‘எறும்பினிடம் போ’
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தைக் கற்றுக்கொள்,” என்று எழுதினான் சாலொமோன் அரசன். ஒரு சோம்பேறி—அல்லது எந்த ஒரு நபரும்—ஓர் எறும்பினிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? சாலொமோன் தொடருகிறான்: “அதற்குப் பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.”—நீதிமொழிகள் 6:6–8.
அந்த ஞானி அரசன் அறுவடை எறும்பைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான் என்பது தெளிவாகிறது. மற்ற அநேக இடங்களில் இருப்பது போன்று இஸ்ரவேலிலும் அறுவடை எறும்பு குறுநடை ஓட்டத்தில் ஏறக்குறைய தன் அளவான விதையைச் சுமந்து செல்லும் காட்சி சர்வசாதாரணம். (மேல் இடது பக்கம் பார்க்கவும்.) சேர்க்கப்பட்ட உணவை நிலத்தடி சேமிப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்கிறது.
நிலத்தடியில் இருப்பதால் அந்தக் “களஞ்சியம்” மழைக் காலத்தில் ஈரமடைந்துவிடலாம், மற்றும் கவனிக்கப்படாவிட்டால் எல்லா விதைகளும் முளைக்க அல்லது பூசாணம் பூத்திட ஆரம்பிக்கக்கூடும். எனவே எறும்புகளுக்குச் செய்வதற்குக் கூடுதல் வேலை இருக்கிறது. சூரியன் உதயமானவுடனேயே அந்த எறும்புகளின் வேலை, விதைகளை காற்றில் உலரச் செய்வதற்கு அவற்றை மேலே தரைக்குக் கொண்டுவருவதாகும். (மேலே பாருங்கள்.) சூரியன் மறைவதற்கு முன்பு, அந்த எறும்புகள் எல்லா விதைகளையும் திரும்ப உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும். சில எறும்புகள் விதைகள் சேர்க்கப்பட்ட உடனேயே அல்லது அவை முளைக்க ஆரம்பிக்கையிலேயே வளரும் முனையைக் கடித்துவிடுமளவுக்கு யோசனையோடு செயல்படுகின்றன.
எறும்பின் வேலை உணவைத் தயாரிப்பதோடு முடிந்துவிடுவதில்லை. தங்களுடைய சிறுவரைக் கவனிக்கும் அனுதின உத்தரவாதமும் இருக்கிறது. முட்டைகள் அடக்கமான மூட்டைகளில் வைக்கப்படவேண்டும். பொறித்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுவுக்கு உணவளிக்க வேண்டும். முட்டைப்புழுக்கூட்டை பராமரிக்க வேண்டும். சில எறும்புகள் குளிர் சாதனம் சம்பந்தப்பட்ட சேவையையும் அளிக்கின்றன. பகல் நேரத்தில் அதிக உஷ்ணமாகும்போது, அவை அந்தக் கூட்டைத் தங்கள் புற்றின் ஆழத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மாலைப் பொழுதின் வெப்பம் தணியும்போது, கூட்டைத் திரும்பவும் மேலே கொண்டுவருகின்றன. ஏராளமான வேலை, அல்லவா?
அவற்றின் கூட்டம் பெருகிடும்போது, புதிய அறைகள் கட்டப்பட வேண்டும். பணிவிடை எறும்புகள் புற்றை அமைக்கவும், மண்ணை வெளியே கொண்டுவரவும் தங்களுடைய பலமான தாடைகளைப் பயன்படுத்துகின்றன. இதைப் பொதுவாக அவை மழைக்குப் பின்னர் செய்கின்றன, அப்பொழுது மண் மிருதுவாக இருக்கும். தங்களுடைய பொறியியல் கட்டிடத் திட்டத்திற்காக—அவற்றின் சுவர்களுக்கும், நிலத்தடி குகைகளுக்கும் அறைகளுக்கும் தளம் போடுவதற்கும் மண்ணை “செங்கல்களாகவும்” அறுத்துக்கொள்கின்றன.
இவற்றை எல்லாம் அந்த எறும்புகள் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் செய்கின்றன. ராணியைப் பற்றியது என்ன? அவள் எவ்வித கட்டளையும் கொடுப்பதில்லை. அவள் முட்டைகள் மட்டுமே இடுகிறாள், அந்தக் குடியேற்றத்துக்கு அவள் தாயாக இருக்கும் கருத்தில் அவள் ராணியாக இருக்கிறாள். (மேலே பார்க்கவும்.) அவர்களை மேற்பார்வையிட அல்லது விரட்டிட எந்த ஒரு மேற்பார்வையாளரும் இல்லாமலேயே எறும்புகள் தங்கள் வேலையில் இடைவிடாமல் தரித்திருக்கின்றன. ஓர் எறும்பு காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை வேலை செய்துகொண்டிருந்தது கவனிக்கப்பட்டது!
எறும்பைக் கவனிப்பதிலிருந்து நீங்கள் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளக்கூடுமா? நீங்கள் கண்காணிக்கப்பட்டாலும்சரி, அல்லது இல்லாவிட்டாலுஞ்சரி, நீங்கள் கடினமாக வேலை செய்கிறவர்களாகவும், அதில் முன்னேறுவதற்கு உழைக்கிறவர்களாகவும் இருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 22:29) உங்களுடைய முதலாளி கவனியாமற்போனாலும், உங்களுக்கு காலப்போக்கில் அதற்குரிய பலன் கிடைக்கும். ஒரு சுத்தமான மனச்சாட்சியையும் தனிப்பட்ட திருப்தியையும் அனுபவித்து மகிழலாம். சாலொமோன் குறிப்பிட்ட விதமாகவே: “வேலை செய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்.”—பிரசங்கி 5:12.
எறும்பினிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு இருப்பது அதுமட்டுமல்ல. எறும்புகள் உள்ளுணர்வினால் கடினமாக உழைக்கின்றன. உண்மை என்னவெனில், சில எறும்புகள் தங்களுக்குப் பின் விட்டுச் சென்ற பாதையில் அப்படியே குருட்டுத்தனமாகப் பின்செல்கின்றன. அவை கடைசியில் வட்டமிட ஆரம்பித்து, சுற்றி சுற்றி வந்து விழுந்து மரித்துவிடுகின்றன.
நீங்களுங்கூட சுற்றி சுற்றி வருவதை, எப்பொழுது பார்த்தாலும் அதிக வேலையாக, சோர்வுற்று, ஆனால் எதையும் சாதிக்காதவர்களாக இருப்பதாக சில சமயங்களில் உணருகிறீர்களா? அப்படியென்றால், உங்களுடைய கடின உழைப்பின் நோக்கத்தை ஆராய்ந்து பார்த்து, உங்களுடைய இலக்குகளின் உண்மையான மதிப்பை கணிப்பதற்கான சமயம் இதுவே. சாலொமோனின் ஞானமான ஆலோசனையை நினைவுபடுத்துங்கள்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13. (g90 6/8)