பாடம் 10
கூட்டங்கள் தரும் நன்மைகள்
முதல் தடவையாக எங்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்றால் உங்களுக்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கலாம். ‘கூட்டத்துல என்ன நடக்கும்? அது ஏன் முக்கியம்? நான் எதுக்காக அதுல கலந்துக்கணும்?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். கூட்டங்களுக்கு வந்தால் நீங்கள் கடவுளிடம் நெருங்கிப்போவீர்கள். உங்களுக்கு இன்னும் பல நன்மைகளும் கிடைக்கும். எப்படி என்று பார்க்கலாம்.
1. நாங்கள் ஒன்றுகூடி வருவதற்கு முக்கியமான காரணம் என்ன?
அதைப் பற்றி பைபிள் எழுத்தாளர் ஒருவர் இப்படிச் சொன்னார்: “மாபெரும் சபையில் நான் யெகோவாவைப் புகழ்வேன்.” (சங்கீதம் 26:12) இன்றும், உலகம் முழுவதும் நாங்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் சபைகளில் சந்தோஷமாகக் கூடிவருகிறோம். அங்கே யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்கிறோம், அவரைப் புகழ்ந்து பாடுகிறோம், ஜெபம் செய்கிறோம். வருஷா வருஷம் பெரிய மாநாடுகளிலும் கலந்துகொள்கிறோம்.
2. கூட்டங்களில் நீங்கள் என்னென்ன கற்றுக்கொள்வீர்கள்?
கூட்டங்களில் நாங்கள் பைபிளை ‘தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைக்கிறோம்.’ (நெகேமியா 8:8-ஐ வாசியுங்கள்.) அங்கே யெகோவாவைப் பற்றியும் அவருடைய அருமையான குணங்களைப் பற்றியும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். அவர் உங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரிடம் நெருங்கிப்போவீர்கள். சந்தோஷமாக வாழ அவர் எப்படி உங்களுக்கு உதவி செய்வார் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.—ஏசாயா 48:17, 18.
3. கூட்டங்களுக்கு வருகிறவர்களோடு பழகுவதால் உங்களுக்கு என்ன நன்மை?
நாம் “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; . . . சபைக் கூட்டங்களுக்கு வராமல் . . . இருந்துவிடக் கூடாது” என்று யெகோவா சொல்கிறார். (எபிரெயர் 10:24, 25) உண்மையான அன்பும் அக்கறையும் காட்டுகிறவர்களை நீங்கள் கூட்டங்களில் சந்திப்பீர்கள். உங்களைப் போலவே அவர்களும் கடவுளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். பைபிளிலிருந்து நல்ல நல்ல விஷயங்களை அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். (ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.) அதோடு, பிரச்சினைகள் இருந்தாலும் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அவர்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதுபோல் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதால்தான் தவறாமல் கூடிவரும்படி யெகோவா சொல்கிறார்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கூட்டங்களில் என்ன நடக்கும்? அதில் கலந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சி வீண்போகாது என்று ஏன் சொல்லலாம்? இப்போது பார்க்கலாம்.
4. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள்
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தவறாமல் ஒன்றுகூடிவந்து யெகோவாவை வணங்கினார்கள். (ரோமர் 16:3-5) கொலோசெயர் 3:16-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யெகோவாவை எப்படி வணங்கினார்கள்?
இன்றும் யெகோவாவின் சாட்சிகள் தவறாமல் கூடிவந்து யெகோவாவை வணங்குகிறார்கள். அவர்களுடைய கூட்டங்கள் எப்படி நடக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு வீடியோவைப் பாருங்கள். பிறகு, சபைக் கூட்டம் பற்றிய படத்தைப் பார்த்து, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கொலோசெயர் 3:16-ல் படித்த விஷயத்துக்கும் வீடியோவில் பார்த்த விஷயத்துக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
வீடியோவில் அல்லது படத்தில், கூட்டங்களைப் பற்றி வேறு ஏதாவது நல்ல விஷயத்தைக் கவனித்தீர்களா?
2 கொரிந்தியர் 9:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஏன் பணம் வசூலிக்கப்படுவது இல்லை?
உங்களுக்கு பைபிளைச் சொல்லித்தருபவரோடு சேர்ந்து, இந்த வார கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பாருங்கள்.
அதில் எதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறது? அல்லது, உங்களுக்கு எது ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
உங்களுக்குத் தெரியுமா?
உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் நேரங்களையும் jw.org வெப்சைட்டில் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
கூட்டங்களில் பேச்சுகள் இருக்கும், ஊழியம் செய்வதற்குப் பயிற்சிகள் கொடுக்கப்படும், வீடியோக்கள் காட்டப்படும். கூட்டத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாட்டும் ஜெபமும் இருக்கும்
கூட்டத்தின் சில பகுதிகளில் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்
ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், பிள்ளைகள் என்று யார் வேண்டுமானாலும் கூட்டத்துக்கு வரலாம்
எங்களுடைய கூட்டங்கள் எல்லாமே இலவசம்தான். யெகோவாவின் சாட்சிகள் பணம் வசூலிப்பது இல்லை
5. கூட்டங்களுக்கு வர முயற்சி தேவை
இயேசுவின் குடும்பம் இதற்கு ஒரு நல்ல உதாரணம். வருஷா வருஷம் பண்டிகையில் கலந்துகொள்வதற்காக அவர்கள் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் நடந்தே போனார்கள். அதுவும், நாசரேத்திலிருந்து எருசலேமுக்கு மலைப்பகுதி வழியாக நடந்து போனார்கள். லூக்கா 2:39-42-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
அவர்கள் எருசலேமுக்குப் போக முயற்சி தேவைப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நீங்கள் ஏன் முயற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
அப்படி முயற்சி எடுப்பது வீண்போகாது என்று நினைக்கிறீர்களா? ஏன்?
கடவுளை வணங்குவதற்காக ஒன்றுகூடி வருவது ரொம்ப முக்கியம் என்று பைபிள் சொல்கிறது. எபிரெயர் 10:24, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நாம் ஏன் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “கூட்டத்துக்கெல்லாம் போக வேண்டியதில்ல, வீட்டுலயே பைபிள படிச்சா போதும்.”
யெகோவா என்ன எதிர்பார்க்கிறார் என்பதை பைபிளில் இருக்கும் எந்த வசனம் அல்லது யாருடைய உதாரணம் காட்டுகிறது?
சுருக்கம்
கூட்டங்களில் நீங்கள் கலந்துகொண்டால், யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும், அவரோடு உங்களுக்கு இருக்கிற நட்பு இன்னும் பலமாகும், மற்றவர்களோடு சேர்ந்து நீங்கள் யெகோவாவை வணங்க முடியும்.
ஞாபகம் வருகிறதா?
நாம் ஒன்றுகூடி வர வேண்டும் என்று யெகோவா ஏன் சொல்கிறார்?
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?
கூட்டங்களில் கலந்துகொள்வதால் உங்களுக்கு வேறு என்ன நன்மை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அலசிப் பாருங்கள்
கூட்டத்தில் கலந்துகொள்ள உங்களுக்குத் தயக்கமா? அப்படித் தயங்கிய ஒருவர் இப்போது ஆசை ஆசையாகக் அதில் கலந்துகொள்கிறார். எப்படி என்று பாருங்கள்.
ஒரு வாலிபருக்கு ஏன் கூட்டங்கள் ரொம்பப் பிடித்திருந்தது, எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்ள என்ன செய்தார் என்றெல்லாம் பாருங்கள்.
கூட்டங்களில் கலந்துகொள்வதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.
“ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்களுக்கு ஏன் போக வேண்டும்?” (ஆன்லைன் கட்டுரை)
ரவுடி கும்பலில் இருந்த ஒருவர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் அவருடைய வாழ்க்கையே எப்படி மாறியது என்று பாருங்கள்.
“நான் துப்பாக்கி இல்லாம எங்கேயுமே போனதில்லை” (காவற்கோபுரம், அக்டோபர் 1, 2014)