படிப்புக் கட்டுரை 28
தொடர்ந்து கடவுள்பயத்தைக் காட்டுங்கள், நன்மை அடையுங்கள்!
“நேர்மையாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறான்.”—நீதி. 14:2.
பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!
இந்தக் கட்டுரையில்...a
1-2. லோத்துவைப் போலவே இன்று நமக்கும் என்ன பிரச்சினை இருக்கிறது?
நம்மைச் சுற்றி நடக்கும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பார்க்கும்போது, நீதிமானாக இருந்த லோத்துவைப் போலத்தான் நாமும் உணருகிறோம். ‘வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து [அவர்] மிகவும் வேதனைப்பட்டார்.’ ஏனென்றால், அப்படிப்பட்ட நடத்தையை யெகோவா வெறுக்கிறார் என்று அவருக்குத் தெரியும். (2 பே. 2:7, 8) கடவுள்மேல் அவருக்குப் பயமும் அன்பும் இருந்ததால்தான், சுற்றியிருந்த மக்களுடைய ஒழுக்கக்கேடான நடத்தையை அவர் வெறுத்தார். இன்று நம்மைச் சுற்றியிருக்கும் மக்களும், ஒழுக்கம் சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கும் சட்டங்களைத் துளிகூட மதிப்பதில்லை. ஆனால் நாம், கடவுள்மேல் அன்பையும் பயத்தையும் வளர்த்துக்கொண்டே இருந்தால், ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருக்க முடியும்.—நீதி. 14:2.
2 அதைச் செய்வதற்குத் தேவையான உற்சாகத்தையும் உதவியையும் நீதிமொழிகள் புத்தகத்தின் மூலம் யெகோவா நமக்குக் கொடுக்கிறார். ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா கிறிஸ்தவர்களுமே அந்தப் புத்தகத்தில் இருக்கும் ஞானமான அறிவுரைகளிலிருந்து நன்மை அடைய முடியும்.
கடவுள்பயம் நம்மைப் பாதுகாக்கிறது
3. நீதிமொழிகள் 17:3-ன்படி, நம் இதயத்தைப் பாதுகாக்க வேண்டியதற்கு ஒரு முக்கியமான காரணம் என்ன? (படத்தையும் பாருங்கள்.)
3 நம் இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டியதற்கு ஒரு முக்கியமான காரணம், யெகோவா நம் இதயத்தை ஆராய்கிறார். அப்படியென்றால், மற்றவர்களுக்கு நாம் எப்படிப்பட்டவர்களாகத் தெரிகிறோம் என்பதை அவர் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் பார்க்கிறார். (நீதிமொழிகள் 17:3-ஐ வாசியுங்கள்.) என்றென்றும் வாழ உதவும் அவருடைய ஞானமான அறிவுரைகளால் நம் மனதை நிரப்பினால் அவருக்கு நம்மை ரொம்பப் பிடிக்கும். (யோவா. 4:14) அதோடு, சாத்தானாலும் சரி, இந்த உலகத்தாலும் சரி, நம் மனதில் ‘விஷத்தை’ திணிக்க முடியாது. (1 யோ. 5:18, 19) நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போகப் போக, அவர்மேல் இருக்கும் அன்பும் மரியாதையும் அதிகமாகிக்கொண்டே போகும். அவருடைய மனதைக் கஷ்டப்படுத்தக் கூடாதென்று நாம் நினைப்போம். அதனால், பாவம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக்கூட அடியோடு வெறுப்போம். தப்பு செய்ய வேண்டுமென்ற ஆசை வரும்போது, ‘என்மேல் உயிரையே வைத்திருக்கும் ஒருவருடைய மனதைத் தெரிந்தே நோகடிப்பது நியாயமாக இருக்குமா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.—1 யோ. 4:9, 10.
4. பாவப் படுகுழியில் விழாமல் இருக்க கடவுள்பயம் எப்படி ஒரு சகோதரிக்கு உதவியது?
4 குரோஷியாவில் இருக்கும் மார்ட்டா என்ற சகோதரி பாலியல் முறைகேடு என்ற படுகுழியில் கிட்டத்தட்ட விழும் நிலைக்குப் போய்விட்டார்.b அதைப் பற்றி அவர் எழுதும்போது, “என்னால் தெளிவாக யோசிக்க முடியவில்லை. தப்பு செய்ய வேண்டுமென்ற ஆசையை அடக்குவது கஷ்டமாக இருந்தது; அப்போதைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று தோன்றியது. ஆனால், யெகோவாமேல் இருந்த பயம்தான் என்னைக் காப்பாற்றியது” என்று எழுதினார். கடவுள்பயம் எந்த விதத்தில் அவரைக் காப்பாற்றியது? தவறான ஒரு முடிவெடுத்தால் என்ன பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தது அவரைக் காப்பாற்றியதாக அவர் சொல்கிறார். நாமும் அதேபோல் செய்யலாம். இல்லாவிட்டால், நாம் யெகோவாவின் மனதைக் குத்திக் கிழித்துவிடுவோம், என்றென்றும் அவரை வணங்கும் வாய்ப்பையும் இழந்துவிடுவோம். இதைவிட மோசமான ஒரு பின்விளைவு வேறு ஏதாவது இருக்க முடியுமா?—ஆதி. 6:5, 6.
5. லியோவின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
5 நாம் யெகோவாவுக்குப் பயந்து நடந்தால் கெட்டதைச் செய்கிறவர்களோடு நெருங்கிப் பழக மாட்டோம். காங்கோவில் இருக்கும் லியோ என்ற சகோதரர் இந்த விஷயத்தில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஞானஸ்நானம் எடுத்து நான்கு வருஷங்களுக்குப் பிறகு அவர் கெட்ட நண்பர்களோடு பழக ஆரம்பித்தார். ‘நான் அவர்களோடு சேர்ந்து கெட்டது செய்யாதவரைக்கும் இதில் ஒன்றும் தப்பு இல்லை’ என்று அவர் நினைத்தார். ஆனால், கொஞ்ச நாளிலேயே அவருக்குக் குடிப்பழக்கம் வந்துவிட்டது, ஒழுக்கக்கேடாகவும் நடந்துகொண்டார். அதன் பிறகு, யெகோவாவை வணங்கிய தன் அப்பாவும் அம்மாவும் சொல்லிக்கொடுத்த விஷயங்களை யோசித்துப் பார்த்தார். எப்படிப்பட்ட சந்தோஷத்தை அவர் இழந்து நிற்கிறார் என்பதையும் நினைத்துப் பார்த்தார். அதனால், தன்னுடைய தப்பை உணர்ந்து, மூப்பர்களின் உதவியோடு யெகோவாவிடம் திரும்பி வந்தார். இப்போது அவர் ஒரு மூப்பராகவும் விசேஷப் பயனியராகவும் சந்தோஷமாகச் சேவை செய்துவருகிறார்.
6. அடையாள அர்த்தமுள்ள எந்த இரண்டு பெண்களைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம்?
6 இப்போது, நீதிமொழிகள் 9-வது அதிகாரத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இரண்டு பெண்களைப் பற்றி, அதாவது ஞானத்தையும் முட்டாள்தனத்தையும் பற்றி, பார்க்கலாம். (ஒப்பிடுங்கள்: ரோமர் 5:14; கலாத்தியர் 4:24.) அப்படிப் பார்க்கும்போது ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்: சாத்தானின் உலகம் ஒழுக்கக்கேட்டிலும் ஆபாசத்திலும் ஊறிப்போயிருக்கிறது! (எபே. 4:19) அதனால், நாம் தொடர்ந்து கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்வதும் கெட்டதைவிட்டு விலகுவதும் ரொம்ப முக்கியம். (நீதி. 16:6) ஆண்கள், பெண்கள் என நாம் எல்லாருமே நீதிமொழிகள் 9-வது அதிகாரத்திலிருந்து நன்மை அடைய முடியும். இந்த அதிகாரம் சொல்லும் இரண்டு பெண்களுமே, தங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிடும்படி அனுபவமில்லாத ஆட்களை, அதாவது ‘புத்தியில்லாதவர்களை,’ கூப்பிடுகிறார்கள். (நீதி. 9:1, 5, 6, 13, 16, 17) எந்தப் பெண்ணின் அழைப்பை அந்த ஆட்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து ரொம்பவே வித்தியாசமான விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
புத்தியில்லாத பெண்ணின் அழைப்பை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!
7. நீதிமொழிகள் 9:13-18-ல் சொல்லப்பட்டிருக்கும் பெண்ணின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு என்ன கதி ஏற்படும்? (படத்தையும் பாருங்கள்.)
7 “புத்தியில்லாத பெண்” என்ன அழைப்பு கொடுக்கிறாள் என்று பாருங்கள். (நீதிமொழிகள் 9:13-18-ஐ வாசியுங்கள்.) அந்த வெட்கங்கெட்ட பெண், தன்னுடைய வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடச் சொல்லி அனுபவமில்லாதவர்களைக் கூப்பிடுகிறாள். அவளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களின் கதி என்ன? “அவளுடைய வீடு பிணங்களால் நிறைந்திருக்கிறது” என்று 18-வது வசனம் சொல்கிறது. நீதிமொழிகள் 9-வது அதிகாரத்துக்கு முந்தின அதிகாரங்களில் இதேபோன்ற விவரிப்புகள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ‘நடத்தைகெட்ட பெண்ணை’ பற்றியும் ‘ஒழுக்கங்கெட்ட பெண்ணை’ பற்றியும் எச்சரிக்கும்போது, “அவள் வீடு சவக்குழிக்குள் இறங்குகிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. (நீதி. 2:11-19) அதேபோல், இன்னொரு ‘நடத்தைகெட்ட பெண்ணை’ பற்றி எச்சரிக்கும்போது, “அவளுடைய கால் சவக்குழிக்குள் இறங்கும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.—நீதிமொழிகள் 5:3-10.
8. என்ன முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கலாம்?
8 ”புத்தியில்லாத பெண்” கொடுக்கும் அழைப்பைக் கேட்கிறவர்கள் முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று அவர்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. அதே மாதிரியான ஒரு முடிவை நாமும் எடுக்க வேண்டியிருக்கலாம். ஒழுக்கங்கெட்ட விஷயத்தைச் செய்ய யாராவது நம்மைத் தூண்டும்போது அல்லது மீடியாக்களிலோ இன்டர்நெட்டிலோ திடீரென்று ஆபாசப் படங்கள் நம் கண்முன் வரும்போது நாம் என்ன செய்வோம்?
9-10. ஒழுக்கக்கேடாக நடப்பதை என்னென்ன காரணங்களுக்காக நாம் தவிர்க்க வேண்டும்?
9 நாம் ஏன் ஒழுக்கக்கேடாக நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நாம் பார்த்த அந்த “புத்தியில்லாத பெண்,” “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்” என்று சொல்கிறாள். “திருட்டுத் தண்ணீர்” என்றால் என்ன? கணவனும் மனைவியும் அனுபவிக்கிற தாம்பத்திய உறவு புத்துணர்ச்சி தரும் தண்ணீர்போல் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (நீதி. 5:15-18) அப்படியென்றால், சட்டப்படி கல்யாணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் இயல்பான முறையில் செக்ஸ் வைத்துக்கொண்டு அதை சந்தோஷமாக அனுபவிக்கலாம். ஆனால், ‘திருட்டுத் தண்ணீரை’ பற்றி என்ன சொல்லலாம்? முறைகேடான உடலுறவு வைத்துக்கொள்வதை இது ஒருவேளை குறிக்கலாம். பொதுவாக, இது திருட்டுத்தனமாகத்தான் நடக்கிறது, ஒரு திருடன் திருட்டுத்தனமாகத் திருடுவதுபோல்! முறைகேடான உறவு வைத்துக்கொள்கிறவர்கள் தாங்கள் செய்வது யாருக்கும் தெரியவராது என்று நினைக்கும்போது, “திருட்டுத் தண்ணீர்” அவர்களுக்கு இன்னும் தித்திப்பாகத் தெரியலாம். ஆனால், அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள்! ஏனென்றால், யெகோவாவின் பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது! அதுவும், அவர்கள் தித்திப்பு என்று நினைப்பது உண்மையில் கசப்பான ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், யெகோவாவின் தயவை இழப்பதைவிடக் கசப்பான ஒரு அனுபவம் வேறு எதுவும் கிடையாது! (1 கொ. 6:9, 10) அதுமட்டுமல்ல, இன்னும் நிறைய பின்விளைவுகளைக்கூட அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
10 பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களுக்கு அவமானமும், ‘எதற்குமே லாயக்கில்லை’ என்ற உணர்வும் வரலாம். அவர்களுடைய குடும்பம் சிதைந்துபோய்விடலாம். தப்பான உறவு வைத்துக்கொண்டதால் அவர்கள் கர்ப்பமாகக்கூட ஆகிவிடலாம். அப்படியென்றால், அந்தப் புத்தியில்லாத பெண் கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஞானமானது! முறைகேடான உறவு வைத்துக்கொள்ளும் நிறைய பேர், யெகோவாவோடு இருக்கும் நட்பை இழப்பது மட்டுமல்லாமல், மோசமான நோய்களினால் தங்கள் உயிரையும்கூட இழந்துவிடுகிறார்கள். (நீதி. 7:23, 26) அதனால்தான், நீதிமொழிகள் 9-வது அதிகாரத்தின் கடைசி வசனம், “அவளுடைய விருந்தாளிகள் ஆழமான கல்லறையில் கிடக்கிறார்கள்” என்று சொல்கிறது. (வசனம் 18) அப்படியென்றால், ஏன் நிறைய பேர் அவளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு படுகுழியில் விழுகிறார்கள்?—நீதி. 9:13-18.
11. ஆபாசத்தைப் பார்ப்பது ஏன் ரொம்பவே ஆபத்தானது?
11 ஆபாசம் என்ற வலையில் விழுவது இந்த உலகத்தில் ரொம்ப சகஜமாக இருக்கிறது. ஆபாசத்தைப் பார்ப்பதில் எந்த ஆபத்தும் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில், அது ரொம்ப ஆபத்தானது... அசிங்கமானது... நம்மை அடிமைப்படுத்தும் ஒன்று! ஆபாசமான படங்களை அவ்வளவு லேசில் நம்மால் மறக்க முடியாது, அவை நம் மனதில் வந்துகொண்டே இருக்கும். அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஆபாசம் கெட்ட ஆசைகளை ‘அழித்துப்போடுவதற்கு’ பதிலாக அவற்றைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கும். (கொலோ. 3:5; யாக். 1:14, 15) அதனால்தான், ஆபாசத்தைப் பார்க்கும் நிறைய பேர் ஒருநாள் ஒழுக்கக்கேடாக நடந்துவிடுகிறார்கள்.
12. பாலியல் ஆசைகளைத் தூண்டும் படங்களை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
12 நம்முடைய எலெக்ட்ரானிக் சாதனத்தில் திடீரென்று ஒரு ஆபாசப் படம் நம் கண்முன் வந்து நின்றால் என்ன செய்ய வேண்டும்? அதைப் பார்க்காமல் உடனடியாக மாற்றிவிட வேண்டும்! யெகோவாவோடு நமக்கு இருக்கும் நட்புதான் ரொம்ப ரொம்ப விலைமதிப்புள்ளது என்பதை நாம் ஞாபகம் வைத்திருந்தால் அதைச் செய்வது சுலபமாக இருக்கும். சில படங்களை ஆபாசப் படங்கள் என்று ஒருவேளை முத்திரை குத்த முடியாது. ஆனால், அப்படிப்பட்ட படங்கள்கூட பாலியல் ஆசைகளைத் தூண்டலாம். அவற்றைக்கூட நாம் தவிர்க்க வேண்டும். ஏன்? ஏனென்றால், ‘இதயத்தில் முறைகேடான உறவுகொள்ள’ தூண்டுகிற ஒரு சின்னப் படியைக்கூட எடுத்துவைக்க நாம் விரும்புவதில்லை. (மத். 5:28, 29) தாய்லாந்தில் இருக்கும் டேவிட் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “சில படங்களை ஆபாசப் படங்களின் லிஸ்டில் சேர்க்க முடியாதுதான். ஆனால் அதையெல்லாம் நான் பார்த்துக்கொண்டே இருந்தால் யெகோவாவுக்கு என்னைப் பிடிக்குமா என்று என்னையே கேட்டுக்கொள்வேன். அதனால் என்னால் ஞானமாக நடந்துகொள்ள முடிகிறது.”
13. ஞானமாக நடந்துகொள்ள நமக்கு எது உதவும்?
13 யெகோவாவின் மனதைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயம், ஞானமாக நடந்துகொள்ள நமக்கு உதவும். கடவுள்பயம்தான் “ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.” (நீதி. 9:10) இதைப் பற்றி நீதிமொழிகள் 9-வது அதிகாரத்தின் ஆரம்பத்தில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அங்கே “உண்மையான ஞானம்” இன்னொரு பெண்ணாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
“உண்மையான ஞானம்” கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
14. நீதிமொழிகள் 9:1-6-ல் என்ன வித்தியாசமான அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது?
14 நீதிமொழிகள் 9:1-6-ஐ வாசியுங்கள். ஞானமே உருவான நம் படைப்பாளர்... அதாவது உண்மையான ஞானத்தின் ஊற்றாகவும் பிறப்பிடமாகவும் இருப்பவர்... கொடுக்கும் அழைப்பைப் பற்றி நாம் இந்த வசனங்களில் வாசிக்கிறோம். (நீதி. 2:6; ரோ. 16:27) ஏழு தூண்கள் இருக்கும் ஒரு பெரிய வீட்டை உண்மையான ஞானம் கட்டி வைத்திருப்பதாக அங்கே வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? யெகோவா தாராள மனமுள்ளவர்... அவர் சொல்வதைக் கற்றுக்கொண்டு ஞானமாக நடக்க விரும்புகிற எல்லாரையுமே அவர் வரவேற்கிறார்... என்று காட்டுகிறது.
15. என்ன செய்யும்படி கடவுள் நம்மை அழைக்கிறார்?
15 ‘உண்மையான ஞானத்துக்கு’ அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் உதாரணத்திலிருந்து, யெகோவா தாராளமாக அள்ளிக் கொடுப்பவர் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். அந்தப் பெண் இறைச்சியை நன்றாகச் சமைத்து வைத்து, திராட்சமதுவைக் கலந்து வைத்து, பந்தியைத் தயார் செய்திருப்பதாக அந்தப் பதிவு சொல்கிறது. (நீதி. 9:2, அடிக்குறிப்பு) வசனங்கள் 4, 5 சொல்வதுபோல், அவள் “புத்தியில்லாதவர்களைப் பார்த்து, ‘வாருங்கள், நான் தரும் உணவைச் சாப்பிடுங்கள்’” என்று கூப்பிடுகிறாள். இந்தப் பெண்ணின் அழைப்பை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனென்றால், யெகோவா தன் பிள்ளைகள் ஞானமாகவும் பத்திரமாகவும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். வாழ்க்கையில் அடிபட்டுதான் நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று யெகோவா நினைப்பதில்லை. அதனால்தான், “நேர்மையானவர்களுக்காக ஞானத்தை அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.” (நீதி. 2:7) யெகோவாமேல் நமக்குப் பயபக்தி இருந்தால் அவருடைய மனதை சந்தோஷப்படுத்த ஆசைப்படுவோம்... அவர் தரும் ஞானமான அறிவுரைகளைக் கேட்போம்... சந்தோஷமாக அதன்படி நடப்போம்.—யாக். 1:25.
16. ஞானமான தீர்மானத்தை எடுக்க கடவுள்பயம் எப்படி ஆலனுக்கு உதவி செய்தது? அதனால் என்ன பலன் கிடைத்தது?
16 ஞானமான தீர்மானத்தை எடுக்க கடவுள்பயம் எப்படி ஆலன் என்ற மூப்பருக்கு உதவி செய்தது என்று பார்க்கலாம். அவர் ஒரு ஸ்கூல் டீச்சராக வேலை செய்துகொண்டிருந்தார். ஆபாசமான திரைப்படங்களைப் பார்ப்பது ஒருவிதமான செக்ஸ் கல்விதான் என்று அவரோடு வேலை செய்துகொண்டிருந்த நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால், அவர் அதை நம்பி ஏமாந்துபோகவில்லை. “எனக்குக் கடவுள்பயம் இருந்ததால் அப்படிப்பட்ட சினிமாக்களைப் பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதுமட்டுமல்ல, நான் ஏன் அவற்றைப் பார்க்க மாட்டேன் என்று என்கூட வேலை செய்தவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்” என்று அவர் சொல்கிறார். அவர் ‘உண்மையான ஞானத்தின்’ அறிவுரைப்படி, ‘புத்தியின் பாதையில் முன்னேறிச் சென்றார்.’ (நீதி. 9:6) அவர் இவ்வளவு உறுதியாக இருப்பதைப் பார்த்து, அவரோடு வேலை பார்க்கும் சில டீச்சர்கள் இப்போது பைபிளைப் படிக்கிறார்கள், கூட்டங்களுக்கும் வருகிறார்கள்.
17-18. ‘உண்மையான ஞானத்தின்’ அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள், எதிர்காலத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்கும்? (படத்தையும் பாருங்கள்.)
17 நமக்கு ஆசீர்வாதமான வாழ்க்கை கிடைக்க என்ன செய்ய வேண்டுமென்று இந்த இரண்டு பெண்களின் உதாரணத்தைப் பயன்படுத்தி யெகோவா சொல்லிக்கொடுக்கிறார். “புத்தியில்லாத பெண்” கொடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்கள், ஒழுக்கக்கேடான விஷயங்களைத் திருட்டுத்தனமாகச் செய்வதில் கிடைக்கும் அல்ப சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். உண்மையில், அப்போதைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதன் பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் அவர்கள் யோசிப்பதே இல்லை. அதனால் அவர்களுக்கு வரப்போகும் கதி? அவர்கள் ‘ஆழமான கல்லறையில்தான் கிடப்பார்கள்.’—நீதி. 9:13, 17, 18.
18 ஆனால், ‘உண்மையான ஞானத்தின்’ அழைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களின் நிலைமையே வேறு! எப்படி? நமக்காகவே பார்த்துப் பார்த்துத் தயாரிக்கப்பட்ட அருமையான ஆன்மீக விருந்தை நாம் சந்தோஷமாக அனுபவிக்கிறோம். (ஏசா. 65:13) ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா நம்மிடம், “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, நல்ல உணவைச் சாப்பிடுங்கள். அப்போது, உண்மையிலேயே அருமையான உணவைச் சாப்பிடுவதால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள்” என்று சொல்கிறார். (ஏசா. 55:1, 2) யெகோவா நேசிப்பதை நேசிக்கவும் அவர் வெறுப்பதை வெறுக்கவும் நாம் கற்றுக்கொள்கிறோம். (சங். 97:10) அதோடு, ‘உண்மையான ஞானத்திலிருந்து’ நன்மை அடைய மற்றவர்களையும் அழைப்பதால் நமக்குத் திருப்தி கிடைக்கிறது. நாம் “நகரத்தின் உயரமான இடங்களில் நின்றுகொண்டு, ‘அனுபவமில்லாதவர்களே, இங்கே வாருங்கள்’ என்று அறிவிக்கும்” ஊழியர்களைப் போல் இருக்கிறோம். நமக்கும், நம் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் மற்றவர்களுக்கும், இந்தக் காலத்தில் மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். நாம் ‘புத்தியின் பாதையில் முன்னேறிச் செல்வோம்,’ என்றென்றும் ‘வாழ்வோம்.’—நீதி. 9:3, 4, 6.
19. பிரசங்கி 12:13, 14 சொல்வதுபோல், என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்? (“கடவுள்பயம் தரும் நன்மைகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
19 பிரசங்கி 12:13, 14-ஐ வாசியுங்கள். மோசமான இந்தக் கடைசிக் காலத்தில் கடவுள்பயம் நம் இதயத்தைப் பாதுகாக்கும். ஒழுக்கமாக இருப்பதற்கும் கடவுளோடு நெருங்கியிருப்பதற்கும் அது உதவி செய்யும். அதோடு, ‘உண்மையான ஞானத்தை’ தேடவும் அதிலிருந்து நன்மை அடையவும் எவ்வளவு பேரை முடியுமோ அவ்வளவு பேரை அழைக்க அது நம்மைத் தூண்டும்.
பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்
a கிறிஸ்தவர்கள் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், அது அவர்களுடைய இதயத்தைப் பாதுகாக்கும்... பாலியல் முறைகேட்டிலும் ஆபாசத்திலும் சிக்காமல் இருக்க உதவும். இந்தக் கட்டுரையில், நீதிமொழிகள் 9-வது அதிகாரத்தைப் பற்றிப் பார்ப்போம். ஞானத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை நமக்குப் புரியவைப்பதற்காக, அந்த இரண்டையும் இரண்டு பெண்களாக அந்த அதிகாரம் வர்ணிக்கிறது. அதில் இருக்கும் அறிவுரைகள் இந்தக் காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.