எப்போதும் உங்கள் பாரத்தை யெகோவாவின்மேல் போட்டுவிடுங்கள்
பாரங்களால் நொறுக்கப்படுவோராக இன்று பலர் உணருகின்றனர். பொருளாதார நெருக்கடிகள், வருத்தம் தரும் குடும்பப் பிரச்சினைகள், உடல்நலப் பிரச்சினைகள், ஒடுக்கப்படுவதன் மற்றும் கொடுமைப்படுத்தப்படுவதன் காரணமாக அனுபவிக்கும் வேதனையும் துன்பமும், இன்னும் மிகுதியான மற்ற இன்னல்களும் அவர்களுடைய கழுத்துகளில் யந்திர கற்கள் தொங்குவதுபோல் இருக்கின்றன. இந்தப் புறம்பான நெருக்கடிகள் மட்டுமல்லாமல், சிலர், தங்கள் சொந்த அபூரணங்களின் காரணமாக, தாங்கள் பயனற்றவர்கள் மற்றும் தோல்வியுறுபவர்கள் என்ற மனப்பாங்கால் சோர்வில் ஆழ்த்தப்படுவோராகவும் உணருகின்றனர். இந்தப் போராட்டத்தை முற்றிலுமாக விட்டு விலகிவிடும்படியான சோதனைக்குப் பலர் ஆளாகின்றனர். பாரங்கள் தாங்கமுடியாதவையாகத் தோன்றுகையில் அவற்றை நீங்கள் எவ்வாறு கையாளலாம்?
நெருக்கடி தாங்கமுடியாத நிலையை எட்டிவிட்டதுபோல், இஸ்ரவேலின் அரசர் தாவீது ஒரு சமயத்தில் உணர்ந்தார். சங்கீதம் 55-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, அவர் தன்னுடைய சத்துருக்களால் உண்டான நெருக்கடிகளாலும் பகைமையினாலும் கவலையுற்றவராக மிகுதியாய் மனக்கலக்கமடைந்தார். கடும் இருதய வேதனையையும் பயத்தையும் உணர்ந்தார். தன் துயரத்தில் அவர் கலங்கி பெருமூச்சுவிட மட்டுமே முடிந்தது. (சங்கீதம் 55:2, 5, 17, தி.மொ.) எனினும், தன் எல்லா துயரங்களின் மத்தியிலும், அவற்றைச் சமாளிப்பதற்கான ஒரு வழியை அவர் கண்டடைந்தார். எவ்வாறு? ஆதரவுக்காகத் தன் கடவுளிடம் அவர் நோக்கினார். அவர் உணர்ந்ததுபோல் உணரும் மற்றவர்களுக்கு அவருடைய அறிவுரை இதுவே: “உன் பாரத்தை யெகோவாவின்மீதுதானே போட்டுவிடு.”—சங்கீதம் 55:22, NW.
“உன் பாரத்தை யெகோவாவின்மீதுதானே போட்டுவிடு” என்பதால் அவர் பொருள்கொண்டது என்ன? ஜெபத்தில் யெகோவாவிடம் சென்று நம்முடைய கவலையை அவரிடம் சொல்வதை மாத்திரமே இது குறிக்கிறதா? அல்லது அந்த நிலைமையைத் தணிப்பதற்கு உதவும் எதையாவது நாம்தாமே செய்ய முடியுமா? யெகோவாவை அணுகுவதற்கு மிகத் தகாதவர்களாக நாம் உணர்ந்தால் என்ன செய்வது? தாவீது அந்த வார்த்தைகளை எழுதினபோது, அவர் தெளிவாய் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கக்கூடிய சில அனுபவங்களைக் கவனிப்பதன்மூலம் தாவீது கருதினதை நாம் கண்டுபிடிக்கலாம்.
காரியங்களை யெகோவாவின் பலத்தில் செய்யுங்கள்
இஸ்ரவேலின் போர்வீரருடைய இருதயங்களில் கோலியாத் எத்தகைய பயத்தை உண்டாக்கினான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இரண்டு மீட்டருக்கு மேற்பட்ட உயரமானவனாக இருந்த இந்த இராட்சத மனிதன், அவர்களைத் திகிலடையச் செய்தான். (1 சாமுவேல் 17:4-11, 24) ஆனால் தாவீது பயப்படவில்லை. ஏன்? ஏனெனில் அவர் தன் சொந்த பலத்தில் கோலியாத்தைக் கையாள முயற்சி செய்யவில்லை. இஸ்ரவேலின் எதிர்கால அரசராக அவர் அபிஷேகம் செய்யப்பட்ட சமயத்திலிருந்து, அவர் செய்த எல்லாவற்றிலும் கடவுளுடைய ஆவி அவரை வழிநடத்தவும் பலப்படுத்தவும் அனுமதித்திருந்தார். (1 சாமுவேல் 16:13) ஆகவே அவர் கோலியாத்தை நோக்கி இவ்வாறு சொன்னார்: “நானோ நீ அவமானமாய்ப் பேசின இஸ்ரவேலருடைய அணிகளின் கடவுளாகிய சேனைகளின் யெகோவாவினுடைய திருநாமத்திலே உன்னிடம் வருகிறேன். இன்றையதினமே யெகோவா உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்.” (1 சாமுவேல் 17:45, 46, தி.மொ.) கவண் எறிவதில் தாவீது தனித் திறமைவாய்ந்தவராக இருந்தார், ஆனால் கோலியாத்தின்மீது அவர் எறிந்த கல்லை, யெகோவாவின் பரிசுத்த ஆவி விசைப்படுத்தி கொல்வதற்கேதுவாக இயக்கினதென்று நாம் நிச்சயமாயிருக்கலாம்.—1 சாமுவேல் 17:48-51.
தாவீது, தன்னை கடவுள் ஆதரித்து பலப்படுத்துவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த மிகப் பெரிய சவாலை சமாளித்து, வெற்றியடைந்தவராக வெளிவந்தார். கடவுளுடன் நம்பிக்கையுறுதியுள்ள நல்ல உறவை அவர் வளர்த்திருந்தார். இதற்கு முன்னதாக யெகோவா அவரை விடுவித்திருந்த முறையால் இது சந்தேகமில்லாமல் பலப்படுத்தப்பட்டது. (1 சாமுவேல் 17:34-37) தாவீதைப்போல், நீங்களும் யெகோவாவுடன் உறுதியான தனிப்பட்ட உறவை விடாது காத்து, எல்லா சூழ்நிலைமைகளிலும் உங்களைப் பலப்படுத்துவதற்கும் ஆதரித்துத் தாங்குவதற்கும் அவர் வல்லமையுள்ளவராகவும் மனமுள்ளவராகவும் இருப்பதில் முழுமையான நம்பிக்கையுடையோராக இருக்கலாம்.—சங்கீதம் 34:7, 8.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உங்களால் கூடியதைச் செய்யுங்கள்
எனினும் இது, கடுமையான வேதனையோ, கவலையோ, பயமோ ஏற்படும் சமயங்கள் ஒருபோதும் இரா என்று பொருள்படுகிறதில்லை. சங்கீதம் 55 இதைத் தெளிவாகக் காட்டுகிறது. உதாரணமாக, தாவீது, பயமில்லாமல், யெகோவாவில் திடநம்பிக்கையை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினதன் சில ஆண்டுகளுக்குப் பின், தன் சத்துருக்களுக்கெதிரில் மிகுந்த பயத்தை அனுபவித்தார். அரசனாகிய சவுலின் தயவை அவர் இழந்து, தன் உயிருக்காகத் தப்பியோட வேண்டியிருந்தது. தாவீதுக்கு இது உண்டாக்கியிருக்கக்கூடிய உணர்ச்சி சம்பந்தப்பட்ட சஞ்சலத்தையும், யெகோவாவினுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தைப் பற்றி அவருடைய மனதில் எழுப்பியிருக்கக்கூடிய கேள்விகளையும் கற்பனைசெய்து காண முயற்சி செய்யுங்கள். இஸ்ரவேலில் எதிர்கால அரசராக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாரே, எனினும் இங்கே அவர் வனாந்தரத்தில் அகதியாக வாழ வேண்டியிருந்தது, காட்டு மிருகத்தைப்போல் வேட்டையாடப்பட்டார். கோலியாத்தின் தாயக பட்டணமாகிய காத்தில் அடைக்கலம் கண்டடைய அவர் முயற்சி செய்தபோது, அவர் யாரென அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார். இதன் விளைவென்ன? அவர் ‘மிகவும் பயப்பட்டார்’ என்று பதிவு சொல்கிறது.—1 சாமுவேல் 21:10-12.
ஆனால், தன் பயமும் உள்ளாழத்தின் கவலையும், உதவிக்காக யெகோவாவிடம் நோக்குவதை நிறுத்திவிட அவர் அனுமதிக்கவில்லை. (இந்த அனுபவத்தின் பலனாக எழுதப்பட்ட) சங்கீதம் 34-ன்படி, தாவீது இவ்வாறு சொன்னார்: “நான் யெகோவாவைத் தேடினேன்; அவர் எனக்கு மறுமொழி கொடுத்து என் எல்லாப் பயத்தினின்றும் என்னை விடுவித்தார். இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டருளி அவனுடைய சகல இடுக்கண்களினின்றும் அவனை விடுவித்து ரட்சித்தார்.”—சங்கீதம் 34:4, 6, தி.மொ.
நிச்சயமாகவே யெகோவா அவரை ஆதரித்தார். எனினும் தாவீது, யெகோவா தன்னைத் தப்புவிக்கும்படி தான் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து காத்துக்கொண்டில்லை என்பதைக் கவனியுங்கள். அந்த இக்கட்டான நிலைமையிலிருந்து வெளியேறுவதற்கு, அந்தச் சூழ்நிலைமைகளின்கீழ் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வதற்கான அவசியத்தை அவர் உணர்ந்தார். தான் விடுவிக்கப்பட்டதில் யெகோவாவின் கரம் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அவர்தாமே நடவடிக்கை எடுத்தார்; பைத்தியக்காரனைப்போல் நடித்ததால் காத்தின் அரசன் அவரைக் கொல்லவில்லை. (1 சாமுவேல் 21:14–22:1) நம்மை விடுவிக்கும்படி யெகோவாவுக்காக வெறுமனே காத்திருப்பதற்கு மாறாக, பாரங்களைச் சமாளிப்பதற்கு நம்மால் இயலும் எல்லாவற்றையும் நாமும் செய்வது அவசியம்.—யாக்கோபு 1:5, 6; 2:26.
உங்கள் பாரங்களோடு மேலும் கூட்டாதீர்கள்
பின்னால் தன் வாழ்க்கையில் தாவீது, மற்றொரு பாடத்தை, வேதனையான ஒன்றைக் கற்றார். அது என்ன? சில சமயங்களில் நம்முடைய பாரங்களோடு நாம் மேலும் கூட்டுகிறோம் என்பதாகும். பெலிஸ்தரின்மீது வெற்றியடைந்ததற்குப் பின்பு, தாவீது, உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தீர்மானித்தபோது காரியங்கள் அவருக்கு தவறான முறையில் சென்றன. சரித்திரப்பூர்வ விவரம் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் [தாவீதும்] அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய், தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, . . . கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.”—2 சாமுவேல் 6:2, 3.
அந்தப் பெட்டியைக் கொண்டுசெல்வதற்கு ஒரு இரதத்தைப் பயன்படுத்தினதானது, அதைக் குறித்து யெகோவா கொடுத்திருந்த எல்லா கட்டளைகளையும் மீறினதாக இருந்தது. அந்தப் பெட்டியைச் சுமப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட ஒரே ஜனத்தொகுதியான கோகாத் வம்ச லேவியர், அந்தப் பெட்டியோடு விசேஷமாய் அமைக்கப்பட்டிருந்த வளையங்களுக்குள் சொருகப்பட்ட தண்டுகளைப் பயன்படுத்தி, அதைத் தங்கள் தோள்களின்மீது சுமந்து செல்ல வேண்டுமென்று தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. (யாத்திராகமம் 25:13, 14; எண்ணாகமம் 4:15, 19; 7:7-9) இந்தக் கட்டளைகளைக் கவனியாமல் விட்டது துயரநிகழ்ச்சி ஏற்பட செய்தது. அந்த இரதத்தை இழுத்துச் சென்ற மாடுகள், அந்தப் பெட்டி விழவிருந்த நிலைக்குத் தடுமாற செய்தபோது, பெரும்பாலும் லேவியனாக இருந்த, ஆனால் நிச்சயமாகவே ஆசாரியனாக இராத ஊசா தன் கையை நீட்டி அதைப் பிடித்தான். அவனுடைய அந்த மதிப்பற்ற செயலினிமித்தம் யெகோவாவால் அடித்து வீழ்த்தப்பட்டான்.—2 சாமுவேல் 6:6, 7.
அரசராக தாவீது இதற்கு ஓரளவு பொறுப்பைத் தாங்க வேண்டியவராக இருந்தார். அவருடைய பிரதிபலிப்பானது, யெகோவாவுடன் நல்ல உறவுடையோராக இருப்போரும்கூட, இக்கட்டான சந்தர்ப்பங்களின்போது, சில சமயங்களில் தவறான முறையில் நடந்துவிடக்கூடுமெனக் காட்டுகிறது. முதலாவதாக, தாவீது கோபமடைந்தார். பின்பு அவருக்குப் பயமுண்டாகியது. (2 சாமுவேல் 6:8, 9, NW) யெகோவாவுடன் அவருக்கிருந்த நம்பிக்கையான உறவு கடுமையாகச் சோதிக்கப்பட்டது. யெகோவாவின் கட்டளைகளை அவர் பின்பற்றாதபோது, தன் பாரத்தை யெகோவாவின்மீது போடத் தவறினதாகத் தோன்றின ஒரு சந்தர்ப்பமாக இது இருந்தது. நம்மைக் குறித்ததில் சில சமயங்கள் நிலைமை இவ்வாறு இருந்திருக்கலாமா? யெகோவாவின் கட்டளைகளை நாம் கவனியாமல் விட்டதனால் விளைவுற்ற பிரச்சினைகளுக்காக எப்போதாவது யெகோவாவை நாம் குற்றங்கூறுகிறோமா?—நீதிமொழிகள் 19:3.
குற்றப் பொறுப்புணர்ச்சியின் பாரத்தைச் சமாளித்தல்
பிற்பாடு, தாவீது, யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களுக்கு எதிராகத் தீங்கான முறையில் பாவம் செய்ததால் பெரும் குற்றப் பொறுப்புணர்ச்சியின் பாரத்தைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் தாவீது, போரில் தன் ஆட்களுக்கு முன்சென்று வழிநடத்த வேண்டிய தன் பொறுப்பை நிறைவேற்றாமல் விட்டிருந்தார். அவர்கள் போரிட சென்றிருந்தபோது அவர் எருசலேமில் தங்கியிருந்தார். இது வினைமையான தொந்தரவுக்கு வழிநடத்தினது.—2 சாமுவேல் 11:1.
அழகிய பத்சேபாள் குளித்துக்கொண்டிருந்ததை அரசன் தாவீது கண்டார். அவளுடன் அவர் ஒழுக்கக்கேட்டு முறையில் ஈடுபட்டார், அவள் கர்ப்பம் தரித்தாள். (2 சாமுவேல் 11:2-5) இந்தத் தவறான நடத்தையை மறைப்பதற்கு முயற்சி செய்து, அவளுடைய கணவனான உரியாவை, போர்க்களத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பிவரும்படி ஏற்பாடு செய்தார். இஸ்ரவேல் போரில் ஈடுபட்டிருக்கையில், தன் மனைவியோடு கணவனுக்குரிய உறவுகளில் ஈடுபட உரியா மறுத்துவிட்டார். (2 சாமுவேல் 11:6-11) தாவீது தன் பாவத்தை மறைப்பதற்கு இப்போது, பொல்லாத வஞ்சகமான வழிவகையை மேற்கொண்டார். உரியாவின் உடனிணைந்த போர்ச்சேவகர்கள், அவர் கொல்லப்படும்படி, போரில் கடும் தாக்குதல் நடக்கும் இடத்தில் அவரை நிறுத்திவிட்டு பின்வாங்கிவிடும்படி ஏற்பாடு செய்தார். கடும்கொடிய, தீங்கான ஒரு பாவம்!—2 சாமுவேல் 11:12-17.
முடிவில், நிச்சயமாகவே, தாவீதின் பாவம் அவரைக் கணக்கு ஒப்புவிக்கும்படி செய்தது, அவர் பாவம் வெளிப்படுத்தப்பட்டது. (2 சாமுவேல் 12:7-12) தன்னுடைய காமத்தின் விளைவாகத் தான் செய்த பெரும் குற்றத்தைத் தாவீது உணர்ந்தபோது, எத்தகைய மனவேதனையையும் குற்றப் பொறுப்புணர்ச்சியையும் அனுபவித்திருப்பாரென்பதை கற்பனைசெய்து பாருங்கள். முக்கியமாய் அவர், உணர்ச்சிவசப்பட்டவராகவும், எளிதில் புண்படத்தக்க மனிதராகவும் இருந்ததனால், தன் சொந்த தோல்வி உணர்வால் சமாளிக்க முடியாத அளவில் ஆழ்த்தப்பட்டிருக்கக்கூடும். தான் முற்றிலும் பயனற்றவரென்பதாக அவர் பெரும்பாலும் உணர்ந்திருக்கலாம்!
எனினும், தாவீது விரைவில் தன் தவறை ஒப்புக்கொண்டு, தீர்க்கதரிசியாகிய நாத்தானிடம்: “நான் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என்று கூறினார். (2 சாமுவேல் 12:13, NW) அவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதையும், தன்னைச் சுத்திகரித்து தனக்கு மன்னிக்கும்படி யெகோவா தேவனிடம் எவ்வாறு கெஞ்சி மன்றாடினார் என்பதையும் 51-ம் சங்கீதம் நமக்குச் சொல்கிறது. பின்வருமாறு அவர் ஜெபித்தார்: “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.” (சங்கீதம் 51:2, 3) அவர் உண்மையில் மனந்திரும்பினதால், யெகோவாவுடன் தன் உறுதியான, நெருங்கிய உறவைத் திரும்பக் கட்டியெழுப்ப முடிந்தது. தாவீது மனவேதனையான மற்றும் பயனற்றவரென்ற உணர்ச்சிகளின்பேரில் நினைவை ஊன்றவைத்துக்கொண்டிருக்கவில்லை. தன் குற்றத்தை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டு, உண்மையான மனந்திரும்புதலைக் காட்டி, யெகோவாவின் மன்னிப்புக்காக வேண்டி ஊக்கமாக ஜெபித்ததன் மூலம், தன் பாரத்தை யெகோவாவின்மீது போட்டுவிட்டார். கடவுளுடைய தயவை அவர் திரும்பவும் பெற்றார்.—சங்கீதம் 51:7-12, 15-19.
நம்பிக்கைத்துரோகத்தைச் சமாளித்தல்
இது, 55-ம் சங்கீதத்தை தாவீது எழுதும்படி அவரைத் தூண்டுவித்த சம்பவத்திற்கு நம்மைக் கொண்டுவருகிறது. அவர் மிகுந்த உணர்ச்சிவச நெருக்கடிக்கு ஆட்பட்டவராக இருந்தார். “என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது,” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 55:4) எது இந்த வியாகுலத்தை உண்டாக்கியது? தாவீதின் குமாரனாகிய அப்சலோம், தாவீதினிடமிருந்து அரசபதவியைக் களவாடிக்கொள்ள சதி செய்திருந்தான். (2 சாமுவேல் 15:1-6) தன் சொந்த குமாரன் நம்பிக்கைத்துரோகம் செய்ததானது தாங்குவதற்குக் கடினமாக இருந்தது. ஆனால் அதை மிக அதிக மோசமாக்கினது என்னவெனில், அகித்தோப்பேல் என்ற பெயர் கொண்ட ஒருவனாகிய தாவீதின் மிக நம்பகமான ஆலோசனைக்காரன் தாவீதுக்கு விரோதமான அந்தச் சதியில் சேர்ந்துகொண்டதாகும். அகித்தோப்பேலையே சங்கீதம் 55:12-14-ல் தாவீது விவரிக்கிறார். இந்தச் சதியின் மற்றும் நம்பிக்கைத்துரோகத்தின் விளைவாக, தாவீது எருசலேமைவிட்டு தப்பியோட வேண்டியதாக இருந்தது. (2 சாமுவேல் 15:13, 14) இது எத்தகைய மனவேதனையை அவருக்கு உண்டாக்கியிருக்க வேண்டும்!
இருப்பினும், அவருடைய கடும் உணர்ச்சிவேகமும் துயரமும் யெகோவாவில் அவருக்கிருந்த திட நம்பிக்கையைக் குறைப்பதற்கு அவர் அனுமதிக்கவில்லை. சதிசெய்தவர்களின் திட்டங்களைக் குலைத்துப் போடும்படி யெகோவாவிடம் ஜெபித்தார். (2 சாமுவேல் 15:30, 31) எல்லா வேலையையும் யெகோவாவே செய்வதற்காக தாவீது வெறுமனே காத்துக்கொண்டிருக்கவில்லை என்று நாம் மறுபடியும் காண்கிறோம். வாய்ப்பு கிடைத்தவுடன், தனக்கு விரோதமாக செய்யப்பட்ட அந்தச் சதியை எதிர்த்துப் போராடுவதற்கு, தன்னால் இயன்றதைச் செய்தார். அவருடைய ஆலோசனைக்காரரில் மற்றொருவரான ஊசாயை, அந்தச் சதியைச் சேர்ந்துகொண்டவர்போல் நடித்து, உண்மையில் அதைக் குலைத்துப் போடும்படி திரும்பவும் எருசலேமுக்கு அனுப்பினார். (2 சாமுவேல் 15:32-34) யெகோவாவின் ஆதரவுடன் இந்தத் திட்டம் நிறைவேறிற்று. தாவீது தற்காப்புக்காக ஆட்களைத் திரும்ப வகுத்து ஒழுங்குபடுத்தி தப்புவதற்குப் போதிய நேரம் இருக்கும்படி ஊசாய் அப்சலோமைத் தாமதப்படுத்தினார்.—2 சாமுவேல் 17:14.
தாவீது தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் பாதுகாப்பான கவனிப்பையும் அதோடு அவருடைய பொறுமையையும் மன்னிக்கும் மனமுள்ளவராக அவர் இருப்பதையும் எவ்வளவாக மதித்துணர்ந்திருக்க வேண்டும்! (சங்கீதம் 34:18, 19; 51:17) இந்தப் பின் சூழமைவுடன் தாவீது, நம்முடைய துயர காலங்களில் உதவிக்காக யெகோவாவிடம் திரும்பி, ‘நம் பாரத்தை யெகோவாவின்மீது போட்டுவிடும்படி’ நம்பிக்கையுடன் நம்மை ஊக்குவிக்கிறார்.—1 பேதுரு 5:6, 7, NW.
யெகோவாவுடன் உறுதியான, நம்பிக்கைகொண்ட உறவை கட்டியெழுப்பி, காத்து வாருங்கள்
யெகோவாவுடன் தாவீது கொண்டிருந்த வகையான உறவாகிய, பெரும் சோதனையும் உபத்திரவமும் நிறைந்த காலங்களில் தாவீதைத் தாங்கி காத்துவந்த ஓர் உறவை நாம் எவ்வாறு அடைகிறோம்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஊக்கத்துடனும் படிப்போராக இருப்பதன்மூலம் அத்தகைய ஓர் உறவை நாம் கட்டியெழுப்புகிறோம். அவருடைய சட்டங்களையும், நியமங்களையும், ஆளுமையையும் பற்றி அவர் நமக்குப் போதிக்க இடமளிக்கிறோம். (சங்கீதம் 19:7-11) கடவுளுடைய வார்த்தையின்பேரில் நாம் தியானித்து வருகையில், அவரிடமாக நாம் படிப்படியாக என்றும் நெருங்கிக்கொண்டும், முழுமையாக அவரில் நம்பிக்கை வைக்கக் கற்றுக்கொண்டும் வருகிறோம். (சங்கீதம் 143:1-5) யெகோவாவால் மேலும் போதிக்கப்படும்படி உடன் வணக்கத்தாருடன் நாம் கூட்டுறவு கொள்கையில் அந்த உறவை நாம் ஆழமாக்கி பலப்படுத்துகிறோம். (சங்கீதம் 122:1-4) இருதயப்பூர்வமான ஜெபத்தின் மூலம் யெகோவாவுடன் நம் உறவை நாம் மேலும் நெருங்கியதாக்குகிறோம்.—சங்கீதம் 55:1.
உண்மைதான், யெகோவாவுடன் தாவீதுடைய உறவு அது இருந்திருக்க வேண்டிய அளவுக்கு உறுதியானதாக இல்லாதபோது, நம்மைப்போல் அவர் சோர்வுற்ற சமயங்கள் இருந்தன. ஒடுக்கப்படுதல் நம்மை ‘பைத்தியக்காரர் போல்’ நடக்கச் செய்யலாம். (பிரசங்கி 7:7) ஆனால் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை யெகோவா காண்கிறார், நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறதென்பதையும் அவர் அறிந்திருக்கிறார். (பிரசங்கி 4:1; 5:8) யெகோவாவுடன் நம் உறவை உறுதியாக வைத்துக்கொள்ள நாம் கடினமாக உழைக்க வேண்டும். அப்போது, எத்தகைய பாரங்களை நாம் சுமக்க வேண்டியதாக இருந்தாலும், அந்த நெருக்கடியைத் தணிப்பதற்கு அல்லது நம்முடைய நிலைமையைச் சமாளிக்க நமக்கு பலன் அளிப்பதற்கு நாம் யெகோவாவின்மீது சார்ந்திருக்கலாம். (பிலிப்பியர் 4:6, 7, 13) இது யெகோவாவிடம் நாம் நெருங்கியிருந்துகொண்டிருக்கும் ஒரு காரியமாக உள்ளது. தாவீது இதைச் செய்தபோது, அவர் முற்றிலுமாகப் பாதுகாப்பில் இருந்தார்.
ஆகையால், உங்கள் சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும், எப்போதும் உங்கள் பாரத்தை யெகோவாவின்மீது போட்டுவிடுங்கள் என்று தாவீது சொல்கிறார். அப்போது இந்த வாக்கின் உண்மையை நாம் அனுபவிப்போம்: “அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”—சங்கீதம் 55:22.