‘என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி’
“கொஞ்ச நாளா என்னுடைய ஊழியம் டல்லடிச்சிருச்சி, உற்சாகமே இல்ல” என்று சொல்கிறாள் நான்ஸி. a கிட்டத்தட்ட பத்து வருஷமாக ஒரு பயனியராக, அதாவது நற்செய்தியை முழுநேரம் பிரசங்கிப்பவளாக சேவைசெய்து வருகிறாள் நான்ஸி. மேலும் அவள் சொல்கிறாள்: “எனக்கு என்னமோ ஆயிருச்சு, அப்படி ஆனது கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கல. ஊழியத்தில கடவுளுடைய ராஜ்யத்தை பத்தி பேசறபோது இதயத்திலிருந்து இல்லாம ஏதோ கடமைக்கு ஒப்பிக்கிற மாதிரி இருக்குது. இதுக்கு நான் என்ன செய்யணும்?”
யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக சேவிக்கும் கீத் என்பவருடைய விஷயத்தையும் கவனியுங்கள். “உங்க மனசுல ஏதோ இருக்கணும். இப்ப நீங்க செஞ்ச ஜெபத்துல, இது சாப்பாட்டு நேரமில்லங்கிறத மறந்துட்டு, இந்த உணவுக்காக உமக்கு நன்றி என்று சொன்னீங்க!” என்று அவருடைய மனைவி சொன்னதை கேட்டபோது அவருக்கு எவ்வளவு ஆச்சரியம். கீத் ஒப்புக்கொள்கிறார்: “என்னுடைய ஜெபம் ஏதோ கடமைக்கு செய்றமாதிரி இருக்குதுங்றதை என்னால புரிஞ்சுக்க முடியுது.”
யெகோவா தேவனுக்கு செலுத்தும் துதிகள் உணர்ச்சியற்றதாகவோ கடமைக்கு செய்வதாகவோ இருக்க விரும்ப மாட்டீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதற்கு மாறாக, இதயப்பூர்வமாக, இதயத்தின் ஆழத்திலிருந்து பொங்கிவரும் நன்றியுணர்ச்சியாக இருக்கவே விரும்புவீர்கள். ஆனால், உணர்ச்சியை ஏதோ டிரெஸ் மாதிரி போட்டுக்கொள்ளவோ கழற்றி வீசவோ முடியாது. அது ஒருவருடைய உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும். எப்படி ஒருவர் இதயத்திலிருந்து நன்றியுணர்வை காட்ட முடியும்? இதோ, 103-ம் சங்கீதம் நமக்கு உட்பார்வை அளிக்கிறது!
பூர்வ இஸ்ரவேலை சேர்ந்த தாவீது ராஜா 103-ம் சங்கீதத்தை இயற்றினார். இந்த வார்த்தைகளோடு அவர் ஆரம்பிக்கிறார்: ‘என் ஆத்துமாவே, கர்த்தரை [“யெகோவாவை,” NW] ஸ்தோத்திரி [ஆங்கிலத்தில் bless]; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.’ (சங்கீதம் 103:1) “Bless என்ற வார்த்தை கடவுளுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பதால், துதியை அர்த்தப்படுத்துகிறது; எப்பொழுதுமே அவரிடம் உறுதியான பாசப்பிணைப்பையும் நன்றியுணர்வையும் காட்டுவதை குறிக்கிறது” என்று ஒரு நூல் சொல்கிறது. யெகோவாவை இதயப்பூர்வமான அன்போடும் நன்றியோடும் துதிக்க தாவீது விரும்பினார். அதனால் ‘யெகோவாவை ஸ்தோத்திரிக்கும்படி’ தன்னுடைய ஆத்துமாவுக்கே, அதாவது தனக்கே புத்திமதி கூறிக்கொள்கிறார். ஆனால், தான் வணங்கும் கடவுள்மீது இத்தகைய கனிவான உணர்ச்சி தாவீதின் இதயத்தில் பொங்கச் செய்தது எது?
தாவீது தொடர்ந்து சொல்கிறார்: “அவர் [“யெகோவா,” NW] செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” (சங்கீதம் 103:2) யெகோவாவுக்கு நன்றியுடன் இருப்பது, அவர் “செய்த சகல உபகாரங்களையும்” போற்றுதலுடன் தியானிப்பதோடு சம்பந்தப்பட்டுள்ளது. முக்கியமாக, யெகோவா செய்த என்ன செயல்கள் தாவீதின் மனதை கொள்ளைகொண்டிருந்தன? நட்சத்திரங்கள் அள்ளித்தெளிக்கப்பட்ட தெளிந்த இரவுநேர வானத்தையும், இன்னும் இதுபோன்ற யெகோவா தேவனுடைய பிற படைப்புகளையும் விழித்திரைக்கு விருந்தாக அளிப்பது உண்மையிலேயே படைப்பாளர்மீது இதயப்பூர்வமான நன்றியுணர்வு பொங்கிவழிய செய்யும். வான்வீதியில் மத்தாப்புக்களாக காட்சியளிக்கும் நட்சத்திரங்கள் தாவீதின் இதயத்தை கொள்ளைகொண்டன. (சங்கீதம் 8:3, 4; 19:1) ஆனால் 103-ம் சங்கீதத்தில், யெகோவாவின் மற்றொரு வகை செயலையும் தாவீது நினைத்துப் பார்க்கிறார்.
யெகோவா ‘உங்கள் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார்’
இந்தச் சங்கீதத்தில், கடவுளுடைய தயவான செயல்களை தாவீது தன் மனத்திரையில் ஓடவிடுகிறார். அவருடைய செயல்களில் முதன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த பண்பை குறிப்பிட்டு இவ்வாறு பாடுகிறார்: ‘[யெகோவா] உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறவர்.’ (சங்கீதம் 103:3) பாவத்திற்கு அடிமைப்பட்டிருந்ததை தாவீது நன்கு அறிந்திருந்தார். பத்சேபாளுடன் தாவீது விபச்சாரத்தில் ஈடுபட்டதை நாத்தான் தீர்க்கதரிசி சுட்டிக்காட்டியபின், அவர் ஒப்புக்கொண்டார்: “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாக பொல்லாங்கானதை நடப்பித்தேன்.” (சங்கீதம் 51:4) நொறுங்குண்ட இதயத்தோடு தாவீது மன்றாடினார்: “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.” (சங்கீதம் 51:1, 2) தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கிடைத்தபோது எந்தளவுக்கு தாவீதின் இருதயம் நன்றியுணர்வால் பெருக்கெடுத்திருக்க வேண்டும்! அபூரண மனிதர் என்பதால் வாழ்க்கையில் வேறுசில தவறுகளையும் செய்தார். ஆனால் மனந்திரும்புவதிலோ புத்திமதியை ஏற்றுக்கொள்வதிலோ தன்னுடைய வழிகளை திருத்திக்கொள்வதிலோ ஒருகாலும் தவறவில்லை. கடவுள் காட்டிய மகத்தான தயவை தாவீது தியானித்துப் பார்த்தது யெகோவாவை துதிப்பதற்கு அவரை தூண்டியது.
நாமும் பாவிகள் தானே? (ரோமர் 5:12) அப்போஸ்தலன் பவுலும் இவ்வாறு புலம்பினார்: “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” (ரோமர் 7:22-24) யெகோவா நம்முடைய மீறுதல்களை கணக்கு வைப்பதில்லை. அதற்காக நாம் அவருக்கு எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! நாம் மனந்திரும்பி அவருடைய மன்னிப்பை நாடுகையில், நம் பாவ கறைகளை சந்தோஷமாய் கழுவிவிடுகிறார்.
தாவீது தனக்கு இவ்வாறு நினைப்பூட்டிக்கொள்கிறார்: ‘[யெகோவா] உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.’ (சங்கீதம் 103:3) குணமாக்குவது என்பது மீண்டும் நம்மை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதால், தவறை மன்னிப்பதைக் காட்டிலும் அதிக நன்மை கிடைக்கிறது. “நோய்களையெல்லாம்”—நம்முடைய தவறான வழிகளின் மோசமான விளைவுகளையெல்லாம்—நீக்குவதை குறிக்கிறது. அவர் உண்டாக்கும் புதிய உலகில், நோய், மரணம் போன்ற பாவத்தின் சரீர உபாதைகளையெல்லாம் யெகோவா அடியோடு ஒழித்துவிடுவார். (ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:1-4) ஆனால் இன்றும்கூட, கடவுள் நம்முடைய ஆவிக்குரிய நோய்களை குணமாக்குகிறார். சிலருடைய விஷயத்தில், உறுத்தும் மனசாட்சியையும் துண்டிக்கப்பட்ட உறவையும் குணமாக்கியிருக்கிறார். இந்த விஷயத்தில், நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஏற்கெனவே யெகோவா செய்திருக்கும் காரியங்களை ‘மறவாதிருப்போமாக.’
‘உங்கள் உயிரை படுகுழியிலிருந்து மீட்கிறார்’
‘[யெகோவா] உன் உயிரைப் படுகுழியிலிருந்து மீட்கிறார்’ என்று தாவீது பாடுகிறார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 103:4, பொது மொழிபெயர்ப்பு) “படுகுழி” என்பது மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழி—ஷியோல் அல்லது ஹேடீஸ். இஸ்ரவேலின் ஆட்சிபீடத்தில் அமர்வதற்கு முன்பே, தாவீது மரணப் பிடியில் இருந்தார். உதாரணமாக, தாவீதின்மீது இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கு கொலைவெறி; பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை தீர்த்துக்கட்டவும் முயன்றார். (1 சாமுவேல் 18:9-29; 19:10; 23:6-29) பெலிஸ்தர்களும்கூட தாவீதுக்கு சாவுமணி அடிக்க ஆவலாய் இருந்தார்கள். (1 சாமுவேல் 21:10-15) ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், யெகோவா அவரை ‘படுகுழியிலிருந்து’ தூக்கிவிட்டார். யெகோவாவின் இந்தச் செயல்களைப் பற்றிய நினைவலைகள் தாவீதின்மீது மோதியபோது நன்றியுணர்ச்சி எவ்வளவாய் அவருடைய உள்ளத்தை நனைத்திருக்க வேண்டும்!
உங்களைப் பற்றியென்ன? நீங்கள் மனச்சோர்வில் தத்தளிக்கையிலும் அல்லது ஏதோ இழப்பினால் தவிக்கையிலும் யெகோவா உங்களை தாங்கி வழிநடத்தியிருக்கிறாரா? அல்லது நம்முடைய காலங்களில் ஷியோல் எனும் படுகுழியிலிருந்து தம்முடைய உண்மையுள்ள சாட்சிகளின் உயிரை மீட்ட சம்பவங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஒருவேளை இந்தப் பத்திரிகையை வாசிக்கையில் அவருடைய மீட்பின் செயல்களால் கவரப்பட்டிருப்பீர்கள். மெய் கடவுளின் இந்தச் செயல்களை போற்றுதலோடு நினைத்துப்பார்ப்பதற்கு ஏன் நேரமெடுத்துக்கொள்ளக் கூடாது? அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்காக யெகோவாவுக்கு நன்றியுடன் இருப்பதற்கு நம் அனைவருக்குமே நல்ல காரணமுண்டு.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
யெகோவா நமக்கு ஜீவனை தந்திருக்கிறார், அதோடு வாழ்வை சுவைத்து மகிழ்வதற்கு தேவையானவற்றையெல்லாம் தந்திருக்கிறார், வாழத்தகுந்த வாழ்க்கையையும் தந்திருக்கிறார். “உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி[யிருக்கிறார்]” என சங்கீதக்காரன் அறிவிக்கிறார். (சங்கீதம் 103:4) யெகோவா நம்மை கைவிடுவதில்லை, ஆனால் காணக்கூடிய அமைப்பு, சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அல்லது மேய்ப்பர்கள் மூலம் தக்கதருணத்தில் உதவிக்கரம் நீட்டுகிறார். நம்முடைய சுயமரியாதையையும் கௌரவத்தையும் இழந்துவிடாமல் பெரும் கஷ்ட நஷ்டமான சூழ்நிலைமைகளை சமாளிக்க இப்படிப்பட்ட உதவி நமக்கு உறுதுணை புரிகிறது. கிறிஸ்தவ மேய்ப்பர்கள் ஆடுகளிடம் அதிக அக்கறை காட்டுகிறார்கள். வியாதியஸ்தருக்கும் மனச்சோர்வடைந்தோருக்கும் உற்சாகமூட்டுகிறார்கள், பாதை மாறியவர்களை மீண்டும் சரியான பாதைக்கு திருப்ப தங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். (ஏசாயா 32:1, 2; 1 பேதுரு 5:2, 3; யூதா 22, 23) மந்தையிடம் பரிவிரக்கத்தையும் அன்பையும் காட்ட யெகோவாவின் ஆவி இந்த மேய்ப்பர்களை உந்துவிக்கிறது. அவருடைய ‘கிருபையும் இரக்கமும்’ உண்மையிலேயே நம்மை அலங்கரித்து கெளரவிக்கும் கிரீடத்தைப் போல் இருக்கின்றன அல்லவா! யெகோவாவின் செயல்களை ஒருபோதும் மறவாமல், அவரையும் அவருடைய பரிசுத்த நாமத்தையும் துதிப்போமாக.
தனக்குத்தானே புத்திமதி கொடுத்துக்கொள்பவராய், சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு பாடுகிறார்: ‘[யெகோவா] நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.’ (சங்கீதம் 103:5) திருப்தியும் மகிழ்ச்சியுமே யெகோவா வழங்கும் வாழ்க்கை. ஏன், சத்தியத்தைப் பற்றிய அறிவுதானேயும் ஈடிணையற்ற பொக்கிஷமாகவும் மிகப் பெரிய சந்தோஷத்தின் ஊற்றாகவும் இருக்கிறதே! யெகோவா கொடுத்திருக்கும் வேலை, அதாவது பிரசங்கித்து சீஷராக்கும் வேலை எவ்வளவு திருப்தியளிப்பதாய் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். மெய் கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுபவரை கண்டுபிடித்து, யெகோவாவை பற்றி கற்றுக்கொள்ளவும் அவரை துதிக்கவும் உதவிசெய்வது என்னே ஒரு இன்பம் பொங்கும் அனுபவம்! இருப்பினும், நம்முடைய பிராந்தியத்தில் உள்ளவர்கள் செவிகொடுத்தாலும்சரி செவிகொடுக்காவிட்டாலும்சரி, யெகோவாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதோடும் அவருடைய அரசதிகாரத்தை உண்மையென்று நிரூபிப்பதோடும் தொடர்புடைய ஒரு வேலையில் பங்குகொள்வது மகத்தான சிலாக்கியமே!
கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் வேலையில் நிலைத்திருக்கையில், யார்தான் களைப்படைய மாட்டார், அல்லது சோர்வடைய மாட்டார்? ஆனால் யெகோவா தொடர்ந்து தம்முடைய ஊழியர்களின் பலத்தைப் புதுப்பிக்கிறார். வலிமைமிக்க இறக்கைகளோடு உயரே வானத்தில் வட்டமிடும் ‘கழுகுகளைப் போன்று’ அவர்களை ஆக்குகிறார். அனுதினமும் ஊழியத்தை உண்மையோடு செய்வதற்கு நம்முடைய அன்பான பரலோக தகப்பன் இப்படிப்பட்ட ‘வல்லமையை’ தருவதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!—ஏசாயா 40:29-31.
உதாரணமாக: கிளாரா என்பவர் வேலைக்கு செல்பவள். அதேசமயத்தில் ஒவ்வொரு மாதமும் வெளி ஊழியத்தில் சுமார் 50 மணிநேரம் செலவழிக்கிறாள். அவள் சொல்கிறாள்: “சிலசமயம் நான் டையடாகிவிடுவேன், ஊழியத்துக்கு வருவதாக ஏற்கெனவே இன்னொருவரிடம் ஒப்புக்கொண்டுவிட்டோமே என்பதற்காக என்னை வலுக்கட்டாயப்படுத்தி வெளி ஊழியத்திற்குப் போவேன். ஆனால் வெளியில் இறங்கிவிட்டால் போதும், தானாக பலம்வந்துவிடும்.” கிறிஸ்தவ ஊழியத்தில் கடவுளிடமிருந்து கிடைக்கும் ஆதரவால் நீங்களும் இப்படிப்பட்ட பலத்தைப் பெற்றிருக்கலாம். “என் ஆத்துமாவே, கர்த்தரை [“யெகோவாவை,” NW] ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி” என்று தாவீது சொன்னது போலவே நீங்களும் சொல்வதற்கு தூண்டப்படுவீர்களாக.
யெகோவா தம்முடைய மக்களை மீட்கிறார்
சங்கீதக்காரன் இதையும் பாடுகிறார்: “ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.” (சங்கீதம் 103:6, 7) மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர் எகிப்தியரால் ஒடுக்கப்பட்டதை ஒருவேளை தாவீது யோசித்திருக்கலாம். யெகோவா தம்முடைய மீட்பின் வழிகளை மோசேக்கு தெரியப்படுத்தியதை தியானித்தது, தாவீதின் இதயத்தில் நன்றியுணர்வு பொங்கி வழியும்படி செய்திருக்க வேண்டும்.
இஸ்ரவேலரோடு கடவுளுடைய செயல்தொடர்புகளை நினைத்துப் பார்ப்பதன் மூலம் நாமும் இத்தகைய நன்றியுணர்வால் தூண்டுவிக்கப்படுவோம். ஆனால், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் 29, 30-ம் அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யெகோவாவின் நவீனநாளைய ஊழியர்களுடைய அனுபவங்களையும் தியானிக்காமல் விட்டுவிடக்கூடாது. இந்தப் புத்தகத்திலும் உவாட்ச்டவர் சொஸைட்டியின் மற்ற பிரசுரங்களிலும் உள்ள ஆதாரப்பூர்வ விவரப்பதிவுகள் சிறையிருப்பு, ரவுடி கும்பலின் செயல்கள், தடையுத்தரவுகள், கான்ஷன்ட்ரேஷன் முகாம்கள், கொத்தடிமை முகாம்கள் ஆகியவற்றின் கொடுமைகளை சகிக்க யெகோவா தம்முடைய மக்களுக்கு நவீன காலங்களில் எவ்வாறு உதவினார் என்பதை அறிந்துகொள்ள உறுதுணை புரிகின்றன. போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட புரூண்டி, லைபீரியா, ருவாண்டா, முன்னாள் யுகோஸ்லோவியா போன்ற தேசங்களில் விசுவாச பரீட்சைகள் நடந்திருக்கின்றன. எப்பொழுதெல்லாம் துன்புறுத்துதல் ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் யெகோவாவின் அன்புக்கரம் உண்மையுள்ள அவருடைய ஊழியர்களை அரவணைத்திருக்கிறது. நம்முடைய உன்னத கடவுளாகிய யெகோவாவின் இந்தச் செயல்களை ஆழ்ந்து சிந்திப்பது, எகிப்திலிருந்து மீட்கப்பட்டதைப் பற்றிய பதிவை தாவீது சிந்தித்துப் பார்த்தது அவருக்கு எப்படி உதவியதோ அப்படியே நமக்கும் உதவும்.
பாவத்தின் சுமையிலிருந்து எவ்வளவு கனிவோடு யெகோவா நம்மை விடுவிக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ‘நம்முடைய மனச்சாட்சியை சாவுக்கு வழிநடத்தும் செயல்களிலிருந்து தூய்மைப்படுத்துவதற்கு கிறிஸ்துவினுடைய இரத்தத்தை’ கொடுத்திருக்கிறார். (எபிரேயர் 9:14, பொது மொழிபெயர்ப்பு) நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் மன்னிப்பை நாட வேண்டும். அப்போது, நம்முடைய மீறுதல்களை கடவுள் தூர விலக்குகிறார்—‘கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாக’ விலக்குகிறார். அதோடு, மீண்டும் நம்மை அவருடைய தயவுக்குள் கொண்டுவருகிறார். கிறிஸ்தவ கூட்டங்கள், கட்டியெழுப்பும் கூட்டுறவுகள், சபையிலுள்ள மேய்ப்பர்கள், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து’ நாம் பெறும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள் ஆகியவற்றின் வாயிலாக யெகோவா தரும் ஏற்பாடுகளையும் சிந்தித்துப் பாருங்கள். (மத்தேயு 24:45, NW) அவரோடு நம்முடைய உறவை பலப்படுத்துவதற்கு யெகோவாவின் இச்செயல்கள் அனைத்தும் நமக்கு உதவுகிறதல்லவா? தாவீது இவ்வாறு அறிவிக்கிறார்: “கர்த்தர் [“யெகோவா,” NW] உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். . . . அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” (சங்கீதம் 103:8-14) யெகோவாவின் அன்பான கவனிப்பை தியானிப்பது அவரையும் அவருடைய பரிசுத்த நாமத்தையும் மகிமைப்படுத்த நிச்சயமாகவே நம்மை தூண்டும்.
‘அவருடைய சகல கிரியைகளே, யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்’
‘நித்தியத்தின் தேவனாகிய’ யெகோவாவின் அழியாத் தன்மையோடு ஒப்பிடுகையில், “அழியும் மனுஷனுடைய நாட்கள்” மிக மிக அற்பமே—“புல்லுக்கு சமானமே.” ஆனால் தாவீது போற்றுதலோடு நினைவுகூருகிறார்: “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.” (ஆதியாகமம் 21:33, NW அடிக்குறிப்பு; சங்கீதம் 103:15-18, NW) தமக்கு பயந்து நடக்கிறவர்களை யெகோவா ஒருபோதும் மறந்துவிடுவதில்லை. ஏற்றகாலத்தில், அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு தருவார்.—யோவான் 3:16; 17:3.
யெகோவாவின் அரசத்துவத்திற்கு போற்றுதல் தெரிவித்து தாவீது இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.” (சங்கீதம் 103:19) இஸ்ரவேல் ராஜ்யத்தின் மூலம் சில காலத்திற்கு நேரடியாக யெகோவா அரசாட்சி செலுத்தியபோதிலும், அவருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது. அவரே படைப்பாளர் என்பதால், இந்த அண்டத்தின் உன்னத பேரரசர். தம்முடைய நோக்கங்களுக்கு இசைவாக வானத்திலும் பூமியிலும் தெய்வீக சித்தத்தை செய்கிறார்.
பரலோக சிருஷ்டிகளுக்கும் தாவீது புத்திமதி கூறுகிறார். அவர் இவ்வாறு பாடுகிறார்: “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.” (சங்கீதம் 103:20-22) நமக்காக யெகோவா செய்த அவருடைய தயவான செயல்களை நாம் நினைவுகூருவது அவரை துதிப்பதற்கு நம்மை தூண்ட வேண்டும் அல்லவா? நிச்சயமாகவே! நீதியுள்ள தேவதூதர்கள் அடங்கிய மாபெரும் பாடகர் கூட்டத்தில் கடவுளுக்கு நாம் தனிப்பட்டவராக செலுத்தும் துதியின் தொனி கேட்காமல் போகாது என்பதில் நிச்சயமாய் இருக்கலாம். நம்முடைய பரலோக தகப்பனை எப்பொழுதும் புகழ்ந்து பேசி முழு இருதயத்தோடு அவரை துதிப்போமாக. “என் ஆத்துமாவே, கர்த்தரை [“யெகோவாவை,” NW] ஸ்தோத்திரி” என்ற தாவீதின் வார்த்தைகளை நம்முடைய இருதயத்தில் பதித்துக்கொள்வோமாக.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் சில மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் தயவான செயல்களை தாவீது தியானித்தார். நீங்களும் தியானிக்கிறீர்களா?