நாம் ஒருசேரப் புகழ்வதற்கு யெகோவா தகுந்தவர்
“அல்லேலூயா.”—சங். 111:1.
1, 2. “அல்லேலூயா” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன, அது எவ்வாறு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
“அல்லேலூயா!” இந்த வார்த்தையைக் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் சகஜமாகக் கேட்க முடியும். சிலர் அன்றாடப் பேச்சிலும் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் அவர்களில் பெரும்பாலோருக்கு அதன் அர்த்தம் தெரியாது, அது எந்தளவுக்குப் புனிதமானது என்றும் தெரியாது; அதைப் பயன்படுத்தும் அநேகர் கடவுளை அவமதிக்கும் விதத்திலேயே வாழ்கிறார்கள். (தீத். 1:16) “அல்லேலூயா” என்பது, “சங்கீதங்களை எழுதியவர்கள் யெகோவாவைப் புகழும்படி எல்லாரையும் அழைப்பதற்காகப் பயன்படுத்திய வார்த்தை” என்று ஒரு பைபிள் அகராதி குறிப்பிடுகிறது. சொல்லப்போனால், “அல்லேலூயா” என்றால் “யா என்பவரை [அதாவது, யெகோவாவை] துதியுங்கள்” என்று அர்த்தமென பல பைபிள் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
2 அதனால்தான் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், சங்கீதம் 111:1-ல் உள்ள இந்த வார்த்தையை “மக்களே, யா என்பவரைப் புகழுங்கள்!” என்று மொழிபெயர்த்திருக்கிறது. கிரேக்கில் இதற்கு இணையான வார்த்தை வெளிப்படுத்துதல் 19:1-6-ல் நான்கு முறை வருகிறது; பொய் மதத்தின் அழிவினால் ஏற்படும் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் குறித்த பதிவு அது. அந்த அழிவு ஏற்படும்போது உண்மை வணக்கத்தார் “அல்லேலூயா” என்று மதிப்புமரியாதையோடு சொல்ல விசேஷ காரணம் இருக்கும்.
அவரது பெரிய செய்கைகள்
3. நாம் தவறாமல் ஒன்றுகூடி வருவதற்கான முக்கியக் காரணம் என்ன?
3 நாம் ஒருசேரப் புகழ்வதற்கு யெகோவா தகுந்தவராக இருப்பதற்கான பல காரணங்களை சங்கீதம் 111-ன் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். “செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன்” என்று முதல் வசனத்தில் அவர் சொல்கிறார். இன்றுள்ள யெகோவாவின் சாட்சிகளும் அவ்வாறே உணருகிறார்கள். சபைகளிலும் சரி பெரிய மாநாடுகளிலும் சரி, நாம் தவறாமல் ஒன்றுகூடி வருவதற்கான முக்கியக் காரணம் யெகோவாவைப் புகழ்வதற்கே.
4. மனிதர்கள் எவ்வாறு யெகோவாவின் செய்கைகளை ஆராய முடியும்?
4 “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.” (சங். 111:2) “ஆராயப்படுகிறவை” என்ற வார்த்தையைக் கவனியுங்கள். கடவுளுடைய செய்கைகளைப் பற்றி “உள்ளார்வத்தோடும் கருத்தூன்றியும் தியானித்து ஆராய்ச்சி செய்கிற” நபர்களைக் குறித்து இங்கு சொல்லப்படுவதாக ஒரு புத்தகம் விளக்குகிறது. யெகோவாவின் ஏராளமான படைப்புகள் அவை உண்டாக்கப்பட்டதற்கான அற்புத நோக்கத்தைப் பறைசாற்றுகின்றன. அவர் சூரியனையும் சந்திரனையும் பூமியையும் அதனதன் இடத்திலும் ஒன்றுக்கொன்று இசைந்து செயல்படும் விதத்திலும் வைத்தார். இதனால், பூமிக்குத் தேவையான வெப்பமும், வெளிச்சமும் கிடைக்கின்றன; அதோடு, இரவு, பகல், பருவகாலங்கள், கடலின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை உண்டாகின்றன.
5. மனிதன் இந்தப் பிரபஞ்சத்தை அதிகமதிகமாக ஆராய்ந்திருப்பதிலிருந்து என்ன தெரிகிறது?
5 சூரிய மண்டலத்தில் இந்தப் பூமி இருக்கும் இடத்தையும், மாபெரும் சந்திரன் வலம்வருகிற துல்லியமான சுற்றுப்பாதையையும், அதன் அளவையும், கனத்தையும் குறித்து விஞ்ஞானிகள் ஏராளமான விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விண்வெளியில் இந்தக் கோளங்கள் அமைந்திருக்கும் இடமும் ஒன்றுக்கொன்று செயல்படும் விதமும், அருமையான பருவகாலங்கள் மாறிமாறி உண்டாவதற்குக் காரணமாக இருக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள இயற்கைச் சக்திகள் கச்சிதமாக இயங்குவதைக் குறித்தும் அநேக விஷயங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆகவே, “கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரபஞ்சம்” என்ற கட்டுரையில் இயந்திரப் பொறியியல் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கடந்த 30 வருடங்களில் எத்தனை எத்தனையோ விஞ்ஞானிகள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அதாவது, இந்தப் பிரபஞ்சம் தற்செயலாக உண்டானதென்ற கருத்தை ஏற்றுக்கொள்வது மிக மிகக் கஷ்டம் என்பதை ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்; இது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது மிகச் சுலபம். கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூமியைப் பற்றி நாம் ஆராய ஆராய, புத்திக்கூர்மையுள்ள ஒருவர்தான் அதை வடிவமைத்திருக்க வேண்டும் என முடிவுசெய்யும் கட்டாயத்திற்கு வருகிறோம்.”
6. கடவுள் மனிதரைப் படைத்திருக்கும் விதத்தைக் குறித்து நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
6 கடவுள் நம்மை உண்டாக்கியிருக்கும் விதமும் மற்றொரு அற்புதமாக இருக்கிறது. (சங். 139:14) கடவுள் மனிதரைப் படைத்தபோது, அவர்களுக்கு ஒரு மனதையும், தேவையான எல்லா உறுப்புகளுமுள்ள ஓர் உடலையும், வேலைசெய்யும் திறனையும் ஆற்றலையும் அளித்தார். உதாரணத்திற்கு, பேசும் திறன், கேட்கும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன் என பல அற்புதத் திறன்களைக் கொடுத்தார். உங்களில் பெரும்பாலோருக்கு இந்தத் திறன்கள் உண்டு. அதுமட்டுமா, நீங்கள் தலைசிறந்த கட்டமைப்புடன், அதாவது நிமிர்ந்த உடற்கட்டுடன் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்; சொல்லப்போனால், உங்கள் உடலின் வடிவமைப்பும், சமநிலையும், வேதியியல் மாற்றங்களும், தானாக நடைபெறும் செயல்பாடுகளும் பிரமிக்கத்தக்கவை. மேலும், உங்கள் மனதையும் உணர்வுகளையும் செயல்பட வைக்கும் அற்புத நரம்பு இணைப்புகள் நிகரற்று விளங்குகின்றன; இதுவரை விஞ்ஞானிகள் சாதித்திருக்கும் எதுவும் அவற்றுக்கு ஈடாக முடியாது. சொல்லப்போனால், மனிதன் சாதனைகள் படைப்பதற்குக் காரணமே அவனுடைய மனதும் உணர்வுகளும்தான். மிகுந்த பயிற்சியும் திறமையும் பெற்ற பொறியியலாளர்கூட, உங்களிடமுள்ள அழகான, பயனுள்ள பத்து “நெம்புகோல்களுக்கு” ஈடாக, அதாவது அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பத்து விரல்களுக்கு ஈடாக, எதையும் உருவாக்கியிருக்க முடியாது. ஆகவே, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுள் தந்த விரல்களைத் திறமையாகப் பயன்படுத்தாமல் அழகழகான கலைப்பொருட்களும் கட்டிடங்களும் உருவாகியிருக்க முடியுமா?’
கடவுளுடைய பெரிய செய்கைகளும் குணங்களும்
7. பைபிள் எவ்வாறு கடவுளுடைய பெரிய செய்கைகளில் ஒன்றாக இருக்கிறது?
7 யெகோவா மனிதருக்காக இன்னும் பல பெரிய செய்கைகளை நடப்பித்திருப்பதாக பைபிள் விவரிக்கிறது. சொல்லப்போனால், பைபிளே ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கிறது; அதன் ஒத்திசைவு நிகரற்றது. அது ‘தேவ ஆவியினால் அருளப்பட்டு, . . . உபதேசத்துக்குப் பிரயோஜனமுள்ளதாக’ இருப்பதால், மற்றெந்த புத்தகங்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. (2 தீ. 3:16, 17) அதன் முதல் புத்தகமான ஆதியாகமம், நோவாவின் காலத்தில் கடவுள் எவ்வாறு இந்தப் பூமியிலிருந்து துன்மார்க்கத்தைத் துடைத்தழித்தாரென விவரிக்கிறது. இரண்டாவது புத்தகமான யாத்திராகமம், யெகோவா இஸ்ரவேலரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்ததன் மூலம் தாமே கடவுளென எவ்வாறு நிரூபித்தார் என்று காட்டுகிறது. சங்கீதக்காரன் இந்தச் சம்பவங்களை நினைவில் வைத்துத்தான் இவ்வாறு சொல்லியிருப்பார்: “அவருடைய [யெகோவாவுடைய] செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் [அதாவது, பெருந்தன்மையும்] மனஉருக்கமுமுள்ளவர்.” (சங். 111:3, 4) மனித சரித்திரம் முழுவதிலும், ஏன், உங்கள் வாழ்நாள் காலத்திலும்கூட, யெகோவா நடப்பித்திருக்கும் செயல்கள் அவரது ‘மகிமையையும் மகத்துவத்தையும்’ நினைவுகூரச் செய்கின்றன, அல்லவா?
8, 9. (அ) கடவுளுடைய செயல்கள் எவ்விதங்களில் மனிதருடைய செயல்களிலிருந்து வித்தியாசப்படுகின்றன? (ஆ) உங்களுக்குப் பிடித்த கடவுளுடைய குணங்கள் சில யாவை?
8 யெகோவாவின் தலைசிறந்த குணங்களான நீதி, இரக்கம், மனஉருக்கம் போன்றவற்றையும் சங்கீதக்காரன் வலியுறுத்திக் காட்டியிருப்பதைக் கவனியுங்கள். பாவமுள்ள மனிதரின் செயல்களில் நீதியைக் காண்பது மிகக் கஷ்டம் என உங்களுக்கே தெரியும். அவற்றில் பேராசையையும், பொறாமையையும், பெருமையையும்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, போர் புரிவதற்கும் லாபம் ஈட்டுவதற்கும் கொடூரமான ஆயுதங்களை மனிதன் தயாரிக்கிறான்; இதனால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களுக்கு ஏற்படுகிற துன்பத்தையும் பீதியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை. அதுமட்டுமல்ல, மனிதருடைய பல செயல்கள் ஏழை எளியோரை அடக்கி ஒடுக்கியிருக்கின்றன. இதற்கு உதாரணமாக பலர் குறிப்பிடுவது, ஆணவமிக்க பார்வோன்களுக்குப் பிரமிடுகளை (சமாதிகளை) கட்ட அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகும். இன்று மனிதர் செய்யும் செயல்கள் மற்றவர்களை அடக்கி ஒடுக்குவதோடு, ‘பூமியையும் கெடுக்கின்றன.’—வெளிப்படுத்துதல் 11:18-ஐ வாசியுங்கள்.
9 ஆனால், யெகோவாவின் செயல்கள் எவ்வளவு வித்தியாசமானவை! அவை நீதிநேர்மை வழுவாதவை. அவற்றில் ஒன்றுதான், பாவமுள்ள மனிதர்களை மீட்பதற்காக அவர் இரக்கத்தோடு செய்திருக்கும் ஏற்பாடாகும். மீட்புப் பலியைத் தருவதன் மூலம் கடவுள் ‘தம்முடைய நீதியைக் காண்பித்தார்.’ (ரோ. 3:25, 26) “அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்” என்பது உறுதி. அவர் பாவமுள்ள மனிதரிடம் மிகப் பொறுமையோடு நடந்துகொண்ட விதத்தில் அவருடைய பெருந்தன்மை வெளிக்காட்டப்பட்டது. சிலசமயங்களில், தீய வழியைவிட்டு விலகி நன்மை செய்யும்படி அவர்களைக் கெஞ்சிக் கேட்டபோது, “தயவுசெய்து” (NW) என்றும் அவர் குறிப்பிட்டார்.—எசேக்கியேல் 18:25-ஐ வாசியுங்கள்.
வார்த்தை தவறாதவர்
10. ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையைப் பொறுத்ததில் யெகோவா என்ன முன்மாதிரி வைத்தார்?
10 “தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.” (சங். 111:5) ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கையைப் பற்றி சங்கீதக்காரன் இங்கே குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதிக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்தார்; அந்தச் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும் வாக்குறுதி கொடுத்தார். (ஆதி. 22:17, 18; சங். 105:8, 9) அந்த வாக்குறுதிகளின் முதல் நிறைவேற்றத்தில், இஸ்ரவேல் தேசத்தாரே ஆபிரகாமின் சந்ததியாராக இருந்தார்கள். அவர்கள் வெகு காலமாக எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள், ஆனால் ‘தேவன் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து’ அவர்களை விடுதலை செய்தார். (யாத். 2:24) அதன்பின் யெகோவா அவர்களை நடத்திய விதம், அவர் எந்தளவுக்குத் தாராள குணம் படைத்தவர் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய உடலுக்குத் தேவையான உணவையும் அவர்களுடைய மனதுக்கும் இருதயத்துக்கும் தேவையான ஆன்மீக உணவையும் அவர் வழங்கினார். (உபா. 6:1-3; 8:4; நெ. 9:21) அதற்குப்பின் வந்த நூற்றாண்டுகளில் அந்தத் தேசத்தார் அடிக்கடி கடவுளைவிட்டு விலகினார்கள்; மனந்திருந்தி வரும்படி தீர்க்கதரிசிகள் மூலம் அவர் அழைத்தபோதும் அவர்கள் வரவில்லை. கடவுள் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்து 1,500-க்கும் அதிகமான ஆண்டுகள் உருண்டோடிய பின்பு, அவர் தமது ஒரே மகனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். ஆனால் யூதர்களில் பெரும்பான்மையோர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், அவரைக் கொலை செய்வதற்கு ஒப்புக்கொடுத்தார்கள். அப்போது யெகோவா ஒரு புதிய ஆன்மீக தேசத்தை, அதாவது ‘தேவனுடைய இஸ்ரவேலரை’ உருவாக்கினார். இந்தத் தேசத்தாரும் கிறிஸ்துவும் சேர்ந்துதான் ஆபிரகாமின் ஆன்மீக சந்ததியாராக இருக்கிறார்கள்; இந்தச் சந்ததியாரைப் பயன்படுத்தியே மனிதர்களை ஆசீர்வதிக்கப்போவதாக யெகோவா முன்னறிவித்தார்.—கலா. 3:16, 29; 6:16.
11. ஆபிரகாமோடு செய்த ‘உடன்படிக்கையை’ யெகோவா எவ்வாறு தொடர்ந்து ‘நினைப்பார்’?
11 யெகோவா ‘தமது உடன்படிக்கையையும்’ அதன் மூலம் தரப்போகும் ஆசீர்வாதங்களையும் தொடர்ந்து ‘நினைப்பார்.’ இன்று அவர் 400-க்கும் அதிகமான மொழிகளில் ஆன்மீக உணவை வாரி வழங்கி வருகிறார். அதோடு, “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” என்ற வார்த்தைகளுக்கு இசைய, அன்றாடத் தேவைகளைக் குறித்து நாம் செய்யும் ஜெபங்களைக் கேட்டுப் பதிலளித்து வருகிறார்.—லூக். 11:3; சங். 72:16, 17; ஏசா. 25:6-8.
யெகோவாவின் பிரமிக்கத்தக்க பெலம்
12. இஸ்ரவேலருக்கு ‘ஜாதிகளின் சுதந்தரம்’ எவ்விதத்தில் கொடுக்கப்பட்டது?
12 “ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.” (சங். 111:6) இஸ்ரவேலரின் சரித்திரத்தில் இடம்பெற்ற மாபெரும் சம்பவம், அதாவது எகிப்திலிருந்து அவர்கள் அற்புதமாய் விடுவிக்கப்பட்ட சம்பவம், சங்கீதக்காரனின் நினைவில் இருந்திருக்கலாம். கடைசியில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைய யெகோவா இஸ்ரவேலரை அனுமதித்தபோது, யோர்தான் நதிக்கு கிழக்கிலும் மேற்கிலும் இருந்த ராஜ்யங்களை அவர்களால் வெல்ல முடிந்தது. (நெகேமியா 9:22-25-ஐ வாசியுங்கள்.) ஆம், “ஜாதிகளின் சுதந்தரத்தை” யெகோவா இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். அவருடைய பெலத்திற்கு எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!
13, 14. (அ) பாபிலோன் சம்பந்தமாக கடவுள் வெளிக்காட்டிய பெலத்திற்கான என்ன அத்தாட்சி சங்கீதக்காரனின் நினைவில் இருந்திருக்கலாம்? (ஆ) வேறென்ன மாபெரும் விடுதலையை யெகோவா அளித்திருக்கிறார்?
13 நமக்கு நன்கு தெரிந்தபடி, இஸ்ரவேலருக்காக யெகோவா எத்தனையோ காரியங்களைச் செய்தும் அவர்கள் அவரை மதிக்கவில்லை; தங்கள் முன்னோரான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரையும் மதிக்கவில்லை. அவர்கள் கலகம் செய்துகொண்டே இருந்ததால், கடைசியில் பாபிலோனியர் அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றி அவர்களை நாடுகடத்திச் செல்வதற்குக் கடவுள் அனுமதித்தார். (2 நா. 36:15-17; நெ. 9:28-30) சில பைபிள் அறிஞர்கள் குறிப்பிடுகிறபடி, 111-ஆம் சங்கீதத்தை இயற்றியவர், பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர் திரும்பிவந்த பிறகு வாழ்ந்தவராக இருந்திருந்தால் யெகோவாவின் உண்மைத்தன்மையையும் பெலத்தையும் புகழ்வதற்கு மேலுமான காரணம் இருந்திருக்கும். கைதிகளை விடுதலை செய்யக் கூடாதென்ற கொள்கையுடைய பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து யூதர்களை விடுவிப்பதன் மூலம் யெகோவா தமது உண்மைத்தன்மையையும் பெலத்தையும் காட்டினார்.—ஏசா. 14:4, 17.
14 சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இன்னும் பெரிய விதத்தில் யெகோவா தம் பெலத்தைக் காட்டினார்; அதாவது, மனந்திரும்பிய மனிதரை பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். (ரோ. 5:12) இதன் விளைவாக, 1,44,000 பேர் கிறிஸ்துவுடன் சேர்ந்து பரலோகத்தில் ஆட்சிசெய்வதற்கு வழிதிறக்கப்பட்டது. 1919-ல் அவர்களில் மீதியாயிருந்த சிலரை பொய் மதத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க யெகோவா தம் பெலத்தைப் பயன்படுத்தினார். இந்த முடிவு காலத்தில் அவர்கள் சாதிக்கிற எல்லாவற்றிற்கும் ஒரே காரணம் கடவுளுடைய பெலமே. அவர்கள் சாகும்வரையில் உண்மையோடிருந்தால், இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து பரலோகத்திலிருந்து பூமியை ஆட்சி செய்வார்கள்; அப்போது, மனந்திரும்பிய மனிதருக்கு நன்மைகளை அளிப்பார்கள். (வெளி. 2:26, 27; 5:9, 10) பூர்வ இஸ்ரவேலரைக் காட்டிலும் மிகப் பெரியளவில் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—மத். 5:5.
நிலையான, நம்பகமான நியமங்கள்
15, 16. (அ) கடவுளுடைய கரத்தின் கிரியைகளில் உட்பட்டிருப்பவை யாவை? (ஆ) இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்த கட்டளைகள் என்ன?
15 “அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள்.” (சங். 111:7, 8) யெகோவா இஸ்ரவேலருக்கு முக்கியமான பத்து கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் பொறித்துக் கொடுத்தார்; இவை அவருடைய ‘கரத்தின் கிரியைகளில்’ உட்பட்டுள்ளன. (யாத். 31:18) இந்தக் கட்டளைகளும் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மற்றெல்லா சட்டதிட்டங்களும் நிலையான, நம்பகமான நியமங்களின் அடிப்படையில் அமைந்தவை.
16 உதாரணமாக, அந்தக் கற்பலகைகளில் இருந்த ஒரு கட்டளை, அதாவது சட்டம், இவ்வாறு குறிப்பிட்டது: “உங்கள் கடவுளாகிய யெகோவா என்கிற நான் தனிப்பட்ட பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.” (NW) அதோடு, “என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” என்று யெகோவா சொல்வதாக அது குறிப்பிட்டது. அந்தக் கற்பலகைகளில் எக்காலத்திற்கும் பொருந்துகிற வேறுபல நியமங்களும் இருந்தன; உதாரணத்திற்கு, “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக,” “களவு செய்யாதிருப்பாயாக” என்ற நியமங்களும், பிறருக்குச் சொந்தமானவற்றை இச்சியாதிருப்பது பற்றிய அர்த்தம்பொதிந்த கட்டளையும் இருந்தன.—யாத். 20:5, 6, 12, 15, 17.
பரிசுத்தமும் பயபக்திக்குமுரிய மீட்பர்
17. இஸ்ரவேலர் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கு என்ன காரணங்கள் இருந்தன?
17 “அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது [அதாவது, பயபக்திக்குமுரியது].” (சங். 111:9) ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கைக்கு யெகோவா உண்மையுள்ளவராய் இருந்தது சங்கீதக்காரனின் நினைவில் இருந்திருக்கலாம். யெகோவா உண்மையுள்ளவராய் இருந்ததால், தம் மக்களை எகிப்தில் அடிமைகளாகவே விட்டுவிடவில்லை, பிற்பாடு பாபிலோனிலும் அவர்களைச் சிறைக் கைதிகளாகவே விட்டுவிடவில்லை. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தம் மக்களை அவர் மீட்டார். அந்த இரண்டு காரணங்களுக்காவது இஸ்ரவேலர் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தியிருக்க வேண்டும்.—யாத்திராகமம் 20:7-ஐயும் ரோமர் 2:23, 24-ஐயும் வாசியுங்கள்.
18. நீங்கள் கடவுளுடைய பெயரைத் தாங்கியிருப்பதை ஏன் பாக்கியமாகக் கருதுகிறீர்கள்?
18 இன்று பாவம் மற்றும் மரணத்தின் கொடூரமான அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய நம்முடைய விஷயத்திலும் இது உண்மையாய் இருக்கிறது. நாம் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் வரிக்கு இசைவாக வாழ, அதாவது “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற விண்ணப்பத்திற்கு இசைவாக வாழ, முழு முயற்சி எடுக்க வேண்டும். (மத். 6:9) அந்த மகத்தான பெயரைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பது, நமக்குள் தேவ பயத்தை ஏற்படுத்த வேண்டும். சங்கீதம் 111-ஐ எழுதியவர் தேவ பயத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு.”—சங். 111:10.
19. அடுத்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிச் சிந்திப்போம்?
19 தேவ பயம் தீமையை வெறுக்க நமக்கு உதவும். சங்கீதம் 112-ல் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய அருமையான குணங்களைப் பின்பற்றவும் நமக்கு உதவும்; அவற்றை அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம். கடவுளை என்றென்றுமாய் புகழ்கிற லட்சக்கணக்கானோரில் ஒருவராய் இருக்க எப்படித் தகுதி பெறலாம் என்பதை அந்தச் சங்கீதம் விளக்குகிறது. அவர் நம்முடைய எல்லாப் புகழுக்கும் தகுந்தவரே. “அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.”—சங். 111:10.
சிந்திக்கச் சில கேள்விகள்
• நாம் ஒருசேரப் புகழ்வதற்கு யெகோவா ஏன் தகுந்தவராக இருக்கிறார்?
• யெகோவாவின் செய்கைகளில் பளிச்சிடும் குணங்கள் யாவை?
• கடவுளுடைய பெயரைத் தாங்கியிருக்கும் பாக்கியத்தை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?
[பக்கம் 20-ன் படம்]
நாம் தவறாமல் ஒன்றுகூடி வருவதற்கான முக்கியக் காரணம் யெகோவாவைப் புகழ்வதற்கே
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் எல்லாச் சட்டங்களும் நிலையான, நம்பகமான நியமங்களின் அடிப்படையில் அமைந்தவை