“யாருக்கு அஞ்சுவேன்?”
“எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.”—சங். 27:3, பொது மொழிபெயர்ப்பு.
பின்வரும் வசனங்களிலுள்ள என்ன குறிப்பு தைரியத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு உதவும்:
1. என்ன கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள 27-ஆம் சங்கீதம் உதவுகிறது?
உலக நிலைமைகள் நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருகிறது. ஆனாலும், நாம் ஏன் ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபடுகிறோம்? இன்று பொருளாதாரப் பிரச்சினைகளில் பலர் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனாலும், நாம் ஏன் நம் நேரத்தையும் சக்தியையும் ஊழியத்தில் சந்தோஷமாய்ச் செலவிடுகிறோம்? எதிர்காலத்தை நினைத்து மற்றவர்கள் இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறார்கள். ஆனாலும், நாம் ஏன் எப்போதும் தைரியமாய் இருக்கிறோம்? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது ராஜா பாடிய 27-ஆம் சங்கீதம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது.
2. ஒருவர் அஞ்சி நடுங்கும்போது அவருக்கு என்ன நேரிடும், ஆனால் நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
2 பின்வரும் வார்த்தைகளுடன் 27-ஆம் சங்கீதத்தை தாவீது ஆரம்பிக்கிறார்: ‘யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?’ (சங். 27:1) ஒருவர் அஞ்சி நடுங்கும்போது அவருடைய பலமெல்லாம் குன்றி அவரால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும். ஆனால், யெகோவாமீது நம்பிக்கை வைக்கும் ஒருவர் தைரியமாய் இருப்பார், எதற்கும் அஞ்சி நடுங்க மாட்டார். (1 பே. 3:14) யெகோவாவை நமது அடைக்கலமாக ஆக்கிக்கொண்டால், ‘விக்கினமின்றி [அதாவது, தீங்கின்றி] வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்போம்.’ (நீதி. 1:33; 3:25) ஏன் அப்படிச் சொல்கிறோம்?
‘யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்’
3. யெகோவா நம் வெளிச்சமாக இருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம், நாம் என்ன செய்ய வேண்டும்?
3 ‘யெகோவா என் வெளிச்சம்’ என்று பைபிள் சொல்லும்போது, அறியாமையிலிருந்தும் ஆன்மீக இருளிலிருந்தும் அவர் நம்மை விடுவிப்பதை அது குறிக்கிறது. (சங். 27:1) சாதாரணமாக, நாம் செல்லும் பாதையில் ஏதாவது ஆபத்து அல்லது குண்டுகுழி இருந்தால் வெளிச்சம் அதை நமக்குக் காட்டிக்கொடுக்கும்; ஆனால், அதை அகற்றிவிடாது. நாம்தான் பார்த்து கவனமாக நடக்க வேண்டும். அதேபோல், உலக சம்பவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதை யெகோவா நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். இந்த உலகத்தில் உள்ள ஆபத்துகளைக் குறித்து அவர் நம்மை எச்சரிக்கிறார். பைபிளிலிருந்து நமக்குப் பயனுள்ள அறிவுரைகளை அளிக்கிறார். ஆனால், நாம்தான் அவற்றை அறிந்துகொண்டு, கவனமாகப் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்யும்போது, நம் பகைவர்களைவிட... நம் போதகர்களைவிட... அதிக ஞானமுள்ளவர்களாய் இருப்போம்.—சங். 119:98, 99, 130.
4. (அ) ‘யெகோவா . . . என் இரட்சகர்’ என்று தாவீது ஏன் நம்பிக்கையுடன் சொன்னார்? (ஆ) முக்கியமாக எந்தச் சமயத்தில் யெகோவா நமக்கு மீட்பராக இருப்பார்?
4 சங்கீதம் 27:1-லுள்ள வார்த்தைகளை வாசிக்கும்போது, தன்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் யெகோவா காப்பாற்றியிருந்ததை தாவீது எண்ணிப் பார்த்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. உதாரணத்திற்கு, யெகோவா அவரை ‘சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்திருந்தார்.’ மாம்ச மலைபோலிருந்த கோலியாத்தை வெட்டி வீழ்த்தவும் அவருக்கு உதவியிருந்தார். பின்னர், சவுல் ராஜா அவரை இருமுறை ஈட்டியால் குத்திக் கொலைசெய்ய முயற்சி செய்தபோதும் யெகோவா அவரைக் காப்பாற்றியிருந்தார். (1 சா. 17:37, 49, 50; 18:11, 12; 19:10) இப்படியிருக்க, ‘யெகோவா . . . என் இரட்சகர்,’ அதாவது மீட்பர், என்று தாவீது நம்பிக்கையுடன் சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை. தாவீதுக்கு மீட்பராக இருந்ததைப் போலவே யெகோவா நமக்கும் மீட்பராக இருப்பார். எப்படி? வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ நம்மைக் காப்பாற்றுவதன் மூலம் மீட்பராக இருப்பார்.—வெளி. 7:14; 2 பே. 2:9.
யெகோவா உங்களுக்கு உதவிய சந்தர்ப்பங்களை நினைத்துப் பாருங்கள்
5, 6. (அ) தைரியத்தை வளர்த்துக்கொள்வதற்குக் கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது நமக்கு எப்படி உதவும்? (ஆ) கடந்த காலத்தில் யெகோவா தமது மக்களுக்கு உதவியதை நினைத்துப் பார்ப்பது நமக்கு எப்படித் தைரியத்தைத் தருகிறது?
5 தைரியத்தை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு வழியைப் பற்றி சங்கீதம் 27:2, 3 குறிப்பிடுகிறது. (வாசியுங்கள்.) யெகோவா தன்னைக் காப்பாற்றிய சந்தர்ப்பங்களை தாவீது நினைத்துப் பார்த்தார். (1 சா. 17:34-37) அப்படி நினைத்துப் பார்த்தது அதைவிடவும் மோசமான சூழ்நிலைகளைச் சந்திக்க அவருக்குத் தைரியத்தைத் தந்தது. தாவீதைப் போல நீங்களும் யெகோவா உங்களுக்கு உதவிய சந்தர்ப்பங்களை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, உங்கள் மனதை வாட்டிய ஏதேனும் ஒரு பிரச்சினையைக் குறித்து நீங்கள் ஊக்கமாய் ஜெபம் செய்தபோது அதைச் சமாளிப்பதற்கு யெகோவா உங்களுக்கு ஞானத்தை அல்லது பலத்தைத் தந்து உதவியதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சந்தோஷமாய் அவருக்குச் சேவை செய்ய உங்களுக்குத் தடையாய் இருந்தவற்றை யெகோவா எப்படி நீக்கினார் என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா, அல்லது வெவ்வேறு விதமான சேவையில் ஈடுபட அவர் உங்களுக்கு வாய்ப்பளித்திருப்பதை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? (1 கொ. 16:9) இப்போது இதையெல்லாம் நினைத்துப் பார்ப்பது எந்த விதத்தில் உங்களுக்கு உதவும்? எதிர்காலத்தில் படுபயங்கரமான சோதனைகள் அல்லது கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைச் சமாளிக்க அல்லது சகிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார் என்ற உறுதியை அளிக்கும்.—ரோ. 5:3-5.
6 யெகோவாவின் சாட்சிகளை அடியோடு அகற்றுவதற்குப் பலம்படைத்த ஓர் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டுகிறதென்றால்? அவர்களை அப்படி முற்றிலும் அழித்துப்போட நவீன நாட்களில் பலர் முயற்சி செய்து, தோல்வி கண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் யெகோவா தமது மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்பதை நினைத்துப் பார்ப்பது எதிர்காலத்தைத் தைரியமாய் எதிர்கொள்ள நமக்கு உதவும்.—தானி. 3:28.
உண்மை வழிபாட்டை நேசியுங்கள்
7, 8. (அ) சங்கீதம் 27:4-ன்படி யெகோவாவிடம் தாவீது என்ன வேண்டினார்? (ஆ) யெகோவாவின் பெரிய ஆன்மீக ஆலயம் எதைக் குறிக்கிறது, அந்த ஆலயத்தில் அவரை நாம் எப்படி வழிபடுகிறோம்?
7 தைரியத்தை வளர்த்துக்கொள்வதற்கான மற்றொரு வழி உண்மை வழிபாட்டை நேசிப்பதாகும். (சங்கீதம் 27:4-ஐ வாசியுங்கள்.) தாவீதின் நாட்களில் ஆசரிப்புக்கூடாரம்தான் ‘யெகோவாவுடைய ஆலயமாக’ இருந்தது. தன் மகன் சாலொமோன் யெகோவாவுக்குப் பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டுவதற்கு தாவீதே சர்வ ஏற்பாடுகளையும் செய்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யெகோவாவை வழிபடுவதற்கு ஓர் ஆலயத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லாத ஒரு காலம் வருமென்று இயேசு தெரிவித்தார். (யோவா. 4:21-23) கி.பி. 29-ல் இயேசு ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சித்தத்தைச் செய்ய தம்மையே அர்ப்பணித்தபோது பெரிய ஆன்மீக ஆலயம் செயல்பட ஆரம்பித்ததாக எபிரெயர் 8 முதல் 10 வரையான அதிகாரங்களில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபி. 10:10) இந்தப் பெரிய ஆன்மீக ஆலயம் என்பது, இயேசுவின் மீட்புவிலையில் விசுவாசம் வைப்பதன் மூலம் மக்கள் தம்மை அணுகுவதற்கு யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைக் குறிக்கிறது. இந்தப் பெரிய ஆன்மீக ஆலயத்தில் அவரை நாம் எப்படி வழிபடுகிறோம்? “உண்மை இருதயத்தோடும் விசுவாசத்தோடும்” அவரிடம் ஜெபம் செய்தவன் மூலம்... நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் தைரியமாய் அறிவிப்பதன் மூலம்... குடும்ப வழிபாட்டிலும் சரி சபைக் கூட்டங்களிலும் சரி, ஒன்றாகக் கூடிவரும்போது சக வணக்கத்தாரிடம் அக்கறை காண்பித்து, அவர்களைத் தூண்டியெழுப்பி, ஊக்கப்படுத்துவதன் மூலம்... வழிபடுகிறோம். (எபி. 10:22-25) உண்மை வழிபாட்டுக்கான ஏற்பாட்டை நாம் நேசித்தால் சமாளிப்பதற்குக் கடினமான இந்தக் கடைசி நாட்களில் உறுதியாய் இருப்போம்.
8 உலகெங்கும் உள்ள யெகோவாவின் உண்மை வணக்கத்தார் ஊழியத்தில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள், நற்செய்தியை அறிவிப்போர் அதிகம் தேவைப்படும் இடங்களுக்குக் குடிமாறிச் செல்கிறார்கள். சங்கீதக்காரனைப் போலவே அவர்களும் ஒரேவொரு காரியத்தையே யெகோவாவிடம் வேண்டுகிறார்கள் என்பதை அவர்களுடைய செயல்கள் காட்டுகின்றன. ஆம், அவர்கள் யெகோவாவின் மகிமையைப் பார்க்கவும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவருக்குப் பரிசுத்த சேவை செய்யவும் விரும்புகிறார்கள்.—சங்கீதம் 27:6-ஐ வாசியுங்கள்.
கடவுள் உதவுவாரென நம்பிக்கையாய் இருங்கள்
9, 10. சங்கீதம் 27:10 நமக்கு என்ன நம்பிக்கை அளிக்கிறது?
9 ‘என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்’ என்று தாவீது சொன்னார். யெகோவா தனக்கு உதவுவார் என்பதில் அவர் எந்தளவு நம்பிக்கையாய் இருந்தார் என்பதை அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன. (சங். 27:10) உண்மையில், 1 சாமுவேல் 22-ஆம் அதிகாரத்தின்படி தாவீதை அவருடைய பெற்றோர் கைவிடவில்லை. என்றாலும், இன்று அநேகர் தங்களுடைய குடும்பத்தாரால் கைவிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களில் அநேகர் கிறிஸ்தவச் சபையின் ஆதரவையும் அரவணைப்பையும் பெற்றிருக்கிறார்கள்.
10 மற்றவர்கள் கைவிட்டாலும் தமது ஊழியர்களுக்கு உதவ யெகோவா தயாராய் இருக்கிறார். அப்படியிருக்க... வேறு விதமான பிரச்சினை வரும்போது அவர்களைப் பாதுகாக்காமல் விட்டுவிடுவாரா? உதாரணத்திற்கு, குடும்பத்தைப் பராமரிப்பதைக் குறித்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்தில்... யெகோவா நமக்குக் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டுமல்லவா? (எபி. 13:5, 6) தம்முடைய உண்மை ஊழியர்கள் ஒவ்வொருவருடைய சூழ்நிலையையும் தேவைகளையும் அவர் அத்துப்படி அறிந்திருக்கிறார்.
11. யெகோவாமீது நாம் நம்பிக்கை வைத்திருப்பதைப் பார்த்து மக்கள் என்ன சொல்கிறார்கள்? உதாரணம் கொடுங்கள்.
11 லைபீரியாவில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து வந்த விக்டோரியா என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள். இவர் கல்யாணம் செய்யாமலேயே ஒருவருடன் குடும்பம் நடத்தி மூன்று குழந்தைகளைப் பெற்றிருந்தார். ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு இவர் முன்னேற்றம் செய்தபோது அந்த ஆள் இவரை அம்போவென விட்டுவிட்டுச் சென்றான். வீடுவாசல் இல்லாமல், வேலைவெட்டியில்லாமல் இருந்தபோதிலும், விக்டோரியா தொடர்ந்து சத்தியத்தில் முன்னேற்றம் செய்தார், ஞானஸ்நானமும் பெற்றார். ஒருநாள் இவரது 13 வயது மகளுக்கு ஒரு பர்ஸ் கிடைத்தது. அதில் எக்கச்சக்கமான பணம் இருந்தது. அதில் எவ்வளவு இருக்கிறதென எண்ணிப் பார்த்தால் எங்கே வைத்துக்கொள்ள ஆசை வந்துவிடுமோ என்ற பயத்தில் தாயும் மகளும் அதை எண்ணியே பார்க்கவில்லை. அந்த பர்ஸுக்குச் சொந்தக்காரரான ராணுவ வீரரிடம் அதைக் கொடுக்க உடனே கிளம்பினார்கள். ‘எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளைப் போல நேர்மையாக இருந்தால் இந்த உலகத்தில் எவ்வளவு சந்தோஷமும் சமாதானமும் இருக்கும்’ என்று அவர் சொன்னார். அப்போது விக்டோரியா பைபிளிலிருந்து யெகோவா வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகத்தைப் பற்றி அவருக்கு விளக்கினார். விக்டோரியா உண்மையாய் நடந்துகொண்டதைப் பார்த்து நெகிழ்ந்துபோன அந்த நபர் தன்னிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்திலிருந்து கணிசமான தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார். தங்களுக்குத் தேவையானதை யெகோவா கொடுப்பார் என்பதில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அதனாலேயே, அவர்கள் நம்பகமானவர்கள் எனப் பெயரெடுத்திருக்கிறார்கள்.
12. வேலையையோ பணத்தையோ இழந்தாலும் நாம் ஏன் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்கிறோம்? ஓர் அனுபவத்தைச் சொல்லுங்கள்.
12 சியர்ரா லியோன் என்ற நாட்டில் வசிக்கும் தாமஸ் என்பவர் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபி. இவர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் டீச்சராக வேலை செய்தார். ஆனால், அவருக்குக் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குச் சம்பளமே கொடுக்கப்படவில்லை. அவருடைய மொத்த சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள பள்ளி நிர்வாகியைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் ஒரு பாதிரி. யெகோவாவின் சாட்சிகளுடைய மத நம்பிக்கைகள் பள்ளி நிர்வாகத்துக்கு எதிரானவை... பள்ளியில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமென்றால் தாமஸ் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கக் கூடாது... என்று அவர் சொல்லிவிட தாமஸ் வேலையை ராஜினாமா செய்தார். அதனால், கிட்டத்தட்ட ஒரு வருட சம்பளத்தை சுளையாக இழந்தார். பின்பு, ரேடியோவையும் மொபைல் ஃபோன்களையும் பழுதுபார்க்கும் ஒரு வேலையில் சேர்ந்தார். வறுமையில் வாட வேண்டி வருமோ என்ற பயம் பலருக்கு இருந்தாலும் அந்தப் பயம் யெகோவாவின் மக்களுக்கு இல்லை என்பதையே இந்த அனுபவமும் இதுபோன்ற மற்ற அனுபவங்களும் காட்டுகின்றன. ஏனென்றால், சகலத்தையும் படைத்த யெகோவா தங்களைப் எப்போதும் பாதுகாப்பார் என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
13. பொருளாதார நிலை மோசமாக உள்ள நாடுகளில் பிரசங்க வேலை ஏன் மும்முரமாக நடைபெறுகிறது?
13 இன்று பல நாடுகளில் வாழ்க்கையை ஓட்டுவது பெரும்பாடாய் இருந்தாலும், அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் மும்முரமாய் ஊழியம் செய்து வருகிறார்கள். ஏன்? ஒரு கிளை அலுவலகத்திலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “அநேகருக்கு இங்கு வேலையில்லாமல் இருப்பதால் பகல் வேளைகளில் அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால், பைபிள் படிக்க ஒத்துக்கொள்கிறார்கள். ஊழியம் செய்ய சகோதரர்களுக்கும் நிறைய நேரம் இருக்கிறது. முக்கியமாக, பொருளாதாரப் பின்னடைவால் பெருமளவு பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளவர்களிடம் நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அவர்களே அதைக் கண்ணாரக் காண்கிறார்கள்.” ஒரு நாட்டில் ஒவ்வொரு பிரஸ்தாபியும் மூன்றுக்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். அங்கு 12 வருடங்களுக்கும் மேலாக மிஷனரியாகச் சேவை செய்துவரும் ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “இங்கு பெரும்பாலான பிரஸ்தாபிகள் எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களுடைய கவனத்தைத் திசைதிருப்பும் காரியங்கள் அதிகம் இல்லாததால், ஊழியம் செய்வதற்கும் பைபிள் படிப்பு நடத்துவதற்கும் அவர்களுக்கு அதிக நேரம் கிடைக்கிறது.”
14. கடவுளுடைய மக்கள் எந்தெந்த விதங்களில் அவருடைய பாதுகாப்பை ருசிப்பார்கள்?
14 ஒரு தொகுதியாகத் தமது மக்களுக்கு உதவியையும் பாதுகாப்பையும் விடுதலையையும் அளிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அதில் நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. (சங். 37:28; 91:1-3) எனவே, “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைப்பவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். (வெளி. 7:9, 14) சொல்லப்போனால், இந்தக் கடைசி நாட்களில் ஒரு தொகுதியாகத் தமது மக்கள் முற்றிலும் அழிக்கப்பட யெகோவா அனுமதிக்க மாட்டார். சோதனைகளைச் சகிப்பதற்கும் தம்முடன் உள்ள பந்தத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் தேவையான அனைத்தையும் அவர்களுக்கு அளிப்பார். மிகுந்த உபத்திரவத்தின் கடைசி கட்டத்திலும் யெகோவா தமது மக்களைப் பாதுகாப்பார்.
‘யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியுங்கள்’
15, 16. கடவுளுடைய அறிவுரைப்படி நடந்தால் நாம் எப்படிப் பயனடைவோம்? உதாரணம் தருக.
15 எப்போதும் தைரியமாய் இருப்பதற்குக் கடவுளுடைய போதனையை நாம் தவறாமல் பெற வேண்டும் என்பது தாவீதின் வேண்டுதலிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ‘யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்’ என்று அவர் வேண்டிக்கொண்டார். (சங். 27:11) இந்த வேண்டுதலுக்கு இசைவாக நடப்பது என்பது பைபிள் அடிப்படையில் யெகோவாவின் அமைப்பு தரும் அறிவுரைகளைக் கவனமாய்க் கேட்டு உடனடியாகக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. உதாரணத்திற்கு, தங்கள் வாழ்க்கையை எளிமையாய் வைத்துக்கொள்ளும்படி பைபிள் தரும் பயனுள்ள ஆலோசனைக்கு அநேகர் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். தங்கள் கடன்களை அடைத்து, தங்களுக்குத் தேவையில்லாத பொருள்களை விற்றிருக்கிறார்கள். அதனால், நாட்டின் பொருளாதார நிலை சீர்குலைந்தபோது ஏற்பட்ட பணக் கஷ்டத்தை அவர்களால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. தங்களுக்கு உண்மையிலேயே தேவையில்லாத பொருள்களை அவர்கள் வாங்கவும் இல்லை, அதற்காகத் தவணை முறையில் பணம் கட்ட வேண்டுமே என்ற கவலையும் அவர்களுக்கு இல்லை. அதனால், ஊழியத்தில் அவர்களால் அதிக மணிநேரம் செலவிட முடிகிறது. எனவே, நாம் ஒவ்வொருவரும் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘பைபிளிலிருந்தும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் தரும் பிரசுரங்களிலிருந்தும் படிப்பவற்றை நான் உடனடியாகக் கடைப்பிடிக்கிறேனா? அதற்காக என் பங்கில் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் அவற்றைக் கடைப்பிடிக்கிறேனா?’—மத். 24:45.
16 யெகோவா நமக்குப் போதிக்கவும், செவ்வையான பாதையில் நம்மை நடத்தவும் அவரை அனுமதித்தால் நாம் பயப்பட வேண்டிய தேவையே இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் ஒழுங்கான பயனியர் ஒருவர் தன் கம்பெனியிலேயே வேறொரு வேலைக்காக விண்ணப்பித்தார். குடும்பமாய் முழுநேர ஊழியம் செய்ய உதவியாய் இருக்கும் என்பதால் அப்படி விண்ணப்பித்தார். பட்டதாரிகளுக்கு மட்டும்தான் அந்த வேலை கிடைக்கும் என்று அவருடைய அதிகாரி சொல்லிவிட்டார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் எதிர்ப்பட்டிருந்தால்... உயர் கல்வி படிக்காமல் முழுநேர ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்ததை நினைத்து வருத்தப்பட்டிருப்பீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த அதிகாரி வேலையிலிருந்து தூக்கப்பட்டார், வேறொரு அதிகாரி அவர் இடத்தில் நியமிக்கப்பட்டார். அவர் நம் சகோதரரின் எதிர்கால லட்சியங்களைப் பற்றிக் கேட்டார். ‘நானும் என் மனைவியும் யெகோவாவின் சாட்சிகள், கடவுளுக்காக நாங்கள் முழுநேர ஊழியம் செய்கிறோம். தொடர்ந்து அந்த ஊழியத்தில் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம்’ என்று நம் சகோதரர் சொன்னார். அவர் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கு முன்பாகவே, “நான் பல முறை உங்களைக் கவனித்திருக்கிறேன். நீங்கள் மற்றவர்களைப் போல் இல்லை! என் அப்பா சாகும் தறுவாயில் இருக்கும்போது இரண்டு யெகோவாவின் சாட்சிகள் வந்து தினமும் அவருக்கு பைபிளிலிருந்து வாசித்துக் காட்டினார்கள். எனவே, யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவ எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் உதவ வேண்டும் என்று அன்றைக்கே நான் தீர்மானித்தேன்” என்று அந்த அதிகாரி சொன்னார். மறுநாள் காலை, நம் சகோதரர் ஆசைப்பட்ட வேலையே அவருக்குக் கிடைத்தது. ஆம், நாம் யெகோவாவுடைய அரசாங்கத்திற்கு முதலிடம் கொடுத்தால் அவரும் தாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார், நமக்குத் தேவையானதை நிச்சயம் தருவார்.—மத். 6:33.
விசுவாசமும் நம்பிக்கையும் அவசியம்
17. நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ள எது நமக்கு உதவும்?
17 விசுவாசமும் நம்பிக்கையும் எந்தளவு அவசியம் என்பதை தாவீதின் பின்வரும் வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது: ‘நான், ஜீவனுள்ளோர் தேசத்திலே யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.’ (சங். 27:13) கடவுள் நமக்கு நம்பிக்கை அளித்திருக்காவிட்டால்... சங்கீதம் 27-ல் உள்ள விஷயங்கள் நமக்குத் தெரிந்திராவிட்டால்... நம் வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருந்திருக்கும்! எனவே, நாட்கள் ஒவ்வொன்றும் அர்மகெதோனை நோக்கி வேகமாய் நகருவதால் பலத்தைப் பெறவும் பாதுகாக்கப்படவும் யெகோவாவிடம் நாம் எப்போதும் நம்பிக்கையுடன் ஜெபம் செய்வோமாக!—சங்கீதம் 27:14-ஐ வாசியுங்கள்.
[பக்கம் 23-ன் படம்]
யெகோவா தன்னை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்பதை எண்ணிப் பார்த்தது தாவீதுக்குத் தைரியத்தைத் தந்தது
[பக்கம் 25-ன் படம்]
பொருளாதாரப் பின்னடைவை அதிக நேரம் ஊழியம் செய்வதற்கான வாய்ப்பாகக் கருதுகிறோமா?