அவர்கள் மேசியாவைக் கண்டுகொண்டார்கள்!
“நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்.”—யோவா. 1:41.
1. “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று அந்திரேயா ஏன் சொன்னார்?
யோவான் ஸ்நானகர் தன் சீடர்கள் இரண்டு பேருடன் நின்றுகொண்டிருக்கிறார். இயேசு வரும்போது, “இதோ! கடவுளுடைய ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானகர் கூறுகிறார். உடனடியாக, அந்த இரண்டு சீடர்களான அந்திரேயாவும் யோவானும் இயேசுவுக்குப் பின்னால் சென்று அந்நாள் முழுவதும் அவரோடு இருக்கிறார்கள். பிற்பாடு, அந்திரேயா தன் சகோதரனான சீமோன் பேதுருவைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று உற்சாகம்பொங்க கூறுகிறார். பின்பு, அவரை இயேசுவிடம் அழைத்துச் செல்கிறார்.—யோவா. 1:35-41.
2. மேசியா பற்றிய தீர்க்கதரிசனங்களை ஆராய்வதால் நமக்கு என்ன பலன்?
2 காலப்போக்கில், அந்திரேயாவும் பேதுருவும் மற்றவர்களும் வேதவசனங்களை ஆராய்ந்து பார்த்து, நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்று முழு நம்பிக்கையோடு சொன்னார்கள். மேசியா யாரென்று நிரூபிக்கிற இன்னும் சில தீர்க்கதரிசனங்களை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம். அவ்வாறு செய்வது, கடவுளுடைய வார்த்தை மீதும் அவரால் நியமிக்கப்பட்டவர் மீதும் நமக்குள்ள விசுவாசத்தை நிச்சயம் பலப்படுத்தும்.
“இதோ! உன்னுடைய ராஜா வருகிறார்”
3. இயேசு ஒரு ராஜாவைப் போல எருசலேமிற்குள் நுழைந்தபோது எந்தெந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின?
3 ஒரு ராஜாவைப் போல மேசியா எருசலேமிற்குள் நுழைவார். “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்” என்று சகரியா தீர்க்கதரிசனம் உரைத்தார். (சக. 9:9) “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 118:26) இயேசு எருசலேமிற்குள் நுழைந்தபோது ஒரு பெரிய கூட்டம் சந்தோஷத்தோடு ஆர்ப்பரித்தது. அப்படிச் செய்யும்படி இயேசு அவர்களிடம் சொல்லவில்லை. ஆனால், தீர்க்கதரிசனம் கூறியதை அவர்கள் அப்படியே நிறைவேற்றினார்கள். அதைப் பற்றி பைபிளிலிருந்து வாசிக்கையில் அந்தக் காட்சியைக் கற்பனை செய்துபாருங்கள், அவர்களுடைய சந்தோஷக் கூக்குரலைக் கேளுங்கள்.—மத்தேயு 21:4-9-ஐ வாசியுங்கள்.
4. சங்கீதம் 118:22, 23 எவ்வாறு நிறைவேறியதென்று விளக்குங்கள்.
4 இயேசுவை மேசியாவாக அநேகர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் கடவுளுடைய பார்வையில் அவர் விலைமதிப்புள்ளவர். முன்னுரைக்கப்பட்டபடி, விசுவாசமில்லாதவர்கள் இயேசுவை ‘அசட்டைபண்ணி, புறக்கணித்தார்கள்.’ (ஏசா. 53:3; மாற். 9:12) என்றாலும், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று” என்று கூறும்படி சங்கீதக்காரனைக் கடவுள் ஏவியிருந்தார். (சங். 118:22, 23) தம்மை எதிர்த்த மதத்தலைவர்களிடம் இயேசு இந்தப் பகுதியைச் சுட்டிக் காண்பித்தார்; இது இயேசுவில் நிறைவேறியது என்று பேதுருவும் கூறினார். (மாற். 12:10, 11; அப். 4:8-11) ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத்தில் முக்கிய மூலைக்கல் இருக்கும். அதைப்போல், கிறிஸ்தவச் சபையின் அஸ்திவாரத்தில் இயேசு ‘மூலைக்கல்லாக’ இருக்கிறார். தேவபக்தியற்ற மனிதர்கள் அவரை நிராகரித்தபோதிலும், அவர் ‘கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் அவருடைய பார்வையில் விலைமதிப்புள்ளவராகவும்’ இருக்கிறார்.—1 பே. 2:4-6.
காட்டிக்கொடுக்கப்பட்டு, கைவிடப்படுவார்
5, 6. மேசியா காட்டிக்கொடுக்கப்படுவதைப் பற்றி என்ன தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டன, அவை எவ்வாறு நிறைவேறின?
5 நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவனே மேசியாவைக் காட்டிக்கொடுப்பான். “என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” என்று தாவீது தீர்க்கதரிசனம் உரைத்தார். (சங். 41:9) பைபிள் காலங்களில், ஒருவரோடு அப்பம் சாப்பிடுகிறவர் அவருடைய நண்பனாகக் கருதப்பட்டார். (ஆதி. 31:54) ஆகவே, மேசியாவின் நண்பனாக இருந்தவன் அவரை காட்டிக்கொடுத்து மாபெரும் துரோகம் செய்வான் என்று அந்தத் தீர்க்கதரிசனம் கூறியது. அவனைப் பற்றித்தான் இயேசு தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு கூறினார்: “உங்கள் எல்லாரையும் குறித்து நான் பேசவில்லை; நான் தேர்ந்தெடுத்தவர்களை அறிவேன். ஆனால், ‘என்னோடு சாப்பிட்டவனே எனக்கு எதிரியானான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.” ஆகவே, யூதாஸ் காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்தபோது தாவீதின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—யோவா. 13:18.
6 ஓர் அடிமையின் விலையான 30 வெள்ளிக்காசுகளுக்கு மேசியா காட்டிக்கொடுக்கப்படுவார். சகரியா 11:12, 13-ஐச் சுட்டிக்காட்டி, சொற்ப பணத்திற்கு மேசியா காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று மத்தேயு கூறினார். ஆனால், இது சகரியாவால் முன்னுரைக்கப்பட்டிருந்தபோது “எரேமியா தீர்க்கதரிசியின் மூலம்” முன்னுரைக்கப்பட்டது என்று ஏன் குறிப்பிட்டார்? மத்தேயு வாழ்ந்த காலத்தில், சகரியாவின் புத்தகமும் மற்ற பைபிள் புத்தகங்களும் அடங்கியிருந்த ஒரு தொகுப்பில் எரேமியாவின் புத்தகம் முதலில் வைக்கப்பட்டிருக்கலாம். (லூக்கா 24:44-ஐ ஒப்பிடுக.) யூதாஸ் அந்த 30 வெள்ளிக்காசுகளைச் செலவு செய்யவே இல்லை. அதை அவன் ஆலயத்திற்குள் வீசியெறிந்துவிட்டு, அங்கிருந்து போய்த் தூக்குப்போட்டுக்கொண்டான்.—மத். 26:14-16; 27:3-10.
7. சகரியா 13:7 எவ்வாறு நிறைவேறியது?
7 மேசியாவின் சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிடுவார்கள். “மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்” என்று சகரியா எழுதினார். (சக. 13:7) கி.பி. 33, நிசான் 14-ஆம் தேதி இயேசு தம் சீடர்களிடம் இவ்வாறு கூறினார்: “இன்றிரவு எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்; ஏனென்றால், ‘நான் மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.” அவர் சொன்னபடியே நடந்தது! “சீடர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்” என்று மத்தேயு எழுதினார்.—மத். 26:31, 56.
குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கப்படுவார்
8. ஏசாயா 53:8 எவ்வாறு நிறைவேறியது?
8 மேசியா நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படுவார். (ஏசாயா 53:8-ஐ வாசியுங்கள்.) நிசான் 14 அதிகாலையில் நியாயசங்கம் ஒன்றுகூடி, இயேசுவின் கைகளைக் கட்டி, ரோம ஆளுநராகிய பொந்தியு பிலாத்துவிடம் ஒப்படைத்தது. அவர் இயேசுவை விசாரித்தபோது எந்தக் குற்றத்தையும் காணவில்லை. ஆகவே, அவரை விடுதலை செய்யட்டுமா என்று பிலாத்து கூட்டத்தாரிடம் கேட்டார்; அவர்களோ, “அவனைக் கழுமரத்தில் அறையுங்கள்!” என்று கூச்சலிட்டார்கள். அவருக்குப் பதிலாக பரபாஸ் என்ற குற்றவாளியை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கும்பலைப் பிரியப்படுத்துவதற்காக பிலாத்து பரபாஸை விடுவித்துவிட்டு, இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்து, கழுமரத்தில் அறையப்பட ஒப்புக்கொடுத்தார்.—மாற். 15:1-15.
9. சங்கீதம் 35:11 எவ்வாறு நிறைவேறியது?
9 பொய் சாட்சிகள் மேசியாவுக்கு எதிராகச் சாட்சி சொல்வார்கள். “கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது கூறினார். (சங். 35:11) இந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாகவே, “பிரதான குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும் இயேசுவைக் கொலை செய்யும்படி, அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்ல யாராவது கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.” (மத். 26:59) “பலர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னபோதிலும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டன.” (மாற். 14:56) ‘சாட்சிகள் எப்படிப்பட்ட பொய்களைச் சொன்னாலும் பரவாயில்லை, இயேசு செத்தால் போதும்’ என அந்த வெறிபிடித்த எதிரிகள் நினைத்தார்கள்.
10. ஏசாயா 53:7 நிறைவேறிய விதத்தை விளக்குங்கள்.
10 தம்மீது குற்றஞ்சாட்டியவர்கள் முன்பாக மேசியா மௌனமாயிருப்பார். “அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” என்று ஏசாயா முன்னுரைத்தார். (ஏசா. 53:7) “பிரதான குருமார்களும் மூப்பர்களும் அவர்மீது [இயேசுமீது] குற்றம்சாட்டியபோது அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.” அதைக் கண்டு பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக இவர்கள் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்கள், அதையெல்லாம் நீ கேட்கவில்லையா?” என்றார். இருந்தாலும், இயேசு “பதில் சொல்லவில்லை, ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை; அதனால், ஆளுநர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.” (மத். 27:12-14) ஆம், தம்மீது குற்றஞ்சாட்டியவர்களை இயேசு சபித்துப் பேசவில்லை.—ரோ. 12:17-21; 1 பே. 2:23.
11. ஏசாயா 50:6, மீகா 5:1 ஆகிய வசனங்களின் நிறைவேற்றமாக என்ன நடந்தது?
11 மேசியா அடிக்கப்படுவார். “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை” என்று ஏசாயா முன்னுரைத்தார். (ஏசா. 50:6) “இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்” என்று மீகா முன்னுரைத்தார். (மீ. 5:1) இத்தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதை உறுதி செய்பவராக சுவிசேஷ எழுத்தாளரான மாற்கு இவ்வாறு கூறினார்: “சிலர் அவர்மீது [இயேசுமீது] துப்பினார்கள்; அவரது முகத்தை முழுவதுமாக மூடி, தங்கள் கைமுஷ்டிகளால் குத்தி, ‘யாரென்று தீர்க்கதரிசனம் சொல்!’ என்றார்கள். பின்பு, நீதிமன்றப் பணியாளர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து, அவரைக் கொண்டுபோனார்கள்.” பிறகு போர்வீரர்கள், “ஒரு கோலினால் அவருடைய தலையில் அடித்து, அவர்மீது துப்பி, [கிண்டலாக] அவர்முன் மண்டியிட்டுத் தலைவணங்கினார்கள்.” (மாற். 14:65; 15:19) அவர்கள் இயேசுவை அவ்வாறு நடத்தியதற்கு எந்த நியாயமான காரணமும் இருக்கவில்லை.
மரணம்வரை உண்மையாய் இருப்பார்
12. சங்கீதம் 22:16, ஏசாயா 53:12 ஆகிய வசனங்கள் இயேசுவில் எவ்வாறு நிறைவேறின?
12 மேசியா கழுமரத்தில் அறையப்படுவார். “பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்று சங்கீதக்காரன் தாவீது கூறினார். (சங். 22:16) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது அனைவரும் அறிந்ததே; ‘அவரைக் கழுமரத்தில் அறைந்தார்கள்; அப்போது மூன்றாம் மணிநேரமாக [காலை சுமார் 9 மணியாக] இருந்தது’ என்று சுவிசேஷ எழுத்தாளரான மாற்கு கூறினார். (மாற். 15:25) பாவிகளில் ஒருவராக மேசியா எண்ணப்படுவார் என்றும் முன்னுரைக்கப்பட்டிருந்தது. ‘அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்’ என்று ஏசாயா எழுதினார். (ஏசா. 53:12) அதன் நிறைவேற்றமாக, “அவருடைய வலது பக்கம் ஒருவனும் இடது பக்கம் ஒருவனுமாக இரண்டு கொள்ளைக்காரர்களைக் கழுமரங்களில் ஏற்றினார்கள்.”—மத். 27:38.
13. சங்கீதம் 22:7, 8 இயேசுவில் எவ்வாறு நிறைவேறியது?
13 மேசியா பழித்துப் பேசப்படுவார் என்று தாவீது முன்னுரைத்தார். (சங்கீதம் 22:7, 8-ஐ வாசியுங்கள்.) இயேசு கழுமரத்தில் வேதனைப்பட்டபோது பழித்துப் பேசப்பட்டார்; “அவ்வழியே போனவர்கள் ஏளனம் செய்கிற விதத்தில் தங்கள் தலைகளை ஆட்டி, ‘ஆலயத்தைத் தகர்த்துப்போட்டு மூன்று நாட்களில் கட்டப்போகிறவனே, உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ கடவுளுடைய மகன் என்றால் கழுமரத்தைவிட்டு இறங்கி வா!’ என்று அவரைப் பழித்துப் பேசினார்கள்” என மத்தேயு எழுதினார். அதைப்போலவே, பிரதான குருமார்களும் வேத அறிஞர்களும் மூப்பர்களும் அவரைக் கேலி செய்து, “மற்றவர்களைக் காப்பாற்றினான், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவன் இஸ்ரவேலின் ராஜாவாம்; இப்போது கழுமரத்தைவிட்டுக் கீழே இறங்கி வருகிறானா பார்ப்போம், பிறகு இவனை நம்புவோம். இவன்தான் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறானே; ‘நான் கடவுளுடைய மகன்’ என்றுகூடச் சொன்னானே, அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்போது இவனைக் காப்பாற்றட்டும்” என்றார்கள். (மத். 27:39-43) இந்த எல்லா பாடுகள் மத்தியிலும் இயேசு அமைதியாக இருந்தார், தவறான எதையும் சொல்லவில்லை. நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி!
14, 15. மேசியாவின் உடை, அவருக்குக் குடிக்க காடி கொடுக்கப்பட்டது பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின?
14 மேசியாவின் உடைக்காகக் குலுக்கல் போடுவார்கள். “என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்” என்று சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக எழுதினார். (சங். 22:18) உண்மையில் நடந்ததும் அதுதான்; ரோமப் போர்வீரர்கள் இயேசுவை “கழுமரத்தில் அறைந்தபின், குலுக்கல் போட்டுப் பார்த்து அவருடைய மேலங்கிகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்.”—மத். 27:35; யோவான் 19:23, 24-ஐ வாசியுங்கள்.
15 காடியையும் கசப்புப் பொருள் கலந்த திராட்சமதுவையும் மேசியாவுக்குக் குடிக்கக் கொடுப்பார்கள். “என் ஆகாரத்தில் கசப்புக்கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்” என்று சங்கீதக்காரன் கூறினார். (சங். 69:21) அதன் நிறைவேற்றமாக, “கசப்புப் பொருள் கலந்த திராட்சமதுவை அவருக்குக் [இயேசுவுக்குக்] குடிக்கக் கொடுத்தார்கள்; அவரோ அதை ருசிபார்த்துவிட்டு, குடிக்க மறுத்தார்” என்றும், அதற்குப் பிறகு “அவர்களில் ஒருவன் ஓடிப்போய், புளிப்பான திராட்சமதுவில் ஒரு கடற்பஞ்சை நனைத்து, அதை ஒரு கோலில் மாட்டி, குடிப்பதற்காக அவருக்குக் கொடுக்கப் போனான்” என்றும் மத்தேயு கூறுகிறார்.—மத். 27:34, 48.
16. சங்கீதம் 22:1-லுள்ள வார்த்தைகள் நிறைவேறிய விதத்தை விளக்குங்கள்.
16 மேசியாவைக் கடவுள் கைவிட்டதுபோல் தோன்றும். (சங்கீதம் 22:1-ஐ வாசியுங்கள்.) இத்தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, “இயேசு ஒன்பதாம் மணிநேரத்தில் [மாலை சுமார் 3 மணிக்கு], ‘ஏலி, ஏலி, லாமா சபக்தானி?’ என்று உரத்த குரலில் சத்தமிட்டார்; அதற்கு, ‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?’ என்று அர்த்தம்.” (மாற். 15:34) தம் பரம தகப்பன்மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதால் இயேசு அப்படிச் சொல்லவில்லை. மரணத்தின்போது தமது எதிரிகளிடமிருந்து அவர் தம்மைக் காப்பாற்ற மாட்டார் என்று இயேசு அறிந்திருந்தார். தம்முடைய உத்தமத்தை முழுமையாய்ச் சோதிப்பதற்காகவே கடவுள் அப்படிச் செய்வார் என்பதை உணர்ந்திருந்தார். ஆகவே, இயேசு அவ்வாறு உரத்த குரலில் சத்தமிட்டதன் மூலம் சங்கீதம் 22:1-ஐ நிறைவேற்றினார்.
17. சகரியா 12:10, சங்கீதம் 34:20 ஆகிய வசனங்கள் எவ்வாறு நிறைவேறின?
17 மேசியா குத்தப்படுவார், ஆனாலும் அவருடைய எலும்புகள் முறிக்கப்படாது. எருசலேமின் குடிமக்கள் ‘தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்ப்பார்கள்’ என்று முன்னுரைக்கப்பட்டது. (சக. 12:10) அவருடைய “எலும்புகளையெல்லாம் [கடவுள்] காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று சங்கீதம் 34:20 கூறியது. இவற்றை உறுதி செய்பவராக அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “படைவீரர்களில் ஒருவன் அவரது விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன. இதை நேரில் பார்த்த ஒருவர் [அதாவது, யோவான்] சாட்சி கொடுத்திருக்கிறார், அவரது சாட்சி உண்மையானது; . . . ‘அவரது [இயேசுவின்] எலும்புகளில் ஒன்றும் நொறுக்கப்படாது’ என்ற வசனம் நிறைவேறும்படியே அவை நடந்தன. ‘தாங்கள் ஈட்டியால் குத்தினவரைக் காண்பார்கள்’ என்று வேறொரு வசனமும் சொல்கிறது.”—யோவா. 19:33-37.
18. இயேசு எவ்வாறு பணக்காரர்களோடு அடக்கம் பண்ணப்பட்டார்?
18 மேசியா பணக்காரர்களோடு அடக்கம் பண்ணப்படுவார். (ஏசாயா 53:5, 8, 9-ஐ வாசியுங்கள்.) நிசான் 14 அன்று மாலை நேரத்தில், ‘அரிமத்தியா ஊரைச் சேர்ந்த பணக்காரரான யோசேப்பு’ பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைக் கேட்டார்; அதை அவரிடம் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார். “யோசேப்பு அவரது உடலை எடுத்து, சுத்தமான நார்ப்பட்டுத் துணியில் சுற்றி, தனக்காகக் கற்பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தார்; பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துச் சென்றார்” என்று மத்தேயு சொல்கிறார்.—மத். 27:57-60.
நம் ராஜாவான மேசியாவைத் துதியுங்கள்!
19. சங்கீதம் 16:10-ல் உள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
19 மேசியா உயிர்த்தெழுப்பப்படுவார். “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்” என்று தாவீது யெகோவாவிடம் சொன்னார். (சங். 16:10) இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு வந்த பெண்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆச்சரியம் காத்திருந்தது! மனித உருவெடுத்திருந்த ஒரு தேவதூதரை அங்கு கண்டார்கள்; அவர் அவர்களிடம், “அதிர்ச்சி அடையாதீர்கள். கழுமரத்தில் அறையப்பட்ட நாசரேத்தூர் இயேசுவைத்தானே நீங்கள் தேடுகிறீர்கள்? அவர் இங்கு இல்லை, அவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார். இதோ! அவர் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பாருங்கள்” என்று சொன்னார். (மாற். 16:6) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கூடியிருந்த மக்களிடம் அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு கூறினார்: “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து [தாவீது] முன்கூட்டியே தெரிந்து, அவர் கல்லறையில் விட்டுவிடப்பட மாட்டார் என்றும், அவரது உடல் அழிவுக்குள்ளாகாது என்றும் சொல்லியிருந்தார்.” (அப். 2:29-31) தமது அன்பு மகனின் உடல் அழுகிப்போகக் கடவுள் அனுமதிக்கவில்லை. அதைவிட அற்புதமான மற்றொன்றையும் செய்தார். இயேசுவைப் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பினார்!—1 பே. 3:18.
20. மேசியாவின் ஆட்சியைப் பற்றித் தீர்க்கதரிசனங்கள் என்ன சொல்கின்றன?
20 இயேசு தமது மகன் என்று கடவுள் அறிவிப்பார். (சங்கீதம் 2:7-ஐயும் மத்தேயு 3:17-ஐயும் வாசியுங்கள்.) அதோடு, இயேசு எருசலேமிற்குள் நுழைந்தபோது கூட்டத்தார் அவரையும் அவருடைய அரசாங்கத்தையும் புகழ்ந்தார்கள். இன்று நாம்கூட அவரையும் அவருடைய அரசாங்கத்தையும் பற்றி மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவிக்கிறோம். (மாற். 11:7-10) சீக்கிரத்தில் இயேசு ‘சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும் வரும்போது’ தமது எதிரிகளை அழித்துவிடுவார். (சங். 2:8, 9; 45:1-6) அதன்பின் அவருடைய ஆட்சியில் பூமி முழுவதிலும் சமாதானமும் சௌக்கியமும் நிலவும். (சங். 72:1, 3, 12, 16; ஏசா. 9:6, 7) யெகோவாவின் அன்பு மகனான இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பரலோகத்தில் ராஜாவாக ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார். இந்தச் சத்தியங்களை மற்றவர்களிடம் சொல்வதும் யெகோவாவின் சாட்சியாக இருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்!
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• இயேசு எவ்வாறு காட்டிக்கொடுக்கப்பட்டு, கைவிடப்பட்டார்?
• இயேசு கழுமரத்தில் அறையப்பட்டதோடு சம்பந்தப்பட்ட சில தீர்க்கதரிசனங்கள் யாவை?
• இயேசுதான் மேசியா என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்?
[பக்கம் 13-ன் படம்]
இயேசு ஒரு ராஜாவைப் போல எருசலேமிற்குள் நுழைகிறார்
[பக்கம் 15-ன் படங்கள்]
இயேசு நம் பாவங்களுக்காக மரித்தார், ஆனால் இன்று ராஜாவாக ஆட்சி செய்கிறார்