“உன் யோசனைகள் உறுதிப்படும்”
சங்கீதக்காரராகிய தாவீது இயற்றிய ஒரு பாடலில் இவ்வாறு ஜெபம் செய்தார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.” (சங்கீதம் 51:10, 12) இங்கே, பத்சேபாளுடன் பாவம் செய்த பிறகு மனந்திரும்பிய தாவீது தன்னுடைய இருதயத்தைப் பரிசுத்தமாக்கும்படியும் சரியானதைச் செய்வதற்கான ஆவியை அல்லது மனவிருப்பத்தைத் தன்னுள் வைக்கும்படியும் யெகோவாவிடம் கெஞ்சுகிறார்.
யெகோவா ஒரு புதிய இருதயத்தை நமக்குள் உருவாக்கி, புதிய உற்சாகமான ஆவியை நமக்குள் வைக்கிறாரா? அல்லது சுத்த இருதயத்தைப் பெறவும் காத்துக்கொள்ளவும் நாம் பெருமுயற்சி செய்யவேண்டுமா? ‘இருதயங்களைச் சோதிக்கிறவர் கர்த்தர்’ என்பது உண்மையே. ஆனால் நம் எண்ணங்களில் அவர் எந்தளவுக்குத் தலையிடுகிறார்? (நீதிமொழிகள் 17:3; எரேமியா 17:10) நம்முடைய வாழ்க்கையில், குறிக்கோள்களில், செயல்களில் அவர் எந்தளவு தலையிடுகிறார்?
நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்த கடவுளை அனுமதிக்கும்போதுதான் ‘நம்முடைய யோசனைகள் உறுதிப்படும்’; இதை எவ்வாறு செய்யலாம் என்பதை நீதிமொழிகள் 16-ஆம் அதிகாரத்திலுள்ள முதல் ஒன்பது வசனங்கள் நமக்குக் காட்டுகின்றன. (நீதிமொழிகள் 16:3) 10-லிருந்து 15 வரையிலான வசனங்கள் ஒரு ராஜாவின் அல்லது ஓர் ஆட்சியாளரின் பொறுப்புகளுக்குக் கவனம் செலுத்துகின்றன.
“மனதின் யோசனைகளை ஒழுங்குபடுத்துவது” யார்?
புதிய உலக மொழிபெயர்ப்பின்படி, நீதிமொழிகள் 16:1அ “மனதின் யோசனைகளை ஒழுங்குபடுத்துவது மனுஷனுடையது” என்று சொல்கிறது. “மனதின் யோசனைகளை ஒழுங்குபடுத்துவது” நம்முடைய பொறுப்பு என்பது தெளிவாக இருக்கிறது. யெகோவா அற்புதகரமாக நம்முடைய இருதயத்தைத் தயார்படுத்துவதுமில்லை, உற்சாகமான ஆவியைத் தருவதுமில்லை. அவருடைய வார்த்தையான பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொண்டவற்றைத் தியானிப்பதற்கும் அவருடைய எண்ணங்களுக்கு இசைவாக நம்முடைய எண்ணங்களை அமைத்துக்கொள்வதற்கும் நாம் முயற்சி எடுக்க வேண்டும்.—நீதிமொழிகள் 2:10, 11.
என்றாலும், ‘சுத்த இருதயத்திற்காகவும்’ ‘புதிய ஆவிக்காகவும்’ தாவீது வேண்டுகிறார்; அவர் தன்னுடைய பாவ இயல்பையும் தன்னுடைய இருதயத்தைச் சுத்திகரிக்க கடவுளுடைய உதவி அவசியம் என்பதையும் ஒப்புக்கொண்டார் என்று அது காட்டுகிறது. நாம் அபூரணராக இருப்பதால், ‘மாம்சத்தின் கிரியைகளைச்’ செய்வதற்குத் தூண்டப்படலாம். (கலாத்தியர் 5:19-21) எனவே, ‘விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற நம்முடைய அவயவங்களை அழித்துப்போடுவதற்கு’ யெகோவாவின் உதவி அவசியமாயிருக்கிறது. (கொலோசெயர் 3:5) சோதனைகளில் அகப்படுவதைத் தவிர்க்கவும் பாவமுள்ள மனச்சாய்வுகளை நம்முடைய இருதயத்திலிருந்து அகற்றவும் அவருடைய உதவிக்காக ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம்!
மற்றவர்களுடைய மனதின் யோசனைகளை ‘ஒழுங்குபடுத்த’ நாம் உதவ முடியுமா? “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்” அல்லது மருந்து என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:18) நம்முடைய நாவு எப்பொழுது புண்களை ஆற்றும் அருமருந்தாக இருக்கும்? ‘நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்போது’ மட்டுமே; அதாவது, பைபிள் சத்தியத்தின் சரியான வார்த்தைகளைப் பேசும்போது மட்டுமே அது அருமருந்தாகச் செயல்படுகிறது.—நீதிமொழிகள் 16:1ஆ.
“எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) நம்முடைய அடையாளப்பூர்வ இருதயம் தான் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டு தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் போக்குடையது. இந்த ஆபத்தைக் குறித்து எச்சரிப்பவராக பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.”—நீதிமொழிகள் 16:2.
நம்மையே அளவுக்கதிகமாக நேசிப்பது, நம்முடைய தவறுகளை நியாயப்படுத்துவதற்கும் விரும்பத்தகாத சுபாவங்களை மறைப்பதற்கும் அதோடு நம்முடைய மோசமான குணங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் காரணமாகலாம். ஆனால், யெகோவாவை ஏமாற்ற முடியாது. அவர் ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். ஒரு நபருடைய ஆவி என்பது அவருடைய மேலோங்கி நிற்கும் மனவிருப்பமாகும்; அது இருதயத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அதன் வளர்ச்சி அடையாளப்பூர்வ இருதயத்தின் செயல்பாட்டையே சார்ந்திருக்கிறது; இந்த அடையாளப்பூர்வ இருதயம் நம்முடைய எண்ணங்கள், உணர்ச்சிகள், குறிக்கோள்கள் போன்றவற்றை உள்ளடக்குகிறது. இந்த ஆவியை, ‘இருதயங்களைச் சோதிக்கிறவர்’ கணிக்கிறார்; அவருடைய நியாயத்தீர்ப்பு பாரபட்சமற்றது. நம்முடைய ஆவியைக் காத்துக்கொண்டால் நாம் ஞானவான்களாக இருப்போம்.
“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி”
யோசனைகள் என்பது நம்முடைய இருதயத்தின் செயல்பாடுகளில் ஒன்று. இயல்பாகவே, யோசனைகள் செயல்களாக மாறுகின்றன. நம்முடைய செயல்களில் வெற்றி பெறுவோமா? “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்” என்று சாலொமோன் சொல்கிறார். (நீதிமொழிகள் 16:3) நம்முடைய செய்கைகளை யெகோவாவிடத்தில் ஒப்புவித்தல் என்பது, அவர்மேல் நம்பிக்கை வைப்பதையும், அவரைச் சார்ந்திருப்பதையும், அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பதையும் குறிக்கிறது; வேறுவார்த்தைகளில் சொன்னால், நம்முடைய பாரத்தை அவர்மேல் வைத்துவிடுவதை அர்த்தப்படுத்துகிறது. “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” என்று சங்கீதக்காரர் பாடினார்.—சங்கீதம் 37:5.
என்றாலும், நம்முடைய யோசனைகள் உறுதிப்பட வேண்டுமென விரும்பினால், அவை கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக இருக்க வேண்டும், நல்ல உள்நோக்கங்களிலிருந்து வந்திருக்க வேண்டும். மேலுமாக, உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்; பைபிளின் அறிவுரையைப் பின்பற்ற மனசாட்சியின்படி நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்யவேண்டும். விசேஷமாக, நாம் சோதனைகளையோ பிரச்சினைகளையோ சந்திக்கும்போது ‘கர்த்தர்மேல் நம் பாரத்தை வைத்துவிட’ வேண்டும்; ஏனெனில், ‘அவர் நம்மை ஆதரிப்பார். உண்மையில், அவர் “நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”—சங்கீதம் 55:22.
“கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்”
நம்முடைய செய்கைகளை யெகோவாவிடம் ஒப்படைக்கும்போது வேறென்ன விளைவடையும்? “கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்” என்று ஞானமுள்ள ராஜா சொன்னார். (நீதிமொழிகள் 16:4அ) இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர் நோக்கமுள்ள கடவுள். நம்முடைய செய்கைகளை அவரிடம் ஒப்படைக்கும்போது நம்முடைய வாழ்க்கை பயனற்றதாக இல்லாமல் நோக்கமுள்ள, அர்த்தமுள்ள செயல்கள் நிறைந்ததாக இருக்கும். பூமிக்கான, மனிதருக்கான யெகோவாவுடைய நோக்கம் நித்தியமானது. (எபேசியர் 3:11, NW) அவர் இந்தப் பூமியை “குடியிருப்புக்காக” படைத்து வடிவமைத்திருக்கிறார். (ஏசாயா 45:18) மேலும், பூமியில் மனிதகுலத்திற்காக ஆரம்பத்தில் அவர் கொண்டிருந்த நோக்கம் நிஜமாக மாறுவது நிச்சயம். (ஆதியாகமம் 1:28) உண்மையான கடவுளுக்கு வாழ்க்கையை அர்ப்பணிப்பது, முடிவே இல்லாததும் என்றென்றைக்கும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
யெகோவா, “தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.” (நீதிமொழிகள் 16:4ஆ) “அவர் கிரியை உத்தமமானது” என்பதால் துன்மார்க்கனை அவர் படைக்கவில்லை. (உபாகமம் 32:4) என்றாலும், அவர்கள் இருப்பதற்கும் அவர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்வரை அவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் அவர் அனுமதித்திருக்கிறார். உதாரணமாக, எகிப்தின் பார்வோனிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.” (யாத்திராகமம் 9:16) பத்து வாதைகளும், பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் அழித்ததும் உண்மையில் கடவுளுடைய ஈடிணையற்ற வல்லமையின் மறக்கமுடியாத சான்றுகளாகும்.
மேலும், துன்மார்க்கர் தங்களை அறியாமலேயே தம்முடைய நோக்கத்திற்கு இசைவாக நடக்கும்படி சூழ்நிலைகளை உருவாக்க யெகோவாவால் முடியும். சங்கீதக்காரர் இவ்வாறு சொன்னார்: “மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் [யெகோவா] அடக்குவீர்.” (சங்கீதம் 76:10) எதிரிகள் தங்களுடைய கோபத்தை தம்முடைய ஜனங்களுக்கு எதிராகக் காட்ட யெகோவா அனுமதிக்கலாம்; ஆனால் தம்முடைய ஜனங்களைச் சிட்சிக்க, அவர்களைப் பயிற்றுவிக்கத் தேவையான அளவுக்கு மட்டுமே அதை அனுமதிப்பார். அதற்குமேல் செல்லும்போது கடவுளே அதில் தலையிடுகிறார்.
தம்முடைய மனத்தாழ்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா ஆதரவு அளிக்கிறார்; ஆனால், மனமேட்டிமையானவர்களைப்பற்றி என்ன சொல்லலாம்? “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்” என்று இஸ்ரவேலின் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 16:5) ‘மனமேட்டிமையுடன்’ இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம், ஆனாலும் அவர்கள் தண்டனைக்குத் தப்பமுடியாது. எனவே, நாம் எவ்வளவு அறிவுள்ளவர்களாகவும் திறமையுள்ளவர்களாகவும் இருந்தாலும்சரி, எப்படிப்பட்ட விசேஷ பொறுப்புகளைப் பெற்றவர்களாக இருந்தாலும்சரி, மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதே ஞானமானது.
“கர்த்தருக்குப் பயப்படுகிறதினால்”
பாவத்தில் பிறந்திருப்பதால் நாம் தவறு செய்துவிடுகிறோம். (ரோமர் 3:23; 5:12) பாவச் செயல்களுக்கு வழிநடத்தும் யோசனைகளைத் தவிர்க்க நமக்கு எது உதவும்? “கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்” என்று நீதிமொழிகள் 16:6 சொல்கிறது. யெகோவா தம்முடைய கிருபையினாலும் சத்தியத்தினாலும் நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிறார்; அதேசமயத்தில், அவருக்குப் பயப்படுகிற பயம் பாவம் செய்யாதபடி நம்மைத் தடுக்கிறது. கடவுள்மீது அன்பையும் அவருடைய கிருபைக்கான நன்றியுணர்வையும் வளர்த்துக்கொள்வதோடு, அவருக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்கிற பயத்தையும் வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானது!
கடவுளுடைய வியக்கத்தக்க வல்லமையிடம் நாம் பயபக்தியையும் மரியாதையையும் வளர்த்துக்கொண்டால், நம் இருதயத்தில் கடவுள் பயம் துளிர்விட ஆரம்பிக்கும். படைப்புகளில் தெரியும் அவருடைய வல்லமையை நினைத்துப் பாருங்கள்! கடவுளுடைய படைப்புகளில் வெளிப்படும் வல்லமையைப்பற்றி நினைப்பூட்டப்பட்டதால் முற்பிதாவாகிய யோபு தன்னுடைய சிந்தையைச் சரிசெய்துகொள்ள முடிந்தது. (யோபு 42:1-6) யெகோவா தம் மக்களைக் கையாண்ட விதத்தைப்பற்றி பைபிள் பதிவுகளில் படிக்கும்போதும் அவற்றைப்பற்றித் தியானிக்கும்போதும் நாமும் அதேபோன்று நம் சிந்தையைச் சரிசெய்துகொள்ள முடிகிறதல்லவா? “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்” என்று சங்கீதக்காரர் பாடினார். (சங்கீதம் 66:5) யெகோவாவின் கிருபையை நம்முடைய தவறுகளுக்குச் சாக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. இஸ்ரவேலர்கள் ‘கலகம்பண்ணி, யெகோவாவுடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணினார்.’ (ஏசாயா 63:10) மாறாக, “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.” (நீதிமொழிகள் 16:7) யெகோவாவுக்குப் பயப்படுவது எவ்வளவு பாதுகாப்பானது!
“அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்” என்று ஞானமுள்ள ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 16:8) “சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்” என்று நீதிமொழிகள் 15:16 சொல்கிறது. நீதியான வாழ்க்கைப் பாதையில் நிலைத்திருக்க கடவுள் பயம் நிச்சயம் முக்கியமானது.
“மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்”
மனிதன் தேர்ந்தெடுக்கும் திறமையோடு படைக்கப்பட்டான்; அதனால் கெட்டவற்றை விலக்கி நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க அவனால் முடியும். (உபாகமம் 30:19, 20) நம்முடைய அடையாளப்பூர்வ இருதயம் பலதரப்பட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்து அவற்றில் ஓரிரு விஷயங்களுக்குக் கவனம் செலுத்தும் திறமையுள்ளது. தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நமக்கிருப்பதைக் குறிப்பிடுபவராக, “மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்” என்று சாலொமோன் சொல்கிறார். அவ்வாறு யோசித்த பிறகு, ‘அவனுடைய நடைகளை கர்த்தர் உறுதிப்படுத்துகிறார்.’ (நீதிமொழிகள் 16:9) யெகோவாவால் நம்முடைய நடைகளை வழிநடத்த முடியும் என்பதால், ‘நம்முடைய யோசனைகள் உறுதிப்பட’ அவருடைய உதவியை நாடுவோமானால் நாம் ஞானமுள்ளவர்களாகச் செயல்படுகிறோம் என்று அர்த்தம்.
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இருதயம் திருக்குள்ளது, தவறான நியாயவிவாதம் செய்யும் போக்கும் உடையது. உதாரணமாக, ஒரு நபர் ஒரு பாவத்தைச் செய்யலாம்; ஆனால், அவர் செய்த தவறை அவருடைய இருதயம் நியாயப்படுத்தலாம். அந்தப் பாவத்தை விட்டொழிப்பதற்குப் பதிலாக, கடவுள் அன்பு, கிருபை, இரக்கம், மன்னிக்கும் குணம் உள்ளவர் என்று அந்த நபர் நியாயம் காட்டலாம். “தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்” என்றும் அந்நபர் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறார். (சங்கீதம் 10:11) ஆனால், கடவுளுடைய இரக்கத்தை, தவறுகள் செய்வதற்கான சாக்காகப் பயன்படுத்த நினைப்பது முறையற்றதும் ஆபத்தானதும் ஆகும்.
“சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது”
மனிதனின் இருதயம், செயல்கள் ஆகிய விஷயங்களைவிட்டு ராஜாவின் விஷயங்களுக்குக் கவனத்தைத் திருப்பி சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.” (நீதிமொழிகள் 16:10) இது முடிசூட்டப்பட்ட ராஜாவான இயேசு கிறிஸ்துவின் விஷயத்தில் நிச்சயம் உண்மையாக இருக்கும். பூமியின்மீது அவருடைய அரசாட்சி கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்கும்.
நீதிக்கும் நியாயத்திற்கும் ஊற்றுமூலரை ஞானமுள்ள ராஜா இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்: “சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.” (நீதிமொழிகள் 16:11) நிறைகோலும் தராசும் யெகோவாவால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற தராதரங்களைத் தன்னுடைய இஷ்டப்படி ராஜா தீர்மானிக்க முடியாது. “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது” என்று இயேசு பூமியிலிருக்கும்போது கூறினார். பிதாவானவர் “நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும்” கொடுத்திருக்கிற குமாரனிடமிருந்து பரிபூரண நியாயத்தை நாம் எதிர்பார்க்கலாம்.—யோவான் 5:22, 30.
யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் ராஜாவிடம் வேறென்ன எதிர்பார்க்கலாம்? “அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்” என்று இஸ்ரவேலின் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 16:12) மேசியானிய ராஜ்யத்தில் கடவுளுடைய நீதியுள்ள நியமங்கள் பின்பற்றப்படும். ‘கொடுங்கோலாசனத்திற்கும்’ இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.—சங்கீதம் 94:20; யோவான் 18:36; 1 யோவான் 5:19.
ராஜாவின் ஆதரவைப் பெறுதல்
மாண்புமிகுந்த ராஜாவின் குடிமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.” (நீதிமொழிகள் 16:13, 14) யெகோவாவின் இன்றைய வணக்கத்தார் இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள். (மத்தேயு 24:14; 28:19, 20) தங்களுடைய உதடுகளை இந்த வழியில் பயன்படுத்துவதைக் கண்டு மேசியானிய ராஜாவான இயேசு கிறிஸ்து சந்தோஷப்படுவார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். சக்திபடைத்த மனித ராஜாவுக்கு வெறுப்பூட்டுவதைத் தவிர்த்து அவருடைய ஆதரவைப் பெறுவது ஞானமானதாக இருந்தது. அப்படியானால், மேசியானிய ராஜாவின் அங்கீகாரத்தைப் பெற நாடுவது எவ்வளவு ஞானமானது!
“ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்” என்று சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 16:15) ‘யெகோவாவுடைய முகத்தின் பிரகாசம்’ என்பது தெய்வீக ஆதரவைக் குறிக்கிறதுபோல “ராஜாவின் முகக்களை” என்பது அவருடைய ஆதரவைக் குறிக்கிறது. (சங்கீதம் 44:3; 89:15) பயிர்பச்சைகளைச் செழிப்படையச் செய்யும் மழைக்கு உத்தரவாதம் கொடுக்கும் கார்மேகங்களைப்போல, ராஜாவின் ஆதரவும் நன்மையான காரியங்கள் வரப்போவதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. சாலொமோன் ராஜாவின் ஆட்சியில் ஓரளவு செழிப்பான சூழ்நிலை நிலவியது. ஆனால், மேசியானிய ராஜாவின் ஆட்சியில் வாழ்க்கை முழுமையான ஆசீர்வாதங்களும் சீரும் சிறப்பும் நிறைந்ததாக இருக்கும்.—சங்கீதம் 72:1-17.
கடவுளுடைய ராஜ்யம், சூரியனுக்குக் கீழேயுள்ள எல்லா விவகாரங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போகிறது. அதற்காகக் காத்திருக்கும் நாம், நம்முடைய இருதயத்தைச் சுத்தமாக வைத்திருக்க யெகோவாவுடைய உதவியை நாடுவோமாக. மேலும், நம்முடைய நம்பிக்கையை அவர்மீது வைத்து கடவுள் பயத்தை வளர்ப்போமாக. அப்போது, ‘நம்முடைய யோசனைகள் உறுதிப்படும்’ என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கலாம்.—நீதிமொழிகள் 16:3.
[பக்கம் 18-ன் படம்]
யெகோவா எந்த அர்த்தத்தில் “தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனை” உண்டாக்கினார்?