படிப்புக் கட்டுரை 50
“நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்”
“உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்.”—லூக். 23:43.
பாட்டு 145 பூஞ்சோலை பூமி—கடவுளின் வாக்கு
இந்தக் கட்டுரையில்...a
1. இறப்பதற்கு கொஞ்சம் முன்பு, பக்கத்தில் இருந்த குற்றவாளியிடம் இயேசு என்ன சொன்னார்? (லூக்கா 23:39-43)
இயேசுவும் அவருக்குப் பக்கத்தில் மரக் கம்பத்தில் அறையப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்தார்கள். (லூக். 23:32, 33) அந்த இரண்டு குற்றவாளிகளும் இயேசுவைக் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள். அப்படியென்றால், அவர்கள் கண்டிப்பாக இயேசுவுடைய சீஷர்களாக இருந்திருக்க மாட்டார்கள். (மத். 27:44; மாற். 15:32) ஆனால் கொஞ்ச நேரத்தில், அதில் ஒருவன் மனம் மாறி, “இயேசுவே, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான். அதற்கு இயேசு, “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொன்னார். (லூக்கா 23:39-43-ஐ வாசியுங்கள்.) ‘பரலோக அரசாங்கத்தை’ பற்றி இயேசு பிரசங்கித்த செய்தியை இந்தக் குற்றவாளி ஏற்றுக்கொண்டதாக எந்தப் பதிவும் இல்லை. அதுமட்டுமல்ல, இயேசு அவனிடம், ‘பரலோகத்தில் நீ என்னோடு சேர்ந்து ஆட்சி செய்வாய்’ என்றும் சொல்லவில்லை. (மத். 4:17) பூஞ்சோலை பூமியை மனதில் வைத்துத்தான் அவர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார். எப்படிச் சொல்லலாம்?
2. மனம் மாறிய குற்றவாளி ஒரு யூதன் என்று எதை வைத்துச் சொல்கிறோம்?
2 மனம் மாறிய அந்தக் குற்றவாளி ஒரு யூதனாக இருந்திருக்க வேண்டும். எதை வைத்து சொல்கிறோம்? அந்தக் குற்றவாளி, தன்னோடு இருந்த குற்றவாளியிடம், “கடவுளுக்குப் பயப்பட மாட்டாயா? உனக்கும் இதே தீர்ப்புதானே கிடைத்திருக்கிறது?” என்று கேட்டான். (லூக். 23:40) யூதர்கள் ஒரேவொரு கடவுளைத்தான் வணங்கினார்கள். ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய தெய்வங்களை வணங்கினார்கள். (யாத். 20:2, 3; 1 கொ. 8:5, 6) அந்தக் குற்றவாளிகள் யூதர்களாக இல்லையென்றால், அந்தக் கேள்வி வேறு மாதிரி இருந்திருக்கும். “தெய்வங்களுக்குப் பயப்பட மாட்டாயா?” என்று பன்மையில்தான் அந்தக் குற்றவாளி கேட்டிருப்பான். இன்னொரு விஷயம் என்னவென்றால், யூதர்களாக இல்லாதவர்களிடம் இயேசு பொதுவாகப் பிரசங்கிக்கவில்லை. ஏனென்றால், அவர் எல்லா மக்களிடமும் அனுப்பப்படவில்லை. “வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களிடம்தான்” அனுப்பப்பட்டார். (மத். 15:24) அதோடு, இறந்துபோனவர்களை உயிரோடு எழுப்பப்போவதாக இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் வாக்குக் கொடுத்திருந்தார். இது ஒருவேளை அந்தக் குற்றவாளிக்குத் தெரிந்திருக்கலாம். அவன் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்துவை யெகோவா உயிரோடு எழுப்புவார் என்றும், மனிதர்களை ஆட்சி செய்ய வைப்பார் என்றும் அவன் நம்பியதாகத் தெரிகிறது. தன்னையும் கடவுள் உயிரோடு எழுப்புவார் என்று அவன் அநேகமாக நம்பியிருக்க வேண்டும்.
3. மனம் மாறிய குற்றவாளிக்கு இயேசு பூஞ்சோலை என்று சொன்னவுடனே எது ஞாபகம் வந்திருக்கும்? விளக்குங்கள். (ஆதியாகமம் 2:15)
3 மனம் மாறிய அந்தக் குற்றவாளி ஒரு யூதனாக இருந்ததால், அவனுக்கு ஆதாம் ஏவாளைப் பற்றியும் அவர்களை யெகோவா குடிவைத்த அந்தப் பூஞ்சோலையைப் பற்றியும் தெரிந்திருக்கும். அதனால், இயேசு கிறிஸ்து பூஞ்சோலை என்று சொன்னவுடனே, இந்தப் பூமியில் இருக்கப்போகிற ஒரு அழகான தோட்டம்தான் அவனுக்கு ஞாபகம் வந்திருக்கும்.—ஆதியாகமம் 2:15-ஐ வாசியுங்கள்.
4. குற்றவாளியிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் நம்மை என்ன யோசிக்க வைக்கின்றன?
4 அந்தக் குற்றவாளியிடம் இயேசு சொன்ன வார்த்தைகள், பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நம்மை யோசிக்க வைக்கின்றன. ஒன்று தெரியுமா? சாலொமோனின் ஆட்சிக் காலத்தில் நிலைமை எப்படி இருந்தது என்று தெரிந்துகொண்டால், பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும். சாலொமோனைவிட இயேசு சிறந்த ராஜா என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், இயேசு தன்னோடு ஆட்சி செய்யப்போகிறவர்களோடு சேர்ந்து இந்தப் பூமியை ஒரு அழகான பூஞ்சோலையாக மாற்றுவார் என்று நாம் எதிர்பார்க்கலாம். (மத். 12:42) அப்படிப்பட்ட பூஞ்சோலையில் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ‘வேறே ஆடுகள்’ தெரிந்துகொள்வது முக்கியம்.—யோவா. 10:16.
பூஞ்சோலையில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
5. பூஞ்சோலை பூமியை நீங்கள் எப்படிக் கற்பனை செய்திருக்கிறீர்கள்?
5 பூஞ்சோலையில் வாழ்க்கை என்று சொன்னவுடனே, உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? நீங்கள் ஒருவேளை ஏதேன் தோட்டம் மாதிரி ஒரு அழகான தோட்டத்தைக் கற்பனை செய்யலாம். (ஆதி. 2:7-9) “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும்” உட்கார்ந்திருப்பார்கள் என்று மீகா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். (மீ. 4:3, 4) அங்கே சாப்பிடுவதற்கு நிறைய இருக்கும் என்று சொல்கிற பைபிள் வசனங்கள்கூட உங்கள் மனதுக்கு வரலாம். (சங். 72:16; ஏசா. 65:21, 22) ஒருவேளை இப்படியெல்லாம்கூட நீங்கள் கற்பனை செய்யலாம்: நீங்கள் ஒரு அழகான தோட்டத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு முன்பு ஒரு பெரிய டேபிள் இருக்கிறது. அந்த டேபிள் முழுவதும் ருசியான, விதவிதமான சாப்பாடு இருக்கிறது. செடிகொடிகள்... பூக்களுடைய... வாசனை உங்கள் மூக்கைத் துளைக்கிறது. உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள், நண்பர்கள், உயிர்த்தெழுந்து வந்தவர்கள் என எல்லாரும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிற சத்தமும் உங்களுக்குக் கேட்கிறது. நீங்கள் கற்பனை செய்கிற இந்த எல்லா விஷயங்களும் இந்தப் பூமியில் நிஜமாகவே நடக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதேசமயத்தில், திருப்தியான, சந்தோஷமான நிறைய வேலைகளும் அங்கே நமக்கு இருக்கும்.
6. பூஞ்சோலையில் நாம் என்னவெல்லாம் செய்வோம்? (படத்தைப் பாருங்கள்.)
6 வேலை செய்தால் சந்தோஷம் கிடைக்கிற மாதிரிதான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். (பிர. 2:24) இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில் நாம் எல்லாரும் ரொம்ப பிஸியாக இருப்போம். மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து வருகிறவர்கள், உயிர்த்தெழுந்து வருகிற லட்சக்கணக்கானவர்கள் என்று எல்லாருக்குமே துணிமணி... சாப்பாடு... தங்குவதற்கு இடம்... இவையெல்லாம் தேவைப்படும். அதனால், நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும். ஆனால், அதையெல்லாம் நாம் ரொம்ப சந்தோஷமாகச் செய்வோம். ஆதாம் ஏவாளுக்கு இருந்ததைப் போலவே இந்த முழு பூமியையும் தோட்டமாக மாற்றுகிற சந்தோஷமான வேலை நமக்கும் இருக்கும். யெகோவாவைப் பற்றித் தெரியாமல் இறந்துபோன லட்சக்கணக்கானவர்கள்... இயேசுவுடைய காலத்துக்கு முன்பு வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள்... என்று எல்லாரும் திரும்ப உயிரோடு வருவார்கள். அவர்கள் எல்லாருக்கும் சொல்லித் தருகிற வேலையும் நமக்கு இருக்கும். அதையும் நாம் எவ்வளவு சந்தோஷமாகச் செய்வோம் என்று யோசித்துப் பாருங்கள்.
7. நாம் எதை உறுதியாக நம்பலாம், ஏன்?
7 வரப்போகிற பூஞ்சோலையில் சமாதானமும் செழிப்பும் இருக்கும்... எல்லாமே நல்லபடியாக, ஒழுங்காக நடக்கும்... என்றெல்லாம் நாம் உறுதியாக நம்பலாம். ஏன்? ஏனென்றால், தன் மகனுடைய ஆட்சியில் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஏற்கெனவே ஒரு உதாரணத்தை யெகோவா நமக்குக் காட்டியிருக்கிறார். சாலொமோன் ராஜாவுடைய ஆட்சிதான் அந்த உதாரணம்.
சாலொமோன் ராஜாவின் ஆட்சி—பூஞ்சோலைக்கு ஒரு சின்ன உதாரணம்
8. சங்கீதம் 37:10, 11, 29-ல், தாவீது ராஜா எழுதிய வார்த்தைகள் எப்படி நிறைவேறின? (இந்தப் பத்திரிகையில் இருக்கிற “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.)
8 ஞானமான, உண்மையான ஒரு ராஜா ஆட்சி செய்யும்போது மக்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 37:10, 11, 29-ஐ வாசியுங்கள்.) வரப்போகிற பூஞ்சோலையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறபோது நாம் அடிக்கடி சங்கீதம் 37:11-ஐ வாசித்துக் காட்டியிருப்போம். அது ஒரு பொருத்தமான வசனம்தான். ஏனென்றால், மலைப்பிரசங்கத்தில் இயேசுவும்கூட அந்த வசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த வார்த்தைகள் எதிர்காலத்தில் நிறைவேறும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (மத். 5:5) அதேசமயத்தில், சங்கீதம் 37-ல் தாவீது எழுதிய வார்த்தைகள், சாலொமோன் ராஜாவின் ஆட்சிக்கும் பொருந்தியது. சாலொமோன் இஸ்ரவேலை ஆட்சி செய்தபோது கடவுளுடைய மக்கள் ‘பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில்’ ரொம்ப சமாதானமாகவும் செழிப்பாகவும் வாழ்ந்தார்கள். கடவுள் அவர்களிடம், “நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து என்னுடைய கட்டளைகளின்படி நடந்துவந்தால், . . . தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்” என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார். (லேவி. 20:24; 26:3, 6) இந்த வாக்குறுதிகள் சாலொமோனின் ஆட்சியில் நிறைவேறின. (1 நா. 22:9; 29:26-28) பொல்லாத ஜனங்கள் “யாருமே இருக்க மாட்டார்கள்” என்றும் யெகோவா சொல்லியிருந்தார். (சங். 37:10) அப்படியென்றால், சங்கீதம் 37:10, 11, 29-ல் இருக்கிற வார்த்தைகள் அன்றைக்கும் நிறைவேறின, எதிர்காலத்திலும் நிறைவேறப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
9. சாலொமோன் ராஜாவுடைய ஆட்சியைப் பற்றி சேபா தேசத்து ராணி என்ன சொன்னார்?
9 சாலொமோனின் ஆட்சியில் இஸ்ரவேலர்கள் எவ்வளவு சமாதானமாகவும் செழிப்பாகவும் இருக்கிறார்கள் என்ற செய்தி சேபா தேசத்து ராணியின் காதுக்கு எட்டியது. அதை நேரில் பார்ப்பதற்காக அவர் ரொம்ப தூரத்திலிருந்து எருசலேமுக்கு வந்தார். (1 ரா. 10:1) தன் கண்களாலேயே எல்லாவற்றையும் பார்த்த பிறகு, ‘இதில் பாதியைக்கூட நான் கேள்விப்படவில்லை . . . உங்களுடைய மக்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்! எப்போதும் உங்களோடு இருந்து, உங்களுடைய ஞானமான வார்த்தைகளைக் கேட்கிற உங்களுடைய ஊழியர்கள் எவ்வளவு சந்தோஷமானவர்கள்!’ என்று சொன்னார். (1 ரா. 10:6-8) ஆனால், சாலொமோனின் ஆட்சியில் இருந்த நிலைமைகள், யெகோவா தன் மகன் இயேசுவுடைய ஆட்சியில் மனுஷர்களுக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மட்டும்தான்.
10. இயேசு என்னென்ன விதங்களில் சாலொமோனைவிட சிறந்தவராக இருக்கிறார்?
10 சாலொமோனைவிட இயேசு எல்லா விதத்திலும் சிறந்தவர் என்று சொல்லலாம். ஏனென்றால், சாலொமோன் பாவ இயல்புள்ள சாதாரண மனுஷனாக இருந்தார். பெரிய பெரிய தவறுகளையெல்லாம் செய்தார். அதனால், கடவுளுடைய மக்கள் நிறைய கஷ்டப்பட்டார்கள். ஆனால் இயேசு, எந்தத் தப்புமே செய்யாத ஒரு பரிபூரணமான ராஜா. (லூக். 1:32; எபி. 4:14, 15) சாத்தான் கொண்டுவந்த ரொம்பக் கடுமையான சோதனைகளைக்கூட அவர் ஜெயித்திருக்கிறார். அவர் பாவமே செய்ய மாட்டார் என்பதையும், தனக்கு உண்மையாக இருக்கிற மக்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார் என்பதையும் இந்த விதத்தில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ராஜா நமக்கு இருப்பது உண்மையிலேயே ஒரு பெரிய பாக்கியம்!
11. எப்படிப்பட்டவர்கள் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள்?
11 மனுஷர்களைக் கவனித்துக்கொள்வதற்காகவும், யெகோவா நினைத்தது போல் பூமியை மாற்றுவதற்காகவும் இயேசுவோடு சேர்ந்து 1,44,000 பேர் ஆட்சி செய்வார்கள். (வெளி. 14:1-3) பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆண்களும் பெண்களும், நிறைய கஷ்டங்களையும் பாடுகளையும் அனுபவித்திருக்கிறார்கள். அதனால், பரலோகத்துக்குப் போன பிறகு ரொம்ப அனுதாபத்தோடு நம்மை ஆட்சி செய்வார்கள். இவர்கள் குறிப்பாக என்னவெல்லாம் செய்வார்கள்?
1,44,000 பேர் என்னவெல்லாம் செய்வார்கள்?
12. யெகோவா 1,44,000 பேருக்கு என்ன வேலையைக் கொடுப்பார்?
12 சாலொமோனைவிட இயேசுவும் 1,44,000 பேரும் எக்கச்சக்கமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும். சாலொமோன், ஒரேவொரு தேசத்தில் இருந்த லட்சக்கணக்கான மக்களை மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் இயேசுவும் 1,44,000 பேரும், உலகம் முழுவதும் இருக்கிற கோடிக்கணக்கான மக்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். 1,44,000 பேருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்து யெகோவா அவர்களைக் கௌரவப்படுத்தியிருக்கிறார், இல்லையா?
13. இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்பவர்கள் என்ன முக்கியமான வேலைகளைச் செய்வார்கள்?
13 இயேசுவைப் போலவே 1,44,000 பேரும் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருப்பார்கள். (வெளி. 5:10) இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்தின் கீழ் இருந்தபோது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கும் குருமார்கள்தான் முக்கியமாக உதவி செய்தார்கள். அந்த ‘திருச்சட்டம் வரப்போகிற நன்மைகளின் நிழலாக’ இருந்தது என்று பைபிள் சொல்கிறது. (எபி. 10:1) அதனால் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்பவர்கள்கூட, மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் கடவுளோடு நெருக்கமாக இருப்பதற்கும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்த ராஜாக்களும் குருமார்களும் பூமியில் இருக்கிற மக்களோடு எந்த விதத்தில் தொடர்புகொள்வார்கள் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். யெகோவா என்ன ஏற்பாடு செய்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் இருக்கிறவர்களுக்குத் தேவையான வழிநடத்துதல் கிடைக்கும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—வெளி. 21:3, 4.
பூஞ்சோலையில் வாழ்வதற்கு ‘வேறே ஆடுகள்’ என்ன செய்ய வேண்டும்?
14. ‘வேறே ஆடுகளுக்கும்’ சிறுமந்தைக்கும் இருக்கிற சம்பந்தம் என்ன?
14 தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிறவர்களை ‘சிறுமந்தை’ என்று இயேசு சொன்னார். (லூக். 12:32) ‘வேறே ஆடுகள்’ என்ற இன்னொரு தொகுதியைப் பற்றியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ஒரே மந்தையாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். (யோவா. 10:16) இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கெனவே ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். பூமி பூஞ்சோலையாக மாறும்போதும் அதே மாதிரிதான் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வார்கள். ஆனால், ‘சிறுமந்தை’ பரலோகத்தில் இருப்பார்கள், ‘வேறே ஆடுகள்’ பூமியில் இருப்பார்கள். ‘வேறே ஆடுகள்’ பூமியில் என்றென்றைக்கும் வாழ வேண்டும் என்றால் இப்போதே அவர்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.
15. (அ) கிறிஸ்துவின் சகோதரர்களோடு சேர்ந்து ‘வேறே ஆடுகள்’ எப்படி வேலை செய்கிறார்கள்? (ஆ) படத்தில் பார்க்கிற இந்தச் சகோதரரைப் போல நீங்கள் என்ன செய்யலாம்?
15 மனம் மாறிய அந்தக் குற்றவாளி இறந்துபோய்விட்டதால் இயேசுவுக்கு நன்றிகாட்ட அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், ‘வேறே ஆடுகளான’ நமக்கு, அவருக்கு நன்றிகாட்ட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கிறிஸ்துமேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை அவருடைய சகோதரர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக நாம் காட்டலாம். அதை வைத்துத்தான் வேறே ஆடுகளை நியாயந்தீர்க்கப்போவதாக இயேசு சொன்னார். (மத். 25:31-40) அவருடைய சகோதரர்களுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்? பிரசங்கிக்கிற வேலையையும் சீஷராக்கும் வேலையையும் உற்சாகமாகச் செய்வதன் மூலமாகக் காட்டலாம். (மத். 28:18-20) அதைச் செய்வதற்கு, அவர்கள் கொடுத்திருக்கிற பைபிள் படிப்புக் கருவிகளை, அதாவது இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகம் போன்ற கருவிகளை, நாம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு பைபிள் படிப்புகள் இல்லையா? அப்படியென்றால், உங்களால் முடிந்தவரை நிறைய பேரிடம் அந்த ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லி பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.
16. பூஞ்சோலை பூமியில் வாழ்வதற்கு நாம் இப்போதே என்ன செய்யலாம்?
16 பூஞ்சோலை பூமிக்குப் போன பிறகு யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்துகொள்ளலாம் என்று நம்மால் யோசிக்க முடியாது. இப்போதே நாம் அப்படி வாழ வேண்டும். நம்முடைய பேச்சு, செயல் எல்லாவற்றிலும் இப்போதே நாம் நேர்மையாக இருக்க வேண்டும். எதிலுமே அளவுக்கு மிஞ்சிப் போகக் கூடாது. யெகோவாவுக்கும், நம்முடைய மணத் துணைக்கும், சகோதர சகோதரிகளுக்கும் நாம் உண்மையாக இருக்க வேண்டும். இந்த மோசமான உலகத்தில் நாம் எந்தளவுக்கு யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோமோ அந்தளவுக்கு பூஞ்சோலை பூமியில் அவருக்குக் கீழ்ப்படிவது நமக்கு ஈஸியாக இருக்கும். அதுமட்டுமல்ல, பூஞ்சோலை பூமியில் வாழ நாம் தயாராகிறோம் என்பதைக் காட்டுவதற்கு சில திறமைகளையும் குணங்களையும் நாம் இப்போதே வளர்த்துக்கொள்ளலாம். “‘பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள’ நீங்கள் தயாரா?” என்ற கட்டுரையை இந்தப் பத்திரிகையில் பாருங்கள்.
17. முன்பு செய்த பாவங்களை நினைத்து நாம் புழுங்கிக்கொண்டே இருக்க வேண்டுமா? விளக்குங்கள்.
17 முன்பு நாம் ஏதாவது பெரிய பாவம் செய்திருந்தால், அதை நினைத்து நாம் புழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்காக, இயேசு கொடுத்த மீட்புப்பலியைச் சாக்காகச் சொல்லிக்கொண்டு ‘வேண்டுமென்றே நாம் பாவங்களைச் செய்துகொண்டு’ இருக்க முடியாது. (எபி. 10:26-31) ஆனால், நாம் உண்மையிலேயே மனம் திருந்தி யெகோவா கொடுக்கிற உதவியை ஏற்றுக்கொண்டு நம்முடைய நடத்தையை மாற்றிக்கொண்டால், அவர் நம்மை முழுமையாக மன்னித்துவிட்டார் என்று நாம் நம்பலாம். (ஏசா. 55:7; அப். 3:19) பரிசேயர்களிடம் இயேசு என்ன சொன்னார் என்று யோசித்துப் பாருங்கள். “நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று அவர் சொன்னார். (மத். 9:13) நம்முடைய பாவங்களையெல்லாம் முழுமையாகப் போக்குகிற சக்தி இயேசுவுடைய மீட்புப்பலிக்கு இருக்கிறது.
நீங்கள் என்றென்றைக்கும் பூஞ்சோலையில் வாழலாம்
18. இயேசுவுக்குப் பக்கத்தில் இறந்துபோன அந்தக் குற்றவாளியிடம் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
18 இயேசுவுக்குப் பக்கத்தில் இருந்த குற்றவாளியிடம் பூஞ்சோலையில் நீங்கள் பேசுவதாக கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இயேசுவின் பலிக்காக எவ்வளவு நன்றியோடு இருக்கிறீர்கள் என்று கண்டிப்பாக நீங்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்வீர்கள். ஒருவேளை, இயேசு பூமியிலிருந்த கடைசி சில மணிநேரங்களில் என்னவெல்லாம் நடந்தது என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லச் சொல்லி அவரிடம் நீங்கள் கேட்பீர்கள். அவர் பூஞ்சோலையில் இருப்பார் என்று இயேசு அவரிடம் சொன்னபோது அவருக்கு எப்படி இருந்தது என்றும்கூட நீங்கள் கேட்பீர்கள். அவர் உங்களிடம், சாத்தானுடைய உலகத்தில் கடைசி நாட்களில் வாழ்ந்தது எப்படி இருந்தது என்று கேட்கலாம். இந்த மாதிரி ஆட்களுக்கு பைபிளை சொல்லித்தருவது எவ்வளவு பெரிய பாக்கியம்!—எபே. 4:22-24.
19. பூஞ்சோலையில் வாழ்வது ஏன் போரடிக்காது? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)
19 பூஞ்சோலையில் வாழ்வது கொஞ்சம்கூட போரடிக்காது. நாம் நிறைய சுவாரஸ்யமான ஆட்களைப் பார்ப்போம். பிரயோஜனமான, சந்தோஷமான நிறைய வேலைகளைச் செய்வோம். எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய அன்பான அப்பா யெகோவாவைப் பற்றி ஒவ்வொரு நாளுமே நாம் புதிது புதிதாகக் கற்றுக்கொள்வோம். எத்தனை யுகங்களானாலும் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அவருடைய படைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கும். அதோடு, அவர் நமக்காகக் கொடுத்திருக்கிற விஷயங்களை ஒவ்வொரு நாளும் நாம் சந்தோஷமாக அனுபவிப்போம். யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பு நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகும். பூஞ்சோலை பூமியில் நாம் என்றென்றைக்கும் வாழப்போகிறோம் என்று யெகோவாவும் இயேசுவும் கொடுத்திருக்கிற வாக்குறுதிகளுக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம், இல்லையா?
பாட்டு 22 கடவுளுடைய ஆட்சி வருக!
a பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அடிக்கடி யோசித்துப் பார்க்கிறீர்களா? அப்படி யோசித்துப் பார்க்கும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கும். பூஞ்சோலை பூமியில் யெகோவா நமக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று எந்தளவுக்கு யோசிக்கிறீர்களோ அந்தளவுக்கு உற்சாகமாக அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வீர்கள். பூஞ்சோலை பூமியைப் பற்றி இயேசு கொடுத்த வாக்குறுதியில் உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும்.
b பட விளக்கம்: பூஞ்சோலையில் மறுபடியும் உயிரோடு வருகிறவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆசையாகக் காத்திருக்கும் ஒரு சகோதரர், இப்போதே மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.