யெகோவா—நற்குணத்தின் சிகரம்
“சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், யெகோவா நல்லவர்.” —எரேமியா 33:11, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. கடவுளுடைய நற்குணத்திற்காக அவரைப் போற்றிப் புகழும்படி நாம் ஏன் உந்துவிக்கப்படுகிறோம்?
யெகோவா தேவன் முற்றும் முழுமையான அர்த்தத்தில் நற்குணம் படைத்தவர். “அவருடைய நற்குணம் எத்தனை பெரியது?” என்று சகரியா தீர்க்கதரிசி வியந்தார். (சகரியா 9:17, NW) சொல்லப்போனால், நமது சந்தோஷத்திற்காக இந்தப் பூமியை தயார்படுத்துவதற்கு செய்த அனைத்திலும் கடவுளுடைய நற்குணம் வெளிப்படுகிறது. (ஆதியாகமம் 1:31) இந்த அகிலாண்டத்தைப் படைக்கையில் கடவுள் ஏற்படுத்திய சிக்கலான விதிகள் அனைத்தையும் நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. (பிரசங்கி 3:11; 8:17) ஆனால் அகிலாண்டத்தைப் பற்றி நாம் சொற்பமே அறிந்திருந்தாலும், கடவுளுடைய நற்குணத்திற்காக அவரை போற்றிப் புகழும்படி அது நம்மை உந்துவிக்கிறது.
2. நற்குணத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்?
2 நற்குணம் என்றால் என்ன? அது ஓர் உயர்ந்த ஒழுக்கநெறி. என்றாலும், அது தீமை செய்யாதிருப்பதை மட்டுமே குறிப்பதில்லை. ஆவியின் கனிகளில் ஒன்றாகிய இந்த நற்குணம் நன்மை செய்வதையும் குறிக்கிறது. (கலாத்தியர் 5:22, 23) பிறருக்கு நன்மையும் பயனும் தரும் காரியங்களை செய்கையில் நற்குணத்தைக் காட்டுகிறோம். இந்த உலகில் நன்மையானதென சிலர் கருதுவதை தீமையானதென மற்றவர்கள் ஒருவேளை நினைக்கலாம். இருந்தபோதிலும், சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெற, நற்குணம் சம்பந்தமாக ஒரேவொரு தராதரமே இருக்க வேண்டும். இந்தத் தராதரத்தை யாரால் சரியாக நிர்ணயிக்க முடியும்?
3. நற்குணத்திற்குரிய தராதரத்தைப் பற்றி ஆதியாகமம் 2:16, 17 எதைக் காட்டுகிறது?
3 நற்குணத்திற்குரிய தராதரத்தை கடவுளே நிர்ணயிக்கிறார். மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் கடவுளாகிய யெகோவாவே முதல் மனிதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) அப்படியானால், நன்மை தீமையைப் பற்றி அறிந்துகொள்ள மனிதர் தங்கள் படைப்பாளரை நாடுவது அவசியம்.
தகுதியற்றவர்களுக்கு வெளிக்காட்டப்படும் நற்குணம்
4. ஆதாம் பாவம் செய்தது முதற்கொண்டு மனிதகுலத்திற்கு கடவுள் என்ன செய்திருக்கிறார்?
4 ஆதாம் பாவம் செய்து நற்குணத்திற்கு தராதரங்களை ஏற்படுத்தும் கடவுளுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ள மறுத்தபோது, பரிபூரண நிலைமையில் நித்திய சந்தோஷத்தை அனுபவிக்கும் மனிதகுலத்தின் எதிர்பார்ப்பு ஆபத்துக்குள்ளானது. (ஆதியாகமம் 3:1-6) எனினும், பாவத்தையும் மரணத்தையும் சுதந்தரித்த பிள்ளைகள் ஆதாமுக்கு பிறப்பதற்கு முன்பே, ஒரு பரிபூரண வித்துவின் வருகையைப் பற்றி கடவுள் முன்னறிவித்தார். “பழைய பாம்பாகிய” பிசாசான சாத்தானிடம், “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என யெகோவா அறிவித்தார். (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:15) பாவமுள்ள மனிதகுலத்தை மீட்பது யெகோவாவின் நோக்கமாக இருந்தது. ஆகவே, தமது அருமை குமாரனின் கிரய பலியில் விசுவாசம் வைப்போர் இரட்சிப்படைய இப்படிப்பட்ட ஓர் ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார்; இவ்வாறு தகுதியற்றவர்களுக்கு தம் நற்குணத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.—மத்தேயு 20:28; ரோமர் 5:8, 12.
5. தீமையான மனப்போக்கை வழி வழியாக பெற்றிருக்கிறபோதிலும், நற்குணத்தை ஓரளவு வெளிக்காட்ட நம்மால் ஏன் முடியும்?
5 ஆதாம் பாவம் செய்ததால் தீமையான மனப்போக்கை நாம் வழி வழியாய் பெற்றிருப்பது உண்மைதான். (ஆதியாகமம் 8:21) ஆனால் நற்குணத்தை ஓரளவு வெளிக்காட்ட யெகோவா நமக்கு உதவுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவருடைய மதிப்புமிக்க பரிசுத்த வேத எழுத்துக்களிலிருந்து கற்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிப்பது, நம்மை ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாகவும்,’ ‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும்’ ஆக்குகிறது; அதோடு, கடவுளுடைய தராதரத்தின்படி நன்மையானதை செய்யவும் நமக்கு உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:14-17) எனினும், பைபிள் போதனையிலிருந்து பயனடையவும் நற்குணத்தை வெளிக்காட்டவும், பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனின் மனப்பான்மை நமக்கு வேண்டும்: “தேவரீர் [யெகோவா] நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.”—சங்கீதம் 119:68.
யெகோவாவின் நற்குணம் போற்றிப் புகழப்படுகிறது
6. அரசனாகிய தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வரச் செய்த பின்பு லேவியர்கள் பாடிய பாடலில் அடங்கியிருந்த வார்த்தைகள் என்ன?
6 பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது, கடவுளுடைய நற்குணத்தைப் போற்றி, அவருடைய வழிநடத்துதலை நாடினார். “கர்த்தர் [யெகோவா] நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார் [“போதிக்கிறார்,” NW]” என்று தாவீது சொன்னார். (சங்கீதம் 25:8) கடவுள் இஸ்ரவேலருக்கு தந்த போதனைகளில் முக்கிய கட்டளைகளாகிய பத்து கற்பனைகள் அடங்கியிருந்தன. இந்தப் பத்து கட்டளைகள் இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டு, உடன்படிக்கைப் பெட்டி என்றழைக்கப்பட்ட பரிசுத்த பெட்டியில் வைக்கப்பட்டன. தாவீது அந்தப் பெட்டியை இஸ்ரவேலின் தலைநகராகிய எருசலேமுக்கு கொண்டு வரச் செய்த பின்பு, லேவியர்கள் பின்வருமாறு பாடினார்கள்: “ஜனங்களே, யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்புள்ள தயவு என்றென்றைக்கும் உள்ளது.” (1 நாளாகமம் 16:34, 37-41, NW) லேவிய பாடகர்களின் வாயிலிருந்து பிறந்த அந்த வார்த்தைகளைக் கேட்டது ஜனங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கும்!
7. உடன்படிக்கைப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் கொண்டுவரப்பட்டதற்கும், சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபத்திற்கும் பின்பு என்ன நடந்தது?
7 தாவீதின் குமாரனாகிய சாலொமோன் யெகோவாவுக்குக் கட்டிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது அதேவிதமான வார்த்தைகளில் துதிப்பாடல்கள் பாடப்பட்டன. புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்ட பின்பு, ‘யெகோவா நல்லவர், அவர் கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றுமுள்ளது’ என லேவியர்கள் யெகோவாவைத் துதிக்க தொடங்கினார்கள். அந்த சமயத்தில் யெகோவாவுடைய மகிமையின் பிரசன்னத்திற்கு அடையாளமாக அற்புதமான விதத்தில் அந்த ஆலயம் மேகத்தால் நிறைந்தது. (2 நாளாகமம் 5:13, 14) சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபத்திற்குப் பின்பு, “அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது.” இதைக் கண்ட, ‘இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் . . . தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, யெகோவா நல்லவர், அவருடைய கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.’ (2 நாளாகமம் 7:1-3) 14 நாள் பண்டிகை ஆசரிப்புக்குப் பிறகு, ‘யெகோவா தாவீதுக்கும் சாலொமோனுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்’ இஸ்ரவேலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.—2 நாளாகமம் 7:10.
8, 9. (அ) இஸ்ரவேலர் யெகோவாவை அவருடைய நற்குணத்திற்காக துதித்தபோதிலும், முடிவில் என்ன போக்கை பின்பற்றினார்கள்? (ஆ) எரேமியாவின் மூலம் எருசலேமுக்கு என்ன முன்னறிவிக்கப்பட்டது, அந்தத் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது?
8 கடவுளைத் துதித்து பாடியதற்கு இசைவாய் இஸ்ரவேலர் தொடர்ந்து வாழவில்லை என்பது வருத்தத்திற்குரியது. காலப்போக்கில் யூதாவின் ஜனங்கள் ‘உதட்டளவில் மட்டுமே யெகோவாவைக் கனம்பண்ணினார்கள்.’ (ஏசாயா 29:13, NW) நற்குணத்திற்குரிய கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, தீமையானவற்றை செய்ய தொடங்கினார்கள். அவர்கள் என்னென்ன தீமைகளை செய்தார்கள்? ஏன், விக்கிரகாராதனை, பாலுறவு ஒழுக்கக்கேடு, ஏழைகளை ஒடுக்குதல் போன்ற இன்னும் பெரும் பாவங்களையும் செய்தார்களே! இதனால் எருசலேம் அழிக்கப்பட்டது, யூதாவின் குடிகள் பொ.ச.மு. 607-ல் பாபிலோனுக்குச் சிறைபிடித்து செல்லப்பட்டார்கள்.
9 இவ்வாறு கடவுள் தம்முடைய ஜனத்தை சிட்சித்தார். எனினும், “சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், யெகோவா நல்லவர், அவர் கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்த[ம்]” எருசலேமில் மறுபடியும் கேட்கும் என்று தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம் அவர் முன்னறிவித்தார். (எரேமியா 33:10, 11, தி.மொ.) அவ்வாறே நடந்தது. அந்தத் தேசம் 70 ஆண்டுகள் பாழாய் கிடந்த பின்பு, பொ.ச.மு. 537-ல், யூதராயிருந்த மீதிப்பேர் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். (எரேமியா 25:11; தானியேல் 9:1, 2) மோரியா மலையில் ஆலயம் இருந்த இடத்தில் அவர்கள் பலிபீடத்தைத் திரும்பக் கட்டி, அதில் பலிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் திரும்பி வந்த இரண்டாம் ஆண்டில் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. அது எத்தகைய பூரிப்பளிக்கும் சமயம்! எஸ்றா இவ்வாறு சொன்னார்: “கட்டுகிறவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டபோது ஆசாரிய வஸ்திரந்தரித்துப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதின் கட்டளைப்படியே யெகோவாவைத் துதிப்பதற்கென நிறுத்தினார்கள்; யெகோவா நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் மாறிமாறிப் பாடினார்கள்.”—எஸ்றா 3:1-11, தி.மொ.
10. குறிப்பிடத்தக்க என்ன வார்த்தைகள் சங்கீதம் 118-ன் ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ளன?
10 யெகோவாவின் நற்குணத்தைத் துதிக்கும் இதே போன்ற வார்த்தைகள் பல சங்கீதங்களில் காணப்படுகின்றன. சங்கீதம் 118 இவற்றில் ஒன்று. பஸ்கா பண்டிகையின் முடிவில் இஸ்ரவேல் குடும்பத்தார் இந்த சங்கீதத்தைப் பாடினார்கள். இந்தச் சங்கீதம் பின்வருமாறு ஆரம்பித்து முடிகிறது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை [“அன்புள்ள தயவு,” NW] என்றுமுள்ளது.” (சங்கீதம் 118:1, 29, தி.மொ.) பொ.ச. 33-ல் தம்முடைய மரணத்திற்கு முந்தின இரவில், உண்மையுள்ள அப்போஸ்தலருடன் இயேசு கிறிஸ்து பாடிய கடைசி துதிப்பாடலும் இதுவாகவே இருந்திருக்கலாம்.—மத்தேயு 26:30.
“உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்”
11, 12. கடவுளுடைய மகிமையைப் பற்றி க்ஷணத்தோற்றத்தை மோசே பெற்றபோது என்ன அறிவிப்பை கேட்டார்?
11 யெகோவாவின் நற்குணத்திற்கும் அன்புள்ள தயவிற்கும் இடையே உள்ள தொடர்பு, எஸ்றாவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் தடவையாக குறிப்பிடப்பட்டது. வனாந்தரத்தில் பொன் கன்றுக்குட்டியை வணங்கிய இஸ்ரவேலர் அந்தத் தவற்றிற்காக தண்டிக்கப்பட்டார்கள்; அதற்குப் பின்பு சீக்கிரத்தில் மோசே, “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என யெகோவாவிடம் வேண்டுதல் செய்தார். மோசே தம்முடைய முகத்தைக் கண்டு உயிரோடிருக்க முடியாது என்பதை அறிந்த யெகோவா, ‘என்னுடைய தயை [“நற்குணம்,” NW] எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணுவேன்’ என்றார்.—யாத்திராகமம் 33:13-20.
12 அடுத்த நாள் சீனாய் மலையில் மோசேயின் முகத்திற்கு முன்பாக யெகோவாவின் நற்குணம் கடந்து சென்றது. அந்தச் சமயத்தில் கடவுளுடைய மகிமையைப் பற்றி க்ஷணத்தோற்றத்தை மோசே பெற்றபோது இந்த அறிவிப்பையும் கேட்டார்: “யெகோவா, யெகோவா, இரக்கமும், கருணையும், கோபிக்க தாமதிக்கிற குணமும், மிகுந்த அன்புள்ள தயவும் சத்தியமுமுள்ள கடவுள். ஆயிரம் தலைமுறைகளுக்கு அன்புள்ள தயவை காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டனைக்கு தப்பவிடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும் பேரப்பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.” (யாத்திராகமம் 34:6, 7, NW) யெகோவாவின் நற்குணம் அவருடைய அன்புள்ள தயவுடனும் அவருடைய பண்பியல்புகளின் மற்ற அம்சங்களுடனும் சம்பந்தப்பட்டிருப்பதை இவ்வார்த்தைகள் காட்டுகின்றன. இவற்றை சிந்தித்துப் பார்ப்பது நற்குணத்தை வெளிக்காட்ட நமக்கு உதவும். கடவுளுடைய நற்குணத்தைப் பற்றிய இந்த அற்புத அறிவிப்பில் இருமுறை குறிப்பிடப்பட்ட பண்பை நாம் முதலாவது சிந்திக்கலாம்.
‘மிகுந்த அன்புள்ள தயவுடைய கடவுள்’
13. கடவுளுடைய நற்குணத்தைப் பற்றிய அறிவிப்பில் எந்தப் பண்பு இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஏன் பொருத்தமானது?
13 “யெகோவா . . . மிகுந்த அன்புள்ள தயவு[டைய] . . . கடவுள். ஆயிரம் தலைமுறைகளுக்கு அன்புள்ள தயவை காக்கிறவர்.” “அன்புள்ள தயவு” என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய சொல் “பற்றுமாறா அன்பு” என்பதையும் அர்த்தப்படுத்துகிறது. மோசேயிடம் கூறப்பட்ட கடவுளுடைய அறிவிப்பில் இந்தப் பண்பு மாத்திரமே இருமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பே யெகோவாவின் பிரதான பண்பாக இருப்பதால் இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (1 யோவான் 4:8) யெகோவாவைத் துதிப்பதில் எப்போதும் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகிய “அவர் நல்லவர், அவருடைய அன்புள்ள தயவு என்றுமுள்ளது” (NW) என்பவை இந்தப் பண்பை வலியுறுத்துகின்றன.
14. கடவுளுடைய நற்குணத்தையும் அன்புள்ள தயவையும் முக்கியமாய் யார் அனுபவிக்கிறார்கள்?
14 யெகோவா ‘மிகுந்த அன்புள்ள தயவுடையவராக’ இருப்பது, அவரது நற்குணத்தின் ஒரு வெளிக்காட்டாகும். ஒப்புக்கொடுத்த, உண்மையுள்ள தமது மனித ஊழியர்களை அவர் கனிவுடன் கவனித்துக்கொள்வதில் இது முக்கியமாய் தெளிவாக தெரிகிறது. (1 பேதுரு 5:6, 7) தம்மிடம் அன்பு காட்டி, தமக்கு சேவை செய்வோரிடம் யெகோவா ‘அன்புள்ள தயவைக் காக்கிறார்’ என்பதற்கு அவருடைய சாட்சிகளால் சான்றளிக்க முடியும். (யாத்திராகமம் 20:6, NW) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் யெகோவாவின் குமாரனை ஏற்க மறுத்ததால் அவருடைய அன்புள்ள தயவை அல்லது பற்றுமாறா அன்பை அனுபவிக்க முடியாமல் போனது. ஆனால், சகல தேசத்தையும் சேர்ந்த உண்மை கிறிஸ்தவர்களோ கடவுளது நற்குணத்தையும் பற்றுமாறா அன்பையும் நித்தியத்திற்கும் அனுபவிப்பர்.—யோவான் 3:36.
யெகோவா —இரக்கமும் கருணையும் உள்ளவர்
15. (அ) சீனாய் மலையில் மோசே கேட்ட அறிவிப்பு என்ன வார்த்தைகளுடன் தொடங்கியது? (ஆ) இரக்கத்தில் என்ன உட்பட்டுள்ளது?
15 சீனாய் மலையில் மோசே கேட்ட அறிவிப்பு, இந்த வார்த்தைகளுடன் தொடங்கினது: ‘யெகோவா, யெகோவா, இரக்கமும் கருணையுமுள்ள கடவுள்.’ ‘இரக்கம்’ என மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய சொல் “குடல்” என அர்த்தப்படுத்தலாம், இது “கருப்பை” என்பதற்கான பதத்துடனும் நெருங்கிய தொடர்புடையது. ஆகவே இரக்கம், ஒரு நபரின் உள் ஆழத்திலுள்ள பரிவான உணர்ச்சிகளை உட்படுத்துகிறது. ஆனால் அது உள்ளூர பரிதாபப்படுவதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. மற்றவர்களுடைய துன்பத்தை நீக்குவதற்கு ஏதேனும் செய்யும்படி அது நம்மை தூண்ட வேண்டும். உதாரணமாக, அன்புள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் சகவிசுவாசிகளிடம் இரக்கத்தோடு நடந்துகொள்வதன் அவசியத்தை உணருகிறார்கள்; பொருத்தமான சமயங்களில் அப்படிப்பட்ட ‘இரக்கச் செயல்களை முகமலர்ச்சியோடு செய்வதன்’ அவசியத்தையும் உணருகிறார்கள்.—உரோமையர் [ரோமர்] 12:8, பொ.மொ.; யாக்கோபு 2:13; யூதா 22, 23.
16. யெகோவா கருணை நிறைந்தவர் என்று ஏன் சொல்லலாம்?
16 கடவுளுடைய நற்குணம் அவருடைய கருணையிலும் வெளிப்படுகிறது. கருணைமிக்க நபர் “பிறருடைய உணர்ச்சிகளை எண்ணிப் பார்ப்பவராக” இருக்கிறார், ‘முக்கியமாய் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களிடம் நேசமான கனிவை’ காட்டுகிறார். தம்முடைய உண்மை ஊழியர்களிடம் கருணையோடு நடந்துகொள்வதில் யெகோவா தலைசிறந்த முன்மாதிரி வைக்கிறார். உதாரணமாக, அவர் கருணையோடு, தேவதூதர்களை உபயோகித்து வயதான தீர்க்கதரிசியாகிய தானியேலை பலப்படுத்தினார்; மேலும், இயேசுவைப் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றிருப்பதை கன்னிப் பெண் மரியாளுக்கு அறிவித்தார். (தானியேல் 10:19; லூக்கா 1:26-38) பைபிளின் மூலம் யெகோவா கருணையுடன் சொல்லும் புத்திமதிக்கு அவர் ஜனங்களாகிய நாம் உண்மையிலேயே நன்றியுள்ளோராக இருக்கிறோம். இப்படி அவர் நற்குணத்தை வெளிக்காட்டுவதற்காக அவரைத் துதிக்கிறோம், மற்றவர்களிடம் கருணையோடு நடந்துகொள்ள பிரயாசப்படுகிறோம். ஆவிக்குரிய தகுதிகளையுடையவர்கள், ‘சாந்தமுள்ள ஆவியுடன்’ சகவிசுவாசி ஒருவரை திருத்துகையில், கனிவோடும் கருணையோடும் நடந்துகொள்ள முயலுகிறார்கள்.—கலாத்தியர் 6:1.
கோபிக்க தாமதிக்கிற கடவுள்
17. யெகோவா ‘கோபிக்க தாமதிக்கிறவராக’ இருப்பதற்கு நாம் ஏன் நன்றியுடன் இருக்கிறோம்?
17 ‘கோபிக்க தாமதிக்கிற . . . கடவுள்.’ இந்த வார்த்தைகள் யெகோவாவினுடைய நற்குணத்தின் மற்றொரு அம்சத்திற்கு கவனத்தைத் திருப்புகின்றன. நம்முடைய தவறுகளை யெகோவா பொறுமையுடன் சகித்து, படுமோசமான பலவீனங்களை நாம் மேற்கொள்ளவும் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்யவும் காலத்தை அளிக்கிறார். (எபிரெயர் 5:12–6:3; யாக்கோபு 5:14, 15) இன்னும் கடவுளுடைய வணக்கத்தாராக ஆகாதவர்களுக்கும் அவருடைய பொறுமை நன்மை செய்கிறது. ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டு, மனந்திரும்ப அவர்களுக்கு இன்னும் சமயமிருக்கிறது. (ரோமர் 2:4) யெகோவா பொறுமையுள்ளவராக இருந்தாலும் சீனாய் மலையில் இஸ்ரவேலர் பொன் கன்றுக்குட்டியை வணங்கினபோது அவர் தம்முடைய கோபத்தை வெளிக்காட்டியதைப் போலவே சில சமயங்களில் கோபத்தை வெளிக்காட்ட அவருடைய நற்குணம் தூண்டுகிறது. சீக்கிரத்தில், சாத்தானுடைய ஒழுங்குமுறைக்கு கடவுள் முடிவுகட்டுகையில், அவருடைய கோபம் இன்னும் பெருமளவில் வெளிப்படும்.—எசேக்கியேல் 38:19-23.
18. சத்தியத்தைக் குறித்ததில், யெகோவாவுக்கும் மனிதத் தலைவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
18 ‘யெகோவா, . . . மிகுந்த சத்தியமுள்ள கடவுள்.’ மனிதத் தலைவர்கள் அதைச் செய்யப்போவதாகவும் இதைச் செய்யப்போவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள், ஆனால் அவற்றை நிறைவேற்றத் தவறுகிறார்கள். யெகோவாவோ அவர்களிலிருந்து எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்! மாறாக, யெகோவாவின் வணக்கத்தார் தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைக்கலாம். கடவுள் மிகுந்த சத்தியமுள்ளவராக இருப்பதால், அவருடைய வாக்குறுதிகளில் நாம் எப்போதும் நம்பிக்கை வைக்கலாம். நம் பரலோக தகப்பன் நற்குணமுள்ளவராக இருப்பதால், ஆவிக்குரிய சத்தியங்களுக்காக நாம் செய்யும் ஜெபத்திற்கு தவறாமல் பதிலளித்து அவற்றை மிகுதியாக வாரி வழங்குகிறார்.—சங்கீதம் 43:3; 65:2.
19. மனந்திரும்பும் பாவிகளிடம் யெகோவா எவ்வாறு சிறப்பான விதத்தில் நற்குணத்தை காட்டியிருக்கிறார்?
19 “யெகோவா, . . . அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.” யெகோவா தமது நற்குணத்தினால், மனந்திரும்புகிற பாவிகளை மன்னிக்க தயாராக இருக்கிறார். இயேசுவின் பலியின் மூலம் மன்னிப்பைப் பெறும் வழியை நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பன் ஏற்பாடு செய்திருப்பதற்காக நிச்சயமாகவே நாம் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். (1 யோவான் 2:1, 2) இந்த மீட்கும் பலியில் விசுவாசம் வைக்கும் எல்லாரும், வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் நித்திய வாழ்க்கையை அனுபவிக்கும் நம்பிக்கையை பெற்றிருப்பதோடு, யெகோவாவுடன் நல்லுறவையும் அனுபவிக்க முடிவதால் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறோம். மனிதகுலத்திடம் நற்குணத்தை காட்டியதற்காக யெகோவாவைத் துதிப்பதற்கு இவை எப்பேர்ப்பட்ட சிறந்த காரணங்கள்!—2 பேதுரு 3:13.
20. கடவுள் தீமையைக் கண்டிக்காமல் விட்டுவிடுகிறதில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி நமக்கு இருக்கிறது?
20 ‘[யெகோவா] எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டனைக்கு தப்பவிடார்.’ யெகோவாவின் நற்குணத்திற்காக அவரைத் துதிப்பதற்கு உண்மையில் இது மற்றொரு காரணம். ஏன்? ஏனெனில் நற்குணத்தின் ஒரு முக்கிய அம்சம், எவ்வகையிலும் தீமையை கண்டிக்காமல் விட்டுவிடாதிருப்பதாகும். “கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு . . . வானத்திலிருந்து வெளிப்படும்போது,” ‘தேவனை அறியாதவர்களும், . . . சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களும்’ பழிதீர்க்கப்படுவார்கள். அவர்கள் “நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.” (2 தெசலோனிக்கேயர் 1:6-10) தப்பிப்பிழைக்கும் யெகோவாவின் வணக்கத்தாரோ, ‘நன்மையை விரும்பாத’ தேவபக்தியற்ற மனிதரின் தொல்லையின்றி அப்போது வாழ்க்கையை முழுமையாய் அனுபவித்து மகிழ்வார்கள்.—2 தீமோத்தேயு 3:1-3, பொ.மொ.
யெகோவாவின் நற்குணத்தைப் பின்பற்றுங்கள்
21. நாம் ஏன் நற்குணத்தை வெளிக்காட்ட வேண்டும்?
21 யெகோவாவின் நற்குணத்திற்காக அவரைத் துதிக்கவும் நன்றி செலுத்தவும் சந்தேகமின்றி நமக்கு அநேக காரணங்கள் உள்ளன. அவருடைய ஊழியராக நாம் இந்தப் பண்பை வெளிக்காட்ட நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் அல்லவா? ஆம், ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என அப்போஸ்தலராகிய பவுல் சககிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். (எபேசியர் 5:1) நம்முடைய பரலோக தகப்பன் எப்போதும் நற்குணத்தை வெளிக்காட்டுகிறார், நாமும் அவ்வாறே காட்ட வேண்டும்.
22. அடுத்த கட்டுரையில் நாம் எவற்றை சிந்திப்போம்?
22 முழு இருதயத்துடன் நம்மை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தால், நிச்சயமாகவே அவருடைய நற்குணத்தைப் பின்பற்ற மனமார விரும்புவோம். பாவம் செய்த ஆதாமின் சந்ததியாராக நாம் இருப்பதால், நல்லதை செய்வது நமக்கு எளிதாக இருப்பதில்லை. ஆனால் நற்குணத்தை நாமும் வெளிக்காட்ட முடியும் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம். மேலும், நற்குணத்தின் சிகரமாக திகழும் யெகோவாவை என்னென்ன வழிகளில் நாம் பின்பற்றலாம், பின்பற்ற வேண்டும் என்பதையும் சிந்திப்போம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நற்குணம் என்பது என்ன?
• கடவுளுடைய நற்குணத்தை பைபிளிலுள்ள என்ன வார்த்தைகள் வலியுறுத்துகின்றன?
• யெகோவாவினுடைய நற்குணத்தின் சில வெளிக்காட்டுதல்கள் யாவை?
• யெகோவாவினுடைய நற்குணத்தின் மாதிரியை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
[பக்கம் 12-ன் படம்]
துதிக்கு ஏற்ப வாழாத தம் பூர்வ ஜனங்களை யெகோவா சிட்சித்தார்
[பக்கம் 12-ன் படம்]
உண்மையுள்ள மீதிப்பேர் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்
[பக்கம் 13-ன் படம்]
கடவுளுடைய நற்குணத்தின் அற்புத அறிவிப்பை மோசே கேட்டார்
[பக்கம் 15-ன் படம்]
பைபிளின் மூலம் யெகோவா தரும் புத்திமதி அவருடைய நற்குணத்தின் வெளிக்காட்டு
[பக்கம் 15-ன் படம்]