ஒருமுகப்பட்ட இருதயத்துடன் நடத்தல்
“யெகோவாவே, . . . எனக்குப் போதியும்; . . . உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங்கீதம் 86:11, NW.
1. உத்தமத்தைக் காக்கும் தம்முடைய ஊழியருக்கு யெகோவா எவ்வாறு பலனளிக்கிறார்?
‘யெகோவாவே, நீர் ஒருவரே கடவுள்.’ (சங்கீதம் 86:8, 10, தி.மொ.) நன்றியுணர்வால் பொங்கிவழிந்த இருதயத்திலிருந்து தாவீது கடவுளைத் துதித்தார். தாவீது இஸ்ரவேல் முழுவதன்மீதும் அரசனாவதற்கு முன்பே, யெகோவா அவரைச் சவுலிடமிருந்தும் பெலிஸ்தரிடமிருந்தும் விடுவித்திருந்தார். ஆகவே அவர் பின்வருமாறு பாட முடிந்தது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; உத்தமனுக்கு நீர் உத்தமராக . . . உம்மைக் காட்டுவீர்.” (2 சாமுவேல் 22:2, 26, தி.மொ.) உத்தமத்தைக் காத்த தம்முடைய ஊழியனை யெகோவா பல இக்கட்டுகளினூடே பாதுகாத்து வைத்திருந்தார். தாவீது தன் விசுவாசத்தையும் திடநம்பிக்கையையும் தன்னுடய உத்தம கடவுளில் வைக்க முடிந்தது, ஆனால் அவருக்குத் தொடர்ந்து வழிநடத்துதல் தேவைப்பட்டது. தாவீது இப்பொழுது கடவுளைப் பின்வருமாறு வேண்டிக்கொண்டார்: “யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்.”—சங்கீதம் 86:11, தி.மொ.
2. நாம் தம்மால் போதிக்கப்படுவதற்காக யெகோவா எவ்வாறு ஏற்பாடு செய்திருக்கிறார்?
2 உலகப்பிரகாரமான எண்ணங்களை அல்லது தத்துவங்களை முற்றிலும் தவிர்க்க தாவீது விரும்பினார். கடவுளுடைய தீர்க்கதரிசி பின்னால் சொன்னபடி, “யெகோவாவால் போதிக்கப்பட” அவர் விரும்பினார். (ஏசாயா 54:13, தி.மொ.) தாவீது தன்னுடைய நாளில் கிடைக்கக்கூடியதாயிருந்த பைபிளின் ஒன்பது புத்தகங்களில் மாத்திரமே பெரும்பாலும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடும். எனினும், யெகோவாவிடமிருந்து வந்த அந்தப் போதனை அவருக்கு மிக மதிப்புவாய்ந்ததாக இருந்தது! போதிக்கப்படுவதில் நாம் இன்று பைபிளின் எல்லா 66 புத்தகங்களிலும், அவற்றோடுகூட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் அளிக்கப்படும் ஏராளமான ராஜ்ய புத்தகங்களிலிருந்தும் அறிவுபெற்று மகிழ முடியும். (மத்தேயு 24:45, NW) “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை . . . தேவனுடைய ஆழங்களை” ஆராய்ந்தறிய தம்முடைய ஆவி நமக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் தாவீதைப்போல் விண்ணப்பம் செய்வோமாக.—1 கொரிந்தியர் 2:9, 10.
3. பைபிள் போதகங்கள் என்ன வழிகளில் நமக்கு நன்மை பயக்கலாம்?
3 நம்முடைய வாழ்க்கையில் எழும்பக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் பிரச்னைக்கும் பைபிள் பதிலைக் கொண்டிருக்கிறது. “வேதவாக்கியங்களின் மூலமாயுண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் எதிர்நோக்கும் நம்பிக்கையை நாம் அடையும்படி முன் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாகவே எழுதப்பட்டன.” (ரோமர் 15:4, தி.மொ.) யெகோவாவிடமிருந்து வரும் போதனையை உட்கொள்வது, துன்பங்களைச் சகித்துநிலைத்திருப்பதற்கு நம்மைப் பலப்படுத்தி, மனச்சோர்வுற்றிருக்கும் சமயங்களில் நம்மை ஆறுதல்படுத்தி, ராஜ்ய நம்பிக்கை நம்முடைய இருதயத்தில் வெகுவாய் உணர்வூக்கத்துடன் தொடர்ந்திருக்கும்படி வைக்கும். கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதிலும் அதன்பேரில் “இரவும் பகலும்” தியானிப்பதிலும் நாம் இன்பமகிழ்ச்சியைக் கண்டடைவோமாக, ஏனெனில், பைபிளில் ஆதாரங்கொண்ட ஞானம் “அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”—சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 3:13-18; யோவான் 17:3-ஐயும் பாருங்கள்.
4. நம்முடைய செயல்களைக் குறித்ததில், என்ன முன்மாதிரியை இயேசு நமக்கு வைத்தார்?
4 “தாவீதின் குமாரன்” எனவும் அழைக்கப்பட்ட, கடவுளுடைய குமாரனாகிய இயேசு, போதனைக்காக எப்பொழுதும் யெகோவாவை நோக்கியிருந்தார். (மத்தேயு 9:27)a அவர் சொன்னதாவது: “பிதா செய்யக் காண்பதெதுவோ அதையேயன்றிக் குமாரன் தாமாகவே எதையுஞ் செய்யமுடியாது; அவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளைக் குமாரனும் அப்படியே செய்கிறார்.” “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்யாமல் பிதா எனக்குக் கற்பித்தபடியே இவற்றைப் பேசுகிறேனென்றும் அறிவீர்கள்.” (யோவான் 5:19; 8:28, தி.மொ.) இயேசு, “தம்முடைய அடிச்சுவடுகளைத் [உன்னிப்பாகத், NW] தொடர்ந்துவரும்படி,” நமக்கு மாதிரியைப் பின்வைத்துச் சென்றார். (1 பேதுரு 2:21, தி.மொ.) சற்று கற்பனை செய்து பாருங்கள்! நிச்சயமாகவே இயேசு செய்ததுபோல் நாம் மனதூன்றி படித்தால், எந்தச் சந்தர்ப்பநிலைமையிலும், யெகோவா நாம் நடக்கும்படி விரும்பும் முறையில் நடக்கமுடிந்தவர்களாக இருப்போம். யெகோவாவின் வழியே எப்பொழுதும் சரியான வழி.
5. “சத்தியம்” என்றாலென்ன?
5 தாவீது அடுத்தப்படியாகப் பின்வருமாறு அறிவிக்கிறார்: “நான் உமது சத்தியத்திலே நடப்பேன்.” (சங்கீதம் 86:11) ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பால், பிலாத்து, தாவீதின் குமாரனாகிய, இயேசுவை நோக்கிப் பேசி: “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். ஆனால் இயேசு தம்முடைய ராஜ்யம் “இவ்வுலகத்திற்குரியதல்ல”வென அப்போதுதான் அந்தக் கேள்விக்குப் பதிலளித்திருந்தார். அவர் மேலும் பின்வருமாறு கூறினார்: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.” (யோவான் 18:33-38) சத்தியம் மேசியானிய ராஜ்யத்தைக் குவிமையமாகக் கொண்டுள்ளதென இயேசு இங்கே அறியச் செய்தார். நிச்சயமாகவே, அந்த ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதே பைபிளின் முழுமையான பொருள்.—எசேக்கியேல் 38:23; மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துதல் 11:15.
6. சத்தியத்தில் நடப்பதில் எதைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
6 சத்தியத்தில் நடப்பதென்பது, இந்த ராஜ்ய நம்பிக்கையை நம்முடைய வாழ்க்கையின் முதன்மையான அக்கறையாக்குவதைக் குறிக்கிறது. நாம் ராஜ்ய சத்தியத்தின்படி வாழவேண்டும். ராஜ்ய அக்கறைகளை முதல் வைப்பதில் நாம் கருத்து வேறுபாடில்லாவர்களாக இருக்கவேண்டும், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ராஜ்ய சத்தியத்துக்குச் சாட்சி கொடுப்பதில் நமக்கிருக்கும் வாய்ப்புகளின்படி ஆர்வத்துடன் இருக்கவேண்டும். (மத்தேயு 6:33; யோவான் 18:37) பெயருக்குச் சிறிதளவான சேவையே செய்துவிட்டு பின்பு மிதமீறிய பொழுதுபோக்கு இன்பத்தில் தோய்வதற்கு அல்லது மிகுதியான நேரமெடுக்கும் வாழ்க்கை முன்னேற்றக் காரியங்களில் ஈடுபடுவதற்கு அல்லது ‘உலகப்பொருளுக்காக . . . ஊழியஞ்செய்வதற்குச்’ சுற்றித்திரிந்து நம் தன்னல விருப்பத்தைத் திருப்திசெய்துகொண்டு, ஒரு பகுதி நேரமே சத்தியத்தில் நடக்க முடியாது. (மத்தேயு 6:24) அந்தப் பக்கப் பாதைகள் ஒன்றில் நாம் வழித்தவறித் தொலைந்து, ‘ஜீவனுக்குப் போகும் இடுக்கமான பாதைக்குள்’ திரும்பப் போய்ச் சேர்வதற்கான வழியை ஒருபோதும் கண்டடையாமற் போகக்கூடும். அந்தப் பாதையைவிட்டு விலகி அலையாதிருப்போமாக! (மத்தேயு 7:13, 14) நம்முடைய மகா போதகராகிய யெகோவா, தம்முடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும், அந்தப் பாதையை வெளிச்சமாக்கி, “நீங்கள் வலதுபுறம் விலகும்போதும் இடதுபுறம் விலகும்போதும், வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என்று சொல்லுகிறார்.—ஏசாயா 30:21.
சரியான பயம்
7. நம்முடைய இருதயத்தை நாம் எவ்வாறு “ஒருமுகப்படுத்த”லாம்?
7 தாவீதின் விண்ணப்பம் 11-ம் (தி.மொ.) வசனத்தில் பின்வருமாறு தொடருகிறது: “உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.” தாவீதைப்போல் நாமும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நம்முடைய இருதயம் பிரிந்திராமல், முழுமையாய் ஒருமுகப்பட்டிருக்கும்படி விரும்ப வேண்டும். இது மோசேயின் பின்வரும் அறிவுரைக்கு ஒத்திருக்கிறது: “இப்பொழுதும் இஸ்ரவேலே, உன் கடவுளாகிய யெகோவா உன்னிடம் கேட்பது என்ன? நீ உன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் கடவுளாகிய யெகோவாவைச் சேவித்து, நான் இந்நாளில் உனக்குப் போதிக்கிற யெகோவாவின் கட்டளைகளையும் அவருடைய நியமங்களையும் நீ க்ஷேமமாயிருப்பதற்கேதுவாய்க் கைக்கொள்ளவேண்டும் என்பதுதானே, வேறொன்றுமல்ல.” (உபாகமம் 10:12, 13, தி.மொ.) நிச்சயமாக, நம்முடைய நன்மைக்காகவே நாம் நம்முடைய இருதயத்தையும் ஆத்துமாவையும் யெகோவாவின் சேவையில் ஊற்றுகிறோம். இவ்வாறு அவருடைய புகழ்பெற்ற பெயருக்குச் சரியான பயத்தைக் காட்டுகிறோம். யெகோவாவின் பெயரின் சொற்பொருள் “அவர் ஆகும்படி செய்கிறார்” என்பதாகும், முக்கியமாய்த் தம்முடைய மகத்தான நோக்கங்களை நிறைவேற்றி முடிப்பதைக் குறித்ததில் அவ்வாறுள்ளது. மேலும் அது சர்வலோகம் முழுவதன்மீதும் அவருடைய ஈடற்ற உன்னத அதிகாரத்தையும் குறித்துக் காட்டுவதாய் நிற்கிறது. அவருடைய மகா மேன்மைக்குரிய பயபக்தியுடன் அவரைச் சேவிக்கையில், அழிவுள்ள மனிதனுக்குப் பயப்படும் பயத்தால் அதைவிட்டு விலகிச்செல்ல இடமளிக்கமாட்டோம். நம்முடைய இருதயம் பிரிந்திராது. அதற்கு மாறாக, நம்முடைய உயிரையே தம்முடைய கையில் பற்றியிருக்கிற, ஈடற்ற உன்னத நியாயாதிபதியும் பேரரசருமான ஆண்டவராகிய யெகோவாவுக்குப் பிரியமில்லாத எதையும் செய்ய நாம் பயப்படுவோம்.—ஏசாயா 12:2; 33:22.
8, 9. (எ) “உலகத்தின் பாகமல்லாதவர்களாய்” இருப்பதென்பது எதைக் குறிக்கிறது? (பி) “நாடகமேடைக்குரியதுபோன்ற கண்காட்சியாக” நாம் இருப்பதால் என்ன படிகளை நாம் எடுக்க வேண்டும்?
8 நிந்தையையும் துன்புறுத்தலையும் எதிர்ப்பட்டிருக்கையிலும், நாம், நம்மைச் சுற்றியுள்ள பொல்லாத உலகத்தின் பாகமாயிராததில் இயேசுவின் பயமற்ற முன்மாதிரியைப் பின்பற்றுவோம். (யோவான் 15:17-21) இது இயேசுவின் சீஷர்கள் துறவிகளாக அல்லது துறவிமடத்தில் ஒதுங்கி மறைவாயிருப்போராக வாழவேண்டுமெனக் குறிப்பதில்லை. இயேசு தம்முடைய பிதாவிடம் ஜெபத்தில் பின்வருமாறு கூறினார்: “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.” (யோவான் 17:15-18) இயேசுவைப்போல், ராஜ்ய சத்தியத்தைப் பிரசங்கிக்கும்படி நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம். இயேசு அணுகத்தக்கவராக இருந்தார். அவருடைய கற்பிக்கும் முறையால் ஜனங்கள் ஊக்கமூட்டப்பட்டார்கள். (மத்தேயு 7:28, 29; 11:28, 29; யோவான் 7:46-ஐ ஒத்துப்பாருங்கள்.) நம்மைக் குறித்ததிலும் அவ்வாறே இருக்க வேண்டும்.
9 நம்முடைய சிநேகப்பான்மையானத் தன்மையும், ஒழுங்கான உடைநடை பாங்கும் தோற்றமும், தயவோடுகூடிய சுத்தமான உரையாடலும், நேர்மையான இருதயமுள்ள ஆட்கள், நம்மையும் நம்முடைய செய்தியையும் ஏற்கத்தக்கதாக்க வேண்டும். ஒழுங்கற்றத் தன்மை, அடக்க ஒடுக்கமற்ற உடை, உலகக் காரியங்களில் சிக்கவைப்பதற்கு வழிநடத்தக்கூடிய கூட்டுறவுகள், நம்மைச் சுற்றி இந்த உலகத்தில் நாம் காணும் கட்டுப்பாடற்ற, ஒழுக்கநெறிமீறிய வாழ்க்கைமுறை ஆகியவற்றிற்கு நாம் அறவே விலகியிருக்க வேண்டும். நாம், “உலகத்துக்கும் தூதர்களுக்கும், மனிதருக்கும் நாடகமேடைக்குரியதுபோன்ற கண்காட்சியாகி”யிருப்பதால், முன்மாதிரியான கிறிஸ்தவர்களாகச் சேவிக்கவும் வாழவும் ஒவ்வொரு நாளும் 24 மணிநேரங்களும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். (1 கொரிந்தியர் 4:9, தி.மொ.; எபேசியர் 5:1-4; பிலிப்பியர் 4:8, 9; கொலோசெயர் 4:5, 6) இந்தக் குறிக்கோளை நோக்கி நம் இருதயம் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
10. பரிசுத்த சேவையில் தங்கள் இருதயத்தை ஒருமுகப்படுத்துவோரை யெகோவா எவ்வாறு நினைவுகூருகிறார்?
10 யெகோவாவின் மகத்தான நோக்கங்களின்பேரில் ஆழ்ந்து சிந்தித்து நம்முடைய வாழ்க்கையைப் பரிசுத்த சேவையால் நிரப்பி, அவருடைய பெயருக்குரிய பயத்தில் நம்முடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும் நம்மை, யெகோவா நினைவுகூருவார். “முழு இருதயத்தோடும் தம்மோடு இசைந்திருக்கிறவர்களுக்குத் தமது வல்லமையை விளங்கப்பண்ணும்படி யெகோவாவின் கண்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்துக்கொண்டிருக்கின்றன.” (2 நாளாகமம் 16:9, தி.மொ.) நம்முடைய நாளைத் தீர்க்கதரிசனமாய்க் குறிப்பிட்டு, மல்கியா 3:16 (தி.மொ.) பின்வருமாறு குறிப்பிடுகிறது: “இப்படியிருக்கையிலேயே யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்தார்கள், யெகோவா கவனித்துக் கேட்டார்; யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கெனவும் அவருடைய திருநாமத்தை நினைக்கிறவர்களுக்கெனவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்குமுன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” யெகோவாவுக்குப் பயப்படும் அந்த ஆரோக்கியமான பயத்தில் நம்முடைய இருதயம் ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதாக!
யெகோவாவின் அன்புள்ள-தயவு
11. உண்மைத்தவறாதவர்களிடமாக யெகோவாவின் அன்புள்ள-தயவு எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டப்படும்?
11 தாவீதின் விண்ணப்பம் எவ்வளவு பற்றார்வம் மிகுந்ததாக இருக்கிறது! அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்: “என் கடவுளாகிய ஆண்டவரே [யெகோவாவே, NW], உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; உமது திருநாமத்தை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். என்மீதுள்ள உமது கிருபை பெரிது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்தினின்று [ஷியோலிலிருந்து, NW] விடுவித்தீர்.” (சங்கீதம் 86:12, 13, தி.மொ.) இந்தச் சங்கீதத்தில் இரண்டாவது தடவையாக தாவீது யெகோவாவின் அன்புள்ள-தயவுக்காக—பற்றுறுதியுள்ள அன்புக்காக—அவரைத் துதிக்கிறார். இந்த அன்பு அவ்வளவு மிகுந்ததாக இருந்ததால், நடக்க முடியாததாகத் தோன்றும் சூழ்நிலைமைகளில் அது காப்பாற்றக் கூடியதாயுள்ளது. சவுல் அவரை வனாந்தரத்தில் தேடி வேட்டையாடினபோது, தாவீது சாவதற்காக ஒரு மூலையிடுக்குக்குள் ஊர்ந்துசெல்வதைப்போல் உணர்ந்திருக்கலாம். அது மிகத் தாழ்ந்த ஷியோலுடன்—பிரேதக்குழியின் ஆழங்களுடன்—நேருக்குநேரான நிலையில் வந்ததுபோல் இருந்தது. ஆனால் யெகோவா அவரை விடுவித்தார்! இம்மாதிரியான வகையில், யெகோவா தம்முடைய தற்கால ஊழியர்களுக்கு அதிசயமான வழிகளில் பல தடவைகள் விடுவிப்பைக் கொண்டுவந்திருக்கிறார், மேலும் மரணம் வரையிலும் உண்மையுள்ளோராய்ச் சகித்து நிலைத்திருந்த உத்தமத்தைக் காத்தவர்களையும் தளராதபடி தாங்கி ஆதரித்திருக்கிறார். உண்மைத்தவறாதவர்கள் யாவரும் தங்கள் பலனை அடைவார்கள், தேவைப்பட்டால் உயிர்த்தெழுப்பப்படுவதனாலும் அடைவார்கள்.—யோபு 1:6-12; 2:1-6, 9, 10; 27:5; 42:10; நீதிமொழிகள் 27:11; மத்தேயு 24:9, 13; வெளிப்படுத்துதல் 2:10, ஒப்பிடவும்.b
12. மதகுருமார் எவ்வாறு தகாத்துணிகரமுள்ளோராயும் கொடுமைவாய்ந்தோராயும் இருந்திருக்கின்றனர், அவர்களுடைய பலன் என்னவாயிருக்கும்?
12 துன்புறுத்துவோரைக் குறித்து தாவீது பின்வருமாறு கதறிக் கூறுகிறார்: “கடவுளே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரர் கூட்டம் என் உயிரை வாங்கத் தேடுகிறது, உம்மைத் தங்களுக்கு எதிரேயிருப்பவராய் நோக்காதிருக்கிறார்கள்.” (சங்கீதம் 86:14, தி.மொ.) இன்று, துன்புறுத்துவோரில் கிறிஸ்தவமண்டல குருமாரும் அடங்கியுள்ளனர். இவர்கள் கடவுளை வணங்குவதாக பாராட்டிக்கொள்கின்றனர் ஆனால் அவருடைய பரிசுத்தப் பெயரை அகற்றி அதனிடத்தைக் “கர்த்தர்” என்ற பட்டப்பெயரைக் கொண்டு நிரப்புகின்றனர், மேலும் பைபிளில் ஓரிடத்திலும் உண்மையில் குறிப்பிட்டிராத திரித்துவம் என்ற விளங்காப் புதிரான ஒன்றாகக் காட்டுகின்றனர். எவ்வளவு தகாத்துணிகரம்! இதோடுகூட, ஆச்சரியமுண்டாக, பூமியெங்கும் பேரளவான நாடுகளில் இன்னும் செய்யப்பட்டு வருகிறபடி, யெகோவாவின் சாட்சிகளை நாடுகடத்தவும் சிறைப்படுத்தவும் அரசியல் அதிகாரங்களைத் தூண்டி வற்புறுத்த அவர்கள் முயற்சி செய்கின்றனர். கடவுளுடைய பெயரைத் தூஷிப்போரான இந்த அங்கிதரித்த குருமார், மகா பாபிலோனின் வேசியைப்போன்ற மதப்பிரிவினர் எல்லாரோடுங்கூட தங்கள் பலனை அறுவடை செய்வார்கள்.—வெளிப்படுத்துதல் 17:1, 2, 15-18; 19:1-3.
13. யெகோவா தம்முடைய நற்குணத்தை அறியச் செய்வதில் என்ன பண்புகளைக் காட்டுகிறார்?
13 இதற்கு மாறாக மகிழ்ச்சிதரும் முறையில் தாவீதின் விண்ணப்பம் பின்வருமாறு மேலும் தொடருகிறது: “நீரோ, ஆண்டவரே [யெகோவாவே, NW], உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்.” (சங்கீதம் 86:15, தி.மொ.) நம்முடைய கடவுளின் இத்தகைய பண்புகள் நிச்சயமாகவே, உச்ச உயர்தரமானவை. இந்த வார்த்தைகள், சீனாய் மலையில் மோசே யெகோவாவின் மகிமையைக் காணும்படி கேட்ட சமயத்துக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன. யெகோவா பதிலளித்து: “என் தயாளத்தை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப் பண்ணி யெகோவாவின் நாமத்தை உனக்கு முன்பாகச் சத்தமிட்டுக் கூறுவேன்” என்று பதிலளித்தார். எனினும் அவர் மோசேயைப் பின்வருமாறு எச்சரித்தார்: “நீ என் முகத்தைக் காணமுடியாது, ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிரான்.” அதன்பின் யெகோவா மேகத்தில் கீழிறங்கி: “யெகோவா, யெகோவா, . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் [அன்புள்ள-தயவும், NW] சத்தியமுமுள்ள கடவுள்” என்று சத்தமாய் அறிவித்தார். (யாத்திராகமம் 33:18-20; 34:5, 6, தி.மொ.) தாவீது இந்த வார்த்தைகளைத் தன் விண்ணப்பத்தில் எடுத்துக் குறிப்பிட்டார். இத்தகைய பண்புகள் எந்த உடல் தோற்றத்தைப் பார்க்கிலும் மிக அதிகத்தை நமக்குக் குறிக்கின்றன! இந்தச் சிறந்த இயல்புக்குணங்களில் மாதிரியாய்க் காட்டப்பட்டுள்ள யெகோவாவின் நற்குணத்தை, நம்முடைய சொந்த அனுபவத்தில் நாம் நன்றியோடு மதித்துணருகிறோமல்லவா?
“நற்குணத்தைக் குறிக்கும் ஓர் அடையாளம்”
14, 15. “நற்குணத்தைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை” யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு எவ்வாறு நடப்பிக்கச் செய்கிறார்?
14 தாவீது மறுபடியும் யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக மன்றாடுகிறார்: “என் முகமாய்த் திரும்பி எனக்கு இரங்கும்; உமது வல்லமையை அடியேனுக்கு அருளி உமது அடியாளின் மகனை ரட்சியும். யெகோவா, நீர் எனக்குத் துணைசெய்து என்னத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படி அநுகூலமான ஒரு [நற்குணத்தைக் குறிக்கும் ஓர், NW] அடையாளத்தை எனக்குக் காண்பித்தருளும்.” (சங்கீதம் 86:16, 17, தி.மொ.) ‘யெகோவாவின் அடியாளின் மகனாக,’ தானுங்கூட யெகோவாவுக்கு உரியவனாக இருக்க வேண்டுமென்பதை தாவீது உணருகிறார். இன்று யெகோவாவுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து அவருடைய சேவையில் உழைக்கும் நம் எல்லாரைக் குறித்ததிலும் அவ்வாறே இருக்கிறது. அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் யெகோவாவின் ரட்சிக்கும் வல்லமை நமக்குத் தேவை. ஆகையால், “நற்குணத்தைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை” நம்மோடு நடப்பிக்கும்படி நாம் நம்முடைய கடவுளைக் கேட்கிறோம். யெகோவாவின் நற்குணம், நாம் இப்போது ஆராய்ந்த இந்தச் சிறந்த பண்புகள் அடங்கியதாயுள்ளது. இந்த ஆதாரத்தின்பேரில், என்ன அடையாளத்தை, அல்லது உறுதிச்சின்னத்தை, யெகோவா நமக்குக் கொடுக்கும்படி நாம் எதிர்பார்க்கலாம்?
15 யெகோவா, ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ கொடுக்கிறவர், மேலும், இயேசு நமக்கு உறுதிகூறுகிறபடி, யெகோவா, “தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக்” கொடுப்பதில் தயாளமுள்ளவர். (யாக்கோபு 1:17; லூக்கா 11:13) பரிசுத்த ஆவி—யெகோவா அருளும் எத்தகைய விலைமதியா ஈவு! துன்புறுத்தப்படும் சமயத்திலுங்கூட இருதய மகிழ்ச்சியை, யெகோவா பரிசுத்த ஆவியின்மூலம் அளிக்கிறார். இவ்வாறு இயேசுவின் அப்போஸ்தலர்கள், தங்கள் உயிருக்கான வழக்கு விசாரணையில் இருந்தபோது, அரசராகத் தமக்குக் கீழ்ப்படிவோருக்குக் கடவுள் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறாரென்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடிந்தது. (அப்போஸ்தலர் 5:27-32, NW) பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சி அவர்களுடன் “நற்குணத்தைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை” தொடர்ந்து நடப்பித்தது.—ரோமர் 14:17, 18.
16, 17. (எ) தம்முடைய நற்குணத்தின் என்ன அடையாளத்தை யெகோவா பவுலுக்கும் பர்னபாவுக்கும் கொடுத்தார்? (பி) துன்புறுத்தப்பட்ட தெசலோனிக்கேயருக்கு என்ன அடையாளம் கொடுக்கப்பட்டது?
16 சின்ன ஆசியாவினூடே தங்கள் மிஷனரி பயணத்தின்போது, பவுலும் பர்னபாவும் இக்கட்டுகளையும், கடுந்துன்புறுத்தலையுங்கூட எதிர்ப்பட்டனர். பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் அவர் பிரசங்கித்தபோது, யூதர்கள் அவர்களுடைய செய்தியை ஏற்க மறுத்துத் தள்ளினர். ஆகவே, அவர்கள் புறஜாதியாரிடம் திரும்பினார்கள். பலன் என்ன? “புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய [யெகோவாவின், NW] வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் [மனப்பற்றுடையவர்கள், NW] எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.” ஆனால் யூதர்கள் கூச்சலிட்டுக் கலகமெழுப்பினார்கள், ஆகவே, அந்த மிஷனரிகள் நாட்டைவிட்டு வெளியே தள்ளப்பட்டனர். புதிதாய் விசுவாசிகளானவர்கள் இதைக்குறித்து மனத்தளர்வுற்றார்களா? இல்லவே இல்லை! அதற்கு மாறாக, “சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 13:48, 52) யெகோவா அவர்களுக்கு தம்முடைய நற்குணத்தின் அந்த அடையாளத்தைக் கொடுத்தார்.
17 பின்னால், தெசலோனிக்கேயிலிருந்த அந்தப் புதிய சபை துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. இது, ஆறுதல்படுத்தி, துன்பத்தின்கீழ் அவர்கள் சகித்து நிலைத்திருந்ததற்குப் போற்றுதல்கூறும் ஒரு நிருபத்தை எழுதும்படி அப்போஸ்தலன் பவுலை வழிநடத்தினது. அவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றி”ருந்தார்கள். (1 தெசலோனிக்கேயர் 1:6) “பரிசுத்த ஆவியின் சந்தோஷம்,” இரக்கமும் உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த அன்புள்ள-தயவும் சத்தியமுமுள்ள கடவுளிடமிருந்து வந்த ஒரு தெளிவான அடையாளமாக அவர்களைத் தொடர்ந்து பலப்படுத்தினது.
18 சமீப காலங்களில், யெகோவா தம்முடைய நற்குணத்தைக் கிழக்கு ஐரோப்பாவிலிருக்கும் நம்முடைய உண்மையுள்ள சகோதரரிடம் வெளிப்படுத்திக் காட்டி, அவர்களைப் பகைத்தவர்களை—முன்னாளில் அவர்களைத் துன்புறுத்தினோரை—வெட்கமடையச் செய்தார். பல பத்தாண்டுகள் ஒடுக்கப்பட்டதிலிருந்து சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டபோதிலும், இந்த அருமையான சகோதரர்கள் இன்னும் சகித்திருக்க வேண்டியிருக்கிறது, ஏனெனில் அவர்களில் பலர் கடும் பொருளாதார இன்னல்களை எதிர்ப்படுகின்றனர். எனினும், அவர்களுடைய “பரிசுத்த ஆவியின் சந்தோஷம்” அவர்களை ஆறுதல்படுத்துகிறது. புதிதாகக் கண்டடைந்த தங்கள் சுயாதீனங்களைச் சாட்சி கொடுப்பதில் விரிவாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிலும் மேம்பட்ட எந்தச் சந்தோஷம் அவர்களுக்கு இருக்க முடியும்? மாநாடுகளின்பேரிலும் முழுக்காட்டுதல்களின்பேரிலும் கொடுக்கப்படும் அறிக்கை வெளிப்படுத்துகிறபடி, பலர் அவர்களுக்குச் செவிகொடுக்கின்றனர்.—அப்போஸ்தலர் 9:31; 13:48-ஐ ஒத்துப்பாருங்கள்.
19. சங்கீதம் 86:11-ன் வார்த்தைகளை நாம் எவ்வாறு நம்முடைய சொந்தமானதாக்கிக் கொள்ளலாம்?
19 இதிலும் இதற்கு முந்தின கட்டுரையிலும் ஆராயப்பட்ட எல்லாம் தாவீது யெகோவாவிடம் செய்த பின்வரும் ஊக்கமான விண்ணப்பத்தில் எதிரொலிக்கப்படுகின்றன: “யெகோவாவே, . . . எனக்குப் போதியும்; . . . உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.” (சங்கீதம் 86:11, தி.மொ.) ராஜ்ய அக்கறைகளின் ஆதரவாகவும் நம்முடைய ஒரே கடவுளாகிய, ஈடற்ற உன்னத பேரரசரான கர்த்தராகிய யெகோவாவின் குன்றாத நற்குணத்தை நன்றியோடு மதித்துணர்வோராயும் நாம் முழு இருதயத்தோடு உழைக்கையில், நம்முடைய 1993-ன் வருடாந்தர வசனத்தின் இந்த வார்த்தைகளை நம்முடைய மிகச் சொந்தமாக்கிக் கொள்வோமாக. (w92 12⁄15)
[அடிக்குறிப்புகள்]
a முன்னறிவிக்கப்பட்ட “வித்தாக,” இயேசு தாவீதின் ராஜ்யத்துக்கு உரிமையாளராக இருந்தார் ஆகவே சொற்பொருளிலும் ஆவிக்குரிய கருத்திலும் இரண்டிலுமே அவர் “தாவீதின் குமாரன்” ஆக இருந்தார்.—ஆதியாகமம் 3:15; சங்கீதம் 89:29, 34-37.
b தற்கால முன்மாதிரிகளுக்கு, யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், 1974, பக்கங்கள் 113-212; 1985, பக்கங்கள் 194-7; 1986, பக்கங்கள் 237-8; 1988, பக்கங்கள் 182-5; 1990, பக்கங்கள் 171-2; 1992, பக்கங்கள் 174-81, ஆகியவற்றைப் பாருங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ “யெகோவாவே, எனக்குப் போதியும்” என்று ஜெபிப்பதால் நாம் எதைத் தெரிவிக்கிறோம்?
◻ நம்முடைய இருதயம் யெகோவாவின் பெயருக்குப் பயந்திருக்கும்படி ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதன் உட்பொருள் என்ன?
◻ உண்மைத்தவறாத எல்லாரிடமும் யெகோவா எவ்வாறு தம்முடைய அன்புள்ள-தயவைக் காட்டுவார்?
◻ “நற்குணத்தைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை” யெகோவா எவ்வாறு நம்மில் நடப்பிக்கிறார்?
18. கிழக்கு ஐரோப்பாவில் நம்முடைய சகோதரர்கள் எவ்வாறு யெகோவாவின் நற்குணத்துக்கு நன்றி மதித்துணர்வைக் காட்டினர்?
[பக்கம் 16-ன் பெட்டி]
1993-க்குரிய வருடாந்தர வசனம்: “யெகோவாவே, . . . எனக்குப் போதியும்; . . . உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங்கீதம் 86:11, NW.
[பக்கம் 15-ன் படம்]
வரவிருக்கும்“புதிய பூமியில்” யெகோவாவின் அசியமான செயல்கள் அவருடைய மகிமைக்கும் நற்குணத்துக்கும் சாட்சிபகரும்
[பக்கம் 18-ன் படம்]
ஜூன் மாதத்தில், ரஷியாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் “ஒளி கொண்டுசெல்வோர்” சர்வதேச மாநாட்டுக்கு 46,214 பேர் ஆஜராயினர், 3,256 பேர் முழுக்காட்டப்பட்டனர். இவர்கள் எவ்வளவு அதிசயமாய், “பரிசுத்த ஆவியின் சந்தோஷத்”தோடு யெகோவாவின் நற்குணத்தைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர்!