‘விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்’
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தரும் வழிகாட்டுதல் “பொன்னிலும், மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கது.” (சங்கீதம் 19:7-10) ஏன்? ஏனெனில் ‘ஞானியின் [யெகோவாவின்] போதகம் ஜீவ ஊற்று; அதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்.’ (நீதிமொழிகள் 13:14) பைபிளின் ஆலோசனைகளை கடைப்பிடித்தால், நம் வாழ்க்கைத் தரம் உயரும்; உயிருக்கு உலைவைக்கும் கண்ணிகளையும் தவிர்க்கலாம். அப்படியென்றால், வேதவசனங்களில் காணப்படும் நல்லறிவை நாடுவதும் நாம் கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் மிக முக்கியம் அல்லவா?
நீதிமொழிகள் 13:15-25-ல், நல்லறிவோடு நடப்பதற்கு உதவும் அநேக ஆலோசனைகளை பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் பதிவு செய்துள்ளார். மேம்பட்ட வாழ்க்கைக்கு, ஆம் நீடித்த வாழ்க்கைக்கு அவை வழிநடத்தும்.a பிறருடைய நன்மதிப்பைப் பெறவும், ஊழியத்தில் உண்மையோடு நிலைத்திருக்கவும், சிட்சையைக் குறித்து சரியான மனப்பான்மையை பெறவும், நண்பர்களை ஞானமாக தேர்ந்தெடுக்கவும் கடவுளுடைய வார்த்தை நமக்கு எவ்வாறு உதவும் என்பதை ரத்தினச்சுருக்கமான பழமொழிகளைச் சொல்லி விளக்கியுள்ளார். மேலும், நம் பிள்ளைகளை அன்போடு சிட்சிப்பதிலும் அவர்களுக்கு ஆஸ்தியை வைத்துப்போவதிலும் எவ்வாறு ஞானமாக செயல்படலாம் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த உட்பார்வை நன்மதிப்பைச் சேர்க்கும்
“நற்புத்தி [அதாவது சிறந்த உட்பார்வை] தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது” என சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 13:15) “சிறந்த உட்பார்வை,” அதாவது சரியான புரிந்துகொள்ளுதல் என்பதற்கு மூலமொழியில், “புத்திக்கூர்மை, தெளிவான பகுத்துணர்வு, ஞானமான கருத்துகள்” என அர்த்தப்படுத்துவதாக ஓர் ஏடு தெரிவிக்கிறது. இந்தப் பண்புகளையுடைய ஒருவருக்கு மற்றவர்களின் தயையை அல்லது நன்மதிப்பைப் பெறுவது கஷ்டமான காரியம் இல்லை.
சக கிறிஸ்தவராகிய பிலேமோனுடன் அப்போஸ்தலன் பவுல் உட்பார்வையுடன் நடந்துகொண்ட விதத்தை சற்று கவனியுங்கள். பிலேமோனிடமிருந்து ஓடிவந்த அவரது அடிமையாகிய ஒநேசிமு பின்னர் கிறிஸ்தவராக ஆகியிருந்தார். அவரை மறுபடியும் பிலேமோனிடமே பவுல் அனுப்பினார். தன்னை எப்படி வரவேற்பாரோ அதேவிதமாகவே ஒநேசிமுவையும் தயவான முறையில் வரவேற்கும்படி பிலேமோனை பவுல் உற்சாகப்படுத்தினார். பிலேமோனுக்கு ஒநேசிமு திருப்பிக் கொடுக்க வேண்டிய பணம் ஏதும் பாக்கி இருந்தாலும் அதை தானே கொடுப்பதாகவும் பவுல் கூறினார். அவர் நினைத்திருந்தால், அப்போஸ்தலனாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிலேமோனை சரியாக நடக்கும்படி கட்டளை இட்டிருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுல் சாதுரியமாகவும் அன்பாகவும் செயல்பட்டார். இப்படி நடந்துகொள்வதால், பிலேமோன் தன்னோடு ஒத்துழைப்பார் என்றும் தான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே செய்வார் என்றும் நம்பினார். சக விசுவாசிகளோடு நாமும் இதே விதத்தில் நடக்க வேண்டும் அல்லவா?—பிலேமோன் 8-21.
நம்பிக்கைத் துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. இதன் அர்த்தம்? “துன்மார்க்கருடைய உணர்ச்சியற்ற கொடூர நடத்தை, தீவிரமானது அல்லது உறுதியானது. . . . தீய வழிகளில் உறுதியாய் இருப்பவன் பிறர் தரும் ஞானமான அறிவுரைகளை அசட்டை பண்ணி உணர்ச்சியற்று இருப்பதால், அழிவின் பாதையில் செல்கிறான்” என அறிஞர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
சாலொமோன் தொடர்ந்து கூறுகிறார்: “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.” (நீதிமொழிகள் 13:16) விவேகம் என்பது அறிவுடன் சம்பந்தப்படுத்தி இங்கு பேசப்படுகிறது. ஒரு செயலை செய்யும் முன் தீர ஆலோசித்து கவனமாக செயல்படும் ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. அநியாயமாக குறை கூறப்படுகையில் அல்லது அவமதிக்கப்படுகையில் விவேகி தன் நாவை அடக்குகிறார். அளவுக்கு மிஞ்சி எரிச்சல் அடையாதபடிக்கு, பரிசுத்த ஆவியின் கனியைப் பிறப்பிக்க உதவும்படி கடவுளிடம் ஜெபிக்கிறார். (கலாத்தியர் 5:22, 23) விவேகி தன்னைக் கட்டுப்படுத்த மற்றவரை அல்லது சூழ்நிலையை அனுமதிப்பதில்லை. மாறாக, அமைதியைக் காத்துக்கொள்வதன் மூலம் எளிதில் புண்பட்டு சட்டென்று கோபப்படுகிறவர்களுக்கு வரும் ஓயாத சண்டை சச்சரவுகளை தவிர்க்கிறார்.
விவேகமுள்ளவர் தீர்மானங்களை எடுக்கும்போதும் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார். ஊகத்தின் அடிப்படையிலோ உணர்ச்சிகளின் அடிப்படையிலோ அல்லது கூட்டத்தோடு கூட்டமாக செல்வதாலோ ஞானமாக செயல்பட முடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே, எந்தவொரு சூழ்நிலையையும் நிதானமாக தீர ஆராய்கிறார். அதற்குத் தேவையான எல்லா ஆதாரங்களையும் அலசுகிறார்; பின்னர் தனக்குமுன் இருக்கும் தெரிவுகளை தீர்மானிக்கிறார். வேதவசனங்களை ஆராய்கிறார்; எந்த பைபிள் சட்டங்கள் அல்லது நியமங்கள் தன் சூழ்நிலைக்கு பொருந்துகின்றன என்று தீர்மானிக்கிறார். இப்படி செயல்படும் நபரின் வாழ்க்கை செவ்வையான அல்லது நேரான பாதையில் செல்லும்.—நீதிமொழிகள் 3:5, 6.
“உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஔஷதம்”
கடவுள் கொடுத்த செய்தியை அறிவிக்கும் கடமை யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு இருக்கிறது. நம் வேலையை முழுமையாக நிறைவேற்றுவதில் உண்மையுடன் நிலைத்திருக்க அடுத்த நீதிமொழி உதவுகிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஔஷதம்.”—நீதிமொழிகள் 13:17.
தூதுவனுடைய பண்புகள் இங்கு அழுத்திக் காண்பிக்கப்படுகின்றன. செய்தியை கொண்டு செல்லும் தூதுவன் செய்தியை மாற்றியோ தீய எண்ணத்தோடு திரித்தோ கூறினால் என்ன ஏற்படும்? மோசமான தண்டனையைத்தான் பெறுவான் அல்லவா? தீர்க்கதரிசி எலிசாவின் வேலையாள் கேயாசியின் உதாரணத்தை சற்று சிந்தியுங்கள். சீரிய படைத் தலைவனாகிய நாகமானிடம் பொய்யான ஒரு செய்தியை சொன்னான். நாகமானைப் பிடித்திருந்த குஷ்டரோகம் பேராசை பிடித்த கேயாசிக்கு வந்தது. (2 இராஜாக்கள் 5:20-27) தூதுவன் உண்மையற்றவனாக, செய்தியை சொல்லாமலே நிறுத்தி விட்டால்? “தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்” என யெகோவா சொல்வதாக பைபிள் குறிப்பிடுகிறது.—எசேக்கியேல் 33:8, பொது மொழிபெயர்ப்பு.
மறுபட்சத்தில், உண்மையுள்ள ஸ்தானாபதியோ, அதாவது தூதுவனோ தன்னையும் தன் செய்தியை கேட்போரையும் காப்பாற்றுகிறான். “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்ளுவாய்” என தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுறுத்தினார். (1 தீமோத்தேயு 4:16) ராஜ்ய நற்செய்தியை உண்மையோடு அறிவிப்பது எப்படிப்பட்ட குணப்படுத்துதலை நிகழ்த்துகிறது என்பதை சற்று சிந்தியுங்கள். நல்மனமுள்ள ஆட்களைத் தட்டி எழுப்பி, விடுதலை அளிக்கும் சத்தியத்தின் பாதையில் அவர்களை வழிநடத்துகிறது. (யோவான் 8:32) ஜனங்கள் செய்தியை கேட்க மறுத்தாலும், உத்தமமுள்ள ஸ்தானாதிபதி ‘தன் உயிரைக் காத்துக்கொள்வான்.’ (எசேக்கியேல் 33:9, பொ.மொ.) பிரசங்கிக்க வேண்டியது நம் பொறுப்பு, அதைத் தட்டிக்கழிக்காமல் நிறைவேற்றுவோமாக. (1 கொரிந்தியர் 9:16) அதோடு, “திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு”வதில் எப்போதும் ஜாக்கிரதையாய் இருப்போமாக; ஜனங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒருபோதும் அதன் வலிமையை குறைக்காமல் இருப்போமாக அல்லது அதை அதிக கவர்ச்சியாக்காமல் இருப்போமாக.—2 தீமோத்தேயு 4:2.
“கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்”
விவேகி தனக்கு கிடைக்கும் பயனுள்ள ஆலோசனையை ஆத்திரப்பட்டு எதிர்ப்பானா? நீதிமொழிகள் 13:18 சொல்கிறது: “புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.” நாம் கேட்காமலேயே கடிந்துகொள்ளுதல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருப்பதுதான் ஞானமான செயல். நல் ஆலோசனை தேவை என்பதை நாம் உணராதிருக்கும் சமயத்தில் அது உண்மையில் நமக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கலாம். அப்படிப்பட்ட ஆலோசனைகளை ஏற்பது தொல்லைகளில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கும். அதோடு, சோகமான சில விளைவுகளில் இருந்தும் காக்கும். ஆனால் அறிவுரைகளைப் புறக்கணித்தால், இகழ்ச்சிதான் மிஞ்சும்.
தக்க சமயத்தில் கொடுக்கப்படும் பாராட்டுகள் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கும், உற்சாகப்படுத்தும். அதேசமயத்தில், கடிந்துகொள்ளுதலை பெறவும் காத்திருக்க வேண்டும், அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டு கடிதங்களையும் சற்று கவனியுங்கள். அக்கடிதத்தில் தீமோத்தேயுவின் உண்மைத்தன்மையை பாராட்டியபோதிலும் அவருக்கு ஏராளமான புத்திமதிகளையும் வழங்கினார். விசுவாசமும் நல்ல மனச்சாட்சியும் கொண்டிருத்தல், சபையில் மற்றவர்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ளுதல், தேவ பக்தியையும் போதுமென்ற மனதையும் வளர்த்துக்கொள்ளுதல், மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குதல், விசுவாச துரோகத்தை எதிர்த்தல், ஊழியத்தை முழுமையாக செய்தல் ஆகிய பல விஷயங்களைப் பற்றி இளைஞனாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் தாராளமாக அறிவுரை வழங்கினார். இன்றும் சபையிலுள்ள இளையவர்கள் ஆலோசனைக்காக அனுபவமிக்க சகோதரர்களை அணுகலாம்; ஆலோசனை கொடுக்கப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளலாம்.
‘ஞானிகளோடு நடத்தல்’
“வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு” என ஞானமுள்ள அரசர் கூறுகிறார். (நீதிமொழிகள் 13:19) இந்த நீதிமொழியின் அர்த்தத்தை ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது. “ஓர் இலக்கை அடையும்போது அல்லது ஓர் ஆசை நிறைவேறும்போது, திருப்தியான ஓர் உணர்வினால் மனிதன் மனநிறைவு அடைகிறான். . . . குறிக்கோளை அடைவது ஒருவருக்கு மிகவும் இனிமையான அனுபவம். எனவே, தீமையினின்று விலகுதல் மூடருக்கு வெறுப்பாக இருக்க வேண்டும். அவர்களுடைய இலட்சியங்களை தீய வழியில்தான் அடைய முடியும். ஆகவே தீமையை விட்டுவிட்டால், தங்கள் ஆசைகளை அடையும் இன்பத்தை பெறமாட்டார்கள்.” அப்படியெனில், நமக்கு சரியான விருப்பங்கள் இருப்பது எவ்வளவு அவசியம்!
நம் கூட்டாளிகள் நமது யோசனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் மாற்ற வல்லவர்கள்! எனவேதான், காலத்தால் அழியாத ஓர் உண்மையை சாலொமோன் சொல்கிறார்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) பொழுதுபோக்கு, இன்டர்நெட், நாம் வாசிக்கும் விஷயங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும்கூட யாரோடு கூட்டுறவு கொள்கிறோம் என்பது நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் அல்லது எப்படிப்பட்டவர்களாக ஆவோம் என்பதன் பேரில் செல்வாக்கு செலுத்தும். அப்படியானால், நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் ஞானமாக செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியம்!
‘சுதந்திரம் வைத்துப்போதல்’
“பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்” என இஸ்ரவேலின் அரசர் வலியுறுத்துகிறார். (நீதிமொழிகள் 13:21) நீதியை நாடுதல் நன்மையைத் தரும்; ஏனென்றால் நீதிமான்களை யெகோவா பராமரிக்கிறார். (சங்கீதம் 37:25) என்றாலும், “சமயமும் எதிர்பாராத சம்பவங்களும்” நம் அனைவரையுமே தாக்கலாம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். (பிரசங்கி 9:11, NW) எதிர்பாராத இந்த நிகழ்ச்சிகளை சமாளிக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா?
“நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்.” (நீதிமொழிகள் 13:22அ) யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டு அவரோடு நெருக்கமான ஓர் உறவை வளர்த்துக்கொள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும். அப்படி செய்யும்போது உண்மையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு மதிப்புமிக்க சுதந்தரத்தை அல்லது ஆஸ்தியை விட்டுச் செல்கின்றனர்! அதே சமயம், பெற்றோர் ஒருவேளை அகால மரணமடைய நேரிட்டால், தங்கள் குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக சில ஏற்பாடுகள் செய்வதும் ஞானமான காரியம் அல்லவா? காப்பீடு செய்தல், உயில் எழுதி வைத்தல், பணம் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளை குடும்பத் தலைவர்கள் செய்து வைக்க முடியும்.
துன்மார்க்கரின் ஆஸ்தியைப் பற்றி என்ன சொல்லலாம்? “பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்து வைக்கப்படும்” என சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 13:22ஆ) இப்போது கிடைக்கும் எந்தவொரு நன்மைக்கும் இது பொருந்துவதோடு, யெகோவா தமது வாக்குறுதிப்படி ‘நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ உண்டாக்குகையில் இது நிறைவேறும். (2 பேதுரு 3:13) அப்போது, துன்மார்க்கர் முற்றிலும் துடைத்து அழிக்கப்பட்டிருப்பர். ஆனால் ‘சாந்தகுணமுள்ளவர்களோ பூமியை சுதந்தரித்துக் கொள்வர்.’—சங்கீதம் 37:11.
விவேகியின் ஆஸ்திகள் குறைவாக இருந்தாலும் அவன் ஞானமாக செயல்படுகிறான். “ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் [“வாரிக்கொண்டு போகப்படுகிறவர்களும்,” NW] உண்டு” என நீதிமொழிகள் 13:23 கூறுகிறது. மிக சொற்ப ஆஸ்திகூட கடும் உழைப்பினாலும் கடவுளுடைய ஆசீர்வாதத்தினாலும் மிகுதியாகப் பெருகும்; ஆனால் நியாயம் குறைவுபட்டால், அநீதியான நியாயத்தீர்ப்பினால் பெரும் ஆஸ்தியும் வாரிக்கொண்டு போகப்படும்.
‘சிட்சிக்கிறான்’
அபூரணராகிய நமக்கு சிட்சை அவசியம், அது சிறுபிராயம் முதல் தேவை. “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான் [“சிட்சிக்கிறான்,” NW]” என இஸ்ரவேலின் ராஜா கோடிட்டுக் காட்டுகிறார்.—நீதிமொழிகள் 13:24.
பிரம்பு அதிகாரத்தின் சின்னம். நீதிமொழிகள் 13:24-ல் இது பெற்றோரின் அதிகாரத்தைக் குறிக்கிறது. இங்கு சிட்சையின் பிரம்பு என்பது பிள்ளையை அடிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அது பிள்ளையை திருத்தும் வழிமுறையை குறிக்கிறது. அது எந்த விதத்திலும் கொடுக்கப்படலாம். ஒரு சந்தர்ப்பத்தில், தவறு செய்யும் பிள்ளையை திருத்துவதற்கு அன்புடன் கண்டிப்பதே போதுமானதாக இருக்கலாம். ஆனால் இன்னொரு பிள்ளையை திருத்துவதற்கோ இன்னும் கொஞ்சம் பலமாக கடிந்துகொள்ள வேண்டியிருக்கலாம். எனவேதான் நீதிமொழிகள் 17:10 பின்வருமாறு சொல்கிறது: “மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.”
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அன்பாகவும் ஞானமாகவும் சிட்சிக்க வேண்டும்; அப்போதுதான் பிள்ளைகள் அதனால் நன்மை அடைவர். அன்பான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தவறுகளை கண்டும் காணாமல் விட்டுவிட மாட்டார்கள். மாறாக, பிள்ளை தவறு செய்யும்போது உடனடியாக கண்டித்து திருத்துவர்; பிள்ளை தப்பான செயல்களிலேயே ஊறிப்போகாமல் இருப்பதற்கு அது உதவும். என்றாலும், பவுலின் புத்திமதிக்கும் அன்பான பெற்றோர் செவிசாய்ப்பர்: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
பெற்றோர் கண்டிப்பாக இல்லாமல், தேவைப்படும் திருத்தங்களை கொடுக்காமல் இருந்தால்? மனம்போன போக்கில் விட்டுவிட்டதற்காக பிள்ளைகள் அந்தப் பெற்றோருக்கு பிறகு நன்றி காட்டுவார்களா? நிச்சயமாக மாட்டார்கள்! (நீதிமொழிகள் 29:21, NW) “தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (நீதிமொழிகள் 29:15) பெற்றோர் தங்கள் அதிகாரத்தை சரியான முறையில் பிரயோகிக்காமல் இருப்பது அன்போ அக்கறையோ இல்லாதிருப்பதையே காட்டுகிறது. ஆனால் அதிகாரத்தை தயவாகவும் அதே சமயம் உறுதியாகவும் பிரயோகிப்பது அன்பான அக்கறை காட்டுவதாக இருக்கும்.
நல்லறிவோடு செயல்படும் நேர்மையும் விவேகமுமுள்ள நபருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். எனவேதான் சாலொமோன் இவ்வாறு உறுதி அளிக்கிறார்: “நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.” (நீதிமொழிகள் 13:25) வாழ்க்கையின் எந்தவொரு அம்சமாக இருந்தாலும் நமக்கு எது நல்லது என்பதை யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். நம் குடும்ப விவகாரமோ, மற்றவர்களோடு உள்ள உறவோ, நம் ஊழியமோ, அல்லது நமக்கு கிடைக்கும் சிட்சையோ எதுவாக இருந்தாலும் இதுவே உண்மை. அவருடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் ஆலோசனைகளை ஞானமாக கடைப்பிடித்தால் சந்தேகமின்றி சிறந்ததோர் வாழ்க்கையை அனுபவிப்போம்.
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 13:1-14 வரையான வசனங்களின் விளக்கங்களுக்கு, காவற்கோபுரம், செப்டம்பர் 15, 2003 இதழில் பக்கங்கள் 21-5-ஐக் காண்க.
[பக்கம் 28-ன் படம்]
அநியாயமாக குறை கூறப்படும்போதும், விவேகி தன் நாவைக் கட்டுப்படுத்துகிறான்
[பக்கம் 29-ன் படம்]
உண்மையுள்ள ராஜ்ய அறிவிப்பாளர் அதிக நன்மை செய்கிறார்
[பக்கம் 30-ன் படம்]
பாராட்டுகள் புத்துயிரூட்டினாலும், திருத்தங்களையும் வரவேற்க வேண்டும்
[பக்கம் 31-ன் படம்]
தன் பிள்ளையின் தவறுகளை அன்பான பெற்றோர் கண்டும்காணாமல் விடுவதில்லை