நட்சத்திரங்கள் உங்களுக்கு என்ன சொல்லக் கூடும்?
தெளிந்த ஓர் இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள் உண்மையிலேயே ஓர் அற்புதக் காட்சி, சாதாரண கண்களுக்கும். வெள்ளி நிலா, மின்னிடும் எண்ணற்ற நட்சத்திரங்கள், ஒளிரும் பால்வீதி மண்டலம்—அத்தனையும் மாசுமறுவற்று, புதிராய்க் காட்சியளிக்கின்றன. இயல்பாகவே, ‘அவை ஏன் அங்கே இருக்கின்றன? அவை நம்மிடம் ஏதாவது சொல்ல முயலுகின்றனவா?’ என்று ஒருவர் யோசிக்கிறார்.
இந்தச் சிக்கலான கேள்விகளுக்கு விடை காண மனிதர் காலாகாலமாக முயன்று வந்திருக்கின்றனர். என்றபோதிலும், அண்மையில்தானே, இந்தச் சடப்பொருள் அகிலாண்டம் ஆராய்ந்தறியப்படாதளவுக்கு எவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது, அத்துடன் இந்தப் பூமியை ஒப்பிட்டால் இது அற்பமான ஒரு புள்ளியே என்பதை விஞ்ஞானிகள் காண ஆரம்பித்திருக்கின்றனர். இலட்சக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள் நம்முடைய வாழ்க்கையையும் விதியையும் குறித்திடுவதற்காக அங்கே இருக்கின்றன என்பதைக் கற்பனைச் செய்வது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது! அவை நமக்குச் சொல்வதற்கு அதிக மேன்மையானவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
தெளிவான ஒரு செய்தி
நாம் பார்த்தபடி சிலர் இந்த நட்சத்திரங்களில் இரகசிய அறிகுறிகளையும் சகுனங்களையும் கணிக்க முற்பட்டாலும், இந்த நட்சத்திர வானங்களின் மகிமை ஆச்சரியமும் பயபக்தியும் இணைந்த அவர்களுடைய ஆழ்ந்த உணர்ச்சிகளைத் தூண்டிடும் ஓர் உயர்ந்த மேன்மையான செய்தியைத் தெரிவிக்கிறது. “இந்த அகிலாண்டத்தின் இயற்கைச் சட்டங்கள் அந்தளவுக்கு நுட்பமாய்ச் சரியாக இருப்பதால், . . . இந்தச் சட்டங்கள் யாரோ ஒருவரால் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்,” என்கிறார் விண்வெளி விஞ்ஞானி வெர்னர் வான் பிரான். அதுபோல, “நம்மைச் சூழ இருக்கும் இந்த அகிலாண்டம் முழுவதன் ஒழுங்கு” குறித்து முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிளென் குறிப்பிட்டதாவது, ஒரே நியாயமான முடிவு என்னவெனில், “ஏதோ ஒரு சக்தி இந்த அனைத்துக் காரியங்களையும் அவற்றின் பாதையில் அமைத்து அவற்றை அதிலிருக்கும்படி செய்திருக்க வேண்டும்.”
என்றபோதிலும், இதைப் புரிந்துகொள்ள ஒருவர் மிக அதிகமாக பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நிபுணராகவோ, அல்லது ஒரு பெரிய விஞ்ஞானியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, பூர்வீக எபிரெய அரசன் ஒருவன், அப்படிப்பட்ட ஒரு காட்சியால் கவர்ந்திழுக்கப்பட்டவனாய், சுருக்கமாய்ச் சொல்லப்போனால், நம்மில் பலருடைய இயல்பான பிரதிபலிப்புகளை கவிதையாகப் புனைந்தான். அவன் எழுதியதாவது:
“வானங்கள் கடவுளின் மகிமையைப் பிரஸ்தாபிக்கின்றன;
ஆகாயமண்டலம் அவர் கரங்களின் கிரியையைக் காட்டுகிறது.
பகலுக்குப் பகல் வார்த்தைகளை உரைக்கிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
அவைகளுக்குச் சத்தமில்லை, பாஷையுமில்லை;
அவற்றின் தொனி கேட்கப்படுவதுமில்லை.
ஆயினும், அவைகளின் அளவு நூல் உலகமெங்கும்,
அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன.”—சங்கீதம் 19:1–4, தி.மொ.
தலைசிறந்த ஓவியம் அதை வரைந்த ஓவியரின் கைவண்ணத்தையும் திறமையையும்குறித்து தெரிவிப்பதுபோல், நட்சத்திரங்கள் பேச்சின்றி, வார்த்தைகளின்றி, சப்தமின்றி நமக்கு ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. இல்லை, அவை மந்திரத் திறம் கொண்டிருப்பதாகவோ, அல்லது நம்முடைய ஆள்தன்மையை அல்லது விதியைத் தீர்மானிக்கும் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றவையாகவோ இல்லை. மாறாக, விண்மீன்கள் கொண்ட வானங்களில் அவை வெளிப்படுத்தும் ஒழுங்கும் வடிவமைப்பும் தெரிவிக்கும் தெளிவான செய்தி என்னவென்றால், அவை புத்திக்கூர்மையுள்ள வல்லமைவாய்ந்த வடிவமைப்பாளரும் சிருஷ்டிகருமாயிருக்கும் ஒருவரின் கைவேலை என்பதே. அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாகச் சொன்னான்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:20.
எல்லாவற்றையும் ஆதிக்கம்செய்யும் சக்தி
இந்தச் சடப்பொருள் அகிலாண்டத்தை ஆராய்ந்துபார்ப்பதன்மூலம், பிரமாண்டமான நட்சத்திரக் கூட்டங்கள் முதல் மிகச் சிறிய அணு வரையாக எல்லாப் பொருட்களுமே குறிப்பிட்ட சில இயற்பியல் சட்டங்களால் ஆளப்பட்டு வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் கற்றறிகின்றனர். நாம் அந்த அகிலாண்டத்தின் பாகமாக மிகத் தெளிவாக்கப்பட்ட சட்டங்களாலும் நியமங்களாலும் ஆளப்பட்டுவருகிறோம். இவற்றில் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட சட்டங்களும் நியமங்களும் உட்படுகின்றன.
நியாய விவாதத்துக்கும் காரண காரியத்துக்கும் நன்கு மதிக்கப்பட்ட 18-வது நூற்றாண்டு ஜெர்மன் தத்துவஞானியும் கல்விமானுமாகிய இம்மானுவேல் கேன்ட் இப்படியாக எழுதினார்: “இரண்டு காரியங்கள் நம்முடைய மனதை என்றும் புதிதான, விருத்தியடைந்துகொண்டிருக்கும் ஆச்சரியத்தாலும் பயபக்தியாலும் நிரப்புகின்றன, அவற்றை நாம் அடிக்கடி, தொடர்ந்து சிந்தித்துப் பார்க்கிறோம்: நமக்கு மேலே இருக்கும் நட்சத்திர வானங்களும் நமக்குள்ளிருக்கும் ஒழுக்க நெறி சார்ந்த சட்டமும்.” ஆம், சடப்பொருளாயிருக்கும் “நட்சத்திர வானங்களை” ஆளும் சட்டங்களைப் படைத்தவர்தாமே “நமக்குள்ளிருக்கும் ஒழுக்க நெறி சார்ந்த சட்டத்தையும்” இயற்றினார். (ரோமர் 2:14, 15) கடவுளுடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு விருத்திசெய்யப்படும் “நமக்குள்ளிருக்கும் சட்டம்” மகிழ்ச்சியையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் நாடித்தேடும் நம் முயற்சியில் நம்மை வழிநடத்திடக்கூடும். இந்தக் காரணத்தினிமித்தமே, சங்கீதக்காரன் நட்சத்திர வானங்களின் மூலம் கடவுளுடைய மகிமையை ஒப்புக்கொள்ள உந்துவிக்கப்பட்ட பின்பு, இப்படியாகத் தொடர்ந்து சொன்னான்:
“யெகோவாவின் பிரமாணம் குறைவற்றது, அது ஜீவனைப் புதுப்பிக்கிறது;
யெகோவாவின் சாட்சியம் நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது.
யெகோவாவின் கட்டளைகள் நேர்மையானவை, அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும்.
யெகோவாவின் கற்பனைத் தூயது, அது கண்களைத் தெளிவிக்கிறது.
யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமானது, அது என்றைக்கும் நிலைத்திருக்கும்.
யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியுள்ளவை.”—சங்கீதம் 19:7–9, தி.மொ.
ஆக, நட்சத்திரங்கள் நமக்குச் சொல்வது என்ன? சிருஷ்டிகர் தம்முடைய ஞானத்திலும் அன்பிலும் நம்மைச் சூழ இருக்கும் இந்த அகிலாண்டத்தின் சிக்கலான இயக்கத்தை ஆளுவதற்காக மட்டும் சட்டங்களைக் கொடுக்கவில்லை, ஆனால் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நம்முடைய சமுதாயத்தில் நம்மை வழிநடத்துவதற்காக ஒழுக்க நெறி சார்ந்த சட்டங்களையும் கொடுத்திருக்கிறார். இல்லை, கடவுள் சதுரங்க ஆட்டத்திலிருக்கும் ஆட்டக்காய்களைப் போல நம்மைப் படைக்கவில்லை. அவைகளின் “தன்மை” ஏற்கெனவே குறிக்கப்பட்டதாகவும், அவற்றின் “அசைவுகள்” ஆட்டக்காரரால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கின்றன. மாறாக, நாம் ஞானமாகச் செயல்படுவதற்கென்று அவர் நமக்கு ஒழுக்க நெறி சார்ந்த சட்டங்களைத் தந்திருக்கிறார், ஆனால் சுயாதீன மனிதர்களாக, கடவுள் கொடுத்திருக்கும் ஒழுக்கச் சட்டங்களை ஏற்பதும் அவற்றைப் பொருத்துவதும் நம்மைச் சார்ந்தது.
இந்தச் சட்டங்கள் எங்கே காணப்படுகின்றன? பவுல் அப்போஸ்தலன் நமக்குச் சொல்லுகிறான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) ஆம், ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகிய பைபிள் மனிதருடைய எல்லாச் செயல்களுக்கும் பிரயோஜனமான வழிகாட்டும் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் காரணத்தினிமித்தமே, பைபிள் நம்மைப் பின்வருமாறு துரிதப்படுத்துகிறது: “உன் சொந்த உணர்வில் சாயாதே. உன் முழு நெஞ்சோடும் யெகோவாவை நம்பு. உன் எல்லா வழியிலும் அவரை நினை. அப்போது அவர் உன் பாதையை நேராக்குவார். உன்னையே புத்திமானென்று எண்ணாதே, யெகோவாவுக்குப் பயந்து தீமைக்கு விலகு.”—நீதிமொழிகள் 3:5–7, தி.மொ. (g89 11/22)