“ஞானத்தைக் கண்டடைந்திருக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன்”
அவர் ஒரு கவிஞர், கட்டிடக் கலைஞர், அரசர். அவர் ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டியவர், பூமியிலிருந்த எந்த அரசரைப் பார்க்கிலும் செல்வந்தர். அவர் தன் ஞானத்திற்கு பெரிதும் பெயர்போனவர். அவரைக் காண வந்த ஓர் ராணி வெகுவாய் மனங்கவரப்பட்டு அதிக ஆச்சரியத்தோடு, “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது” என்று கூறினாள். (1 இராஜாக்கள் 10:4-9) பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோனின் அந்தஸ்து இதுவே.
சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் குறைவற்றிருந்தார். இப்படி இரண்டையும் பெற்றதால் எது உண்மையில் இன்றியமையாதது என்பதைத் தீர்மானிப்பதற்கு அவர் தகுதி பெற்றிருந்தார். “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் [“தெளிந்துணர்வை,” NW] சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல” என அவர் எழுதினார்.—நீதிமொழிகள் 3:13-15.
எனினும், ஞானத்தை எங்கே கண்டுபிடிக்கலாம்? செல்வத்தைக் காட்டிலும் அது ஏன் அதிக மதிப்பு வாய்ந்தது? அதன் விரும்பத்தக்க அம்சங்கள் யாவை? சாலொமோன் எழுதிய பைபிளின் நீதிமொழிகள் புத்தகத்தில் 8-ம் அதிகாரம், கவனத்தைக் கவரும் விதத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. அந்த அதிகாரத்தில், ஞானம் ஓர் ஆளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது; எனவே, அது பேசுவதாகவும் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் வேண்டுகோள்களையும் மதிப்பையும் ஞானம் நேரடியாக வெளிப்படுத்துகிறது.
‘அது தொடர்ந்து சத்தமிட்டு அழைக்கிறது’
நீதிமொழிகள் 8-ஆம் (NW) அதிகாரம், சொல்திறம் வாய்ந்த கேள்வியுடன் தொடங்குகிறது: “ஞானம் தொடர்ந்து சத்தமிட்டழைக்கிறதல்லவா, தெளிந்துணர்வு தொடர்ந்து தன் குரலைக் கொடுக்கிறதல்லவா?”a ஆம், ஞானமும் தெளிந்துணர்வும் தொடர்ந்து சத்தமிட்டு அழைக்கின்றன; ஆனால், இருண்ட இடங்களில் பதுங்கியிருந்து, தனியாக வரும் அனுபவமில்லாத வாலிபனின் செவிகளில் கவர்ச்சி வார்த்தைகளை கிசுகிசுக்கும் ஒழுக்கங்கெட்ட பெண்ணைப்போல் அவை இல்லை. (நீதிமொழிகள் 7:12) “அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு” சொல்கிறது. (நீதிமொழிகள் 8:1-3) உறுதியையும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் ஞானத்தின் குரல், பொது இடங்களாகிய நகர நுழைவாயில்களிலும் குறுக்குப் பாதைகளிலும் ஊர்வாசல்களிலும் சத்தமாயும் தெளிவாயும் கேட்கிறது. எளிதில் அந்தக் குரலைக் கேட்டு ஜனங்கள் செயல்படலாம்.
தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள தேவ ஞானம், அதை பெற விரும்புகிற ஏறக்குறைய அனைவருக்கும் இன்று கிடைக்கிறது என்பதை யார் மறுக்க முடியும்? “சரித்திரத்திலேயே மிக அதிகமாய் எங்கும் வாசிக்கப்படுகிற புத்தகம் பைபிள்” என்று த உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. “வேறு எந்த புத்தகத்தையும்விட, பைபிள் பிரதிகளே வெகு அதிகமாய் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பைபிளே வேறு எந்த புத்தகத்தைப் பார்க்கிலும் அநேக மொழிகளில், பல முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது” என்றும் அது சொல்கிறது. முழு பைபிளோ அதன் பகுதிகளோ 2,100-க்கும் அதிக மொழிகளிலும் கிளை மொழிகளிலும் கிடைக்கின்றன; எனவே, மனித குடும்பத்தாரில் 90 சதவீதத்திற்கு அதிகமானோரிடம் அவர்களது மொழியில் கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியாகிலும் உள்ளது.
யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் செய்தியை யாவரறிய எங்கும் அறிவிக்கின்றனர். 235 நாடுகளில், அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைச் சுறுசுறுப்பாய்ப் பிரசங்கித்தும், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சத்தியங்களை ஜனங்களுக்குப் போதித்தும் வருகின்றனர். பைபிள் சார்ந்த அவர்களுடைய பத்திரிகைகளாகிய காவற்கோபுரம் 140 மொழிகளிலும், விழித்தெழு! 83 மொழிகளிலும் அச்சிடப்படுகின்றன; இவை ஒவ்வொன்றும் இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஞானம் பொதுவிடங்களில் தொடர்ந்து சத்தமிடுவதில் சந்தேகமில்லை!
“என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்”
ஓர் ஆளாக உருவகப்படுத்தப்பட்ட ஞானம் இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கிறது: “மனுஷரே உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.”—நீதிமொழிகள் 8:4, 5.
ஞானம் விடுக்கும் அழைப்பு உலகெங்கும் ஒலிக்கிறது. சகல மனிதருக்கும் அது அழைப்பு விடுக்கிறது. அனுபவமற்றோர், விவேகம் அல்லது புத்தியடையவும், மூடர்கள் புரிந்துகொள்ளும் திறன் பெறவும் வரும்படி அழைக்கப்படுகின்றனர். பைபிள் எல்லாருக்குமுரிய புத்தகம் என்று யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நம்புகின்றனர்; எனவே, அதிலுள்ள ஞானமான சொற்களைக் கண்டடையும்படி அதற்குக் கவனம் செலுத்த தாங்கள் சந்திக்கும் எல்லோரையும் பட்சபாதமில்லாமல் உண்மையிலேயே ஊக்குவிக்கின்றனர்.
“என் வாய் சத்தியத்தை விளம்பும்”
தன் வேண்டுகோள்களை இன்னும் விளக்குவதாய் ஞானம் தொடர்ந்து சொல்கிறதாவது: “கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தமகாரியங்களை வசனிக்கும். என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.” உண்மைதான், ஞானத்தின் போதகங்கள் மிகச் சிறந்தவை, நேர்மையானவை, சத்தியமும் நீதியுமானவை. அவற்றில் தவறான, நேர்மையற்ற விஷயங்கள் ஏதும் இல்லை. “அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.”—நீதிமொழிகள் 8:6-9.
ஞானத்தின் இந்த ஊக்குவிப்பு பொருத்தமானதே: “வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.” இது நியாயமான அழைப்பு, ஏனெனில், “முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.” (நீதிமொழிகள் 8:10, 11) ஆனால் ஏன் அப்படி சொல்லப்படுகிறது? செல்வங்களைப் பார்க்கிலும் ஞானத்தை அதிக மதிப்புவாய்ந்ததாக ஆக்குவது எது?
“பொன்னையும் பார்க்கிலும் என் பலன் நல்லது”
ஞானம் தனக்குச் செவிசாய்ப்பவருக்கு அள்ளித்தரும் பரிசுகள், பொன், வெள்ளி அல்லது முத்துக்களைப் பார்க்கிலும் ஒப்பற்றவை. இந்தப் பரிசுகளைப் பற்றி ஞானம் சொல்கிறதாவது: “ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் [“யெகோவாவுக்குப்,” NW] பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.”—நீதிமொழிகள் 8:12, 13.
தன்னை ஏற்றுக்கொண்டோருக்கு ஞானம் விவேகத்தையும் சிந்திக்கும் திறனையும் அளிக்கிறது. கடவுள் அருளும் ஞானத்தைப் பெற்றவர், அவரிடம், மிகுந்த மரியாதையோடும் பயபக்தியோடும் இருப்பார். ஏனெனில், “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்.” (நீதிமொழிகள் 9:10, தி.மொ.) ஆகையால், யெகோவா வெறுப்பதை அவரும் வெறுப்பார். இறுமாப்பு, கர்வம், ஒழுக்கக்கேடான நடத்தை, மோசமான பேச்சு ஆகியவற்றை தவிர்ப்பார். அவர் தீமையை வெறுப்பதால், சுயநலத்திற்காக அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள இடங்கொடுக்க மாட்டார். கிறிஸ்தவ சபையில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருப்போரும், குடும்பத் தலைவர்களும் ஞானத்தைத் தேடுவது எவ்வளவு முக்கியம்!
“ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.” (நீதிமொழிகள் 8:14-16) உட்பார்வையையும், புரிந்துகொள்ளும் திறனையும், வலிமையையும் பிறப்பிக்கிறது ஞானம். இவை, அரசர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், பிரபுக்களுக்கும் மிகவும் தேவை. பொறுப்பான ஸ்தானங்களில் இருப்போருக்கும், மற்றவர்களுக்கு அறிவுரை அளிப்போருக்கும் ஞானம் இன்றியமையாதது.
மெய் ஞானம் எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடியதே, ஆனால் எல்லாரும் அதைக் கண்டுபிடிப்பதில்லை. கைக்கெட்டிய தூரத்திலே இருந்தாலும் சிலர் அதை வேண்டாமென ஒதுக்கி தள்ளிவிடுகின்றனர் அல்லது அதைவிட்டு ஒதுங்கி போகின்றனர். “என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்,” “என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்” என்று ஞானம் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 8:17) ஞானத்தை ஆர்வமாய் தேடுகிறவர்களுக்கு மாத்திரமே அது கிடைக்கும்.
ஞானத்தின் வழிகள் நேர்மையும் நீதியுமானவை; தன்னைத் தேடுவோருக்கு அது பலனளிக்கிறது. “ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப் பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்” என்று ஞானம் சொல்கிறது.—நீதிமொழிகள் 8:18-21.
விவேகம், சிந்திக்கும் திறமை, மனத்தாழ்மை, உட்பார்வை, நடைமுறை ஞானம், புரிந்துகொள்ளும் திறன் போன்ற மிகச் சிறந்த பண்புகளோடும் சுபாவத்தோடும், செல்வத்தையும் கௌரவத்தையும் சேர்த்து தன் பரிசுகளாக அளிக்கிறது ஞானம். ஞானமுள்ளவர், நீதியான வழிகளில் செல்வத்தை அடையலாம், ஆவிக்குரிய விதத்தில் செழிப்படையலாம். (3 யோவான் 2) ஞானம் ஒருவரை கௌரவிக்கிறது. மேலும் உள்ளத்தில் திருப்தி காண செய்கிறது, மன சமாதானத்தை அளித்து கடவுளிடம் சுத்த மனசாட்சியுடன் இருக்க செய்கிறது. ஞானத்தைக் கண்டுபிடிக்கிறவர் சந்தோஷமுள்ளவர் என்பது உண்மையே. ஞானத்தின் பலன் பசும்பொன்னிலும் விரும்பத்தக்க வெள்ளியிலும் மேன்மையானதே.
செல்வத்தைக் குவிப்பதிலேயே குறியாய் இருக்கும் பொருளாசை பிடித்த இவ்வுலகில் நாம் வாழ்வதால் இந்த அறிவுரை நமக்கு காலத்துக்கேற்றதாய் உள்ளது! ஒருபோதும் ஞானத்தின் மதிப்பை மறவாமலும், செல்வம் சம்பாதிப்பதற்கு அநீதியான வழிகளை நாடாமலும் இருப்போமாக. நம்முடைய கிறிஸ்தவக் கூட்டங்கள், தனிப்பட்ட பைபிள் படிப்பு, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ பிரசுரிக்கப்படுகிற பிரசுரங்களை வாசிப்பது போன்றவை ஞானத்தை அள்ளி வழங்கும் ஏற்பாடுகள். எனவே, செல்வத்தை சம்பாதிப்பதற்காக இந்த ஏற்பாடுகளை ஒருபோதும் அசட்டை செய்யாதிருப்போமாக.—மத்தேயு 24:45-47, NW.
“அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்”
ஞானம் என்ற ஒரு பண்பை விளக்குவதற்கு மட்டுமே நீதிமொழிகள் 8-ம் அதிகாரத்தில் அதை ஆளுருவில் பேசவில்லை. யெகோவாவின் படைப்புகளிலேயே மிக முக்கிய நபரை அது அடையாளம் காட்டுகிறது. ஞானம் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறது: “கர்த்தர் [“யெகோவாதாமே,” NW] தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.”—நீதிமொழிகள் 8:22-26.
இங்கே ஆளுருவில் விவரிக்கப்படுகிற ஞானம் வேதவசனங்களில் குறிப்பிடப்படுகிற “அந்த வார்த்தை”யுடன் வெகு நன்றாக பொருந்துகிறது! “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது; அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (யோவான் 1:1) ஆளுருவாக்கப்பட்ட ஞானம், அடையாள அர்த்தத்தில் கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை, மனிதனாவதற்கு முந்திய உருவை அடையாளமாக குறிப்பிடுகிறது.b
இயேசு கிறிஸ்து, “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளு[ம்] . . . சிருஷ்டிக்கப்பட்டது.” (கொலோசெயர் 1:15, 16) ஆளுருவாக்கப்பட்ட ஞானம் இவ்வாறும் சொல்கிறது: “அவர் [யெகோவா] வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.” (நீதிமொழிகள் 8:27-31) யெகோவாவின் முதற்பேறான குமாரன், வானங்களையும் பூமியையும் படைத்த ஒப்பற்ற படைப்பாளராகிய தம் பிதாவுக்கு அருகிலிருந்து, சுறுசுறுப்பாய் வேலை செய்து வந்தார். முதல் மனிதனை யெகோவா தேவன் படைக்கையில், திறம்பட்ட வேலையாளனாக அவரோடு சேர்ந்து குமாரனும் பங்கெடுத்தார். (ஆதியாகமம் 1:26) கடவுளுடைய குமாரன் மனிதகுலத்திடம் அந்தளவு அதிக கரிசனை காட்டுபவராகவும் மகிழ்ச்சி கொள்பவராகவும் இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை!
“எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்”
ஞானமாக உருவகப்படுத்தப்பட்ட கடவுளுடைய குமாரன் இவ்வாறு சொல்கிறார்: “ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள்.”—நீதிமொழிகள் 8:32-36.
இயேசு கிறிஸ்து, கடவுளுடைய ஞானத்தின் உரு. “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளின் ஐசுவரியங்களெல்லாம் மறைவாயிருக்கின்றன.” (கொலோசெயர் 2:3, தி.மொ.) அப்படியானால், நாம் அவருக்குக் கவனமாய்ச் செவிசாய்த்து, அவருடைய அடிச்சுவடுகளை பிசகாமல் பின்பற்றுவோமாக. (1 பேதுரு 2:21) அவரைப் புறக்கணிப்பது, நம்முடைய ஜீவனுக்கே கேடு வருவித்துக்கொண்டு, மரணத்தை விரும்புவதற்கு சமம். ஏனெனில், ‘இரட்சிக்கப்படுவதற்கு வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை.’ (அப்போஸ்தலர் 4:12) நம் இரட்சிப்புக்காக கடவுள் அருளிய இயேசுவை மனப்பூர்வமாய் ஏற்போமாக. (மத்தேயு 20:28; யோவான் 3:16) இவ்வாறு, ‘ஜீவனைக் கண்டடைந்து, யெகோவாவினிடத்தில் தயவைப் பெறுவதிலிருந்து’ வருகிற சந்தோஷத்தை அனுபவிப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a “ஞானம்” என்பதற்கான எபிரெயச் சொல் பெண்பாலில் உள்ளது. ஆகையால், ஞானத்தைக் குறிப்பிடுகையில், சில மொழிபெயர்ப்புகள் பெண்பால் சுட்டுப்பெயர்களைப் பயன்படுத்துகின்றன.
b “ஞானம்” என்பதற்கான எபிரெயச் சொல் எப்போதும் பெண்பாலில் இருப்பது, கடவுளுடைய குமாரனை அடையாளம் காட்ட ஞானம் பயன்படுத்தப்படுவதோடு முரண்படுகிறதில்லை. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்பதில், “அன்பு” என்பதற்கான கிரேக்க சொல்லும் பெண்பாலில் உள்ளது. (1 யோவான் 4:8) எனினும், அது கடவுளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
[பக்கம் 26-ன் படங்கள்]
பொறுப்பான ஸ்தானங்களில் இருப்போருக்கு ஞானம் இன்றியமையாதது
[பக்கம் 27-ன் படங்கள்]
ஞானத்தைப் பெறும் வழிகளை அசட்டை செய்யாதீர்கள்