பிக்கை,” அதாவது மகத்தான புதிய உலகத்தைப் பற்றிய வாக்குறுதிகள் நிறைவேறுமென்ற நம்பிக்கை, சாத்தானின் பொய்களிலிருந்து நம் மனதைப் பாதுகாக்கிறது. (1 தெ. 5:8) தனிப்பட்ட விதமாக பைபிளை ஊக்கமாகப் படிப்பதன் மூலம் இந்த நம்பிக்கையை நாம் பிரகாசமானதாகவும் பலமானதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சாத்தானின் மூர்க்கத்தனமான தாக்குதல்களையெல்லாம் யோபு சகித்தார். உயிர்த்தெழுதலில் யோபுவுக்குப் பலமான விசுவாசம் இருந்ததால், மரண பயம்கூட அவருடைய உத்தமத்தைக் குலைத்துப்போடவில்லை. “என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக” என்று அவர் யெகோவாவிடம் சொன்னார். (யோபு 14:15) சாக வேண்டியிருந்தாலும் உத்தமத்தை விட்டுவிடாதிருக்க யோபு தீர்மானமாய் இருந்தார்; ஏனென்றால், கடவுள் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர்களை நிச்சயம் உயிர்த்தெழுப்புவார் என உறுதியாய் நம்பினார்.
உண்மைக் கடவுள்மீது நாமும் யோபுவைப் போலவே நம்பிக்கை வைப்போமாக! சாத்தானும் அவனது கையாட்களும் நமக்கு எதிராகக் கொண்டுவருகிற எதையும் யெகோவாவினால் தவிடுபொடியாக்க முடியும். ‘மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை. ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு நீங்கள் சோதிக்கப்பட அவர் அனுமதிக்க மாட்டார்; மாறாக, சோதனையை நீங்கள் சகித்துக்கொள்வதற்கு வழிசெய்வார்’ என்று பவுல் சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதிருப்போமாக!—1 கொ. 10:13.
[பக்கம் 20-ன் படம்]
உங்கள் சேவையை யெகோவா உயர்வாய்க் கருதுகிறார்
[பக்கம் 21-ன் படம்]
மீட்பெனும் தலைக்கவசத்தை எப்போதும் அணிந்துகொள்ளுங்கள்