யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
யெகோவாவின் ஊழியர்களான நமக்கு சோதனைகளும் கஷ்டங்களும் வரும் என்பதை அறிந்திருக்கிறோம். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:12) சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சகித்து, கடவுளுக்கு நம் உத்தமத்தை நிரூபித்துக் காட்ட எது நமக்கு உதவும்?
சங்கீத புத்தகத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாம் பகுதி நமக்கு அந்த உதவியை அளிக்கிறது. சோதனைகளை வெற்றிகரமாக சகிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவில் முழு நம்பிக்கை வைப்பதும் இரட்சிப்பைப் பெற அவருக்காக காத்திருக்கக் கற்றுக்கொள்வதும் அவசியம் என்று 42-72 வரையான சங்கீதங்கள் காட்டுகின்றன. நமக்கு எப்பேர்ப்பட்ட அருமையான பாடம் இது! மற்ற பைபிள் புத்தகங்களைப் போலவே, சங்கீத புத்தகத்தின் இரண்டாம் பகுதி இன்றைக்குக்கூட ‘ஜீவனும் வல்லமையும் உள்ளதாய் இருக்கிறது.’—எபிரெயர் 4:12.
யெகோவா நமக்கு ‘அடைக்கலமும் பெலனுமாய்’ இருக்கிறார்
ஒரு லேவியன் அந்நிய நாட்டில் கைதியாக இருக்கிறார். யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்திற்குச் சென்று வழிபட முடியாததை நினைத்து அவர் துக்கத்தில் ஆழ்ந்துபோனாலும், தன்னையே தேற்றிக்கொண்டு இவ்வாறு கூறுகிறார்: “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு.” (சங்கீதம் 42:5, 11; 43:5) 42 மற்றும் 43-ம் சங்கீதங்களில் திரும்பத் திரும்ப வருகிற இந்த வசனம் அந்த இரு சங்கீதங்களிலுள்ள மூன்று பத்திகளையும் இணைத்து ஒரே பாடலாக ஆக்குகிறது. 44-ம் சங்கீதம், துயரத்திலிருந்த யூதா தேசத்தின் சார்பாக வேண்டப்படும் ஒரு விண்ணப்பமாக இருக்கிறது. ஒருவேளை எசேக்கியா ராஜாவின் காலத்தில் அசீரியர்கள் அவர்களை அச்சுறுத்திய சமயமாக அது இருந்திருக்கலாம்.
45-ம் சங்கீதம் ஒரு ராஜாவின் திருமணத்தைப் பற்றியது, அது மேசியானிய ராஜாவின் திருமணத்தை முன்னுரைக்கிறது. அதனை அடுத்து வரும் மூன்று சங்கீதங்கள் யெகோவாவை ‘அடைக்கலமும் பெலனுமானவர்,’ “பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜா,” ‘உயர்ந்த அடைக்கலமானவர்’ என்று வர்ணிக்கின்றன. (சங்கீதம் 46:1; 47:2; 48:3) எந்த மனிதனாலும் ‘தன் சகோதரனை எவ்விதத்திலாவது மீட்டுக்கொள்ள முடியாது’ என்பதை 49-ம் சங்கீதம் எவ்வளவு அழகாக காண்பிக்கிறது பாருங்கள்! (சங்கீதம் 49:7) இரண்டாம் பகுதியிலுள்ள முதல் எட்டு சங்கீதங்களும் கோராகின் புத்திரரால் இயற்றப்பட்டிருக்கலாம். அடுத்த சங்கீதம், அதாவது 50-ம் சங்கீதம் ஆசாபினால் இயற்றப்பட்டது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
44:18—‘வலுசர்ப்பங்களுள்ள இடம்’ எதுவாக இருந்தது? ‘வலுசர்ப்பங்கள்’ என்பதற்கான எபிரெய வார்த்தை ‘குள்ளநரிகளையும்’ அர்த்தப்படுத்தலாம். இங்கு சங்கீதக்காரன் ஒரு போர்க்களத்தைக் குறிப்பிட்டிருக்கலாம். அங்கு கொலையுண்டவர்களின் உடல் குள்ளநரிகளுக்கு இரையானது.
45:13, 14அ—‘ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படவிருக்கிற’ “ராஜகுமாரத்தி” யார்? ‘நித்தியத்தின் ராஜாவாகிய’ யெகோவா தேவனின் குமாரத்தியே அவள். (1 தீமோத்தேயு 1:7) கிறிஸ்தவர்களாகிய 1,44,000 பேரைக் கொண்ட மகிமைப்படுத்தப்பட்ட சபையை அவள் பிரதிநிதித்துவம் செய்கிறாள். யெகோவா தமது பரிசுத்த ஆவியினால் அவர்களை அபிஷேகம் செய்து தம் பிள்ளைகளாகத் தத்தெடுக்கிறார். (ரோமர் 8:16) யெகோவாவின் இந்தக் “குமாரத்தி” “தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல” மேசியானிய ராஜாவான மணமகனிடத்தில் கொண்டுவரப்படுவாள்.—வெளிப்படுத்துதல் 21:2.
45:14ஆ, 15—“கன்னிகைகள்” யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? இவர்கள் உண்மை வணக்கத்தாரான ‘திரள் கூட்டத்தாரை’ பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோருடன் சேர்ந்துகொண்டு அவர்களுக்குத் தோள் கொடுக்கிறார்கள். “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பிப்பிழைக்கிற இவர்கள், மேசியானிய ராஜாவின் திருமணம் பரலோகத்தில் முடிவடையும்போது பூமியில் இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 13, 14) அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் ‘மகிழ்ந்து களிகூருவார்கள்.’
45:16—ராஜாவின் பிதாக்களுக்குப் பதிலாக குமாரர்கள் இருக்கப்போவது எப்படி? இயேசு பூமியில் பிறந்தபோது அவருக்கு முற்பிதாக்கள் இருந்தார்கள். இறந்துபோன அவர்களை தமது ஆயிர வருட ஆட்சியின்போது உயிர்த்தெழுப்புகையில் அவர்கள் அவருக்கு குமாரராக ஆவார்கள். அவர்களில் சிலர் “பூமியெங்கும் பிரபுக்களாக” நியமிக்கப்படுவார்கள்.
50:2—எருசலேம் நகரம் ‘பூரண வடிவுள்ளதென,’ அதாவது அழகுள்ளதென அழைக்கப்படுவதேன்? அந்நகரின் தோற்றத்தினால் அவ்வாறு அழைக்கப்படவில்லை. மாறாக, யெகோவா அதை பயன்படுத்தியதாலேயே அது அவ்வாறு அழைக்கப்பட்டது; அதோடு, தமது ஆலயத்தை நிறுவுவதற்காகவும் தாம் அபிஷேகம் செய்த ராஜாக்களின் தலைநகராக இருப்பதற்காகவும் அதை உன்னத நிலையில் வைத்ததாலும்கூட அது அவ்வாறு அழைக்கப்பட்டது.
நமக்குப் பாடம்:
42:1-3. வறண்ட நிலப்பகுதியிலுள்ள ஒரு பெண்மான் தண்ணீருக்காக வாஞ்சிப்பது போல இந்த லேவியன் யெகோவாவுக்காக வாஞ்சிக்கிறார். யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்தில் அவரை வணங்க முடியவில்லையே என்ற தாங்க முடியாத துக்கத்தில் ‘இரவும் பகலும் அவர் வடித்த கண்ணீரே அவருக்கு உணவாயிற்று,’ அதாவது அவருடைய பசியே செத்துப்போய்விட்டது. சக விசுவாசிகளுடன் சேர்ந்து யெகோவாவை வணங்குவதில் நாம் மிகுந்த வாஞ்சையை வளர்த்துக்கொள்ள வேண்டும், அல்லவா?
42:4, 5, 11; 43:3-5. எதிர்பாராத ஏதோவொரு காரணத்தினால், கிறிஸ்தவ சபையிலிருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க வேண்டியிருந்தால், சபையுடன் முன்பு அனுபவித்த சந்தோஷத்தை அப்போது நினைத்துப் பார்ப்பது நம்மை பலப்படுத்துகிறது. ஆரம்பத்தில் தனிமையுணர்வு நம்மை வாட்டியெடுத்தாலும் கடவுள் நம் அடைக்கலம் என்பதையும் இரட்சிப்புக்காக அவரை நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் அது நமக்கு நினைவுபடுத்தலாம்.
46:1-3. எந்த விதமான தீமைகளை நாம் அனுபவித்தாலும், ‘தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமானவர்’ என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
50:16, 19. வஞ்சகமாய்ப் பேசி தீய காரியங்களைச் செய்கிற எவருக்கும் கடவுளைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.
50:20. மற்றவர்களின் குறைகளை தம்பட்டமடிப்பதில் முந்திக்கொள்வதற்கு பதிலாக அவற்றைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.—கொலோசெயர் 3:13.
“என் ஆத்துமாவே, கடவுளையே நோக்கி மெளனமாகக் காத்திரு”
பத்சேபாளிடத்தில் பாவம் செய்த பிறகு தாவீது இருதயப்பூர்வமாகச் செய்த ஜெபத்துடன் இந்தப் பகுதி ஆரம்பிக்கிறது. தங்கள் பாரத்தை யெகோவாமீது போட்டு, இரட்சிப்புக்காக அவரை நோக்கிக் காத்திருப்பவர்களை அவர் விடுவிப்பார் என்பதை 52-57 வரையான சங்கீதங்கள் காட்டுகின்றன. தாவீது தன்னுடைய எல்லா கஷ்டங்களின் போதும் யெகோவாவை தனது அடைக்கலமாகக் கொண்டிருக்கிறார் எனபதை 58-64 வரையான சங்கீதங்கள் காட்டுகின்றன. “என் ஆத்துமாவே, கடவுளையே நோக்கி மெளனமாகக் காத்திரு; நான் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்பது அவரிடமிருந்தே வரும்” என அவர் பாடுகிறார்.—சங்கீதம் 62:5, NW.
நம் இரட்சகருடன் நெருக்கமாக இருப்பது, ‘அவருடைய நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ண’ அதாவது, புகழ்ந்துபாட நம்மைத் தூண்ட வேண்டும். (சங்கீதம் 66:2) 65-ம் சங்கீதத்தில் ஒரு கொடை வள்ளலாகவும் 67, 68 சங்கீதங்களில் இரட்சிப்பு அருளுபவராகவும் 70, 71 சங்கீதங்களில் விடுவிக்கிறவராகவும் யெகோவாவைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
51:12—யாருடைய ‘உற்சாகமான ஆவியினால்,’ அதாவது மனப்பூர்வமான ஆவியினால் தன்னைத் தாங்கும்படி தாவீது கேட்கிறார்? இது யெகோவாவின் பரிசுத்த ஆவியையோ தாவீதுக்கு உதவ அவர் மனமுள்ளவராய் இருப்பதையோ குறிப்பதில்லை. ஆனால், தாவீதின் ஆவியையே, அதாவது மனச்சாய்வையே இது குறிக்கிறது. ஆக, சரியானதைச் செய்வதற்கான வாஞ்சையைத் தனக்கு தரும்படி கடவுளிடம் அவர் கேட்கிறார்.
53:1—கடவுள் இல்லை என்று சொல்பவன் எவ்விதத்தில் ‘மதிகேடனாக’ இருக்கிறான்? மதிகேடன் என சொல்லப்பட்டிருப்பது புத்தியில் குறைவுபட்டிருப்பதை குறிப்பதில்லை. மாறாக, அவன் ஒழுக்கநெறி இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. சங்கீதம் 53:1-4 வசனங்களில் அப்படிப்பட்டவனுடைய செயலால் விளைகிற ஒழுக்கச் சீர்குலைவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து இது புலப்படுகிறது.
58:3-5—துன்மார்க்கர் எவ்விதத்தில் சர்ப்பத்துக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? மற்றவர்களைப் பற்றி அவர்கள் சொல்லும் பொய்கள் சர்ப்பத்தின் விஷத்தைப் போல் இருக்கின்றன. அது மற்றவர்களின் நற்பெயரைக் கெடுத்துப் போடுகிறது. “தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப் போல்” துன்மார்க்கரும் வழிநடத்துதலுக்கோ அறிவுரைக்கோ செவிசாய்ப்பதில்லை.
58:7 (NW)—துன்மார்க்கர் எவ்வாறு ‘கடந்தோடுகிற தண்ணீரைப்போல் மறைந்துவிடுவார்கள்’? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்த சில நதிப் பள்ளத்தாக்குகளின் தண்ணீரைப் பற்றி தாவீது சிந்தித்திருக்கலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இத்தகைய பள்ளத்தாக்குகளில் தண்ணீர் மட்டம் அதிகரிக்கிறது; ஆனால், அந்தத் தண்ணீர் வேகமாய்ப் பாய்ந்தோடி மறைந்துவிடுகிறது. அவ்வாறே துன்மார்க்கரும் வேகமாய் மறைந்துவிடும்படி தாவீது ஜெபித்தார்.
68:13—‘புறாச் சிறகுகள் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டதாயும் அதின் இறகுகள் பசும்பொன் நிறமாயும்’ இருப்பது எப்படி? சாம்பல்-நீல வண்ணமுடைய சில புறாக்களுக்கு பளப்பளப்பான சில இறகுகள் இருக்கும். பொன்னிற சூரிய ஒளியில் அவை உலோகம் போல் மினுமினுக்கும். போர்க்களத்திலிருந்து வெற்றிவாகை சூடி வந்த இஸ்ரவேல் வீரர்களை இத்தகைய ஒரு புறாவுக்கு—பலமான இறக்கைகளும் பளிச்சென்ற தோற்றமும் உடைய ஒரு புறாவுக்கு—தாவீது ஒப்பிட்டிருக்கலாம். சில பைபிள் அறிஞர்கள் குறிப்பிடுகிறபடி, கொள்ளைப் பொருளாக எடுக்கப்பட்ட கலைப்பொருளுக்கோ ஒரு பதக்கத்திற்கோ பொருத்தமான வர்ணனையாகவும் அது இருக்கலாம். எதுவானாலும், விரோதிகளைத் தோற்கடித்து தமது மக்களுக்கு யெகோவா வெற்றி தேடித் தந்ததையே தாவீது இங்கு மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
68:18 (NW)—“மனித வடிவிலான வரங்கள்” யாவர்? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றியபோது கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் பாகமானவர்களே இவர்கள். பிற்பாடு லேவியருக்கு பணிவிடைக்காரராக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.—எஸ்றா 8:20.
68:30—‘நாணலிலுள்ள மிருகக்கூட்டத்தை அதட்டும்’ என கேட்பதன் அர்த்தம் என்ன? யெகோவாவின் மக்களுடைய எதிரிகளையே அடையாள அர்த்தத்தில் மிருகக்கூட்டம் என தாவீது குறிப்பிட்டார். அப்படிப்பட்டவர்களை அதட்டும்படி, அதாவது தீமை செய்வதற்கான அவர்களுடைய சக்தியை அடக்கும்படி கடவுளிடம் கேட்டார்.
69:23—‘விரோதிகளின் இடுப்புகளை தள்ளாடப்பண்ணுவதன்’ அர்த்தம் என்ன? பாரமான சுமைகளைத் தூக்குவது, சுமப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்வதற்கு இடுப்புப் பகுதியிலுள்ள தசைகள் இன்றியமையாதவை. தள்ளாடுகிற இடுப்புகள், பலம் இழந்துவிடுவதைக் குறிக்கின்றன. ஆக, தன்னுடைய விரோதிகள் பலம் இழந்துபோகும்படிக்கே தாவீது ஜெபம் செய்தார்.
நமக்குப் பாடம்:
51:1-4, 17. பாவம் செய்தால் நமக்கும் யெகோவா தேவனுக்கும் இடையேயுள்ள உறவு ஒரேயடியாக முறிந்துவிடுமென அர்த்தமாகாது. நாம் மனந்திரும்பினால், அவர் இரக்கம் காட்டுவார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.
51:5, 7-10. நாம் பாவத்திலே பிறந்திருப்பதன் காரணமாக, பாவம் செய்வோமானால் மன்னிப்புக்காக யெகோவாவிடம் மன்றாடலாம். நம்மைச் சுத்திகரிக்கும்படியும், பழைய நிலைக்குக் கொண்டுவரும்படியும், பாவமுள்ள மனப்பான்மைகளை நம் இருதயத்திலிருந்து அகற்றுவதற்கு உதவும்படியும், உறுதியான உள்ளத்தைத் தரும்படியும் நாம் அவரிடம் ஜெபிக்க வேண்டும்.
51:18. தாவீது செய்த பாவங்கள் முழு தேசத்தையும் பாதிப்பதாக இருந்தன. ஆகவே, சீயோனுக்கு நன்மை செய்யும்படி கடவுளிடம் ஜெபித்தார். நாம் படுமோசமான பாவம் செய்யும்போது, அது யெகோவாவின் பெயருக்கும் சபைக்கும் நிந்தையைக் கொண்டுவரும். அவ்வாறு நாம் நிந்தையை ஏற்படுத்தியிருந்தால் அதைச் சரிசெய்யும்படி கடவுளிடம் ஜெபிப்பது அவசியம்.
52:8. நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருந்தால், ‘தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போல்’ இருக்கலாம். அதாவது, யெகோவாவிடம் நெருக்கமாயும் அவருடைய சேவையில் பலன் தருபவர்களாயும் இருக்கலாம்.—எபிரெயர் 12:5, 6.
55:4, 5, 12-14, 16-18. தன் சொந்த மகன் அப்சலோமின் சதியும், நம்பிக்கைக்கு பாத்திரராய் இருந்த ஆலோசகர் அகித்தோப்பேலின் துரோகமும் தாவீதுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என்றாலும், யெகோவாவிடம் தனக்கிருந்த உறுதியான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. நாமும்கூட தாங்க முடியாத மனவேதனையை அனுபவித்தாலும், கடவுள் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது.
55:22. யெகோவாமீது நம் பாரத்தை எப்படி போட்டுவிட முடியும்? (1) நம் கவலைகளைக் குறித்து கடவுளிடம் ஜெபிப்பது, (2) வழிநடத்துதலுக்காகவும் ஆதரவுக்காகவும் அவருடைய வார்த்தையையும் அமைப்பையும் சார்ந்திருப்பது, (3) பிரச்சினையிலிருந்து வெளிவர நம்மால் முடிந்த சரியான காரியத்தைச் செய்வது, ஆகியவற்றின் மூலம் யெகோவாமீது நம் பாரத்தைப் போட்டுவிடுகிறோம்.—நீதிமொழிகள் 3:5, 6; 11:14; 15:22; பிலிப்பியர் 4:6, 7.
56:8. நம்முடைய சூழ்நிலையை மட்டுமல்ல, அது எந்தளவுக்கு நம்மை உணர்ச்சி ரீதியில் பாதித்திருக்கிறது என்பதையும் யெகோவா அறிந்திருக்கிறார்.
62:11. சக்திக்காக வேறு எந்த ஊற்றுமூலத்தையும் கடவுள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. சக்தியின் ஊற்றுமூலமே அவர்தான். ‘வல்லமை அவருக்கு உரியது.’
63:3. ‘ஜீவனைப் பார்க்கிலும் கடவுளின் கிருபை நல்லது,’ காரணம், அது இல்லையென்றால் நாம் உயிர் வாழ்வதே அர்த்தமற்றது, நோக்கமற்றது. அப்படியானால், யெகோவாவோடு நாம் நட்புறவை வளர்த்துக்கொள்வது புத்தியான செயல்.
63:6. அமைதியாகவும் கவனச்சிதறல் இல்லாமலும் இருக்கிற இரவுப்பொழுது, தியானிப்பதற்கு மிகச்சிறந்த நேரமாக இருக்கலாம்.
64:2-4. வீண்பேச்சு, அப்பாவியான ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கலாம். அத்தகைய வீண்பேச்சை நாம் கேட்கவும் கூடாது, அதைப் பரப்பவும் கூடாது.
69:4. நம் பங்கில் எந்தத் தவறும் இல்லை என்பதில் நிச்சயமாக இருந்தாலும்கூட சமாதானமாவதற்கு, சிலசமயங்களில் மன்னிப்பு கேட்பதன் மூலம் நாம் ‘திரும்பக் கொடுப்பது’ ஞானமானது.
70:1-5. தாமதமின்றி உதவிசெய்யுமாறு நாம் கெஞ்சி மன்றாடுகையில் யெகோவா அதற்கு செவிகொடுக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 5:17; யாக்கோபு 1:13; 2 பேதுரு 2:9) ஒரு சோதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்கு கடவுள் அனுமதித்தாலும், அதைச் சமாளிப்பதற்கான ஞானத்தையும் சகிப்பதற்கான பலத்தையும் அவர் தருவார். நம் திராணிக்கு மேலாக நாம் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடுக்க மாட்டார்.—1 கொரிந்தியர் 10:13; எபிரெயர் 10:36; யாக்கோபு 1:5-8.
71:5, 17. தாவீது சிறுவயதிலேயே, அதாவது பெலிஸ்த இராட்சதனான கோலியாத்தை எதிர்ப்படுவதற்கு முன்பே யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்திருந்ததால் தைரியத்தையும் பலத்தையும் பெற்றார். (1 சாமுவேல் 17:34-37) இளம் பிள்ளைகள் யெகோவாமீது நம்பிக்கை வைத்தே எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும்.
“பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக”
இரண்டாம் பகுதியிலுள்ள கடைசி சங்கீதம், அதாவது 72-ம் சங்கீதம் சாலொமோனின் ஆட்சியைப் பற்றியது. மேசியாவின் ஆட்சியில் நிலைமைகள் எப்படியிருக்கும் என்பதை அது படமாகக் காட்டுகிறது. அங்கு விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் எவ்வளவு அருமையானவைகள்! கொடுமையும் வன்முறையும் இல்லாத ஓர் உலகம், எங்கும் சமாதானம், ஏராளமான விளைச்சல்! இவற்றையும் அந்த ராஜ்யம் தரப்போகிற பிற ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிப்போமா? சங்கீதக்காரனைப் போல, யெகோவாவுக்காக சந்தோஷமாய் காத்திருந்து, அவரை நம் அடைக்கலமும் பெலனுமாக கொண்டிருந்தால் அவற்றை அனுபவிப்போம்.
பின்வரும் வார்த்தைகளுடன் ‘தாவீதின் விண்ணப்பங்கள் முடிவடைகின்றன’: “இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.” (சங்கீதம் 72:18-20) அவ்வாறே நாமும் முழு இருதயத்தோடு யெகோவாவைத் துதித்து அவரது மகிமைபொருந்திய பெயரைப் போற்றுவோமாக.
[பக்கம் 9-ன் படம்]
“ராஜகுமாரத்தி” யாரைச் சித்தரித்துக் காட்டுகிறாள் என உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 10, 11-ன் படம்]
எருசலேம் ‘பூரண அழகுள்ளது’ என அழைக்கப்படுகிறது. காரணம் என்னவென்று தெரியுமா?