நீதிமான்கள் கடவுளை என்றென்றும் புகழ்வார்கள்
“நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் [“என்றென்றும் நினைவுகூரப்படுவான்,” NW]. . . . அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.”—சங். 112:6, 9.
1. (அ) கடவுளுக்குமுன் நீதியாய் நடக்கிற எல்லாருக்கும் எப்படிப்பட்ட சந்தோஷமான எதிர்காலம் காத்திருக்கிறது? (ஆ) என்ன கேள்வி எழும்புகிறது?
கடவுளுக்குமுன் நீதியாய் நடக்கிற எல்லாருக்கும் எப்பேர்ப்பட்ட அற்புதமான எதிர்காலம் காத்திருக்கிறது! யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி அதிகமதிகமாய் கற்றுக்கொள்வதில் அவர்கள் சதாகாலமும் மகிழ்ச்சி காண்பார்கள். கடவுள் படைத்தவற்றைப் பற்றி மேன்மேலும் கற்றுக்கொள்கையில் அவர்களுடைய உள்ளத்தில் போற்றுதல் பெருக்கெடுக்கும். அந்த மகத்தான எதிர்காலத்தை அனுபவிப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது “நீதி”; சங்கீதம் 112 இதை வலியுறுத்துகிறது. ஆனால், பரிசுத்தமும் நீதியுமுள்ள கடவுளான யெகோவா பாவமுள்ள மனிதரை எப்படி நீதிமான்களாகக் கருத முடியும்? சரியானதைச் செய்ய என்னதான் முயன்றாலும், நாம் தவறுகளைச் செய்துவிடுகிறோம், சில சமயங்களில் மோசமான பாவங்களையும் செய்துவிடுகிறோம்.—ரோ. 3:23; யாக். 3:2.
2. யெகோவா அன்போடு செய்த இரண்டு அற்புதங்கள் யாவை?
2 இதற்குத் தகுந்த தீர்வை யெகோவா அன்போடு அளித்திருக்கிறார். எப்படி? முதலாவதாக, பரலோகத்திலிருந்த தமது அன்பு மகனின் உயிரை அற்புதமாக ஒரு கன்னியின் கருப்பைக்கு மாற்றி அவரைப் பரிபூரண மனிதராகப் பிறக்கச் செய்தார். (லூக். 1:30-35) இரண்டாவதாக, இயேசுவின் விரோதிகள் அவரைக் கொலை செய்த பிறகு, யெகோவா அவரை மகிமையான உடலில் உயிர்த்தெழுப்பி மற்றொரு பெரிய அற்புதத்தைச் செய்தார்.—1 பே. 3:18.
3. கடவுள் தம் மகனுக்கு பரலோக வாழ்வை பரிசாகக் கொடுப்பதில் ஏன் மகிழ்ச்சி அடைந்தார்?
3 யெகோவா தமது மகனான இயேசுவுக்குப் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்வைப் பரிசாக அளித்தார்; அது, அவர் பூமிக்கு வருவதற்குமுன் பெற்றிராத ஒன்றாகும். (எபி. 7:15-17, 28) கடும் சோதனைகளின் மத்தியிலும் இயேசு முழுமையான உத்தமத்தன்மையைக் காட்டியதால் யெகோவா அந்தப் பரிசைக் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு இயேசு, சாத்தானுடைய சவாலுக்கு, அதாவது மனிதர் உண்மையான அன்பினால் கடவுளைச் சேவிக்காமல் சுயநலத்திற்காகவே அவரைச் சேவிக்கிறார்கள் என்ற சவாலுக்கு, முழுமையான பதிலை அளித்தார்.—நீதி. 27:11.
4. (அ) பரலோகத்திற்குச் சென்ற பிறகு, இயேசு நமக்காக என்ன செய்தார், அதனால் யெகோவா என்ன செய்தார்? (ஆ) யெகோவாவும் இயேசுவும் உங்களுக்காகச் செய்திருப்பவற்றைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
4 பரலோகத்திற்குச் சென்ற இயேசு, வேறொன்றையும் செய்தார். ‘தம்முடைய சொந்த இரத்தத்தின்’ மதிப்புடன் ‘நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்தார்.’ நம் அன்புள்ள பரலோகத் தகப்பன், இயேசு கொடுத்த மதிப்புமிக்க பலியை ‘நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாக’ தயவுடன் ஏற்றுக்கொண்டார். அதனால், நாம் ‘சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியோடு’ ‘ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்ய’ முடியும். சங்கீதம் 112:1-ன்படி (NW) “மக்களே, யா என்பவரைப் புகழுங்கள்!” என்று சொல்ல இது சிறந்த காரணம், அல்லவா?—எபி. 9:12-14, 24; 1 யோ. 2:2.
5. (அ) கடவுளுக்குமுன் எப்போதும் நீதிமான்களாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) சங்கீதம் 111 மற்றும் 112 எவ்விதத்தில் எழுதப்பட்டுள்ளன?
5 கடவுளுக்குமுன் எப்போதும் நீதிமான்களாக இருப்பதற்கு, இயேசு சிந்திய இரத்தத்தில் தொடர்ந்து விசுவாசம் வைப்பது அவசியம். யெகோவா நம்மீது அளவுகடந்த அன்பு காட்டியதற்காக தினந்தினம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். (யோவா. 3:16) அதோடு, நாம் கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து படிப்பதும் அதன்படி வாழ முழு முயற்சி எடுப்பதும் அவசியம். கடவுளுக்கு முன்பாக சுத்த மனச்சாட்சியுடன் இருக்க விரும்புகிற அனைவருக்கும் 112-ஆம் சங்கீதத்தில் சிறந்த அறிவுரைகள் உள்ளன. இந்தச் சங்கீதம் 111-ஆம் சங்கீதத்தோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது. இந்த இரண்டு சங்கீதங்களும் “அல்லேலூயா,” அதாவது “மக்களே, யா என்பவரைப் புகழுங்கள்!” என்று ஆரம்பிக்கின்றன; இவை 22 வரிகளைக் கொண்டவை. ஒவ்வொரு வரியும் எபிரெய மொழியின் 22 எழுத்துக்களில் ஒவ்வொன்றோடு ஆரம்பிக்கின்றன.a
சந்தோஷத்திற்கு வழி
6. சங்கீதம் 112-ல் விவரிக்கப்பட்டுள்ள தேவபயமுள்ள “மனுஷன்” எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறான்?
6 “கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் [“சந்தோஷமானவன்,” NW]. அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.” (சங். 112:1, 2) இங்கு சங்கீதக்காரன் “மனுஷன்” என ஒருமையில் சொல்லிவிட்டு, பிறகு 2-ஆம் வசனத்தின் பிற்பகுதியில் ‘செம்மையானவர்கள்’ என பன்மையில் சொல்கிறார்; ஆகவே, பலர் அடங்கிய ஒரு தொகுதியை 112-ஆம் சங்கீதம் குறிப்பிடலாமெனத் தெரிகிறது. அதனால்தான், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சம்பந்தமாக சங்கீதம் 112:9-ஐப் பொருத்திக் காட்ட அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டார். (2 கொரிந்தியர் 9:8, 9-ஐ வாசியுங்கள்.) இன்று பூமியில் கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் எப்படிச் சந்தோஷமாய் இருக்கலாம் என்பதை இச்சங்கீதம் எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறது!
7. உண்மைக் கிறிஸ்தவர்களுக்குக் கடவுள்மீது ஆரோக்கியமான பயம் இருப்பது ஏன் அவசியம், கடவுளுடைய கட்டளைகளைக் குறித்து நீங்கள் எப்படி உணர வேண்டும்?
7 சங்கீதம் 112:1 காட்டுகிறபடி இந்த உண்மைக் கிறிஸ்தவர்கள், ‘யெகோவாவுக்குப் பயந்து’ நடக்கும்போது மிகுந்த சந்தோஷத்தைக் காண்கிறார்கள். அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயம் சாத்தானுடைய உலகத்தின் போக்கைத் தவிர்க்க அவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதிலும் ‘மிகவும் பிரியமாயிருக்கிறார்கள்.’ பூமியெங்கும் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படியான கட்டளையும் அதில் அடங்கும். அவர்கள் சகல தேசத்தாரையும் சீஷராக்கக் கடுமையாக உழைப்பதோடு, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள் வரவிருப்பதைக் குறித்துத் துன்மார்க்கருக்கு எச்சரிப்பும் கொடுக்கிறார்கள்.—எசே. 3:17, 18; மத். 28:19, 20.
8. (அ) இன்று மும்முரமாக ஊழியம் செய்கிற கடவுளுடைய மக்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது? (ஆ) பூமியில் வாழும் நம்பிக்கையுடையோருக்கு எதிர்காலத்தில் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
8 கடவுளுடைய ஊழியர்கள் இப்படிப்பட்ட கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், இன்று பூமியில் அவர்களுடைய எண்ணிக்கை சுமார் எழுபது லட்சத்தை எட்டியிருக்கிறது. கடவுளுடைய மக்கள் ‘பூமியில் பலத்திருக்கிறார்கள்’ என்பதை யாரால் மறுக்க முடியும்? (யோவா. 10:16; வெளி. 7:9, 14) கடவுள் தமது நோக்கத்தை இன்னும் அதிகமாய் நிறைவேற்றுகையில் அவர்கள் இன்னும் எவ்வளவாய் ‘ஆசீர்வதிக்கப்படுவார்கள்’! பூமியில் வாழும் நம்பிக்கையுடையவர்கள், வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ ஒரு தொகுதியாகத் தப்பிப்பிழைத்து, ‘நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியின்’ பாகமாவார்கள். அதன் பிறகு, அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிற இவர்கள் இன்னுமதிகமாய் ‘ஆசீர்வதிக்கப்படுவார்கள்.’ உயிர்த்தெழுந்து வருகிற லட்சக்கணக்கானோரை வரவேற்க இவர்கள் தயாராய் இருப்பார்கள். அது எப்பேர்ப்பட்ட சிலிர்ப்பூட்டும் அனுபவமாய் இருக்கும்! காலப்போக்கில், கடவுளுடைய கட்டளைகளில் ‘மிகவும் பிரியமாயிருக்கிறவர்கள்’ பரிபூரணம் அடைந்து, “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” என்றென்றும் அனுபவித்து மகிழ்வார்கள்.—2 பே. 3:13; ரோ. 8:20.
ஐசுவரியத்தை ஞானமாய் பயன்படுத்துதல்
9, 10. உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆன்மீக ஐசுவரியத்தை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்கள், அவர்களுடைய நீதி எப்படி என்றைக்கும் நிற்கும்?
9 “ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் [“பெருந்தன்மையும்,” NW] மனஉருக்கமும் நீதியுமுள்ளவன்.” (சங். 112:3, 4) பைபிள் காலங்களில், கடவுளுடைய ஊழியர்கள் சிலர் நிஜமாகவே ஐசுவரியவான்களாய் இருந்தார்கள். அதேசமயம், கடவுளுடைய தயவைப் பெற்றிருந்த மற்றவர்களுக்குப் பணமும் பொருளும் இல்லாவிட்டாலும் வேறொரு கருத்தில் ஐசுவரியவான்களாக இருந்தார்கள். இயேசுவின் காலத்தைப்போல் இன்றும், கடவுளுக்குமுன் தங்களைத் தாழ்த்துகிற பெரும்பாலோர் ஏழை எளியவர்களாகவும் மற்றவர்களால் இழிவாகக் கருதப்படுகிறவர்களாகவும் இருப்பது உண்மைதான். (லூக். 4:18; 7:22; யோவா. 7:49) ஆனால், ஒருவருக்குப் பணமும் பொருளும் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர் ஆன்மீக ரீதியில் ஐசுவரியவானாக இருக்க முடியும்.—மத். 6:20; 1 தீ. 6:18, 19; யாக்கோபு 2:5-ஐ வாசியுங்கள்.
10 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் தாங்கள் பெற்றுள்ள ஆன்மீக ஐசுவரியங்களைத் தங்களிடமே வைத்துக்கொள்வதில்லை. மாறாக, சாத்தானுடைய இருண்ட உலகத்தில் ‘செம்மையானவர்களுக்கு வெளிச்சமாக’ ‘உதிக்கிறார்கள்.’ எப்படி? கடவுளைப் பற்றிய ஞானம், அறிவு என்ற ஆன்மீக பொக்கிஷங்களிலிருந்து நன்மையடைய மற்றவர்களுக்கு உதவுவதன் மூலமாகும். ராஜ்ய பிரசங்க வேலையை நிறுத்த எதிரிகள் எவ்வளவோ முயற்சி எடுத்திருக்கிறார்கள், ஆனால் தோல்வியைத்தான் கண்டிருக்கிறார்கள். இந்த நீதியான ஊழியத்தால் கிடைக்கும் பலன் “என்றைக்கும் நிற்கும்” என்பது உறுதி. அதோடு, கடவுளுடைய ஊழியர்கள் நீதியான வழியில் தொடர்ந்து நடந்தால் ‘என்றைக்கும் நிற்கப்போவது’ உறுதி, அதாவது நிரந்தரமாக வாழப்போவது உறுதி.
11, 12. கடவுளுடைய மக்கள் தங்களிடமுள்ள பணத்தையும் பொருளையும் பயன்படுத்தும் சில வழிகள் யாவை?
11 பரலோக நம்பிக்கையுள்ள அடிமை வகுப்பாரும் சரி, ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்தவர்களும் சரி, பணத்தையும் பொருளையும் மற்றவர்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள். “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான்” என்று சங்கீதம் 112:9 குறிப்பிடுகிறது. இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய சக விசுவாசிகளுக்கும் தேவையிலிருக்கிற மற்றவர்களுக்கும்கூட அடிக்கடி பண உதவி செய்கிறார்கள். இயற்கைப் பேரழிவுகளின்போது நடக்கிற நிவாரணப் பணிக்கும் தேவையானதைக் கொடுத்து உதவுகிறார்கள். இயேசு சொன்னபடி, அவ்வாறு கொடுப்பதால் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்.—அப்போஸ்தலர் 20:35-ஐயும் 2 கொரிந்தியர் 9:7-ஐயும் வாசியுங்கள்.
12 இந்தப் பத்திரிகையை 172 மொழிகளில் அச்சிடுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்; இவற்றில் பல மொழிகள் ஏழை எளியோரால் பேசப்படுகின்றன. அதுமட்டுமல்ல, காது கேளாதோருக்காகப் பல சைகை மொழிகளிலும் பார்வையற்றோருக்காக பிரேய்லிலும் இந்தப் பத்திரிகை கிடைப்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
பெருந்தன்மையும் நியாயமும்
13. பெருந்தன்மையோடு கொடுப்பதில் சிறந்த உதாரணங்களாகத் திகழ்பவர்கள் யார், அவர்களை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
13 “இரங்கிக் [“பெருந்தன்மையுடன்,” NW] கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங். 112:5) மற்றவர்களுக்கு உதவி செய்கிற எல்லாருமே பெருந்தன்மை காட்டுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சிலர் தாங்கள் பணக்காரர் என்று காட்டிக்கொள்வதற்காகக் கொடுக்கிறார்கள் அல்லது வேண்டாவெறுப்போடு கொடுக்கிறார்கள். உங்களைத் தாழ்வானவர்களாக நினைக்க வைக்கிற, அல்லது மற்றவர்களுக்கு ஒரு தொல்லையாகவும் சுமையாகவும் இருப்பவர்களாக நினைக்க வைக்கிற, ஒருவரிடம் உதவி பெறுவது சந்தோஷத்தைத் தராது. மாறாக, பெருந்தன்மையோடு நடந்துகொள்வோரிடம் உதவி பெறுவது புத்துணர்ச்சி தருகிறது. அப்படிப் பெருந்தன்மையோடும் பெருமகிழ்ச்சியோடும் கொடுப்பதில் யெகோவா தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். (1 தீ. 1:11; யாக். 1:5, 17) இயேசு கிறிஸ்துவும் தமது பிதாவின் பெருந்தன்மையை அப்படியே வெளிக்காட்டினார். (மாற். 1:40-42) ஆகவே, கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருப்பதற்கு நாம் சந்தோஷத்தோடும் பெருந்தன்மையோடும் கொடுக்கிறோம்; முக்கியமாக, வெளி ஊழியத்தில் மற்றவர்களுக்கு ஆன்மீக உதவி அளிக்கும்போது அப்படிக் கொடுக்கிறோம்.
14. ‘நம் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்க’ சில வழிகள் யாவை?
14 ‘[அவன்] தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிறான்.’ (சங். 112:5) முன்னறிவிக்கப்பட்டபடியே, உண்மையுள்ள அடிமை வகுப்பார் தங்கள் எஜமானருக்குச் சொந்தமானவற்றை யெகோவாவின் நீதிநியாயத்திற்கு இசைவாகக் கவனித்துக்கொள்கிறார்கள். (லூக்கா 12:42-44-ஐ வாசியுங்கள்.) அவர்கள் மூப்பர்களுக்கு கொடுக்கிற வேதப்பூர்வ ஆலோசனையிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது; சிலசமயங்களில் சபையிலுள்ளோர் செய்யும் பெரிய பாவங்களை அந்த ஆலோசனையின்படி மூப்பர்கள் கையாள வேண்டியிருக்கிறது. அடிமை வகுப்பார் நியாயமாக செயல்படுகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், எல்லாச் சபைகளும் மிஷனரி இல்லங்களும் பெத்தேல் வீடுகளும் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு அவர்கள் பைபிள்பூர்வ அறிவுரைகள் தருவதாகும். மூப்பர்கள் மட்டுமல்லாமல் மற்ற கிறிஸ்தவர்களும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்; அவர்கள் ஒருவரோடொருவர் பழகும்போதும், வியாபார விஷயமாகவோ வேறெந்த விஷயமாகவோ மற்றவர்களோடு பழகும்போதும் அப்படி நடந்துகொள்ள வேண்டும்.—மீகா 6:8, 11-ஐ வாசியுங்கள்.
நீதிமான்களுக்கு ஆசீர்வாதங்கள்
15, 16. (அ) இந்த உலகின் துர்ச்செய்திகள் நீதிமான்களை எப்படிப் பாதிக்கின்றன? (ஆ) தொடர்ந்து எதைச் செய்ய கடவுளுடைய ஊழியர்கள் தீர்மானமாய் இருக்கிறார்கள்?
15 “அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் [“என்றென்றும் நினைவுகூரப்படுவான்,” NW]. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.” (சங். 112:6-8) போர், தீவிரவாதம், புதுப்புது நோய்கள், மீண்டும் தலைதூக்குகிற பழைய நோய்கள், குற்றச்செயல், ஏழ்மை, தீங்கு விளைவிக்கும் தூய்மைக்கேடு போன்ற துர்ச்செய்திகள் இன்று சரித்திரம் காணாதளவுக்கு அதிகமதிகமாகக் கேட்கப்படுகின்றன. கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக இருப்பவர்கள் இந்தத் துர்ச்செய்திகளின் பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாதென்றாலும், எதிர்காலத்தை நினைத்து அவர்கள் அஞ்சி நடுங்குவதில்லை. மாறாக, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதால் அவர்களுடைய இருதயம் ‘திடனாயும்’ ‘உறுதியாயும்’ இருக்கிறது; கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகம் விரைவில் வரவிருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். துன்பங்கள் வந்தாலும், அவர்களால் நன்கு சமாளிக்க முடிகிறது; ஏனென்றால், உதவிக்காக அவர்கள் யெகோவாவைச் சார்ந்திருக்கிறார்கள். நீதிமான்கள் ‘அசைக்கப்படும்படி’ அவர் ஒருபோதும் விடமாட்டார்; மாறாக, சகித்திருப்பதற்கான பலத்தைக் கொடுத்து உதவுவார்.—பிலி. 4:13.
16 நீதிமான்கள் பகைமையையும் சத்துருக்கள் பரப்பும் பொய்களையும் சகிக்க வேண்டியுள்ளது; என்றாலும், உண்மைக் கிறிஸ்தவர்களின் ஊழியத்தை எதுவுமே தடுத்துநிறுத்த முடியவில்லை, இனியும் தடுத்துநிறுத்த முடியாது. கடவுளுடைய ஊழியர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, ஆர்வம் காட்டுகிறவர்களைச் சீஷராக்கும் வேலையில் தளராமல் உறுதியோடு ஈடுபடுகிறார்கள். முடிவு நெருங்க நெருங்க, நீதிமான்களுக்கு இன்னுமதிக எதிர்ப்புகள் வரும் என்பதில் சந்தேகமில்லை. பிசாசாகிய சாத்தான் மாகோகு தேசத்தின் கோகுவாக உலகெங்கும் உள்ள கடவுளின் ஊழியர்களைத் தாக்குகையில் இப்படிப்பட்ட எதிர்ப்புகள் உச்சக்கட்டத்தை எட்டும். அப்போது, ‘சத்துருக்களின் சரிக்கட்டுதலை’ நாம் முடிவாகக் காண்போம்; அவர்கள் படுதோல்வி அடைவார்கள். யெகோவாவின் பெயர் முழுமையாகப் பரிசுத்தமாக்கப்படுவதைக் காண்பது எத்தனை அருமையாய் இருக்கும்!—எசே. 38:18, 22, 23.
“மகிமையாய் உயர்த்தப்படும்”
17. நீதிமான்கள் எவ்வாறு ‘மகிமையாய் உயர்த்தப்படுவார்கள்’?
17 பிசாசிடமிருந்தும் அவனுடைய உலகத்திடமிருந்தும் எந்த எதிர்ப்புமில்லாமல் யெகோவாவை ஒருசேரப் புகழ்வது எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! கடவுளுடைய பார்வையில் தொடர்ந்து நீதிமான்களாக இருக்கும் அனைவரும் ஆனந்தத்தோடு அவரை என்றென்றும் புகழ்வார்கள். அவர்களுக்கு அவமானமும் தோல்வியும் ஏற்படாது; ஏனென்றால், நீதிமான் ‘மகிமையாய் உயர்த்தப்படுவான்’ என்று யெகோவா வாக்குக்கொடுக்கிறார். (சங். 112:9) யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை எதிர்க்கிற அனைவரும் வீழ்ச்சியடைவதைக் கண்டு, அவருடைய நீதிமான்கள் வெற்றிப் பெருமிதத்துடன் களிகூருவார்கள்.
18. சங்கீதம் 112-ன் முடிவான வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறும்?
18 “துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.” (சங். 112:10) கடவுளுடைய மக்களைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள், தங்களுடைய பொறாமையிலும் பகைமையிலும் ‘கரைந்துபோவார்கள்.’ நம்முடைய வேலை நின்றுபோவதைக் காண்பதற்கான அவர்களுடைய ஆசை, வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ அவர்களோடுகூட அழிந்துபோகும்.—மத். 24:21.
19. எதைக் குறித்து நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்?
19 அழிவில் தப்பிப்பிழைத்து, அந்த மாபெரும் வெற்றியைக் கண்டு களிகூரப்போகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களா? அல்லது சாத்தானுடைய உலகின் முடிவுக்கு முன்னரே வியாதியின் காரணமாகவோ வயோதிகத்தின் காரணமாகவோ நீங்கள் இறந்துவிட்டாலும், உயிர்த்தெழுப்பப்படப்போகிற ‘நீதிமான்களில்’ ஒருவராக இருப்பீர்களா? (அப். 24:15) இயேசுவின் மீட்புப் பலியில் தொடர்ந்து விசுவாசம் வைத்து, சங்கீதம் 112-ல் விவரிக்கப்பட்டுள்ள நீதியான ‘மனுஷனுக்கு’ ஒப்பானவர்களைப்போல் யெகோவாவைப் பின்பற்றினால், இக்கேள்விகளுக்கு ஆம் என்றே பதிலளிப்பீர்கள். (எபேசியர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்டவர்கள் எப்போதும் ‘நினைவுகூரப்படும்படி’ யெகோவா பார்த்துக்கொள்வார், அவர்களுடைய நீதியான செயல்கள் மறக்கப்படாதபடியும் பார்த்துக்கொள்வார். ஆம், யெகோவா அவர்களை என்றென்றைக்கும் நினைவுகூருவார், என்றென்றைக்கும் நேசிப்பார்.—சங். 112:3, 6, 9.
[அடிக்குறிப்பு]
a இந்தச் சங்கீதங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருப்பதை அவற்றின் எழுத்துநடையும், அவற்றிலுள்ள விஷயங்களும் காட்டுகின்றன. 111-ஆம் சங்கீதத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள கடவுளின் குணங்களை தேவபயமுள்ள “மனுஷன்” பின்பற்றுவதாக 112-ஆம் சங்கீதம் குறிப்பிடுகிறது; சங்கீதம் 111:3, 4-யும் சங்கீதம் 112:3, 4-யும் ஒப்பிடுகையில் இதைப் பார்க்க முடிகிறது.
தியானிக்க சில கேள்விகள்
• “அல்லேலூயா” என்று குரலெழுப்ப நமக்கு என்ன சில காரணங்கள் இருக்கின்றன?
• நம் காலத்தில் நடந்திருக்கும் என்ன முன்னேற்றத்தைக் குறித்து உண்மைக் கிறிஸ்தவர்கள் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்?
• எப்படிப்பட்ட மனநிலையோடு கொடுப்பவரை யெகோவா நேசிக்கிறார்?
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவுக்குமுன் எப்போதும் நீதிமான்களாயிருக்க, நாம் இயேசு சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைப்பது அவசியம்
[பக்கம் 26-ன் படங்கள்]
மனப்பூர்வமாய்க் கொடுக்கப்படும் நன்கொடைகள் நிவாரணப் பணிக்கும், பைபிள் பிரசுரங்களை வினியோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன