பாடம் 41
செக்ஸ்—பைபிள் சொல்வது என்ன?
செக்ஸ் பற்றிப் பேசவே நிறைய பேர் கூச்சப்படுவார்கள். ஆனால், பைபிள் அதைப் பற்றி வெளிப்படையாகவும் கண்ணியமாகவும் பேசுகிறது. பைபிள் சொல்லும் விஷயங்கள் நமக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கின்றன. ஏனென்றால், நம்மைப் படைத்த யெகோவாதான் அதையெல்லாம் சொல்லியிருக்கிறார். நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால், நமக்குப் பிரயோஜனமான சட்டதிட்டங்களைக் கொடுத்திருக்கிறார். அவற்றின்படி நடந்தால் அவருடைய மனதை சந்தோஷப்படுத்த முடியும். அதோடு, இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ முடியும்.
1. செக்ஸ் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
தம்பதியாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் யெகோவா தந்திருக்கும் பரிசுதான் செக்ஸ். இது பிள்ளைகளைப் பெற்றெடுக்க உதவுகிறது. அதுமட்டுமல்ல, ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் இயல்பான முறையில்... இன்பம்தரும் விதத்தில்... வெளிக்காட்டவும் உதவுகிறது. அதனால்தான், “இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19) கல்யாணமானவர்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யாமல் உண்மையாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—எபிரெயர் 13:4-ஐ வாசியுங்கள்.
2. பாலியல் முறைகேடு என்றால் என்ன?
“பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்கள் . . . கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) பைபிளின் கிரேக்க வேதாகமப் பகுதியை எழுதியவர்கள் பாலியல் முறைகேட்டுக்கு போர்னியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். அந்த வார்த்தை இதையெல்லாம் குறிக்கிறது: (1) கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் உடலுறவு வைத்துக்கொள்வது,a (2) ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் உடலுறவு வைத்துக்கொள்வது, (3) மிருகங்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது. இப்படிப்பட்ட எல்லா விதமான ‘பாலியல் முறைகேட்டுக்கும் விலகியிருக்கும்போது’ நாம் சந்தோஷமாக வாழ முடியும், யெகோவாவின் மனதையும் சந்தோஷப்படுத்த முடியும்.—1 தெசலோனிக்கேயர் 4:3.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நீங்கள் எப்படிப் பாலியல் முறைகேட்டில் சிக்காமல் இருக்கலாம் என்றும், அதனால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
3. பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்
யோசேப்பு எப்படி ஒழுக்கங்கெட்ட ஆசைகளுக்கு இடம்கொடுக்காமல் இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. ஆதியாகமம் 39:1-12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஓடிப்போவதற்கு யோசேப்பை எது தூண்டியது? —வசனம் 9-ஐப் பாருங்கள்.
யோசேப்பு சரியான முடிவெடுத்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன்?
இன்று இளைஞர்கள் எப்படி யோசேப்பைப் போலவே பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடலாம்? வீடியோவைப் பாருங்கள்.
நாம் எல்லாருமே ஒழுக்கங்கெட்ட விஷயங்களை வெறுத்து ஒதுக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். 1 கொரிந்தியர் 6:18-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
என்ன மாதிரியான சூழ்நிலைகள் ஒருவரைப் பாலியல் முறைகேட்டில் விழ வைக்கலாம்?
நீங்கள் எப்படிப் பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடலாம்?
4. கெட்ட ஆசையை உங்களால் அடக்க முடியும்
பாலியல் முறைகேட்டில் ஈடுபடும் ஆசையை அடக்குவது ஏன் சிலசமயம் கஷ்டமாக இருக்கலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் வந்த சகோதரர், தன்னுடைய யோசனைகளும் நடத்தையும் தன் மனைவிக்குத் துரோகம் செய்ய வைத்துவிடலாம் என்று உணர்ந்தவுடன் என்ன செய்தார்?
கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள்கூட கெட்ட யோசனைகளைத் தவிர்க்க சிலசமயம் போராட வேண்டியிருக்கிறது. ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றியே யோசிப்பதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பிலிப்பியர் 4:8-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
என்ன விஷயங்களை நாம் யோசிக்க வேண்டும்?
பைபிளை வாசிப்பதும் யெகோவாவுக்கு மும்முரமாக சேவை செய்வதும், பாவம் செய்யத் தூண்டும் ஆசையை அடக்க எப்படி உதவும்?
5. யெகோவாவின் அறிவுரைகள் நமக்கு நன்மை தரும்
நமக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத்தான் நன்றாகத் தெரியும். நாம் எப்படி ஒழுக்கமாக இருக்கலாம் என்றும், அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். நீதிமொழிகள் 7:7-27-ஐப் படியுங்கள் அல்லது வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
அந்த வாலிபன் எப்படி ஆபத்தைத் தேடிப்போனான்?—நீதிமொழிகள் 7:8, 9-ஐப் பாருங்கள்.
நீதிமொழிகள் 7:23, 26 சொல்கிறபடி, பாலியல் முறைகேட்டினால் விபரீதமான விளைவுகள்தான் ஏற்படும். நாம் ஒழுக்கமாக நடந்துகொண்டால் என்ன பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்?
ஒழுக்கமாக வாழ்வதால் நாம் எப்படி இன்றும் என்றும் சந்தோஷமாக இருக்க முடியும்?
ஓரினச்சேர்க்கை தவறு என்று பைபிள் சொல்வது நியாயம் கிடையாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால், யெகோவா அன்பான கடவுள். இன்றும் என்றும் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் சொல்கிறபடி நாம் நடந்தால் அப்படி சந்தோஷமாக வாழ முடியும். 1 கொரிந்தியர் 6:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மற்ற கெட்ட காரியங்களைப் போலத்தான் ஓரினச்சேர்க்கையையும் கடவுள் வெறுக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
கடவுளைப் பிரியப்படுத்த நாம் எல்லாருமே மாற்றங்கள் செய்ய வேண்டும். நம் முயற்சிகள் ஒருநாளும் வீண்போகாது. சங்கீதம் 19:8, 11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒழுக்க விஷயத்தில் யெகோவா தரும் அறிவுரைகள் உங்களுக்கு நியாயமாகத் தெரிகிறதா? ஏன்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ஒருத்தர் யார்கூட செக்ஸ் வெச்சுக்கிட்டா என்ன, மனசு ஒத்துப்போனா போதும்.”
நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
சுருக்கம்
கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருப்பதற்கு யெகோவா தந்திருக்கும் பரிசுதான் செக்ஸ்.
ஞாபகம் வருகிறதா?
பாலியல் முறைகேட்டில் எதுவெல்லாம் அடங்கியிருக்கிறது?
பாலியல் முறைகேட்டைத் தவிர்க்க எது நமக்கு உதவி செய்யும்?
ஒழுக்க விஷயத்தில் யெகோவா தந்திருக்கும் அறிவுரைகளின்படி நடப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
அலசிப் பாருங்கள்
சேர்ந்து வாழ ஆசைப்படும் ஓர் ஆணும் பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று கடவுள் ஏன் சொல்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” (ஆன்லைன் கட்டுரை)
ஓரினச்சேர்க்கை தவறு என்று பைபிள் சொல்கிறது. ஆனால், அதில் ஈடுபடுகிறவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று அது சொல்வதில்லை. விவரங்களைப் படித்துப் பாருங்கள்.
செக்ஸ் சம்பந்தமாகக் கடவுள் தந்திருக்கும் சட்டங்கள் நம்மை எப்படிப் பாதுகாக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஒருவர் கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ எப்படித் தன்னை மாற்றிக்கொண்டார் என்று “என்னை மரியாதையாக நடத்தினார்கள்” என்ற கட்டுரையில் படித்துப் பாருங்கள்.
a சாதாரண உடலுறவு மட்டுமல்லாமல், வாய் வழியாக அல்லது ஆசனவாய் வழியாக செக்ஸ் வைத்துக்கொள்வது, பாலியல் இன்பத்துக்காக இன்னொருவரின் பிறப்புறுப்பைக் கிளர்ச்சியடையச் செய்வது போன்ற பல விஷயங்கள் இதில் அடங்கும்.