திருமணத்தில் புதிய ஆளுமையைப் பேணிவளர்த்தல்
“உங்கள் மனதை உந்துவிக்கும் சக்தியினாலே நீங்கள் புதுப்பிக்கப்படவேண்டும் . . . புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 4:23, 24, NW.
1. திருமணம் ஏன் அசட்டையாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது?
திருமணம், ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கும் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும், எனவே இது ஒருபோதும் அசட்டையாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. ஏன் அப்படி? ஏனென்றால், இது மற்றொரு நபருக்கு வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டிருப்பதை உட்படுத்துகிறது. இது, ஒருவர் தன்னுடைய முழு வாழ்க்கையையும் அந்த நபரோடு பங்குகொள்வதை அர்த்தப்படுத்துகிறது. இந்தக் கடமையுணர்வு சரியாக இருக்கவேண்டுமென்றால், புத்தியுள்ள தீர்மானம் தேவை. ‘மனதை உந்துவித்து, அதனால் புதிய ஆளுமையை உருவாக்கும்’ ஒரு சரியான பாதிப்பையும் இது தேவைப்படுத்துகிறது.—எபேசியர் 4:23, 24, கத்.பை.; ஒப்பிடுக: ஆதியாகமம் 24:10-58; மத்தேயு 19:5, 6.
2, 3. (எ) ஞானமாக ஒரு திருமண துணையைத் தெரிந்தெடுப்பதற்கு எது தேவையாக இருக்கிறது? (பி) ஒரு திருமணத்தில் என்ன உட்பட்டிருக்கிறது?
2 வல்லமைமிக்க மாம்ச இச்சையினால் இழுத்துச்செல்லப்பட்டுத் திருமணம் செய்ய அவசரப்படாமல் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. வயதுவந்தவர்களுக்குரிய ஆளுமையையும் நடத்தையையும் வளர்ப்பதற்கு காலம் தேவையாக இருக்கிறது. காலத்தோடு, அனுபவமும் அறிவும் சேர்ந்துவருகிறது, இது சரியான தீர்மானங்களைச் செய்வதற்கு தேவையான அஸ்திவாரமாகச் செயல்படும். பின்பு, பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுப்பதில் அதிக வெற்றியைக் காணலாம். ஒரு ஸ்பானிய பழமொழி தெளிவாக இவ்வாறு சொல்கிறது: “தவறாக கல்யாணம்பண்ணியிருப்பதைக் காட்டிலும் தனியாக நடப்பதே மேல்.”—நீதிமொழிகள் 21:9; பிரசங்கி 5:2.
3 சரியான துணையைத் தெரிந்தெடுப்பது மிகத்தெளிவாகவே வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையாகும். இதற்காகக் கிறிஸ்தவர் பைபிளின் வழிநடத்துதல்களைப் பின்பற்றவேண்டும், வெறும் உடல் கவர்ச்சியினாலும், தகாத உணர்ச்சிப்பூர்வ மற்றும் காம அழுத்தங்களாலும் வழிநடத்தப்படக்கூடாது. திருமணம் இரண்டு உடல்களைச் சேர்ப்பதைவிட அதிகத்தை உட்படுத்துகிறது. இது இரண்டு ஆளுமைகளும் இரண்டு குடும்பமும், கல்வி சார்ந்த பின்னணிகளும், ஒருவேளை இரண்டு கலாச்சாரங்களும் மொழிகளும் ஒன்றாகச் சேர்வதாகும், நிச்சயமாகவே திருமணத்தில் இருவர் ஒன்றுசேர்வது நாவின் சரியான உபயோகத்தை அவசியப்படுத்துகிறது; பேச்சின் வல்லமையால், நாம் உடைத்துப்போடுகிறோம் அல்லது கட்டியெழுப்புகிறோம். இவையெல்லாவற்றிலிருந்து, ‘கர்த்தருக்குள் மட்டும் திருமணம்செய்,’ அதாவது உடன்விசுவாசியை, என்ற பவுலினுடைய ஆலோசனையின் ஞானம் நமக்குப் புரிகிறது.—1 கொரிந்தியர் 7:39, NW; ஆதியாகமம் 24:1-4; நீதிமொழிகள் 12:18; 16:24.
திருமணத்தின் அழுத்தங்களை எதிர்ப்படுதல்
4. திருமண வாழ்க்கையில், சில சமயங்களில், முரண்பாடும் மனஇறுக்கமும் ஏன் வருகின்றன?
4 நல்ல அஸ்திவாரத்தோடும்கூட சில சமயங்களில் முரண்பாடு, அழுத்தம், மனஇறுக்கம் போன்றவை வரலாம். இவையெல்லாம் திருமணமாகியிருந்தாலும் அல்லது ஆகாமலிருந்தாலும் எவருக்கும் சாதாரணமாக வரக்கூடியதே. பொருளாதார மற்றும் உடல்நலஞ்சார்ந்த பிரச்னைகள் எந்த உறவுக்கும் அழுத்தத்தைக் கொண்டுவரலாம். மிகச்சிறந்த திருமண வாழ்க்கையிலும் மனநிலை மாற்றங்கள் தனி ஆளுமைகளின் முரண்பாடுகளுக்கு வழிநடத்தலாம். மற்றொரு அம்சமானது, நாக்கின்மீது யாருக்குமே முழு செல்வாக்கில்லை, யாக்கோபு சொன்னப்பிரகாரம்: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான். . . . நாவானதும் சிறிய அவயமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!”—யாக்கோபு 3:2, 5.
5, 6. (எ) தவறாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கையில் என்ன தேவையாக இருக்கிறது? (பி) பிளவை நீக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?
5 திருமண வாழ்க்கையில் அழுத்தங்கள் வரும்போது, சூழ்நிலைமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது? தவறாகப் புரிந்துகொண்டிருப்பது, ஒரு வாய்ச்சண்டையாக மாறாதபடியும், ஒரு வாய்ச்சண்டை முறிவான உறவாக மாறாதபடியும் தவிர்ப்பது எப்படி? இங்குத்தான் அந்த மனதை உந்துவிக்கும் சக்தி முக்கிய பாகத்தை வகிக்கிறது. இந்த உந்துவிக்கும் சக்தி, உடன்பாடானதாகவோ எதிர்மறையானதாகவோ, ஆவிக்குரிய மனச்சாய்வுள்ளதாகவும் கட்டியெழுப்புவதாகவுமோ மாம்சப் பிரகாரமான மனச்சாய்வுகளினால் கட்டுப்படுத்தப்பட்டு நாசப்படுத்துவதாகவோ இருக்கலாம். கட்டியெழுப்புவதாக இருந்தால், அந்த நபர் பிளவை நீக்கி, அவனுடைய அல்லது அவளுடைய திருமண வாழ்க்கையைச் சரியான வழியில் நடத்துவதற்கு செயல்படுவார். விவாதங்களும் வேறுபாடுகளும் திருமணத்தை முறிக்கவேண்டியதில்லை. பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுவதன்மூலம் குழப்பம் நீக்கப்பட்டு, பரஸ்பர மரியாதையும் புரிந்துகொள்ளுதலும் மறுபடியும் கொண்டுவரப்படலாம்.—ரோமர் 14:19; எபேசியர் 4:23, 26, 27.
6 இந்தச் சூழ்நிலைமைகளில் பவுலின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமானவை: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12-14.
7. சிலர் தங்களுடைய திருமண வாழ்க்கையில் என்ன பிரச்னை உடையவர்களாக இருக்கலாம்?
7 இந்த வசனம், வாசிப்பதற்கு எளிதாகத்தான் இருக்கிறது, ஆனால் நவீன வாழ்க்கையின் அழுத்தத்தின்கீழ் இதைப் பின்பற்றுவது எப்பொழுதும் அவ்வளவு சுலபமல்ல. அடிப்படைப் பிரச்னை என்னவாக இருக்கலாம்? சில சமயங்களில், தன்னையறியாமலேயே, ஒரு கிறிஸ்தவர் இரட்டை வாழ்க்கை வாழலாம். இராஜ்ய மன்றத்தில், அவர் சகோதரர்கள் மத்தியில் தயவோடும், கரிசனையோடும் செயல்படலாம். பின்பு, வீட்டிற்கு வந்தபிறகோ, வீட்டின் ஒருவித சலித்துப்போன போக்கில், தன்னுடைய ஆவிக்குரிய உறவை மறக்கும்படித் தூண்டப்படலாம். அங்கு, வெறும் ஒரு மனிதன்-மனைவி, “அவன்,” “அவள்” என்று வாழலாம். அவன் (அல்லது அவள்) அழுத்தத்தில், இராஜ்ய மன்றத்தில் ஒருபோதும் சொல்லப்படக்கூடாத, தயவற்ற வார்த்தைகளை ஒருவேளை சொல்லலாம். நடந்தது என்ன? கணப்பொழுதிற்கு, கிறிஸ்தவம் மறைந்துவிட்டது. கடவுளின் ஊழியக்காரர், வீட்டில் இன்னும் ஒரு கிறிஸ்தவச் சகோதரராக (அல்லது சகோதரியாக) இருக்கிறார் என்பதை மறந்துவிட்டார். மனதை உந்துவிக்கும் சக்தி, உடன்பாடாக இருப்பதற்குப் பதிலாக எதிர்மறையாகிவிட்டது.—யாக்கோபு 1:22-25.
8. மனதை உந்துவிக்கும் சக்தி எதிர்மறையானதாக இருந்தால், என்ன நடக்கலாம்?
8 விளைவு என்ன? கணவன், ‘மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், விவேகத்தோடு அவளுடனே வாழ்ந்து, அவளுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்ய’ ஒருவேளை தவறலாம். மனைவி தன்னுடைய கணவனுக்கு இனி ஒருபோதும் மரியாதை கொடுக்காமல் இருக்கலாம்; அவளுடைய ‘சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி’ இழக்கப்பட்டிருக்கிறது. மனதை உந்துவிக்கும் சக்தி, ஆவிக்குரியதாக இருப்பதற்குப் பதிலாக மாம்சப்பிரகாரமானதாக இருக்கிறது. ஒருவித “மாம்சசிந்தை” மேற்கொண்டிருக்கிறது. ஆகையால், அந்த உந்துவிக்கும் சக்தியை ஆவிக்குரியதாகவும் உடன்பாடானதாகவும் வைத்திருப்பதற்கு என்ன செய்யலாம்? நாம் நம்முடைய ஆவிக்குரிய தன்மையைப் பலப்படுத்தவேண்டும்.—1 பேதுரு 3:1-4, 7; கொலோசெயர் 2:19.
சக்தியைப் பலப்படுத்துங்கள்
9. அன்றாட வாழ்க்கையில் தெரிவு செய்வதற்கு என்ன தெரிவுகள் இருக்கின்றன?
9 உந்துவிக்கும் சக்தி, நாம் தீர்மானங்களையும் தெரிந்தெடுத்தல்களையும் செய்யும்போது தலைதூக்கும் மனச்சாய்வாகும். வாழ்க்கை—நல்லது அல்லது கெட்டது, தன்னலமுள்ளது அல்லது தன்னலமற்றது, ஒழுக்கமானது அல்லது ஒழுக்கக்கேடானது—என்ற தொடர்ச்சியான தெரிந்தெடுத்தல்களை முன்வைக்கிறது. சரியான தீர்மானங்களைச் செய்ய நமக்கு உதவிசெய்வது என்ன? மனதை உந்துவிக்கும் சக்தி, யெகோவாவின் சித்தத்தைச் செய்வதையே மையமாகக் கொண்டிருந்தால். அது மனதின் ஆழத்தை உந்துவிக்கும் சக்தியாக இருக்கும். சங்கீதக்காரர் ஜெபம்செய்தார்: “கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.”—சங்கீதம் 119:33; எசேக்கியேல் 18:31; ரோமர் 12:2.
10. மனதை உந்துவிக்கும் சக்தியை, உடன்பாடான வகையில் நாம் எவ்வாறு பலப்படுத்தலாம்?
10 யெகோவாவோடு பலமான உறவு, திருமணத்தில் பற்றுறுதியில்லாமை உட்பட மோசமான காரியங்களிலிருந்து விலகிக் காத்துக்கொள்வதற்கும், அவரைச் சந்தோஷப்படுத்தவும் நமக்கு உதவிசெய்யும். இஸ்ரவேலர் “[அவர்களுடைய] கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்”யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர். ஆனால் கடவுள் மேலும் கட்டளையிட்டார்: “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” பத்துக்கட்டளைகளில் ஏழாவது: “நீ விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்பதன் அடிப்படையில், இஸ்ரவேலர் விபசாரத்தை வெறுக்கவேண்டியதாயிருந்தது. அந்தக் கட்டளை, திருமண வாழ்க்கையில் உண்மைத்தன்மையைப்பற்றிய கடவுளின் கண்டிப்பான நோக்குநிலையை எடுத்துக்காண்பித்தது.—உபாகமம் 12:28; சங்கீதம் 97:10; யாத்திராகமம் 20:14; லேவியராகமம் 20:10.
11. மனங்களை உந்துவிக்கும் சக்தியை நாம் எவ்வாறு இன்னுமதிகமாகப் பலப்படுத்தலாம்?
11 மனதை உந்துவிக்கும் சக்தியை நாம் எவ்வாறு இன்னுமதிகமாகப் பலப்படுத்தலாம்? ஆவிக்குரிய செயல்களையும் மதிப்பீடுகளையும் போற்றுவதன்மூலம். அதாவது, கடவுளுடைய வார்த்தையை ஒழுங்காகப் படிக்கவேண்டிய தேவையைத் திருப்திப்படுத்தவேண்டும், யெகோவாவின் நினைவுகளையும், ஆலோசனையையும் கலந்துபேசுவதில் சந்தோஷத்தைக் காணக் கற்றுக்கொள்ளவேண்டும். நம்முடைய இருதயப்பூர்வமான உணர்ச்சிமிக்க கருத்துகள், சங்கீதக்காரனுடையதைப்போல் இருக்கவேண்டும்: “என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.”—சங்கீதம் 119:10, 11, 33, 34.
12. இயேசுவின் சிந்தையைப் பிரதிபலிப்பதில் என்ன காரியங்கள் நம்மை ஐக்கியப்படுத்தலாம்?
12 யெகோவாவின் நீதியான நியமங்களுக்கு இப்படிப்பட்ட போற்றுதல், பைபிளைப் படிப்பதால் மட்டும் காத்துக்கொள்ளப்படுவதில்லை, ஒன்றாகச் சேர்ந்து கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒழுங்காகப் பங்குகொள்வதன்மூலமும் கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடுவதன்மூலமும் காத்துக்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டு வல்லமைமிக்க தூண்டுதல்கள், நம் மனதை உந்துவிக்கும் சக்தியைத் தொடர்ந்து பலப்படுத்துவதினால், நம்முடைய தன்னலமற்ற வாழ்க்கை எப்போதும் கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலிக்கும்.—ரோமர் 15:5; 1 கொரிந்தியர் 2:16.
13. (எ) மனதை உந்துவிக்கும் சக்தியைப் பலப்படுத்துவதில், ஜெபம் ஏன் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது? (பி) இந்த விஷயத்தில், இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்?
13 மற்றொரு அம்சத்தை, பவுல் எபேசியருக்கு எழுதின தன் கடிதத்தில் முக்கியப்படுத்திக் காண்பிக்கிறார்: “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்[ணுங்கள்.]” (எபேசியர் 6:18) கணவர்மார்களும் மனைவிமார்களும் ஒன்றுசேர்ந்து ஜெபம்செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஜெபங்கள் அநேகமாக இருதயத்தைத் திறந்து, பிளவுகளை நீக்கும் மனம்திறந்த உரையாடல்களுக்கு வழிநடத்தியிருக்கிறது. சோதனையும் தூண்டுதலும் வரும் சமயங்களில், நாம் கடவுளிடம் ஜெபத்தில் வந்து, கிறிஸ்துவின் சிந்தைக்கு ஒப்பாக உள்ளவற்றைச் செய்ய உதவிகேட்டு, ஆவிக்குரிய பலத்துக்காக வேண்டிக்கொள்ளவேண்டும். பரிபூரண இயேசுவும்கூட, அநேக சமயங்களில், பலம்தரும்படி அவருடைய தகப்பனிடம் ஜெபத்தில் கேட்டார். அவருடைய ஜெபங்கள் இருதயப்பூர்வமானதாகவும் ஒருமுகப்பட்டும் இருந்தன. அதைப்போலவே இன்று, சோதனையின் காலங்களில், மாம்சத்துக்கு இணங்கி, திருமண உறுதிமொழிக்கு உண்மையற்றவராக இருக்கும் ஆசையை எதிர்ப்பதற்கு உதவிசெய்யும்படி, யெகோவாவிடம் கேட்பதன்மூலம் சரியான தீர்மானத்தைச் செய்வதற்கான பலத்தை நாம் பெறலாம்.—சங்கீதம் 119:101, 102.
நடத்தையின் முரண்பாடான எடுத்துக்காட்டுகள்
14, 15. (எ) உணர்ச்சித்தூண்டுதலுக்கு யோசேப்பு எப்படிப் பிரதிபலித்தார்? (பி) உணர்ச்சிதூண்டுதலை எதிர்ப்பதற்கு யோசேப்பிற்கு உதவிசெய்தது எது?
14 சோதனையை நாம் எவ்வாறு எதிர்ப்படலாம்? இந்த விஷயத்தில், யோசேப்பினாலும் தாவீதினாலும் செய்யப்பட்ட செயல்களிலிருந்து தெளிவான வித்தியாசம் நம்மிடத்தில் இருக்கிறது. போத்திபாரின் மனைவி, அந்தச் சமயத்தில் திருமணமாகாதவராக இருந்த அழகான யோசேப்பை நித்தம் நித்தம் வசீகரிக்க முயற்சிசெய்தபோது, அவர் இறுதியில் அவளிடம்: “இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் [உன் கணவர்] எனக்கு விலக்கிவைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி”? என்றார்.—ஆதியாகமம் 39:6-9.
15 எளிதில் இணங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில், யோசேப்பைச் சரியான செயலில் ஈடுபடும்படிச் செய்ய உதவியது என்ன? அவர் மனதை உந்துவிக்கும் ஒரு வல்லமையான சக்தியை உடையவராக இருந்தார். அவர் யெகோவாவோடு உள்ள அவருடைய உறவை அதிக கவனமாக மனதில் வைத்திருந்தார். இந்த மோகமடைந்தப் பெண்ணோடு வேசித்தனம்செய்வது, அவளுடைய கணவனுக்கு விரோதமான பாவம் மட்டும் அல்ல, ஆனால் அதிமுக்கியமாகக் கடவுளுக்கு விரோதமாக இருக்கிறது என அவர் அறிந்திருந்தார்.—ஆதியாகமம் 39:12.
16. தாவீது உணர்ச்சித்தூண்டுதலுக்கு எப்படிப் பிரதிபலித்தார்?
16 மறுபட்சத்தில், தாவீதுக்கு என்ன நடந்தது? அவர் சட்டம் அனுமதித்ததினால் அநேக மனைவிகளை உடைய, திருமணமானவராக இருந்தார். ஒரு மாலை, அவருடைய அரண்மனையிலிருந்து ஒரு பெண் குளிப்பதைக் கண்டார். அவள் உரியாவின் மனைவியாகிய பத்சேபாள், அழகானவள். தெளிவாகவே தாவீதுக்குச் செயலைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்தது—அவருடைய இருதயத்தில் காம உணர்ச்சி வந்தபோது தொடர்ந்து பார்ப்பது அல்லது வேறுபக்கத்தில் திரும்பி, ஆசையைத் தவிர்ப்பது. அவர் எதைச் செய்யத் தெரிந்தெடுத்தார்? அவர் அவளைத் தன்னுடைய அரண்மனைக்குக் கொண்டுவரும்படிச் செய்து, அவளோடு விபசாரமும் செய்தார். இதைவிட மோசமாக, அவளுடைய கணவனையும் கொலைசெய்ய திட்டம்செய்தார்.—2 சாமுவேல் 11:2-4, 12-27.
17. தாவீதின் ஆவிக்குரிய நிலைமையைப்பற்றி நாம் என்ன உய்த்துணரமுடிகிறது?
17 தாவீதின் பிரச்னை என்ன? சங்கீதம் 51-ல் உள்ள அவருடைய மனஉருத்தலான பாவஅறிக்கையிலிருந்து, நாம் சில உண்மைகளை உய்த்துணரமுடிகிறது. அவர் சொன்னார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” அவர் தூண்டப்பட்டபோது, சுத்தமான மற்றும் நிலைவரமான ஆவியை அவர் கொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஒருவேளை, அவர் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை வாசிப்பதை புறக்கணித்திருக்கலாம், இதன் விளைவாக, அவருடைய ஆவிக்குரிய தன்மை பலவீனப்பட்டிருக்கும். அல்லது ஒருவேளை ராஜாவாக அவருக்கிருந்த பதவியும் பலமும் அவருடைய சிந்தனையைக் கெடுக்க அவர் அனுமதித்திருந்ததால், அவர் மோக இச்சைக்கு இரையானார். நிச்சயமாகவே, அவர் மனதை உந்துவிக்கும் சக்தி அப்போது தன்னலமுள்ளதாகவும் பாவமுள்ளதாகவும் இருந்தது. எனவே அவர், ‘ஒரு புதிய ஆவி, நிலைவரமானவொன்று’ அவருக்குத் தேவை என்பதை உணர ஆரம்பித்தார்.—சங்கீதம் 51:10; உபாகமம் 17:18-20.
18. விபசாரத்தைப்பற்றி இயேசு என்ன ஆலோசனைக் கொடுத்தார்?
18 சில கிறிஸ்தவத் திருமண வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் ஒருவரோ அல்லது இருவருமோ, தாவீது ராஜாவினுடையதைப் போன்ற ஆவிக்குரிய பலவீனமான நிலைக்குத் தங்களை விழுவதற்கு அனுமதித்திருக்கின்றனர். அவருடைய எடுத்துக்காட்டு, நாம் மற்றொரு பெண்ணை அல்லது ஆணைத் தொடர்ந்து இச்சையோடு பார்த்துக்கொண்டிருப்பதற்கு எதிராக நம்மை எச்சரிக்கவேண்டும், ஏனென்றால் இது இறுதியில் விபசாரத்தில் முடிவடையக்கூடும். இதன் சம்பந்தமாக மனிதரின் உணர்ச்சிகளை இயேசு அறிந்திருந்தார் என்பதைக் காட்டினார். ஏனென்றால், அவர் சொன்னார்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.” இப்படிப்பட்ட காரியத்தில், மனதை உந்துவிக்கும் சக்தி, தன்னலமுள்ளதாகவும் சிற்றின்பம் சார்ந்ததாகவும் இருக்கிறது, ஆவிக்குரியதாக இல்லை. அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் விபசாரத்தைத் தவிர்த்து, தங்களுடைய திருமண வாழ்க்கையைச் சந்தோஷம் மற்றும் திருப்திகரமானதாக வைத்திருப்பதற்கு என்னதான் செய்யவேண்டும்?—மத்தேயு 5:27, 28.
திருமண இணைப்பைப் பலப்படுத்துங்கள்
19. ஒரு திருமண வாழ்க்கை எவ்வாறு பலப்படுத்தப்படலாம்?
19 சாலொமோன் ராஜா எழுதினார்: “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.” ஒற்றுமையுள்ள ஒரு திருமண வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து துன்பத்தைச் சமாளிப்பது, ஒருவராக செய்வதைக் காட்டிலும் நிச்சயமாகவே மேல்தான். ஆனால், அவர்களுடைய இணைப்பு, கடவுளையும் உடையதாக, முப்புரிநூலாக இருந்தால், திருமண வாழ்க்கை அசைக்கமுடியாததாக இருக்கும். திருமணத்தில் எப்படிக் கடவுள் இருக்கமுடியும்? தம்பதிகள் திருமணம் சம்பந்தமான அவருடைய நியமங்களையும் ஆலோசனையையும் பொருத்திப் பிரயோகிப்பதால் அவ்வாறு செய்யலாம்.—பிரசங்கி 4:12.
20. பைபிளின் எந்தப் புத்திமதி ஒரு கணவருக்கு உதவிசெய்யலாம்?
20 ஒரு கணவர் பின்வரும் வசனங்களின் புத்திமதியைப் பொருத்திப் பின்பற்றினால், நிச்சயமாகவே அவருடைய திருமண வாழ்க்கை வெற்றிக்குரிய ஒரு மேலான அஸ்திவாரத்தைப் பெறும்:
“புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.”—1 பேதுரு 3:7.
“புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.”—எபேசியர் 5:25, 27, 28.
“அவள் புருஷனும் அவளைப்பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.”—நீதிமொழிகள் 31:28, 29.
“தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான். விபசாரம்பண்ணுகிறவன் . . . தன் ஆத்துமாவைக் கெடுத்துபோடுகிறான்.”—நீதிமொழிகள் 6:28, 29, 32.
21. பைபிளின் எந்த ஆலோசனை ஒரு மனைவிக்கு உதவிசெய்யலாம்?
21 ஒரு மனைவி பின்வரும் பைபிள் கருத்துகளுக்குக் கவனம்செலுத்தினால், அது அவளுடைய திருமண வாழ்க்கையின் ஸ்திரத்தன்மைக்கு உதவிசெய்யும்:
‘மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையையும், உங்களுடைய சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியையும் அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.’—1 பேதுரு 3:1-4.
“புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய [பால் சம்பந்தப்பட்ட] கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். . . . இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்.”—1 கொரிந்தியர் 7:3-5.
22. (எ) நல்ல விதத்தில் என்ன மற்ற அம்சங்கள் ஒரு திருமண வாழ்க்கையைப் பாதிக்கலாம்? (பி) தள்ளிவிடுதலை யெகோவா எப்படிக் கருதுகிறார்?
22 அன்பு, தயவு, இரக்கம், பொறுமை, புரிந்துகொள்ளும் தன்மை, உற்சாகம், மற்றும் போற்றுதல் ஆகிய இவையெல்லாம், திருமணம் என்ற விலையுயர்ந்த மணிக்கல்லின் கூடுதலான முக்கிய முகப்புக்கூறுகள் என்பதாகவும் பைபிள் காண்பிக்கிறது. இவையில்லாத திருமண வாழ்க்கை, சூரியவொளியும், நீரும் இல்லாத ஒரு செடியைப் போன்றது—அது எப்போதாவதுதான் மலரும். எனவே, நம் மனங்களை உந்துவிக்கும் சக்தி, நம்முடைய திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தவும், புதுப்பித்துக்கொள்ளவும் தூண்டட்டும். நினைவில் வையுங்கள், யெகோவா ‘தள்ளிவிடுதலை வெறுக்கிறார்.’ கிறிஸ்தவ அன்பு, பிரயோகிக்கப்பட்டால், அங்கு விபசாரத்திற்கும் திருமண முறிவிற்கும் வாய்ப்பே இருக்காது. ஏன்? “ஏனென்றால் அன்பு ஒருக்காலும் ஒழியாது.”—மல்கியா 2:16; 1 கொரிந்தியர் 13:4-8; எபேசியர் 5:3-5.
நீங்கள் விளக்கமுடியுமா?
◻ சந்தோஷமான திருமண வாழ்க்கையின் அடிப்படைத் தேவை என்ன?
◻ மனதை உந்துவிக்கும் சக்தி எவ்வாறு ஒரு திருமண வாழ்க்கையைப் பாதிக்கலாம்?
◻ நமது மனங்களை உந்துவிக்கும் சக்தியைப் பலப்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?
◻ தூண்டப்பட்டபோது, யோசேப்பும் தாவீதும் எவ்வாறு வித்தியாசமாகப் பிரதிபலித்தனர்?
◻ திருமண இணைப்பைப் பலப்படுத்துவதற்கு, என்ன பைபிள் ஆலோசனை கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் உதவியாக இருக்கும்?
[பக்கம் 18-ன் படங்கள்]
நாம் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமா—சபையில் தயவாகவும், வீட்டில் கடுகடுப்பாகவும்?