வேடனுடைய கண்ணிகளிலிருந்து விடுவிக்கப்படுதல்
‘அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கு . . . தப்புவிப்பார்.’—சங்கீதம் 91:3.
1. இங்குச் சொல்லப்பட்டுள்ள ‘வேடன்’ யார், அவன் ஏன் ஆபத்தானவன்?
உ ண்மை கிறிஸ்தவர்களைக் கபளீகரம் செய்ய சுற்றிச்சுற்றி வருகிறான் ஒருவன்; அவன் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவன், அதிபுத்திசாலி, தந்திரசாலி. உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருமே அவனைச் சமாளிக்க வேண்டியுள்ளது. அவனை சங்கீதம் 91:3 ‘வேடன்’ என குறிப்பிடுகிறது. இந்த எதிரி யார்? பிசாசாகிய சாத்தானே அவன்; இப்பத்திரிகை 1883, ஜூன் 1 தேதியிட்ட இதழிலிருந்தே அவனை அடையாளம் காட்டி வந்திருக்கிறது. படுஆபத்தான இந்த எதிரி, பறவையைக் கண்ணி வைத்துப் பிடிக்கிற வேடனைப் போல யெகோவாவின் ஜனங்களை வழிமாறிச் செல்ல வைத்து, அவர்களைப் பிடிக்க தந்திரமாக முயல்கிறான்.
2. சாத்தானை ஒரு வேடனுக்கு பைபிள் ஒப்பிடுவது ஏன்?
2 பூர்வ காலத்தில் பறவைகள், அவற்றின் இனிய கீதத்திற்காகவும் வண்ண வண்ண இறகுகளுக்காகவும் உணவுக்காகவும் பலி செலுத்துவதற்காகவும் பிடிக்கப்பட்டன. என்றாலும், பறவைகள் இயல்பாகவே எளிதில் மிரண்டுவிடுவதோடு எச்சரிக்கையுடனும் இருப்பதால் அவற்றைப் பிடிப்பது கடினம். ஆகவே, பைபிள் காலங்களில் ஒரு வேடன் தான் பிடிக்க விரும்பும் பறவைகளின் பிரத்தியேக இயல்புகளையும் பழக்கங்களையும் கூர்ந்து கவனித்தான். அதன் பிறகு அவற்றைப் பிடிக்க தந்திரமான முறைகளைக் கண்டுபிடித்தான். சாத்தானை ஒரு வேடனுக்கு ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது; அதன் காரணமாக, அவனுடைய சூழ்ச்சிமுறைகளை புரிந்துகொள்ளவும் உதவுகிறது. அவன் நம் ஒவ்வொருவரையும் உன்னிப்பாக கவனிக்கிறான். நம்முடைய பிரத்தியேக சுபாவங்களையும் பழக்கங்களையும் கவனிக்கிறான்; அதன் பிறகு, நம்மைப் பிடிக்க மறைவான கண்ணிகளை வைக்கிறான். (2 தீமோத்தேயு 2:26) அவனுடைய கண்ணியில் அகப்பட்டால், கடவுளோடுள்ள நம் பந்தம் முறிந்துவிடுவதோடு, கடைசியில் அழிவுதான் மிஞ்சும். ஆகவே, நம்முடைய பாதுகாப்புக்காக, அந்த “வேடனுடைய” பல்வேறு சூழ்ச்சிமுறைகளை அடையாளம் கண்டுகொள்வது அவசியம்.
3, 4. சாத்தானுடைய தாக்குதல்களை விவரியுங்கள்: சிங்கத்தைப்போல், விரியன் பாம்பைப்போல்.
3 சாத்தானுடைய தந்திரங்களை விளக்க சங்கீதக்காரன் தத்ரூபமான ஒப்புமைகளைப் பயன்படுத்துகிறார்; அவனை இளம் சிங்கத்தோடும் விரியன் பாம்போடும்கூட ஒப்பிடுகிறார். (சங்கீதம் 91:13) சில சமயங்களில் சிங்கத்தைப்போல சாத்தான் நேரடியாகத் தாக்குகிறான்; அதாவது, துன்புறுத்தலின் மூலமாகவோ அரசாங்கச் சட்டங்களின் மூலமாகவோ யெகோவாவின் மக்களைத் தாக்குகிறான். (சங்கீதம் 94:20) அத்தகைய மூர்க்கத்தனமான தாக்குதலால் சிலர் யெகோவாவைவிட்டு வழிவிலகிப் போகலாம். என்றாலும், இந்தத் தாக்குதல்களால் அநேக சந்தர்ப்பங்களில் நல்ல பலன்களே கிடைத்திருக்கின்றன; அவை கடவுளுடைய மக்களை ஒன்றுபடுத்தியிருக்கின்றன. ஆனால், பாம்பைப்போல் சாத்தான் எப்படி நயவஞ்சகமாகத் தாக்குகிறான்?
4 விஷமுள்ள பாம்பு மறைந்திருந்து தாக்குவதைப் போல பிசாசும் தனது அதிபுத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி சூழ்ச்சியான முறையில் மரணத்துக்கேதுவாகத் தாக்குகிறான். இவ்விதத்தில், கடவுளுடைய மக்கள் சிலரின் மனதில் விஷத்தைக் கலந்திருக்கிறான். எப்படியெனில், அவர்களை ஏமாற்றி யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்குப் பதிலாக தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைத்திருக்கிறான். அதனால் எவ்வளவு துயரங்கள் நேர்ந்திருக்கின்றன! ஆனால், சாத்தானுடைய தந்திரங்களை நாம் அறிந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். (2 கொரிந்தியர் 2:11) ஆகவே, இந்த ‘வேடன்’ பயன்படுத்துகிற ஆபத்தான நான்கு கண்ணிகளை நாம் இப்போது கலந்தாலோசிக்கலாம்.
மனித பயம்
5. ‘மனித பயம்’ எனும் கண்ணி ஏன் அந்தளவுக்கு வலிமைமிக்கதாய் இருக்கிறது?
5 ‘மற்றவர்களுக்குப் பிடித்த மாதிரி நடக்க வேண்டும், அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற ஆசை பொதுவாக மனிதருக்கு இருப்பதை அந்த ‘வேடன்’ அறிந்திருக்கிறான். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பொருட்படுத்தாமல் மனதைக் கல்லாக்கிக் கொள்பவர்கள் அல்ல. இதை அறிந்திருக்கிற பிசாசு, தங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்றவொரு கவலையை மக்களின் மனதில் ஏற்படுத்த விரும்புகிறான். உதாரணமாக, ‘மனித பயம்’ எனும் வலையை விரித்து கடவுளுடைய மக்கள் சிலரைச் சிக்க வைக்கிறான். (நீதிமொழிகள் 29:25) மனித பயத்தின் காரணமாக, கடவுளின் ஊழியர்கள் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு யெகோவா தடைசெய்கிற காரியங்களைச் செய்யலாம்; அல்லது அவருடைய வார்த்தை செய்யும்படி கட்டளையிடுகிறவற்றைச் செய்யாமலிருக்கலாம். அப்படியானால், அவர்கள் அந்த ‘வேடனின்’ கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.—எசேக்கியேல் 33:8; யாக்கோபு 4:17.
6. ஓர் இளைஞன் “வேடனுடைய” கண்ணியில் அகப்பட்டுவிடலாம் என்பதை எப்படி உதாரணத்துடன் விளக்குவீர்கள்?
6 உதாரணமாக, ஓர் இளைஞன் பள்ளி சகாக்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி சிகரெட் பிடிக்கலாம். அன்றைய தினம் பள்ளிக்குக் கிளம்பியபோது சிகரெட் பிடிப்பதைப்பற்றி அவன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டான். என்றாலும், கடவுளுக்குப் பிடிக்காத காரியத்தை, அவனுடைய உடலுக்கும் கேடு விளைவிக்கிற காரியத்தை அவன் செய்துவிடுகிறான். (2 கொரிந்தியர் 7:1) அவன் எப்படி அதில் மாட்டிக்கொண்டான்? ஒருவேளை கெட்ட சகாக்களோடு அவன் கூட்டுச் சேர்ந்திருக்கலாம், அவர்கள் தன்னை ஒதுக்கிவிடுவார்களோ என பயந்திருக்கலாம். இளைஞர்களே, அந்த ‘வேடன்’ உங்களை வசீகரித்து தன் வலையில் சிக்கவைக்க இடமளிக்காதீர்கள்! அவனுடைய கண்ணியில் சிக்கிவிடாதிருக்க, சிறு சிறு விஷயங்களில்கூட விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கும்படி பைபிள் கொடுத்துள்ள எச்சரிப்புக்குச் செவிகொடுங்கள்.—1 கொரிந்தியர் 15:33.
7. பெற்றோர் சிலர் சம்பாதிப்பதிலேயே மூழ்கிப்போய் ஆன்மீக சமநிலையை இழந்துவிடும்படி சாத்தான் எப்படி செய்யலாம்?
7 குடும்பத்தாரின் பொருள் சம்பந்தமான தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது கிறிஸ்தவ பெற்றோருக்கு கடவுள் தந்த பொறுப்பு; இதை அவர்கள் முக்கியமானதாய் எடுத்துக் கொள்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:8) என்றாலும், கிறிஸ்தவர்களை குடும்பத்திற்காகச் சம்பாதிப்பதில் மூழ்கிப்போகும்படி செய்வதே சாத்தானின் குறிக்கோள். ஒருவேளை, கூடுதல் நேரம் வேலைசெய்யும்படி முதலாளி வற்புறுத்துகையில் அவருக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் சிலர் கூட்டங்களை வழக்கமாகவே தவறவிடலாம். சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து யெகோவாவை வழிபடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாநாட்டில் முழுமையாகக் கலந்துகொள்வதற்கு விடுப்பு கேட்க அவர்கள் பயப்படலாம். இந்தக் கண்ணியிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு ஒரு வழி, ‘யெகோவாவில் நம்பிக்கை’ வைப்பதே. (நீதிமொழிகள் 3:5, 6) அதுமட்டுமல்ல, நாம் அனைவருமே யெகோவாவுடைய வீட்டார் என்பதையும் நம்மைக் கவனித்துக்கொள்வதை தம் கடமையாக அவர் கருதுகிறார் என்பதையும் மனதில்கொள்வது சமநிலையோடிருக்க நமக்கு உதவும். பெற்றோரே, நீங்கள் யெகோவாவுடைய சித்தத்தைச் செய்யும்போது அவர் உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும் ஏதாவதொரு விதத்தில் கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறீர்களா? இல்லையெனில் மனித பயத்தின் காரணமாக பிசாசின் சித்தத்தைச் செய்யும்படி அவனுடைய கண்ணியில் நீங்கள் அகப்பட்டுவிடுவீர்களா? இக்கேள்விகளை ஜெபத்தோடு சிந்தித்துப் பார்க்கும்படி உங்களிடம் தயவாய்க் கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாசை எனும் கண்ணி
8. எவ்விதத்தில் பொருளாசை எனும் வலையை சாத்தான் விரிக்கிறான்?
8 சாத்தான் நம்மைச் சிக்கவைப்பதற்கு பொருளாசை எனும் வசீகர வலையையும் விரிக்கிறான். இன்றைய வியாபார உலகம் திடீர் பணக்காரர்களாவதற்கான திட்டங்களை அடிக்கடி தீட்டுகிறது; அவற்றால் கடவுளுடைய மக்கள் சிலரும்கூட ஏமாந்துபோகலாம். சில சமயங்களில், நம்மைச் சிலர் இவ்வாறு ஊக்குவிக்கலாம்: “கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய சமயம் இது. கைநிறைய சம்பாத்தியம் பண்ணிய பிறகு, ரிலாக்ஸாக இருக்கலாம், வாழ்க்கையை ‘என்ஜாய்’ பண்ணலாம்; பயனியர்கூட செய்யலாம்.” சபையிலுள்ள சிலர் சமநிலையாக யோசிக்காமல் இப்படிப் பல விளக்கங்களைக் கொடுக்கலாம்; ஏனென்றால், பண விஷயத்தில் சபையிலுள்ள தங்கள் நண்பர்களிடம் ஆதாயம்தேட இவர்கள் விரும்புகிறார்கள். மற்றவர்கள் தரும் இப்படிப்பட்ட விளக்கங்களை கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். இயேசு சொன்ன உவமையிலுள்ள ‘மதிகெட்ட’ ஐசுவரியவானுடைய சிந்தனையை இது பிரதிபலிக்கிறது, அல்லவா?—லூக்கா 12:16-21.
9. பொருளாசை எனும் வலைக்குள் கிறிஸ்தவர்கள் ஏன் வீழ்ந்துவிடலாம்?
9 பொருட்கள்மீது ஆசைகொள்ள மக்களைத் தூண்டும் விதத்தில் இந்தத் துன்மார்க்க உலகத்தை சாத்தான் பயன்படுத்தி வருகிறான். இப்படிப்பட்ட ஆசை ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கையில் படிப்படியாக செல்வாக்கு செலுத்தி, கடவுளுடைய வார்த்தையை நெருக்கிப்போட்டு, அதைப் ‘பலனற்றதாக்கி’ விடுகிறது. (மாற்கு 4:18, 19) உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமென்றிருக்கும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (1 தீமோத்தேயு 6:8) என்றாலும், இந்த ஆலோசனையைப் பின்பற்றாததால், அநேகர் அந்த “வேடனுடைய” கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள். தங்களைப்பற்றி மிதமிஞ்சி எண்ணுவதால் எளிமையாக வாழ்வதை அவர்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்களோ? நம்மைப்பற்றி என்ன சொல்லலாம்? நிறைய பொருட்களைச் சேர்க்க வேண்டுமென்ற ஆசையால் உண்மை வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறோமா? (ஆகாய் 1:2-8) வருத்தகரமாக, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, சிலர் தாங்கள் இதுவரை வாழ்ந்துவந்த சௌகரியமான வாழ்க்கை முறைக்கு எவ்வித குறைச்சலும் வராமலிருக்க ஆன்மீக காரியங்களைத் தியாகம் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மனப்பான்மையுள்ளோரைப் பார்க்கையில் அந்த ‘வேடன்’ ஆனந்தமடைகிறான்!
தீங்கிழைக்கும் பொழுதுபோக்குகள் —ஒரு கண்ணி
10. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் எவ்விதத்தில் சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம்?
10 எது நல்லது எது கெட்டது என்பதை இயல்பாகவே உணர்ந்துகொள்ளும் நம் திறமையை மழுங்கச்செய்வது அந்த ‘வேடனின்’ மற்றொரு சூழ்ச்சிமுறை ஆகும். சோதோம் கொமோரா மக்களுக்கு இருந்த அதே மனப்பான்மை இன்றைய பொழுதுபோக்கு துறையையும் பெருமளவு ஆட்டிப்படைக்கிறது. டிவியிலும் பத்திரிகைகளிலும் வருகிற செய்தி அறிக்கைகளும்கூட வன்முறையை சிறப்பித்துக் காட்டுகின்றன, அதோடு காமவெறிக்குத் தீனிபோடுகின்றன. மீடியாக்களில் கேளிக்கைகளாகக் காட்டப்படுகிற பலவும் ‘நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியும்’ திறமையை மழுங்கச் செய்கிறது. (எபிரெயர் 5:14) என்றாலும், ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா இவ்வாறு சொன்னதை நினைத்துப்பாருங்கள்: ‘தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ!’ (ஏசாயா 5:20) அந்த ‘வேடன்’ அத்தகைய தீங்கிழைக்கும் கேளிக்கைகளால் உங்களை அறியாமலேயே உங்களுடைய சிந்தனையைக் கெடுத்திருக்கிறானா? சுய பரிசோதனை செய்துகொள்வது முக்கியம்.—2 கொரிந்தியர் 13:5.
11. இப்பத்திரிகை டிவி தொடர்களைப் பற்றி என்ன எச்சரிக்கை கொடுத்தது?
11 சுமார் 25 வருடங்களுக்கு முன்பே, டிவி சீரியல்களைக் குறித்து விசுவாசக் குடும்பத்தாரை காவற்கோபுர பத்திரிகை அன்புடன் எச்சரித்தது.a பிரபல டிவி தொடர்கள் ஏற்படுத்தும் மறைமுகமான பாதிப்பைப்பற்றி அது இவ்வாறு குறிப்பிட்டது: “பாசத்தையும் நேசத்தையும் எந்த வழியில் பெற்றாலும் அதில் தவறில்லை. உதாரணமாக, மணமாகாமல் கர்ப்பமான ஒரு யுவதி தன் சிநேகிதியிடம் இவ்வாறு கூறுகிறாள்: ‘ஆனால், விக்டரை நான் காதலிக்கிறேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை . . . அவனுடைய குழந்தையை வயிற்றில் சுமக்கிறேனே, அதுவே எனக்குப் போதும்!’ பின்னணியில் கேட்கும் மென்மையான இசை, அவளுடைய நடத்தையில் எந்தத் தவறும் இல்லை என்பதுபோல் உணர வைக்கிறது. விக்டர்மீது உங்களுக்கும்கூட ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது. அந்தப் பெண்ணைப் பார்த்து நீங்கள் பரிதாபப்படுகிறீர்கள். அவள் செய்வதெல்லாம் சரியென உங்கள் மனமும் சொல்கிறது. அத்தகைய தொடர்களை பார்த்துவந்த ஒருவர், அவை தன்னை எந்தளவுக்குப் பாதித்தன என்பதை பிற்பாடு உணர்ந்து இவ்வாறு சொன்னார்: ‘தவறான ஒன்றை எப்படித்தான் சரியென்று ஏற்றுக்கொள்கிறோமோ என்பது ஆச்சரியமாயிருக்கிறது. ஒழுக்கக்கேடு தவறு என்பது நமக்குத் தெரியும்தான். . . . ஆனால், அதை மானசீகமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் சென்றுவிட்டேன்.’”
12. சில டிவி நிகழ்ச்சிகளைப்பற்றி கொடுக்கப்படுகிற காலத்திற்கேற்ற எச்சரிப்புகள் சரியானவையே என்பதை எது காட்டுகிறது?
12 இத்தகைய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டது முதற்கொண்டு கீழ்த்தரமான நிகழ்ச்சிகள் இன்னும் அதிகமாகவே வந்தவண்ணம் இருக்கின்றன. பல இடங்களில், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகின்றன. ஆண்களும் பெண்களும் டீனேஜர்கள் பலரும் இத்தகைய பொழுதுபோக்குகளால் தங்கள் மனதையும் இருதயத்தையும் நிரப்பிக்கொள்கிறார்கள். ஆனால் நாமோ, தவறாக நியாயங்காட்டி நம்மை நாமே வஞ்சித்துக்கொள்ளக் கூடாது. ‘இந்த உலகில் இதைவிட கேவலமான எத்தனையோ காரியங்கள் நடக்கின்றன, அதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த நிகழ்ச்சிகள் அப்படியொன்றும் மோசமானவை இல்லை’ என்று நியாயங்காட்டுவது தவறு. மோசமான ஆட்களை தன் வீட்டுக்கு அழைப்பதை நினைத்துக்கூட பார்க்காத ஒரு கிறிஸ்தவர் டிவியின் மூலமாக அத்தகைய ஆட்களோடு சேர்ந்து நேரம்கழிக்கத் தீர்மானிப்பது எவ்விதத்தில் நியாயமாக இருக்கும்?
13, 14. டிவி சீரியல்களைக் குறித்து கொடுக்கப்பட்ட எச்சரிப்புகளிலிருந்து நன்மை அடைந்ததைப்பற்றி சிலர் சொன்னதைக் குறிப்பிடுங்கள்.
13 ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ கொடுத்துள்ள எச்சரிப்புகளுக்கு கவனம் செலுத்தியதால் அநேகர் நன்மை அடைந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45-47) பைபிள் அடிப்படையில் ஒளிவுமறைவில்லாமல் கொடுக்கப்பட்ட இத்தகைய அறிவுரைகளை வாசித்தபிறகு, அந்தக் கட்டுரைகள் தங்களில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தின என்பதைச் சிலர் கடிதம்மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.b ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: “13 வருடங்களாக நான் டிவி சீரியல் பைத்தியமாக இருந்தேன். கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதாலும் அவ்வப்போது வெளி ஊழியத்திற்குச் செல்வதாலும் ஆன்மீக ரீதியில் எனக்கு எந்தப் பாதிப்பும் வராது என நினைத்தேன். ஆனால், டிவி தொடர் கதாபாத்திரங்களின் அதே மனப்பான்மையை நான் வெளிக்காட்டினேன்; அதாவது, கணவன் உங்களைக் கொடுமைப்படுத்தினால், அல்லது உங்கள்மீது அன்பு காட்டாததுபோல் தெரிந்தால், மற்றொருவரோடு தொடர்பு வைத்துக்கொள்வதில் தவறில்லை; ஏனென்றால், மனைவி தவறான வழியில் செல்வதற்குக் காரணம் அந்தக் கணவன்தான் என்றெல்லாம் நினைத்தேன். ஆகவே, அப்படிச் செய்வது ‘நியாயம்’ என பட்டபோது தவறான வழியில் சென்றேன்; யெகோவாவுக்கும் என்னுடைய துணைவருக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.” இந்தப் பெண் சபைநீக்கம் செய்யப்பட்டார். பிற்பாடு, தன்னுடைய தவறை உணர்ந்து மனந்திரும்பியபோது மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். டிவி தொடர்களைப்பற்றி எச்சரித்து எழுதப்பட்டிருந்த கட்டுரைகள், யெகோவா வெறுக்கிறவற்றை பார்க்காதிருக்க அவருக்குப் பலத்தைத் தந்தன.—ஆமோஸ் 5:14, 15.
14 டிவி தொடர்களால் வாழ்க்கையில் அடிபட்ட மற்றொரு வாசகர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்தக் கட்டுரைகளை வாசித்ததும் நான் அழுதுவிட்டேன்; ஏனென்றால், என்னுடைய இருதயம் முற்றிலும் யெகோவாவுக்கு ஏற்றதாய் இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இனிமேல் இப்படிப்பட்ட சீரியல்களே கதியென்று இருக்க மாட்டேன் என்று கடவுளிடம் சத்தியம் செய்தேன்.” மற்றொரு கிறிஸ்தவப் பெண் இக்கட்டுரைகளுக்கு நன்றி தெரிவித்த பிறகு, தான் டிவி சீரியல்களுக்கு அடிமையாய் இருந்ததை ஒப்புக்கொண்டு இவ்வாறு எழுதினார்: “யெகோவாவுக்கும் எனக்குமுள்ள பந்தம் முறிந்துபோய்விடுமோ என . . . பயந்தேன். டிவி தொடரில் வரும் கதாபாத்திரங்களையும் அதே சமயத்தில் யெகோவாவையும் எப்படி ஃபிரெண்டாக வைத்துக்கொள்ள முடியும்?” 25 வருடங்களுக்கு முன்பே டிவி தொடர்கள் மக்களின் இருதயத்தை கறைப்படுத்தியிருக்கிறது என்றால் இன்றைக்கு அவை எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்தும்? (2 தீமோத்தேயு 3:13) சாத்தானுடைய கண்ணியாக இருக்கிற எல்லா விதமான தீங்கிழைக்கும் பொழுதுபோக்குகளையும் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவை டிவி தொடர்களாகவோ வன்முறைமிக்க வீடியோ கேம்ஸாகவோ ஒழுக்கக்கேடான மியூசிக் வீடியோக்களாகவோ இருந்தாலும் சரி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் எனும் கண்ணி
15. சிலர் எவ்வாறு பிசாசின் கண்ணியில் சிக்கிவிடுகிறார்கள்?
15 சாத்தான் கருத்து வேறுபாடுகளைக் கண்ணியாகப் பயன்படுத்தி யெகோவாவின் மக்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்துகிறான். நாம் விசேஷித்த பொறுப்புகளைப் பெற்றிருந்தாலும் இந்தக் கண்ணியில் சிக்கிவிட வாய்ப்பிருக்கிறது. கருத்து வேறுபாடுகளின் காரணமாக சிலர், சகோதரர் மத்தியில் உள்ள சமாதானத்தையும் ஐக்கியத்தையும் குலைத்துப்போடுகிறார்கள்; யெகோவா தந்திருக்கும் அருமையான ஆன்மீக செழுமைக்கும் பங்கம் விளைவிக்கிறார்கள்; இவ்வாறு சாத்தானுடைய கண்ணியில் சிக்கிவிடுகிறார்கள்.—சங்கீதம் 133:1-3.
16. நம்முடைய ஒற்றுமையை சாத்தான் எப்படித் தந்திரமாக குலைத்துப்போட முயன்றிருக்கிறான்?
16 முதல் உலகப் போரின்போது, நேரடியான தாக்குதல்மூலம் யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை அழித்துப்போட சாத்தான் முயன்றான்; ஆனால் தோற்றுப்போனான். (வெளிப்படுத்துதல் 11:7-13) அப்போது முதற்கொண்டு, நம் ஒற்றுமையைக் குலைத்துப்போட அவன் தந்திரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறான். கருத்து வேறுபாடுகள் நம் ஒற்றுமையைக் குலைத்துப்போட அனுமதித்தால், அந்த ‘வேடனுக்கு’ நாம் இடமளிக்கிறோம் என்று அர்த்தம். அப்போது, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சபையிலும்கூட பரிசுத்த ஆவியின் செயல்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படும். அப்படி நடந்தால், சாத்தானுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்; ஏனென்றால், சபையின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்பட்டால் அது பிரசங்க வேலையையும் பாதிக்கும்.—எபேசியர் 4:27, 30-32.
17. கருத்து வேறுபாடுகள் இருக்குமானால் அவற்றைச் சரிசெய்வதற்கு என்ன உதவி உள்ளது?
17 சக கிறிஸ்தவருக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம்? ஒவ்வொரு பிரச்சினையும் ஒவ்வொரு ரகமாக இருக்கலாம் என்பது உண்மைதான். என்றாலும், பிரச்சினைகள் தலைதூக்குவதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைத் தீர்க்காமல் விட்டுவிடுவதற்கு ஒரு காரணமும் இல்லை. (மத்தேயு 5:23, 24; 18:15-17) கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற ஆலோசனைகள், அவருடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டவை, பூரணமானவை. பைபிள் நியமங்களைப் பின்பற்றும்போது, நமக்குத் தோல்வி அல்ல, ஆனால் வெற்றியே கிட்டும்!
18. கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்வதில் யெகோவாவைப் பின்பற்றுவது நமக்கு எப்படி உதவும்?
18 யெகோவா “மன்னிக்கிறதற்குத் தயாராய் இருக்கிறார்,” அதோடு ‘உண்மையான மன்னிப்பை’ அருளுகிறார். (சங்கீதம் 86:5, NW; 130:4, NW) இவ்விஷயத்தில் நாம் அவரைப் பின்பற்றும்போது, அவருக்குப் பிரியமான பிள்ளைகள் என்பதைக் காட்டுகிறோம். (எபேசியர் 5:1) நாம் எல்லாருமே பாவிகள், நம் எல்லாருக்கும் யெகோவாவின் மன்னிப்பு மிகவும் தேவைப்படுகிறது. ஆகவே, ஒருவரை மன்னிக்க நமக்கு மனம்வரவில்லை என்றால், அது சரிதானா என்று நாம் கவனமாய் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால் இயேசுவின் உவமையில் வருகிற வேலைக்காரனைப்போல் நாம் இருப்போம். அவன் தன் எஜமானுக்கு பெரும் தொகை கடன்பட்டிருந்தான்; அதை அவர் மன்னித்துவிட்டிருந்தார். ஆனால் அவனோ தன் சக வேலைக்காரன் தனக்குக் கடன்பட்டிருந்த சிறு தொகையை மன்னிக்கவில்லை. அந்த விஷயத்தை எஜமான் கேள்விப்பட்டபோது, மன்னிக்காமல்போன அந்த வேலைக்காரனை சிறையில் தள்ளினார். இந்த உவமையின் முடிவில், இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார்.” (மத்தேயு 18:21-35) நம் சகோதரரோடு இருக்கும் கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்ய முயலுகையில், இந்த உவமையைத் தியானித்துப் பார்ப்பதும் யெகோவா எத்தனை முறை நம்மைத் தாராளமாய் மன்னித்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதும் நிச்சயம் உதவும்!—சங்கீதம் 19:14.
‘உன்னதமானவரின் மறைவில்’ பாதுகாப்பாக இருங்கள்
19, 20. இந்த ஆபத்தான காலத்தில் யெகோவாவின் ‘மறைவிலும்’ ‘நிழலிலும்’ தங்கியிருப்பதை நாம் எப்படிக் கருத வேண்டும்?
19 நாம் ஆபத்தான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். யெகோவாவின் அன்பான அரவணைப்பு மட்டும் இல்லையென்றால், இதற்குள்ளாக நம் எல்லாரையுமே சாத்தான் அழித்துப் போட்டிருப்பான். அப்படியானால், அந்த “வேடனுடைய” கண்ணியில் சிக்காதிருப்பதற்கு, அடையாள அர்த்தமுள்ள பாதுகாப்பு தலத்திலே, அதாவது ‘உன்னதமானவரின் மறைவிலே’ எப்போதும் தங்கியிருக்க வேண்டும்; ‘சர்வவல்லவருடைய நிழலிலே தங்க’ வேண்டும்.—சங்கீதம் 91:1.
20 யெகோவாவின் நினைப்பூட்டுதல்களும் அறிவுரைகளும் நம் பாதுகாப்புக்காகவே கொடுக்கப்பட்டதென கருதுவோமாக; அவை நம்மை கட்டுப்படுத்துவதாக ஒருபோதும் கருதாதிருப்போமாக. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஆற்றலுடைய அதிபுத்திசாலியான வேடனை நாம் எல்லாருமே சமாளிக்க வேண்டியுள்ளது. யெகோவாவின் அன்பான உதவியின்றி யாராலுமே அவனுடைய கண்ணியிலிருந்து தப்பிக்க முடியாது. (சங்கீதம் 124:7, 8) ஆகவே, “வேடனுடைய” கண்ணிகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி யெகோவாவிடம் நாம் ஜெபிப்போமாக!—மத்தேயு 6:13.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 1, 1982, பக்கங்கள் 3-7.
b ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 1, 1983, பக்கம் 23.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ‘மனித பயம்’ எனும் கண்ணி ஏன் ஆபத்தானது?
• பொருளாசை எனும் வசீகர வலையை பிசாசு எப்படி விரிக்கிறான்?
• தீங்கிழைக்கும் பொழுதுபோக்குகள் எனும் கண்ணியில் சிலரை சாத்தான் எப்படிச் சிக்க வைத்திருக்கிறான்?
• நம் ஒற்றுமையைக் குலைத்துப்போட எத்தகைய கண்ணியைப் பிசாசு பயன்படுத்துகிறான்?
[பக்கம் 27-ன் படம்]
சிலர் ‘மனித பயம்’ எனும் கண்ணியில் சிக்கியிருக்கிறார்கள்
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா வெறுக்கிறவற்றைக் கண்டுகளிக்கிறீர்களா?
[பக்கம் 29-ன் படம்]
சக கிறிஸ்தவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம்?