அதிகாரம் 27
நேர்மை—அதுவே உண்மையில் தலைச்சிறந்த கொள்கையா?
நீ எப்பொழுதாவது பொய் சொல்லத் தூண்டப்பட்டிருக்கிறாயா? உண்மையில், எல்லாப் பொருட்களையும் படுக்கைக்குக் கீழே எறிந்துவிட்டிருக்க தன்னுடைய அறையைச் சுத்தம் செய்துவிட்டதாக டோனால்ட் தன்னுடைய தாயிடம் சொன்னான். ரிச்சர்டும் தன்னுடைய பெற்றோருக்கு உண்மையை மறைக்க அதேபோன்ற ஓர் அபத்தமான முயற்சியைச் செய்தான். தான் தேர்ச்சிக்குக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதற்குக் காரணம் தான் படிக்கத் தவறியது அல்ல, மாறாக, ‘தன்னுடைய ஆசிரியருக்கும் தனக்கும் சரியாக ஒத்துவரவில்லை’ என்று அவர்களுக்குச் சொன்னான்.
பொதுவாக பெற்றோரும், மற்ற வயதுவந்தோரும் இந்த அப்பட்டமான பொய்த் திட்டங்களைக் கண்டுகொள்கின்றனர். இருப்பினும் நமக்கு அனுகூலமாக இருக்கையில் பொய் சொல்வது, உண்மையை வளைப்பது அல்லது ஒரே அடியாக ஏமாற்றுவது ஆகியவற்றைக் குறைந்த பட்சம், முயற்சி செய்வதிலிருந்து அநேக இளைஞரை அது தடுத்து நிறுத்துவது இல்லை. ஒரு காரணம் என்னவென்றால், நெருக்கடி நிலைமைகளில் பெற்றோர் எப்போதும் சாந்தமாகப் பிரதிபலிப்பதில்லை. வரவேண்டிய நேரத்திற்குப் பதிலாக இரண்டு மணி நேரம் தாமதமாக வரும்போது நீ உண்மையிலேயே நேரம் செல்வதைக் கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்ற தர்மசங்கடமான உண்மையை உன் பெற்றோருக்குச் சொல்வதற்குப் பதிலாக வழியிலே ஒரு பெரிய விபத்து நேரிட்டிருந்தது என்று சொல்வதற்கு நீ தூண்டப்படலாம்.
நேர்மைக்கு, பள்ளி மற்றொரு சவாலை அளிக்கலாம். மாணவர்கள் வீட்டு பாடத்தின் சுமை அதிகம் இருப்பதை அடிக்கடி உணருகின்றனர். இரக்கமற்ற போட்டி அடிக்கடி நிலவுகிறது. ஏன், ஐக்கிய மாகாணங்களில், மாணவர்களில் பாதிப்பேருக்கும் மேலாக ஏமாற்றுகின்றனர் அல்லது ஏமாற்றியிருக்கின்றனர் என்பதாக சுற்றாய்வுகள் காண்பிக்கின்றன. ஒரு பொய் கவர்ச்சியுள்ளதாகத் தோன்றினாலும், ஓர் ஏமாற்றுதல் சுலபமான வழியாக இருந்தாலும், நேர்மையற்றவர்களாக இருப்பது உண்மையில் பலனளிக்கிறதா?
பொய் பேசுதல்—அது ஏன் பலனளிப்பதில்லை
தண்டனையிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது அச்சமயத்தில் அனுகூலமாகத் தோன்றலாம். ஆனால் பைபிள் எச்சரிப்பதாவது: “பொய்களைப் பேசுகிறவன் தப்புவதில்லை.” (நீதிமொழிகள் 19:5) பொய் அம்பலமாக்கப்பட்டு எப்படியும் தண்டனை அளிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகம். அப்பொழுது உன்னுடைய பழைய அத்துமீறலுக்காக மட்டுமின்றி அவர்களிடம் பொய் சொன்னதற்காகவும் உன்னுடைய பெற்றோர் கோபமடைவார்கள்!
பள்ளியில் ஏமாற்றுவதைப்பற்றி என்ன? பள்ளி வளாக நீதிவிசாரணைத் திட்டங்களின் நிர்வாகி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “கல்விப் பயிற்சி சம்பந்தமான நேர்மையின்மையைச் செய்கின்ற எந்த ஒரு மாணவனும் எதிர்காலக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்குத் தீங்கிழைக்கும் வினைமையான ஆபத்தில் சிக்கிக்கொள்வான்.”
அநேகர் தப்பித்துக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஏமாற்றுதல் உனக்குத் தேர்ச்சிக்கான அந்த மதிப்பெண்களைப் பெற்றுத்தரும், ஆனால், நீண்டகால விளைவுகள் என்ன? நீச்சல் வகுப்பு ஒன்றில் ஏமாற்றி தேர்வு பெறுவது முட்டாள்தனம் என்பதை சந்தேகமின்றி நீ ஒத்துக்கொள்வாய். நியாயமாகவே, எல்லாரும் நீரில் விளையாடி மகிழ்ந்துகொண்டிருக்க, ஏரியில் நின்று பார்க்க யார்தான் விரும்புவார்கள்! குளத்திலே நீ தள்ளப்பட்டாய் என்றால், உன் ஏமாற்றுப் பழக்கங்கள் நீ நீரில் மூழ்கிவிட காரணமாயிருக்கும்!
ஆனால் கணிதம் அல்லது வாசிப்பு இவற்றில் ஏமாற்றினால் என்ன? குறிப்பிடத்தக்கதாய் ஆரம்பத்தில் விளைவுகள் அவ்வளவு தத்ரூபமாக இல்லாதிருக்கலாம், உண்மைதான். இருப்பினும், நீ அடிப்படைக் கல்வித் திறமைகளை வளர்த்துக்கொள்ளாதிருப்பாயானால், வேலை வாய்ப்புச் சந்தையிலே நீ “மூழ்கிக் கொண்டிருப்பதை” காணலாம்! ஏமாற்றி வாங்கப்பட்ட ஒரு கல்விப்பட்டம் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்காது. பைபிள் சொல்கிறது: “பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும்.” (நீதிமொழிகள் 21:6) ஒரு பொய் கொண்டுவரக்கூடிய அனுகூலங்கள் எதுவும் மூடுபனியைப் போன்று குறுகிய வாழ்வுடையதாயிருக்கும். பள்ளியில் ஏய்த்து, ஏமாற்றி முன்னேறுவதைக் காட்டிலும் உட்கார்ந்து படித்து முன்னேறுவது உனக்கு எவ்வளவு மேலானது! “கடின உழைப்புள்ளவர்களின் திட்டங்கள் நிச்சயமாகவே அனுகூலங்களுக்கு ஏதுவாயிருக்கும்” என்று நீதிமொழிகள் 21:5 (NW) சொல்கிறது.
பொய் பேசுவதும் உன் மனச்சாட்சியும்
போற்றிப் பாதுகாத்த ஆபரணம் ஒன்றை தன்னுடைய சகோதரன் உடைத்துவிட்டான் என்று மைக்கலி என்ற இளம்பெண் பொய்யாகக் குற்றஞ்சாட்டினாள். ஆனால், பிற்பாடு, தன்னுடைய பெற்றோரிடம் தன்னுடைய பொய்யை ஒப்புக்கொள்ள வற்புறுத்தப்பட்டதை உணர்ந்தாள். “நான் பெரும்பாலான நேரம் உண்மையிலேயே மோசமாக உணர்ந்தேன்” என்று மைக்கலி விவரிக்கிறாள். “என்னுடைய பெற்றோர் என்னில் நம்பிக்கை வைத்திருந்தார்கள், நான் அவர்களை தலைகுனிய வைத்துவிட்டேன்.” கடவுள் மனிதரில் மனச்சாட்சி என்ற புத்திக்கூர்மையை வைத்திருப்பதை நன்கு புரிந்துகொள்ள இது உதவுகிறது. (ரோமர் 2:14, 15) மைக்கலியின் மனச்சாட்சி குற்ற உணர்வுகளால் அவளை வருத்தியது.
உண்மைதான், ஓர் ஆள் தன்னுடைய மனச்சாட்சியை அசட்டை செய்ய முயற்சி செய்யலாம். ஆனால் அவன் எவ்வளவு அதிகமாக பொய் சொல்ல பழகுகிறானோ, அவ்வளவு அதிகமாக அவன் தவறுக்கு உணர்வற்றவனாக—‘மனச்சாட்சியில் சூடுண்டவனாக’ மாறுகிறான். (1 தீமோத்தேயு 4:1) நீ, உண்மையில், உணர்வற்ற ஒரு மனச்சாட்சியைக் கொண்டிருக்க விரும்புகிறாயா?
பொய்பேசுவதைக் கடவுள் நோக்கும் விதம்
“பொய் நாவு” யெகோவா வெறுத்த மற்றும் “யெகோவா வெறுக்கிற” காரியங்களில் ஒன்று. (நீதிமொழிகள் 6:16, 17) மறுபட்சத்தில், பிசாசாகிய சாத்தான்தானே “பொய்க்குப் பிதா”வாக இருக்கிறான். (யோவான் 8:44) மேலும் பைபிள் பொய்களுக்கும், தீங்கற்றது என்று சொல்லப்படுகிற பொய்களுக்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்வதில்லை. “சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராது.”—1 யோவான் 2:21.
கடவுளுடைய சிநேகிதனாக இருக்க விரும்பும் எவருக்கும் நேர்மையே கொள்கையாக இருக்க வேண்டும். 15-வது சங்கீதம் கேட்கிறது: “யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் விருந்தாளியாகத் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?” (வசனம் 1, NW) அடுத்த நான்கு வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள பதிலை நாம் கவனிக்கலாம்:
“உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, தன் இருதயத்தில் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே,” NW. (வசனம் 2) அது கடையில் இருந்து பொருளைத் திருடும் ஆளாகவோ அல்லது ஓர் ஏமாற்றுபவனாகவோ தொனிக்கிறதா? அவன் தன்னுடைய பெற்றோரிடம் பொய் சொல்லுபவனாகவோ அல்லது மாய்மாலக் காரனாகவோ இருக்கிறானா? நிச்சயமாக இல்லை! ஆகவே, கடவுளுடைய சிநேகிதனாக இருக்க விரும்பினால் நீ நேர்மையுள்ளவனாக இருக்கவேண்டும், உன் செயல்களில் மட்டுமல்ல, உன் இருதயத்திலும்கூட அவ்வாறு இருக்கவேண்டும்.
“அவன் தன் நாவினால் புறங்கூறாமலும் தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.” (வசனம் 3) இன்னொரு நபரைக் குறித்து இரக்கமற்ற, நிந்திக்கும் வகையில் பேசுகின்ற இளைஞர் குழுவொன்றோடு நீயும் எப்போதாவது உன்னை ஒத்துப்போக அனுமதித்திருக்கிறாயா? அத்தகைய பேச்சில் பங்குகொள்ள மறுப்பதற்கான மனோதிடத்தை வளர்த்துக்கொள்!
“ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; யெகோவாவுக்குப் (NW) பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.” (வசனம் 4) பொய் பேசும், ஏமாற்றும் அல்லது ஒழுக்கக்கேடான வீரச்செயல்களைக் குறித்து பெருமையாகப் பேசும் எந்த இளைஞரையும் சிநேகிதர்களாக ஏற்றுக்கொள்ளாதே; அவர்கள் நீயும் அவற்றை செய்ய எதிர்பார்ப்பார்கள். பாபி என்ற இளைஞன் குறிப்பிட்டதாவது: “நீ கூடசேர்ந்து பொய்ச்சொல்லும் ஒரு நண்பன் உன்னைப் பிரச்னைக்குள் கொண்டுசெல்வான். அவன் நீ நம்பத்தக்க ஒரு சிநேகிதன் அல்ல.” நேர்மையான தராதரங்களை மதிக்கிற சிநேகிதர்களைக் கண்டுபிடி.—சங்கீதம் 26:4-ஐ ஒப்பிடவும்.
தங்களுடைய வார்த்தையைத் தவறாது காக்கிற ஆட்களை யெகோவா போற்றுகிறார் அல்லது “கனம் பண்ணுகிறார்” என்பதைக் கவனித்தாயா? இந்தச் சனிக்கிழமை வீட்டு வேலையில் உதவி செய்வதாக நீ ஒருவேளை வாக்களித்திருப்பாய். ஆனால், அந்தப் பிற்பகல்தானே நீ ஒரு பந்தாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறாய். நீ உன் வார்த்தையை இலேசாகக் கருதி உன் பெற்றோருக்கு அந்த வேலையை விட்டுவிட்டு உன் நண்பர்களோடு செல்வாயா அல்லது உன் வார்த்தையைக் காப்பாற்றுவாயா?
“தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடாமலும் குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.” (வசனம் 5) ஏமாற்றுதலுக்கும், நேர்மையின்மைக்கும் பிரதான காரணம் பேராசை என்பது உண்மையல்லவா? சோதனைத் தேர்வுகளின்போது ஏமாற்றும் மாணவர்கள் தாங்கள் படித்தால்மட்டுமே பெறக்கூடிய மதிப்பெண்களுக்காக பேராசை கொண்டிருக்கிறார்கள். இலஞ்சம் பெறும் ஆட்கள் நீதியைக் காட்டிலும் பணத்தையே அதிக மதிப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
தங்களுக்குச் சாதகமாக இருக்க, நேர்மைக்கான விதிமுறைகளை வளைக்கின்ற அரசியல் மற்றும் வியாபாரத் தலைவர்களைச் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர், உண்மைதான். ஆனால், அத்தகையோரின் வெற்றி எவ்வளவு உறுதியுள்ளது? பதிலளிக்கிறது சங்கீதம் 37:2: “அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.” மற்றவர்களால் பிடிபட்டு அவமானப்படுத்தப்படாமற்போனாலும் முடிவில் அவர்கள் யெகோவா தேவனுடைய நியாயத்தீர்ப்பை எதிர்ப்படுகிறார்கள். இருப்பினும் கடவுளுடைய சிநேகிதர்களோ “என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.” அவர்களுடைய நித்திய எதிர்காலம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
“ஒரு நல் மனச்சாட்சி”யை வளர்த்தல்
ஆகவே, எந்த விதமான பொய்யையும் தவிர்ப்பதற்கு பலமான காரணமிருக்கிறதல்லவா? அப்போஸ்தலனாகிய பவுல் தன்னைக் குறித்தும் தன்னுடைய தோழர்களைக் குறித்தும் சொன்னதாவது: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாயிருக்கிறோம் என்று நம்புகிறோம்.” (எபிரெயர் 13:18, NW) அதே போன்றே உன் மனச்சாட்சியும் பொய்மைக்கு அதிக உணர்வுள்ளதாக இருக்கிறதா? அப்படியில்லையென்றால் பைபிளைப் படிப்பதன் மூலமும், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! போன்ற பைபிள் சார்ந்த பத்திரிகைகள் மூலமும் அதைப் பயிற்றுவித்துக்கொள்.
இளைஞனாகிய பாபி அப்படிச் செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறான். அவன் பிரச்னைகளை இரகசியமாக வைக்க பொய்களின் வலையை விரிக்காதிருக்கக் கற்றுக்கொண்டுள்ளான். அவனுடைய மனச்சாட்சி அவனுடைய பெற்றோரை அணுகவும் காரியங்களை நேர்மையோடு கலந்தாலோசிக்கவும் அவனைத் தூண்டுவிக்கிறது. சில சமயங்களில் இது சிட்சையைப் பெறுவதில் விளைவடைந்திருக்கிறது. இருப்பினும், நேர்மையுள்ளவனாக இருந்ததற்காக ‘உள்ளாக நல்ல விதத்தில் உணருகிறேன்’ என்று ஒப்புக்கொள்கிறான்.
உண்மையைப் பேசுவது எப்பொழுதும் எளிதாக இல்லை. ஆனால் உண்மையைப் பேச தீர்மானம் எடுக்கிற ஒருவன் நல் மனச்சாட்சியையும், அவனுடைய உண்மையான நண்பர்களுடன் ஒரு நல்ல உறவையும், எல்லவற்றுக்கும் மேலாக, கடவுளுடைய கூடாரத்தில் ஒரு “விருந்தாளி”யாகத் தங்கும் சிலாக்கியத்தையும் தொடர்ந்து காத்துக்கொள்வான்! ஆகவே, நேர்மையைக் கடைப்பிடித்தல் சிறந்த கொள்கையாக மட்டுமல்ல, எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அது சரியான கொள்கையாகவும் இருக்கிறது.
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻பொய் பேசுவதற்குத் தூண்டக்கூடியதாகத் தோன்றும் சில சூழ்நிலைமைகள் என்ன?
◻பொய் பேசுவதும் ஏமாற்றுவதும் ஏன் பலன்தராது? இதை நீ தனிப்பட்ட விதமாகக் கவனித்த காரியத்திலிருந்து அல்லது உன் சொந்த அனுபவத்திலிருந்து உன்னால் விளக்க முடியுமா?
◻ஒரு பொய்யன் எப்படித் தன் மனச்சாட்சியைச் சேதப்படுத்துகிறான்?
◻15-வது சங்கீதத்தை வாசி. வசனங்களை நேர்மை சம்பந்தமான பிரச்னைக்கு எப்படிப் பொருத்தலாம்?
◻ஓர் இளைஞன் எவ்விதம் ஒரு நல்மனச்சாட்சியை வளர்க்க முடியும்?
[பக்கம் 212-ன் சிறு குறிப்பு]
‘கல்விப் பயிற்சி சம்பந்தமான நேர்மையின்மையைச் செய்கின்ற எந்த ஒரு மாணவனும் எதிர்காலக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்குத் தீங்கிழைக்கும் வினைமையான ஆபத்தில் சிக்கிக்கொள்வான்’
[பக்கம் 216-ன் சிறு குறிப்பு]
பைபிள் பொய்களுக்கும், தீங்கற்றது என்று சொல்லப்படுகிற பொய்களுக்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் செய்வதில்லை
[பக்கம் 214-ன் படம்]
கீழ்ப்படியாமைக்கு விளக்கம் தர கொடுக்கப்படும் நொண்டி சாக்குபோக்குகளைப் பெற்றோர் பொதுவாக கண்டுகொள்கின்றனர்