‘ஞானத்தால் நம் நாட்கள் பெருகும்’
வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு ஞானம் மிக அவசியம் என்பதை யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்? உண்மையான ஞானம் என்பது அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் சரியாக பயன்படுத்தும் திறமையாகும். அது முட்டாள்தனத்துக்கும் மடமைக்கும் கிறுக்குத்தனத்துக்கும் நேர் எதிர்மாறானது. அதனால்தான் ஞானத்தைச் சம்பாதித்துக் கொள்ளும்படி பைபிள் நமக்கு வலியுறுத்துகிறது. (நீதிமொழிகள் 4:7) சொல்லப்போனால், நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகம் ஞானத்தையும் சிட்சையையும் நமக்குத் தருவதற்காகவே முக்கியமாக எழுதப்பட்டது. அதன் தொடக்க வார்த்தைகளை கவனியுங்கள்: ‘தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் [“சிட்சையையும்,” NW] பெறலாம்.’—நீதிமொழிகள் 1:1, 2.
உதாரணத்துக்கு, நீதிமொழிகள் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்களில் மட்டுமே உள்ள சிறந்த, நம்பத்தகுந்த போதனைகளை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். அன்பான தகப்பன் தன் மகனுக்கு அறிவுரை கூறுவதுபோல, சிட்சையை ஏற்றுக்கொண்டு ஞானத்துக்கு செவிசாய்க்கும்படி சாலொமோன் தன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறார். (1-ம் 2-ம் அதிகாரங்கள்) யெகோவாவோடு எவ்வாறு நெருங்க உறவை வளர்த்துக்கொள்வது என்றும் நம் இருதயத்தை எவ்வாறு காத்துக்கொள்வது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். (3-ம் 4-ம் அதிகாரங்கள்) ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ளும்படி நமக்கு புத்தி சொல்லப்படுகிறது. (5-ம் 6-ம் அதிகாரங்கள்) ஒழுக்கங்கெட்டவர் எப்படி செயல்படுவார் என்ற காட்சி நம் கண்முன் காட்டப்படுவது மதிப்பு வாய்ந்தது. (7-ம் அதிகாரம்) மேலும், உருவகப்படுத்தி பேசப்பட்டுள்ள ஞானம் விடுக்கும் வேண்டுகோள் அனைவரையும் எவ்வளவாய் கவர்ந்திழுக்கிறது! (8-ம் அதிகாரம்) பின்னான அதிகாரங்களில் சுருக்கமான நீதிமொழிகளை தனித்தனியாக எழுதுவதற்கு முன்பாக சாலொமோன் ராஜா இதுவரை எழுதியவற்றின் சுருக்கத்தை உள்ளத்தைத் தூண்டும் விதத்தில் அளிக்கிறார்.—அதிகாரம் 9.
‘நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள்’
நீதிமொழிகளின் முதல் பகுதியின் முடிவுரை, ஏற்கெனவே கூறப்பட்ட ஆலோசனைகளை சலிப்பூட்டும் வகையில் சுருக்கிக் கூறுவதாய் இல்லை. அதற்கு பதிலாக, சுவாரசியமான, உள்ளத்தை தூண்டியெழுப்பும் ஓர் உவமையாக உள்ளது. இது ஞானத்தை நாடுமாறு வாசகரை தூண்டுகிறது.
பைபிளின் நீதிமொழிகள் புத்தகத்தின் 9-ஆம் அதிகாரம், “ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து” என ஆரம்பிக்கிறது. (நீதிமொழிகள் 9:1) ‘ஏழு தூண்கள்’ என்ற வார்த்தை, “இரு பக்கங்களில் மும்மூன்று தூண்களும், வாசலுக்கு எதிரான பின்பக்கத்தில் ஒரு தூணும் நடுவில் முற்றமும் உள்ள ஒரு பெரிய மாளிகையை சுட்டிக்காட்டுகிறது” என ஒரு அறிஞர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, உண்மையான ஞானம், பல விருந்தாளிகளை வரவேற்க வசதியாக மிக உறுதியான ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறது.
விருந்துக்கு எல்லாம் தயார். அங்கே இறைச்சியும் திராட்சரசமும் இருக்கிறது. ஞானம் விசேஷித்த கவனத்துடன் சாப்பாட்டை தயாரித்து மேசையில் எல்லாவற்றையும் அடுக்கி வைத்திருக்கிறது. “தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி” இருக்கிறது. (நீதிமொழிகள் 9:2) இந்த அடையாள மேசையில் அறிவொளியூட்டும் ஆன்மீக உணவு தாராளம் கிடைக்கிறது.—ஏசாயா 55:1, 2.
உண்மையான ஞானம் தயார் செய்திருக்கும் விருந்துக்கு யார் அழைக்கப்படுகின்றனர்? “தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின் மேல் நின்று கூப்பிட்டு, புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.”—நீதிமொழிகள் 9:3-6.
அழைப்பைக் கொடுக்க ஞானம் தன் பணிவிடைக்காரிகளை அனுப்பியிருக்கிறது. ஜனங்கள் திரளாக கூடியிருக்கும் இடங்களுக்கு அவர்கள் போயிருக்கிறார்கள். புத்தியீனர்கள், பேதைகள், அனுபவமில்லாதவர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறார்கள். (நீதிமொழிகள் 9:4) அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுவது ஜீவன். நீதிமொழிகள் புத்தகம் உட்பட, கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு நிச்சயம் எல்லாருக்குமே கிடைக்கிறது. உண்மையான ஞானத்தின் தூதுவர்களான யெகோவாவின் சாட்சிகள், பைபிளைப் படிக்க எல்லா இடங்களிலும் உள்ளவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கின்றனர். இந்த அறிவைப் பெற்றுவருவது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.—யோவான் 17:3.
ஞானம் தரும் சிட்சையை கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக இளைஞர்களும் சமீப காலத்தில் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பவர்களும் ஞானம் கொடுக்கும் சிட்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வழிகளில் தங்கள் அனுபவம் குறைவுபடுவதால் அவர்களுக்கு “நல்ல உள்ளெண்ணம் தேவை”யாக இருக்கலாம். அவர்களுடைய உள்ளெண்ணங்கள் அனைத்தும் கெட்டவை என்று சொல்ல வரவில்லை, ஆனால் யெகோவா தேவனை உண்மையில் பிரியப்படுத்தும் விதத்தில் இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கு நேரமும் முயற்சியும் தேவை. இது எண்ணங்களையும், ஆசாபாசங்களையும் இலக்குகளையும் கடவுள் அங்கீகரிப்பதற்கு இசைவாக ஒருமுகப்படுத்துவதை தேவைப்படுத்துகிறது. ஆகவே அவர்கள் “திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருப்பது” மிகவும் இன்றியமையாதது.—1 பேதுரு 2:3.
சொல்லப்போனால் ‘மூல உபதேசங்களை’ அறிந்தபின்பு நாம் எல்லாருமே முன்னேற வேண்டாமா? நாம் ‘தேவனுடைய ஆழமான காரியங்களில்’ ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு முதிர்ச்சியுள்ளவர்களின் பலமான ஆகாரத்திலிருந்து போஷாக்கை நிச்சயமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். (எபிரெயர் 5:12–6:1; 1 கொரிந்தியர் 2:10) இயேசு கிறிஸ்துவின் நேரடி மேற்பார்வையில் வேலை செய்யும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,’ காலத்துக்கேற்ற ஆவிக்குரிய உணவை சோர்ந்து போகாமல் அனைவருக்கும் அளித்து வருகிறது. (மத்தேயு 24:45-47, NW) கடவுளுடைய வார்த்தையையும் அடிமை வகுப்பு அளித்துவரும் பைபிள் பிரசுரங்களையும் ஊக்கமாக படிப்பதன் மூலம் ஞானம் ஏற்பாடு செய்திருக்கும் மேசையில் விருந்துண்போமாக.
“பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே”
ஞானம் கொடுக்கும் போதனைகளில் கண்டிப்பும் கடிந்துகொள்ளுதலும் அடங்கும். ஞானத்தின் இந்த அம்சத்தை அனைவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே நீதிமொழிகள் புத்தகத்தின் முதல் பகுதியின் முடிவில் இந்த எச்சரிப்பு இடம் பெறுகிறது: “பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளுகிறான். பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்.”—நீதிமொழிகள் 9:7, 8அ.
பரியாசக்காரன், தன் பாதையை நேராக்க உதவ முன்வருபவரிடம் மனக்கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துக்கொள்கிறான். கடிந்துகொள்ளுதல் பயனுள்ளது என்பதை துன்மார்க்கன் மதிக்காதிருக்கிறான். சத்தியத்தை வெறுக்கிறவருக்கு அல்லது பரிகாசம் செய்வதற்காகவே அதை நாடுகிறவருக்கு கடவுளுடைய வார்த்தையின் அழகான சத்தியத்தை போதிக்க முயற்சி செய்வது எத்தனை ஞானமற்ற செயல்! அப்போஸ்தலன் பவுல் அந்தியோகியாவில் பிரசங்கிக்கையில் சத்தியத்தை துளியும் நேசிக்காத யூதர்கள் சிலரை சந்தித்தார். பவுல் கூறியதை தூஷணமான முறையில் திரித்துச் சொல்லி ஒரு விவாதத்தில் அவரை சிக்க வைக்க அவர்கள் முயன்றபோது பவுல் இதை மட்டுமே கூறினார்: “நீங்களோ அதைத் [தேவவசனத்தை] தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.”—அப்போஸ்தலர் 13:45, 46.
நேர்மை இருதயமுள்ளவர்களிடம் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க செல்லும்போது, பரியாசக்காரரோடு தர்க்கங்களிலும் விவாதங்களிலும் சிக்கிக்கொள்ளாதபடி கவனமாய் இருப்போமாக. கிறிஸ்து இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.”—மத்தேயு 10:12-14.
கடிந்துகொள்ளப்படுகையில் ஞானமுள்ளவர், பரியாசக்காரருக்கு நேர் எதிர்மாறாக நடந்துகொள்கிறார். சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்.” (நீதிமொழிகள் 9:8ஆ, 9அ) “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” என்பது ஞானமுள்ளவருக்குத் தெரியும். (எபிரெயர் 12:11) புத்திமதி வேதனையளிப்பதாக தோன்றினாலும் அதை ஏற்றுக்கொள்வது நம்மை ஞானமுள்ளவர்களாக ஆக்குமென்றால் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
“நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்” என்று ஞானமுள்ள அரசன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 9:9ஆ) அறிவை வளர்க்க தேவைப்படாத அளவுக்கு யாருமே பெரும் ஞானியாக அல்லது அதிக வயதானவராக இருக்க முடியாது. தள்ளாடும் வயதிலுள்ளவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! கற்றுக்கொள்ள எப்போதும் மனமுள்ளவராக, மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள நாமும் முயலுவோமாக.
“உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்”
சிந்திக்கப்படும் விஷயத்தின் முக்கிய குறிப்பை வலியுறுத்துகிறவராக, சாலொமோன் ஞானத்துக்கு முக்கியமாய் தேவைப்படுவதைக் குறிப்பிடுகிறார்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10) உண்மை கடவுளிடம் ஆழ்ந்த பக்தி இல்லாவிட்டால் தெய்வீக ஞானமும் இருக்க முடியாது. ஒருவனுக்கு ஏராளமான அறிவு இருந்து, யெகோவாவுக்கு பயப்படும் பயம் இல்லாவிட்டால், அந்த அறிவை அவன் படைப்பாளரைக் கௌரவிக்கும் விதமாக பயன்படுத்த முடியாது. உண்மைகளை அறிந்திருந்தாலும்கூட அவன் தவறான முடிவுகளை எடுத்து தன்னையே முட்டாளாக்கிக் கொள்வான். அத்தோடு ஞானத்தின் முக்கிய பண்பாகிய புரிந்துகொள்ளுதலை பெற பரிசுத்தராகிய யெகோவாவைப் பற்றிய அறிவு இன்றியமையாதது.
ஞானம் தரும் கனிகள் யாவை? (நீதிமொழிகள் 8:12-21, 35) இஸ்ரவேலின் அரசன் இதற்கு பதிலளிக்கிறார்: “என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.” (நீதிமொழிகள் 9:11) ஞானத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதால் ஒருவரது ஆயுட்காலம் அதிகரிக்கிறது. ஆம், “ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்.”—பிரசங்கி 7:12.
ஞானத்தை சம்பாதிக்க மும்முரமாக முயற்சி செய்வது நம்முடைய தனிப்பட்ட பொறுப்பாகும். இந்த உண்மையை வலியுறுத்தி சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய்.” (நீதிமொழிகள் 9:12) ஞானி தன் ஞானத்தால் பயனடைகிறான், பரியாசக்காரன் தன்னுடைய துன்பங்களுக்குத் தானே காரணமாகிறான். உண்மையில், நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுக்கிறோம். அப்படியென்றால் ‘நம் செவியை ஞானத்துக்குச் சாய்ப்போமாக.’—நீதிமொழிகள் 2:1.
“மதியற்ற ஸ்திரீ வாயாடி”
முற்றிலும் மாறாக சாலொமோன் அடுத்து இவ்வாறு கூறுகிறார்: “மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து, தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்” என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்.—நீதிமொழிகள் 9:13-16.
மதியீனம், வாயாடியான, கட்டுப்பாடற்ற, புத்தியில்லாத பெண்ணாக வருணிக்கப்படுகிறது. அவளும் ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறாள். பேதையானவர்களை தன்னிடம் வரும்படி சத்தம்போட்டு அழைப்பதுதான் அவள் வேலை. ஆகவே அவ்வழியாக போகிறவர்கள் அவளிடம் போகலாம் அல்லது போகாமலுமிருக்கலாம். அவர்கள் ஞானத்தின் அழைப்பை ஏற்பார்களா அல்லது மதியீனத்தின் அழைப்பை ஏற்பார்களா?
“திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்”
ஞானமும் மதியீனமும் கேட்கிறவர்களை ‘இவ்விடத்தில் வரும்படி’ அழைக்கின்றன. ஆனால் அழைப்பில் வித்தியாசம் உள்ளது. திராட்சரசத்தையும் இறைச்சியையும் அப்பத்தையும் விருந்தாக தயாரித்து ஞானம் மக்களை அழைக்கிறது. மதியீனம் அளிக்கும் கவர்ச்சியோ, ஒழுக்கமில்லாத பெண்ணின் வழிகளை நமக்கு நினைவுபடுத்துகிறது. சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “மதியீனனை [“நல்ல உள்ளெண்ணம் தேவைப்படுபவனை,” NW] நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.”—நீதிமொழிகள் 9:17.
“மதியற்ற ஸ்திரீ” திராட்சரசத்துக்குப் பதிலாக திருட்டுத் தண்ணீரைக் கொடுக்கிறாள். (நீதிமொழிகள் 9:13) அருமையான மனைவியோடு பாலுறவை அனுபவிப்பதை புத்துயிரளிக்கும் தண்ணீரைக் குடிப்பதற்கு பைபிள் ஒப்பிடுகிறது. (நீதிமொழிகள் 5:15, 16, NW, 17) எனவே திருட்டுத் தண்ணீர் என்பது ஒழுக்கங்கெட்ட பாலுறவில் இரகசியமாக ஈடுபடுவதைக் குறிக்கிறது. இந்தத் தண்ணீர் திராட்சரசத்தைக் காட்டிலும் தித்திப்பானதாக தோன்ற செய்யப்படுகிறது, ஏனென்றால் அது திருடப்பட்டது, அது கண்டுபிடிக்கப்படாது என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது. இரகசியமாக சாப்பிடும் அப்பமும், ஞானம் அளிக்கும் அப்பத்தையும் இறைச்சியையும்விட ருசியுள்ளதாக தோன்ற செய்யப்படுகிறது, ஏனென்றால் அது நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கப்பட்டது. விலக்கப்பட்டதையும் இரகசியமானதையும் கண்டு மயங்குவது மிகப் பெரிய முட்டாள்தனம்.
ஞானத்தின் அழைப்பில் ஜீவன் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் மதியற்ற பெண் தன் வழிகளைப் பின்பற்றினால் வரும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் சொல்லாதிருக்கிறாள். சாலொமோனோ இவ்வாறு எச்சரிக்கிறார்: “மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.” (நீதிமொழிகள் 9:18) “மதியற்ற ஸ்திரீ குடியிருப்பது வீடு அல்ல; அது ஒரு கல்லறையே. நீங்கள் அதற்குள் கால்பதித்துவிட்டால் உயிரோடு திரும்பிவர முடியாது” என்று ஓர் அறிஞர் எழுதுகிறார். ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்வது ஞானமான செயல் அல்ல. அது மரணத்துக்கு வழிநடத்தும்.
இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) நாம் எப்போதுமே ஞானத்தின் மேசையில் சாப்பிட்டு ஜீவனுக்குப் போகிற வழியில் செல்பவர்களுடன் இருப்போமாக.
[பக்கம் 31-ன் படம்]
ஞானமுள்ளவர் கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறார்
[பக்கம் 31-ன் படம்]
ஞானத்தைச் சம்பாதிப்பது தனிப்பட்ட பொறுப்பு