‘என் கட்டளைகளைக் காத்துக்கொண்டு பிழைத்திரு’
அந்த வாலிபனிடம் அறிவுமிருந்தது, அழகுமிருந்தது. அவன் “அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.” அவனுடைய எஜமானனின் மனைவியோ காமவெறிப்பிடித்தவள், எதற்கும் துணிந்தவள். அந்த இளம் மனிதனை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தோடு தினமும் அவனை தன் மாய வலையில் சிக்க வைக்க முயன்றுவந்தாள். “இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை; அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள்.” ஆனால் கோத்திர தகப்பன் யாக்கோபின் மகன் யோசேப்பு போத்திபாரின் மனைவியிடம் தன் வஸ்திரத்தை விட்டுவிட்டு ஓடிப்போனான்.—ஆதியாகமம் 39:1-12.
உண்மைதான், தவறு செய்யத் தூண்டும் ஒரு நிலைமையில் இருக்கையில் எல்லாரும் அந்த இடத்தைவிட்டு ஓடிவிடுவது கிடையாது. பண்டைய இஸ்ரவேலில் சாலொமோன் அரசன் இரவு நேரத்தில் வீதியில் கண்ட ஒரு வாலிபனின் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வக்கிரபுத்தியுள்ள ஒரு பெண், இவனிடம் ஆசை வார்த்தைகளைப் பேசியபோது அவன் ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல உடனடியாக அவள் பின்னே சென்றான்.’—நீதிமொழிகள் 7:21, 22, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.
“வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்பது கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரை. (1 கொரிந்தியர் 6:18) இளம் கிறிஸ்தவ சீஷனாகிய தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு.” (2 தீமோத்தேயு 2:22) விபசாரம், வேசித்தனம், அல்லது ஒழுக்கங்கெட்ட வேறு தவறுகள் நிகழலாம் என்று தோன்றும் நிலைமைகளில், போத்திபாரின் மனைவியிடமிருந்து யோசேப்பு ஓடிய விதமாக நாமும்கூட சற்றும் தயங்காமல் உடனடியாக அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடிக்க வேண்டும். அதைச் செய்வதற்கு திடதீர்மானமாக இருக்க நமக்கு எது உதவி செய்யும்? பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள், 7-ஆம் அதிகாரத்தில் சாலொமோன் நமக்கு மிகவும் அருமையான ஆலோசனைகளைத் தருகிறார். ஒழுக்கமற்ற ஆட்களின் தந்திரங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் போதனைகளை கொடுக்கிறார், அதோடு வக்கிரபுத்தியுள்ள ஒரு பெண்ணின் மாய வலையில் வீழ்ந்துவிடும் ஒரு வாலிபனுக்கு நடக்கும் அந்தக் காட்சியை அவர் விலாவாரியாக விளக்கி அவர்கள் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறார்.
‘என் கட்டளைகளை உன் விரல்களில் கட்டிக்கொள்’
ராஜா ஒரு தகப்பனைப் போல புத்திமதி சொல்ல ஆரம்பிக்கிறார்: “என் மகனே, என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து; என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.”—நீதிமொழிகள் 7:1, 2.
கடவுளுடைய பார்வையில் எது சரி, எது தவறு என்பதை தன் பிள்ளைகளுக்குப் போதிக்கும் பொறுப்பை பெற்றோரிடம், குறிப்பாக தந்தையிடம் கடவுள் கொடுத்திருக்கிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? தந்தைமாருக்கு மோசே இவ்வாறு அறிவுரை கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு”வாயாக. (உபாகமம் 6:6, 7) அப்போஸ்தலன் பவுலும் இவ்வாறு எழுதினார்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) ஆகவே போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய அல்லது மிகவும் உயர்வாய் மதிக்கப்பட வேண்டிய பெற்றோரின் போதனைகளில், நிச்சயமாகவே கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படும் நினைப்பூட்டுதல்களும் கட்டளைகளும் கற்பனைகளும் அடங்கும்.
பெற்றோர் தரும் போதனையில் மற்ற விதிமுறைகளும், அதாவது குடும்ப நியதிகளும் இருக்கலாம். இவை அனைத்தும் குடும்ப அங்கத்தினர்களின் நன்மைக்காகவே இருக்கும். உண்மைதான், தேவையை பொருத்து இந்த விதிமுறைகள் குடும்பத்துக்கு குடும்பம் வித்தியாசப்படலாம். ஆனால் தங்கள் சொந்த குடும்பத்துக்கு எது மிகச் சிறந்தது என்பதைத் தீர்மானிக்கும் வேலை பெற்றோருடையது. அவர்கள் ஏற்படுத்தும் விதிமுறைகள் பொதுவாக அவர்களுடைய உண்மையான அன்பையும் அக்கறையையும் காட்டும். இந்த விதிமுறைகளையும் கடைப்பிடியுங்கள், அதோடு பெற்றோரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் வேதாகம போதனைகளையும் விட்டுவிடாதிருங்கள் என்பதே இளைஞருக்கு தரப்படும் ஆலோசனையாகும். ஆம், இந்தப் போதனைகளை “கண்மணியைப்போல்” கருதி அதை மிகவும் ஜாக்கிரதையாக காத்துக்கொள்வது அவசியமாகும். இதுவே யெகோவாவின் தராதரங்களை அசட்டை செய்வதால் வரும் மோசமான விளைவை தவிர்ப்பதற்கான வழியாகும், அதனால் நாம் ‘பிழைத்திருப்போம்.’
“அவைகளை [என் கட்டளைகளை] உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள்” என்று சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 7:3) விரல்கள் எப்போதும் நம் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன, நம்முடைய வேலைகளைச் செய்வதற்கு அவை மிகவும் அவசியமாக இருக்கின்றன. அதைப்போலவே, பைபிள் நியமங்களின் அடிப்படையில் வளர்க்கப்பட்டதால் அல்லது பைபிள் அறிவை பெற்றுக்கொண்டதால் கற்ற பாடங்கள் நாம் செய்யும் அனைத்திலும் எப்போதும் நமக்கு நினைப்பூட்டுதலாக இருந்து நம்மை வழிநடத்த வேண்டும். அவற்றை நம்முடைய இருதய பலகையில் எழுதிக்கொண்டு நம் இயல்பின் பாகமாகவே ஆக்கிக்கொள்ள வேண்டும்.
ஞானமும் புரிந்துகொள்ளுதலும் எவ்வளவு முக்கியம் என்பதை மறவாத ராஜா அடுத்து இவ்வாறு அறிவுறுத்துகிறார்: “ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப் [புரிந்துகொள்ளுதலைப்] பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.” (நீதிமொழிகள் 7:5) கடவுள் கொடுத்திருக்கும் அறிவை சரியாக பயன்படுத்துவதே ஞானம். பிரியமுள்ள ஒரு சகோதரியை நாம் நேசிப்பது போல ஞானத்தை நேசிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன? ஒரு விஷயத்தை ஊடுருவிப் பார்த்து அதன் பல்வேறு பாகங்களுக்கிருக்கும் தொடர்பையும் முழு விவகாரத்தையும் கிரகித்துக்கொள்வதன் மூலம் அதன் அர்த்தத்தை உணர்ந்துகொள்வதாகும். புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு நெருக்கமான நண்பனைப்போல நமக்கு நெருக்கமாயிருக்க வேண்டும்.
வேதப்பூர்வமான பயிற்றுவிப்பை பற்றிக்கொண்டு, ஞானத்தோடும் புரிந்துகொள்ளுதலோடும் ஏன் நாம் ஒரு நெருக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்? “இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை [நம்மை] விலக்கிக் காப்பதற்காக.” (நீதிமொழிகள் 7:4) ஆம், அவ்விதமாக செய்தால் நயமாயும் இனிமையாயும் பேசுகிற அந்நிய பெண்ணிடமிருந்து, அதாவது ஒழுக்கங்கெட்ட நபரிடமிருந்து அது நம்மை பாதுகாக்கும்.a
வாலிபன் ‘தந்திர மனமுள்ள ஒரு ஸ்திரீயை’ சந்திக்கிறான்
அடுத்து இஸ்ரவேலின் ராஜா தான் நேரில் கண்ட ஒரு காட்சியை விவரிக்கிறார்: “நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது, பேதைகளாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன். அவன் மாலைமயங்கும் அஸ்தமன நேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும், அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.”—நீதிமொழிகள் 7:6-9.
சாலொமோன் பலகணி வழியாக பார்க்கிறார். இது, கண் போன்ற துளைகளும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த ஜன்னலாக இருந்திருக்கலாம். சூரியன் மறையும் வீதியை காரிருள் கவ்வுகிறது. அப்போது மனதில் உறுதியே இல்லாத ஒரு வாலிபன் அவர் கண்களில் தென்படுகிறான். அவனுக்குப் பகுத்துணர்வும் மதிநுட்பமும் இல்லாதபடியால் அவன் மதிகெட்டவனாயிருக்கிறான். அவன் எப்படிப்பட்ட ஒரு வீதிக்குள் வந்திருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும், அங்கே வந்தால் அவனுக்கு என்ன நேரிடும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன் ‘அவள் இருக்கும் சந்தை ஒட்டிய தெருவின்’ வழியாய் நடந்துபோகிறான். அவள் யார்? அவள் வேலை என்ன?
கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் ராஜா தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திர மனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள்.”—நீதிமொழிகள் 7:10-12.
இந்தப் பெண் உடுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்தாலே போதும், அவள் எப்படிப்பட்டவள் என்பது தெரிந்துவிடும். (ஆதியாகமம் 38:14, 15) அவள் ஒரு வேசியைப் போல வெட்கமில்லாமல் உடுத்தியிருக்கிறாள். மேலும் அவள் ‘தந்திரமுள்ளவள்,’ ‘பிறர் காலை வாரிவிடும்’ வஞ்சகமான உள்நோக்கம் கொண்டவள். (அமெரிக்க மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள்; நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) அவள் ஒரு ஆடுகாலி, பிடிவாதமுள்ளவள், வாயாடி, தலைகனம் பிடித்தவள், மட்ட ரகமானவள், தன் இஷ்டப்படி செய்கிறவள், வெட்கங்கெட்டவள், அடங்காதவள். வீட்டில் தங்கியிருப்பதற்கு பதிலாக தெரு முனைகளில் பதுங்கி யாரையாவது விழுங்க காத்திருக்கிறாள். இந்த வாலிபனைப் போல, யாராவது வருவார்களா என்று அவள் காத்திருக்கிறாள்.
‘மிகுதியான சொற்களால் இணங்கப் பண்ணினாள்’
தந்திரமான திட்டத்தோடு காத்திருக்கும் ஒழுக்கக்கேடான ஒரு பெண்ணை அந்த வாலிபன் சந்திக்கிறான். சாலொமோனின் கவனத்தை இது எப்படி கவர்ந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்! “அவள் அவனைப் பிடித்து முத்தஞ் செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து: சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்” என்கிறாள்.—நீதிமொழிகள் 7:13-15.
அந்தப் பெண்ணின் உதடுகள் இனிமையாய் இருக்கின்றன. முகத்தில் நாணமில்லாமல் வார்த்தைகள் நம்பிக்கையோடு வருகின்றன. அந்த வாலிபனை வசீகரிப்பதற்காகவே தன் வார்த்தைகளை கவனமாக எண்ணி பேசுகிறாள். சமாதான பலிகளைச் செலுத்தி அன்றைக்குத்தான் தன் பொருத்தனைகளை நிறைவேற்றியதாக சொல்கிறாள். அவள் தன்னை நீதியுள்ளவளாக காட்டிக்கொண்டு தான் ஆன்மீகத்தில் ஒன்றும் குறைந்தவளல்ல என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் தெரிகிறது. எருசலேம் ஆலயத்தில் சமாதான பலிகளில் இறைச்சியும் மெல்லிய மாவும் எண்ணெயும் திராட்சரசமும் செலுத்தப்பட்டது. (லேவியராகமம் 19:5, 6; 22:21; எண்ணாகமம் 15:8-10) பலி செலுத்துகிறவர் சமாதான பலிகளிலிருந்து தனக்கும் தன் குடும்பத்துக்கும் வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்பதால், வீட்டில் புசிப்பதற்கும் குடிப்பதற்கும் நிறைய இருப்பதாக அவள் தெரிவிக்கிறாள். குறிப்பு தெளிவாக உள்ளது: வாலிபன் அங்கு வந்து ஜாலியாக பொழுதைக் கழிக்கலாம். இவனைத் தேடிக்கொண்டுதான் அவள் வீட்டிலிருந்து வந்திருக்கிறாள். இந்தக் கதையை நம்பிவிட்டால் ஒருவர் எப்படி நெகிழ்ந்து போவார். “அவள் யாராவது மாட்டுவார்களா என்று தேடிக்கொண்டு வந்திருப்பது என்னவோ உண்மைதான், ஆனால் அவள் உண்மையில் இந்த வாலிபனையே தேடி வந்தாளா? இவனைப் போல ஒரு முட்டாள்தான் அவள் சொல்வதை அப்படியே நம்பிவிடுவான்” என்று ஒரு பைபிள் கல்விமான் கூறுகிறார்.
தன் உடையினாலும், புகழ்ச்சியான வார்த்தைகளாலும், அவனைத் தொட்டு தழுவியதாலும், உதட்டின் ருசியாலும், அவனை மயக்கிவிட்ட அந்த வெட்கங்கெட்ட ஸ்திரீ அடுத்து அங்கே நறுமணத்தை விவரிக்கிறாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்து தேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.” (நீதிமொழிகள் 7:16, 17) எகிப்திலிருந்து வந்த வண்ண வஸ்திரங்களால் அவள் தன் மஞ்சத்தை ஜோடித்து வெள்ளைப்போளமும் சந்தனமும் இலவங்கப்பட்டையும் கொண்டு படுக்கைக்கு வாசனை தெளித்திருக்கிறாள்.
“வா, விடியற்காலம் வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்” என்று தொடர்ந்து சொல்கிறாள். இரண்டு பேரும் இன்பமாக இரவு சாப்பாட்டை அனுபவிப்பதற்கு மட்டுமே இது ஒரு அழைப்பாக இல்லை. உடலுறவை அனுபவிக்கலாம் என்றே அவள் அவனை அழைக்கிறாள். வாலிபனுக்கோ அந்த வேண்டுகோள் துணிச்சலானதாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது! கூடுதலாக அவனை இணங்க வைப்பதற்காக அவள் இவ்வாறு கூறுகிறாள்: “புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான். பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான்.” (நீதிமொழிகள் 7:18-20) அவர்களுக்கு எந்த பயமுமில்லை என்று அவள் அடித்துக் கூறுகிறாள். வேலை விஷயமாக அவள் புருஷன் வெளியூர் சென்றிருக்கிறான், இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவன் வரமாட்டான். ஒரு வாலிபனை எவ்வளவு சாமர்த்தியமாக ஏமாற்றிவிடுகிறாள்! “தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.” (நீதிமொழிகள் 7:21) யோசேப்பைப் போன்ற மனவுறுதி படைத்த ஒருவரே இத்தனை கவர்ச்சியாக இருக்கும் வேண்டுகோளை மறுக்க முடியும். (ஆதியாகமம் 39:9, 12) இந்த வாலிபனுக்கு அந்த உறுதி இருக்கிறதா?
‘அடிக்கப்படுவதற்கு செல்லும் ஒரு மாட்டைப் போல’
“உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவது போலும், ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது” என்று சாலொமோன் கூறுகிறார்.—நீதிமொழிகள் 7:22, 23.
அந்த அழைப்பை வாலிபனால் மறுக்கவே முடியவில்லை. பகுத்தறிவை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல’ அவள் பின்னே செல்கிறான். விலங்கிடப்பட்ட ஒரு மனிதன் எப்படி தண்டனையைத் தப்பித்துக்கொள்ள முடியாதோ அதே போல அந்த வாலிபனும் பாவத்துக்குள் இழுத்துச் செல்லப்படுகிறான். “அம்பு அவன் ஈரலைப் பிள”க்கும் வரை, அதாவது மரணத்துக்கேதுவாக அவன் காயப்படும்வரை, அவன் அதன் ஆபத்தை உணராதிருக்கிறான். அது சரீர மரணமாக இருக்கலாம்; பாலுறவினால் கடத்தப்படும் நோயினால் ஏற்படும் மரணத்தைக் குறிக்கலாம்.b காயம் ஆவிக்குரிய மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்—‘அவன் உயிரே அதில் உட்பட்டிருக்கிறது.’ அவனுடைய முழு வாழ்க்கையும் பாழாகிறது, அவன் கடவுளுக்கு எதிராக பெரும் பாவத்தை செய்துவிடுகிறான். இதன் காரணமாக ஒரு குருவி கண்ணியில் விழத் தீவிரிக்கிறது போல மரணத்தின் பிடிக்குள் விரைந்து செல்கிறான்!
“அவள் பாதையிலே மயங்கித் திரியாதே”
ஞானமுள்ள அரசன் தான் பார்த்ததை வைத்து ஒரு பாடம் புகட்டுகிறார்: “ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.”—நீதிமொழிகள் 7:24-27.
ஒழுக்கங்கெட்ட நபரின் மரண வழிகளைவிட்டு விலகி ‘பிழைத்திருங்கள்’ என்பதே சாலொமோன் கொடுக்கும் புத்திமதி. (நீதிமொழிகள் 7:2) இந்த ஆலோசனை இந்நாளுக்கு எவ்வளவு காலத்திற்கேற்றதாக உள்ளது! மாய வலையில் சிக்கவைக்க காத்திருப்போர் அடிக்கடி வந்துபோகும் இடங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம் இல்லையா? இப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று அவர்களுடைய தந்திரங்களில் நீங்கள் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்? ஆம், நீங்கள் ஏன் ‘மதிகெட்டவராயிருந்து’ ‘அந்நிய’ பெண்ணின் பாதையிலே அலைந்து திரிய வேண்டும்?
அரசன் பார்க்கும் அந்த ‘அந்நிய பெண்’ ‘சம்போகமாயிருந்து இன்பங்களினால் பூரிக்கும்படி’ வாலிபனுக்கு அழைப்பு விடுத்து தனது வலையில் சிக்க வைத்தாள். எத்தனையோ வாலிபர்கள், விசேஷமாக பெண்கள் இவ்விதமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? ஆனால் இதை எண்ணிப்பாருங்கள்: யாராவது ஒருவர் தவறாக உடலுறவு கொள்ள உங்களை கவர்ந்திழுத்தால் அது உண்மையான அன்பாக இருக்குமா அல்லது சுயநலமான சிற்றின்ப வேட்கையாக இருக்குமா? ஒரு பெண்ணை உண்மையில் நேசிக்கிற ஒரு ஆண் ஏன் அவளுடைய கிறிஸ்தவ பயிற்றுவிப்பை அல்லது மனசாட்சியை மீறும்படி அவளை வற்புறுத்தப்போகிறார்? “உன் இருதயம் சாயவேண்டாம்” என்று சாலொமோன் அறிவுரை கூறுகிறார்.
தீய வழியில் செல்ல தூண்டுபவரின் வார்த்தைகள் பொதுவாக இனிமையாக இருக்கும், அவர் மிகவும் கவனமாக பேசுவார். ஞானமும் புரிந்துகொள்ளுதலும் நமக்கிருந்தால், அப்படிப்பட்ட பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும் என்பதை நாம் உடனடியாக கண்டுபிடித்துவிடுவோம். யெகோவா நமக்கு கட்டளையிட்டிருப்பதை ஒருபோதும் மறவாதிருந்தால் நாம் பாதுகாக்கப்படுவோம். ஆகவே, நாம் எப்போதும் ‘கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு பிழைத்திருப்போமாக,’ என்றென்றுமாக.—1 யோவான் 2:17.
[அடிக்குறிப்புகள்]
a நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் யெகோவாவிடமிருந்து விலகி தங்களை பிரித்துக்கொண்டவர்களைக் குறிப்பதற்காக “அந்நியர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே விலைமகள் போன்ற ஒழுக்கமற்ற ஒரு பெண் “அந்நியப் பெண்” என்பதாக குறிப்பிடப்படுகிறாள்.
b பாலுறவினால் கடத்தப்படும் சில நோய்கள் ஈரலை சேதப்படுத்திவிடுகின்றன. உதாரணமாக, மேக நோய் முற்றிவிட்டால் ஏராளமான பாக்டீரியா உயிரிகள் ஈரலைத் தாக்குகின்றன. மேகவெட்டை நோய்க்கு காரணமான உயிரிகள் ஈரலில் வீக்கத்தை உண்டுபண்ணுகின்றன.
[பக்கம் 29-ன் படங்கள்]
பெற்றோரின் சட்டங்களை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?
[பக்கம் 31-ன் படம்]
கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டால் ஜீவனை பெறலாம்