தீயவனின் முகமூடி கிழிக்கப்படுகிறது!
முதல் நூற்றாண்டில் யூதர்களில் அநேகர், வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். (யோவான் 6:14) இயேசு பூமிக்கு வந்தபோது, ஆறுதலையும் அறிவொளியையும் கொண்டு வந்தார். நோய்நொடியால் அவதியுற்றவர்களை குணப்படுத்தினார், பசியால் வாடியோருக்கு உணவளித்தார், இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தினார், ஏன், மரித்தவர்களையும்கூட உயிர்த்தெழுப்பினார்! (மத்தேயு 8:26; 14:14-21; 15:30, 31; மாற்கு 5:38-43) அவர் யெகோவாவின் வார்த்தைகளைப் பேசினார்; மனிதர்கள் என்றென்றும் வாழ முடியும் என்ற வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கை அளித்தார். (யோவான் 3:34) மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் அதன் தீய விளைவுகளிலிருந்தும் விடுவிக்க வந்த மேசியா தாமே என்பதை இயேசு சொல்லாலும் செயலாலும் நிரூபித்தார்.
நியாயமாகப் பார்த்தால் யூத மதத் தலைவர்களே முதலில் இயேசுவை வரவேற்று அவருக்குச் செவிசாய்த்து அவருடைய வழிநடத்துதலை சந்தோஷத்தோடு ஏற்றிருக்க வேண்டும். அவர்களோ அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இயேசுவை வெறுத்து, துன்புறுத்தி, அவரைக் கொலை செய்வதற்கும் திட்டம் தீட்டினார்கள்.—மாற்கு 14:1, 15:1-3, 9-15.
அப்படிப்பட்ட கொடியவர்களை இயேசு கண்டனம் செய்தது சரியே. (மத்தேயு 23:33-35) அதே சமயத்தில், அவர்களுடைய அந்தத் தீய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அவர்களை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியாது, அதற்குப் பின்னால் வேறொருவனும் இருக்கிறான் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாய் இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.” (யோவான் 8:44) தீயச் செயல்களுக்கு மனிதன் ஓரளவு காரணமாக இருந்தாலும் அதற்குப் பிறப்பிடமாக வேறொருவன் இருக்கிறான் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். அவன்தான் பிசாசாகிய சாத்தான்.
சாத்தான் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை” என்று இயேசு சொன்னபோது, முன்பு ஒரு காலத்தில் கடவுளுக்கு உண்மையுள்ள ஊழியனாய் இருந்த இந்த ஆவி சிருஷ்டி காலப்போக்கில் வழிவிலகிச் சென்றுவிட்டதை அர்த்தப்படுத்தினார். யெகோவாவுக்கு விரோதமாக சாத்தான் கலகம் செய்ததற்கு என்ன காரணம்? கடவுளுக்கு மட்டுமே உரிய வணக்கத்தை தான் பெறவேண்டும் என்ற தவறான ஆசை துளிர்விடுமளவுக்கு அவன் தனக்குள் தற்பெருமையை ஊட்டி வளர்த்ததே அதற்குக் காரணம்.a—மத்தேயு 4:8, 9.
சாப்பிட வேண்டாம் என்று கடவுள் சொல்லியிருந்த பழத்தை சாப்பிடும்படி ஏதேன் தோட்டத்தில் ஏவாளை தூண்டியபோது சாத்தானுடைய கலக மனப்பான்மை வெளிப்பட்டது. சரித்திரத்திலேயே முதல் பொய்யை சொன்னதாலும் யெகோவாவை பழிதூற்றியதாலும் சாத்தான் ‘பொய்க்குப் பிதாவானான்.’ மேலுமாக, ஆதாமையும் ஏவாளையும் கீழ்ப்படியாமல் போகச் செய்வதன்மூலம், அவர்களை பாவத்திற்கு அடிமைகளாக்கினான், அதன் விளைவாக அவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய சந்ததியாரும் மரணம் எனும் பாதாளத்தில் விழுந்தார்கள். அதன்மூலம் சாத்தான் தன்னை ‘கொலைபாதகனாகவும்’ ஆக்கிக்கொண்டான். ஆம், சரித்திரம் காணாத கொடூர கொலைகாரன் அவன்!—ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12.
பரலோகத்திலுள்ள தூதர்களையும் சாத்தான் தன் வலையில் சிக்க வைத்தான். தன்னுடைய கலகத்தில் அவர்களையும் சேர்த்துக்கொண்டான். (2 பேதுரு 2:4) சாத்தானைப் போலவே இந்தத் தூதர்களும் மனிதர்களிடம் தவறான விதத்தில் ஈர்க்கப்பட்டார்கள். அதாவது, இயல்புக்கு முரணான பாலின ஆசையை வளர்த்தார்கள். அது பயங்கரமான தீய விளைவுகளையே பிறப்பித்தது.
தீமை பூமியை நிரப்பிற்று
“மனுஷர் . . . பெருகத்துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. (ஆதியாகமம் 6:1, 2) அந்த “தேவகுமாரர்” யார்? அவர்கள் ஆவி சிருஷ்டிகள், மனிதர்கள் அல்ல. (யோபு 1:6; 2:1) நமக்கு எப்படித் தெரியும்? இதை கவனியுங்கள்: மனிதர்கள் மத்தியில் கிட்டத்தட்ட 1,500 வருடங்களாகவே திருமணங்கள் நடந்து வந்திருந்தன; ஆகவே, அந்தத் திருமணங்களை இவ்வசனத்தில் விசேஷமாகக் குறிப்பிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், மாம்ச உடலில் வந்த “தேவகுமாரர்” ‘மனுஷகுமாரத்திகளோடு’ உறவுகொண்டதைப்பற்றி பைபிள் விசேஷமாகக் குறிப்பிடுவதன் மூலம், இது முன்னொருபோதும் நடந்திராத, இயல்புக்கு மாறான ஒன்று என்பதை அந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது.
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். இதை வைத்தே அந்தத் திருமணங்கள் இயல்புக்கு மாறானவையாக இருந்தன என்று சொல்லிவிடலாம். அந்தப் பிள்ளைகள் நெஃபிலிம் என்றழைக்கப்பட்டார்கள். அவர்கள் மூர்க்கத்தனமான இராட்சதர்களாய் ஆனார்கள். சொல்லப்போனால், “நெஃபிலிம்” என்பதன் அர்த்தமே “வீழ்த்துபவர்கள்” அல்லது “மற்றவர்களை விழச் செய்கிறவர்கள்” என்பதாகும். இந்த மிருககுணம் படைத்தவர்கள் ‘பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்கள்’ என்று வர்ணிக்கப்படுகிறார்கள்.—ஆதியாகமம் 6:4.
இந்த நெஃபிலிம்கள் தங்கள் தகப்பன்மார்களோடு சேர்ந்து தீமையை எங்கும் பரவச் செய்தார்கள். “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது . . . கொடுமையினால் நிறைந்திருந்தது” என்று ஆதியாகமம் 6:11 சொல்கிறது. ஆம், தங்களுக்கு மத்தியில் வாழ்ந்த இந்த இராட்சதர்களின் வன்முறையான, சீர்கெட்ட வழிகளை மனிதர்களும் பின்பற்றத் துவங்கினார்கள்.
நெஃபிலிம்களும் அவர்களுடைய தகப்பன்மார்களும் மனிதர்களை இப்படிப்பட்ட சீர்கெட்ட நிலைக்குத் தள்ள என்ன செய்தார்கள்? பாவம் செய்யும்படி மனிதனுக்கு உள்ள தூண்டுதலையும் ஆசைகளையும் பயன்படுத்திக்கொண்டார்கள். அதன் விளைவு? ‘மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டார்கள்.’ அதன் காரணமாக, அன்றைய உலகத்தை பூகோள ஜலப்பிரளயத்தினால் யெகோவா அழித்தார்; நீதியுள்ள நோவாவையும் அவருடைய குடும்பத்தினரையும் மட்டும் காப்பாற்றினார். (ஆதியாகமம் 6:5, 12-22) மனித ரூபத்தில் வந்திருந்த அந்தத் தூதர்கள் அவமானத்துடன் பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். கீழ்த்தரமாய் நடந்துகொண்ட இந்தப் பேய்கள் கடவுளையும் உண்மையுள்ள தூதர்களாலான அவருடைய நீதியுள்ள குடும்பத்தையும் தொடர்ந்து எதிர்த்தார்கள். அச்சமயம் முதற்கொண்டு, இந்தப் பொல்லாத ஆவிகள் மனித ரூபத்திற்கு மாற முடியாதபடி கடவுள் தடை செய்திருக்கிறார் என்றே தெரிகிறது. (யூதா 6) ஆனாலும்கூட, மனித விவகாரங்களில் அவர்கள் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறார்கள்.
தீயவன் வெளிச்சத்தில்!
‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று 1 யோவான் 5:19 சொல்கையில், எந்தளவு சாத்தானுடைய தீய செல்வாக்கு பரவியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. பிசாசானவன், முழு மனிதவர்க்கத்தையும் புயலைப்போன்று வேகமாய் அதிகரித்துக்கொண்டே இருக்கும் துயரங்களில் ஆழ்த்தி வருகிறான். பார்க்கப்போனால், தீமையை விளைவிக்க எப்பொழுதையும்விட இப்பொழுது உறுதியாய் செயல்பட்டு வருகிறான். ஏன்? ஏனென்றால், 1914-ல் தேவனுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் அவனும் அவனைச் சேர்ந்த பொல்லாத தூதர்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டார்கள். இதைக் குறித்து பைபிள் இவ்வாறு முன்னறிவித்தது: “பூமியில் . . . குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:7-12) அப்படியென்றால், மனிதவர்க்கத்தின் மீது எவ்வாறு சாத்தான் தனது செல்வாக்கை செலுத்தி வருகிறான்?
தன்னுடைய செல்வாக்கை மக்களின் மீது திணிப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் முக்கியமான ஒரு வழி, அவர்களுடைய சிந்தனையையும் செயலையும் பாதிக்கும் ஒரு மனப்பான்மையை தூண்டிவிடுவதாகும். எனவேதான், பிசாசை “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவி [அல்லது, மேலோங்கி இருக்கும் மனப்பான்மை]” என்று எபேசியர் 2:2 அழைக்கிறது. தெய்வீக பயத்தையும் நற்குணத்தையும் ஊக்குவிப்பதற்குப் பதிலாக, பிசாசின் இந்த “ஆவி” கடவுளுக்கும் அவருடைய தராதரங்களுக்கும் விரோதமாக கலகத்தையே உண்டுபண்ணுகிறது. இப்படியாக, சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் மனிதர்களின் தீய செயல்களை வளர்ப்பதில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
‘உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்’
இந்த ‘ஆவியின்’ ஓர் அடையாளமான ஆபாசம், கொள்ளைநோய்போல் வேகமாய் பரவி வருகிறது. அது தவறான பாலின ஆசைகளை கிளறிவிட்டு இயல்புக்கு மாறான செயல்களை இன்பமானவை போன்று தோன்றச் செய்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:3-5) கற்பழிப்பு, காமவெறி, கும்பலாக கற்பழித்தல், மிருகப்புணர்ச்சி, சிறார் பாலின துஷ்ப்பிரயோகம் போன்றவற்றை ஆபாச படங்கள் ஆர்வமூட்டும் விதத்தில் சித்தரிக்கின்றன. ஆரம்பத்தில், வெறுமனே ஆபாசத்தைப் பார்ப்பதிலும் அல்லது அதைப்பற்றி வாசிப்பதிலும் எந்த ஆபத்தும் இல்லை என்று நினைக்கலாம். ஆனாலும் அது தீங்கிழைக்கும் ஆபத்தில்போய் முடிவடையக்கூடும். அப்படிப்பட்டவர்கள் போகப்போக அதற்கு அடிமைகளாகிவிடுவார்கள்.b அது மற்றவர்களோடு அவர்களுக்கு உள்ள உறவை மட்டுமல்ல கடவுளிடம் அவர்களுக்கு உள்ள உறவையும் கெடுத்துப் போடும் தீய சக்தியாக இருக்கிறது. ஆகவே, ஆபாசம் அதை ஆரம்பித்து வைத்த பேய்களின் கீழ்த்தரமான சிந்தையைச் சித்தரிக்கிறது. அதாவது, ஜலப்பிரளயத்திற்கு முன்னான நோவாவின் காலத்திலேயே அந்தப் பொல்லாத பேய்களின் கீழ்த்தரமான பாலின ஆசைகள் வெளிப்பட்டிருந்தது.
எனவேதான், ஞானியாகிய சாலொமோன் இவ்வாறு அறிவுறுத்தினார்: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) ஆபாசம் என்னும் கண்ணியில் சிக்காமல் உங்களுடைய இருதயத்தைக் காத்துக்கொள்ள சில நடைமுறையான வழிகளை நீங்கள் பின்பற்றலாம். பாலின உணர்ச்சிகளை கிளறிவிடும் தரக்குறைவான காட்சிகள் வருகையில், டிவி சேனல்களை மாற்றுங்கள் அல்லது கம்ப்யூட்டரை நிறுத்துங்கள். இந்த விஷயத்தில் உடனடியாகவும் தீர்மானமாகவும் செயல்பட வேண்டியது முக்கியம்! உங்கள் இருதயத்தைக் குறிபார்த்து எய்யப்படும் ஒரு அம்பை தடுத்து நிறுத்த முயலும் ஒரு போர்ச்சேவகராக உங்களை நினைத்துக்கொள்ளுங்கள். உணர்ச்சிகளுக்கும் ஆசைகளுக்கும் பிறப்பிடமாக இருக்கும் உங்களுடைய அடையாளப்பூர்வமான இருதயத்தைச் சாத்தான் குறிவைத்து கெடுக்க பார்க்கிறான்.
வன்முறையை நேசிப்பதிலிருந்தும் உங்களுடைய இருதயத்தை பாதுகாக்க வேண்டும், ஏனென்றால், ‘கொடுமையில் [“வன்முறையில்,” NW] பிரியமுள்ளவனை அவருடைய [யெகோவாவுடைய] உள்ளம் வெறுக்கிறது.’ (சங்கீதம் 11:5) கடவுளின் விரோதியாக ஆக்குவதற்கு, சாத்தான் உங்களை இரத்த வெறிபிடித்த கொடூரனாக மாற்ற வேண்டியதில்லை, அவன் நினைத்ததைச் சாதிக்க, வெறுமனே, உங்களை வன்முறையை நேசிக்க தூண்டிவிட்டாலே போதும். இன்றைய மீடியாக்களில் வன்முறையோடுகூட மாயமந்திர காட்சிகளும் வருவது தற்செயலான ஒன்றல்ல. ஏனென்றால், நெஃபிலிம்கள் இன்று இல்லாவிட்டாலும் அவர்களுடைய பழக்கவழக்கங்களும் பண்புகளும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன! நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு சாத்தானின் தந்திரங்களை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று காட்டுகிறதா?—2 கொரிந்தியர் 2:11.
சாத்தானுடைய தீய பாதிப்பை எவ்வாறு எதிர்க்கலாம்
தீய ஆவிகளை மேற்கொள்வது கடினமாகத் தோன்றலாம். கடவுளைப் பிரியப்படுத்த கடினமாக முயற்சி செய்கிறவர்கள் தங்களுடைய அபூரண சரீரத்தோடு மட்டுமின்றி, ‘பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் போராட வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. அந்தப் போராட்டத்தை ஜெயிப்பதற்கும் கடவுளுடைய தயவைப் பெறுவதற்கும் அவர் செய்திருக்கும் அநேக ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.—எபேசியர் 6:12; ரோமர் 7:21-25.
இந்த ஏற்பாடுகளில், கடவுளுடைய பரிசுத்த ஆவியும் அடங்கும்; இது சர்வலோகத்திலேயே மிகவும் வல்லமை வாய்ந்த சக்தியாகும். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல் . . . தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (1 கொரிந்தியர் 2:12) கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறவர்கள் கடவுள் நேசிப்பவற்றை நேசிக்கவும், அவர் வெறுப்பவற்றை வெறுக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். (ஆமோஸ் 5:15) பரிசுத்த ஆவியை ஒருவர் எவ்வாறு பெறலாம்? முக்கியமாக, ஜெபிப்பதன் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட பைபிளைப் படிப்பதன் மூலமாகவும், கடவுளை உண்மையாக நேசிப்பவர்களோடு கூட்டுறவு கொள்வதன் மூலமாகவும் பெறலாம்.—லூக்கா 11:13; 2 தீமோத்தேயு 3:16; எபிரெயர் 10:24, 25.
கடவுளுடைய இந்த ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதன்மூலம், ‘பிசாசின் தந்திரங்களிலிருந்து’ பாதுகாப்பளிக்கும் ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளத்’ தொடங்குகிறீர்கள். (எபேசியர் 6:11-18) இந்த ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது எப்போதையும்விட இப்போது அதிக அவசரமாயிருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்?
தீமையின் முடிவு விரைவில்!
“துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்” என்று சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 92:7) ஆம், நோவாவின் நாட்களைப் போலவே, அதிவேகமாக அதிகரித்துக்கொண்டேபோகும் தீமை, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு சமீபித்திருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. அந்த நியாயத்தீர்ப்பு பொல்லாத மனிதர்களுக்கு விரோதமாக மட்டுமல்ல, சாத்தானுக்கும் அவனோடு சேர்ந்தப் பேய்களுக்கும் விரோதமாக இருக்கும். சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் செயல்படமுடியாத ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டு, பிறகு அழிக்கப்படுவார்கள். (2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10) அந்த நியாயத்தீர்ப்பை யார் நிறைவேற்றுவார்? அவர் வேறு யாருமல்ல, இயேசு கிறிஸ்துவே. அவரைப்பற்றி இவ்வாறு வாசிக்கிறோம்: “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”—1 யோவான் 3:8.
தீமை முடிவுக்கு கொண்டுவரப்படும் அந்த நாளுக்காக நீங்கள் ஏங்குகிறீர்களா? அப்படியென்றால், பைபிளில் அடங்கியிருக்கும் வாக்குறுதிகளினால் நீங்கள் ஆறுதலடையலாம். சாத்தானே தீமைக்குப் பிறப்பிடம் என்பதை வேறெந்த புத்தகமும் வெளிப்படுத்துவதில்லை; அவனுக்கும் அவனுடைய தீயச்செயல்களுக்கும் எவ்வாறு முடிவு வரும் என்பதையும் வேறெந்த புத்தகமும் சொல்வதில்லை. சாத்தானுடைய தீய பாதிப்புகளிலிருந்து இப்போது உங்களை பாதுகாத்துக்கொள்ளவும், தீமையில்லாத உலகில் வாழும் நம்பிக்கையைக் காத்துக்கொள்ளவும், பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.—சங்கீதம் 37:9, 10.
[அடிக்குறிப்புகள்]
a சாத்தானாக மாறிய தூதனுடைய நிஜப் பெயர் தெரியவில்லை. “சாத்தான்” என்பதற்கு “பகைவன்” என்றும் “பிசாசு” என்பதற்கு “பழிதூற்றுபவன்” என்றும் அர்த்தம். சில விதங்களில், சாத்தானுடைய போக்கு, பண்டைய தீரு பட்டணத்தின் ராஜாவினுடையதைப் போலவே இருக்கிறது. (எசேக்கியேல் 28:12-19) இரண்டு பேருமே நல்லவர்களாகத்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள், ஆனால் காலப்போக்கில் அகந்தைக்கு அடிமைகளானார்கள்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட ஆகஸ்ட் 8, 2003 விழித்தெழு! இதழில் வெளிவந்த “ஆபாசம்—தீங்கற்றதா தீங்கானதா?” என்ற தொடர் கட்டுரைகளைக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
உண்மையைச் சுற்றி பின்னப்பட்ட கட்டுக்கதைகள்
அரைதெய்வங்கள், அரக்கர்களைப் பற்றியும் பயங்கரமான ஒரு வெள்ளப்பெருக்கைப் பற்றியுமான கதைகள் உலகமுழுவதிலுமுள்ள புராணக்கதைகளில் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, அக்காடிய இனத்தவரின் கில்காமேஷ் காப்பியத்தில் வெள்ளத்தையும் கப்பலையும், தப்பிப்பிழைத்த சிலரையும்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. கில்காமேஷ் என்பவன் காமுகனாகவும் மூர்க்கமான அரைத்தெய்வமாகவும் வர்ணிக்கப்படுகிறான். அதாவது, தெய்வத்தன்மை கொஞ்சமும் மனிதத்தன்மை கொஞ்சமும் உடையவனாக வர்ணிக்கப்படுகிறான். அஸ்தெக் இனத்தவரின் புராணம், அரக்கர்களால் நிறைந்திருந்த பண்டைய உலகத்தைப் பற்றியும் ஒரு பெரிய ஜலப்பிரளயத்தைப் பற்றியும் சொல்கிறது. ஸ்கான்டிநேவியர்களின் புராணக்கதை, அரக்கர் இனத்தைப் பற்றியும் ஒரு பெரிய படகை உருவாக்கி தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றிக்கொண்ட பார்கெல்மிர் என்ற ஞானியைப் பற்றியும் சொல்கிறது. இதுபோன்ற புராணக்கதைகளின் சான்றுகள், மனிதர்கள் அனைவருமே பூர்வத்திலிருந்த பொல்லாத உலகத்தை அழித்த ஒரு ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்ற பைபிளின் கருத்துக்கு வலுசேர்க்கின்றன.
[படம்]
கில்காமெஷ் காப்பியம் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகை
[படத்திற்கான நன்றி]
The University Museum, University of Pennsylvania (neg. # 22065)
[பக்கம் 5-ன் படம்]
நெஃபிலிம்களின் பண்புகள் இன்றும் மக்களிடம் காணப்படுகின்றன
[பக்கம் 7-ன் படம்]
திருத்தமான அறிவு, தீய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது