‘யெகோவாவின் ஆணை’ தவறவே தவறாது
‘ஆண்டவர் [யெகோவா] ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கிறேன்: ‘நீர் என் மைந்தர்; . . . என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்.’ —சங்கீதம் [திருப்பாடல்கள்] 2:7, 8, பொது மொழிபெயர்ப்பு.
1. கடவுளுடைய நோக்கத்திற்கும் தேசங்களுடைய நோக்கத்திற்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது?
மனிதகுலத்திற்கும் இந்தப் பூமிக்கும் யெகோவா ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார். தேசங்களும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கின்றன. ஆனால் இந்த இரு நோக்கங்களும் எவ்வளவாய் வேறுபடுகின்றன! இதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும், ஏனெனில் கடவுள் சொல்கிறார்: “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.” கடவுளுடைய நோக்கம் நிச்சயம் நிறைவேறும், ஏனெனில் அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:9-11.
2, 3. இரண்டாம் சங்கீதத்தில் எது தெளிவாக்கப்படுகிறது, ஆனால் என்ன கேள்விகள் எழுகின்றன?
2 மேசியானிய அரசரைப் பற்றிய கடவுளுடைய நோக்கம் நிறைவேறும் என்பது இரண்டாம் சங்கீதத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதை இயற்றிய பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது, தேசங்கள் கொந்தளித்து எழும் ஒரு பிரத்தியேக காலத்தைப் பற்றி ஆவியின் ஏவுதலால் முன்னறிவித்தார். தேசங்களின் ஆட்சியாளர்கள் யெகோவா தேவனுக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும் விரோதமாக எழும்புவார்கள். என்றாலும், ‘யெகோவா ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கிறேன். . . . என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்’ என்றும் அவர் பாடினார்.—சங்கீதம் 2:7, 8, பொ.மொ.
3 ‘யெகோவாவின் ஆணை’ தேசங்களுக்கு எதைக் குறிக்கிறது? பொதுவாக மனிதகுலத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? உண்மையில், இரண்டாம் சங்கீதத்தை வாசிக்கும் தேவபக்தியுள்ள வாசகர்கள் அனைவருக்கும் இது எதை அர்த்தப்படுத்துகிறது?
தேசங்கள் கொந்தளித்தல்
4. சங்கீதம் 2:1, 2-லுள்ள முக்கிய குறிப்புகளை எவ்வாறு சுருக்கி உரைப்பீர்கள்?
4 தேசங்கள் மற்றும் ஆட்சியாளர்களுடைய செயல்களைக் குறிப்பிட்டு, சங்கீதக்காரன் இவ்வாறு தனது பாடலை துவங்குகிறார்: “ஜாதிகள் [அல்லது தேசங்கள்] கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்? கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்”ணுகிறார்கள்.—சங்கீதம் 2:1, 2.a
5, 6. தேசங்கள் என்ன “விருதாக் காரியத்தை” விடாது சிந்தித்துக் கொண்டிருக்கின்றன?
5 என்ன “விருதாக் காரியத்தை” தற்கால தேசங்கள் தொடர்ந்து ‘சிந்தித்துக் கொண்டிருக்கின்றன’? கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவராகிய மேசியாவை, அதாவது கிறிஸ்துவை ஏற்பதற்குப் பதிலாக தேசங்கள் தொடர்ந்து தங்களுடைய அதிகாரத்தை செலுத்துவதைப் பற்றி ‘சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.’ கடவுளால் அரசராக நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவைக் கொலைசெய்ய பொ.ச. முதல் நூற்றாண்டில் யூதரும் ரோம அதிகாரிகளும் சேர்ந்து ஒத்துழைத்தபோதும் இரண்டாம் சங்கீதத்தில் வரும் இந்த வார்த்தைகள் சிறிய அளவில் நிறைவேறின. ஆனால் இதன் பெரிய நிறைவேற்றம் 1914-ல் இயேசு பரலோக அரசராக அமர்த்தப்பட்டபோது ஆரம்பமானது. அது முதல், பூமியிலுள்ள எந்தவொரு அரசியல் அமைப்பும் கடவுளால் அமர்த்தப்பட்ட அரசரை ஏற்றுக்கொள்ளவில்லை.
6 ‘தேசங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்?’ என சங்கீதக்காரன் கேட்டபோது எதை அர்த்தப்படுத்தினார்? அவற்றின் நோக்கம் விருதாவானது; அது பயனற்றது, நிச்சயம் தோல்வியடையும் என்பதையே அர்த்தப்படுத்தினார். இந்தப் பூமிக்கு சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அவற்றால் கொண்டுவர முடியாது. என்றாலும், கடவுளுடைய அரசாட்சியை எதிர்க்கும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சொல்லப்போனால், அவை ஒருங்கிணைந்து, உன்னதமானவருக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும் விரோதமாக பகை வெறியுடன் ஒன்றுதிரண்டு வந்திருக்கின்றன. எவ்வளவு முட்டாள்தனம்!
வெற்றி பவனிவரும் யெகோவாவின் அரசர்
7. ஜெபத்தில், இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் எவ்வாறு சங்கீதம் 2:1, 2-ஐ பொருத்தினார்கள்?
7 இயேசுவின் சீஷர்கள் சங்கீதம் 2:1, 2-ல் உள்ள வார்த்தைகளை அவருக்குப் பொருத்தினார்கள். விசுவாசத்திற்காக துன்புறுத்தப்பட்டபோது அவர்கள் இவ்வாறு ஜெபித்தார்கள்: “கர்த்தாவே, [யெகோவாவே] நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். புறஜாதிகள் [அல்லது தேசங்கள்] கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி . . . ஏரோதும் பொந்தியு பிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம் பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.” (அப்போஸ்தலர் 4:24-28; லூக்கா 23:1-12)b ஆம், கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியராகிய இயேசுவுக்கு விரோதமாக முதல் நூற்றாண்டில் சதி நடந்தபோது இந்தச் சங்கீதம் நிறைவேறியது. என்றாலும், நூற்றாண்டுகளுக்குப் பிற்பாடு மற்றொரு நிறைவேற்றமும் அதற்கு இருக்கும்.
8. சங்கீதம் 2:3 எப்படி தற்கால தேசங்களுக்குப் பொருந்து கிறது?
8 பூர்வ இஸ்ரவேலுக்கு தாவீது போன்ற மனித அரசர் இருந்தபோது, புறமத தேசங்களும் ஆட்சியாளர்களும் கடவுளுக்கும் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்த அவருடைய அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள். ஆனால் நம்முடைய நாளைப் பற்றியென்ன? யெகோவா மற்றும் மேசியாவின் கட்டளைகளுக்கு தற்கால தேசங்கள் கீழ்ப்படிய விரும்புகிறதில்லை. ஆகவே, “அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்” என அவை சொல்வதாக சித்தரிக்கப்படுகின்றன. (சங்கீதம் 2:3) கடவுளும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரும் விதிக்கிற எந்தக் கட்டுப்பாடுகளும் ஆட்சியாளர்களாலும் தேசங்களாலும் எதிர்க்கப்படும். ஆனால் இத்தகைய கட்டுகளை அறுத்து கயிறுகளை எறிந்து போடுவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சிகளும் வீணாகவே இருக்கும்.
யெகோவா அவர்களை இகழ்கிறார்
9, 10. யெகோவா ஏன் தேசங்களை இகழ்கிறார்?
9 தேசிய ஆட்சியாளர்கள் தன்னிச்சையாக அரசாள எடுக்கும் எந்த முயற்சிகளும் யெகோவாவை பாதிக்கப் போவதில்லை. இரண்டாம் சங்கீதம் இவ்வாறு தொடர்ந்து கூறுகிறது: “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.” (சங்கீதம் 2:4) இந்த ஆட்சியாளர்கள் எல்லாம் எந்த மூலைக்கு என்பதுபோல் கடவுள் தமது நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுவார். அவர்களுடைய அகம்பாவத்தைக் கண்டு அவர் நகைப்பார், இகழ்வார். தாங்கள் செய்ய நினைப்பதைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டட்டும். ஆனால் யெகோவாவுக்கு முன்னால் அவர்கள் கேலிக்குரியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வீணாக எதிர்ப்பதைக் கண்டு அவர் சிரிக்கிறார்.
10 சங்கீதத்தில் வேறொரு இடத்தில், விரோதிகளாக இருக்கும் மனிதரையும் தேசங்களையும் குறிப்பிட்டு தாவீது இவ்வாறு பாடுகிறார்: “சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் [அல்லது தேசத்தாரையும்] விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ் செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப் போல ஊளையிட்டு, ஊரைச் சுற்றித் திரிகிறார்கள். இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.” (சங்கீதம் 59:5-8) தேசங்கள் செருக்குடனும் குழப்பத்துடனும் தமக்கு விரோதமாய் செயல்படும் முட்டாள்தனமான போக்கை கண்டு யெகோவா நகைக்கிறார்.
11. கடவுளுடைய நோக்கத்தை முறியடிக்க தேசங்கள் முயற்சி எடுக்கும்போது என்ன சம்பவிக்கும்?
11 எந்தப் பிரச்சினையையும் கடவுளால் தீர்க்க முடியும் என்ற நமது விசுவாசத்தை சங்கீதம் 2-ன் வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. அவர் எப்பொழுதும் தமது சித்தத்தை நிறைவேற்றுவார் என்றும், உண்மைப் பற்றுறுதியுள்ள தமது ஊழியர்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்றும் உறுதியாக நம்பலாம். (சங்கீதம் 94:14) அப்படியானால், யெகோவாவின் நோக்கத்தை முறியடிக்க தேசங்கள் முயற்சி எடுக்கும்போது என்ன சம்பவிக்கும்? இந்த சங்கீதத்தின்படி, பயங்கர இடிமுழக்க சத்தம் போல் கடவுள் ‘தமது கோபத்திலே அவர்களோடே பேசுவார்.’ மேலும், மின்னல் அடிப்பதுபோல் “தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப் பண்ணுவார்.”—சங்கீதம் 2:5.
கடவுளுடைய அரசர் அபிஷேகம் செய்யப்படுகிறார்
12. எந்த சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டதை சங்கீதம் 2:6 குறிக்கிறது?
12 அடுத்தபடியாக சங்கீதக்காரன் மூலம் யெகோவா சொல்வது தேசங்களைக் கலங்கச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன்” என்று அவர் சொல்கிறார். (சங்கீதம் 2:6) சீயோன் பர்வதம் எருசலேமில் ஒரு குன்றாக இருந்தது, அங்கு இஸ்ரவேலின் ராஜாவாக தாவீது நியமிக்கப்பட்டார். ஆனால் மேசியானிய அரசர் அந்நகரத்திலோ பூமியில் வேறெங்காவதோ ஒரு சிங்காசனத்தில் அமர மாட்டார். உண்மையில், யெகோவா ஏற்கெனவே இயேசு கிறிஸ்துவை தாம் தேர்ந்தெடுத்த மேசியானிய அரசராக பரலோக சீயோன் மலையில் அமர்த்தியிருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 14:1.
13. என்ன உடன்படிக்கையை யெகோவா தமது குமாரனுடன் செய்தார்?
13 மேசியானிய அரசர் இப்போது பேசுகிறார்: ‘யெகோவா ஆணையிட்டு உரைத்ததை [அதாவது தமது குமாரனுடன் ராஜ்ய உடன்படிக்கை செய்ததை] நான் அறிவிக்கிறேன். ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். நீர் விரும்புகிறதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்.’ (சங்கீதம் 2:7, 8, பொ.மொ.) கிறிஸ்து தமது அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொன்னபோது ராஜ்ய உடன்படிக்கையைக் குறிப்பிட்டார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.”—லூக்கா 22:28, 29.
14. அரசராக இருப்பதற்கு இயேசு உரிமை உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது என ஏன் சொல்லலாம்?
14 சங்கீதம் 2:7-ல் முன்னறிவித்தபடியே, இயேசுவின் முழுக்காட்டுதலின்போதும், ஆவி வாழ்க்கைக்கு அவரை உயிர்த்தெழுப்புவதன் மூலமும் அவரே தமது குமாரன் என யெகோவா அடையாளம் காட்டினார். (மாற்கு 1:9-11; ரோமர் 1:5; எபிரெயர் 1:5; 5:5) ஆம், கடவுளுடைய ஒரேபேறான குமாரனே பரலோக ராஜ்யத்தின் அரசர். (யோவான் 3:16) அரசனாகிய தாவீதின் பரம்பரையில் இயேசு பிறந்ததால், அரசராக வீற்றிருக்க அவருக்கு இருக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது. (2 சாமுவேல் 7:4-17; மத்தேயு 1:6, 16) இந்த சங்கீதத்தின்படி, கடவுள் தமது குமாரனிடம் இவ்வாறு சொல்கிறார்: ‘நீர் விரும்புகிறதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.’—சங்கீதம் 2:8, பொ.மொ.
15. ஏன் இயேசு தேசங்களை தமது சுதந்தரமாக கேட்கிறார்?
15 கடவுளுடைய சொந்த குமாரனாகிய இந்த அரசர், யெகோவாவுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கிறார். தாம் உண்மைப் பற்றுறுதியுள்ளவர், நம்பகமானவர் என்பதை யெகோவாவுக்கு இயேசு நிரூபித்திருக்கிறார். மேலும், கடவுளுடைய முதற்பேறானவராக சொத்தைப் பெறும் உரிமையும் இயேசுவுக்கு இருக்கிறது. நிச்சயமாகவே, இயேசு கிறிஸ்து “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” (கொலோசெயர் 1:15) அவர் வெறுமனே கேட்டாரென்றாலே போதும், அப்பொழுது கடவுள் அவருக்கு ‘நாடுகளை சொத்தாகவும் பூவுலகை அதன் கடையெல்லைவரை உடைமையாகவும்’ கொடுக்கிறார். ‘மனுபுத்திரருடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மகிழ்ச்சியுள்ளவராகவும்,’ பூமி மற்றும் மனிதவர்க்கம் சம்பந்தமாக தமது பரலோகத் தகப்பனின் சித்தம் நிறைவேற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகவும் இருப்பதால் இயேசு இதை கேட்கிறார்.—நீதிமொழிகள் 8:30, 31, NW.
தேசங்களுக்கு எதிராக யெகோவாவின் ஆணை
16, 17. சங்கீதம் 2:9-ன்படி, தேசங்களுக்கு என்ன நேரிடும்?
16 இந்த இரண்டாம் சங்கீதம் இயேசு கிறிஸ்துவின் காணக்கூடாத பிரசன்னம் இருக்கிற இக்காலத்தில் நிறைவேறி வருவதால், தேசங்களுக்கு என்ன சம்பவிக்கும்? “இருப்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப் போல் அவர்களை உடைத்துப் போடுவீர்” என்ற கடவுளுடைய அறிவிப்பை அந்த அரசர் சீக்கிரத்தில் நிறைவேற்றுவார்.—சங்கீதம் 2:9.
17 பூர்வ காலங்களில் அரசர்கள் வைத்திருந்த செங்கோல்கள் அரசதிகாரத்தின் சின்னங்களாக விளங்கின. சில செங்கோல்கள் இரும்பினால் செய்யப்பட்டன; இந்த சங்கீதத்தில் அப்படிப்பட்ட ஒன்றுதான் குறிப்பிடப்படுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் உருவக நடை அரசராகிய கிறிஸ்து எவ்வளவு எளிதாக தேசங்களை அழிப்பார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, இரும்பினால் செய்யப்பட்ட செங்கோலால் கொடுக்கும் வலிமைமிக்க அடி ஒரு குயவனின் மண்பாண்டத்தை வெகு எளிதில் சின்னாபின்னமாக நொறுக்கிவிடும்.
18, 19. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற பூமியின் ராஜாக்கள் என்ன செய்ய வேண்டும்?
18 தேசிய ஆட்சியாளர்கள் கட்டாயம் இவ்வாறு நொறுக்கப்பட்டுதான் போவார்களா? இல்லை, ஏனென்றால் சங்கீதக்காரன் இவ்வாறு அவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்: “ராஜாக்களே, விவேகமாய் செயல்படுங்கள்; பூமியின் நியாயாதிபதிகளே, உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள்.” (சங்கீதம் 2:10, NW) ராஜாக்கள் செவிசாய்க்கும்படி, அதாவது விவேகமாய் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மனிதகுலத்தின் நன்மைக்காக கடவுளுடைய ராஜ்யம் செய்யப்போகும் காரியங்களுக்கு எதிராக தாங்கள் தீட்டுகிற திட்டங்களெல்லாம் வீணானவை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
19 கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற பூமியின் ராஜாக்கள் தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்” என அவர்களுக்கு அறிவுரை அளிக்கப்படுகிறது. (சங்கீதம் 2:11) அவர்கள் இத்தகைய நடவடிக்கை எடுத்தால் என்ன பலன் கிடைக்கும்? குழப்பத்தில் அல்லது மனக்கலக்கத்தில் இருப்பதற்கு பதிலாக, மேசியானிய அரசர் வழங்கும் எதிர்கால நம்பிக்கையில் அவர்கள் களிகூரலாம். பூமியின் ராஜாக்கள் ஆட்சி செய்கையில் வெளிக்காட்டும் மேட்டிமையையும் இறுமாப்பையும் உதறித்தள்ள வேண்டும். மேலும், தாமதமின்றி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்; அதோடு யெகோவாவின் உன்னத அரசாட்சியையும் கடவுளுடைய மற்றும் மேசியானிய அரசருடைய வல்லமையையும் புரிந்துகொண்டு விவேகமாக செயல்பட வேண்டும்.
‘குமாரனை முத்தம் செய்யுங்கள்’
20, 21. ‘குமாரனை முத்தம் செய்யுங்கள்’ என்றால் என்ன?
20 இரண்டாம் சங்கீதம், தேசங்களின் ஆட்சியாளர்களுக்கு இப்பொழுது இரக்கத்துடன் ஓர் அழைப்பை விடுக்கிறது. எதிர்க்க ஒன்றுதிரண்டு வருவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கப்படுகிறது: யெகோவா தேவன் “கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை [குமாரனை] முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக் காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்.” (சங்கீதம் 2:12அ) உன்னத பேரரசராகிய யெகோவா ஓர் ஆணையை பிறப்பிக்கும்போது அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். கடவுள் தமது குமாரனை சிங்காசனத்தில் அமர்த்தியபோது பூமியின் ராஜாக்கள் ‘விருதாக் காரியத்தைச் சிந்திப்பதை’ விட்டுவிட்டிருக்க வேண்டும். அந்த அரசரை உடனடியாக ஏற்று அவருக்கு முழுமையாக கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
21 அவர்கள் ஏன் ‘குமாரனை முத்தம் செய்ய’ வேண்டும்? இந்த சங்கீதம் இயற்றப்பட்ட காலத்தில், முத்தமிடுவது நட்பின் வெளிக்காட்டாக இருந்தது; வீட்டிற்கு வந்த விருந்தினரை முத்தமிட்டு வரவேற்று உபசரிப்பது பழக்கமாக இருந்தது. முத்தமிடுவது உண்மைத்தன்மையைக் காண்பிக்கும் ஒரு செயலாகவும் இருந்தது. (1 சாமுவேல் 10:1) இரண்டாம் சங்கீதத்தில் வரும் இந்த வசனத்தில், தமது குமாரனை முத்தமிடும்படி, அதாவது அபிஷேகம் செய்யப்பட்ட அரசராக வரவேற்கும்படி தேசங்களுக்கு கடவுள் கட்டளையிடுகிறார்.
22. எந்த எச்சரிக்கைக்கு தேசிய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்?
22 யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசரின் அதிகாரத்தை ஏற்க மறுக்கிறவர்கள் யெகோவாவையே அவமதிக்கிறார்கள். அவரது சர்வலோக அரசுரிமையையும் மனிதகுலத்திற்கு மிகச் சிறந்த ஓர் ஆளுநரை ராஜாவாக தேர்ந்தெடுக்கும் அவருடைய அதிகாரத்தையும் திறமையையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறதில்லை. ஆட்சியாளர்கள் தங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற முயற்சி எடுக்கும்போது, கடவுளுடைய கோபம் திடீரென அவர்கள் மேல் வருவதை காண்பார்கள். “கொஞ்சக் காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்,” அதாவது கட்டுப்படுத்த முடியாதளவு விரைவில் பற்றியெரியும். தேசிய ஆட்சியாளர்கள் இந்த எச்சரிக்கையை நன்றியுடன் ஏற்று அதற்கு இசைய செயல்பட வேண்டும். அப்படி செய்வது ஜீவனைக் குறிக்கிறது.
23. என்ன செய்ய தனிநபர்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது?
23 தத்ரூபமான இந்த சங்கீதம் இவ்வாறு முடிகிறது: “அவரை [யெகோவாவை] அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.” (சங்கீதம் 2:12ஆ) பாதுகாப்பைக் கண்டடைய தனிநபர்களுக்கும், தேசங்களின் திட்டங்களை ஆதரித்து வருகிற ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் இன்னும் காலம் இருக்கிறது. ராஜ்ய ஆட்சியின் மூலமாக அடைக்கலம் தருகிற யெகோவாவிடம் ஓடி அவர்கள் தஞ்சம் புகலாம். ஆனால் எதிர்த்து வரும் தேசங்களை மேசியானிய ராஜ்யம் அழிப்பதற்கு முன்பு அவர்கள் செயல்பட வேண்டும்.
24. தொல்லை மிகுந்த இவ்வுலகிலும்கூட எவ்வாறு அதிக திருப்தியான வாழ்க்கையை நாம் வாழலாம்?
24 பைபிளை ஊக்கமாக படித்து அவற்றின் அறிவுரையை வாழ்க்கையில் பொருத்தினால், தொல்லை மிகுந்த இவ்வுலகில் இப்போதே அதிக திருப்தியான வாழ்க்கை வாழலாம். பைபிள் அறிவுரைகளை கடைப்பிடிப்பது இன்னும் சந்தோஷமான குடும்ப உறவுகளுக்கு வழிநடத்தும், இவ்வுலகை தொல்லைபடுத்தும் அநேக கவலைகளிலிருந்தும் பயங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். பைபிளின் வழிகளைப் பின்பற்றும்போது படைப்பாளரை பிரியப்படுத்துகிறோம் என்ற நம்பிக்கை நமக்குள் பிறக்கிறது. ராஜ்ய ஆட்சியைப் புறக்கணிக்கிறவர்களை சர்வலோக பேரரசர் இந்தப் பூமியிலிருந்து நீக்கிவிடுவார்; அவரைத் தவிர வேறு எவரும் “இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்” உத்தரவாதம் அளிக்க முடியாது.—1 தீமோத்தேயு 4:8.
25. ‘யெகோவாவின் ஆணை’ தவறவே தவறாததால், நமது காலத்தில் என்ன நடக்குமென எதிர்பார்க்கலாம்?
25 ‘யெகோவாவின் ஆணை’ தவறவே தவறாது. நமது சிருஷ்டிகராக மனிதகுலத்திற்கு எது மிகச் சிறந்தது என்பதை கடவுள் அறிந்திருக்கிறார், கீழ்ப்படிதலுள்ள மனிதருக்கு தமது அருமை குமாரனின் ராஜ்யத்தில் சமாதானத்தையும் திருப்தியையும் நிரந்தர பாதுகாப்பையும் கொடுத்து ஆசீர்வதிக்கும் தமது நோக்கத்தை நிறைவேற்றுவார். நமது காலத்தைக் குறித்து, தீர்க்கதரிசியாகிய தானியேல் இவ்வாறு எழுதினார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) அப்படியானால், ‘குமாரனை முத்தம் செய்து’ உன்னத கர்த்தராகிய யெகோவாவைச் சேவிப்பதற்கு இதுவே காலம்!
[அடிக்குறிப்புகள்]
a முதலில், தாவீது ராஜாவே ‘அபிஷேகம் பண்ணப்பட்டவர்,’ இவருக்கு எதிராக ‘பூமியின் ராஜாக்களாகிய’ பெலிஸ்த ஆட்சியாளர்கள் தங்கள் படைகளை திரட்டி வந்தனர்.
b கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என இரண்டாம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர் இயேசுவே என்பதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற வசனங்களுங்கூட காட்டுகின்றன. சங்கீதம் 2:7-ஐ அப்போஸ்தலர் 13:32, 33 மற்றும் எபிரெயர் 1:5; 5:5-உடன் ஒப்பிடும்போது இது தெரிகிறது. சங்கீதம் 2:9-ஐயும் வெளிப்படுத்துதல் 2:27-ஐயும்கூட பாருங்கள்.
உங்கள் பதில்?
• தேசங்கள் என்ன ‘விருதாக் காரியத்தை சிந்தித்துக்’ கொண்டிருக்கின்றன?
• யெகோவா ஏன் தேசங்களை “இகழுவார்”?
• தேசங்களுக்கு எதிராக யெகோவா பிறப்பிக்கும் ஆணை என்ன?
• குமாரனை ‘முத்தம் செய்வது’ என்றால் என்ன?
[பக்கம் 16-ன் படம்]
வெற்றிசிறக்கும் மேசியானிய அரசரைப் பற்றி தாவீது பாடினார்
[பக்கம் 17-ன் படம்]
ஆட்சியாளர்களும் இஸ்ரவேல் ஜனங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக சதி செய்தார்கள்
[பக்கம் 18-ன் படம்]
பரலோக சீயோன் மலையில் அரசராக கிறிஸ்து அமர்த்தப்பட்டிருக்கிறார்