நீங்கள் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறீர்களா?
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது.”—எபி. 4:12.
1. நாம் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும், கடவுளுக்குக் கீழ்ப்படிவது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்?
நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய அமைப்புடன் ஒத்துழைக்கும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும் என்பதை முந்தைய கட்டுரையில் கற்றுக்கொண்டோம். அப்படி நாம் அவருக்குக் கீழ்ப்படிவது, அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டுமென விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. சில சமயங்களில், அவருக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, நமக்குப் பிடித்தமான ஒன்றை நாம் செய்ய விரும்பலாம்; ஆனால், அது யெகோவாவுக்குப் பிடிக்காதிருக்கலாம். அப்போது அவருக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் ‘கீழ்ப்படியத் தயாராய்’ இருப்பது அவசியம். (யாக். 3:17) நாம் எப்போதுமே கீழ்ப்படியத் தயாராய் இருக்கிறோம் என்பதைக் காட்ட வாய்ப்பளிக்கும் சில சூழ்நிலைகளைக் குறித்து இந்தக் கட்டுரையில் சிந்திக்கப் போகிறோம்.
2, 3. யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
2 நீங்கள் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளும்போது, கீழ்ப்படியத் தயாராய் இருக்கிறீர்களா? இதைச் சற்று யோசித்துப் பாருங்கள்: ‘சகல தேசங்களிலும் உள்ள விரும்பத்தக்கவர்களை’ யெகோவா தம்முடைய அமைப்புக்குள் சேர்த்துக்கொள்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (ஆகா. 2:7, NW) அதாவது, சரியானதைச் செய்ய விரும்புகிறவர்களை அவர் பொக்கிஷமாய்க் கருதுவதால் அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். முதன்முதலில் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது நம்மில் பெரும்பாலோர் தவறான காரியங்களைச் செய்து வந்தோம் என்பது உண்மைதான். நாம் கடவுளையும் அவருடைய குமாரனையும் நேசித்ததாலும் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பியதாலும் நம்முடைய எண்ணங்களிலும் செயல்களிலும் மிகப் பெரிய மாற்றங்களை மனப்பூர்வமாகச் செய்தோம். அதற்காக யெகோவாவிடம் ஜெபத்தில் உதவி கேட்டு, நம் பங்கிலும் கடுமையாய் முயற்சி எடுத்தோம். கடைசியில், ஞானஸ்நானத்தின் மூலம் யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றோம்.—கொலோசெயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.
3 நாம் அபூரணராக இருப்பதால் தொடர்ந்து வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யவும் சரியானதைச் செய்யப் போராடவும் வேண்டும். இப்படி யெகோவாவைப் பிரியப்படுத்த நம்மாலான அனைத்தையும் செய்து வந்தால் அவர் நமக்கு உதவுவதாக உறுதியளிக்கிறார்.
வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கையில்...
4. நாம் செய்ய வேண்டிய மாற்றங்களை அறிந்துகொள்ள யெகோவா எந்த மூன்று வழிகளில் உதவுகிறார்?
4 நாம் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமானால், அவை என்ன மாற்றங்கள் என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும். இதற்கு யெகோவா பல்வேறு வழிகளில் நமக்கு உதவுகிறார். ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படுகிற ஒரு பேச்சு அல்லது நம் பத்திரிகையில் வெளிவருகிற ஒரு கட்டுரை, நம் எண்ணங்களிலோ செயல்களிலோ தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டலாம். சில சமயங்களில், அந்தப் பேச்சைக் கேட்ட பிறகும் அல்லது அந்தக் கட்டுரையை வாசித்த பிறகும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளாமல் போகலாம்; அப்போது, சபையிலுள்ள ஒரு சகோதரரையோ சகோதரியையோ பயன்படுத்தி யெகோவா நம்மை அன்போடு திருத்தலாம்.—கலாத்தியர் 6:1-ஐ வாசியுங்கள்.
5. நம்மை ஒருவர் திருத்தும்போது நாம் எப்படி நடந்துகொள்ளலாம், மூப்பர்கள் எப்போதும் நமக்கு உதவ ஏன் முயற்சி செய்கிறார்கள்?
5 அபூரணராக இருக்கிற ஒருவர் நம்மைத் திருத்தும்போது, அதுவும் அன்பாகத் திருத்தும்போதுகூட, அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வது நமக்கு மிகக் கஷ்டமாக இருக்கலாம். நம்மைச் ‘சாந்தமாக சரிப்படுத்த முயலும்படி,’ அதாவது அன்பாகத் திருத்தும்படி, மூப்பர்களுக்கு யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார். (கலா. 6:1) அவர்களுடைய உதவியை ஏற்றுக்கொண்டால், யெகோவாவுக்கு நாம் இன்னும் அதிக விரும்பத்தக்கவர்களாக, பொன் போன்றவர்களாக இருப்போம். நம்முடைய ஜெபங்களில், நாம் அபூரணர்கள் என்றும் அநேக தவறுகள் செய்கிறவர்கள் என்றும் யெகோவாவிடம் அடிக்கடி சொல்வது உண்மைதான். ஆனால், நாம் ஏதேனும் தவறு செய்துவிட்டதாக ஒரு மூப்பர் நம்மிடம் சொல்லும்போது அதை ஒத்துக்கொள்ள மறுக்கலாம். நாம் செய்தது ஒன்றும் பெரிய தவறல்ல என்று சொல்லி, நம்மை நியாயப்படுத்த முயலலாம். ‘என்னைப் பிடிக்காததால்தான் அந்த மூப்பர் அப்படிச் சொல்கிறார்’ என்றோ, ‘என்னிடம் அவர் அன்பாகப் பேசவில்லை’ என்றோ நாம் சொல்லலாம். (2 இரா. 5:11) சில சமயங்களில், நமக்குப் பிடிக்காத ஒன்றை மூப்பர் சொல்லும்போது கோபம் தலைக்கேறிவிடலாம். ஒருவேளை, நம்முடைய குடும்பத்தாரில் ஒருவர் தவறு செய்வதாக அல்லது நாம் அடக்கமாக உடை உடுத்தாததாக அவர் சொல்லலாம். நாம் இன்னும் அதிக சுத்தமாக இருக்க வேண்டும் என்றோ, யெகோவாவுக்குப் பிடிக்காத பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றோ அவர் சொல்லலாம். அப்போது, நாம் கோபத்தில் யோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டிவிடலாம். பிறகு, அதை நினைத்து வருத்தப்படலாம், நமக்கு உதவ முன்வந்த அந்த மூப்பரும் வருத்தப்படலாம். நம்முடைய கோபமெல்லாம் தணிந்த பிறகு அவர் சொன்னது நம்முடைய நல்லதுக்குத்தான் என்று ஒத்துக்கொள்ளலாம்.
6. கடவுளுடைய வார்த்தையால் எப்படி “இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறிய” முடியும்?
6 கடவுளுடைய வார்த்தை “வல்லமையுள்ளது” என்று இந்தக் கட்டுரையின் தலைப்பு வசனமான எபிரெயர் 4:12-ல் பவுல் குறிப்பிட்டார். ஆம், மக்களுடைய வாழ்க்கையை மாற்றும் வல்லமை கடவுளுடைய வார்த்தையான பைபிளுக்கு இருக்கிறது. நாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பு, தேவையான மாற்றங்களைச் செய்ய பைபிள் நமக்கு உதவியது. ஞானஸ்நானத்திற்குப் பிறகும் மாற்றங்களைச் செய்ய அது நமக்கு உதவுகிறது. கடவுளுடைய வார்த்தை ‘அகத்தையும் புறத்தையும் பிரிக்குமளவுக்கு ஊடுருவக்கூடியது’ என்றும் பவுல் குறிப்பிட்டார்; ஆம், அது “இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் பகுத்தறியக்கூடியது.” (எபி. 4:12) ‘புறம்’ என்பது வெளியில் நாம் எப்படிப்பட்டவர்களாகத் தெரிகிறோம் என்பதைக் குறிக்கிறது. ‘அகம்’ என்பது நாம் உள்ளத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட பிறகு அதன்படி நடக்கிறோமா இல்லையா என்பது, உள்ளத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் என்று பவுல் சொன்னார். சில சமயங்களில் நாம் வெளியில் ஒரு விதமாகவும் உள்ளுக்குள் ஒரு விதமாகவும் இருக்கிறோமா? (மத்தேயு 23:27, 28-ஐ வாசியுங்கள்.) பின்வரும் சூழ்நிலைகளைச் சிந்திக்கையில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
யெகோவாவின் அமைப்புடன் தொடர்ந்து முன்னேறுங்கள்
7, 8. (அ) எபிரெய கிறிஸ்தவர்களில் அநேகர் ஏன் திருச்சட்ட முறைமைகள் சிலவற்றைக் கடைப்பிடிக்க நினைத்திருக்கலாம்? (ஆ) அவர்கள் யெகோவாவின் நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார்கள் என நாம் ஏன் சொல்லலாம்?
7 நீதிமொழிகள் 4:18-லுள்ள பின்வரும் வார்த்தைகள் நம்மில் பலருக்கு மனப்பாடமாகத் தெரியும்: “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.” இது எதை அர்த்தப்படுத்துகிறது? காலம் செல்லச் செல்ல, யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறவற்றை அதிகமதிகமாகப் புரிந்துகொள்கிறோம், அவருக்குப் பிரியமானதை அதிகமதிகமாகச் செய்கிறோம்.
8 இயேசு இறந்த பிறகும்கூட எபிரெய கிறிஸ்தவர்களில் அநேகர் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க நினைத்தார்கள் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். (அப். 21:20) ஆனால், கிறிஸ்தவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை பவுல் தெளிவாக விளக்கினார்; என்றாலும், யெகோவா எதிர்பார்த்ததைச் செய்ய அவர்களில் சிலர் தயாராக இல்லை. (கொலோ. 2:13-15) திருச்சட்ட முறைமைகள் சிலவற்றைக் கடைப்பிடித்தால், யூதர்களால் துன்புறுத்தப்படுவதைத் தவிர்க்கலாமென அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டால் அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியாதென பவுல் தெளிவுபடுத்தினார்.a (எபி. 4:1, 2, 6; எபிரெயர் 4:11-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இப்போது வேறொரு விதத்தில் அவரை வழிபடுவது அவசியம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
9. பைபிள் போதனைக்கு அடிமை வகுப்பார் புதிய விளக்கம் தரும்போது நாம் எவ்வாறு உணர வேண்டும்?
9 இன்று, உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் பைபிள் போதனைகளுக்குச் சில சமயம் புதிய விளக்கங்களைத் தருகிறார்கள். அதைக் குறித்து நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால், நமக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதற்கு அந்த அடிமை வகுப்பாரை யெகோவா பயன்படுத்துகிறார் என்பதை அது காட்டுகிறது. அடிமை வகுப்பாரைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஆளும் குழுவினர் சில சமயங்களில் பைபிள் போதனைகளுக்கான விளக்கங்களை மறுபடியும் ஆராய்ந்து பார்க்கின்றனர். அவற்றில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென அவர்கள் தீர்மானிக்கும்போது, முன்பு கொடுத்த விளக்கங்களை மாற்ற அல்லது தெளிவாக்க அவர்கள் பயப்படுவதில்லை. அதற்காகத் தங்களைச் சிலர் குறைகூறுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்; என்றாலும், அதை ஒரு பெரிய விஷயமாக அவர்கள் நினைப்பதில்லை. கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாகச் செயல்படுவதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள். ஏதேனும் பைபிள் போதனைக்கு அடிமை வகுப்பார் புதிய விளக்கம் தரும்போது நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?—லூக்கா 5:39-ஐ வாசியுங்கள்.
10, 11. புதிய முறையில் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென்பது தெரிந்தபோது சாட்சிகளில் சிலர் என்ன செய்தார்கள், அவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 மற்றொரு உதாரணத்தைச் சிந்திப்போம். அது சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்தது. வெகு சிறப்பாக பைபிள் சொற்பொழிவுகளைக் கொடுத்துவந்த சாட்சிகள் சிலர், நற்செய்தியை அறிவிப்பதற்கு அதுவே மிகச் சிறந்த வழியென நினைத்தார்கள். ஏராளமானோரின் முன்னிலையில் சொற்பொழிவைக் கொடுக்க விரும்பினார்கள். அதைக் கேட்டு மக்கள் அவர்களைப் பாராட்டியபோது உச்சிகுளிர்ந்து போனார்கள். பிற்பாடோ, சொற்பொழிவைக் கொடுப்பது மட்டுமே போதாது என்பதை யெகோவாவின் மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் வீடு வீடாகவும் பிற விதங்களிலும் நற்செய்தியை அறிவிக்க வேண்டுமென யெகோவா விரும்பினார். ஆனால், சொற்பொழிவு கொடுப்பதில் கைதேர்ந்த சிலர் அதைச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் யெகோவாவை நேசித்ததாகவும் அவருக்குக் கீழ்ப்படிந்ததாகவும் அவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் நினைத்தார்கள்; ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருந்தது. அவர்களுடைய செயல்களைப் பார்த்து யெகோவா நிச்சயம் சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் என்பது நமக்குத் தெரியும். ஆம், அவர்கள் அவருடைய அமைப்பைவிட்டு வெளியேறினார்கள்.—மத். 10:1-6; அப். 5:42; 20:20.
11 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது வேறு பல சாட்சிகளுக்கும்கூட கஷ்டமாக இருந்தது, அதுவும் ஆரம்ப காலத்தில். ஆனாலும் அவர்கள் கீழ்ப்படிந்தார்கள், யெகோவாவின் அமைப்புக்கு உண்மையாய் இருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது அவர்களுக்கு எளிதாகிவிட்டது. யெகோவா அவர்களை மிகுதியாய் ஆசீர்வதித்தார். நற்செய்தியை அறிவிக்க நீங்கள் இதுவரை பயன்படுத்தியிராத புதிய முறையை முயன்று பார்க்கும்படி அடிமை வகுப்பார் சொல்லும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த முறையில் நற்செய்தியை அறிவிப்பது உங்களுக்கு அதிகக் கஷ்டமாகத் தோன்றினாலும் அவர்களுக்குக் கீழ்ப்படிவீர்களா?
நாம் நேசிக்கிற ஒருவர் யெகோவாவைவிட்டு விலகுகையில்...
12, 13. (அ) ‘பொல்லாத மனிதனை நம் மத்தியிலிருந்து நீக்கிவிடும்படி’ யெகோவா ஏன் சொல்கிறார்? (ஆ) கிறிஸ்தவப் பெற்றோர் என்ன கஷ்டமான சூழ்நிலையை எதிர்ப்படலாம்?
12 யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் விரும்பினால் எல்லா விதத்திலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவசியம் என்பதை நன்கு அறிந்திருக்கிறோம். (தீத்து 2:14-ஐ வாசியுங்கள்.) ஆனால், சில சூழ்நிலைகளில் அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, பின்வரும் சூழ்நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்: விசுவாசமுள்ள ஒரு கிறிஸ்தவத் தம்பதியருக்கு ஒரே மகன் இருக்கிறான், அவன் சத்தியத்தை விட்டுச் சென்றுவிடுகிறான். யெகோவாவுடனும் தன்னுடைய பெற்றோருடனும் உள்ள பந்தத்தைவிட ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களை அனுபவிக்கவே’ விரும்புகிறான். அவனுடைய செயல்களின் காரணமாக, கிறிஸ்தவச் சபையில் இருக்கும் தகுதியை இழக்கிறான். எனவே, சபைநீக்கம் செய்யப்படுகிறான்.—எபி. 11:25.
13 அவனுடைய பெற்றோர் நொறுங்கிப் போகிறார்கள்! ‘சகோதரன் என்று சொல்லிக்கொண்டு பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவனாகவோ பேராசைப்படுகிறவனாகவோ உருவ வழிபாட்டில் ஈடுபடுகிறவனாகவோ சபித்துப் பேசுகிறவனாகவோ குடிகாரனாகவோ கொள்ளையடிக்கிறவனாகவோ இருக்கிற ஒருவனோடு பழகுவதை விட்டுவிட வேண்டும். . . . அப்படிப்பட்டவனோடு சேர்ந்து நீங்கள் சாப்பிடவும் கூடாது’ என்று பைபிள் சொல்வதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். “அந்தப் பொல்லாத மனிதனை உங்கள் மத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள்” என்று பைபிள் சொல்வதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 கொ. 5:11, 13) “ஒருவனோடு” என்பது, ஒரே வீட்டில் வசிக்காத குடும்பத்தாரையும் குறிக்கிறது என்பதை அந்தத் தம்பதியர் புரிந்திருக்கிறார்கள். ஆனால், தங்கள் மகன்மீது கொள்ளை அன்பு வைத்திருப்பதால் அவர்கள் இவ்வாறு நினைக்கலாம்: “நம்முடைய மகனிடம் முடிந்தவரை நிறையப் பேச வேண்டும். அவனோடு பேசாவிட்டால் யெகோவாவிடம் திரும்பிவர அவனுக்கு உதவ முடியாமல் போய்விடலாம்.”b
14, 15. சபைநீக்கம் செய்யப்பட்ட பிள்ளையுடன் பேசுவது சம்பந்தமாகத் தீர்மானிக்கையில் பெற்றோர் எதை மனதில் வைக்க வேண்டும்?
14 அந்தப் பெற்றோர் வேதனையில் துடிப்பதைக் காண நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவர்களுடைய மகன் நினைத்திருந்தால் தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ள முடிந்திருக்கும். ஆனால், அவன் தன் பெற்றோருடனோ சபையாருடனோ இருப்பதை விரும்பவில்லை; மாறாக, தவறான காரியங்களில் ஈடுபடுவதையே அதிகம் விரும்பினான். தங்களுடைய மகனுக்கு உதவ அந்தப் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள்; ஆனால், அவன் செய்வதைத் தடுக்க அவர்களால் முடிவதில்லை. அவர்கள் ஏன் வேதனையில் துடிக்கிறார்கள் என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.
15 அந்தப் பெற்றோர் என்ன செய்வார்கள்? யெகோவா கொடுத்திருக்கும் தெளிவான கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா? குடும்ப சம்பந்தமான ஏதேனும் முக்கிய விஷயத்தைப் பற்றி எப்போதாவது அவனிடம் அவர்கள் பேச வேண்டியிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அவனிடம் பேச அநேக முக்கிய விஷயங்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கலாமா? இது சம்பந்தமாகத் தீர்மானம் எடுக்கும்போது, யெகோவா என்ன செய்யும்படி தங்களிடம் எதிர்பார்க்கிறார் என்பதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும். யெகோவா தம்முடைய மக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவே விரும்புகிறார். அதனால்தான், “அந்தப் பொல்லாத மனிதனை” சபையிலிருந்து ‘நீக்கிவிடும்படி’ கட்டளை கொடுத்திருக்கிறார். அதோடு, தவறு செய்த நபர் மனந்திருந்தி மீண்டும் சபைக்குள் வருவதற்கு உதவ அவர் விரும்புகிறார். யெகோவாவின் விருப்பமே தங்களுடைய விருப்பம் என்பதைக் கிறிஸ்தவப் பெற்றோர் எப்படிக் காட்டலாம்?
16, 17. ஆரோனின் உதாரணத்திலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?
16 மோசேயின் சகோதரன் ஆரோன் தன்னுடைய இரண்டு மகன்கள் செய்த காரியத்தின் நிமித்தம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். நாதாப், அபியூ என்ற அவருடைய மகன்கள் யெகோவாவுடைய கட்டளைக்கு எதிராக நெருப்பை அவருடைய சன்னதிக்குக் கொண்டு போனார்கள். அதனால், அவர் வானத்திலிருந்து நெருப்பை அனுப்பி அவர்களைக் கொன்று போட்டார். அந்தச் சமயத்தில் ஆரோன் எந்தளவுக்குத் துடிதுடித்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். தன்னுடைய மகன்களுடன் இனி பேச முடியாமல் அவர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், அவரும் அவருடைய மற்ற மகன்களும் இதைவிட பெரிய கஷ்டத்தையும் எதிர்ப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை வெளிக்காட்டக் கூடாதென யெகோவா சொன்னதாக மோசே அவர்களிடம் தெரிவித்தார். “நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக” என்று மோசே சொன்னார். (லேவி. 10:1-6) இதில் நமக்கென்ன பாடம்? யெகோவாவுக்கு உண்மையாய் இராத குடும்ப அங்கத்தினரைவிட யெகோவாவையே நாம் அதிகம் நேசிக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது.
17 இன்று யெகோவா தம்முடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை உடனடியாகக் கொன்று போடுவதில்லை. அவர்களிடம் அவர் அன்பு காட்டுகிறார், தவறுகளைவிட்டு மனந்திருந்தி வர அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். ஆனால், பெற்றோர் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், சபைநீக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மகனுடனோ மகளுடனோ பேசுவதற்கு அநேக காரணங்கள் இருப்பதாக நினைத்தால் அவர் எப்படி உணருவார்?
18, 19. குடும்பத்தார் யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாய் இருந்தால் என்ன ஆசீர்வாதத்தைப் பெறலாம்?
18 மனந்திருந்திய அநேகர், தங்களுடைய நண்பர்களும் குடும்பத்தாரும் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்து, தங்களுடன் பேசாமல் இருந்ததால்தான் தாங்கள் மீண்டும் சபைக்குள் வந்ததாகச் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு பெண் தன்னுடைய அண்ணன் பேசாதிருந்ததே தான் மனந்திருந்தி சபைக்குள் வந்ததற்கு ஒரு காரணமென மூப்பர்களிடம் சொன்னாள். அவள் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்த சமயத்தில் அவளுடைய அண்ணன் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்து, அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். இதுவே சபைக்குள் திரும்பி வர அவளைத் தூண்டியது.
19 அப்படியென்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் அபூரணராக இருப்பதால் சில சமயங்களில் இது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், யெகோவா என்ன சொன்னாலும் அது எப்போதுமே நம்முடைய நல்லதுக்குத்தான் என்பதை நாம் உறுதியாய் நம்ப வேண்டும்.
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது”
20. எபிரெயர் 4:12-ஐ எந்த இரண்டு விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம்? (அடிக்குறிப்பைக் காண்க.)
20 “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது” என்று பவுல் எழுதியபோது அவர் பைபிளைப் பற்றிக் குறிப்பிடவில்லை.c (எபி. 4:12) அந்த அதிகாரத்திலுள்ள மற்ற வசனங்கள், அவர் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றிக் குறிப்பிட்டதைக் காட்டுகின்றன. கடவுளுடைய வாக்குறுதிகள் எப்போதும் நிறைவேற்றமடைவதைப் பற்றி அவர் சொன்னார். கடவுள் தம்முடைய வாக்குறுதிகளைக் குறித்து, “அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” என்று சொன்னார். (ஏசா. 55:11) எனவே, நாம் எதிர்பார்க்கிற வேளையில் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால்கூட பொறுமையாய் இருக்க வேண்டும். என்றாலும், யெகோவா தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டிருக்கிறார் என நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.—யோவா. 5:17.
21. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய எபிரெயர் 4:12 எப்படி வயதானவர்களுக்கு உதவுகிறது?
21 ‘திரள் கூட்டமான மக்களில்’ அநேகர் பல வருடங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். (வெளி. 7:9) தங்களுக்கு வயதாவதற்கு முன்பே புதிய உலகம் வந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்தார்கள். அது நடக்காதபோதிலும், தங்களால் முடிந்தளவு சிறப்பாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். (சங். 92:15) கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது என்பதையும் அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பூமிக்கும் மனிதருக்குமான தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையானவற்றை அவர் செய்து வருகிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர் தம்முடைய நோக்கத்தை மிக முக்கியமானதாகக் கருதுவது போலவே நாமும் கருதுகிறோம் என்பதைச் செயலில் காட்டும்போது அவர் சந்தோஷப்படுகிறார். இந்த ஏழாம் நாளான ஓய்வு நாளில், அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பதை யாரும், எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. ஒரு தொகுதியாகத் தம்முடைய மக்கள் தம்முடைய நோக்கத்திற்கு இசைவாகத் தொடர்ந்து நடப்பார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவ்வாறு நடக்கிறீர்களா? கடவுளோடு சேர்ந்து நீங்களும் ஓய்வை அனுபவிக்கிறீர்களா?
[அடிக்குறிப்புகள்]
a அநேக யூத மதத் தலைவர்கள் திருச்சட்ட முறைமைகள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கடைப்பிடிக்க முயன்றார்கள். ஆனால், இயேசு இந்தப் பூமிக்கு வந்தபோது, அவரை மேசியாவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு, கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டார்கள்.
c இன்று கடவுள் பைபிள் வாயிலாக நம்மிடம் பேசுகிறார். நம்முடைய வாழ்க்கையை அடியோடு மாற்றும் வல்லமை பைபிளுக்கு இருக்கிறது. எனவே, எபிரெயர் 4:12-ல் சொல்லப்பட்டது, பைபிளைப் பொறுத்ததிலும் உண்மையாகத்தான் இருக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இன்று கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
• கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை பைபிளிலிருந்து புரிந்துகொள்ளும்போது, நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்புவதை எப்படிக் காட்டுகிறோம்?
• யெகோவா நம்மிடம் சொல்வதைச் செய்வது எந்தச் சூழ்நிலைகளில் கஷ்டமாக இருக்கலாம், ஆனாலும் அவருக்குக் கீழ்ப்படிவது ஏன் மிக முக்கியம்?
• எபிரெயர் 4:12-ஐ எந்த இரண்டு விதங்களில் நாம் புரிந்துகொள்ளலாம்?
[பக்கம் 31-ன் படம்]
பெற்றோர் வேதனையில் துடிக்கிறார்கள்!