-
தடைகளைத் தாண்டி படியுங்கள்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
பாடம் 12
தடைகளைத் தாண்டி படியுங்கள்
பைபிள் படிப்பது ஒரு சந்தோஷமான பயணம் மாதிரி. வழியில் சில தடைகள் வரலாம். பயணத்தை நிறுத்திவிடலாமா என்றுகூட நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். ஆனாலும், தொடர்ந்து பயணம் செய்வது ஏன் நல்லது? தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு எது உதவி செய்யும்?
1. பைபிளைப் படிப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
பைபிள் ஒரு அற்புதமான புத்தகம். “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.” (எபிரெயர் 4:12) அதைப் படிக்கும்போது, கடவுள் என்ன யோசிக்கிறார் என்றும், உங்கள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்றும் தெரிந்துகொள்வீர்கள். உங்களுக்கு அறிவு மட்டுமல்லாமல், உண்மையான ஞானமும் நம்பிக்கையும்கூட கிடைக்கும். அதைவிட முக்கியமாக, உங்களால் யெகோவாவின் நண்பராக முடியும். மொத்தத்தில், பைபிளைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கையே சந்தோஷமாகிவிடும்!
2. பைபிளின் மதிப்பைப் புரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்?
பைபிளில் இருக்கிற உண்மைகள் சுத்தமான தங்கத்தைவிட விலைமதிப்புள்ளவை. அதனால்தான், “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:23) பைபிளில் இருக்கிற உண்மைகளின் மதிப்பை நாம் புரிந்துகொண்டால், என்னதான் தடைகள் வந்தாலும் தொடர்ந்து பைபிளைப் படிப்போம்.—நீதிமொழிகள் 2:4, 5-ஐ வாசியுங்கள்.
3. பைபிளைத் தொடர்ந்து படிக்க எந்த விதங்களில் யெகோவா உங்களுக்கு உதவுவார்?
யெகோவா எல்லா சக்தியும் உள்ளவர், உங்களுக்கு உயிர் கொடுத்தவர், உங்களுடைய நண்பர். அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார். அவர் உங்களுக்கு “ஆர்வத்தையும் வல்லமையையும்” கொடுப்பார். (பிலிப்பியர் 2:13-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், பைபிளைப் படிப்பதற்கோ அது சொல்கிறபடி நடப்பதற்கோ உங்களுக்கு இன்னும் ஊக்கம் தேவைப்பட்டால் யெகோவா அதைக் கொடுப்பார். அதுமட்டுமல்ல, தடைகளை அல்லது எதிர்ப்பை சமாளிக்க இன்னும் அதிக பலம் தேவைப்பட்டால் அதையும் அவர் கொடுப்பார். அதனால், தொடர்ந்து பைபிளைப் படிப்பதற்கு எப்போதும் அவரிடம் உதவி கேளுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 5:17.
ஆராய்ந்து பார்க்கலாம்!
உங்களுக்கு நேரமே இல்லாத அளவுக்கு வேலைகள் இருந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும் எப்படித் தொடர்ந்து பைபிளைப் படிக்கலாம்? அதற்கு யெகோவா எப்படி உதவி செய்வார்? இப்போது பார்க்கலாம்.
4. பைபிளைப் படிப்பதற்கு முதலிடம் கொடுங்கள்
சிலசமயம், நாம் ரொம்ப வேலையாக இருப்பதால் பைபிளைப் படிப்பதற்கு நேரமே இல்லாததுபோல் தெரியலாம். அப்போது என்ன செய்வது? பிலிப்பியர் 1:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வாழ்க்கையில் எதெல்லாம் “மிக முக்கியமான காரியங்கள்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம்?
ஒரு பக்கெட்டில் முதலில் மண்ணைப் போட்டுவிட்டுப் பிறகு கற்களை வைக்க முயற்சி செய்தால் அவற்றை வைக்க முடியாது
ஆனால், முதலில் கற்களை வைத்துவிட்டால் மண்ணையும் பெரும்பாலும் நிரப்பிவிட முடியும். அதேபோல், ‘மிக முக்கியமான காரியங்களை’ முதலில் செய்து முடித்துவிட்டால் மற்ற விஷயங்களைச் செய்வதற்கும் உங்களுக்கு நேரம் இருக்கும்
நம் ஆன்மீகத் தேவையை, அதாவது ஆன்மீக விஷயங்களில் நமக்கு இருக்கிற ஆர்வப்பசியை, பைபிள் பூர்த்தி செய்யும். மத்தேயு 5:3-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிளைப் படிப்பதற்கு முதலிடம் கொடுத்தால் என்ன நன்மை கிடைக்கும்?
5. எதிர்ப்புகள் வந்தாலும் தொடர்ந்து படியுங்கள்
சிலசமயம், பைபிளைப் படிக்க வேண்டாமென்று யாராவது உங்களிடம் சொல்லலாம். பிரான்செஸ்கோவின் உதாரணத்தைப் பாருங்கள். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
பைபிள் படிப்பது பற்றி பிரான்செஸ்கோ சொன்னபோது அவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் என்ன செய்தார்கள்?
அவர் விடாமல் பைபிளைப் படித்ததால் என்ன பலன் கிடைத்தது?
2 தீமோத்தேயு 2:24, 25-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
நீங்கள் பைபிள் படிப்பதைப் பற்றி உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் என்ன சொல்கிறார்கள்?
நீங்கள் பைபிளைப் படிப்பது யாருக்காவது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஏன்?
6. யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவுவார்
நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போகப் போக, அவருக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும்.ஆனால், யெகோவா எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வது சிலருக்குக் கஷ்டமாகத் தெரியலாம். உங்களுக்கும் அப்படித்தானா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள். யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார். வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வதற்கு ஜிம் என்ன மாற்றங்களைச் செய்தார்?
அவருடைய அனுபவத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?
எபிரெயர் 11:6-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவாவை “ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு,” அதாவது அவரைத் தெரிந்துகொள்ளவும் சந்தோஷப்படுத்தவும் ஊக்கமாக முயற்சி செய்கிறவர்களுக்கு, அவர் என்ன செய்வார்?
பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சியைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?
யாராவது இப்படிக் கேட்கலாம்: “பைபிள ஏன் படிக்கிறீங்க?”
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
சுருக்கம்
பைபிளைப் படிப்பது எப்போதுமே சுலபம் இல்லை என்றாலும், இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ்வதற்கு அது உதவும். யெகோவாவிடம் எப்போதும் உதவி கேளுங்கள், அவர் நிச்சயம் உதவுவார்.
ஞாபகம் வருகிறதா?
பைபிளில் இருக்கிற உண்மைகளை நீங்கள் ஏன் மதிக்கிறீர்கள்?
‘மிக முக்கியமான காரியங்களுக்கு’ நீங்கள் எப்படி முதலிடம் கொடுக்கலாம்?
விடாமல் பைபிளைப் படிப்பதற்கு நீங்கள் ஏன் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும்?
அலசிப் பாருங்கள்
நேரத்தை சரியாகப் பயன்படுத்த நிறைய பேருக்கு உதவி செய்திருக்கும் நான்கு விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
“பொன்னான நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்” (விழித்தெழு!, ஏப்ரல் 2014)
ஒரு பெண் பைபிளைப் படித்தார். ஆனால், அவருடைய கணவருக்கு அது பிடிக்கவில்லை. யெகோவா எப்படி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தார் என்று பாருங்கள்.
ஒரு மனைவியின் விடாமுயற்சியினால் அவருடைய கணவர் எப்படிப் பயன் அடைந்தார் என்று பாருங்கள்.
யெகோவாவின் சாட்சிகள் குடும்பங்களைப் பிரிப்பதாகச் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், அது உண்மையா?
-
-
நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
பாடம் 35
நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?
நாம் எல்லாருமே தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. நிறைய தீர்மானங்கள் நம் வாழ்க்கையையே மாற்றிவிடலாம், யெகோவாவோடு இருக்கும் நம் பந்தத்தையும் பாதிக்கலாம். உதாரணத்துக்கு, எங்கே வாழ்வது, என்ன வேலை செய்வது, கல்யாணம் செய்வதா வேண்டாமா என்றெல்லாம் நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கலாம். சரியான முடிவுகளை எடுத்தால் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், யெகோவாவும் சந்தோஷப்படுவார்.
1. சரியான முடிவுகளை எடுக்க பைபிள் எப்படி உதவும்?
உதவிக்காக முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பிறகு, அந்த விஷயத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று பைபிளில் தேடிப் பாருங்கள். (நீதிமொழிகள் 2:3-6-ஐ வாசியுங்கள்.) அது சம்பந்தமாக அவர் நேரடியான கட்டளை தந்திருந்தால், அதற்குக் கீழ்ப்படிவதுதான் சரியான முடிவாக இருக்கும்.
நேரடியான கட்டளை இல்லையென்றால்? கவலைப்படாதீர்கள்! அப்போதும், “நீங்கள் நடக்க வேண்டிய வழியில்” யெகோவா உங்களை நடத்துவார். (ஏசாயா 48:17) எப்படி? பைபிள் நியமங்கள் மூலமாக! அவருடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள உதவுகிற அடிப்படையான உண்மைகள்தான் அந்த நியமங்கள். பைபிளில் ஒரு பதிவைப் படிக்கும்போது ஒரு விஷயத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று பெரும்பாலும் தெரிந்துகொள்ள முடியும். அப்போது, அவரை சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுக்க முடியும்.
2. ஒரு முடிவெடுப்பதற்கு முன்பு எதையெல்லாம் யோசிக்க வேண்டும்?
“சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நேரமெடுத்து யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ‘இது சம்பந்தமா பைபிள்ல என்னென்ன நியமங்கள் இருக்கு? எந்த முடிவை எடுத்தால் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்? நான் எடுக்கிற முடிவு மத்தவங்கள எப்படி பாதிக்கும்? முக்கியமா, அது யெகோவாவோட மனச சந்தோஷப்படுத்துமா?’ என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.—உபாகமம் 32:29.
நமக்கு எது நல்லது எது கெட்டது என்று சொல்லும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது. அதனால், அவருடைய சட்டங்களையும் நியமங்களையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது, நம் மனசாட்சிக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மனசாட்சி என்பது எது சரி, எது தவறு என்பதை சுட்டிக்காட்டும் உணர்வு. (ரோமர் 2:14, 15) பயிற்சி கொடுக்கப்பட்ட மனசாட்சி சரியான முடிவுகளை எடுக்க உதவும்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
சரியான முடிவுகளை எடுப்பதற்கு பைபிள் நியமங்களும் நம் மனசாட்சியும் எப்படி உதவி செய்யும் என்று பார்க்கலாம்.
3. பைபிள் நியமங்களின்படி முடிவெடுங்கள்
நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் நியமங்கள் எப்படி உதவும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
யெகோவா நமக்கு என்ன சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?
ஏன் அந்த சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?
அந்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த எதைக் கொடுத்து உதவியிருக்கிறார்?
உதாரணமாக, ஒரு பைபிள் நியமத்தை எபேசியர் 5:15, 16-ல் படித்துப் பாருங்கள். பிறகு, இதையெல்லாம் செய்வதற்கு எப்படி ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தலாம்’ என்று கலந்துபேசுங்கள்:
தவறாமல் பைபிள் படிப்பதற்கு.
நல்ல கணவனாக, மனைவியாக, பெற்றோராக, மகனாக, அல்லது மகளாக ஆவதற்கு.
சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு.
4. மனசாட்சிக்குப் பயிற்சி கொடுங்கள்
ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான கட்டளை இருக்கும்போது சரியான முடிவெடுப்பது சுலபம். ஆனால், அப்படி இல்லாதபோது? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் வந்த சகோதரி, மனசாட்சிக்குப் பயிற்சி கொடுக்கவும் யெகோவாவுக்குப் பிடித்த முடிவை எடுக்கவும் என்னென்ன செய்தார்?
நமக்காக மற்றவர்களை முடிவெடுக்கச் சொல்வது ஏன் சரியாக இருக்காது? எபிரெயர் 5:14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
மற்றவர்களிடம் கேட்பது சுலபமாக இருந்தாலும், எதைப் பிரித்துப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?
மனசாட்சிக்குப் பயிற்சி கொடுப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் நமக்கு உதவி செய்ய என்னென்ன கருவிகள் இருக்கின்றன?
நம் மனசாட்சி ஒரு வரைபடம் போன்றது, நாம் போக வேண்டிய பாதையை அது நமக்குக் காட்டும்
5. மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுங்கள்
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முடிவெடுப்போம். நாம் எப்படி மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கலாம்? இரண்டு சூழ்நிலைகளை இப்போது கவனிக்கலாம்:
சூழ்நிலை 1: ஒரு சகோதரிக்கு மேக்கப் போட்டுக்கொள்ள பிடிக்கும். ஆனால் அவர் மாறிப் போகும் சபையில் இருக்கும் சகோதரிகளுக்கு அது உறுத்தலாக இருக்கிறது.
ரோமர் 15:1-ஐயும் 1 கொரிந்தியர் 10:23, 24-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்த வசனங்களின் அடிப்படையில் அந்தச் சகோதரி என்ன முடிவெடுக்கலாம்? உங்கள் மனசாட்சிக்கு சரியாக படுகிற விஷயம் இன்னொருவருடைய மனசாட்சியை உறுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
சூழ்நிலை 2: அளவோடு குடிப்பதை பைபிள் தடை செய்வதில்லை என்று ஒரு சகோதரருக்குத் தெரியும். ஆனாலும், குடிக்கவே கூடாதென்று அவர் முடிவு செய்திருக்கிறார். ஒரு பார்ட்டியில் மற்ற சகோதரர்கள் மதுபானம் குடிப்பதை அவர் பார்க்கிறார்.
பிரசங்கி 7:16-ஐயும் ரோமர் 14:1, 10-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்த வசனங்களின் அடிப்படையில் அந்தச் சகோதரர் என்ன முடிவெடுக்கலாம்? உங்கள் மனசாட்சிக்கு உறுத்தலாக இருக்கும் ஒரு விஷயத்தை இன்னொருவர் செய்யும்போது நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?
நல்ல முடிவெடுக்க படிகள்
1. சரியான முடிவெடுக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள்.—யாக்கோபு 1:5.
2. பொருத்தமான நியமங்களைக் கண்டுபிடிக்க பைபிளிலும் பைபிள் பிரசுரங்களிலும் ஆராய்ச்சி செய்யுங்கள். அனுபவமுள்ள கிறிஸ்தவர்களிடமும் பேசிப் பாருங்கள்.
3. உங்கள் முடிவு உங்கள் மனசாட்சியையும் மற்றவர்களுடைய மனசாட்சியையும் எப்படிப் பாதிக்கும் என்று யோசியுங்கள்.
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நம் இஷ்டப்படி முடிவு எடுக்குறதுக்கு நமக்கு உரிமை இருக்கு. மத்தவங்க என்ன நினைச்சா நமக்கென்ன!”
நாம் எடுக்கும் முடிவைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், கடவுள் என்ன நினைப்பார் என்றெல்லாம் நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?
சுருக்கம்
நல்ல முடிவை எடுப்பதற்கு அந்த விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய முடிவு மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஞாபகம் வருகிறதா?
யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
உங்கள் மனசாட்சிக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?
மற்றவர்களுடைய மனசாட்சிக்கு நீங்கள் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?
அலசிப் பாருங்கள்
கடவுளோடு உங்களுக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி முடிவுகள் எடுக்கலாம்?
“நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...” (காவற்கோபுரம், ஏப்ரல் 15, 2011)
யெகோவா நமக்கு எப்படி ஆலோசனை கொடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு கஷ்டமான முடிவை எடுக்க ஒருவருக்கு எதுவெல்லாம் உதவி செய்தன என்று பாருங்கள்.
யெகோவா நேரடியான சட்டங்களைக் கொடுக்காத சூழ்நிலையில்கூட அவருக்குப் பிடித்த முடிவுகளை நாம் எப்படி எடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“எதற்கெடுத்தாலும் உங்களுக்கு பைபிள் சட்டம் தேவையா?” (காவற்கோபுரம், டிசம்பர் 1, 2003)
-