-
கடவுளுடைய பார்வையில் எப்படி சுத்தமாக இருக்கலாம்?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
பாடம் 40
கடவுளுடைய பார்வையில் எப்படி சுத்தமாக இருக்கலாம்?
ஒரு அம்மா தன்னுடைய குட்டிப் பையனை எப்படி ஸ்கூலுக்கு அனுப்புவார்? அவனைக் குளிக்க வைத்து, நன்றாகத் துவைத்த சுத்தமான துணிமணியைப் போட்டுவிட்டு அனுப்புவார். அதனால் பையன் ஆரோக்கியமாக இருப்பான். அவனுடைய அம்மா அப்பா அவனை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள் என்று மற்றவர்களும் நினைப்பார்கள். நம்முடைய அன்பான அப்பா யெகோவாவும் நாம் உடலிலும் உள்ளத்திலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறார். சுத்தமாக இருப்பது நமக்கு நன்மை தரும், யெகோவாவுக்கும் புகழ் சேர்க்கும்.
1. நம்மை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?
‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்’ என்று யெகோவா சொல்கிறார். (1 பேதுரு 1:16) இங்கே பரிசுத்தம் என்பது ஒழுக்க சுத்தத்தை மட்டுமல்ல, உடல் சுத்தத்தையும் குறிக்கிறது. சுத்தமாக இருப்பதற்கு நாம் தினமும் குளிக்க வேண்டும். அதோடு, நம் துணிமணிகளையும் வீட்டையும் வண்டியையும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும். ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கும் நாம் உதவி செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்யும்போது யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்போம்.—2 கொரிந்தியர் 6:3, 4.
2. சுத்தமாக இருப்பதற்கு என்னென்ன பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும்?
‘உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ள’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 7:1) அப்படியென்றால், நம்முடைய உடலையோ உள்ளத்தையோ கெடுக்கும் எதையும் நாம் செய்யக் கூடாது. நம் யோசனைகள்கூட யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும். அதனால், கெட்ட விஷயங்கள் எதையும் நாம் யோசிக்கவே கூடாது. (சங்கீதம் 104:34) அதேபோல், கெட்ட வார்த்தைகளை நாம் பேசவும் கூடாது.—கொலோசெயர் 3:8-ஐ வாசியுங்கள்.
வேறு என்னென்ன விஷயங்கள் நம் உடலையும் உள்ளத்தையும் கெடுக்கும்? போதைப்பொருள், புகையிலை, பாக்கு போன்ற பொருள்கள் நம் உடலைக் கெடுக்கும். இதையெல்லாம் நாம் தவிர்க்கும்போது ஆரோக்கியமாக இருப்போம், உயிர் என்ற அற்புதமான பரிசுக்கு மதிப்பும் காட்டுவோம். ஒழுக்க விஷயத்திலும் நாம் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால், சுய இன்ப பழக்கம், ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். (சங்கீதம் 119:37; எபேசியர் 5:5) இதுபோன்ற பழக்கங்களை விடுவது கஷ்டம்தான். ஆனால், யெகோவா கண்டிப்பாக நமக்கு உதவி செய்வார்.—ஏசாயா 41:13-ஐ வாசியுங்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
நாம் சுத்தமாக இருப்பது எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும்? கெட்ட பழக்கங்களை நாம் எப்படி விடலாம்? பார்க்கலாம்.
3. சுத்தம் கடவுளுக்குப் புகழ் சேர்க்கும்
இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டங்களைப் படிக்கும்போது, அவருடைய மக்கள் சுத்தமாக இருப்பது எந்தளவு முக்கியம் என்று தெரிந்துகொள்கிறோம். யாத்திராகமம் 19:10-ஐயும் 30:17-19-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
சுத்தத்துக்கு யெகோவா முக்கியத்துவம் தருகிறார் என்பதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?
சுத்தமாக இருப்பதற்கு என்ன நல்ல பழக்கங்களை நாம் வளர்த்துக்கொள்ளலாம்?
நம்மை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, நமக்கு வசதி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நம்மால் சுத்தமாக இருக்க முடியும். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
நம் பொருள்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வது நம் ஊழியத்துக்கு எப்படி மதிப்பு சேர்க்கும்?
4. கெட்டதை விட்டுவிடுங்கள்
சிகரெட் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துகிற பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை விட்டுவிடுவது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் பழக்கத்தால் வரும் பாதிப்புகளைப் பற்றி யோசிப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். மத்தேயு 22:37-39-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்தக் கெட்ட பழக்கங்கள் யெகோவாவுடன் உங்களுக்கு இருக்கும் நட்பை எப்படிப் பாதிக்கும்?
இந்தக் கெட்ட பழக்கங்கள் உங்கள் குடும்பத்தையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் எப்படிப் பாதிக்கும்?
கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவதற்குத் திட்டம் போடுங்கள்.a வீடியோவைப் பாருங்கள்.
பிலிப்பியர் 4:13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
தவறாமல் ஜெபிப்பதும் பைபிள் படிப்பதும் கூட்டங்களுக்கு போவதும், கெட்ட பழக்கத்தை விட்டுவிட எப்படி உதவும்?
5. ஒழுக்கங்கெட்ட விஷயங்களை யோசிக்காதீர்கள், செய்யாதீர்கள்
கொலோசெயர் 3:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆபாசம், செக்ஸ்டிங்,b சுய இன்பம்c போன்றவை யெகோவாவின் பார்வையில் அசுத்தமானவை என்று எப்படிச் சொல்லலாம்?
ஒழுக்க விஷயத்தில் நாம் சுத்தமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?
கெட்ட யோசனைகளை நாம் எப்படி விட்டுவிடலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். வீடியோவைப் பாருங்கள்.
ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும். இதைப் புரியவைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார். மத்தேயு 5:29, 30-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நம் உடலை நிஜமாகவே சேதப்படுத்த வேண்டுமென்று இயேசு சொல்லவில்லை, ஆனால் நாம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொன்னார். ஒழுக்கங்கெட்ட யோசனைகள் வராமல் இருப்பதற்கு என்ன உறுதியான நடவடிக்கையை ஒருவர் எடுக்கலாம்?d
கெட்ட யோசனைகளை விட்டுவிட நீங்கள் போராடுகிறீர்களா? நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா மதிக்கிறார். சங்கீதம் 103:13, 14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஒரு கெட்ட பழக்கத்தை விட்டுவிட நீங்கள் போராடுகிறீர்கள் என்றால், முயற்சியைக் கைவிடாமல் இருப்பதற்கு இந்த வசனம் எப்படி உங்களுக்கு உற்சாகம் தருகிறது?
தடுமாறி விழுவது தோல்வி அல்ல!
‘எவ்வளவோ முயற்சி பண்ணியாச்சு, இனிமேல் என்னால முடியாது’ என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர் தடுமாறி விழலாம். ஆனால், அவர் பந்தயத்தில் தோற்றுவிட்டார் என்று சொல்ல முடியாது, அவர் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து ஓட வேண்டுமென்றும் கிடையாது. அதேபோல், கெட்ட பழக்கத்தில் தடுமாறி விழுந்துவிட்டால் ஒரேயடியாகத் தோற்றுப்போய்விட்டோம் என்று அர்த்தம் கிடையாது. இதுவரைக்கும் செய்த முன்னேற்றமெல்லாம் வீண் என்று சொல்லவும் முடியாது. வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் இப்படித் தடுமாறி விழுவது சகஜம்தான். அதனால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவின் உதவியோடு உங்களால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்!
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நான் அதுக்கு அடிமையாயிட்டேன், என்னால நிறுத்த முடியும்னு தோணல.”
யெகோவாவின் உதவியோடு கெட்ட பழக்கத்தை விட்டுவிட முடியும் என்பதை எந்த வசனத்திலிருந்து நீங்கள் காட்டுவீர்கள்?
சுருக்கம்
நம் உடலும் உள்ளமும் பழக்கங்களும் சுத்தமாக இருந்தால் யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும்.
ஞாபகம் வருகிறதா?
சுத்தமாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
நீங்கள் எப்படி சுத்தமாக இருக்கலாம்?
உங்கள் யோசனைகளையும் பழக்கங்களையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்?
அலசிப் பாருங்கள்
வசதி குறைவாக இருந்தாலும் சுத்தமாக இருக்க என்ன எளிமையான விஷயங்களை செய்யலாம் என்று பாருங்கள்.
புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்துகொள்ளுங்கள்.
“புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி?” (ஆன்லைன் கட்டுரை, விழித்தெழு!, அக்டோபர்-டிசம்பர், 2010)
ஆபாசத்தைப் பார்ப்பதால் வரும் பாதிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆபாசத்துக்கு அடிமையாகியிருந்த ஒருவர் எப்படி அந்தப் பழக்கத்தை விட்டொழித்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“பல தடவை தோல்வி அடைந்தேன்... கடைசியில் வெற்றி பெற்றேன்” (காவற்கோபுரம் எண் 4 2016)
a இந்தப் பாடத்தில் “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் “புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி?” என்ற கட்டுரை, கெட்ட பழக்கங்களை விட்டுவிட என்னென்ன செய்யலாம் என்று சொல்கிறது.
b செக்ஸ்டிங் என்பது ஒழுக்கங்கெட்ட செய்திகளையோ படங்களையோ வீடியோக்களையோ ஒரு எலெக்ட்ரானிக் சாதனம் மூலம் இன்னொருவருக்கு அனுப்புவது.
-
-
ஞானஸ்நானம்—நீங்கள் தயாரா?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
3. நீங்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை?
யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். நாம் சிலசமயம் தவறு செய்துவிடலாம் என்பது உண்மைதான். ஆனால், கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆண்களும் பெண்களும்கூட சிலசமயம் தவறு செய்ததாக பைபிள் சொல்கிறது. நாம் எந்தத் தவறும் செய்யாமல் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.) தவறு செய்யாமல் இருக்க நீங்கள் முழு முயற்சி எடுப்பதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார்! உங்களுக்கு உதவியும் செய்வார். சொல்லப்போனால், “[அவர்] காட்டுகிற அன்பிலிருந்து [எதுவுமே] நம்மைப் பிரிக்க முடியாதென்று” உறுதி தருகிறார்.—ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்.
-