ஒரு புதிய உலகிற்குள் மீட்கப்படுவதற்கு இப்பொழுதே ஆயத்தப்படுங்கள்
“லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.”—லூக்கா 17:32.
1. தெய்வீக மீட்பு குறித்த என்ன சரித்திரப்பூர்வ உதாரணத்தை இன்றைய பாடம் விசேஷமாகக் குறிப்பிடுகிறது? அது நமக்கு எவ்விதத்தில் பயனளிக்கக்கூடும்?
நோவா மற்றும் அவனுடைய குடும்பத்தின் சார்பில் யெகோவா நடப்பித்த அந்த அற்புதமான மீட்பைக் குறித்து சொன்ன பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு சரித்திரப்பூர்வமான மற்றொரு உதாரணத்தைக் குறிப்பிட்டான். நாம் 2 பேதுரு 2:6–8-ல் வாசிப்பது போல் சோதோம், கொமோரா சாம்பலாக்கப்பட்ட போது நீதிமானாகிய லோத்து பாதுகாக்கப்பட்ட காரியத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறான். விவரங்கள் நம்முடைய நன்மைக்காகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. (ரோமர் 15:4) அந்த மீட்பு சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை நம் இருதயத்தில் பதித்துக்கொள்வது கடவுளுடைய புதிய உலகிற்குள் பாதுகாக்கப்படுவதன் அணியில் நம்மை அமைத்துக்கொள்ள உதவியாயிருக்கும்.
உலகின் வாழ்க்கை முறைக்கு நாம் எவ்விதம் பிரதிபலிக்கிறோம்
2. சோதோம் கொமோராவின் என்ன நடத்தை அவை கடவுளால் அழிக்கப்படுவதற்கு வழிநடத்தியது?
2 அந்தப் பட்டணங்களும் அதன் குடிகளும் ஏன் அழிக்கப்பட்டன? “காமவிகார நடக்கை”யில் அவர்களுடைய ஈடுபாடு என்பதாகப் பேதுரு அப்போஸ்தலன் குறிப்பிடுகிறான். (2 பேதுரு 2:7) அந்தச் சொற்றொடர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்கச் சொல் குறிப்பிடுவதுபோல், சோதோம் கொமோரா மக்கள் சட்டத்திற்கும் அதிகாரத்திற்கும் மோசமான விதத்தில் அவமரியாதையும் வெறுப்பையுங்கூட வெளிப்படுத்தி தவறான காரியங்களில் உட்பட்டிருந்தனர். அவர்கள் ‘மட்டுக்கு மீறி விபசாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்தனர்’ என்று யூதா 7 கூறுகிறது. சோதாமின் மனிதர் “வாலிபர் முதல் கிழவர் மட்டும் ஜனங்கள் அனைவரும்” லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு, தங்களுடைய முறைக்கெட்ட காம உணர்ச்சிகளைத் திருப்திசெய்துகொள்வதற்காக அவனுடைய வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரை சோதோமின் மனிதரிடம் ஒப்படைக்க வற்புறுத்திய காரியத்தில் அவர்களுடைய மோசமான நடத்தை வெளிப்பட்டது. அவர்களுடைய கீழ்த்தரமான கோரிக்கைகளை லோத்து எதிர்த்ததால் அவர்கள் அவனைப் பழித்து கோஷமிட்டார்கள்.—ஆதியாகமம் 13:13; 19:4, 5, 9.
3. (எ) லோத்தும் அவனுடைய குடும்பமும் சோதோமைப் போன்ற அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வாழவந்தது எப்படி? (பி) சோதோமிலுள்ள மக்களுடைய காமவிகார நடத்தைக்கு லோத்தின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது?
3 ஆரம்பத்தில் லோத்து சோதோமுக்கு அண்மையிலுள்ள பகுதியில் குடியேறினான், காரணம் பொருளாதார செழுமைக்கு அங்கு வாய்ப்பு அதிகமாயிருந்தது. காலப்போக்கில் அவன் அதன் பட்டணத்திலேயே குடியேறினான். (ஆதியாகமம் 13:8–12; 14:12; 19:1) ஆனால் அந்தப் பட்டணத்து மனிதரின் அவலட்சணமான காமவிகாரப் பழக்கங்களை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மனிதருங்கூட அவனைத் தங்களைச் சேர்ந்தவனாகக் கருதவில்லை, ஏனென்றால் லோத்தும் அவனுடைய குடும்பமும் அவர்களுடைய சமூக வாழ்க்கையில் பங்குகொள்ளவில்லை. 2 பேதுரு 2:7, 8 சொல்லுகிறபடி, லோத்து “அவர்களுடைய காமவிகார நடத்தையால் வருத்தப்பட்டு—நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாக” இருந்தான். அந்த நிலைமைகள் லோத்துக்குக் கடுமையான ஒரு சோதனையாக இருந்தது, ஏனென்றால் ஒரு நீதிமானாக அவன் அப்படிப்பட்ட நடத்தையை வெறுத்தான்.
4. (எ) இன்றைய நிலைமைகள் எவ்வழிகளில் பூர்வீக சோதோமின் நிலைமைகளைப் போன்றிருக்கிறது? (பி) நாம் அந்த நீதியுள்ள லோத்துவைப் போன்றிருக்கிறோமென்றால், தற்போதைய மோசமான நிலைமைகளுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்?
4 நம்முடைய நாட்களிலுங்கூட, மனித சமுதாயத்தின் ஒழுக்க நெறியின் தரம் கெட்டுவிட்டிருக்கிறது. அநேக நாடுகளில் அதிகமதிகமான ஆட்கள் விவாகத்திற்கு முன்பு பாலுறவு நடத்தைகளிலும் விவாகத்திற்குப் புறம்பான பாலுறவு நடத்தைகளிலும் ஈடுபடுகின்றனர். பள்ளிகளில் படிக்கும் இளம் பிள்ளைகளுங்கூட இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையில் தங்களை ஆழ்த்திவிடுகிறார்கள், அவர்களோடு சேர்ந்துகொள்ள மறுப்பவர்களை அவர்கள் ஏளனம்செய்கிறார்கள். ஓரினப்புணர்ச்சிக்காரருங்கூட தங்களை வெளிப்படையாகவே அடையாளங்காட்டுகிறவர்களாக, தாங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதற்காக மாநகர்களின் வீதிகளில் வலம்வருகிறார்கள். அப்படிப்பட்ட கேளிக்கைகளில் மதகுருமார்களும் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். அறியப்பட்டிருக்கும் ஓரினப்புணர்ச்சிக்காரரையும் வேசிமார்க்கத்தாரையும் அநேக சர்ச்சுகள் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்வதில்லை. என்றபோதிலும், உண்மையில் பார்க்கப்போனால், செய்தி அறிக்கைகள் அடிக்கடி காண்பிக்கிறபடி, குருவர்க்கத்தினரின் அணியில் ஓரினப்புணர்ச்சிக்காரரையும், வேசிமார்க்கத்தாரையும், விபசாரக்காரரையும் காண்பது கடினமான காரியமாயில்லை. உண்மை என்னவெனில், சில மதத் தலைவர்கள் முறைக்கெட்ட பாலுறவுப் பழிச்சொல்லினிமித்தம் மற்ற பட்டணங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள், அல்லது ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். நீதியை விரும்புகிறவர்கள் அப்படிப்பட்ட துன்மார்க்கச் செயலை ஆதரிப்பவர்களாக இல்லை; அவர்கள் “தீமையை வெறுக்”கின்றனர். (ரோமர் 12:9) கடவுளை சேவிப்பதாக உரிமைபாராட்டும் மக்களுடைய நடத்தை அவருடைய நாமத்திற்கு நிந்தையை ஏற்படுத்தி, உண்மை அறியாத மக்கள் வெறுப்படைந்து மதத்திலிருந்து விலகிச் சென்றிடச் செய்யும் காரியத்தைக் கண்டு அவர்கள் வருத்தமடைகின்றனர்.—ரோமர் 2:24.
5. யெகோவா சோதோம், கொமோராவை அழித்தது நம்முடைய என்ன கேள்விக்குப் பதிலளிக்கிறது?
5 வருடா வருடம் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு இருக்குமா? ஆம் இருக்கும்! கடவுள் தாம் குறிப்பிட்டிருக்கும் காலத்தில் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார் என்பதைப் பூர்வீக சோதோம், கொமோரா பட்டணங்களுக்கு யெகோவா செய்த காரியம் காண்பிக்கிறது. அவர் துன்மார்க்கரை முற்றிலும் அழித்துப்போடுவார், ஆனால் தம்முடைய உத்தம ஊழியர்களை அவர் மீட்டிடுவார்.
வாழ்க்கையில் யார் அல்லது எது முதலில் வருகிறது?
6. (எ) லோத்தின் குமாரத்திகளை விவாகம்பண்ணவிருந்த இளம் மனிதரைப் பற்றிய பதிவில் நமக்குக் காலத்துக்கேற்ற என்ன பாடம் இருக்கிறது? (பி) விவாகத் துணைவர்களாகப் போகும் அந்த மனிதரின் மனநிலை லோத்தின் குமாரத்திகளை எவ்வாறு சோதித்தது?
6 உண்மையான தேவபக்தியைக் காண்பிப்போர் மட்டுமே அழிக்கப்படாமல் விடப்படுவர். இந்தக் காரியத்தில், சோதோம், கொமோரா அழிக்கப்படுவதற்கு முன்பு யெகோவாவின் தூதர்கள் லோத்திடம் என்ன சொன்னார்கள் என்பதைக் கவனியுங்கள். “இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்.” எனவே தன்னுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகும் இளம் மனிதரிடம் லோத்து பேசினான். “நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் (யெகோவா, தி.மொ.) இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார்,” என்று அவர்களைத் திரும்பத் திரும்பத் துரிதப்படுத்தினான். லோத்தின் குடும்பத்துடன் அவர்களுக்கு இருந்த உறவு மீட்கப்படுவதற்கு அவர்களுக்கு ஒரு விசேஷ வாய்ப்பை அளித்தது. ஆனால் அவர்கள் தனிப்பட்டவர்களாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை வெளிப்படுத்திடவேண்டியதாயிருந்தது. மாறாக அவர்களுடைய பார்வையில் லோத்து “பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.” (ஆதியாகமம் 19:12–14) என்ன நடந்தது என்பதை லோத்தின் குமாரத்திகள் அறிய வந்தபோது எவ்விதம் உணர்ந்தார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். இது கடவுளுக்கான அவர்களுடைய உத்தமத்தன்மையைச் சோதித்தது.
7, 8. (எ) லோத்து தன்னுடைய குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு தப்பியோடும்படி அந்தத் தேவ தூதர்கள் துரிதப்படுத்தியபோது, அவன் எவ்வாறு பிரதிபலித்தான்? இது ஏன் ஞானமற்றதாயிருந்தது? (பி) மீட்கப்படுவதற்கு லோத்துக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் முக்கியமாயிருந்தது என்ன?
7 மறுநாள் காலை விடிகிறது, தேவதூதர்கள் லோத்தை அவசரப்படுத்துகிறார்கள். அவர்கள் சொன்னார்கள்: “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ.” ஆனால் “அவன் தாமதித்துக்கொண்டி”ருந்தான். (ஆதியாகமம் 19:15, 16) ஏன்? அவனை அங்கு பிடித்துவைத்த காரியம் என்ன? சோதோமில் அவனுக்கு இருந்த பொருள் சம்பந்தப்பட்ட அக்கறையா—முதலிடத்தில் அவனை அந்த இடத்திற்குக் கவர்ந்த அந்தக் காரியமா? அவன் இந்தக் காரியங்களைப் பற்றிக்கொண்டிருப்பானானால், அவனும் சோதோமுடன்கூட அழிக்கப்படுவான்.
8 தேவதூதர்கள் தயவுகூர்ந்து அவனுடைய குடும்பத்தினரைக் கைகளைப் பிடித்து பட்டணத்திற்கு வெளியே வேகமாகக் கூட்டிச்சென்றார்கள். பட்டணத்தின் புறப்பகுதியில் யெகோவாவின் தூதன் இப்படியாகக் கட்டளையிட்டான்: “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ.” லோத்து இன்னும் தயங்கினான். கடைசியில், அதிக தூரமாயில்லாத இடத்திற்குத் தான் போகலாம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டதற்குப் பின்பு அவனும் அவனுடைய குடும்பமும் தப்பியோடினர். (ஆதியாகமம் 19:17–22) இனிமேலும் தாமதிப்பதற்கில்லை; கீழ்ப்படிதலே முக்கியம்.
9, 10. (எ) கணவருடன் இருப்பதுதானே லோத்தின் மனைவி பாதுகாக்கப்படுவதற்கு ஏன் போதுமானதாயிருக்கவில்லை? (பி) லோத்தின் மனைவி கொல்லப்பட்டபோது, லோத்துக்கும் அவனுடைய குமாரத்திகளுக்கும் கூடுதலாக என்ன சோதனை கொண்டுவரப்பட்டது?
9 என்றபோதிலும், அவர்கள் சோதோமிலிருந்து வெளியேறிய போதும் அவர்களுடைய மீட்பு முற்றுப்பெறவில்லை. ஆதியாகமம் 19:23–25 கூறுகிறது: “லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. அப்பொழுது கர்த்தர் (யெகோவா, தி.மொ.) சோதோமின் மேலும் கொமோராவின் மேலும் கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.” ஆனால் லோத்தின் மனைவி எங்கே?
10 அவள் தன்னுடைய கணவரோடு தப்பியோடிவந்தாள். என்றபோதிலும், அவன் செய்த காரியத்துக்கு அவள் முழுவதுமாக இசைந்திருந்தாளா? அவள் சோதோமின் ஒழுக்கங்கெட்ட நடத்தையை அங்கீகரித்தாள் என்பதைக் குறிப்பிடும் எதுவும் பைபிளில் கிடையாது. ஆனால் கடவுள்பேரில் அவளுடைய அன்பு அவளுடைய வீட்டின்பேரிலும் பொருளுடைமைகளின்பேரிலும் அவளுக்கு இருந்த பிணைப்பைவிட பலமாக இருந்ததா? (லூக்கா 17:31, 32-ஐ ஒப்பிடவும்.) அழுத்தத்தின்கீழ், அவளுடைய இருதயத்திலிருந்தது வெளிப்பட்டுவிட்டது. அவள் கீழ்ப்படியாதவளாய்த் திரும்பிப்பார்த்தபோது, அநேகமாய் அவர்கள் சோவார் பட்டணத்திற்கு அண்மையில், ஒரு வேளை அந்தப் பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் நிலையில் இருந்தார்கள் என்பது தெளிவாய்த்தெரிகிறது. “அவள் உப்புத்தூண் ஆனாள்” என்று பைபிள் பதிவு காண்பிக்கிறது. (ஆதியாகமம் 19:26) இப்பொழுது லோத்தும் அவனுடைய குமாரத்திகளும் உத்தமத்தைச் சோதிக்கும் இன்னொரு சோதனையை எதிர்ப்பட்டனர். மரித்துப்போன தன்னுடைய மனைவியின் பேரிலிருந்த லோத்தின் பிணைப்பு அல்லது மரித்துப்போன தங்களுடைய தாயின்பால் குமாரத்திகளுக்கிருந்த துயரத்தின் உணர்ச்சிகள், இந்தப் பேரிழப்பைக் கொண்டுவந்த யெகோவாவின் பேரிலான அன்பைக்காட்டிலும் பலமுள்ளதாயிருந்ததா? தங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர் கடவுளுக்கு உண்மையற்றவராய்ப் போய்விடும்போதும் அவர்கள் தொடர்ந்து கடவுளுக்குக் கீழ்ப்படிவார்களா? யெகோவாவில் முழு நம்பிக்கையுடையவர்களாய் அவர்கள் திரும்பிப்பார்க்கவில்லை.
11. யெகோவா அளித்திடும் மீட்பு குறித்து நாம் இங்கே என்ன கற்றுக்கொண்டோம்?
11 ஆம், தேவபக்தியுள்ள மக்களைச் சோதனையிலிருந்து மீட்பது எப்படி என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். உண்மை வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு முழு குடும்பத்தை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்; தனிப்பட்ட நபர்களை மீட்பதையும் அறிந்திருக்கிறார். அவர்கள் அவரை உண்மையிலேயே நேசிக்கும்போது, அவர்களோடு தாம் கொண்டிருக்கும் தொடர்பில் அதிகக் கரிசனையைக் காண்பிக்கிறார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:13, 14) ஆனால் அவர் தேவபக்தியுள்ள மக்களுக்கு மாத்திரமே, உண்மையான பக்தியை வெளிப்படுத்துகிறவர்களுக்கு, தங்களுடைய உத்தமத்தின் வெளிக்காட்டாக இருக்கும் கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கு மாத்திரமே அவர் மீட்பளிப்பார்.
ஒரு பெரிய மீட்புக்கு அன்பான ஆயத்தங்கள்
12. நாம் இவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மீட்பை யெகோவா கொண்டுவருவதற்கு முன்னால் அவர் என்ன அன்பான ஏற்பாடுகளைச் செய்யவிருந்தார்?
12 நோவாவின் நாட்களிலும் லோத்தின் நாட்களிலும் அவர் நடப்பித்தக் காரியத்தில் யெகோவா துன்மார்க்கத்தை என்றென்றுமாக நீக்கிப்போடவில்லை. வேத வசனங்கள் சொல்லுகிற பிரகாரம், சம்பவிக்கவிருக்கும் காரியங்களுக்கு அது ஒரு மாதிரியாக அமைகிறது. அந்தக் காரியங்கள் சம்பவிக்கிறதற்கு முன்பு, தம்மை நேசிக்கும் மக்களுக்கு நன்மையுண்டாக யெகோவா அநேகத்தைச் செய்ய நோக்கங்கொண்டிருந்தார். அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பூமிக்கு அனுப்புவதற்கிருந்தார். பரிபூரண மனிதனாக ஆதாம் கடவுளுக்குக் காண்பித்திருக்கவேண்டிய அல்லது காண்பித்திருக்கக்கூடிய தேவபக்தியின் மூலமாக இங்கே கடவுளுடைய பெயருக்கு ஏற்பட்டிருக்கும் நிந்தையை நீக்கிப்போடுவார்; ஆனால் இயேசு இதை இன்னும் அதிகக் கடினமான சூழ்நிலைகளின்கீழ் அப்படிச் செய்வார். இயேசு தம்முடைய பரிபூரண மனித ஜீவனை ஒரு பலியாகக் கொடுப்பதன் மூலம் விசுவாசிக்கும் ஆதாமின் சந்ததியார் அவன் இழந்ததை மீண்டும் பெற்றுக்கொள்ளக்கூடும். பின்பு, கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் பங்கு கொள்வதற்காக உத்தமமுள்ள மனிதரில் ஒரு “சிறு மந்தை”யைக் கடவுள் தெரிந்துகொள்வார், மற்றும் ஒரு புதிய மனித சமுதாயத்தின் அஸ்திபாரமாக அமைந்திடும் “ஒரு திரள் கூட்டம்” எல்லாத் தேசங்களிலிருந்தும் கூட்டிச்சேர்க்கப்படும். (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 7:9) அது நிறைவேற்றப்பட்டப் பின்பு, ஜலப்பிரளயத்தோடும், சோதோம், கொமோராவின் அழிவோடும் சம்பந்தப்பட்டிருந்த சம்பவங்களால் முன்நிழல்படுத்தப்படும் அந்த மகத்தான மீட்பைக் கடவுள் நடப்பிப்பார்.
ஏன் தீர்மானமான நடவடிக்கை இப்பொழுது அவசரமாயிருக்கிறது
13, 14. லோத்தின் நாட்களிலும் நோவாவின் நாட்களிலும் வாழ்ந்த தேவபக்தியில்லாத மக்கள் அழிக்கப்பட்டதை பேதுரு உதாரணங்களாகப் பயன்படுத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
13 யெகோவா அநேக சமயங்களில் தம்முடைய ஊழியர்களுக்காக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதைக் கடவுளுடைய வார்த்தையின் மாணாக்கர்கள் அறிந்திருக்கிறார்கள். என்றபோதிலும், ‘அந்தச் சமயத்தில் இருந்ததுபோல, மனுஷகுமாரன் வந்திருத்தலின் போதும் இருக்கும்’ என்று பைபிள் பெரும்பாலான சமயங்களில் சொல்வதில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு, ஏன் இரண்டு உதாரணங்களை மட்டுமே தனித்துக் குறிப்பிட்டான்? லோத்து மற்றும் நோவாவின் நாட்களில் சம்பவித்தவற்றில் வித்தியாசமாயிருந்தது என்ன?
14 யூதா 7-ல் ஒரு திட்டவட்டமான குறிப்பு காணப்படுகிறது. அதில் நாம் வாசிப்பதாவது: “சோதோம் கொமோரா பட்டணத்தார்களும் அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும் . . . நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.” ஆம், அந்த நகரங்களிலிருந்த படுமோசமான பாவிகளின் அழிவு நித்திய அழிவாக இருந்தது போலவே தற்போதைய காரிய ஒழுங்கின் முடிவில் பொல்லாதவர்களின் அழிவும் இருக்கும். (மத்தேயு 25:46) அதுபோல நோவாவின் நாளைய ஜலப்பிரளயமும் நித்திய நியாயத்தீர்ப்புகள் சம்பந்தமாகவே மேற்கோளாகக் குறிப்பிடப்படுகின்றது. (2 பேதுரு 2:4, 5, 9–12; 3:5–7) எனவே லோத்து மற்றும் நோவாவின் நாட்களில் வாழ்ந்த தேவபக்தியற்றவர்களுடைய அழிவின் மூலம், அநீதியை நடப்பிக்கும் ஆட்களை என்றுமாக அழிப்பதன் மூலம் தம்முடைய ஊழியர்களை அவர் மீட்பார் என்பதை யெகோவா விளக்கிக்காண்பித்தார்.—2 தெசலோனிக்கேயர் 1:6–10.
15. (எ) பொல்லாத பழக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என்ன அவசர எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது? (பி) அநீதியில் தொடரும் அனைவர் மீதும் ஏன் நீதியான நடவடிக்கை எடுக்கப்படும்?
15 துன்மார்க்கரின் அழிவில் யெகோவா பிரியப்படுகிறதில்லை, அல்லது அவருடைய ஊழியருக்கும் அதில் இன்பமில்லை. தம்முடைய சாட்சிகளின் மூலம் யெகோவா மக்களை இப்படியாகத் துரிதப்படுத்துகிறார்: “உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்.” (எசேக்கியேல் 33:11) என்றபோதிலும், இந்த அன்பான வேண்டுகோளுக்குச் செவிகொடுக்க மக்கள் விருப்பமற்றவர்களாக இருந்து, தங்களுடைய சொந்த தன்னல வழிகளில் தொடரும்போது, தம்முடைய சொந்த பரிசுத்த நாமத்தை மதிப்பவராயும், தேவபக்தியற்ற மனிதர் கரங்களில் அவதியுறும் தம்முடைய உத்தம ஊழியரை நேசிப்பவராயும் இருக்கும் யெகோவா நீதியை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
16. (எ) முன்னறிவிக்கப்பட்ட மீட்பு மிக சமீபமாயிருக்கிறது என்பதில் நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்? (பி) மீட்பு எதிலிருந்து, எதற்குள்ளாக இருக்கும்?
16 மீட்பைக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய நேரம் சமீபமாயிருக்கிறது! தம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளமாக இயேசு குறிப்பிட்ட மனப்பான்மைகளும் சம்பவங்களும் தெளிவாகத் தெரிகிறது. அந்த அடையாளத்தின் அம்சங்கள் முதல் முறையாக 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட ஆரம்பித்தது. தேவபக்தியில்லாத இந்த உலகத்தின்மேல் கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு .“இந்தச் சந்ததி” ஒழிந்துபோகாது என்றும் இயேசு சொன்னார். ராஜ்யத்தின் செய்தி குடியிருக்கப்பட்ட இந்தப் பூமி முழுவதிலும் போதியளவுக்குப் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது என்பதை யெகோவா தீர்மானிக்கும்போது இந்தப் பொல்லாத உலகம் முடிவுக்கு வரும், அத்துடன்கூட தேவபக்தியுள்ள மக்களுக்கு மீட்பும் வரும். (மத்தேயு 24:3–34; லூக்கா 21:28–33) எதிலிருந்து மீட்பு? துன்மார்க்கருடைய கைகளில் அவர்கள் அனுபவிக்கவேண்டியதாயிருந்த சோதனைகளிலிருந்தும், நீதியை நேசிப்பவர்களாக அவர்களுக்கு அனுதினமும் துயரத்தை உண்டுபண்ணும் சூழ்நிலைகளிலிருந்தும். அது நோயும் மரணமும் கடந்தகால காரியங்களாயிருக்கும் ஒரு புதிய உலகிற்குள் பிரவேசிக்க மீட்படைவதாகவும் இருக்கும்.
மீட்பை முன்னிட்டு தெய்வீக உதவி
17. (எ) நம்மை நாமே என்ன தெளிவான கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்? (பி) நோவாவைப் போன்று “பயபக்தியால்” தூண்டப்படுகிறோம் என்பதற்கு நாம் எப்படி அத்தாட்சியளிக்கலாம்?
17 நாம் தனிப்பட்டவிதமாகச் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவெனில், ‘கடவுளுடைய அந்த நடவடிக்கைக்கு நான் ஆயத்தமாக இருக்கிறேனா?’ நம்மை நாமே நம்பியிருப்போமானால் அல்லது நீதியின்பேரில் நம்முடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருப்போமானால், நாம் ஆயத்தமாக இல்லை. ஆனால், நோவாவைப் போல நாம் “பயபக்தி”யால் உந்தப்படுகிறோமென்றால், யெகோவா நமக்கு அளிக்கும் வழிநடத்துதலுக்கு நாம் விசுவாசத்துடன் பிரதிபலிப்பவர்களாயிருப்போம், இது நம்முடைய மீட்புக்கு வழிநடத்தும்.—எபிரெயர் 11:7.
18. தேவராஜ்ய அதிகாரத்திற்கு உண்மையான மதிப்பைக் காண்பிக்கக் கற்றுக்கொள்ளுதல் ஏன் நாம் புதிய உலகிற்குள் மீட்கப்படுவதற்கு ஆயத்தப்படுவதன் ஒரு முக்கிய பாகமாயிருக்கிறது?
18 யெகோவா இப்பொழுதே கொடுக்கும் பாதுகாப்பை அழகாக விவரிக்கும் வகையில், சங்கீதம் 91:1, 2 பின்வருமாறு சொல்லுகிறது: “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை (யெகோவாவை, தி.மொ.) நோக்கி, ‘நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்’ என்று சொல்லுவேன்.” ஒரு தந்தை அல்லது தாய்ப் பறவையின் வல்லமைவாய்ந்த செட்டைகளின் கீழ் இருக்கும் இளம் குஞ்சுகள் போன்று ஒரு தொகுதியினர் இங்கு கடவுளால் பாதுகாக்கப்படுகின்றனர். அவர்களுடைய முழு நம்பிக்கை யெகோவாவில்தான் இருக்கிறது. அவரே உன்னதமானவர், சர்வவல்லவர் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால், அவர்கள் தேவராஜ்ய அதிகாரத்தை மதித்து, அதற்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகிறார்கள். அது பெற்றோரால் செலுத்தப்படுகிறதாயிருந்தாலும் அல்லது “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் செலுத்தப்படுகிறதாயிருந்தாலும் அப்படிச் செய்கிறார்கள். (மத்தேயு 24:45–47) அது தனிப்பட்டவிதத்தில் நம்மைக் குறித்ததிலும் உண்மையாயிருக்கிறதா? நோவாவைப் போல் ‘யெகோவா கட்டளையிடும் எல்லாவற்றையும்’ செய்யவும் அவருடைய வழியில் காரியங்களைச் செய்யவும் கற்றுக்கொள்கிறோமா? (ஆதியாகமம் 6:22) அப்படியானால், தம்முடைய நீதியான புதிய உலகிற்குள் மீட்கப்படுவதற்கு யெகோவா நம்மை ஆயத்தப்படுத்தும் வகையில் அளிக்கும் காரியங்களுக்கு நாம் நன்கு பிரதிபலிக்கிறோம்.
19. (எ) அடையாள அர்த்தமுள்ள நம்முடைய இருதயம் எது? அதற்குக் கவனம் செலுத்துவது ஏன் முக்கியமாயிருக்கிறது? (நீதிமொழிகள் 4:23) (பி) உலகக் கவர்ச்சிகளுக்கு நம்முடைய பிரதிபலிப்பு சம்பந்தமாக லோத்தின் உதாரணத்திலிருந்து நாம் எவ்வாறு பயன்பெறலாம்?
19 அந்த ஆயத்தப்படுத்துதல், அடையாள அர்த்தமுள்ள நம்முடைய இருதயத்திற்குக் கவனம் செலுத்துவதையும் உட்படுத்துகிறது. “இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.” (நீதிமொழிகள் 17:3, NW) நாம் வெளித் தோற்றத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம் என்பதல்ல, ஆனால் நம்முடைய உள்ளான மனுஷனே, இருதயமே முக்கியம் என்பதை நாம் உணர உதவிசெய்கிறார். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் போன்று நாம் வன்முறையிலும் ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபடுவதில்லை என்றாலும், நாம் இந்தக் காரியங்களால் கவர்ந்திழுக்கப்படுவதற்கு அல்லது மகிழ்விக்கப்படுவதற்கு எதிராகக் கவனமாயிருக்க வேண்டும். லோத்தைப் போன்று, அப்படிப்பட்ட அக்கிரமச் செயல்கள் இருப்பதைக் குறித்தே வேதனைப்படுகிறவர்களாக இருக்க வேண்டும். தீயதை வெறுப்பவர்கள் அதில் ஈடுபடுவதற்கான வழிகளை நாடிக்கொண்டிருக்க மாட்டார்கள்; என்றபோதிலும், அதை வெறுக்காத மக்கள் உடலளவில் அதிலிருந்து விலகியிருக்கலாம், ஆனால் மனதார அதில் பங்குகொள்ளப் பிரியப்படுகிறவர்களாக இருக்கலாம். “யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.”—சங்கீதம் 97:10.
20. (எ) பொருளாசைக்குரிய வாழ்க்கை முறைக்கு எதிராக பைபிள் நம்மை எவ்வகையில் எச்சரிக்கிறது? (பி) பொருளாசை சம்பந்தமாக பைபிளின் முக்கிய பாடங்கள் நம்முடைய இருதயத்தில் பதிந்திருக்கிறது என்று நாம் எவ்விதம் சொல்லக்கூடும்?
20 ஒழுக்கங்கெட்ட நடத்தையைத் தவிர்ப்பதற்கு மட்டுமல்ல, ஆனால் பொருளாசைக்குரிய வாழ்க்கை முறையைத் தவிர்ப்பதற்கும் யெகோவா அன்பாக நமக்குப் போதித்துவருகிறார். ‘உண்ணவும் உடுக்கவும் இருப்பதில் போதுமென்றிருக்கக்கடவோம்,’ என்று அவருடைய வார்த்தை நமக்குப் புத்திச்சொல்லுகிறது. (1 தீமோத்தேயு 6:8) நோவாவும் அவனுடைய குமாரரும் பேழைக்குள் சென்றபோது, தங்களுடைய வீடுகளைப் பின்னால் விட்டுச்செல்ல வேண்டியிருந்தது. லோத்தும் அவனுடைய குடும்பமும்கூட தங்களுடைய உயிர்களைக் காத்துக்கொள்வதற்கு வீட்டையும் உடைமைகளையும் கைவிடவேண்டியதாயிருந்தது. நம்முடைய ஆசைகளை நாம் எங்கே வைத்திருக்கிறோம்? “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.” (லூக்கா 17:32) இயேசு பின்வருமாறு துரிதப்படுத்தினார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள்.” (மத்தேயு 6:33, NW) அதை நாம் செய்துவருகிறோமா? யெகோவாவின் நீதியுள்ள தராதரங்கள் நம்மை வழிநடத்துமானால், மற்றும் ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பது நம்முடைய வாழ்க்கையின் முதல் அக்கறையாக இருக்குமானால், அப்பொழுது நாம் உண்மையிலேயே தம்முடைய புதிய உலகிற்குள் மீட்கப்படுவதற்கான அவருடைய ஆயத்தங்களுக்கு நல்ல விதத்தில் பிரதிபலிக்கிறவர்களாயிருக்கிறோம்.
21. மீட்பு பற்றி யெகோவா அளித்திருக்கும் வாக்குறுதி சீக்கிரத்தில் நிறைவேறும் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
21 ராஜ்ய வல்லமையில் தாம் வந்திருப்பதற்கான அடையாளத்தைக் காணும் தேவபக்தியுள்ள மக்களுக்கு இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” (லூக்கா 21:28) அதன் ஒவ்வொரு விவரிப்பிலும் முன்னேறியிருக்கும் அந்த அடையாளத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அப்படியென்றால், மீட்பு சம்பந்தமாக யெகோவாவின் வாக்குறுதியின் நிறைவேற்றம் மிக சமீபத்திலிருக்கிறது என்பதில் நிச்சயமாயிருங்கள்! “யெகோவா தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று மீட்டுக்கொள்வதெப்படி என்பதை அறிந்திருக்கிறார்,” என்பதை முழுமையாக நம்பியிருங்கள்.—2 பேதுரு 2:9, NW. (w90 4/15)
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
◻ லோத்துவைப் போன்று இவ்வுலகின் வாழ்க்கை முறைக்கு நாம் எவ்விதம் பிரதிபலிக்க வேண்டும்?
◻ சோதோமை விட்டுத் தப்பியோடுகையிலுங்கூட லோத்தும் அவனுடைய குடும்பமும் என்ன சோதனைகளை எதிர்ப்பட்டனர்?
◻ பேதுரு பயன்படுத்திய உதாரணங்கள் யெகோவாவின் பக்கமாக இப்பொழுது உறுதியான நிலைநிற்கை எடுப்பதன் அவசரத்தன்மையை எவ்விதம் வலியுறுத்துகின்றன?
◻ தம்முடைய மக்கள் மீட்கப்படுவதற்கு ஆயத்தம்செய்வதில், யெகோவா என்ன முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறார்?
[பக்கம் 20-ன் படம்]
கடவுளுடைய மக்கள் ஒரு தந்தை அல்லது தாய்ப் பறவையின் வல்லமைவாய்ந்த செட்டைகளின் கீழ் இருக்கும் இளம் குஞ்சுகள் போன்று அவரால் பாதுகாக்கப்படுகின்றனர்