தேவபயத்தை வளர்த்துக்கொள்ளுதல்
“யெகோவாவுக்குப் பயந்து தீமையை விட்டு விலகு.”—நீதிமொழிகள் 3:7, NW.
1. நீதிமொழிகள் யாருக்காக எழுதப்பட்டது?
பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் ஆவிக்குரிய ஆலோசனையின் வளம் பொருந்தியதாய் இருக்கிறது. யெகோவா தம்முடைய மாதிரிப்படிவமான இஸ்ரவேல் தேசத்தாரைப் போதிப்பதற்காகத் தொடக்கத்தில் இந்த வழிகாட்டி நூலை அளித்தார். இன்று, அது “உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள” தம்முடைய பரிசுத்த கிறிஸ்தவ ஜனத்துக்கு ஞானமான புத்திமதிகளை அளிக்கிறது.—1 கொரிந்தியர் 10:11; நீதிமொழிகள் 1:1-5; 1 பேதுரு 2:9.
2. நீதிமொழிகள் 3:7-லுள்ள எச்சரிப்பு இன்று ஏன் மிகவும் காலத்திற்கேற்றதாக இருக்கிறது?
2 நீதிமொழிகள் 3:7-க்கு (NW) திருப்புகையில், நாம் வாசிக்கிறோம்: “உன் சொந்த கண்களுக்கு ஞானியாகாதே. யெகோவாவுக்குப் பயந்து தீமையை விட்டு விலகு.” “நன்மை தீமை அறிந்து” கொள்வார்கள் என்ற வாக்குறுதியுடன் சர்ப்பம் ஏவாளை ஏய்த்து சிக்கவைத்த நம்முடைய முதல் பெற்றோரின் காலத்திலிருந்தே, வெறும் மனித ஞானம் மனிதவர்க்கத்தின் தேவைகளுக்குப் பதிலளிக்கத் தவறி இருக்கிறது. (ஆதியாகமம் 3:4, 5; 1 கொரிந்தியர் 3:19, 20) இந்த 20-ம் நூற்றாண்டில்—நாத்திக, பரிணாம சிந்தனைகளின் பலன்களை அறுவடை செய்துகொண்டிருக்கும் மனிதவர்க்கம், இனவேறுபாடு, வன்முறை, மற்றும் ஒழுக்கயீனத்தின் ஒவ்வொரு வகையாலும் பீடிக்கப்பட்டிருக்கும் இந்தக் “கடைசி நாட்களில்”—இருப்பதைப்போன்று சரித்திரத்தில் வேறு எந்தக் காலப்பகுதியிலும் இது மிகத் தெளிவாக இருந்ததில்லை. (2 தீமோத்தேயு 3:1-5, 13; 2 பேதுரு 3:3, 4) ஐநா-வாலோ உலகின் பிரிந்திருக்கும் மதங்களாலோ சிக்கலை அவிழ்க்க முடியாதபடி இது ஒரு ‘புதிய உலக ஒழுங்கற்ற முறையாக’ இருக்கிறது.
3. நம்முடைய நாளுக்காக என்ன வளர்ச்சிகள் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டன?
3 பேய்த்தன சக்திகள் ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு, எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே கூட்டிச்சேர்க்கும்படி’ புறப்பட்டிருக்கின்றன என்று கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை நமக்குத் தெரிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) சீக்கிரத்தில், அந்த ராஜாக்களை, அல்லது ஆட்சியாளர்களை யெகோவாவிடமிருந்து வரும் திகில் சூழ்ந்துகொள்ளும். யோசுவாவும் இஸ்ரவேலரும் கானானியர்மீது நியாயத்தீர்ப்பைச் சரிக்கட்ட வந்தபோது அவர்களுக்குத் திகில்பிடித்திருந்ததைப்போல் அது இருக்கும். (யோசுவா 2:9-11) ஆனால் இன்று யோசுவாவுக்கு மாதிரிப்படிவமாய் அமைந்த கிறிஸ்து இயேசு—“ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”—“சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோப” வெளிக்காட்டாக ‘புறஜாதிகளை வெட்டி இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்.’—வெளிப்படுத்துதல் 19:15, 16.
4, 5. யார் இரட்சிப்பைக் கண்டடைவார்கள், ஏன்?
4 அந்தச் சமயத்தில் யார் இரட்சிப்பைக் கண்டடைவர்? அப்போது விடுவிக்கப்பட்டவர்கள், திகிலால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அல்ல, ஆனால் யெகோவாவுக்காக ஒரு பக்திக்குரிய பயத்தை வளர்த்துக்கொண்டவர்களே ஆவர். தங்களுடைய சொந்த கண்களுக்கு ஞானமுள்ளவர்களாய் இருப்பதற்கு மாறாக, இவர்கள் “தீமையை விட்டு விலகு”கின்றனர். தீமையானவை அவர்களுடைய சிந்தனைகளிலிருந்து நெருக்கி வெளியே தள்ளப்படும்படி, மனத்தாழ்மையுடன், அவர்கள் நன்மையானவற்றால் தங்கள் மனங்களை நிரப்புகின்றனர். நடத்தை கெட்ட சோதோமியர்களை நிர்மூலமாக்கியது போல, தீமையைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் அழித்துவிட இருக்கும் “சர்வலோக நியாயாதிபதி”யான பேரரசராகிய யெகோவா தேவனுக்கு ஒரு முழுநிறைவான மரியாதையை அவர்கள் போற்றி வளர்க்கின்றனர். (ஆதியாகமம் 18:25) உண்மையில், கடவுளுடைய சொந்த மக்களுக்கு, “கர்த்தருக்குப் [யெகோவாவுக்கு, NW] பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.”—நீதிமொழிகள் 14:27.
5 தெய்வீக நியாயத்தீர்ப்புக்குரிய இந்நாளில், யெகோவாவை என்றாவது பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற பயத்துடன் அவருக்குத் தங்களை முழுமையாக ஒப்படைத்திருப்பவர்கள் அனைவரும் நீதிமொழிகள் 3:8-ல் அடையாளப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையை உணர்ந்துகொள்வார்கள்: “அது [யெகோவாவுக்குப் பயப்படுதல்] உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.”
யெகோவாவைக் கனம்பண்ணுதல்
6. நீதிமொழிகள் 3:9-க்கு இசைந்து செல்லும்படி நம்மை எது தூண்டவேண்டும்?
6 யெகோவாவுக்கான நம்முடைய உணர்ச்சிமிக்க அன்போடுகூடிய போற்றுதலுக்குரிய பயம், நீதிமொழிகள் 3:9-க்கு செவிசாய்க்கும்படி நம்மைத் தூண்டுவிக்கவேண்டும்: “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.” நம்முடைய காணிக்கைகளால் யெகோவாவைக் கனம்பண்ணும்படி நாம் வற்புறுத்தப்படுவது இல்லை. பண்டைய இஸ்ரவேலில் பலிகளைக்குறித்து, யாத்திராகமம் 35:29 முதல் உபாகமம் 23:23 வரையாக சுமார் 12 தடவைகள் குறிப்பிடப்பட்டபடி இவை மனப்பூர்வமானவையாய் இருக்கவேண்டும். யெகோவாவுடைய கைகளில் நாம் அனுபவித்துக் களித்திருக்கும் நன்மையையும் அன்புள்ள தயவையும் அங்கீகரிப்பவர்களாக அவருக்குக் கொடுக்கும் இந்த முதற்பலன்கள் நாம் அளிக்க முடிந்தவற்றில் மிகச் சிறந்தவையாய் இருக்கவேண்டும். (சங்கீதம் 23:6) “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [தொடர்ந்து, NW] தேடு”வதற்கான நம்முடைய தீர்மானத்தை அவை பிரதிபலிக்கவேண்டும். (மத்தேயு 6:33) நம்முடைய மதிப்புமிக்க பொருட்களால் யெகோவாவைக் கனம்பண்ணுவதிலிருந்து என்ன விளைவடைகிறது? “அப்பொழுது உன் களஞ்சியங்கள் அதிகத்தால் நிரப்பப்படும்; உன் ஆலைகளில் புதிய திராட்சரசம் நிரம்பிவழியும்.”—நீதிமொழிகள் 3:10, NW.
7. யெகோவாவுக்கு நாம் என்ன முதற்பலன்களை அளிக்கவேண்டும், விளைவு என்னவாக இருக்கும்?
7 யெகோவா நம்மை ஆசீர்வதிக்கும் முக்கிய வழி ஆவிக்குரியதாகும். (மல்கியா 3:10) எனவே, நாம் அவருக்குச் செலுத்தும் முதற்பலன்கள் முக்கியமாக ஆவிக்குரியவையாக இருக்கவேண்டும். நம்முடைய நேரம், சக்தி, உயிராற்றல் திறம் ஆகியவற்றை அவருடைய சித்தத்தைச் செய்வதில் நாம் பயன்படுத்த வேண்டும். பதிலாக, அத்தகைய நடவடிக்கை இயேசுவுக்குப் பலமளிக்கும் “போஜனமாயிரு”ந்தது போல, நமக்கும் ஊட்டமளிக்கும். (யோவான் 4:34) நம்முடைய ஆவிக்குரிய களஞ்சியங்கள் நிரப்பப்பட்டு, புதிய திராட்சரசத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நம் சந்தோஷம் நிரம்பிவழியும். மேலுமாக, ஒவ்வொரு நாளும் நமக்குப் போதுமான அளவு சரீரப்பிரகாரமான உணவிற்காக நம்பிக்கையோடு ஜெபிக்கையில், உலகளாவிய ராஜ்ய வேலைக்கு ஆதரவாக நம்முடைய வருவாயிலிருந்து நாம் நிலையாகத் தாராளமாக நன்கொடை அளிக்கலாம். (மத்தேயு 6:11) நம்முடைய பொருளாதார சொத்துக்கள் உட்பட, நாம் பெற்றிருக்கும் அனைத்தும் நம் அன்பான பரலோக தந்தையிடமிருந்து நமக்கு வந்தன. இந்த மதிப்புள்ள பொருட்களை நாம் அவருடைய துதிக்குப் பயன்படுத்தும் அளவிற்கு ஏற்றவாறு, அவர் மேலுமான ஆசீர்வாதங்களைப் பொழிவார்.—நீதிமொழிகள் 11:4; 1 கொரிந்தியர் 4:7.
அன்பின் கடிந்துகொள்ளுதல்கள்
8, 9. கடிந்துகொள்ளுதலையும் சிட்சையையும் நாம் எவ்வாறு கருதவேண்டும்?
8 வசனங்கள் 11 மற்றும் 12-ல், தேவபக்தியுள்ள குடும்பங்களில் தந்தை-மகனுக்கும், யெகோவாவுக்கும் பூமியில் உள்ள அவருடைய அன்பான ஆவிக்குரிய பிள்ளைகளுக்கும் இடையில் நிலவும் மகிழ்ச்சியான உறவைபற்றி நீதிமொழிகள் 3-ம் அதிகாரம் திரும்பவும் பேசுகிறது. நாம் வாசிக்கிறோம்: “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.” உலகின் மக்கள் கடிந்துகொள்ளுதலை அறவே வெறுக்கின்றனர். யெகோவாவின் மக்கள் அதை வரவேற்கவேண்டும். பின்வருமாறு சொல்லி, அப்போஸ்தலன் பவுல் நீதிமொழிகளிலிருந்து இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சி[க்கிறார்]. . . . எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:5, 6, 11.
9 ஆம், கடிந்துகொள்ளுதலும் சிட்சையும் நம் ஒவ்வொருவரையும் பயிற்றுவிப்பதில் ஓர் அத்தியாவசியமான பாகமாகும்; அதை நாம் பெற்றோரிடமிருந்தோ, கிறிஸ்தவ சபையின் மூலமாகவோ அல்லது நம்முடைய தனிப்பட்ட படிப்பின்போது வேத வசனங்களின்பேரில் தியானிக்கும்போதோ பெற்றுக்கொண்டாலும் சரி. சிட்சைக்கு செவிசாய்ப்பது ஜீவனை அல்லது மரணத்தைக் குறிக்கும் ஒரு காரியம்; நீதிமொழிகள் 4:1, 13-ம் குறிப்பிடுவதுபோல்: “பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் [சிட்சையை, NW] கேட்டு, புத்தியை [புரிந்துகொள்ளுதலை, NW] அடையும்படி கவனியுங்கள். புத்திமதியை [சிட்சையை, NW] உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.”
மிகப் பெரிய மகிழ்ச்சி
10, 11. நீதிமொழிகள் 3:13-18-லுள்ள இதமான வார்த்தைகளின் சில அம்சங்கள் யாவை?
10 என்ன அழகான கூற்றுகள் இப்போது பின்தொடர்கின்றன, உண்மையில் ‘சத்தியத்தின் இதமான, செவ்வையான வார்த்தைகள்’! (பிரசங்கி 12:10) ஏவப்பட்டு எழுதப்பட்ட சாலொமோனின் இந்த வார்த்தைகள் உண்மையான மகிழ்ச்சியை விவரிக்கின்றன. அவை நம்முடைய இருதயங்களில் பதித்து வைக்கவேண்டிய வார்த்தைகள். நாம் வாசிக்கிறோம்:
11 “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் [பகுத்துணர்வை, NW] சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப் பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.”—நீதிமொழிகள் 3:13-18.
12. ஞானமும் பகுத்துணர்வும் எவ்வாறு நமக்குப் பயனளிக்கவேண்டும்?
12 ஞானம்—நீதிமொழிகள் புத்தகத்தில் இது எவ்வளவு அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது, மொத்தத்தில் 46 தடவைகள்! “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” சாத்தானின் உலகில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆபத்தான புயல்களினூடே கடவுளுடைய மக்களைப் பாதுகாப்பாக நடத்திச் செல்வதற்கு உதவும் கடவுளுடைய வார்த்தையின் அறிவை அடிப்படையாகக் கொண்ட தெய்வீக, நடைமுறையான ஞானமே இது. (நீதிமொழிகள் 9:10) நீதிமொழிகளில் 19 தடவைகள் குறிப்பிடப்பட்ட பகுத்துணர்வு, ஞானத்தின் உறுதுணையாய் இருந்து சாத்தானின் உபாயங்களை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்கு உதவி செய்கிறது. தன்னுடைய சூழ்ச்சியுள்ள வழிகளை நடப்பிப்பதற்கு அந்தப் பெரிய எதிரி தனக்குப்பின் ஆயிரக்கணக்கான வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறான். ஆனால், கற்பிப்பவராக இருக்கும் அனுபவத்தைக் காட்டிலும், அதிக விலைமதிப்பான ஏதோவொன்றை நாம் பெற்றிருக்கிறோம்—தெய்வீக பகுத்துணர்வு; அது தீமையிலிருந்து நன்மையை வேறுபடுத்திக் கண்டு, நடப்பதற்கான சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்குரிய திறமையாகும். இதையே யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலம் நமக்குப் போதிக்கிறார்.—நீதிமொழிகள் 2:10-13, 15; எபேசியர் 6:11.
13. பொருளாதாரத்தில் கடினமான சமயங்களின்போது எது நம்மைப் பாதுகாக்க முடியும், எப்படி?
13 இன்றைய உலகின் பொருளாதார குழப்படி நிலை, எசேக்கியேல் 7:19-லுள்ள தீர்க்கதரிசன நிறைவேற்றத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்கிறது: “தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது.” பூமியிலுள்ள எல்லா பொருளாதார செல்வமும், ஞானம் மற்றும் பகுத்துணர்வின் பாதுகாக்கும் வல்லமையுடன் எள்ளளவும் ஒப்பாவதில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் ஞானமுள்ள ராஜாவாகிய சாலொமோன் குறிப்பிட்டார்: “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.” (பிரசங்கி 7:12) இன்று யெகோவாவின் இனிதான வழிகளில் நடந்து, இயேசுவுடைய மீட்பின் கிரய பலியில் விசுவாசம் வைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் கடவுளின் பரிசாகிய நித்திய ஜீவனான ‘தீர்க்காயுசை’ ஞானத்துடன் தெரிந்துகொள்வோர் எல்லாரும் உண்மையில் மகிழ்ச்சியுள்ளவர்கள்!—நீதிமொழிகள் 3:16; யோவான் 3:16; 17:3.
உண்மையான ஞானத்தை வளர்த்துக்கொள்ளுதல்
14. என்ன வழிகளில் யெகோவா மிகச் சிறந்த ஞானத்தை வெளிக்காட்டி இருக்கிறார்?
14 கடவுளுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதராகிய நாம், யெகோவா தாமே தம்முடைய வியக்கத்தக்க சிருஷ்டிப்பின் வேலைகளை நடப்பிப்பதில் வெளிக்காட்டிய குணங்களான ஞானம் மற்றும் பகுத்துணர்வை வளர்க்க முயலுவது பொருத்தமானதாக இருக்கிறது. “கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே [பகுத்துணர்வினாலே, NW] வானங்களை ஸ்தாபித்தார்.” (நீதிமொழிகள் 3:19, 20) அவர் உயிருள்ள சிருஷ்டிகளை ஏதோவொரு மாயமான, விளக்கமுடியாத பரிணாமத்தின் மூலமாக அல்லாமல், நேரடிச் சிருஷ்டிப்புச் செயல்களால், ஒவ்வொன்றையும் அதனதன் ‘ஜாதிஜாதியாக’ ஒரு ஞானமான நோக்கத்திற்கென உண்டாக்க முற்பட்டார். (ஆதியாகமம் 1:25) கடைசியாக, மிருகங்களைவிட மிக மேன்மையான புத்திக்கூர்மையுடனும் திறமைகளுடனும் மனிதன் உண்டாக்கப்பட்டபோது, கடவுளுடைய தூத குமாரர்களின் கெம்பீரசத்தம் பரலோகமெங்கும் திரும்பவும் திரும்பவும் எதிரொலித்திருக்கவேண்டும். (ஒப்பிடவும் யோபு 38:1, 4, 7.) யெகோவாவின் பகுத்துணர்வுடன்கூடிய முன்னறிவு, அவருடைய ஞானம், மற்றும் அவருடைய அன்பு பூமியிலுள்ள அவருடைய எல்லா உற்பத்திகளிலும் தெளிவாகத் தெரிகின்றன.—சங்கீதம் 104:24.
15. (அ) வெறுமனே ஞானத்தை வளர்ப்பது ஏன் போதாததாய் இருக்கிறது? (ஆ) நீதிமொழிகள் 3:25, 26 நம்மில் என்ன நம்பிக்கையூட்டவேண்டும்?
15 யெகோவாவின் குணங்களாகிய ஞானம் மற்றும் பகுத்துணர்வை நாம் வளர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், அவருடைய வார்த்தையை நாம் படிப்பதில் ஒருபோதும் தளர்ந்துவிடாமல், அவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும்வேண்டும். அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்: “என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.” (நீதிமொழிகள் 3:21, 22) இவ்வாறு சாத்தானின் உலகின்மேல் “அழிவு சடிதியாய்” ஏற்படும் நாள் திருடன்வரும் விதமாய் அணுகும்போதும்கூட நாம் பாதுகாப்போடும் மனச்சமாதானத்தோடும் செல்லலாம். (1 தெசலோனிக்கேயர் 5:2, 3) மகா உபத்திரவத்தின் போதுதானேயும், “சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்ச வேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.”—நீதிமொழிகள் 3:23-26.
நன்மை செய்வதற்கான பிரியம்
16. ஊழியத்தில் வைராக்கியத்துடன் இருப்பதோடுகூட கிறிஸ்தவர்களிடம் என்ன செயல் நடவடிக்கை தேவைப்படுகிறது?
16 இராஜ்யத்தின் இந்த நற்செய்தியை எல்லா தேசங்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிப்பதில் வைராக்கியத்தைக் காண்பிப்பதற்கான நாட்கள் இவையே. ஆனால் இந்தச் சாட்சிபகரும் வேலை மற்ற கிறிஸ்தவ நடவடிக்கையால் உந்துவிக்கப்படவேண்டும்; நீதிமொழிகள் 3:27, 28-ல் விவரிக்கப்பட்டிருப்பதைப்போல் “நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.” (ஒப்பிடவும் யாக்கோபு 2:14-17.) உலகின் பெரும்பாகம் வறுமை மற்றும் பஞ்சத்தின் பிடியில் இருக்கையில், நம் அயலாருக்கு, விசேஷமாக நம் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு உதவி செய்வதற்கான அவசர அழைப்புகள் இருந்திருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு பிரதிபலித்திருக்கின்றனர்?
17-19. (அ) என்ன அவசர தேவை 1993-ல் பூர்த்திசெய்யப்பட்டது, என்ன பிரதிபலிப்புடன்? (ஆ) கஷ்டத்திற்குள்ளான நம்முடைய சகோதரர்கள் “முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கி”றார்கள் என்பதை எது காண்பிக்கிறது?
17 ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: கடந்த வருடத்தில், முன்னாள் யுகோஸ்லாவியாவிலிருந்து உதவிக்காக ஓர் அவசர அழைப்பு வந்தது. பக்கத்து நாடுகளிலுள்ள சகோதரத்துவம் அதிசயிக்கத்தக்க விதத்தில் பிரதிபலித்தது. கடந்த குளிர்காலத்தின் கடுங்குளிர் மாதங்களில், பல இடருதவிக்கான சரக்குவண்டி தொகுதிகளால் புதிய பிரசுரங்கள், கதகதப்பாக வைக்கும் உடைகள், உணவு, மற்றும் மருந்துகளைத் தேவையிலிருக்கும் சாட்சிகளுக்குப் போர் பகுதியினூடே கொண்டுசெல்ல முடிந்தது. ஒரு முறை, 15 டன் இடருதவி பொருட்களைக் கொண்டுசெல்வதற்குச் சகோதரர்கள் அனுமதிக்காக விண்ணப்பித்தனர்; ஆனால் அவர்கள் அனுமதியைப் பெற்றபோது, அது 30 டன்னுக்காக இருந்தது! ஆஸ்திரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் விரைவில் இன்னும் மூன்று டிரக்குகளை அனுப்பினர். மொத்தத்தில் 25 டன், அவைச் சென்றெட்டவேண்டிய இடத்தை அடைந்தன. இந்த அபரிமிதமான ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான பொருட்களைப் பெறுவதற்கு நம் சகோதரர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தனர்!
18 அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? இந்த வருட துவக்கத்தில், ஒரு மூப்பர் எழுதினார்: “சரஜெவோவிலுள்ள சகோதர சகோதரிகள் பிழைத்து, நல்லபடியாக உள்ளனர்; மிக முக்கியமான காரியம் என்னவென்றால், இந்த அறிவற்ற போரைச் சகித்திருப்பதற்கு நாங்கள் இன்னும் ஆவிக்குரியவிதத்தில் பலமுள்ளவர்களாக இருக்கிறோம். உணவைக்குறித்ததில் நிலைமை மிக கஷ்டமாக இருந்தது. நீங்கள் எங்களுக்காக எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு யெகோவா உங்களை ஆசீர்வதித்து பலனளிப்பாராக. யெகோவாவின் சாட்சிகளுடைய முன்மாதிரியான வாழ்க்கை முறைக்காகவும் அவர்கள் அதிகாரிகளை மதிப்பதற்காகவும், அதிகாரிகள் அவர்களிடம் விசேஷித்த மதிப்பைக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் எங்களுக்களித்த ஆவிக்குரிய உணவிற்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்.”—ஒப்பிடவும் சங்கீதம் 145:18.
19 ஆபத்திற்குள்ளிருந்த இந்தச் சகோதரர்கள் தங்களுடைய வைராக்கியமுள்ள வெளி ஊழியத்தின்மூலமும் போற்றுதலைக் காண்பித்திருக்கின்றனர். அயலார் பலர் வீட்டுப் பைபிள் படிப்புகளைக் கேட்டுக்கொண்டு அவர்களிடத்தில் வருகின்றனர். ஐந்து டன் இடருதவி உணவு அளிக்கப்பட்ட டூஸ்லா என்ற நகரில், சபையிலுள்ள ஒன்பது பயனியர்களுக்கு நல்ல ஆதரவாக, அந்த மாதத்தில் 40 பிரஸ்தாபிகள் சராசரியாக ஒவ்வொருவரும் 25 மணிநேரங்களை ஊழியத்தில் அறிக்கை செய்தனர். இயேசுவின் மரண நினைவு நாளுக்கு 243 பேர் வந்திருந்தனர்; இது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாய் இருந்தது. இந்த அருமையான சகோதரர்கள் உண்மையில் “நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கி”றார்கள்.—ரோமர் 8:37.
20. முன்னாள் சோவியத் யூனியனில் என்ன “சமநிலை” ஏற்பட்டிருக்கிறது?
20 முன்னாள் சோவியத் யூனியனுக்கு இடருதவி உணவு மற்றும் கதகதப்பாக வைக்கும் உடைகளாலான பெரிய சரக்குவண்டி தொகுதிகள் அனுப்பப்பட்டதில் வெளிக்காட்டப்பட்ட தாராளகுணமும், அங்குள்ள சகோதரர்களின் வைராக்கியத்துடன் ஈடுசெய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, மாஸ்கோவில் கடந்த வருடத்தில் நினைவு ஆசரிப்பிற்கு வருகை தந்திருந்த 3,500 பேருடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் 7,549 பேர் வந்திருந்தனர். அதே காலப்பகுதியில், அந்த நகரத்தில் சபைகள் 12-லிருந்து 16-ஆக அதிகரித்தன. முன்னாள் சோவியத் யூனியன் முழுவதிலும் (பால்டிக் மாகாணங்களைச் சேர்க்காமல்) சபைகளில் 14 சதவீதம், ராஜ்ய பிரஸ்தாபிகளில் 25 சதவீதம், மற்றும் பயனியர்களில் 74 சதவீதம் அதிகரிப்புகள் இருந்தன. என்னே வைராக்கியமான சுயதியாக ஆவி! இது முதல் நூற்றாண்டில் “சமநிலை” செய்யப்பட்டதை ஒருவருக்கு ஞாபகப்படுத்துகிறது. ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான ஆஸ்திகளை வைத்திருந்த கிறிஸ்தவர்கள், குறைந்த சலுகையுடைய ஸ்தானங்களில் இருப்போருக்குத் தாராளமாக வெகுமதிகள் அளித்தனர்; அதேநேரத்தில் இந்தத் துன்பப்பட்டோரின் வைராக்கியம் கொடையாளர்களுக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொண்டுவந்தது.—2 கொரிந்தியர் 8:15.
தீமையை வெறுத்துவிடுங்கள்!
21. நீதிமொழிகள் 3-ம் அதிகாரத்தின் முடிவான வார்த்தைகளில் ஞானமுள்ளோரும் மதிகேடரும் எப்படி வேறுபடுத்திக் காண்பிக்கப்பட்டிருக்கின்றனர்?
21 அடுத்ததாக நீதிமொழிகள் மூன்றாம் அதிகாரம் வேறுபாடுகளின் ஒரு தொடரை அளித்து, பின்வரும் இந்த அறிவுரையோடு முடிக்கிறது: “கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள், மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.”—நீதிமொழிகள் 3:29-35.
22. (அ) மதிகேடருடைய முடிவை நாம் எவ்வாறு தவிர்க்கக்கூடும்? (ஆ) ஞானமுள்ளவர்கள் எதை வெறுக்கிறார்கள், எதை வளர்க்கிறார்கள், என்ன பலனுடன்?
22 மதிகேடருடன் எண்ணப்படுவதை நாம் எவ்வாறு தவிர்க்கக்கூடும்? நாம் தீமையை வெறுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும், ஆம், யெகோவா அருவருப்பதை அருவருக்கவேண்டும்—இந்த வன்முறையான, இரத்தப்பழி உடைய உலகின் மாறுபாடுள்ள எல்லா வழிகளையும் அருவருக்கவேண்டும். (நீதிமொழிகள் 6:16-19-ஐயும் பார்க்கவும்.) மாறாக, நன்மையானவற்றை—நேர்மை, நீதி, மற்றும் சாந்தத்தை—நாம் வளர்க்கவேண்டும்: அப்போது மனத்தாழ்மையிலும் யெகோவாவுக்குப் பயப்படுவதிலும் நாம் ‘ஐசுவரியத்தையும் மகிமையையும் ஜீவனையும்’ அடையலாம். (நீதிமொழிகள் 22:4) “உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு” என்ற அறிவுரையை உண்மையுடன் பொருத்தும் அனைவருக்கும் இதுவே பலனாக இருக்கும்.
உங்கள் குறிப்பு என்ன?
◻ இந்தப் படிப்பிற்குரிய தலைப்பு வசனம் இன்று எப்படிப் பொருந்துகிறது?
◻ நாம் யெகோவாவை எப்படி கனம்பண்ணலாம்?
◻ நாம் ஏன் சிட்சையை அற்பமாக எண்ணக்கூடாது?
◻ மிகப் பெரிய மகிழ்ச்சி எங்கு காணப்பட வேண்டியதாய் இருக்கிறது?
◻ நாம் எப்படி நன்மையை நேசித்து தீமையை வெறுக்கலாம்?
[பக்கம் 18-ன் படம்]
தங்களுடைய மிகச் சிறந்ததை யெகோவாவுக்குப் பலியாகச் செலுத்துபவர்கள் மிகுதியாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்