செல்வம் மற்றும் வறுமையின் ஆபத்துக்கள்
பைபிள் செல்வத்தின் மதிப்பை குறைவுபடுத்தி வறுமையை ஊக்குவிக்கிறதா? அநேக ஆட்கள் அவ்விதமாக நினைக்கிறார்கள். ஆனால் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட இரண்டு நீதிமொழிகள் இதைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவி செய்கின்றன.
நீதிமொழிகள் 10:15 சொல்வதாவது: “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையே அவர்களைக் கலங்கப் பண்ணும்.” வசனம் 16 தொடர்ந்து சொல்வதாவது: “நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும் துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.” இந்த இரண்டு வசனங்கள் எவ்விதமாக ஒன்றையொன்று முழுமையாக்குகின்றன என்பதைக் கவனியுங்கள்.
செல்வம் அதனுடைய நன்மைகளையும், வறுமை அதன் தீமைகளையும் கொண்டிருப்பதாக வசனம் 15 ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. செல்வங்கள் வாழ்க்கையில் ஒரு சில அநிச்சயங்களிலிருந்து ஒருவரை பாதுகாக்க உதவியாக இருக்கக்கூடும். ஆனால் ஏழ்மையிலிருக்கும் நபர், எதிர்பாராத சம்பவங்களைச் சமாளிக்க, பொருள் சம்பந்தமாக வசதியற்றவராக இருப்பதன் காரணமாக கூடுதலான பிரச்னைகளையுடையவராக இருக்கக்கூடும்.—பிரசங்கி 7:12
என்றபோதிலும், வசனம் 15, செல்வம் அல்லது வறுமையில் உட்பட்டிருக்கும் ஒரு ஆபத்தைச் சாடையாக குறிப்பிடுவதாகவும் கூட புரிந்துகொள்ளப்படலாம். ஐசுவரியவான் பணத்தில் முழுமையாக தன் நம்பிக்கையை வைக்கிறான்; அதுவே அவனுக்குத் தேவைப்படும் எல்லா பாதுகாப்பு என்பதாக அவன் கருதுகிறான். (நீதிமொழிகள் 18:11) என்றபோதிலும் செல்வமானது அவனுக்கு கடவுளிடம் ஒரு நற்பெயரைப் பெற்றுத் தரவோ அல்லது அவனுடைய நித்திய மகிழ்ச்சியை உறுதிசெய்யவோ முடியாது. உண்மையில் செல்வங்கள் அதை இன்னும் அதிக கடினமானதாக்கிவிடக்கூடும். பெரிய களஞ்சியங்களைக் கட்டி ஆனால் கடவுளிடமாக ஐசுவரியவானாக இல்லாத ஒரு செல்வந்தனைப்பற்றிய இயேசுவின் உவமை இதைக் காண்பிக்கிறது. (லூக்கா 12:24, 25) மறுபட்சத்தில் ஏழ்மையிலுள்ள அநேகர், தங்கள் வறுமையின் காரணமாக எதிர்காலம் நம்பிக்கையற்றதாக இருக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
வசனம் 16 எவ்விதமாக விஷயத்தைத் தெளிவுப்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். நீதிமானுக்கு பொருள் சம்பந்தமாக அதிகமிருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அவனுடைய வேலை அவனுக்கு இன்பத்தைக் கொண்டு வரக்கூடும். தன் வேலையினால் கிடைக்கும் பொருளாதார ஆதாயம், கடவுளுக்கு முன்பாக தனக்கிருக்கும் நல்ல நிலைநிற்கையோடு தலையிடுவதை அவன் அனுமதிப்பதில்லை. மாறாக, வாழ்க்கையில் ஒரு நீதிமானின் முயற்சிகள் அவனுக்கு இப்பொழுது சந்தோஷத்தைக் கொண்டு வருவதோடுக்கூட, எதிர்காலத்தில் நித்திய ஜீவனின் நம்பிக்கையையும் கொண்டு வருகிறது. (யோபு 42:10-13) ஆனால் பொல்லாதவனோ அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டாலும்கூட நன்மையடைவதில்லை. பாதுகாப்பு அளிக்கக்கூடிய பணத்தின் மதிப்பைப் போற்றி கடவுளுடைய சித்தத்திற்கிசைவாக வாழ்வதற்குப் பதிலாக அவன் பாவமுள்ள ஒரு வாழ்க்கையை முன்னேற்றுவித்துக்கொள்ள தன் செல்வங்களைப் பயன்படுத்துகிறான். (w87 9⁄15)