நல்ல பேரை வாங்க வேண்டும்
ஒரு கட்டிடக் கலைஞர், கலை நுட்பத்துடன் ஓர் அழகிய வீட்டை வடிவமைத்து கொடுக்கும்போது, ‘அவர் நல்ல கட்டிட கலைஞர்’ என பெயரெடுக்கிறார். பள்ளியில் படிக்கும் பெண் நன்கு படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கும்போது அவள் புத்திசாலிப் பெண் என பெயரெடுக்கிறாள். எந்த வேலையும் செய்யாமல் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் மனிதனும்தான் ஒரு பெயரை எடுக்கிறார்; அப்படிப்பட்ட மனிதருக்கு கொடுக்கப்படும் பெயர் ‘சோம்பேறி.’ சமுதாயத்திலுள்ள ஒருவர் கெட்ட பெயரை அல்ல ஆனால் நல்ல பெயர் சம்பாதிப்பது மிக மிக முக்கியம். இதைப் பற்றி பைபிள் சொல்வதை கவனியுங்கள்: “திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.”—நீதிமொழிகள் 22:1, பொ.மொ.
ஒருவர் நற்பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சாமானிய விஷயமல்ல. நல்ல காரியங்களை தொடர்ந்து செய்யும்போதே அதைப் பெறுகிறார். ஆனால் இவ்வாறு கஷ்டப்பட்டு வாங்கிய நற்பெயரை சின்னாபின்னமாக்க ஒரேயொரு முட்டாள்தனமான செயல் போதும். உதாரணத்திற்கு, ஒருவர் ஒருமுறை ஒழுக்க விஷயத்தில் தவறிவிட்டார் என வைத்துக்கொள்ளுங்கள், அவர் அதுவரை பெற்ற நற்பெயரெல்லாம் வெயிலில் கரைந்த பனித்துளியாய் கரைந்துவிடும். இவ்வாறு நம் நற்பெயர் கெட வேண்டும் என நாம் யாருமே விரும்புவதில்லை. இப்படி நடக்காமலிருக்க பைபிள் நமக்கு அருமையான புத்திமதிகளை அளிக்கிறது. நம்முடைய சில எண்ணங்கள் அல்லது செயல்கள் நம் நற்பெயரை கெடுத்து, யெகோவாவுடன் நாம் கொண்டுள்ள உறவையும் பாதிக்கும். அப்படிப்பட்டவற்றைக் குறித்து பண்டைய இஸ்ரவேலின் அரசரான சாலொமோன், நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகத்தின் 6-வது அதிகாரத்தில் எச்சரிக்கிறார். யோசிக்காமல் மற்றவர்களுக்கு சத்தியம் செய்வது அல்லது வாக்கு கொடுப்பது, சோம்பேறியாய் இருப்பது, மற்றவர்களை ஏமாற்றுவது, தவறான நடத்தையில் ஈடுபடுவது போன்றவை அதில் அடங்கும். இவை எல்லாமே, யெகோவா வெறுக்கும் குணங்களாகும். அதனால் சாலொமோன் கொடுக்கும் அறிவுரைகளுக்கு கவனம் செலுத்துவது நம் நற்பெயரை காத்துக்கொள்ள உதவும்.
யோசனையின்றி வாக்கு கொடாதீர்கள்
நீதிமொழிகள் 6-ம் அதிகாரத்தை சாலொமோன் அறிவுரைகளுடன் துவங்குகிறார், “பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால், அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால், பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்: நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.”—நீதிமொழிகள் 6:1-3, பொ.மொ.
இந்த வசனங்களில் அவர் சொல்ல வரும் கருத்து என்ன? மற்றவர்களுடன் வியாபாரம் செய்யும் விஷயத்தில், முக்கியமாக அவ்வளவு பழக்கமில்லாத நபருடன் வியாபாரம் செய்யும்போது ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரிக்கிறார். ஏன்? பண்டைய இஸ்ரவேலர்கள் காலத்தில் யாராவது ‘ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவும்படி’ இஸ்ரவேலர் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர். (லேவியர் [லேவியராகமம்] 25:35-38, பொ.மொ.) ஆனால் சில இஸ்ரவேலர்கள், அதிக லாபம் கிடைக்கும் என நினைத்த வியாபாரங்களில் குருட்டாம்போக்கில் கால்வைத்தனர். அத்துடன் இருந்திருந்தால் பரவாயில்லை, மற்றவர்களை பிணையமாக அல்லது உத்தரவாதியாக இருக்கும்படி சம்மதிக்க வைத்து, அதிக பணம் கடன் வாங்கினர். இதனால் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வாங்கிய கடனுக்கு அந்த உத்தரவாதி பொறுப்பாளியாகிறார். அன்று மட்டுமல்ல, இந்நிலை இன்று உங்களையும் தாக்கலாம். உதாரணத்திற்கு, ஒருவர் வங்கியிடமோ அல்லது கடனுதவி அளிக்கும் ஸ்தாபனத்திடமோ கடன் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். ஆனால் அந்த நிறுவனமோ இவருக்கு கடன் கொடுக்க உத்தரவாதியாக ஒருவரை கேட்கிறது. அந்த நபர் உத்தரவாதத்துக்காக உங்களை அணுகுகிறார், இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படிப்பட்ட நிலையில் யோசிக்காமல் அல்லது காரியங்களை ஆராய்ந்து பார்க்காமல் உடனே அந்த நபருக்காக உத்தரவாதம் கொடுத்துவிடுவீர்களா? அப்படி செய்வது எவ்வளவு ஆபத்தான காரியம், ஞானமற்றதும்கூட! இப்படிப்பட்ட செயல் ஒருவேளை நம்மையே பண நெருக்கடியில் மாட்டிவிட்டுவிடும், அத்துடன் அந்த வங்கி மற்றும் கடன் கொடுப்பவர்களிடம் நம்முடைய நற்பெயரையும் கெடுத்துவிடும்.
ஒருவேளை நல்லது என நினைத்து ஒரு காரியத்தை செய்துவிட்டு, பின்னர் தீர ஆராய்ந்த போதோ அது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை உணரும்போது என்ன செய்வது? பெருமை என்ற குணத்தையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு “விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்”ள வேண்டும். பிரச்சினையை சரிசெய்ய நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை உடனே செய்ய வேண்டும். ‘உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ எந்த ஆபத்தும் வராதபடி அந்த நபருடன் முன்பே பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சிறு சந்தேகம் இருந்தாலும்கூட அதை தெளிவாக பேசி முடிவெடுங்கள்’ என்கிறது ஓர் புத்தகம். அதுவும் நாம் இதை தாமதமின்றி உடனே செய்ய வேண்டும். இதைத்தான் சாலொமோன் ராஜாவும் சொல்கிறார்: “அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே. நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.” (நீதிமொழிகள் 6:4, 5, பொ.மொ.) ஆனால், இப்படி வீணாக பிரச்சினையில் மாட்டிக்கொண்டு பின்பு முழிப்பதைவிட, அவ்வாறு வாக்கு கொடுக்காமல் இருந்துவிடுவதே ஞானமான காரியம் அல்லவா!
எறும்பின் மாணாக்கராகுங்கள்
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்,” என்கிறார் சாலொமோன். அவ்வளவு சிறிய எறும்பினிடமிருந்து நாம் எவ்வாறு ஞானத்தைக் கற்றுக்கொள்ள முடியும்? இதற்கும் அந்த அரசரே பதிலளிக்கிறார்: “அதற்குப் பிரபுவும் தலைவனும் அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.”—நீதிமொழிகள் 6:6-8.
எறும்புகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால் நாம் அசந்துபோவோம். அவற்றுள் இருக்கும் ஒற்றுமை அற்புதம்! ‘எதிர்காலத்திற்காக இப்போதே உணவை சேர்த்து வை’ என யாரும் அந்த எறும்புகளுக்கு சொல்வதில்லை, தானாகவே அவ்வாறு செய்கின்றன. இதைச் செய், அதைச் செய் என்று சொல்வதற்கு ‘பிரபுவோ, தலைவனோ, அதிகாரியோ இல்லை.’ எறும்புகளின் குடும்பத்தில் ராணி எறும்புகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை முட்டையிடுவதாலும், அந்த குடும்பத்திற்கு தாயாக இருப்பதாலும்தான் ராணி என அழைக்கப்படுகின்றன. அவை எதற்கும் அதிகாரி அல்ல, இதைச் செய், அதைச் செய் என யாருக்கும் சொல்வது கிடையாது. ஆக அவற்றுக்கு எந்த அதிகாரியோ சூப்பர்வைசரோ இல்லாதபோதிலும், அவை தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டே இருக்கின்றன; அவை சோர்வடைந்து ஓரமாக உட்கார்ந்துவிடுவதே இல்லை.
எறும்பைப்போல நாமும் நம் வேலையில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டாமா? மற்றவர்கள் பார்த்தாலும்சரி பார்க்காவிட்டாலும்சரி கடுமையாக உழைத்து, முன்னேறுவது நல்லது. பள்ளியிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, கடவுளுடைய சேவையிலும் சரி, நாம் கடுமையாக உழைக்க வேண்டும். எறும்பு தன் கடும் உழைப்பால் அநேக நல்ல பலன்களை பெறுகிறது, அதேபோல நாமும், “படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே” நம் கடவுளின் விருப்பம். (பிரசங்கி 3:13, 22; 5:18) அவ்வாறு கடுமையாக உழைப்பதனால் வரும் பலன்கள், சுத்தமான மனசாட்சியும் மனதிருப்தியுமே.—பிரசங்கி 5:12.
சோம்பேறிகளை எழுப்பி அவர்களது நிலையை உணர்த்துவதற்கு, சிந்திக்க வைக்கும் இரண்டு ஆழமான கேள்விகளை சாலொமோன் ராஜா கேட்கிறார்: “சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” பின்னர், “இன்னுங்கொஞ்சம் தூக்கம், இன்னும் சிறிது நித்திரை, இன்னும் கைமுடக்கிச் சிறிது உறக்கம் என்பாயோ?” என கேட்டுவிட்டு, “தரித்திரம் வழிபறிப்பவன்போல் வரும், வறுமை ஆயுதமணிந்தவன்போல் வரும்” என்கிறார். (நீதிமொழிகள் 6:9-11, தி.மொ.) சோம்பேறி எந்த வேலையும் செய்யாமல் சாவகாசமாக உட்கார்ந்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தால், தரித்திரமும் வறுமையும் வழிபறிப்பவனைப் போலவும் ஆயுதமணிந்தவனைப் போலவும் திடீரென அவனை தாக்கும். அதேபோல சோம்பலாயிருக்கும் விவசாயியின் நிலத்தில் முற்களும் தேவையற்ற செடிகளும்தான் முளைக்கும். (நீதிமொழிகள் 24:30, 31) சோம்பேறியின் வியாபாரம் சீக்கிரத்திலேயே நஷ்டத்தை தழுவும். கம்பெனியில் வேலை செய்பவர் சோம்பேறியாக இருந்தால், அவருடைய முதலாளி எவ்வளவு நாள்தான் பொறுத்திருப்பார்? சீக்கிரமே வேலையிலிருந்து நீக்கி விடுவார். அதேபோல ஒரு மாணவி சோம்பேறியாக இருந்தால், அவள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறமுடியுமா, அவள் புத்திசாலிப் பெண்ணாகத்தான் இருப்பாளா?
நேர்மையாக இருங்கள்
சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் இருக்கலாம், அவருக்கு யெகோவாவுடனும் நெருங்கிய உறவு இருக்கலாம், ஆனால் இவ்விரண்டையுமே பாதிக்கும் ஒரு குணத்தைக் குறித்து சாலொமோன் எச்சரிக்கிறார்: “போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான். அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான். அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.”—நீதிமொழிகள் 6:12-14, பொ.மொ.
இவை ஒரு ஏமாற்றுக்காரனை வர்ணிக்கும் வார்த்தைகள். பொதுவாகவே பொய்யன் தன் பொய்யை எப்போதும் மறைக்கவே முயற்சிப்பான். எப்படி? வெறுமென ‘தாறுமாறாகப் பேசுவதால்’ மட்டுமல்ல, ஆனால் தன் அங்க அசைவுகளாலும் மறைக்க முயற்சிப்பான். “ஒருவரை ஏமாற்றுவதற்கு பயன்படுத்துபவற்றுள், சைகை, குரல் தொனி, முகபாவம் போன்றவையும் உள்ளடங்கும். நேர்மையாக அல்லது உத்தமமாக தோற்றமளிக்கும் ஒரு நபருக்குள் தந்திரமான எண்ணங்களும், கலகத்தனமும் குடிகொண்டிருக்கலாம்,” என்கிறார் ஓர் அறிஞர். அப்படிப்பட்ட மனிதன் மனதில் எப்போதும் தந்திரமான திட்டங்களையே தீட்டுகிறான், எப்போதும் கலகம் பண்ணுகிறான். ஆனால் இதன் விளைவாக அவனுக்கு என்ன நடக்கும்?
அவனுக்கு நடக்கப்போவதை சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார்: “சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.” (நீதிமொழிகள் 6:15) அந்தப் பொய்யனுடைய குட்டு வெளிப்படும்போது, அவன் மேல் மற்றவர்கள் வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் எல்லாம் அந்த விநாடியே கெட்டுப்போகும். அதற்கு பிறகு யார் அவனை நம்புவார்கள்? கடைசியில் அவனுக்கு வரப்போகும் பலன் பயங்கரமானது, ஏனென்றால், நித்திய அழிவை பெறப்போகும் ஆட்களின் பட்டியலில் ‘பொய்யரும்’ இடம் பெற்றுள்ளனர். (வெளிப்படுத்துதல் 21:8) அதனால் நாம் “அனைத்திலும் நன்னடத்தை உடையவர்களாய்” இருப்போமாக.—எபிரேயர் 13:18, பொ.மொ.
யெகோவா வெறுப்பதை வெறுத்திடுங்கள்
தீமையை வெறுத்திடுங்கள்! நம் நற்பெயரை கெடுக்கும் செயல் எதையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்தும் சக்திவாய்ந்த வார்த்தைகள் அல்லவா இவை. அந்த வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் கெட்டவைகளை வெறுத்து ஒதுக்க வேண்டாமா? ஆனால் நாம் எதை வெறுக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். சாலொமோன் இதற்கு பதிலளிக்கிறார்: “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.”—நீதிமொழிகள் 6:16-19.
நீதிமொழிகள் குறிப்பிடும் இந்த ஏழு தவறான செயல்களும் பொதுவாக எல்லாவித தவறுகளையும் உட்படுத்தும். ஏனென்றால் எல்லா தீமைக்கும் இவைதான் அடிப்படை. “மேட்டிமையான கண்” மற்றும் “துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்” மனதளவில் செய்யப்படும் பாவங்களாகும். “பொய்நாவு” மற்றும் “அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி” வார்த்தையால் செய்யும் பாவங்கள். “குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை” மற்றும் “தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்” கொடூரமான செயல்கள். யெகோவா வெறுக்கும் மற்றொரு முக்கியமான தீமையும் இருக்கிறது. ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பவர்கள் மத்தியில் கலகம் மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை, அதில் சந்தோஷப்படுபவர்களையே யெகோவா அடியோடு வெறுக்கிறார். அந்த வசனங்களில் முதலில் ஆறு குணம் என்று சொல்லிவிட்டு பிறகு ஏழு என அதிகரிப்பது அந்த பட்டியல் முடிந்துவிடவில்லை என்பதை குறிக்கிறது. ஏனென்றால், மனிதரின் பாவங்கள் அல்லது தீய செயல்கள் கூடிக்கொண்டேதான் போகின்றன.
யெகோவா வெறுப்பவற்றை நாமும் அருவருப்பாக கருதவேண்டும். உதாரணத்திற்கு, நாம் “மேட்டிமையான கண்” அல்லது அதுபோன்ற மற்றெந்த பெருமையான குணத்தையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அத்துடன் தீங்கான புறங்கூறுதல்களையும் நாம் தவிர்க்க வேண்டும்; ஏனென்றால் அவை எளிதில் “சகோதரருக்குள்ளே விரோதத்தை” உண்டுபண்ணக்கூடும். மற்றவர்களைப் பற்றி கேள்விப்பட்ட தவறான விஷயத்தை எல்லோரிடமும் பரப்புவது, காரணமின்றி குறை சொல்வது, பொய் சொல்லுவது போன்றவற்றையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை தவிர்க்கவில்லை என்றால், ‘குற்றமற்றவர்களுடைய இரத்தத்தை சிந்தமாட்டோம்’ என்பது உண்மைதான், ஆனால் நிச்சயமாகவே இப்படிப்பட்ட செயல்கள் மற்றவர்களின் நற்பெயரை நாசமாக்கிவிடும்.
“அவளது அழகை இச்சியாதே”
இப்போது சாலொமோன் மற்றொரு முக்கியமான விஷயத்தைக் குறித்து அறிவுரை கொடுக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள்: “என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.” இவ்வாறு அவர் சொல்வதற்கான காரணம் என்ன? “நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும் போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.”—நீதிமொழிகள் 6:20-22.
வேதாகமம் சொல்லும் விதத்தில் பிள்ளைகள் வளர்ப்பது அல்லது பயிற்றுவிப்பது பாலின ஒழுக்கக்கேட்டிலிருந்து அவர்களை பாதுகாக்குமா? ஆம், நிச்சயம் பாதுகாக்கும். ஏனென்றால், “கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்” என வேதமே உறுதியளிக்கிறது. (நீதிமொழிகள் 6:23, 24) கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அறிவுரைகளை நாம் நம் நினைவில் வைத்து, ‘அவற்றை நம் கால்களுக்கு தீபமாகவும், பாதைக்கு வெளிச்சமாகவும் கொண்டிருந்தால்,’ நன்மைகள் நமக்கே. ஒரு மோசமான பெண்ணோ அல்லது ஆணோ நம்மை தவறான நடத்தையில் ஈடுபட இனிக்க இனிக்க அழைத்தாலும் அதை நாம் உஷாராக கண்டறிந்து மறுத்துவிட இது உதவும்.—சங்கீதம் 119:105.
இதைப் பற்றி அந்த ஞானமான ராஜா கொடுக்கும் அறிவுரையை கவனியுங்கள்: “உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.” காரணம்? “விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடிவிடுவாள்.”—நீதிமொழிகள் 6:25, 26, பொ.மொ.
தவறான நடத்தையில் ஈடுபடும் ஒரு மனைவியை வேசி என சாலொமோன் குறிப்பிட்டாரா? ஆம், அப்படியும் சொல்லலாம். ஒரு வேசியுடன் தவறான நடத்தையில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகளையும், பிறனுடைய மனைவியுடன் தவறான நடத்தையில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகளையும் வித்தியாசப்படுத்தி, அவற்றை தெளிவாக விளக்குவதாகவும் சொல்லலாம். வேசியுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பவன் அல்லது அவளுடன் தவறான நடத்தையில் ஈடுபடுபவன் பரிதாபமான நிலையை அடைவான் என பைபிள் சொல்கிறது. அவன் “ஒரு வேளைச் சோறு”க்கு திண்டாடும் நிலை ஏற்படும். அத்துடன், பாலுறவால் கடத்தப்படும் கொடிய வியாதிகளுக்கு இரையாகலாம்; எய்ட்ஸ் போன்ற மரணத்திற்கு வழிநடத்தும் வியாதிகளும் அதில் உட்படும். மறுபட்சத்தில், இன்னொருவருடைய மனைவியுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பவனுடைய நிலை இன்னும் மோசமாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின்படி உடனே தண்டனை பெறுவான். அவ்வாறு தவறான நடத்தையில் ஈடுபடும் அந்த மனைவி, அவனுடைய மதிப்புமிக்க “உயிரை” வேட்டையாடுகிறாள். “ஊதாரித்தனமாக வாழ்ந்து வாழ்நாளை குறைத்துக் கொள்வதைவிட மோசமானது . . . இன்னொருவனின் துணையை இச்சிப்பது,” என ஒரு புத்தகம் சொல்கிறது. “இந்த பாவத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்,” என பைபிள் சொல்கிறது. (லேவியராகமம் 20:10; உபாகமம் 22:22) ஆக, இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக புலப்படுகிறது, அப்படிப்பட்ட பெண் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும்சரி, அவளை இச்சிக்கக்கூடாது.
உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போடாதீர்கள்
இப்படிப்பட்ட தவறு எவ்வளவு ஆபத்தானது என்பதை கூடுதலாக வலியுறுத்த, சாலொமோன் இவ்வாறு கேட்கிறார்: “ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா? ஒருவன் தழல்மீது நடந்து சென்றால் அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?” இதற்கான விளக்கத்தை அவர் தொடர்ந்து சொல்கிறார்: “பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.” (நீதிமொழிகள் 6:27-29, பொ.மொ.) இப்படிப்பட்ட பாவி நிச்சயம் தண்டிக்கப்படுவான்.
அவர் மற்றொரு உதாரணத்தை கொடுக்கிறார், “திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங் குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம். ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.” (நீதிமொழிகள் 6:30, 31, பொ.மொ.) பண்டைய காலத்து இஸ்ரவேலில், ஒரு திருடன் பிடிபட்டால், அவன் சொத்து முழுவதும் அழிந்து, நடுத்தெருவுக்கு வந்தாலும்சரி அவன் திருடியதற்கான அபராதத்தை கட்டியே ஆகவேண்டும்.a அப்படியானால் அவனைவிட பெரிய குற்றவாளியாகிய ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடும் மனிதனுக்கு எப்படிப்பட்ட தண்டனை கொடுக்கப்பட வேண்டும்! அவனுடைய பாவத்தை நியாயப்படுத்த அவனால் எந்த சாக்குப்போக்கையும் சொல்ல முடியாது.
“ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்” என்கிறார் சாலொமோன். அப்படிப்பட்ட மதிகேடனுக்கு, சரியான பகுத்துணர்வு இருக்காது, இதனால் அவன் ‘தன்னையே அழித்துக்கொள்கிறான்.’ (நீதிமொழிகள் 6:32) ஒருவேளை, வெளியே பார்ப்பதற்கு நல்லவன் போல, அல்லது நற்பெயர் பெற்றவன் போல தோன்றலாம், ஆனால் அவனுக்குள் மறைந்திருக்கும் உள்ளான ஆள் கொடியவனாக இருக்கிறான். முதிர்ச்சியற்ற நிலையிலேயே இருக்கிறான்.
அப்படிப்பட்ட கொடியவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அநேகம் அநேகம். அதைப் பற்றி பைபிளே சொல்கிறது: “அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது. ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்ட மாட்டான்; சரியீடு எதுவும் ஏற்றுக்கொள்ள மாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.”—நீதிமொழிகள் 6:33-35, பொ.மொ.
திருடனாவது, தான் என்ன திருடினானோ அதற்கு அபராதத்தை கட்டிவிட்டு தப்பித்துவிடலாம், ஆனால் ஒழுக்கத்தில் தவறியவன் எதைக் கொடுத்து சரிகட்டுவான்? அந்தப் பெண்ணின் கணவனுக்கு இது தெரியவரும்போது அவன் கொதித்தெழுவான், கோபத்தில் வெறி பிடித்து அலைவான், அப்போது இவன் என்ன செய்வான்? தப்பு செய்த இவன், அந்த கணவனின் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடினால்கூட அவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. அவன் செய்த பாவத்திற்கு எதைச் செய்தும் ஈடுகட்ட முடியாது. அவன் மேல் கெட்ட பெயரும், அவமதிப்பும் கூடிக்கொண்டுதான் போகும். அத்துடன், அவனுக்கு கிடைக்கப்போகும் தண்டனையிலிருந்து அவனால் எந்த விதத்திலும் தப்பிக்கவோ, தன்னை மீட்டுக்கொள்ளவோ முடியாது.
பாலின ஒழுக்கக்கேடு போன்ற நடத்தை, நம் நற்பெயரை கெடுத்துவிடுவது மட்டுமல்லாமல், கடவுளுக்கும் அவதூறை கொண்டுவரும். அப்படிப்பட்ட நடத்தை மற்றும் எண்ணத்தை விட்டு நாம் விலகி ஓட வேண்டும். இப்படிப்பட்ட தவறுகளை செய்யாமலிருப்பது எவ்வளவு ஞானமான காரியம்! அதனால், நாம் மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்போமாக; யோசனையின்றி யாருக்கும் வாக்கு கொடாமலிருப்போமாக. கடுமையான உழைப்பும், நேர்மையும் நம் நற்பெயரை ஜொலிக்கச் செய்யட்டும். யெகோவா வெறுக்கும் விஷயங்களை நாமும் வெறுக்க கடுமையாக முயற்சி செய்து, யெகோவாவிடமும் உடன் மனிதர்களிடமும் நல்ல பேரை வாங்குவோமாக.
[அடிக்குறிப்பு]
a நியாயப்பிரமாண சட்டப்படி ஒரு திருடன் அவன் திருடியதைப் போல இரு மடங்கு, ஏன், நான்கு, ஐந்து மடங்குகூட அபராதமாக கட்டவேண்டியிருக்கும். (யாத்திராகமம் 22:1-4) இங்கு “ஏழு மடங்கு” என சொல்லப்படுவது, முழுமையான அபராதத்தை குறிக்கிறது. அது ஒருவேளை அவன் திருடியதைப் போல பல மடங்காகவும் இருக்கலாம்.
[பக்கம் 25-ன் படம்]
கடன் வாங்குபவருக்கு கியாரண்டி கொடுப்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்
[பக்கம் 26-ன் படம்]
எறும்பைப் போல கடுமையாக உழையுங்கள்
[பக்கம் 27-ன் படம்]
மற்றவர்களை பாதிக்கும் வீண் பேச்சுகளை தவிர்த்திடுங்கள்