சத்தியம் வாழ்க்கையை மாற்றுகிறது
இன்று அநேக மக்களின் வாழ்க்கை சமாளிப்பதற்கு கடினமாயும் மிகவும் சங்கடமான நிலையிலும் உள்ளது வருத்தம் தருவதாயிருந்தாலும் அதுவே உண்மை. அப்படிப்பட்ட ஆட்கள் மகிழ்ச்சியைக் கண்டடைய சாத்தியமிருக்கிறதா? சிலர் தங்கள் உடன் மானிடருக்கு தீங்கிழைக்கும் குற்றவாளிகளாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் சமுதாயத்தின் நேர்மையுள்ள அங்கத்தினர்களாக எப்போதாவது மாறுவார்களா? ஆம் என்பதே இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில். ஆட்கள் மாறவும்முடியும், அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழவும்கூடும். இதை எப்படி செய்யமுடியும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதியபோது காண்பித்தார்: “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
‘தேவனுடைய பரிபூரணமுமான சித்தம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இயேசு தம் சீஷர்களிடம் கூறியதை மனதுக்கு கொண்டுவரலாம். மேலே உள்ள வார்த்தைகளை பவுல் எழுதி 20-க்கும் மேற்பட்ட வருடங்களுக்கு முன்பு இயேசு இதை சொன்னார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவான் 8:32) பைபிளில் நமக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட தகவல், விசேஷமாக கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய தகவலே “சத்தியம்” என்பதை இயேசு அர்த்தப்படுத்தினார். (யோவான் 17:17) பைபிள் சத்தியம் மக்களை உண்மையிலேயே விடுதலையாக்குகிறதா? கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக வாழ்வது உண்மையிலேயே வாழ்க்கையை மாற்றுகிறதா? அது நிச்சயமாகவே மாற்றுகிறது. சில உதாரணங்களை சிந்தித்துப் பாருங்கள்.
வாழ்க்கையில் நோக்கம்
கொஞ்ச காலத்துக்கு முன்பு, ஜிப்ரால்டரில் வசிக்கும் மோசஸ் மகிழ்ச்சியற்றவராய் இருந்தார். அவர் சொல்கிறார்: “நான் ஒரு குடிகாரனாய் இருந்தேன், வீதிகளில் தூங்கினேன். நாசமாய் போய்விட்டவனைப் போல் உணர்ந்தேன். என்மீது இரக்கம் காண்பிக்கும்படியும் இதே கஷ்டத்தை மறுநாளும் சகிக்கவேண்டிய நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்படியும் ஒவ்வொரு நாள் இரவும் கடவுளிடம் ஜெபித்தேன். பிரயோஜனமில்லாதவனாகவும், வேலையில்லாதவனாகவும், குடும்பம் இல்லாதவனாகவும், எனக்கு உதவி செய்வதற்கு எவருமே இல்லாதவனாகவும் இருக்கையில் நான் ஏன் பிறந்தேன் என்று அழுதுகொண்டே கடவுளிடம் கேட்டேன். நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” பிறகு ஏதோவொன்று நடந்தது.
மோசஸ் தொடர்ந்து சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருந்த ரோபர்ட்டோ என்பவரை சந்தித்தபோது கடவுள் என் ஜெபத்துக்கு செவிகொடுத்திருப்பதை அறிந்தேன். ரோபர்ட்டோ எனக்கு ஒரு பைபிளையும், பைபிள் படிப்புக்கு உதவியாயிருக்கும் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டையும் கொடுத்தார். a ஒவ்வொரு நாளும், நாங்கள் இருவரும், இரவில் நான் தூங்குகிற பெஞ்சில் உட்கார்ந்து பைபிளை படித்தோம். ஒரு மாதத்திற்குப் பிறகு ரோபர்ட்டோ உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். விரைவில் பைபிள் சத்தியம் என் மனநிலையை முழுவதுமாக மாற்றியிருந்தது. அதற்குப் பிறகு நான் வீதிகளில் தூங்குவதுமில்லை, குடிப்பதுமில்லை, புகைப்பதுமில்லை. என் வாழ்க்கை மாறிவிட்டது, நான் சந்தோஷமாய் இருக்கிறேன். விரைவில் முழுக்காட்டுதல் பெற்று அவருடைய சாட்சிகளில் ஒருவராக யெகோவாவை சேவிக்க விரும்புகிறேன்.”
எப்படிப்பட்ட மாற்றம்! மக்கள் நம்பிக்கையின்றி இருக்கிறார்கள் என்றால், அதற்கான காரணம் பெரும்பாலும் அவர்கள் அறிவைப் பெறாமலிருப்பதே. அவர்கள் கடவுளைப் பற்றியோ அவருடைய மகத்தான நோக்கங்களைப் பற்றியோ அறியாமல் இருக்கிறார்கள். மோசஸுடைய விஷயத்தில், அவர் அந்த அறிவைப் பெற்றவுடன், தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள அது அவருக்கு பலத்தையும் தைரியத்தையும் கொடுத்தது. மோசஸுடைய விஷயத்தில் சங்கீதக்காரனின் ஜெபத்துக்கு கடவுள் அளித்த பதில் இருந்தது: “உமது வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.”—சங்கீதம் 43:3.
இதைப் போன்ற அனுபவம் பெலிஸில் வாழும் டான்யல் என்பவருக்கு இருந்தது. டான்யல் வீதிகளில் தூங்கிக்கொண்டில்லை—அவருக்கு கௌரவமான வேலை இருந்தது. ஆனால் 20 வருடங்களாக போதைப்பொருள், மதுபானம் ஆகியவற்றின் அடிமைத்தனத்தில் போராடி வந்தார்; மேலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையும் நடத்தி வந்தார். ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டிருந்தபோதிலும், டான்யலால் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாகவே காணமுடியவில்லை, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையே அவர் சந்தேகித்தார். அவர் உதவியை நாடி பல சர்ச்சுகளுக்கு சென்றார், ஆனால் சர்ச்சுக்கு செல்லும் தன் அநேக நண்பர்களும் அவருடைய நண்பர்களாயிருந்த பாதிரிமார்களும்கூட போதைப்பொருட்களையோ அல்லது மதுபானத்தையோ தவறாகப் பயன்படுத்தினதை அவர் பார்த்தார். இதற்கிடையில், அவருடைய மனைவி அவரை விவாகரத்து செய்யும் நிலையில் இருந்தாள்.
நம்பிக்கையிழந்த நிலையில் டான்யல் மறுவாழ்வு மையம் ஒன்றில் தானாகவே போய் சேர்ந்தார். அதிலிருந்து வெளியே வந்தபின்பும் உதவி இல்லாவிடில் விரைவில் மறுபடியும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகிவிடுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் எப்படிப்பட்ட உதவி தேவை? மே, 1996-ல் மறுவாழ்வு மையத்திலிருந்து வெளியே வந்து இரண்டு நாட்கள் கழித்து டான்யல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை அணுகி, “தயவுசெய்து எனக்கு பைபிள் படிப்பு நடத்துங்கள்” என்று கேட்டு அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த சாட்சி டான்யலுடன் வாரத்திற்கு இருமுறை பைபிளை படிக்க ஏற்பாடு செய்தார், விரைவில் டான்யல் தன் வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்துக்கு இசைய மாற்றுவதற்கு ஆரம்பித்தார். பழைய நண்பர்களுக்கு பதிலாக, போதைப்பொருளையோ மதுபானத்தையோ தவறாக பயன்படுத்தாத, ஒழுக்கயீனத்தை விட்டுவிலகியிருந்த கிறிஸ்தவ நண்பர்களோடு பழக ஆரம்பித்தார். இவ்வாறு, பைபிள் சொல்வது உண்மை என்பதை டான்யல் கண்டுபிடித்தார்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) விரைவில் அவர் சொன்னார்: “சுத்தமான மனச்சாட்சியைப் பெற்றிருப்பது என்றால் என்ன என்பதை நான் இப்போதுதான் என் வாழ்க்கையில் முதன்முதலாக அறிந்திருக்கிறேன்.” டான்யலின் வாழ்க்கையும்கூட மாறியது.
பியூர்டோ ரிகோவில் மற்றொரு நபர் குறிப்பிடத்தக்கவிதத்தில் மாற்றங்களை செய்தார். அவர் அநேக ஆட்களை கொலை செய்திருந்த குற்றத்திற்காக சிறையிலிருந்தார், மிகவும் ஆபத்தானவராக கருதப்பட்டார். பைபிள் சத்தியம் அவரை மாற்றக்கூடுமா? ஆம். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் சில பிரதிகளை அவரிடத்தில் கொடுத்திருந்தார், சீக்கிரத்தில் இன்னும் நிறைய பத்திரிகைகளை கேட்டு வாங்கிக்கொண்டார். அவரோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, பைபிள் சத்தியம் அவருடைய இருதயத்தை பாதிக்க ஆரம்பித்தபோது, அவர் செய்த மாற்றங்களை அனைவராலும் காணமுடிந்தது. அவர் செய்த மாற்றத்தின் முதலாவது அத்தாட்சிகளில் ஒன்று, நீளமாக வளர்த்திருந்த தன்னுடைய முடியை குட்டையாக வெட்டியிருந்தார், அசிங்கமாய் இருந்த தாடியை சவரம் செய்திருந்தார்.
உண்மையில் மனந்திரும்பி தங்கள் வாழ்க்கைப்பாணிகளை மாற்றிக்கொள்ளும் பாவிகளை கடவுள் மன்னிக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. பவுல் எழுதினார்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? . . . உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . கழுவப்பட்டீர்கள்.” (1 கொரிந்தியர் 6:9, 11) சந்தேகமின்றி இந்த வார்த்தைகளும் அப்போஸ்தலர் 24:15-ல் உள்ள வார்த்தைகளும் அவரை ஆறுதலடைய செய்தன: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’ அவர் சொன்னார்: “நான் கொலைசெய்த ஆட்களிடம் மன்னிப்பு கேட்பதற்காக மரித்தவர்கள் உயிர்த்தெழுந்து வரும்போது நான் அங்கிருக்க விரும்புகிறேன்.”
ஓர் புதிய குடும்பம்
அர்ஜன்டினாவில் முழுநேர ஊழியராக சேவிக்கும் லூயிஸ் என்ற யெகோவாவின் சாட்சியிடம், ஒருநாள், வருத்தம் தரும் பின்னணியையுடைய ஓர் இளம் மனிதர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். பிறப்பின் சமயத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர் பல அமைப்புகளில் வளர்ந்து வந்தார். இவர் சுமார் 20 வயதாயிருக்கையில், தன் அம்மா வசிக்கும் இடத்தை அறிந்து, அவர்கள் அருகில் வாழ தீர்மானம் செய்தார். அவர் கடினமாக உழைத்தார், நிறைய பணம் சேமித்து வைத்தார், அவருடைய அம்மா வசிக்கும் நகரத்துக்கு பயணப்பட்டார். அவருடைய பணம் தீர்ந்து போகும்வரை தன்னோடிருக்க அவருடைய அம்மா அவரை அனுமதித்தார்கள், அதற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறும்படி சொன்னார்கள். இவ்வாறு அவர் கைவிட்டதானது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தியது.
இருந்தபோதிலும், லூயிஸ் பைபிள் சத்தியத்தை இந்த இளம் மனிதரோடு பகிர்ந்துகொள்ள முடிந்தது. அந்த சத்தியத்தில் பின்வரும் உறுதியும் அடங்கியிருக்கிறது: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) தன்னை ஒருபோதும் கைவிட்டுவிடாத பரலோக தகப்பன் தனக்கு இருப்பதை இந்த இளம் மனிதர் கண்டுபிடித்தார். இப்போது அவர் ஓர் புதிய குடும்பத்தின், அதாவது யெகோவாவின் குடும்பத்தின் பாகமாக இருப்பதில் சந்தோஷப்படுகிறார்.
அதே நாட்டில் வசிக்கும் மற்றொருவர் காவற்கோபுர பத்திரிகையை தான் விரும்புவதாக ஒரு யெகோவாவின் சாட்சியிடம் சொன்னார். ஏன்? ஏனென்றால், அது அவருடைய திருமணத்தை பாதுகாத்தது. இந்த மனிதர் ஒருநாள் வேலைசெய்யும் இடத்திலிருந்து திரும்பி வருகையில் “விவாகரத்து” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த ஆங்கில காவற்கோபுர பத்திரிகையை குப்பைத் தொட்டியில் பார்த்தார். அவருடைய திருமணம் முறியும் நிலையில் இருந்ததால், அவரும் அவருடைய மனைவியும் சட்டப்பூர்வமாக பிரிந்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தார்கள்; அப்போது அவர் அந்தப் பத்திரிகையை கண்டெடுத்து அதை வாசிக்க ஆரம்பித்தார். அதை அவர் வீட்டுக்கு எடுத்துச்சென்று தன் மனைவியோடு சேர்ந்து வாசித்தார். அந்தப் பத்திரிகையில் இருந்த பைபிள் அடிப்படையிலான புத்திமதியை அந்தத் தம்பதியினர் பொருத்த முயற்சித்தனர். (எபேசியர் 5:21–6:4) விரைவில் அவர்களுடைய உறவு மேம்பட ஆரம்பித்தது. அவர்கள் பிரிந்திருப்பதற்காக எடுத்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு இப்போது ஒற்றுமையான தம்பதியராக பைபிளை படித்து வருகின்றனர்.
உருகுவேயில் லூயிஸ் என்ற மற்றொரு மனிதர் சந்தோஷமாகவே இல்லை. போதை மருந்துக்கு அடிமை, ஆவிக்கொள்கை, விக்கிரக ஆராதனை, மதுபானத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை அவருடைய வாழ்க்கையை சீரழித்தன. கடைசியில் லூயிஸ் முழுவதுமாக விரக்தியடைந்து ஒரு நாத்திகராக ஆனார். உயிர்—அது எவ்வாறு வந்தது? பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? b என்ற ஆங்கில புத்தகத்தை ஒரு நண்பர் அவருக்கு கொடுத்தார். இது அவரை கொஞ்ச காலத்துக்கு யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொள்ள வைத்தது, ஆனால் லூயிஸ் விரைவில் மதுபானம், போதைமருந்து ஆகியவற்றை மீண்டும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார். கடும் துயரத்திலிருந்த அவர், குப்பைகள் நிறைந்திருந்த குழியில் உட்கார்ந்துகொண்டு ஜெபம் செய்தார், கடவுளுடைய பெயரைக் குறித்து அவர் நிச்சயமாய் இல்லாததால் தன் ஜெபத்தை “இயேசு கிறிஸ்துவின் தகப்பனுக்கு” ஏறெடுத்தார்.
அவர் உயிரோடிருப்பதற்கு காரணம் ஏதாவது இருக்கிறதா என்பதை அவருக்கு காண்பிக்கும்படி கடவுளிடம் ஜெபித்தார். “அதற்கு அடுத்த நாளே எனக்கு அறிமுகமான ஒருவர் தனக்கு வேண்டாம் என்று சொல்லி ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதன் தலைப்பு? வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!” c என்று லூயிஸ் சொல்கிறார். அவருடைய கேள்விக்கு பதிலளிக்க அந்த புத்தகம் அவருக்கு உதவியது. கடவுளை எவ்வாறு சேவிப்பது என்பதைக் காண்பிக்கும் மதத்தைக் கண்டுபிடிப்பதற்கு லூயிஸ் உதவிக்காக மறுபடியும் ஜெபித்தார். என்னே ஒரு ஆச்சரியம்! அழைப்புமணி ஒலித்தது, இரண்டு யெகோவாவின் சாட்சிகள் வெளியே நின்றுகொண்டிருந்தனர். லூயிஸ் உடனடியாக பைபிளை அவர்களோடு படிக்க ஆரம்பித்தார். அவர் விரைவாக முன்னேற்றம் செய்தார், இப்போது ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டவராக உணருகிறார். அவர் ஒரு சுத்தமான வாழ்க்கையை வாழ்கிறார், வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடிக்க மற்றவர்களுக்கும் அவர் உதவுகிறார். அவருடைய விஷயத்தில் சங்கீதம் 65:2-ல் உள்ள பின்வரும் வார்த்தைகள் உண்மையாய் இருந்திருக்கின்றன: “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”
பிலிப்பீன்ஸில் ஆலன் என்பவர் மாணவர் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். “எதிர்கால சந்ததியினர் சமத்துவத்தை அனுபவிக்க அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்” என்ற நோக்கத்தையுடைய அமைப்பைச் சேர்ந்தவர் இவர். ஆனால் ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் இவரை சந்தித்தனர், மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய நோக்கத்தை அவர் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டார். அந்த நோக்கத்தில் பின்வரும் ஏவப்பட்டெழுதப்பட்ட வாக்குறுதி அடங்கியுள்ளது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11) ஆலன் சொன்னார்: “எங்களுடைய இயக்கத்தின் நோக்கம் பைபிளில் வெகு காலத்திற்கு முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதை நான் விரைவில் கண்டுபிடித்தேன். நாங்கள் அதிக ஆவலோடு விரும்பிய காரியங்கள் அனைத்தும் கடவுளுடைய ராஜ்யத்தில் அருளப்படும்.” ஆலன் இப்போது கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்கிறார், பைபிள் சத்தியத்தில் நம்பிக்கை வைக்கும்படி மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்.
ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் சத்தியத்தை மக்கள் ஏற்றுக்கொள்கையில் வாழ்க்கை மாற்றம் அடைகிறது. தப்பிப்பிழைக்கப்போகும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை கடவுளுடைய சித்தத்துக்கு இசைய கொண்டு வந்திருக்கும் காலம் உண்மையில் வரப்போகிறது. அது எப்படிப்பட்ட மாற்றமாய் இருக்கும்! அப்போது பின்வரும் தீர்க்கதரிசனம் நிறைவேறும்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.