யெகோவாவுக்குப் பயந்து வாழ்வில் மகிழ்ச்சி காணுங்கள்
“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.”—சங்கீதம் 34:9.
1, 2. (அ) என்ன இரண்டு முரண்பட்ட விதங்களில் கடவுள் பயத்தைப்பற்றி கிறிஸ்தவமண்டலம் போதிக்கிறது? (ஆ) நாம் இப்போது என்ன கேள்விகளைக் கலந்தாராய்வோம்?
பாவிகளைக் கடவுள் நரக அக்கினியில் என்றென்றுமாக வதைப்பார் என்ற போதனையின் அடிப்படையில்தான் கடவுள் பயத்தைப்பற்றி பெரும்பாலும் கிறிஸ்தவமண்டல போதகர்கள் கற்பிக்கிறார்கள். இது வேதப்பூர்வமற்ற போதனை. இது யெகோவாவைப்பற்றி பைபிள் கற்பிப்பதற்கு முரணாக இருக்கிறது; ஏனெனில் அவர் அன்பான, நீதியான கடவுள் என்று பைபிள் போதிக்கிறது. (ஆதியாகமம் 3:19; உபாகமம் 32:4; ரோமர் 6:23; 1 யோவான் 4:8) கிறிஸ்தவமண்டலத்திலுள்ள இன்னும் சில போதகர்கள் முற்றிலும் நேர்மாறான கருத்தைப் போதிக்கிறார்கள். அதாவது, கடவுள் பயத்தைப்பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. அதற்குப் பதிலாக, நாம் என்ன தவறு செய்தாலும் கடவுள் கண்டுகொள்ள மாட்டார், ஒருவர் எப்படி வாழ்ந்தாலும் கடவுள் அவரை ஏற்றுக்கொள்வார் என்று அவர்கள் போதிக்கிறார்கள். இதுவும்கூட பைபிளுக்கு முரணாகவே இருக்கிறது.—கலாத்தியர் 5:19-21.
2 உண்மையில், கடவுளுக்குப் பயப்படும்படி பைபிள் நம்மை ஊக்கப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 14:7) இந்த உண்மை சில கேள்விகளை எழுப்புகிறது. அன்பான கடவுள் தமக்குப் பயப்பட வேண்டுமென்று நம்மிடம் ஏன் எதிர்பார்க்கிறார்? எப்படிப்பட்ட பயத்தை கடவுள் எதிர்பார்க்கிறார்? கடவுளுக்குப் பயப்படுவது நமக்கு எப்படி நன்மை அளிக்கும்? 34-ஆம் சங்கீதத்தைத் தொடர்ந்து கலந்தாராய்கையில் இக்கேள்விகளை நாம் சிந்திக்கலாம்.
கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்?
3. (அ) கடவுளுக்குப் பயப்பட வேண்டும் என்ற கட்டளையைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (ஆ) கடவுளுக்குப் பயப்படுவோர் ஏன் சந்தோஷமுள்ளவர்கள்?
3 யெகோவா படைப்பாளராகவும், சர்வலோகத்தின் உன்னத ஆட்சியாளராகவும் இருப்பதால் நாம் அவருக்குப் பயப்படுவது தகுந்ததே. (1 பேதுரு 2:17) என்றாலும், இது கொடூரமான தெய்வத்தைப் பார்த்து நடுங்குவதைப் போன்ற பயமல்ல. மாறாக, இது யெகோவாவின் ஸ்தானத்தைப் புரிந்துகொள்வதால் ஏற்படும் ஆழ்ந்த பயபக்தி. அதோடு, அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் ஆகும். கடவுள் பயம் உன்னதமானது, உற்சாகமூட்டக்கூடியது; சோர்வூட்டுவதோ, நடுங்க வைப்பதோ அல்ல. ‘நித்தியானந்த தேவனான’ யெகோவா தம்முடைய மனித சிருஷ்டிகள் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) அதற்கு, நாம் கடவுளுடைய நெறிமுறைகளுக்கு இசைய வாழ வேண்டும். இதற்காக, அநேகர் தங்கள் வாழ்க்கைமுறையையே மாற்றியமைக்க வேண்டியிருக்கும். இப்படித் தேவையான மாற்றங்களைச் செய்கிற அனைவரும் சங்கீதக்காரனாகிய தாவீதின் பின்வரும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை உணர்ந்துகொள்கிறார்கள்: “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.” (சங்கீதம் 34:8, 9) யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் நிரந்தரமான நன்மையைத் தரும் எதையும் இழக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் கடவுளுடன் நல்ல உறவை அனுபவிக்கிறார்கள்.
4. தாவீதும் இயேசுவும் என்ன உறுதி அளித்தார்கள்?
4 தாவீது தன் ஆட்களை ‘பரிசுத்தவான்கள்’ என்று அழைப்பதன் மூலம் அவர்களைக் கனப்படுத்தியதைக் கவனியுங்கள். அப்படி அழைத்தது பொருத்தமானதாய் இருந்தது. ஏனெனில், அவர்கள் கடவுளுடைய பரிசுத்த தேசத்தின் அங்கத்தினர்களாய் இருந்தார்கள். அதோடு, தாவீதைப் பின்பற்றுவதற்காக தங்கள் உயிரையே அவர்கள் பணயம் வைத்திருந்தார்கள். சவுல் ராஜாவிடமிருந்து அவர்கள் தப்பியோடிக் கொண்டிருந்தபோதிலும், யெகோவா தங்களுக்குத் தேவையானவற்றைத் தவறாமல் அளிப்பார் என்பதில் தாவீது நம்பிக்கையோடு இருந்தார். அவர் பின்வருமாறு எழுதினார்: “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.” (சங்கீதம் 34:10) இதேபோன்ற உறுதியை இயேசுவும் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்தார்.—மத்தேயு 6:33.
5. (அ) இயேசுவைப் பின்பற்றியவர்களில் அநேகர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்கள்? (ஆ) பயம் சம்பந்தமாக இயேசு என்ன ஆலோசனை கொடுத்தார்?
5 இயேசுவுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களில் அநேகர் ஏழ்மை நிலையிலிருந்த சாதாரண யூதர்களே. “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால்,” இயேசு ‘அவர்கள்மேல் மனதுருகினார்.’ (மத்தேயு 9:36) இப்படிப்பட்ட சாமானியர்களுக்கு இயேசுவைப் பின்பற்ற தைரியம் இருந்திருக்குமா? அவரைப் பின்பற்றுவதற்கு, மனிதர்களுக்குப் பயப்படுவதற்குப் பதிலாக, யெகோவாவிடம் அவர்கள் பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இயேசு பின்வருமாறு சொன்னார்: “சரீரத்தைக் கொலை செய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்பட வேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே [கெஹென்னாவிலே] தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”—லூக்கா 12:4-7.
6. (அ) இயேசுவின் எந்த வார்த்தைகள் கிறிஸ்தவர்களைப் பலப்படுத்தியிருக்கின்றன? (ஆ) கடவுள் பயத்தை வெளிக்காட்டுவதில் இயேசுவே தலைசிறந்தவர் என்று நாம் ஏன் சொல்கிறோம்?
6 யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்தும்படி தங்களை எதிரிகள் நெருக்குகிறபோது, அவருக்குப் பயப்படுவோர் இயேசு கொடுத்த பின்வரும் ஆலோசனையை மனதில் வைக்கிறார்கள்: “மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.” (லூக்கா 12:8, 9) இந்த வார்த்தைகள் கிறிஸ்தவர்களை, முக்கியமாக, உண்மை வணக்கம் தடைசெய்யப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களைப் பலப்படுத்தியிருக்கின்றன. அவர்கள் விவேகத்துடன் கிறிஸ்தவக் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் யெகோவாவைத் துதித்து வருகிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) ‘கடவுள் பயத்தை’ வெளிக்காட்டுவதில் இயேசுவே தலைசிறந்தவராய் இருக்கிறார். (எபிரெயர் 5:7, NW) அவரைக் குறித்து பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது: ‘கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்.’ (ஏசாயா 11:2, 3) ஆகவே, கடவுள் பயத்தினால் வரும் நன்மைகளை நமக்குப் போதிக்க இயேசுவே முழுக்க முழுக்க தகுதி பெற்றவர்.
7. (அ) தாவீது விடுத்ததைப் போன்ற அழைப்பிற்கு கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்? (ஆ) தாவீதின் சிறந்த முன்மாதிரியை பெற்றோர் எவ்வாறு பின்பற்றலாம்?
7 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்” என்று தாவீது அழைப்பு விடுத்தார். (சங்கீதம் 34:11) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி அவருடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிகிற அனைவரும் மேற்குறிப்பிடப்பட்டதைப் போன்ற அழைப்பிற்குச் செவிகொடுக்கிறார்கள் என்றே சொல்லலாம். தாவீது தன்னுடைய ஆட்களை “பிள்ளைகளே” என்று அழைத்தது பொருத்தமானதே. ஏனெனில், அவர்கள் அவரைத் தங்கள் தலைவராகவே மதித்தார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ளவும் உதவுவதற்காக தாவீது அவர்களுக்குக் கடவுள் பயத்தைக் கற்றுக்கொடுத்தார். கிறிஸ்தவப் பெற்றோருக்கு இது எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! தங்கள் மகன்களையும் மகள்களையும் ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் . . . வளர்க்க’ வேண்டிய பொறுப்பை பெற்றோருக்கு யெகோவா அளித்திருக்கிறார். (எபேசியர் 6:4) தங்கள் பிள்ளைகளுடன் ஆன்மீக விஷயங்களைத் தினமும் கலந்துபேசுவதன் மூலமும், தவறாமல் பைபிள் படிப்பு நடத்துவதன் மூலமும், அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து சந்தோஷமாக வாழ பெற்றோர் உதவுகிறார்கள்.—உபாகமம் 6:6, 7.
கடவுள் பயத்தை வாழ்வில் வெளிக்காட்டுதல்
8, 9. (அ) கடவுளுக்குப் பிரியமாக வாழ்வது ஏன் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது? (ஆ) நம் நாவைக் காப்பதில் எது உட்பட்டுள்ளது?
8 முன்பே குறிப்பிட்ட விதமாக, யெகோவாவுக்குப் பயப்படுவதால் நம் மகிழ்ச்சி பறிபோய்விடாது. தாவீது பின்வருமாறு கேட்டார்: “நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற [அதாவது, விரும்புகிற] மனுஷன் யார்?” (சங்கீதம் 34:12) நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து, நன்மையைக் கண்டடைய விரும்புகிற ஒருவர் யெகோவாவுக்குப் பயப்படுவது அவசியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், “நான் கடவுளுக்குப் பயப்படுகிறேன்” என்று சொல்வது சுலபம். ஆனால், நம்முடைய நடத்தையில் கடவுள் பயத்தை வெளிக்காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. ஆகவே, கடவுள் பயத்தை எப்படி வெளிக்காட்டலாம் என்பதை தாவீது அடுத்ததாக விளக்குகிறார்.
9 “உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.” (சங்கீதம் 34:13) கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் சகோதர சிநேகத்தைக் காட்ட வேண்டும் என்று அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார்; அதன் பிறகு 34-ஆம் சங்கீதத்தில் உள்ள இந்தப் பகுதியை மேற்கோள் காட்ட தேவாவியால் அவர் தூண்டப்பட்டார். (1 பேதுரு 3:8-12) நம் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்ள, தீங்குவிளைவிக்கிற வீண்பேச்சுகளைப் பேசுவதையும், அவற்றைப் பரப்புவதையும் நாம் தவிர்க்க வேண்டும். மேலும், மற்றவர்களிடம் எப்போதும் உற்சாகமூட்டும் விதத்தில் பேச வேண்டும். அதோடு, தைரியமாக உண்மையைப் பேச நாம் முயற்சி செய்ய வேண்டும்.—எபேசியர் 4:25, 29, 31; யாக்கோபு 5:16.
10. (அ) தீமையை ஒதுக்கித் தள்ளுவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்குங்கள் (ஆ) நற்செயல்களைச் செய்வதில் என்னென்ன அடங்கியுள்ளன?
10 “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.” (சங்கீதம் 34:14) கடவுள் கண்டிக்கிற காரியங்களை, அதாவது பாலியல் ஒழுக்கக்கேடு, ஆபாசம், திருட்டு, ஆவியுலகத்தொடர்பு, வன்முறை, குடிவெறி, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவற்றைத் தவிர்ப்போம். அப்படிப்பட்ட அருவருப்பான காரியங்களைச் சிறப்பித்துக் காட்டும் பொழுதுபோக்குகளையும் நாம் ஒதுக்கித் தள்ளுவோம். (எபேசியர் 5:10-12) அதற்குப் பதிலாக, நற்செயல்களைச் செய்வதற்கு நம்முடைய நேரத்தைப் பயன்படுத்துவோம். ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையில் தவறாமல் பங்குகொண்டு, மற்றவர்கள் இரட்சிப்படைய உதவுவதே நாம் செய்யத்தக்க மிகச் சிறந்த நற்செயல். (மத்தேயு 24:14; 28:19, 20) கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தயாரித்து கலந்துகொள்வது, உலகளாவிய வேலைக்கு நன்கொடை அளிப்பது, ராஜ்ய மன்றங்களைப் பராமரிப்பது, தேவையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவுவது ஆகியவையும் அந்த நற்செயல்களில் அடங்கும்.
11. (அ) சமாதானத்தைப்பற்றி தான் கூறியதை தாவீது எப்படிக் கடைப்பிடித்தார்? (ஆ) சபையில் ‘சமாதானத்தை தொடர்ந்துகொள்ள’ நாம் என்ன செய்யலாம்?
11 சமாதானத்தை நாடுவதில் தாவீது சிறந்த முன்மாதிரி வைத்தார். சவுலைக் கொல்ல அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், அவர் வன்முறையில் இறங்குவதைத் தவிர்த்தார்; பிற்பாடு, சமாதானம் செய்துகொள்ளும் நோக்கத்துடன் ராஜாவிடம் மரியாதையோடு பேசினார். (1 சாமுவேல் 24:8-11; 26:17-20) சபையின் சமாதானத்தைக் குலைத்துப்போடும் சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய்யலாம்? ‘சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்ள’ வேண்டும். ஆகவே, நமக்கும் நம் சக வணக்கத்தாருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லையென்று நாம் உணர்ந்தால், ‘முன்பு [அதாவது, முதலில்] உன் சகோதரனோடே ஒப்புரவாகு’ என்று இயேசு கொடுத்த ஆலோசனைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அதன் பிறகு, உண்மை வணக்கத்தின் மற்ற அம்சங்களில் ஈடுபட வேண்டும்.—மத்தேயு 5:23, 24; எபேசியர் 4:26.
கடவுள் பயம் ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்
12, 13. (அ) கடவுளுக்குப் பயப்படுகிறவர்கள் என்ன நன்மைகளை இப்போதே அனுபவிக்கிறார்கள்? (ஆ) உண்மை வணக்கத்தார் எப்படிப்பட்ட மகத்தான பரிசை விரைவில் பெறுவார்கள்?
12 “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.” (சங்கீதம் 34:15) தாவீதைக் கடவுள் நடத்திய விதத்தைப்பற்றிய பதிவிலிருந்து இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவா நம்மை கவனிக்கிறார் என்பதை நாம் அறிந்திருப்பதால் இப்பொழுதே மிகுந்த மகிழ்ச்சியையும், மன சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். நமக்குத் தேவையானவற்றை அவர் எப்போதும் தருவார், அதிக நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட தருவார் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். சீக்கிரத்தில், உண்மை வணக்கத்தார் அனைவரும், முன்னறிவிக்கப்பட்ட மாகோகின் கோகுவினுடைய தாக்குதலையும் ‘கர்த்தருடைய . . . பயங்கரமான நாளையும்’ சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (யோவேல் 2:11, 31; எசேக்கியேல் 38:14-18, 21-23) அந்தச் சமயத்தில் நாம் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையை எதிர்ப்பட்டாலும், தாவீதின் வார்த்தைகள் நம்மைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கும்: “நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.”—சங்கீதம் 34:17.
13 யெகோவா தம் மகத்தான பெயரை மகிமைப்படுத்தும் அந்தக் காலத்தைக் காண்பது எவ்வளவு அருமையாக இருக்கும்! எப்போதையும்விட அப்போது நம்முடைய இருதயங்கள் அளவிலா பிரமிப்பாலும் பயபக்தியாலும் நிறைந்திருக்கும், எதிரிகள் அனைவரும் ஒட்டுமொத்த அழிவை சந்திப்பார்கள். “தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.” (சங்கீதம் 34:16) இவ்வாறு மீட்கப்பட்டு கடவுளுடைய நீதியான புதிய உலகில் நுழைவது எப்பேர்ப்பட்ட மகத்தான பரிசு!
சகித்திருக்க உதவும் வாக்குறுதிகள்
14. கஷ்டங்களின் மத்தியிலும் சகித்திருக்க பைபிளிலுள்ள எந்த வார்த்தைகள் நமக்கு உதவும்?
14 இதற்கிடையில், சீர்கெட்டுப்போன, பகைமை பாராட்டுகிற இந்த உலகில் யெகோவாவுக்குத் தொடர்ந்து கீழ்ப்படிய நமக்குச் சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. கீழ்ப்படிதலை வளர்த்துக்கொள்ள கடவுள் பயம் நமக்கு உதவுகிறது. நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்வதால், யெகோவாவின் ஊழியர்கள் சிலர் பயங்கரமான கஷ்டங்களை எதிர்ப்படுகிறார்கள். அது அவர்களுடைய இருதயத்தை நொறுக்கி, சோர்வில் மூழ்கடித்துவிடுகிறது. ஆனால், யெகோவாமீது சார்ந்திருந்தால், சகித்திருக்க அவர் உதவுவார் என்பதில் அவர்கள் உறுதியாய் இருக்கலாம். தாவீதின் பின்வரும் வார்த்தைகள் உண்மையான ஆறுதலை அளிக்கின்றன: “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 34:18) உற்சாகப்படுத்தும் விதத்தில் தாவீது அடுத்ததாகப் பின்வருமாறு கூறினார்: “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.” (சங்கீதம் 34:19) எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், யெகோவா நம்மை விடுவிக்க வல்லவராய் இருக்கிறார்.
15, 16. (அ) தாவீது 34-ஆம் சங்கீதத்தை இயற்றிய பிறகு, விரைவிலேயே எந்தத் தீங்கைக் குறித்துக் கேள்விப்பட்டார்? (ஆ) சோதனைகளைச் சகிக்க நமக்கு எது உதவும்?
15 நோபின் குடிமக்களையும் பெரும்பாலான ஆசாரியர்களையும் சவுல் கொன்றுவிட்டார் என்பது 34-ஆம் சங்கீதத்தை இயற்றிய பிறகு விரைவிலேயே தாவீதுக்குத் தெரியவந்தது. தான் நோபிற்கு சென்றதுதான் சவுலின் கடும் கோபத்திற்குக் காரணம் என்பது தெரிந்ததும் தாவீது எப்படித் துடித்திருப்பார்! (1 சாமுவேல் 22:13, 18-21) யெகோவாவின் உதவியை தாவீது நாடினார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை; ‘நீதிமான்கள்’ எதிர்காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு நிச்சயம் ஆறுதல் அளித்திருக்கும்.—அப்போஸ்தலர் 24:15.
16 உயிர்த்தெழுதல் நம்பிக்கை இன்று நம்மையும்கூட பலப்படுத்துகிறது. நம்முடைய எதிரிகள் செய்யும் எதுவுமே நமக்கு நிரந்தர தீமையை ஏற்படுத்த முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (மத்தேயு 10:28) அப்படிப்பட்ட உறுதியைப் பின்வரும் வார்த்தைகளில் தாவீது விவரித்தார்: “அவனுடைய [நீதிமானுடைய] எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 34:20) இயேசுவின் விஷயத்தில் அந்த வார்த்தைகள் அப்படியே நிறைவேறின. இயேசு கொடூரமாகக் கொல்லப்பட்டபோதிலும், அவருடைய எலும்புகளில் ஒன்றும் ‘முறிக்கப்படவில்லை.’ (யோவான் 19:36) சங்கீதம் 34:20 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களான ‘வேறே ஆடுகளுக்கும்’கூட பொருந்துகிறது. எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட்டாலும், அவர்களுக்கு எவ்வித நிரந்தர தீங்கும் ஏற்படாது என்று இவ்வசனம் உறுதி அளிக்கிறது. அடையாள அர்த்தத்தில் சொன்னால், அவர்களுடைய எலும்புகள் முறிக்கப்படாது.—யோவான் 10:16.
17. யெகோவாவின் மக்களைத் தொடர்ந்து எதிர்ப்பவர்களுக்கு எப்படிப்பட்ட அழிவு காத்திருக்கிறது?
17 பொல்லாதவர்களின் சூழ்நிலையே வேறு. தாங்கள் விதைத்த தீமையை அவர்கள் சீக்கிரத்தில் அறுவடை செய்வார்கள். “தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.” (சங்கீதம் 34:21) கடவுளுடைய மக்களைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள் அனைவரும் இருப்பதிலேயே பயங்கரமான அழிவைச் சந்திப்பார்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, அவர்கள் “நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.”—2 தெசலோனிக்கேயர் 1:10.
18. ‘திரள் கூட்டத்தார்’ எந்த அர்த்தத்தில் ஏற்கெனவே மீட்கப்பட்டிருக்கிறார்கள், எதிர்காலத்தில் எதை அனுபவிப்பார்கள்?
18 தாவீதின் சங்கீதம் பின்வரும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளுடன் நிறைவு பெறுகிறது: “கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.” (சங்கீதம் 34:22) தாவீது ராஜா தன்னுடைய 40 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் இவ்வாறு கூறினார்: ‘[கடவுள்] என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்டார்.’ (1 இராஜாக்கள் 1:30) தாவீதைப் போல யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் பாவத்தின் விளைவால் ஏற்படுகிற குற்ற உணர்விலிருந்தும், எல்லா சோதனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதை எண்ணிப் பார்த்து மகிழக்கூடிய காலம் விரைவில் வரவிருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் தங்களுடைய பரலோக வெகுமதியை ஏற்கெனவே பெற்றுவிட்டார்கள். எல்லா நாடுகளிலிருந்தும் வந்துள்ள “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” இயேசுவின் சகோதரர்களில் மீதியானோருடன் சேர்ந்து கடவுளை வணங்குகிறார்கள்; இதன் விளைவாக, யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலையைக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மீட்கும் வல்லமையில் விசுவாசத்தை வெளிக்காட்டுகிறார்கள். வரவிருக்கும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, கிரய பலியின் முழு பலனையும் அவர்கள் பெறுவார்கள், பரிபூரண நிலையை அடைவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14, 17; 21:3-5.
19. ‘திரள் கூட்டத்தார்’ என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள்?
19 கடவுளுடைய வணக்கத்தாரான ‘திரள் கூட்டத்தார்’ ஏன் இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்? ஏனெனில், தொடர்ந்து யெகோவாவுக்குப் பயந்து, பிரமிப்போடும் பயபக்தியுடன் கூடிய கீழ்ப்படிதலோடும் அவரைச் சேவிக்க அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். உண்மையில், யெகோவாவுக்குப் பயப்படுவது இப்பொழுதே வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது; ‘மெய்யான ஜீவனை,’ அதாவது கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனைப் பெறவும் உதவுகிறது.—1 தீமோத்தேயு 6:12, 18, 19; NW; வெளிப்படுத்துதல் 15:3, 4.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் ஏன் கடவுளுக்குப் பயப்பட வேண்டும், அதன் அர்த்தம் என்ன?
• கடவுள் பயம் நம்முடைய நடத்தையின்மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்?
• கடவுள் பயத்தை வெளிக்காட்டுவதால் வரும் நன்மைகள் யாவை?
• சகித்திருக்க உதவும் வாக்குறுதிகள் யாவை?
[பக்கம் 26-ன் படம்]
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் தடை உத்தரவின்கீழ் விவேகமாக நடந்துகொள்கிறார்கள்
[பக்கம் 28-ன் படம்]
ராஜ்ய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதே நம்முடைய அயலகத்தாருக்கு நாம் செய்யத்தக்க மிகச் சிறந்த நற்செயல்