பைபிளின் கருத்து சங்கீதம் 107 -150
மகிழ்ச்சியுள்ள கடவுள், மகிழ்ச்சியுள்ள ஜனம்!
மகிழ்ச்சி, மக்கள் பெரும்பான்மையர் ஒருபோதும் அடையாத ஓர் இலக்கு. என்றாலும் மற்ற ஒரு சிறிய தொகுதியினருக்கு மகிழ்ச்சி வாழ்க்கை முறையாயிருக்கிறது. அதற்கு மூலக்காரணம் என்ன? உண்மை வணக்கமே! யெகோவா மகிழ்ச்சியுள்ள கடவுள், ஆகவே அவரை வணங்குவதன் மூலம் நாமும் மகிழ்ச்சியாயிருக்கலாம். இதற்கு அத்தாட்சியாக சங்கீதங்களின் ஐந்தாவது புத்தகத்தை, அதாவது சங்கீதங்கள் 107-லிருந்து 125 வரை நாம் கவனித்துப் பார்க்கலாம்.
யெகோவா விடுவிக்கிறவர்
சங்கீதம் 107-லிருந்து 119 வரை தயவுசெய்து வாசியுங்கள். பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யும்படி விண்ணப்பித்த யூதர்களின் ஜெபமும், “யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள்” தாங்கள் திரும்பி வந்ததைப் பாட்டினால் கொண்டாடுவதும் (சங்கீதம் 107, தி.மொ.) முன்னால், விடுவிக்கப்பட்டிருந்ததனால், தாவீது கடவுளுக்குக் ‘கீர்த்தனம் பண்ணி’ அவருடைய நற்குணத்தையும் அன்பையும் அறிவித்தான். (சங்கீதங்கள் 108, 109) தாவீதின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, யெகோவாவிடமிருந்து வரும் பலத்தில் கடவுளுடைய சத்துருக்களைக் கீழ்ப்படுத்துவார். (சங்கீதம் 110) தம்முடைய ஜனத்தை மீட்பதோடுகூட, யெகோவா தமக்குப் பயப்படும் நேர்மையானவனை ஆசீர்வதிக்கிறார். (சங்கீதங்கள் 111, 112) பாபிலோனிலிருந்து தாங்கள் விடுதலையான பின்பு, யூதர்கள் பெரும் வருடாந்தர பண்டிகைகளில் ‘அல்லேல்’ சங்கீதங்களை, அல்லது துதிப்பாடல்களைப் பாடினார்கள். (சங்கீதங்கள் 113-118) 119-ம் சங்கீதம் மற்ற எல்லாவற்றையும்விட நீண்ட சங்கீதம், அதன் 176 வசனங்களில் 2 வசனங்களைத் தவிர எல்லாம் கடவுளுடைய வார்த்தையை அல்லது பிரமாணத்தைக் குறிப்பிடுகின்றன.
◆107:27—‘அவர்களுடைய ஞானம் தடுமாறினது’ எப்படி?
அழிவுண்டாக்கும் புயலில் அகப்பட்ட மாலுமிகளைப் போல், யூதருடைய ஞானம், பாபிலோனில் அவர்களுடைய சிறையிருப்பு நிலையின்போது பயனற்றதாக நிரூபித்தது; அவர்களை விடுதலையாக்குவதற்கு மானிட வழிவகைகளெல்லாம் தோல்வியடைந்து விட்டன. ஆனால் புயல்போன்ற இந்தக் கொந்தளிப்பான நிலையின் மத்தியில் யெகோவாவிடம் திரும்பினதனால் விடுதலை வந்ததது. அவர் அந்த அடையாளப் புயலை அமர்த்தி அவர்களை விடுவித்து பத்திரமாய்த் “துறைமுகம்” சேரத் செய்தார்.—சங்கீதம் 107:30.
◆110:3—பனிக்குச் சமானமான யெளவன ஜனத்தைக் (வாலிபரை, NW) கொண்டிருப்பதன் உட்பொருள் என்ன?
பனி, ஆசீர்வாதத்துடனும், செழிப்புடனும், ஏராளத்துடனும் இணைக்கப்படுகிறது. (ஆதி.27:28) மேலும் பனித்துளிகள் மென்மையாயும், புத்துயிரளிப்பவையாயும், மிகப்பலவாயும் இருக்கின்றன. மேசியானிய அரசரின் படைவலிமைக்குரிய நாளில், அவருடைய குடிமக்கள் விரைவாயும், மகிழ்ச்சியுடனும் மனமுவந்து தங்களை அத்தனை பெரும் எண்ணிக்கைகளில் அளிப்பதால் அவர்களைப் பனித்துளிகளுக்கு ஒப்பிடலாம். புத்துயிரளிக்கும் பனித்துளிகளைப் போல், இன்று யெகோவாவின் அமைப்பு முழுவதிலும் மிகப்பல வாலிபப் பையன்களும் பெண்களும் கடவுளுக்கும் தங்களுடைய உடன் வணக்கத்தாருக்கும் சேவை செய்கிறார்கள்.
◆116:3—“மரணக்கட்டுகள் (கயிறுகள், NW) யாவை?
மரணம் முறிக்கமுடியாதக் கயிறுகளைக் கொண்டு சங்கீதக்காரனை அவ்வளவு இறுக்கமாய் கட்டியிருந்ததால் தப்புவது கூடாதக் காரியம்போல் தோன்றுகிறது. கைகால்களைச் சுற்றி இறுக்கமாய்க் கட்டும் கயிறுகள் கடுகடுப்பான நோவுகளை, அல்லது வேதனைகளை உண்டுபண்ணுகின்றன, மேலும் கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பில் “கயிறுகள்” என்பதற்குரிய எபிரெய சொல் “வேதனைகள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இயேசு கிறிஸ்து மரிக்கையில், அவர் இயக்க ஆற்றலிழந்த மரண இறுக்கப்பிடியில், அல்லது மரண “உபாதிகளில் [கடும் வேதனைகைளில்] இருந்தார். ஆகவே யெகோவா இயேசுவை உயிர்த்தெழுப்பினபோது, அவர் இயேசுவின் “மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்”தார்.—அப். 2:24.
◆119:83—சங்கீதக்காரன் எப்படித் “துருத்தியைப்போல்” இருந்தான்?
யெகோவா தனக்கு ஆறுதளிப்பதற்காகக் காத்திருக்கையில், சங்கீதக்காரன், உபயோகப்படுத்தாதபோது தொங்க வைக்கப்பட்டிருக்கும் தோல் துருத்தியைப் போலாகியிருந்தான். புகைப்போக்கி இராத ஒரு கூடாரத்தில் அல்லது வீட்டில் புகையின் காரணமாக, இந்த வகையான துருத்தி படிப்படியாய்க் கறுத்துக் காய்ந்து, சுருங்கிப் போகும். நடைமுறையளவில், இதுவே, துன்புறுத்துவோரின் கைகளில் சங்கீதக்காரனுக்கு நடந்தது. (84-ம் வசனம்) அவனுடைய இக்கட்டான நிலை ஒருவேளை அவனுடைய வருத்தம் தோய்ந்த முகத்தோற்றத்திலும், சுருங்கி கோடுற்ற முகத்திலும் தெரிந்திருக்கலாம், மேலும் அவனுடைய முழு உடலும் அவ்வளவாய்ப் பாதிக்கப்பட்டதால் அதன் நீர் சிறிது இழந்து காய்ந்திருக்கலாம். (சங்கீதம் 32:4-ஐ ஒத்துப் பாருங்கள்.) இவ்வாறு அவன், திரவப் பொருட்களை ஊற்றி வைப்பதற்குத் தகுதியல்லாததென மற்றவர்கள் வீசியெறியும் வற்றிச் சுருங்கிய தோல் துருத்தியைப் போல் பயனற்றவனாக ஒருவேளை உணர்ந்திருக்கலாம். என்றாலும் அவன் ‘கடவுளுடைய பிரமாணங்களை மறந்துவிடவில்லை.’
◆119:119—கடவுள் எப்படி துன்மார்க்கரைக் “களிம்பைப் போல” அகற்றிவிடுகிறார்?
உருக்கிய உலோகத்தில் அல்லது உருக்கு உலையில் மேற்பரப்பில் மிதக்கும் களிம்பு பயனற்றக் கழிவுபொருள், விலக்க வேண்டிய அசுத்தப்பொருள். இவ்வாறு, புடமிடுபவன் பொன் அல்லது வெள்ளியைப் போன்ற உலோகத்தை இந்தக் ‘களிம்பிலிருந்து’ பிரிக்கிறான். இவ்வாறே, யெகோவா துன்மார்க்கரைக் கசடு குவியலுக்கே தகுதியானவர்களெனக் கருதி, தம்முடைய தயவைக் கொண்டிருக்கும் மதிப்புள்ளவர்களிலிருந்து அவர்களைப் பிரித்து முடிவுறச் செய்கிறார்.—எசேக்கியேல் 22:17-22-ஐ ஒத்துப் பாருங்கள்.
நமக்குப் படிப்பினை: பூர்வீக யூதர்களைப் போல், இன்று யெகோவாவின் சாட்சிகள் விடுதலைக்காகக் காத்திருக்கின்றனர்.—இந்தச் சமயத்தில் அர்மகெதோன் புயலினூடே விடுவிக்கப்படுவதற்கு. (வெளிப்படுத்துதல் 16:14, 16) கடவுள் குறித்திருக்கும் காலத்தில், இந்தக் காரிய ஒழுங்குமுறை இந்தப் பெரிய போரினால் அழித்தகற்றப்படும். இரட்சிப்புக்காக யெகோவாவை நோக்கியிராதவர்கள், இந்தப் பெரும் அழிவின் அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படுகையில் முற்றிலும், உதவியற்றிருப்பர். ஆயினும், தப்பிப் பிழைப்பவர்களோவெனில், “யெகோவாவின் அன்புள்ள-இரக்கத்துக்காக அவருக்கு நன்றி செலுத்துவார்கள்.” ஆகையால், இந்தக் கடைசி நாட்களில், இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களும் “திரள் கூட்டத்தாரும்” யெகோவாவில் தங்கள் முழு நம்பிக்கையை வைக்கலாம்.—சங்கீதம் 107:31, NW; வெளிப்படுத்துதல் 7:9.
ஆரோகண சங்கீதங்கள்’ அல்லது ‘ஏறுதல்களின் பாடல்கள்’
சங்கீதங்கள் 120-லிருந்து 134 வரை வாசியுங்கள். இந்தப் 15 சங்கீதங்களும் “ஏறுதல்களின்’ பாடல்கள் என்றழைக்கப்படுகின்றன. “ஆரோகணங்கள்” அல்லது ‘ஏறுதல்கள்’ சரிநுட்பமான கருத்தைக் குறித்ததில் நிபுணர்கள் மாறுபடுகிறார்கள், ஆனால் இஸ்ரவேலர் தங்கள் மூன்று வருடாந்தர பண்டிகைகளுக்கு, உயரத்தில் அமைந்திருந்த எருசலேம் நகரத்துக்கு மேலேறிச் செல்கையில் அவர்கள் ஒருவேளை இந்தச் சங்கீதங்களைப் பாடிக்கொண்டே ஏறியிருக்கலாம்.—சங்கீதம் 122:1
◆120:4—இந்தக் “கூர்மையான அம்புகளும்” “எரிக்கும் தழலும்” யாவை?
அவதூறு பேசும் நாவு போர்க்கருவியைப் போல் அல்லது தீயைப் போல் அவ்வளவு அழிவு உண்டாக்கக்கூடும். (நீதிமொழிகள் 12:18; யாக்கோபு 3:6) அதற்குக் கைம்மாறாக, அந்த அவதூறு பேசும் நாவு போர்வீரனின் அம்புகள் என்பதால் மெளனமாக்கப்படும்படி யெகோவா பார்த்துக் கொள்கிறார். கவனத்தைக் கவருவதாய், புதர்போன்ற சூரைச்செடியிலிருந்து உண்டாக்கப்பட்ட கரி வெகு தீவிரமாய் எரிகிறது. இது, “கபட நாவின்” மீது வரும் தெய்வீக நியாயத்தீர்ப்பின் கடுமையைக் குறிப்பிடுகிறது.—சங்கீதம் 120:2, 3.
◆131:2—ஆத்துமா எப்படிப் “பால் மறந்த குழந்தையைப் போல்” ஆகிறது?
பால் மறக்கச் செய்வதற்கு முன்னால், குழந்தை, உணவூட்டப்படும்படியான தன் ஆவலைத் திருப்திசெய்ய தன் தாய்க்காக ஏங்குகிறது. பால் மறந்த குழுந்தை அதன் தாயின் புயங்களில் திருப்தியையும், பாதுகாப்பையும், ஆறுதலையும் கண்டடைகிறது. மனத்தாழ்மையான போக்கைப் பின்தொடருவதில் திருப்தியாயிருந்தது. (வசனம் 1) சங்கீதக்காரன்: தன் தாயின் புயங்களில் இருக்கும் பால்மறந்த குழுந்தையைப் போல் “அடக்கி அமரப்பண்ணி”யிருக்கும் உணர்ச்சியை அடைந்தான். மனத்தாழ்மையுடன் யெகோவாவை நோக்கிக் காத்திருந்து அவருடைய சித்தத்தைச் செய்வது பாதுகாப்பையும் நிறைவான ஆசீர்வாதங்களையும் கொண்டுவருகிறது.
நமக்குப் படிப்பினை: யெகோவா தம்முடைய ஜனங்களை இக்கட்டிலிருந்து விடுவிக்கக்கூடுமென்றாலும், எல்லா துன்பத்திலிருந்தும் அவர் அவர்களைத் தடுத்து வைக்கிறதில்லை. நிச்சயமாகவே, துன்பங்கள் இந்தச் சங்கீதங்களை வசனிக்கும்படி அவற்றை இயற்றினவர்களைத் தூண்டி இயக்கியது. எனினும், கடவுள், “உங்கள் திராணிக்கு மிஞ்சி நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடங்கொடார், சோதனையைத் தாங்கத்தக்கதாக . . . தப்பும் வழியையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) ஆவிக்குரிய அழிவிலிருந்து யெகோவா நிச்சயமாகவே நம்மைப் பாதுகாக்கிறார். அவர் அந்த இக்கட்டைத்தானே அகற்றுவதற்கு நிகழ்ச்சிகளைக் கையாண்டு நடத்தலாம் அல்லது நாம் அந்த நெருக்கடியைத் தாங்கி நிற்கும்படி நம்மைப் பலப்படுத்தலாம். இதனால் நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களில் நாம் அனுபவித்து மகிழும் ஒற்றுமை வெகு ஆறுதலாயும் நன்மை பயக்குவதாயும் இருக்கின்றன.—சங்கீதம் 133:1-3.
துதிக்கக்தகுந்தக் கடவுள்
சங்கீதங்கள் 135-லிருந்து 145 வரை வாசியுங்கள். விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறவர்கள் அவற்றைப் போலாகின்றனர், இந்த விக்கிரகங்களுக்கு எதிர்மாறாக, யெகோவா துதிக்கத்தகுந்தக் கடவுளும் விடுவிக்கிறவருமாக இருக்கிறார். (சங்கீதங்கள் 135, 136) அவருடைய ஜனங்கள் பாபிலோனில் இருந்தபோதும், அவர்கள் “சீயோனின் பாட்டுகளை” மறந்துவிடவில்லை. (சங்கீதம் 137) தாவீது, ‘ராஜாக்கள் யெகோவாவைத் துதிப்பார்கள்,’ என்று சொல்லுகிறான், தான் அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருப்பதில் களிகூருகிறான். (சங்கீதங்கள் 138, 139) கடவுளுடைய பாதுகாப்புக்காக அவன் ஜெபிக்கிறான், அவருடைய நற்குணத்தை மிக உயர்வாய்ப் புகழுகிறான், யெகோவாவிடம் நல்ல உறவைக் கொண்டிருப்பது மாத்திரமே உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவருமென்று அறிந்திருக்கிறான்.—சங்கீதங்கள் 140-145.
◆138:2, NW—கடவுள் எப்படி தம்முடைய வார்த்தையைத் தம்முடைய பெயருக்கு மேலாக மகிமைப்படுத்தினார்?
யெகோவா தம்முடைய பெயரின் அடிப்படையில் ஒன்றை அறிவிக்கையில், அது நிறைவேற்றமடைவதைக் குறித்து நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். ஆயினும் அவர், அந்த மெய் நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்ப்பதற்கும் மேலாக மிகப் பேரளவில் மேம்படச் செய்து, எப்பொழுதும் நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மிகைப்படச் செய்கிறார். அவருடைய “வார்த்தை”யின் நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகச் சிறப்பாக்குவதன் மூலம் கடவுள் தம்முடைய “வார்த்தையை” மகிமைப்படுத்துகிறார்.
◆139:9—“விடியற்காலத்துச் செட்டைகள்” என்பதன் அர்த்தமென்ன?
இந்தச் சொற்றொடர், கிழக்கிலிருந்து மேற்காக வானத்தின்மேல் விரைவாய்ப் பரவும் விடியற்கால தொடக்க ஒளியைச் செட்டைகளைக் கொண்டிருப்பதுபோல் சித்தரிக்கிறது. தாவீது, “விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, மேற்கின் நெடுந்தொலைவில் உள்ள பாகத்தைப் போய்ச் சேர்ந்தாலும் அவன் இன்னும் அங்கே யெகோவாவின் கவனிப்பின் கீழும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழும் இருப்பான்.—சங்கீதம் 139:10; ஆமோஸ் 9:2, 3-ஐ ஒத்துப் பாருங்கள்.
◆141:3—தாவீது ஏன் ‘தன் உதடுகளின் வாசலுக்குக் காவல்’ வேண்டுமென்று கேட்டான்?
நாவு உண்டுபண்ணக்கூடிய தீங்கையும் அபூரண மனிதர், முக்கியமாய்க் கோபமூட்டப்படுகையில், எண்ணாது துணிச்சலாய்ப் பேசத் தூண்டப்படுவதையும் தாவீது அறிந்திருந்தான். மோசே பூமியில் மற்றெல்லாரையும்விட மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். என்றாலும், மேரிபாவின் தண்ணீர்கள் சம்பந்தமாக அவன் தன் நாவினால் பாவஞ்செய்தான். (எண்ணாகமம் 12:3; 20:9-13) அப்படியானால், தீங்குண்டாக்கத்தக்கப் பேச்சைத் தவிர்த்து நல்ல இருதயத்தைக் காத்துக்கொள்ள உதடுகளை அடக்குவது அவசியம்.—யாக்கோபு 3:5-12.
◆142:7, NW—தன் ஆத்துமா ‘சிறைக்கிடங்கில்’ இருந்ததென தாவீது ஏன் எண்ணினான்?
இருளில், அபாயகரமான சிறைக்கிடங்கில் இருப்பதுபோல், தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மனிதர் எல்லாரிலுமிருந்து பிரிக்கப்பட்டவனாய்த் தன் பிரச்னைகளுடன் தன்னந்தனிமையில் இருப்பதாக அவன் உணர்ந்தான். இவ்வகை உணர்ச்சிகள் நமக்கு உண்டாகி, நம்முடைய “வலதுபுறம்” தாக்கப்படும் நிலையில் இருக்கையில், நாம், உதவிக்காகத் திடநம்பிக்கையுடன் யெகோவாவை நோக்கிக் கூப்பிடலாம்.—சங்கீதம் 142:3-7.
நமக்குப் படிப்பினை: சங்கீதம் 139-ல், தாவீதை ‘ஊடுருவ ஆராயவும்’ அவனையும் அவனுடைய வழிகளையும் ‘அறியவும்’ கடவுளுக்கிருக்கும் திறமையில் தாவீது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். தப்பித்துக்கொள்ளத் தேடுவதைப் பார்க்கிலும், யெகோவாவின் வழிநடத்துதலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் மேலுமதிக முழுமையாய்த் தன்னைக் கீழ்ப்படுத்தவே தாவீது விரும்பினான். கடவுள் தன்னை எப்பொழுதும் உற்றுக் கவனிக்கிறாரென அவன் அறிந்திருந்தான். இத்தகைய அறிவு ஒருவனைத் தவறு செய்வதிலிருந்து தடுத்து வைப்பதுமட்டுமல்லாமல் உச்ச அளவான ஆறுதலையும் அவனுக்கு அளிக்கிறது. நம்முடைய செயல்களை யெகோவா காண்கிறார், நம்முடைய பிரச்னைகளைப் புரிந்துகொள்கிறார், மேலும் நமக்கு உதவிசெய்ய எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறார் என்ற இந்த உண்மைப் பாதுகாப்பும் சமாதானமும் தரும் ஆழ்ந்த உணர்ச்சியை உண்டுபண்ணுகிறது. இது நம்முடைய மகிழ்ச்சிக்கு இன்றியமையாதது.
யாவைத் துதி!
சங்கீதங்கள் 146-லிருந்து 150 வரை வாசியுங்கள். இந்தச் சங்கீதங்கள், சங்கீதங்களின் முழு புத்தகத்தின் செய்திப் பொருளை முனைப்பாய்க் கொண்டுவருகின்றன, அதாவது—“ஜனங்களே நீங்கள் யா-வைத் துதியுங்கள் [அல்லேலூயா]!” (NW) இவை ஒவ்வொன்றும் இந்த மகிமையான வார்த்தைகளைக் கொண்டு தொடங்குகிறது. அவற்றைக் கொண்டே முடிக்கிறது. இதெல்லாம் படிப்படியாய் உயர்த்தெழும்பி 150-வது சங்கீதத்தில் உச்சநிலையை அடைகிறது, இந்தச் சங்கீதம் எல்லா சிருஷ்டிப்பையும் “யா-வைத் துதி”க்கும்படி அழைக்கிறது!
◆சங்கீதம் 146:3—மனிதத் தலைவர்களில் ஏன் நம்பிக்கை வைக்கக்கூடாது?
மனிதத் தலைவர்கள் சாகக்கூடியவர்கள். அவர்கள் தங்களையோ தங்களில் நம்பிக்கை வைக்கிறவர்களையோ, காப்பாற்ற முடியாது. இவ்வாறு மனிதத் தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைப்பது மரணம் நேரிடுவதால் அழிக்கப்படுகிறது. “தன் கடவுளாகிய யெகோவாவை நம்பிக் காத்திருக்கிறவன் பாக்கியவான். [மகிழ்ச்சியுள்ளவன், NW].” (சங்கீதம் 146:5, 6) மனிதன் கொடுக்கக்கூடியதற்கு மிக மேற்பட்ட வழிநடத்துதல் தேவைப்படுகிறதென சங்கீதக்காரன் கண்டான்.
◆148:4—‘ஆகாய மண்டலத்தின் [ஆங்கிலத்தில், பரமண்டலத்தின்] மேலுள்ள தண்ணீர்கள்’ யாவை?
பூமிக்குமேல் தண்ணீரைக் கொண்டுசென்று அவ்வப்போது அவற்றை மழையாகப் பெய்யச் செய்து தங்களை வெறுமையாக்கிக் கொள்ளும் மேகங்களைச் சங்கீதக்காரன் குறிப்பதாகத் தெரிகிறது. இந்தத் தண்ணீர் கடைசியில் திரும்பச் சமுத்திரங்களுக்குள் ஓடி விழுகின்றன. இந்தச் சுழல் நிகழ்ச்சி வாழ்க்கைக்கு இன்றியமையாதது, அதன் இருக்கைத்தானேயும் சிருஷ்டிகருக்குத் துதி உண்டாகச் செய்கிறது. பூமிக்கும் மேகங்களுக்கும் இடையிலுள்ள ஆகாய விரிவு பரமண்டலங்களென (ஆங்கிலத்தில்) பேசப்படலாம். சங்கீதக்காரன் மேகங்களை பரமண்டலங்களுக்கு மேலுள்ள தண்ணீர்களெனக் குறிப்பிட்டான்.
சங்கீதங்கள் பின்வரும் இந்தச் சத்தியத்தைத் தானாகவே தெளிவாய்த் தெரியச் செய்கின்றன: உண்மையில் மகிழ்ச்சியுடனிருக்க, யெகோவாவுடன் நமக்கு நல்ல உறவு தேவை. இவ்வாறு, கடவுளுடைய ஜனங்களின் முழு குறிக்கோளையும் நாம் உயிர்வாழும் நோக்கத்தையும் சங்கீதக்காரனின் இந்த முடிவான அமைப்பில் சுருக்கமாய்த் தொகுக்கலாம்: “சுவாசமுள்ள யாவும்—யா-வைத் துதிப்பதாக. ஜனங்களே நீங்கள் யா-வைத் துதியுங்கள்!”—சங்கீதம் 150:6, NW, (w87 3/15)