யெகோவாவில் அடைக்கலம் புகுங்கள்
“யெகோவாவே, உம்மிடத்தில் நான் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.”—சங்கீதம் 31:1, NW.
1. அடைக்கலம்தரும் யெகோவாவின் திறமையில் சங்கீதம் 31 நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்துகிறது?
ஓர் இனிய ராகமுள்ள குரல், மனதிலும் உடலிலும் களைத்துப்போயிருந்தாலும், யெகோவாவிடம் தம்மையே ஒப்புக்கொடுக்கிற ஒரு மனிதனைப் பற்றி பாடுகிறது. விசுவாசம் வெல்லும், என்று அந்தப் பரிசுத்தப் பாடலின் வார்த்தைகள் சொல்கின்றன. ஏவிவிடப்பட்ட துன்புறுத்துவோரிடமிருந்து தப்பி, காத்திருக்கும் சர்வவல்லவரின் கரங்களில் இந்த மனிதன் அடைக்கலம் காண்கிறார். “யெகோவாவே, உம்மிடத்தில் நான் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்,” என்று அந்தச் சங்கீதம் சொல்கிறது. “என்னை ஒருக்காலும் அவமானமடைய விடீர். உமது நீதியில் என்னை விடுவித்தருளும்.”—சங்கீதம் 31:1, NW.
2. (அ) எந்த இரண்டு தூண்களின் அடிப்படையில் யெகோவா நமது துருகம் என்று நம்பிக்கை வைக்கலாம்? (ஆ) யெகோவா எப்படிப்பட்ட கடவுள்?
2 அந்தச் சங்கீதக்காரன் ஓர் அடைக்கலத்தைக் கொண்டிருக்கிறார்—மிகச் சிறந்த ஒன்று! மற்றவை சந்தேகிக்கப்படட்டும், ஆனால் இந்த உண்மை நிலைத்திருக்கிறது: யெகோவா அவருடைய துருகம், அவருடைய கோட்டை. அவருடைய நம்பிக்கை இரண்டு உறுதியான தூண்களில் அஸ்திவாரமிடப்பட்டிருக்கிறது. முதலாவது, அவருடைய விசுவாசம், இதை யெகோவா அவமானப்படும்படி விடமாட்டார்; இரண்டாவது, யெகோவாவின் நீதி, அதாவது அவர் ஒருக்காலும் தம்முடைய ஊழியக்காரரை நிரந்தரமாகக் கைவிட்டுவிடமாட்டார். யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை வெட்கப்படச் செய்யும் ஒரு கடவுளல்ல; அவர் வாக்குறுதியை நிறைவேற்றாமலிருப்பதில்லை. பதிலாக, அவர் சத்தியக் கடவுள், அவரை மனப்பூர்வமாக நம்புகிறவர்களுக்குப் பலனளிப்பவர். முடிவில், விசுவாசமே பலனளிக்கப்படும்! விடுதலை நிச்சயமாக வரும்!—சங்கீதம் 31:5, 6.
3. சங்கீதக்காரன் யெகோவாவை எப்படிப் போற்றுகிறார்?
3 சங்கீதக்காரன் தன் பாட்டிசையை ஆழ்ந்த துக்கமான துயர ராகத்திலிருந்து, உச்ச ஆர்வ நம்பிக்கை ராகத்திற்கு உயர்த்தும் ஏற்றத்தாழ்வுகளுள்ள ராகங்களில் இசையமைக்கும்போது, உள்ளான பலத்தைப் பெறுகிறார். அவர் யெகோவாவின் உண்மைமாறாத அன்பிற்காக அவரைப் போற்றுகிறார். அவர் பாடுகிறார், “கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.”—சங்கீதம் 31:21.
இராஜ்ய பிரஸ்தாபிகளின் பலத்த பாடகர்குழு
4, 5. (அ) எந்தப் பலத்த பாடகர்குழு இன்று யெகோவாவிற்கு துதிசெலுத்துகிறது? கடந்த ஊழிய ஆண்டில் அவர்கள் அதை எவ்வாறு செய்திருக்கின்றனர்? (பக்கங்கள் 12-15-ல் உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.) (ஆ) ராஜ்ய பிரஸ்தாபிகளின் பாடகர்குழுவோடு சேர்ந்துகொள்ள பல தனிப்பட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதை நினைவுநாள் ஆசரிப்பு வருகை எண்ணிக்கை எந்த வழியில் குறிப்பிடுகிறது? (அட்டவணையையும் பார்க்கவும்.) (இ) உங்கள் சபையில் எந்தத் தொகுதி இந்தப் பாடகர்குழுவோடு சேர்ந்துகொள்ளும் நிலையில் இருக்கலாம்?
4 இன்று, சங்கீதக்காரனின் அந்த வார்த்தைகள் மீண்டும் உயிரூட்டப்பட்டிருக்கிறது. பொல்லாத எதிரி யாரும், எந்த இயற்கையான பேராபத்தும், அல்லது எந்தப் பொருளாதார வீழ்ச்சியும் யெகோவாவுக்கான துதிப்பாடல்களை நிறுத்திவிட முடியாது; உண்மையில், யெகோவாவின் அன்புள்ள தயவு அவருடைய மக்களுக்கு அதிசயமானதாய் ஆகியிருக்கிறது. உலகமெங்கும் கடந்த ஊழிய ஆண்டில் 231 நாடுகளில் 47,09,889 என்ற உச்சநிலையைப் பெற்ற ஒரு பலமிக்க பாடகர்குழு, கடவுளுடைய ராஜ்யத்தின் செய்தியை பாடியது. இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் யெகோவாவினுடைய பரலோக அரசாங்கம், அவர்களைக் கைவிட்டுவிடாத ஓர் அடைக்கலம். கடந்த ஆண்டில், 73,070 சபைகளிலிருந்து வந்த இந்த ராஜ்ய பிரஸ்தாபிகள், மொத்தமாக 105,73,41,972 மணிநேரங்களைப் பிரசங்க வேலையில் செலவிட்டிருக்கின்றனர். இது 2,96,004 நபர்கள் கடவுளிடம் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் அடையாளப்படுத்துவதில் விளைவடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உக்ரேனில் உள்ள கீவ்-ல் நடந்த தெய்வீக போதனை சர்வதேச மாநாட்டில் ஆஜராயிருந்தவர்கள் அனைவரும் என்னே ஓர் அற்புதகரமான வியப்பை அனுபவித்து மகிழ்ந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்திலேயே மிக முக்கியமான ஒரு சம்பவத்தை, அதாவது இதுவரை பதிவுசெய்யப்படாத உண்மை கிறிஸ்தவர்களின் மிகப் பெரிய எண்ணிக்கையினர் முழுக்காட்டுதல் எடுத்த காட்சியைக் கண்டனர்! ஏசாயா 54:2, 3-ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், கடவுளுடைய ஜனங்கள் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றனர்.
5 எனினும், கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்க விரும்பும் கூடுதலான நபர்கள் இந்தப் பாடகர்குழுவோடு சேர்ந்துகொள்ள காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டில், இயேசுவினுடைய மரணத்தின் நினைவுநாள் ஆசரிப்பிற்கு மலைக்கவைக்கும் 1,18,65,765 தொகையினர் வந்து சிறப்பித்திருந்தனர். நம்பத்தக்க விதத்தில், இவர்களில் பலர் ராஜ்ய பாட்டை இந்த ஊழிய ஆண்டில் வீட்டுக்குவீடு பாடுவதற்கு தகுதிபெறுவர். சத்தியத்தின் எதிரியாகிய பிசாசாகிய சாத்தானை அந்த எதிர்பார்ப்பு எவ்வளவிற்கு கோபத்தால் நிரப்பும்!—வெளிப்படுத்துதல் 12:12, 17.
6, 7. அக்கறைக்காண்பித்த ஒரு மனிதர் யெகோவாவின் உதவியால் எப்படிப் பிசாசின் தொந்தரவை மேற்கொண்டார் என்பதை விளக்குங்கள்.
6 அந்தப் பலத்த பாடகர்குழுவோடு மற்றவர்கள் தங்களுடைய குரல்களைச் சேர்க்காதபடி தடுப்பதற்கு சாத்தான் முயற்சிசெய்வான். உதாரணமாக, தாய்லாந்திலுள்ள பிரஸ்தாபிகள், அதிகரிக்கும் எண்ணிக்கையான மக்கள், பேய் தொல்லைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் காண்கின்றனர். எனினும், பல நேர்மைமனமுள்ளவர்கள் யெகோவாவின் உதவியால் விடுதலையாக்கப்பட்டிருக்கின்றனர். ஆர்வத்தினால் தூண்டப்பட்ட காரணத்தால் ஒரு பில்லிசூனியக்காரரை சந்தித்தப் பிறகு, ஒரு மனிதர் பேய்களின் பிடியில் பத்து ஆண்டுகள் இருந்தார். ஒரு மதகுருவின் உதவியோடு, அவற்றின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு முயற்சிசெய்தார். ஆனால் அவர் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒரு முழுநேர ஊழியர் இந்த மனிதரோடு பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பித்து, பேய் செல்வாக்கிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியைப் பைபிளிலிருந்து போதித்தார்—சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெறுவது, யெகோவா கடவுளில் விசுவாசம் வைப்பது, மேலும் அவரிடத்தில் ஜெபத்தின்மூலமாகக் கெஞ்சி மன்றாடுவது.—1 கொரிந்தியர் 2:4; பிலிப்பியர் 4:6, 7; 1 தீமோத்தேயு 2:3, 4.
7 இந்தக் கலந்தாலோசிப்பிற்குப் பின்பான இரவில், அந்த மனிதர் ஒரு கனவுகண்டார். அந்தக் கனவில் அவருடைய இறந்துபோன தகப்பன் இவரை ஆவியுலக மத்தியஸ்தராக மீண்டும் இருக்கும்படி பயமுறுத்தினார். அவருடைய குடும்பம் துன்புற ஆரம்பித்தது. வசீகரிக்கப்பட விரும்பாதவராக, அந்த மனிதர் தன்னுடைய பைபிள் பாடங்களைத் தொடர்ந்தார்; கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். அப்படிப்பட்ட படிப்புகளில் ஒன்றில், ஆவி சம்பந்தமான சடங்காச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள் சில சமயங்களில் பேய்களின் செல்வாக்கிலிருந்து விடுபட முயலும் மக்களைப் பேய்கள் தொந்தரவுபடுத்த வாய்ப்பளிக்கின்றன என்று அந்தப் பயனியர் விளக்கினார். அந்த மனிதர் ஒரு மந்திரப்பொருளாகப் பயன்படுத்தியிருந்த ஏதோவொரு எண்ணெய்யை தான் வைத்திருந்ததாக நினைவுகூர்ந்தார். அதை அவர் இப்போது தூக்கி எறிய வேண்டும் என்று உணர்ந்தார். அதைத் தூக்கி எறிந்ததிலிருந்து அவர் பொல்லாத ஆவிகளால் மீண்டும் தொந்தரவுபடுத்தப்படவில்லை. (ஒப்பிடுக: எபேசியர் 6:13; யாக்கோபு 4:7, 8.) அவரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய படிப்பிலே நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்; மேலும் பைபிள் போதனைக்காகக் கூட்டங்களுக்கு ஒழுங்காக வருகிறார்கள்.
8, 9. சில ராஜ்ய பிரஸ்தாபிகள் மற்ற என்ன தடைகளை மேற்கொண்டிருக்கின்றனர்?
8 மற்ற தடைகள் நற்செய்தியின் சத்தத்தை அடக்கிவைக்கக்கூடும். கானாவிலுள்ள அதிகக் கடினமான பொருளாதார நிலைமையின் காரணமாக, தொழிலாளிகள் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லப்படுகிறார்கள். வாழ்க்கைச் செலவு அதிக உயர்வடைந்திருக்கிறது. இது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளைப் பெறுவதையும் நிஜமான பிரச்னையாக ஆக்குகிறது. யெகோவாவின் மக்கள் எப்படிச் சமாளித்து வருகிறார்கள்? நம்பிக்கையை, தங்கள்மீதல்ல, ஆனால் யெகோவாவின்மீது வைத்திருப்பதால். உதாரணமாக, ஒரு நாள், ஒட்டப்பட்ட ஒரு காகித உறையை கிளை அலுவலகத்தின் வரவேற்பறையில் ஒரு மனிதர் வைத்துவிட்டுச் சென்றார். அந்தக் காகித உறையினுள் $200 இருந்தது, அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளத்தொகை இது. இந்த உறை, தன் பெயரை அடையாளப்படுத்த விரும்பாத ஒரு நன்கொடையாளரிடமிருந்து வந்திருந்தது. ஆனால் அந்த உறையின்மேல் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “என் வேலையை நான் இழந்துவிட்டேன், ஆனால் யெகோவா எனக்கு மற்றொரு வேலை கொடுத்தார். அவருக்கும் அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசுவுக்கும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். முடிவு வருவதற்கு முன்பு ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பரப்புவதற்கு உதவிசெய்வதற்காக, நான் ஒரு சிறிய நன்கொடையை உறையிலிடுகிறேன்.”—2 கொரிந்தியர் 9:11-ஐ ஒப்பிடவும்.
9 பலத்த பாடகர்குழுவால் ஏறெடுக்கப்படும் யெகோவாவின் துதியில் சேர்ந்துகொள்வோருக்குக் கூட்டத்திற்கு ஆஜராயிருத்தல் உதவிசெய்கிறது. (சங்கீதம் 22:22-ஐ ஒப்பிடுக.) இவ்வாறு, ஹாண்டுராஸின் தென்பகுதியில் எல் ஹார்டான் என்றழைக்கப்படும் ஒரு சபை இருக்கிறது. இந்தச் சிறிய தொகுதியைப் பற்றிய விசேஷித்த காரியம் என்ன? அவர்கள் இடைவிடாது கூட்டத்திற்கு ஆஜராதலாகும். 19 பிரஸ்தாபிகளில் 12 பேர் ஒவ்வொரு வாரமும் ஓர் அகலமான ஆற்றைக் கடந்துதான் கூட்டத்திற்கு வரவேண்டும். வறண்ட காலத்தில் இது ஒரு பிரச்னையாக இல்லை. ஏனென்றால் பாறைகளை நீர் தாண்டும் கற்களாகப் பயன்படுத்தி ஆற்றைக் கடக்கமுடியும். ஆனால் மழைக்காலத்தில் நிலைமைகள் மாறுகின்றன. ஒரு சமயத்தில் இழுத்துச்செல்லாத நீரோட்டம், அதன் வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் அடித்துக்கொண்டு செல்லும் பெருவெள்ளமாய் மாறுகிறது. இந்தத் தடங்கலை மேற்கொள்வதற்கு சகோதரர்களும் சகோதரிகளும் நன்றாக நீந்துபவர்களாக இருக்கவேண்டும். குறுக்கே கடப்பதற்கு முன்பு, அவர்கள் தங்களுடைய கூட்டத்திற்கான ஆடைகளை ஒரு டீனாவில் (மெட்டல் கொப்பரையில்) வைத்து, அதை ஒரு பிளாஸ்டிக் பையினால் மூடுகின்றனர். நல்ல பலமிக்க நீந்துபவர் டீனாவை ஒரு மிதவைபோல் பயன்படுத்தி, தொகுதியை அக்கரைக்கு வழிநடத்துவார். அக்கரைக்குப் பத்திரமாக சென்றடைந்தபின்பு, தங்களைத் துவட்டிவிட்டு, தங்கள் ஆடைகளைப் போட்டுக்கொள்கின்றனர். பின்பு ராஜ்ய மன்றத்திற்கு சந்தோஷத்தோடும், பளிச்சிடும் சுத்தமாகவும் வந்துசேர்கின்றனர்!—சங்கீதம் 40:9.
நாம் வசிக்கக்கூடிய ஒரு கோட்டை
10. அழுத்தத்தின் சமயங்களில் நாம் ஏன் யெகோவாவிடம் திரும்பலாம்?
10 நீங்கள் வெளிப்படையான பேய் தாக்குதலுக்கு உட்பட்டாலும் சரி அல்லது மற்ற மூலங்களிலிருந்து அழுத்தத்தை எதிர்ப்பட்டாலும் சரி, யெகோவா உங்களுடைய பலத்த துருகமாக இருக்கமுடியும். அவரிடம் சப்தமாக ஜெபியுங்கள். அவர் தம்முடைய மக்களின் அதிக வலுவிழந்த நிலையின் புலம்பல்களுக்கும்கூட கவனமாய் செவிசாய்க்கிறார். சங்கீதக்காரன் அதை உண்மையென்று கண்டறிந்து, இவ்வாறு எழுதினார்: “உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கி விடும்; தேவரீரே எனக்கு அரண்.”—சங்கீதம் 31:2-4.
11. யெகோவாவின் கோட்டை ஏன் ஒரு தற்காலிகமான இடமல்ல என்பதை விளக்குங்கள்.
11 யெகோவா வெறும் தற்காலிகமான அடைக்கலம் அளிப்பவராய் அல்ல, ஆனால் நாம் பாதுகாப்பில் வசிக்கும்படியான தகர்க்கப்பட முடியாத கோட்டையாய் இருக்கிறார். அவருடைய வழிநடத்துதலும் துணையும் அவருடைய மக்களை தேல்வியடையச் செய்யவில்லை. தெய்வீக வல்லமை, சாத்தான் மற்றும் அவனுடைய சந்ததியின் தந்திரச் செயல்களை எல்லாம் ஒன்றுக்கும் உதவாததாக மாற்றிவிடும். (எபேசியர் 6:10, 11) யெகோவாவில் நாம் முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்தால், அவர் சாத்தானுடைய கண்ணிகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பார். (2 பேதுரு 2:9) கடந்த நான்கு ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை சுமார் 35 நாடுகளில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைத் தடுக்கிற சமூக, பொருளாதார, அல்லது அரசியல் நிலைமைகள் உள்ள உலகின் பாகங்களில், செம்மறியாடுகளைப் போன்ற சில மக்கள் தாங்கள் எளிதில் அடையப்பெறும் இடத்திற்கு இடமாற்றம் செய்திருக்கின்றனர். ஜப்பான் அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று.
12. ஜப்பானிலிருந்த ஒரு பயனியர் யெகோவாவை தன் பலத்த துருகமாக எப்படி ஆக்கிக்கொண்டார்?
12 ஜப்பானில் வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலைசெய்யும் வேலையாட்களின் உட்புகுதல் இருந்துவருகிறது. இதனால், பல அந்நிய மொழி சபைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஜப்பானிய மொழி சபையிலுள்ள ஒரு சகோதரரின் அனுபவம், இந்த அந்நிய மொழி பிராந்தியம் எவ்வளவு பலனைத் தருவதாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அவர் எங்குத் தேவை அதிகமோ அங்கு ஊழியம் செய்ய விரும்பினார். எனினும், அவர் இருந்த இடத்தில் ஏற்கெனவே அவர் பத்து பைபிள் படிப்புகளை நடத்திவந்தார். அவருடைய நண்பர்களில் ஒருவர் நகைச்சுவையாகச் சொன்னார்: “எங்குத் தேவை அதிகமோ அங்கு நீங்கள் போனால், அந்த இடத்தில் 20 பைபிள் படிப்புகளை நீங்கள் நடத்த வேண்டியதிருக்கும்!” அவர் ஒரு நியமனத்தைப் பெற்று, ஹிரோஷிமாவுக்குப் போனார். ஆனால், நான்கு மாதங்கள் கழிந்தபின் அவர் வெறும் ஒரே ஒரு பைபிள் படிப்புதான் வைத்திருந்தார். ஒரு நாள் அவர் பிரேஸிலிலிருந்து வந்திருந்த போர்ச்சுகீஸ் மொழி மட்டும் பேசின ஒரு மனிதனைச் சந்தித்தார். சகோதரர் அந்த மனிதனோடு பேச்சுத்தொடர்புகொள்ள முடியாததால், அவர் போர்ச்சுகீஸ் மொழி பாடப் புத்தகத்தை வாங்கினார். சில எளிதான பேச்சு வழக்கு வார்த்தைகளைக் கற்றுக்கொண்ட பின்பு, அவர் அந்த மனிதனை மீண்டும் சந்தித்தார். சகோதரர் அவரிடம் போர்ச்சுகீஸ் மொழியில் வணக்கம் சொன்னவுடன், அந்த மனிதன் ஆச்சரியப்பட்டு, புன்முறுவலுடன் கதவைத் தாராளமாகத் திறந்து, அவரை உள்ளே அழைத்தார். ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. வெகுசீக்கிரத்தில் அந்தச் சகோதரர் மொத்தமாக 22 படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார், போர்ச்சுகீஸ் மொழியில் 14, ஸ்பேனிஷில் 6, ஜாப்பனீஸில் 2.
நம்பிக்கையோடு பிரசங்கித்தல்
13. யெகோவாவைச் சேவிப்பதில் நம்மை வெட்கமடையும்படிச் செய்யும் பயத்தினால் கட்டாயப்படுத்த எவரும் ஏன் முயலக்கூடாது?
13 யெகோவாவின் மக்கள் யெகோவாவே தங்களுடைய அடைக்கலம் என்ற முழு நம்பிக்கையோடு ராஜ்ய பாடலைப் பாடுகிறார்கள். (சங்கீதம் 31:14) அவர்கள் வெட்கப்படப் போவதில்லை—யெகோவா அவர்களை அவமானப்படுத்தப் போவதில்லை; ஏனென்றால் தம்முடைய வார்த்தையை அவர் நிறைவேற்றுவார். (சங்கீதம் 31:17) பிசாசும் அவனுடைய பேய்த் தொகுதிகளும் வெட்கப்படுத்தப்படுவர். யெகோவாவின் மக்கள் அவமானப்படுத்தாத ஒரு செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நியமிக்கப்பட்டிருப்பதால், மற்ற மக்களால் வெட்கப்படுத்தப்படும் பயத்தால் பிரசங்கிக்கும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. யெகோவாவை வணங்குவதற்கு அவரோ அவருடைய குமாரனோ மக்களை அப்படியொன்றும் தூண்டுவதில்லை. யெகோவாவின் நற்குணத்திற்காகவும் அன்புள்ள தயவிற்காகவும் விசுவாசம் மற்றும் போற்றுதலால் மக்களின் இருதயங்கள் நிரம்பியிருக்கும்போது, அவர்களுடைய இருதயங்களின் நல்ல நிலையே அவர்களுடைய வாய்களைப் பேசும்படித் தூண்டுகிறது. (லூக்கா 6:45) இதனால், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நேரம் நாம் ஊழியத்தில் செலவிட்டாலும், நாம் செய்ய முடிந்த மிகச் சிறந்த நேரத்தை அது குறித்துக்காட்டினால், அது நல்லது, வெட்கப்படவேண்டிய காரியம் அல்ல. விதவையின் சிறு தொகை இயேசுவினாலும் அவருடைய பிதாவினாலும் முழுமையாகப் போற்றப்படவில்லையா?—லூக்கா 21:1-4.
14 வளர்ந்துவரும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையினருக்கு, தங்களுடைய வணக்கத்தில் முழு ஆத்துமாவோடிருப்பது, பயனியர்களாக சேவிப்பதை உட்படுத்துகிறது—கடந்த ஆண்டில் உச்சநிலை 8,90,231 பேர்! முந்தைய ஆண்டுகளின் அதிகரிப்பு தக்கவைக்கப்பட்டால், இந்த எண் பெரும்பாலும் 10,00,000-க்கும் மேலானதாக மாறும். பின்வரும் அனுபவம், நைஜீரியாவில் உள்ள ஒரு சகோதரி எப்படிப் பயனியராக சேவைச் செய்ய ஆரம்பித்தார் என்பதைக் காண்பிக்கிறது. அவர் எழுதுகிறார்: “நான் மேல்நிலைப் பள்ளியை முடிக்கப் போகும் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய பயனியர் பள்ளிக்கு ஆஜராயிருப்பவர்களுக்காகச் செய்யப்படும் சமையல் வேலையில் உதவிசெய்ய நான் போனேன். அங்கு நான் என் பாட்டியைவிட அதிக வயதான இரண்டு சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்கள் பயனியர்கள், பள்ளிக்கு ஆஜராக வந்திருக்கிறார்கள் என நான் அறியவந்தபோது, நான் எனக்குள்ளேயே இவ்வாறு சிந்திக்க ஆரம்பித்தேன், ‘அந்த இருவர் பயனியர் செய்ய முடிகிறதென்றால், நான் ஏன் செய்யக் கூடாது?’ எனவே பள்ளிபடிப்பை முடித்தவுடன் நானும் ஓர் ஒழுங்கான பயனியராக ஆனேன்.”
15. சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல் எந்த வழியில் மற்றவர்கள் யெகோவாவில் அடைக்கலம் புகுவதைக் கூடிய காரியமாக்கலாம்?
15 அனைவரும் பயனியர் செய்ய முடியாது, ஆனால் அவர்கள் சாட்சி கொடுக்கமுடியும். பெல்ஜியத்தில் 82 வயது சகோதரி இறைச்சி வாங்குவதற்காகக் கடைக்குப் போயிருந்தார். கறிக்கடைக்காரரின் மனைவி சமீபத்தில் நடந்த அரசியல் புரட்சிகளைக் குறித்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதை இந்தச் சகோதரி கவனித்தார். எனவே சகோதரி, யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? என்ற துண்டுப்பிரதியை, அவர் பணம் கொடுத்தபோது பண நோட்டுகளுடன் செருகி தந்தார். சகோதரி மறுபடியும் கடைக்கு வந்தபோது, கறிக்கடைக்காரரின் மனைவி, கொஞ்சம்கூட தயக்கமின்றி, ஒருவேளை வரும் மூன்றாவது உலக யுத்தத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கேட்டாள். சகோதரி அவளுக்காக, உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? என்ற புத்தகத்தைக் கொண்டுவந்தார். சில நாள்கள் கழித்து, அந்த முதிர்வயதான சகோதரி கறிக்கடைக்குள் நுழைந்தபோது, கறிக்கடைக்காரரின் மனைவி அதிகமான கேள்விகளை உடையவளாக இருந்தாள். இந்தப் பெண்ணிற்காகச் சகோதரி மனதுருகி, ஒரு பைபிள் படிப்பிற்கு வெறுமனே வாய்ப்பை அளித்தார், இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பொழுது, கறிக்கடைக்காரரின் மனைவி முழுக்காட்டுதல் எடுக்க விரும்புகிறாள். கறிக்கடைக்காரரைப் பற்றி என்ன? அவர் துண்டுப்பிரதியைப் படித்தார்; இப்பொழுது பைபிளையும் படித்துக்கொண்டு வருகிறார்.
‘நன்மையாகிய பொக்கிஷம்’
16. யெகோவா ஒரு நன்மையாகிய பொக்கிஷத்தைத் தம்முடைய மக்களுக்கு எவ்வாறு ஒதுக்கிவைத்திருக்கிறார்?
16 இந்த அழுத்தம் நிறைந்த கடைசி நாள்களில், யெகோவா தம்மிடத்தில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு ‘கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ண’வில்லையா? அன்பான, பாதுகாப்புதரும் ஒரு தந்தையைப்போல, யெகோவா தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகளுக்கு நன்மையாகிய பொக்கிஷத்தைத் தனியே வைத்திருக்கிறார். சங்கீதக்காரன் பின்வருமாறு சொல்கிறதுபோல, அவர்கள்மீது அவர் காண்போர் அனைவருக்கும் முன்பாகச் சந்தோஷத்தைப் பொழிந்துவருகிறார்: “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் [பொக்கிஷப்படுத்தி வைத்திருக்கிற, NW] உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”—சங்கீதம் 31:19, 21.
17-19. கானாவில், ஒரு முதிர் வயது மனிதர் தன்னுடைய திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கியது என்ன நன்மையில் முடிவடைந்தது?
17 எனவே, யெகோவாவை வணங்குவோரின் நேர்மைத்தன்மைக்கு கண்கண்ட சாட்சிகளாக உலக மக்கள் இருக்கிறார்கள், அதைக் கண்டு அவர்கள் வியப்படைகிறார்கள். எடுத்துக்காட்டாக, கானாவில் 96 வயது மனிதர், திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று தன்னுடைய 70 வருட கூடிவாழும் வாழ்க்கையை இப்போது பதிவுசெய்யவேண்டும் என்று கேட்டார். அந்தத் திருமணப் பதிவுசெய்யும் அதிகாரி திகைப்படைந்து கேட்டார்: “நிச்சயமாகவே அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் இந்த வயதில்?”
18 அந்த மனிதர் விளக்கினார்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். இந்த உலக முடிவிற்கு முன்பு மிக முக்கியமான வேலையாகிய கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் பங்குகொள்ள விரும்புகிறேன். இந்த வேலை நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. யெகோவாவின் சாட்சிகள் திருமணப் பதிவு சம்பந்தமான சட்டத்தையும் உட்படுத்தும் தங்கள் சொந்த தேசத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். எனவே, தயவுசெய்து எனக்குத் திருமணப் பதிவு செய்யுங்கள்.” அந்த அதிகாரியோ மலைப்பில் வாயடைத்துப்போய்விட்டார். பதிவைச் செய்துகொடுத்தார்; அந்த முதிர்வயதான மனிதர் இப்போது தான் சட்டப்படியான திருமணம் செய்துவிட்டார் என்று சந்தோஷமாகத் திரும்பிச்சென்றார்.—ரோமர் 12:2-ஐ ஒப்பிடுக.
19 அதற்குப் பின்பு, திருமணப் பதிவாளர் தான் கேட்ட விஷயங்களின்பேரில் தியானம்செய்தார். “யெகோவாவின் சாட்சிகள் . . . மிக முக்கியமான வேலை . . . உலக முடிவு . . . கடவுளுடைய ராஜ்யம் . . . நித்திய ஜீவன்.” ஒரு 96 வயது மனிதனுடைய வாழ்க்கையில் இதெல்லாம் எதை அர்த்தப்படுத்தியது என்று மலைத்துப் போனார். இந்த விஷயத்தை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளும் ஆவலில் சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்தார். ஒரு வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, விரைவான முன்னேற்றத்தைச் செய்தார். இன்று, இந்தத் திருமணப் பதிவாளர் ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறார். இவ்வாறு, மற்றவர்கள் சிறு விஷயங்கள் என்று கருதுகிற காரியங்களிலும் நாம் யெகோவாவிற்குக் கீழ்ப்படிந்திருந்தால், அது நமக்கும் நம்முடைய நடத்தையைக் கண்கூட பார்ப்பவர்களுக்கும் சொல்லொண்ணா நன்மையில் முடிவடையலாம்.—1 பேதுரு 2:12-ஐ ஒப்பிடவும்.
20. மயன்மாரில், ஓர் இளம் சகோதரியின் நேர்மைத்தன்மை எப்படி ஒரு நல்ல சாட்சிகொடுத்தலுக்கு வழிநடத்தியது?
20 நேர்மையான மக்களாகத் தங்களை வார்ப்பிப்பதற்குச் சத்தியத்தை அனுமதித்த முதிர்வயதினர், இந்த நேர்மையற்ற உலகிலுள்ள இளைஞருக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைக்கின்றனர். அப்படிப்பட்ட ஓர் இளம் சகோதரி மயன்மாரில் வசிக்கிறாள். அவள் பத்துப் பிள்ளைகளை உடைய ஏழ்மையும் தாழ்மையுமான ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். தந்தை, உதவி ஊதியம் பெறுபவர்; ஒழுங்கான பயனியராக இருக்கிறார். பள்ளியில் ஒரு நாள் இந்தச் சகோதரி வைர மோதிரத்தைக் கண்டுபிடித்தாள்; உடனே இவள் இதை தன்னுடைய ஆசிரியையிடம் கொண்டுபோய் கொடுத்தாள். வகுப்பு மறுநாள் கூடிவந்தபோது, மோதிரம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அது எப்படி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும்படி கொடுக்கப்பட்டது என்பதை ஆசிரியை வகுப்பிலுள்ளவர்களிடம் சொன்னார். பின்பு அவர் மற்ற பிள்ளைகள் ஒருவேளை மறைத்து வைத்துக்கொள்ள விரும்பியிருக்கலாம் என்பதை உணர்ந்தவராக, அந்த இளம் சகோதரியை முழு வகுப்பிற்கும் முன்பாக எழுந்து நிற்கச் சொல்லி, ஏன் அவள் இதைச் செய்தாள் என்பதை விளக்கும்படி கேட்டார். அந்தச் சகோதரி, அவள் ஒரு யெகோவாவின் சாட்சி என்றும், அவளுடைய கடவுள் திருடுவதை விரும்புவதில்லை அல்லது எந்தவொரு நேர்மையற்ற தன்மையையும் விரும்புவதில்லையென்றும் விளக்கினாள். முழு வகுப்பும் இதைக் கேட்டது; ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரே சமயத்தில் சாட்சி கொடுக்கும் நல்லவொரு வாய்ப்பை நம் இளம் சகோதரிக்கு இது கொடுத்தது.
21. இளைஞர் யெகோவாவில் நம்பிக்கை வைக்கையில், அவர்களுடைய நடத்தை எவ்வாறு அவர்மீது பிரதிபலிப்பைக் கொண்டிருக்கும்?
21 பெல்ஜியத்தில் ஓர் ஆசிரியர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய அக்கறையைத் தூண்டும் ஒரு குறிப்பை வகுப்பில் சொன்னார். தன்னுடைய மாணவர்களில் ஒருவரின் நடத்தையை அவர் கவனித்துவந்தார்; இவரும் ஓர் இளம் சகோதரிதான். ஆசிரியர் சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய வித்தியாசமான கருத்தை உடையவனாக இப்போது நான் இருக்கிறேன். அவர்கள் மிகக் குறைவான சகிப்புத்தன்மையுள்ளவர்கள் என்று நினைப்பதற்குத் தப்பெண்ணம் என்னை வழிநடத்தியது. அவர்களோ, தங்களுடைய நியமங்களை விட்டுக்கொடாதிருந்தாலும், மிக அதிகமான சகிப்புத்தன்மை உடையவர்கள் என்பதை நிரூபித்தனர்.” ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களால் பரிசு கொடுக்கப்படுகிறது. மற்றவையோடு ஒழுக்கத்திற்கென்று ஒரு பரிசு இருக்கிறது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு மூன்று மேலான தரங்களுக்கான பரிசுகள் இந்த ஆசிரியரால் யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டன. இப்படியாக, யெகோவாவை பற்றுமாறாமல் நம்புவோருக்கு அடிக்கடி நடக்கிறது.—சங்கீதம் 31:23.
22. சங்கீதம் 31-ன் வெற்றிகரமான முடிவு என்னவாக இருக்கிறது, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் இறுதி நாள்களில் அது நமக்கு எப்படி உதவிசெய்கிறது?
22 சங்கீதம் 31 வெற்றிகரமான முடிவுரையை இவ்வாறு தெளிவாகவே ஒலிக்கிறது: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.” (சங்கீதம் 31:24) எனவே, சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறையின் இறுதி நாள்களை நாம் நெருங்குகையில், நம்மை விட்டு தூரமாக விலகிப்போவதற்குப் பதிலாக யெகோவா நம்மிடம் அதிகமதிகமாக நெருங்கி வந்து, அவருடைய சொந்த வல்லமையை நமக்குக் கொடுப்பார். யெகோவா உண்மையுள்ளவர், என்றும் தோல்வியடைவதில்லை. அவரே நம் அடைக்கலம்; அவரே நம் அரண்.—நீதிமொழிகள் 18:10.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஏன் நம்பிக்கையோடு நாம் யெகோவாவை நம் அடைக்கலமாக்கலாம்?
◻ பலத்த பாடகர்குழு ராஜ்ய துதியைத் தைரியத்தோடு பாடுகிறது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?
◻ சாத்தானுடைய வலை யெகோவாவின் மக்களை சிக்கவைக்க முடியாது என்று நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
◻ யெகோவா தம்மிடத்தில் அடைக்கலம் புகுவோருக்கு என்ன பொக்கிஷத்தை ஒதுக்கிவைத்திருக்கிறார்?
14. பயனியர் வேலையைக் குறித்து என்ன குறிப்புகளை நீங்கள் சொல்லலாம்? (அட்டவணையைப் பார்க்கவும்.)
[பக்கம் 12-15-ன் வரைப்படம்]
உலகலாவிய யெகோவாவின் சாட்சிகளின் 1993 ஊழிய ஆண்டின் அறிக்கை
(See printed magazine)
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
யெகோவாவில் அடைக்கலம் புகுபவர்கள் ராஜ்ய பிரஸ்தாபிகளின் ஒரு பலத்த பாடகர்குழுவை உருவாக்குகிறார்கள்—47,09,889 வலிமையானோர்!
1. செனிகல்
2. பிரேஸில்
3. சிலி
4. பொலிவியா