கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
உள்ளம் உடைந்தவர்களுக்கு ஆறுதல்
‘என்னையெல்லாம் யெகோவா நேசிக்கவே மாட்டார்.’ பல காலமாய் மனச்சோர்வின் பிடியில் சிக்கியிருந்த ஒரு கிறிஸ்தவப் பெண் உதிர்த்த வார்த்தைகள் இவை. ‘என்னால் யெகோவா தேவனிடம் நெருங்கவே முடியாது, அவர் என்னைவிட்டு தூரமாய் இருக்கிறார்’ என்று அவள் ஆணித்தரமாக நம்பினாள். மனமுடைந்து போயிருக்கிற தம் வணக்கத்தாரிடமிருந்து யெகோவா உண்மையிலேயே தூரமாய் இருக்கிறாரா? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சங்கீதக்காரனாகிய தாவீது சொன்ன வார்த்தைகளில் இதற்கான பதில் உள்ளது; அது சங்கீதம் 34:18-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது; அதை வாசிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
யெகோவாவை உண்மையோடு வழிபடுகிற ஒருவர், தாங்க முடியாத மனவேதனையில் தவிக்கும்போது எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பது தாவீதுக்கு நன்றாகவே தெரியும். பொறாமையும் கொலை வெறியும் பிடித்த சவுல் ராஜா இளைஞனான தாவீதின் உயிரை வேட்டையாடுவதற்காக அவரை விடாமல் பின்தொடர்ந்தார்; அவரிடமிருந்து தப்பிப்பதற்காக தாவீது நாடோடியாக அலைந்து திரிந்தார். கடைசியாக அவர் பெலிஸ்தியர்களுடைய காத் நகரத்தில் தஞ்சம் புகுந்தார்; அது இஸ்ரவேலர்களின் எதிரி நாடாக இருந்ததால் சவுல் அங்கே வந்து தன்னைத் தேட மாட்டார் என்று நினைத்து தாவீது அங்கே போனார். ஆனால், அந்த நகரத்தில் இருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, பைத்தியம்பிடித்தவர் போல நடித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் தன்னைக் காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னார்; இந்த அனுபவத்தை மனதில் வைத்தே, 34-ஆம் சங்கீதத்தை எழுதினார்.
மனவேதனையில் வாடுகிறவர்கள், ‘எனக்கெல்லாம் கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு அருகதையே இல்லை,’ ‘என்னையெல்லாம் கடவுள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை’ என்று நினைக்கலாம். ஆனால், கடவுள் அவர்களிடமிருந்து தூரமாய் இருக்கிறார் என்று தாவீது நினைத்தாரா? அவரே இதற்குப் பதில் சொல்கிறார்: “உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் [யெகோவா] இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.” (வசனம் 18, பொது மொழிபெயர்ப்பு) இந்த வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
‘யெகோவா அருகில் இருக்கிறார்.’ “ஆண்டவர் நம்மைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துவருகிறார், தமது மக்களுக்கு உதவவும் அவர்களைக் காப்பாற்றவும் எப்போதும் தயாராய் இருக்கிறார் என்பதை இந்தச் சொற்றொடர் தத்ரூபமாய் விவரிக்கிறது” என்று ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. யெகோவா தம் மக்களை அன்போடு கவனித்து வருகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் தெம்பூட்டுகிறது! இந்தக் “கொடிய காலங்களில்” அவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகளையும் அவர்களுடைய உள்மனதின் உணர்வுகளையும் அவர் அறிந்திருக்கிறார்.—2 தீமோத்தேயு 3:1; அப்போஸ்தலர் 17:27.
‘உள்ளம் உடைந்தவர்கள்.’ சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள் “சாதாரணமாக ஒருவர் படுகிற துக்கத்தையும் வேதனையையும் குறிப்பதாக” ஓர் அறிஞர் சொல்கிறார். ஆம், கடவுளுடைய உண்மையுள்ள வணக்கத்தார்கூட சில சமயங்களில் பெருந்துன்பங்களை அனுபவிக்கும்போது உள்ளம் உடைந்துபோகலாம்.
‘நைந்த நெஞ்சத்தார்.’ மனச்சோர்வடைந்தவர்கள், ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என நினைக்கலாம்; அப்படிப்பட்ட சமயத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து துவண்டுவிடுகிறார்கள். பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஒரு குறிப்பேடு, ‘நைந்த நெஞ்சத்தார்’ என்ற சொற்றொடரை, “வாழ்க்கையே அஸ்தமித்ததுபோல உணருகிறவர்கள்” என்பதாகவும் மொழிபெயர்க்கலாம் என்று சொல்கிறது.
‘உள்ளம் உடைந்தவர்களிடமும்’ ‘நைந்த நெஞ்சத்தாரிடமும்’ யெகோவா தேவன் எப்படி நடந்துகொள்கிறார்? தம்முடைய அன்பைப் பெற அவர்களுக்கு அருகதையில்லை என்பதாக நினைத்துக்கொண்டு, அவர்களை விட்டு தூரமாக இருப்பாரா? இல்லவே இல்லை! ஓர் அன்பான அப்பா அழுதுகொண்டிருக்கும் தன் குழந்தையை எப்படித் தூக்கிவைத்து, தட்டிக்கொடுத்து, ஆறுதல்படுத்துவாரோ அதேபோல், தம்மிடம் உதவி கேட்டு அழுகிற தம் வணக்கத்தாருக்கு யெகோவா அருகிலேயே இருக்கிறார். உள்ளம் உடைந்து, நெஞ்சம் நைந்து தவிக்கிற அவர்களை ஆறுதல்படுத்தவும், தட்டிக்கொடுத்து தேற்றவும் அவர் துடிக்கிறார். எப்படிப்பட்ட சோதனையை அவர்கள் சகிக்க வேண்டியிருந்தாலும்சரி அதைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவர் தருகிறார்.—2 கொரிந்தியர் 4:7; யாக்கோபு 1:5.
கருணை உள்ளம் கொண்ட யெகோவா தேவனிடம் எப்படி நெருங்கி வருவது என நீங்கள் கற்றுக்கொள்ளலாம், அல்லவா? அவர் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.”—ஏசாயா 57:15, பொ.மொ.
(w11-E 06/01)