உங்கள் பிள்ளைகள் செழித்தோங்க உதவுங்கள்
குழந்தை வளர்ப்பு என்று வரும்போது தங்களுடைய பதில்களுக்காக பெற்றோர் இங்குமங்கும் தேடுகின்றனர்; ஆனால், அவை அவர்களுடைய வீடுகளிலேயே இருக்கின்றன. எண்ணற்ற குடும்பங்களிடம் பைபிள் இருக்கிறது. ஆனால் அவை பிள்ளை வளர்ப்புக்காக பயன்படுத்தப்படாமல் அவர்களுடைய புத்தக அலமாரியில் தூசிபடிந்து கிடக்கின்றன.
உண்மைதான், தங்களுடைய குடும்ப வாழ்க்கையின் வழிகாட்டியாக பைபிள் பயன்படுமோ என்று அநேகர் சந்தேகப்படுகின்றனர். அது நம்முடைய காலத்துக்கு ஒவ்வாதது, அதிக பழமையானது, அதிக கண்டிப்பானது என்றெல்லாம் சொல்லி அதை ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் ஒரு நேர்மையான ஆய்வு, குடும்பங்களுக்கான ஒரு நடைமுறையான புத்தகம் பைபிள் என்பதை வெளிப்படுத்தும். எப்படியென்று நாம் பார்க்கலாம்.
சரியான சூழல்
தகப்பன் தன் பிள்ளைகளை ‘[தனது] பந்தியைச் சுற்றிலும் [இருக்கும்] ஒலிவமரக் கன்றுகளைப்போல்’ நோக்கும்படி பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 128:3, 4) இளம் கன்றுகள், சரியான போஷாக்கு, மண், ஈரப்பதம் இவற்றுடன்கூட, கவனமாக பயிர் செய்யப்படாவிட்டால் கனிதரும் மரங்களாக வளர முடியாது. அதைப் போலவே, வெற்றிகரமான பிள்ளை வளர்ப்புக்கு கவனமும் உழைப்பும் தேவை. பிள்ளைகள் முதிர்ச்சியினிடமாக வளருவதற்கு ஆரோக்கியமான சூழல் தேவைப்படுகிறது.
இத்தகைய சூழலுக்குரிய முதல் ஆக்கப் பொருள் அன்பு—திருமணத் துணைவர்களுக்கிடையிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவிலும் நிலவும் அன்பு—ஆகும். (எபேசியர் 5:33; தீத்து 2:4) அநேக குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர்; ஆனால் அத்தகைய அன்பை வெளிப்படுத்த வேண்டிய தேவையை உணருகிறதில்லை. அப்படியென்றால், இதை கவனியுங்கள்: உங்கள் நண்பருக்கு நீங்கள் கடிதம் எழுதுகிறீர்கள்; ஆனால் அதை முகவரியிடவோ, அஞ்சல்தலையிடவோ, அல்லது அனுப்பவோகூட இல்லையென்றால் உண்மையில் நீங்கள் அவரோடு தொடர்புகொண்டதாக சொல்ல முடியுமா? அதைப்போலவே, உண்மையான அன்பும் இருதயத்துக்கு அனலூட்டும் ஓர் உணர்வைக் காட்டிலும் அதிகமான ஒன்று என்று பைபிள் காட்டுகிறது; அது வார்த்தைகளின் மூலமாகவும் செயல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. (ஒப்பிடுக: யோவான் 14:15; 1 யோவான் 5:3) தம் மகனிடமான தம்முடைய அன்பை வார்த்தைகளில் சொல்வதன் வாயிலாக, கடவுள் முன்மாதிரி வைத்திருக்கிறார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.”—மத்தேயு 3:17.
பாராட்டுகள்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமாக இத்தகைய அன்பை எப்படிக் காட்டலாம்? ஆரம்பமாக, நல்லவற்றைப் பாருங்கள். பிள்ளைகளிடம் தவறைக் காண்பது வெகு எளிது. அவர்களுடைய முதிர்ச்சியின்மை, அனுபவமின்மை, சுயநலம் ஆகியவை ஒவ்வொரு நாளும் எண்ணற்ற விதங்களில் வெளிப்படலாம். (நீதிமொழிகள் 22:15) ஆனால் ஒவ்வொரு நாளும் அவர்கள் அநேக நல்ல காரியங்களையும் செய்வார்கள். எதில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்? கடவுள் நம்முடைய தவறுகளை மாத்திரம் கவனித்துக் கொண்டிருப்பதற்கு மாறாக நாம் செய்யும் நல்லவற்றை நினைவுகூருகிறார். (சங்கீதம் 130:3; எபிரெயர் 6:10) நாம்கூட நம்முடைய பிள்ளைகளை இதேவிதமாக கையாள வேண்டும்.
ஓர் இளைஞன் குறிப்பிடுகிறான்: “என்னுடைய வீட்டில் நான் வாழ்ந்த வரையிலுமாக, வீட்டிலும்சரி பள்ளியிலும்சரி நான் செய்த சாதனைகளுக்கு எந்த விதமான பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டதாக என்னால் நினைவுகூர முடியவில்லை.” பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்குரிய இந்த அத்தியாவசியமான தேவையை புறக்கணித்துவிடாதீர்கள்! அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காக எல்லா பிள்ளைகளுமே தவறாமல் பாராட்டப்படவேண்டும். தாங்கள் செய்வது எதுவுமே எப்போதும் நன்றாக இல்லை என்று நம்பிக்கொண்டு தங்களுக்குள் ‘திடனற்றுப் போனவர்களாய்’ வளர்ந்து வரும் ஆபத்தை அது குறைக்கக்கூடும்.—கொலோசெயர் 3:21.
பேச்சுத்தொடர்பு
உங்களுடைய பிள்ளையிடம் அன்பை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு சிறந்த வழி, யாக்கோபு 1:19-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுவதே: ‘யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.’ உங்கள் பிள்ளையிடமிருப்பதை வெளிக்கொணர்ந்து, அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதற்கு உண்மையில் செவிகொடுக்கிறீர்களா? அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்பாகவே நீங்கள் முந்திக்கொண்டு கண்டிக்க தொடங்குவீர்கள் என்றோ அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை அறிந்தவுடன் நீங்கள் கோபமடைவீர்கள் என்றோ உங்கள் பிள்ளைகள் அறிந்தால், அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை தங்களிடமே வைத்துக்கொள்வார்கள். ஆனால் நீங்கள் செவிகொடுத்து கேட்பீர்களென்று அவர்கள் அறிந்தால், உங்களிடம் மனந்திறந்து கொட்டிவிடுவதற்கு அவர்களே தயாராயிருப்பார்கள்.—நீதிமொழிகள் 20:5-ஐ ஒப்பிடுக.
நீங்கள் தவறென்று அறிந்திருக்கும் உணர்ச்சிகளை அவர்கள் வெளிப்படுத்தினால் அப்பொழுது என்ன? கோபமாக பிரதிபலிப்பதற்கோ, புத்திமதி சொல்வதற்கோ, கண்டிப்பதற்கோ அதுவா நேரம்? உண்மைதான், சில குழந்தைத்தனமான குமுறல்கள் “பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும்” இருப்பதைக் கடினமாக்கலாம். ஆனால் கடவுள் தம்முடைய பிள்ளைகளோடு நடந்துகொள்ளும் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய பிள்ளைகள், தாங்கள் உண்மையில் எவ்வாறு உணருகிறார்கள் என்பதை சொல்வதற்கு பயப்படுமளவிற்கு, கடும் திகிலூட்டும் ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கியுள்ளாரா? இல்லை! “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” என்று சங்கீதம் 62:8 சொல்லுகிறது.
சோதோம் கொமோரா பட்டணங்களை அழிப்பதற்கான கடவுளுடைய தீர்மானத்தைக் குறித்து ஆபிரகாம் கவலையடைந்தபோது, அதைத் தன்னுடைய பரலோகத் தகப்பனிடம் சொல்லுவதற்கு அவர் தயங்கவில்லை: ‘இப்படிச் செய்வது . . . உமக்கு தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி நியாயஞ்செய்யாதிருப்பாரோ?’ யெகோவா ஆபிரகாமைக் கடிந்துகொள்ளவில்லை; அவருக்கு செவிகொடுத்துக் கேட்டு அவருடைய பயத்தைத் தணித்தார். (ஆதியாகமம் 18:20-33, திருத்திய மொழிபெயர்ப்பு) அவருடைய பிள்ளைகள் முற்றிலும் அநியாயமானதும், நியாயமற்றதுமான உணர்ச்சிகளைக் கொட்டின போதிலும்கூட, கடவுள் குறிப்பிடத்தக்கவிதமாக பொறுமையாகவும் கனிவாகவும் இருக்கிறார்.—யோனா 3:10-4:11.
அவ்விஷயம் எந்தளவுக்கு தொந்தரவானதாக இருந்தாலும் சரி, பிள்ளைகள் தங்களுடைய உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதை பாதுகாப்பாக உணரத்தக்கதான ஒரு சூழ்நிலையை பெற்றோர்கள் உருவாக்க வேண்டும். எனவே, உங்களுடைய பிள்ளை கோபமான உணர்ச்சியை வெளிப்படுத்தினால், கவனித்துக் கேளுங்கள். திட்டுவதற்கு மாறாக, பிள்ளையின் உணர்ச்சிகளை ஒத்துக்கொண்டு அதற்குரிய காரணங்களை தெரிந்துகொள்ள முயலுங்கள். உதாரணமாக, நீங்கள் இவ்விதம் சொல்லலாம்: ‘இன்னாரைக் குறித்து நீ கோபமாயிருக்கிறாய். என்ன நடந்ததென்று என்னிடம் சொல்ல நீ விரும்புகிறாயா?’
கோபத்தைக் கையாளுதல்
உண்மைதான், எந்த பெற்றோரும் யெகோவாவைப் போல பொறுமையானவர்கள் இல்லை. பிள்ளைகளும்கூட ஓரளவுக்குத்தான் பெற்றோரின் பொறுமையைச் சோதிக்க முடியும். எப்போதாவது நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் கோபமாக நடந்துகொண்டால், அது உங்களை மோசமான பெற்றோராக்கிவிட்டது என்று கவலைப்படாதீர்கள். சில சமயங்களில், உங்களுடைய கோபம் நியாயமாகவே இருக்கலாம். கடவுள் தாமே அவருடைய பிள்ளைகளிடம், அவருக்கு பிரியமானவர்களாக இருப்பவர்களிடம்கூட நியாயமாகவே கோபமடைகிறார். (யாத்திராகமம் 4:14; உபாகமம் 34:12) இருப்பினும், அவருடைய வார்த்தை கோபத்தைக் கட்டுப்படுத்த நமக்கு கற்பிக்கிறது.—எபேசியர் 4:26.
எப்படி? சில சமயங்களில் சில நிமிடங்களுக்கு மனதை அந்த விஷயத்திலிருந்து வேறு பக்கமாக திசைதிருப்புவது உங்களுடைய கோபம் தணிவதற்கான வாய்ப்பை அளிப்பதன் மூலம் உதவுகிறது. (நீதிமொழிகள் 17:14) மேலும், இது ஒரு பிள்ளை என்பதை நினைவில் வையுங்கள்! உங்கள் பிள்ளையிடமிருந்து பெரியவர்களைப் போல நடக்கவேண்டுமென்றோ, முதிர்ச்சியுடன் சிந்திக்கவேண்டுமென்றோ எதிர்பார்க்காதீர்கள். (1 கொரிந்தியர் 13:11) ஒரு குறிப்பிட்ட விதமாக உங்கள் பிள்ளை ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவது உங்கள் கோபத்தைக் குறைப்பதற்கு உதவிசெய்யும். (நீதிமொழிகள் 19:11) கெட்ட ஒன்றைச் செய்வதற்கும் கெட்டவனாக இருப்பதற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசமுள்ளது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். ஒரு பிள்ளையை கெட்டவன் என்று திட்டுவது, ‘நான் ஏன் நல்லவனாக இருக்க முயல வேண்டும்?’ என்று அந்தப் பிள்ளையைச் சிந்திக்க வைக்கும். ஆனால் அந்தப் பிள்ளையை அன்புடன் சரிசெய்வது அடுத்தமுறை நன்மை செய்வதில் முன்னேற்றம் செய்ய அந்தப் பிள்ளைக்கு உதவிசெய்யும்.
ஒழுங்கையும் மரியாதையையும் காத்து வருதல்
ஒழுங்கு மரியாதை என்ற உணர்வை பிள்ளைக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர் எதிர்ப்படும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. மனம்போன போக்கில் வாழும் இன்றைய உலகத்தில், பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவது சரிதானா என்றும்கூட அநேகர் சிந்திக்கின்றனர். பைபிள் பதிலளிக்கிறது: “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 29:15) “பிரம்பு” என்ற வார்த்தை ஒருவிதமான பிள்ளை துர்ப்பிரயோகத்தைக் குறிக்கிறது என்று நினைத்துக்கொண்டு அநேகர் அவ்வார்த்தையிலிருந்தே பின்வாங்குகின்றனர். ஆனால் அது அவ்விதம் குறிக்கிறதில்லை. “பிரம்பு” என்ற எபிரெய வார்த்தை ஒரு மேய்ப்பன் ஆடுகளைத் தாக்குவதற்காக அல்ல, வழிநடத்துவதற்காக வைத்திருக்கும் கோலைப் போன்ற ஒன்றைக் குறிக்கிறது. a எனவே பிரம்பு சிட்சிப்பதை பிரதிநிதித்துவம் செய்கிறது.
பைபிளில் சிட்சித்தல் என்பது கற்பிப்பதையே பிரதானமாக குறிக்கிறது. அதனால்தான் நீதிமொழிகள் புத்தகத்தில் “சிட்சைக்கு செவிகொடு” என்ற எபிரெய பதம் நான்கு முறைக் காணப்படுகிறது. (நீதிமொழிகள் 1:8; 4:1; 8:33; 19:27; NW) சரியானதைச் செய்வது வெகுமானத்தைக் கொண்டுவருகிறது என்றும் தவறானதைச் செய்வது கெட்ட விளைவுகளைக் கொண்டுவருகிறது என்றும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். தண்டனை கொடுப்பது தவறான காரியங்களிலிருந்து விலகியிருப்பதற்கான பாடத்தை மனதில் பதியவைக்க உதவலாம்; அதைப் போல பாராட்டைப் போன்ற வெகுமானம் சரியான நடத்தையை வலியுறுத்த உதவலாம். (உபாகமம் 11:26-28-ஐ ஒப்பிடுக.) தண்டனை என்று வரும்போது பெற்றோர்கள் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் தம்முடைய மக்களை “சரியான அளவில் தண்டிப்பேன்” என்று அவர் சொல்லியிருந்தார். (எரேமியா 46:28, NW) சில பிள்ளைகளுக்கு, அவர்களை ஒழுங்காக நடத்திக்கொள்வதற்காக சில கடுமையான வார்த்தைகளைச் சொன்னாலே போதும். மற்றவர்களுக்கு இன்னும் உறுதியான அளவுகளில் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் “சரியான அளவில் தண்டிப்பது” என்பது ஒரு பிள்ளைக்கு உடல்ரீதியில் அல்லது உணர்ச்சிப்பூர்வமாக உண்மையில் கெடுதி விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஒருபோதும் உட்படுத்துவதில்லை.
சமநிலையான சிட்சை பிள்ளைகளுக்கு எல்லைகளையும் வரம்புகளையும் கற்றுக் கொடுப்பதை உட்படுத்துகிறது. இவற்றில் அநேகம் கடவுளுடைய வார்த்தையில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. தனிநபர் சொத்தைச் சுற்றியுள்ள எல்லைக்கு மதிப்புக் கொடுக்கும்படி பைபிள் போதிக்கிறது. (உபாகமம் 19:14) வன்முறையை நேசிப்பதும் அல்லது வேண்டுமென்றே மற்றவருக்கு தீங்கு விளைவிப்பதும் தவறென்று சொல்வதன்மூலம் அது சரீரப்பிரகாரமான எல்லைகளை வைக்கிறது. (சங்கீதம் 11:5; மத்தேயு 7:12) முறைதகாப் புணர்ச்சியைக் கண்டனம் செய்து, பாலியல் ஒழுக்க எல்லைகளை நிலைநாட்டுகிறது. (லேவியராகமம் 18:6-18) மற்றொருவரை இழிவான பெயரால் அழைப்பதை அல்லது வார்த்தைகளை வேறுவிதமாக தவறாக பயன்படுத்துவதைத் தடைசெய்வதன்மூலம் அது தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வ எல்லைகளுக்கும் மதிப்புக் கொடுக்கிறது. (மத்தேயு 5:22) இத்தகைய எல்லைகளையும் வரம்புகளையும் குறித்து பிள்ளைகளுக்கு—வார்த்தையின் மூலமாகவும் செயலின் மூலமாகவும்—கற்பிப்பது ஆரோக்கியமான குடும்ப சூழலை உருவாக்க அத்தியாவசியமானது.
குடும்பத்தில் ஒழுங்கையும் மரியாதையையும் காத்து வருவதற்கான மற்றொரு திறவுகோல் குடும்பத்தில் அவரவருக்குரிய பாகத்தை புரிந்துகொள்வதைச் சார்ந்துள்ளது. இன்று அநேக குடும்பங்களில் அத்தகைய பாகங்கள் தெளிவற்றதாகவும் குழப்பமானதாகவும் உள்ளன. சில குடும்பங்களில் பெற்றோர் ஒருவர், பிள்ளையால் கையாள முடியாத பாரமான பிரச்சினைகளை அதனிடம் சொல்கிறார்கள். மற்ற சில குடும்பங்களில், பிள்ளைகள் முழு குடும்பத்திற்கும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு, குட்டி சர்வாதிகாரிகளாக இருக்கும்படி அனுமதிக்கப்படுகிறார்கள். அது தவறானதாகவும் கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. சரீரப்பிரகாரமாக, உணர்ச்சிப்பூர்வமாக, அல்லது ஆவிக்குரிய ரீதியாக எதுவாயிருந்தாலும்சரி, இளம் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை பெற்றோர்கள் தாமே அளிக்க வேண்டும்—இதற்கு எதிர்மாறாக இருக்கக் கூடாது. (2 கொரிந்தியர் 12:14; 1 தீமோத்தேயு 5:8) தன்னுடைய சிறுபிள்ளைகளுக்கு அதிக கடினமாக இருக்கக்கூடாது என்பதற்காக தன்னுடைய முழு குடும்பத்தையும் பரிவாரத்தையும் மெதுவாக நடத்திச்சென்ற யாக்கோபின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர்களுடைய வரம்புகளை அவர் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொண்டார்.—ஆதியாகமம் 33:13, 14.
ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்துதல்
ஆரோக்கியமான ஒரு குடும்பச் சூழலுக்கு ஆவிக்குரியதன்மையைவிட அதிக முக்கியமானது வேறேதுமில்லை. (மத்தேயு 5:3) பிள்ளைகள் ஆவிக்குரிய தன்மைக்காக அதிகளவான திறனைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கேள்விகளால் நிறைந்திருக்கின்றனர்: நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? இந்த பூமி, அதிலுள்ள மிருகங்கள், மரங்கள், கடல்கள் இவற்றையெல்லாம் யார் உண்டாக்கினார்? மக்கள் ஏன் சாகிறார்கள்? அதற்குப்பின் என்ன நடக்கிறது? நல்ல ஆட்களுக்கு கெட்ட காரியங்கள் ஏன் ஏற்படுகின்றன? பட்டியல் முடிவற்றதாக தோன்றுகிறது. அடிக்கடி, பெற்றோர்கள் தாமே இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து சிந்திக்க விரும்புகிறதில்லை. b
தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய போதனையைக் கொடுப்பதற்காக நேரத்தை செலவழிக்கும்படி பைபிள் பெற்றோரைத் துரிதப்படுத்துகிறது. அது அத்தகைய போதனையை, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே நடைபெறும் முன்னேறிக் கொண்டிருக்கும் உரையாடலாக, அனலான கருத்தில் அதை விவரிக்கிறது. பெற்றோர்கள் கடவுளையும் அவருடைய வார்த்தையையும் குறித்து அவர்கள் ஒன்றாக நடக்கும்போதும், வீட்டில் ஒன்றாக உட்கார்ந்திருக்கும்போதும், படுக்கைநேரத்திலும்—எப்போதெல்லாம் சாத்தியமோ அப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு போதிக்கவேண்டும்.—உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4.
பைபிள் இத்தகைய ஆவிக்குரிய திட்டத்தைப் பரிந்துரை செய்வதோடில்லாமல் அதிகத்தைச் செய்கிறது. உங்களுக்கு தேவைப்படும் தகவல்களையும் அது அளிக்கிறது. பிள்ளைகளின் மேற்சொல்லப்பட்ட கேள்விகளுக்கு எப்படி நீங்கள் பதிலளிப்பீர்கள்? பைபிள் பதில்களைக் கொண்டுள்ளது. அவை எளிதில் புரிந்துகொள்ளத்தக்கவை; அவை கவனத்தை ஈர்க்கத்தக்கவை, மேலும் இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பெரியளவான நம்பிக்கையை அவை கொடுக்கின்றன. இன்னும் சிறந்ததாக, பைபிளின் ஞானத்தைப் பற்றிக்கொள்வது உங்கள் பிள்ளைகளுக்கு உறுதியான நங்கூரமாக, இன்றைய குழப்பமான காலங்களில் நம்பகமான வழிகாட்டியாக உள்ளது. அதை அவர்களுக்கு கொடுங்கள், அவர்கள் உண்மையில் செழித்தோங்குவார்கள்—இப்போதும் எதிர்காலத்திலும்.
[அடிக்குறிப்பு]
a செப்டம்பர் 8, 1992, ஆங்கில விழித்தெழு!-வில் பக்கங்கள் 26-8-ஐக் காண்க.
b குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகமானது குடும்ப படிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் பிள்ளை வளர்ப்பு சம்பந்தமாக அநேக நடைமுறையான வழிநடத்துதலைக் கொண்டிருக்கிறது. அது உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
உங்கள் பிள்ளையை குறிப்பாக பாராட்டுவதற்கு எப்போதுமே ஏதாவதொரு வழியைத் தேடுங்கள்
[பக்கம் 9-ன் பெட்டி]
பிள்ளைகள் செழித்தோங்க உதவுவது எப்படி
• அவர்கள் நேசிக்கப்படுகிறார்களென்றும் தேவைப்படுகிறார்கள் என்றும் உணரத்தக்க பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துங்கள்
• அவர்களைத் தவறாமல் பாராட்டுங்கள். அதைக் குறிப்பாகத் தெரிவியுங்கள்
• செவிகொடுத்துக் கேட்பதில் சிறந்தவராக இருங்கள்
• கோபம் வெடித்தெழும்போது, கவனத்தை திசைதிருப்புங்கள்
• தெளிவான, நிலையான எல்லைகளையும் வரம்புகளையும் வையுங்கள்
• ஒவ்வொரு பிள்ளையின் தேவைக்கேற்ப சிட்சையை அமையுங்கள்
• உங்கள் பிள்ளையிடமிருந்து நியாயமானதைவிட அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்
• கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிப்பதன் மூலம் ஆவிக்குரிய தேவைகளுக்கு கவனம் செலுத்துங்கள்
[பக்கம் 10-ன் பெட்டி]
முன்கூட்டியே தெரிவித்தது
பண்டைய இஸ்ரவேல் மக்கள் அவர்களைச் சுற்றியுள்ள தேசத்தாருடையதைவிட மிகவும் உயர்ந்த குடும்ப வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பதற்கு பைபிளின் சட்டங்களே உதவி செய்தன. “இஸ்ரவேலருடைய எல்லையைத் தாண்டி, நாம் புரிந்துகொண்டிருக்கும் கருத்தில் குடும்ப வாழ்க்கை அல்லது குடும்பம் இருந்தது என்பதைச் சொல்வது அரிதாகவே பொருத்தமாயிருக்கும்” என்று சரித்திராசிரியர் ஆல்ஃபிரட் எடர்ஷைம் குறிப்புரைக்கிறார். உதாரணமாக, பூர்வ ரோமர்களின் மத்தியில், குடும்பத்தின் முழுமையான அதிகாரத்தை சட்டம் தகப்பனுக்கே கொடுத்தது. அவன்—தண்டனை பெறாமலேயே—அவர்களை அடிமைகளாக விற்க முடியும், வேலையாட்களாக வேலை வாங்க முடியும், அல்லது கொல்லவும்கூட முடியும்.
யூதர்கள் தங்களுடைய பிள்ளைகளை கனிவாக நடத்தியதால் சில ரோமர்கள் அவர்களை வினோதமானவர்களாகக் கருதினர். உண்மையில் முதல் நூற்றாண்டு ரோம சரித்திராசிரியர் டாஸிடஸ், யூதர்களுக்கு விரோதமாக எழுதிய வெறுப்புமிகுந்த பத்தியில், அவர்களுடைய வழக்கங்கள் “ஒரு சமயத்தில் இழிவானதாகவும் அருவருப்பானதாகவும் இருந்தன” என்று சொல்லியிருந்தார். இருந்தபோதிலும், அவர் இதை ஒத்துக்கொண்டார்: “புதிதாக பிறந்த எந்தக் குழந்தையைக்கூட கொல்வது அவர்களுக்கு மத்தியில் ஒரு குற்றமாக இருந்தது.”
பைபிள் உயர்வான தராதரத்தைக் கொடுத்தது. பிள்ளைகள் மதிப்புமிக்கவர்களாக இருக்கிறார்கள்—உண்மையில் கடவுளிடமிருந்து வரும் சுதந்தரமாக நோக்கப்பட வேண்டும்—என்றும் அதற்கிசைவாக நடத்தப்படவேண்டுமென்றும் அது யூதர்களுக்கு கற்பித்தது. (சங்கீதம் 127:3) தெரிந்த விதமாக அநேக யூதர்கள் அத்தகைய ஆலோசனையின்படி வாழ்ந்தனர். இது தொடர்பாக அவர்களுடைய மொழியும்கூட வெளிப்படுத்தியிருக்கிறது. மகனுக்கும் மகளுக்கும் வரும் பதங்களைத் தவிர, பிள்ளைகளைக் குறிக்கும் ஒன்பது பதங்களைப் பூர்வ எபிரெய மொழி கொண்டிருந்தது என்றும், அவை ஒவ்வொன்றும் பிள்ளைகளுடைய வாழ்க்கையின் வித்தியாசப்பட்ட பருவங்களுக்கு பொருந்தின என்றும் எடர்ஷைம் குறிப்பிடுகிறார். உதாரணமாக, இன்னும் பால்குடிக்கும் பிள்ளைக்கு ஒரு பதமும், பால்மறந்த பிள்ளைக்கு மற்றொரு பதமும் இருந்தது. அதைவிடச் சற்று பெரிதான பிள்ளைகளுக்கு, அவர்கள் பலமாகவும் உறுதியாகவும் ஆகிக்கொண்டு வருவதைக் குறிக்க மற்றொரு பதம் இருந்தது. மேலும் வளர்ந்த இளைஞர்களுக்கும் ‘கட்டவிழ்த்துக் கொண்டு செல்லுதல்’ என்று சொல்லர்த்தமாக குறிக்கும் ஒரு வார்த்தை இருந்தது. எடர்ஷைம் குறிப்பிடுகிறார்: “நிச்சயமாகவே, பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பருவத்தையும் சித்தரிக்கும் வண்ணமாக பெயரிடுவதற்காக அவர்களை கூர்ந்து கவனித்தவர்கள், தங்களுடைய பிள்ளைகளிடம் அதிக பிரியத்துடன் ஒட்டிக் கொண்டிருந்திருப்பார்கள்.”