நிச்சயமாக கிடைக்கப்போகும் ஒரு சொத்து
“யாருமே உரிமை கோராத ஒரு சொத்து உங்களுக்கு கிடைக்கப் போகிறதென்று எவரிடமிருந்தாவது தபால் வந்தால், ஜாக்கிரதை! ஏமாற்றுவதில் கில்லாடியான ஒருவனுடைய வலையில் நீங்கள் விழுந்துவிடலாம்.”
அமெரிக்காவின் தபால் ஆய்வு பணித்துறை அதனுடைய வெப் சைட்டில் இந்த எச்சரிப்பை வெளியிட்டது. ஏன்? ஏனெனில் ‘உங்கள் சொந்தக்காரர் ஒருவர் இறந்துவிட்டார், உங்களுக்காக தன்னுடைய சொத்தை விட்டுச் சென்றுள்ளார்’ என்ற நோட்டீஸை ஆயிரக்கணக்கானோர் தபாலில் பெற்றார்கள். அதைப் படித்தபின், அந்தச் சொத்து எங்குள்ளது, அதை அடைய என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கிய ‘அறிக்கையைப்’ பெற முன்கட்டணமாக 30 டாலர்களை அல்லது அதற்கும் அதிகமான தொகையை அநேகர் தபால் மூலம் செலுத்தினார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பணம் கட்டிய அனைவரும் ஒரே மாதிரியான அறிக்கையைப் பெற்றார்கள்—எவருக்கும் எதுவுமே கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட திட்டங்கள், சொத்தைப் பெற வேண்டுமென்ற மக்களுடைய இயல்பான ஆசைக்குத் தீனி போடுகின்றன. இருந்தாலும், பிள்ளைகளுக்கு சொத்தை விட்டுச்செல்லும் நபர்களை பைபிள் இவ்வாறு பாராட்டுகிறது: ‘நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை விட்டுச் செல்கிறான்.’ (நீதிமொழிகள் 13:22, NW) இயேசு கிறிஸ்துகூட தம்முடைய மலைப் பிரசங்கத்தில், ‘சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வர் [அதாவது, சொத்தாக பெறுவர்]’ என்ற பிரசித்தி பெற்ற, இதயத்திற்கு இதமளிக்கும் வார்த்தைகளை கூறினார்.—மத்தேயு 5:5, NW.
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது சொன்னவற்றையே இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. பரிசுத்த ஆவியின் ஏவுதலால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாவீது எழுதியதாவது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
‘பூமியைச் சுதந்தரிப்பார்கள்’—என்னே சிலிர்ப்பூட்டும் எதிர்பார்ப்பு! ஆனால் இது ஜனங்களிடமிருந்து சுரண்டுவதற்கான மற்றொரு சதித்திட்டமா? இல்லவே இல்லை, ஏனெனில் வியப்பூட்டும் சிருஷ்டிப்புகளில் ஒன்றான பூமியைப் படைத்தவரும் அதன் உரிமையாளருமான யெகோவா தமக்கு விருப்பமானவர்களுக்கு அதைச் சொத்தாக தருவார், அப்படி தருவதற்கு சட்டப்படி அவருக்கு உரிமையும் இருக்கிறது. யெகோவா தம்முடைய பிரிய மகனான இயேசு கிறிஸ்துவுக்கு இந்த வாக்குறுதியை தீர்க்கதரிசனமாய் தாவீது ராஜாவின் மூலம் அளித்தார்: ‘என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்கு உரிமைச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்.’ (சங்கீதம் 2:8, NW) இதன் காரணமாகவே, இயேசுவை ‘சர்வத்துக்கும் உரிமைக்காரராக [கடவுள்] நியமித்தார்’ என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (எபிரெயர் 1:2, NW) எனவே, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வர்’ என்ற கூற்று நம்பகமானது என்பதால்தான் இயேசு அந்த வாக்குறுதியை அளித்தாரென நாம் முழுமையாக விசுவாசிக்கலாம். தாம் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும் அவருக்கு இருக்கிறது.—மத்தேயு 28:18.
எனினும் முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த வாக்குறுதி எப்படி நிறைவேறும்? இன்று எங்கு பார்த்தாலும், முரடர்களும் தலைக்கனம் பிடித்தவர்களுமே தழைத்தோங்குகிறார்கள், தங்களுக்கு தேவையானவற்றை அபகரித்துக் கொள்கிறார்கள். அப்படியானால் சாந்தகுணமுள்ளவர்களுக்கு? அதோடு, தூய்மைக்கேட்டினால் பூமி நாசமடைந்திருப்பதாலும், பேராசையும் குறுகிய நோக்குமுடைய ஜனங்கள் அட்டைகளைப் போல் பூமியின் வளங்களையெல்லாம் உறிஞ்சியிருப்பதாலும் அதைச் சொத்தாக பெறுவதில் ஏதாவது பிரயோஜனமிருக்குமா? இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பிற முக்கிய கேள்விகளுக்கும் பதில் காண அடுத்த கட்டுரையை வாசிக்குமாறு உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 3-ன் படம்]
உண்மையிலேயே மதிப்புள்ள சொத்தை நீங்கள் பெற காத்திருக்கிறீர்களா?